Sunday, October 1, 2023
Homeஇதழ்கள்2023 இதழ்கள்கடவுளா..! சாத்தானா..!

கடவுளா..! சாத்தானா..!

அக்னி பிரசாந்த் வீ

ம்மா பொண்ணு உனக்கு வயசு ஒரு முப்பது இருக்குமா‌‌.. ! எனப் பல ஆண்களின் கேள்விக்கு நான் ஆமோதிப்பேன்.

ஆனால் உண்மையாக என்னுடைய வயது நூற்றியம்பது அல்லது இருநூறு இருக்கலாம். எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல.. தலைவலியா இருக்குது.. பசி எடுக்குது.. இரத்தப்பசி‌‌.. இது ராத்திரி ஒரு மணிக்கு வர பிரச்சனதான். எப்பவுமே ஸ்டாக் வைச்சிருப்பேன். மூனு நாளா ஹாஸ்பிட்டல் பக்கமே போகல. டாக்டரையும் பார்க்கல

“ஹலோ டாக்டர்.. மனோ சித்திரன்”

75 வயதுடைய கிழவனின் குரல் மறுபக்கத்திலிருந்து “ஆமா.. சொல்லு..”

“இன்னிக்கு ராத்திரி வரேன் டாக்டர்.. என இடுப்புல கத்தி ஆழமா இறங்கிருக்கு. சில்வர்னு நினைக்கிறேன். உயிர் போற மாறி இருக்கு”

“……போய் தொலையட்டும்”

“டாக்டர்..?!”

போனை கட் செய்தார்.

சற்று நேரத்துக்கு முன்பு நடந்த கத்திக்குத்து. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் என் தினசரி வாழ்வில் சகஜம்தான். ஆனால் வெள்ளி உலோகம் கொண்ட கத்தி!.. ஐயோ நான் குழம்பிருக்கிறேன்.. அது என் உயிரைப் பறிக்கும் என்று கொல்ல வந்தவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் ஏவி விட்டவனுக்குத் தெரியும்.

யாரது!?..

நான்கு மாதங்களாக பலபேர் என்னை வேட்டையாட வருகிறார்கள். எங்கிருந்தாலும் மோப்பம் பிடித்துவிடுகிறார்கள். எல்லாருடைய கையிலும் வெள்ளிக்கத்தி.. மறைந்து மறைந்து தாக்காமல் ஓடுகிறேன். என் இரவுகள் இரத்தமும் சதையுமாய் போய்க்கொண்டு இருக்கிறது .

பலரும் என்னை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். ஆமாம்..! வெட்டி வெட்டி ஞாபகம் வருகிறது.

“இப்ப வந்திருக்கறது நகை கட ராப்பரி கேஸூ… இவன் பேரு கூட…”

என்னை பழைய தார் டின் டப்பாவில் தூக்கி எறிந்தான். ஆறு அடி ஆஜானுபாகுவாய் இருக்கும் ஆள். அவன் கைகள் என் முகத்தை விட பெரிசாக இருந்தது. சரியாகப் பதம் பார்த்து மூக்கில் குத்தினான் .

“என்ன பாரு! இருபத்தி அஞ்சு வருஷம் பழி.. வெறி.. டீ.” எனக் குத்துவதை நிறுத்தி எழுந்து அங்கும் இங்கும் தான் கொண்டு வந்த சில்வர் கத்தியைத் தேடினான். கிடைக்கவில்லை

இவன் பேரு சரியா ஞாபகம் வரல.. ஆனா இந்த மூதேவி கொள்ளை அடிக்கப்போன இடத்துல ஒரு கிழவன கொல பண்ணிட்டான்.. இவனே மாட்டிருப்பான். அவ்வளவு மட்டமான ராப்பரி ப்ளான். இடையில நான் வந்துட்டேன்.. ஏன்னா அன்னிக்கு அந்த கிழவன நான் வேட்டையாடறதா இருந்தது..

அவன் மறுபடியும் வந்து, “உன்னால ஜெயிலுக்கு போயி… பொண்டாட்டி போயி… எல்லாம்” என மறுபடியும் குத்தினான். மீண்டும் அங்கும் இங்கும் திரும்ப சில்வர் கத்தி அவன் கண்களில் பட்டது. எழுந்து எடுக்கப் போனான்

இரத்தத்தைத் துப்பி.. “இந்த பரதேசி ஜெயிலுக்கு போனதுக்கு வேணா நான் காரணமா இருக்கலாம்.. அவன் பொண்டாட்டி எதுத்த வீட்டுக்காரனோட ஓடிப்போனதுக்கு நான் எப்படி காரணமா இருக்க முடியும் .. இவனுங்களுக்கெல்லாம்.. சு… (இரத்தை துப்பி‌)… புத்தியே இல்ல”

நெருங்கி வந்தவன் என் முகரையிலே விளாசினான். சுழன்று விழுந்தேன்.. என்னால் முடியாதது போல் படுத்துக் கிடந்தேன்.

ஆறடி ஆள்.. “வா.. எழுந்து வாடி… இன்னிக்கு.. பாத்துறுலாம்..”

நான் மெல்ல.. இல்லை என்பது போல நின்றேன்.

அவன் அலறியபடி ஓடி வந்தான். நான் எதுவும் செய்யாமல் அப்படியே நிற்க, வந்த வேகத்தில் என்னை இடித்தான். இருவரும் பில்டிங் பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்தோம்.

தரையை நெருங்கும் முன்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

“ஆ..! இவன் பேரு ‘மந்தபுத்தி’”. சொன்ன அடுத்த நொடி, சொத்தென இருவரும் தரையில் விழுந்தார்கள்.

என் விழி முழு பௌர்ணமி நிலவை நோக்கி இருந்தது. இடுப்பில் கத்தி சொருகி இருந்தது. மந்தபுத்தி இரத்தத்தைக் கக்கி துடித்துக்கொண்டு இருந்தான்.

மெல்ல எழுந்து கழுத்து நெட்டையை முறித்து அவனை இருளில் இழுத்துச் சென்றேன்.

மிருகம் தண்ணீரை வேகமாக நக்கி எடுப்பது போல் சத்தம்.

‘கொடக் கொடக் கொடக்..!!’.

எல்லாரும் என்னை பலவிதமா நம்புவார்கள். சூப்பர் ஹீரோ, சூனியகாரி, கடவுள், சாத்தான், காட்டேரி கில்லர். ஆனா சரித்திரத்துல எங்களுக்கு வைத்த பெயர் ‘vampire’ (வைம்பயர்). எங்க இனத்துல நான்தான் கடைசி.

இரத்த வேட்கை தணிந்த பிறகு தன் உதட்டில் ஒட்டிருக்கும் இரத்தத்தைத் துடைத்து, பின் தன் நீண்ட பற்களுக்கிடையில் மாட்டிருக்கும் சதையை தன் நகத்தால் எடுத்து, இருளில் மறைவது என்னுடைய சுபாவம்.

இருள் உனது பலம். இருளின் காற்றில் கரைந்து மின்னலாய் செல்பவள் நீ. இருட்டில் கூர்ந்த கண் பார்வையுடனும் ஓசைகளையும் பிரித்து கூர்ந்து கேட்கும் செவித்திறனும் உடையவள் நீ!

இருள்! இருள்! இருள்! என்று மட்டுமே உனது சுவாசம்.

பகலில் வெளியே வராதே, சூரிய வெளிச்சம் உன் உயிரை எடுக்கக் காத்துக் கொண்டிருக்கும். வெள்ளி உலோகம் அதுவும் உனக்கு சாத்தான். மகளே எப்படியாவது தப்பி ஓடு..! தப்பி ஓடு..! தப்பி ஓடு!. என ஊர் மக்கள் சூழ்ந்து வரும்போது, என் அப்பா சாவை நெருங்கும்போது சொன்ன வரிகள். இப்பொழுது உயிர்போகும் சமயத்தில் என் காதில் இரைந்து கொண்டே இருக்கிறது‌.

அவன் ஒரு முட்டாள்! நான் இத்தனை காலம் வாழ்ந்திருக்கக் கூடாது. என் பசிக்காக எத்தனை உயிர்கள். ஒவ்வொரு நாளும் என்னைக் கொல்லும் குற்றவுணர்வு. நான் இந்தக் கத்திக்குத்தோடு சாகத்தான் வேண்டும்.

இல்லை.. கடைசியாக ஒரே ஒரு உயிர் எடுக்க வேண்டும்… அந்த கர்ப்பிணிப் பெண்.. அவளைக் கொன்றுவிட்டால் போதும்.. நான் செத்து விடுவேன்.

ஆ..! கர்ப்பிணிப் பெண்.. கொடூரம்..!

நான் சாத்தான்..?!

இரவு ஒன்று .. பழைய பெண்டுல கடிகாரம் ஓசையை எழுப்பியது.

டாக்டர் மனோ சித்திரன் வயது முதிர்வால் இறப்பை எதிர்பார்த்துப் படுக்கையில் இருந்தார். அறை ஓரமாக இருண்ட இடத்தை நோக்கி..

“வா வெளியே!” என்றார்.

என்னை அவனால் மட்டுமே மோப்பம் பிடிக்க முடியும். மெல்ல இருளிலிருந்து விலகி வெளியே வந்தேன்.

டாக்டர் “உன்ன தவிர எனக்கு யாரு இருக்கா‌‌.. கரெக்ட்டான நேரத்துல கடவுள் சாத்தான அனுப்பி வைச்சிருக்கான்” எனச் சிரித்தார்.

கிட்ட நெருங்கி, “உனக்கு ஒன்னு ஆகாது..” எனத் தூக்க முற்பட்டேன்.

டாக்டர் இல்லை.. இல்லை என்பது போல நகராமல் இருந்தார். பின் படுத்தபடியே கைகள் நடுங்க என் இடுப்பில் கை வைத்து கத்தியை எடுக்க முயன்றார். முடியவில்லை.

“கத்திய வெளியெடுத்தா.. உன் உயிர் போயிரும்.. ஆனா மறுபடியும் உயிர்ப்பிக்கலாம்.. அதுக்கும் மாற்று மருந்து மனுச இரத்தம் தான்.. என்னைய எடுத்துக்கோ..” எனத் தலையைத் திருப்பிக் கழுத்தைக் காட்டினார்.

“டாக்டர்..!”

“அம்பது வருஷத்துக்கு முன்னாடி உனக்கு சத்தியம் பன்னினேன் உன்ன மனுசனா மாத்துறேன்னு. என் ஆராய்ச்சில எதுவும் பலன் அளிக்கல.. உனக்கு ஞாபக இருக்கான்னு தெரியல‌. உன்ன மனுஷனா மாத்துலன்னா என் உயிர் எடுத்துருன்னு சொன்னேன்”.

சற்றும் தாமதிக்காமல் “ஞாபகமிருக்கு..” எனச் சிவந்த கண்களுடன் பசியோடு சொன்னேன்.

டாக்டர் சிரித்தபடி.. பட்டென என் இடுப்பில் இருந்த கத்தியை உருவ, சற்றும் தாமதிக்காமல் கழுத்தைக் கடித்து அவர் இரத்ததை உறிஞ்ச ஆரம்பித்தேன்.

அன்று இரவு மழை பெய்யாத மின்னல் வெட்டில் டாக்டரின் உயிர் பிரிந்தது.

பசி அடங்கிய பின் எப்பொழுதும் போல் உடலை அடக்கம் செய்ய கடற்கரைக்கு டாக்டரை தூக்கிச் சென்றேன்.

பசி.. இரத்த ருசி எடுத்துவிட்டால் பித்தம் தலைக்கு ஏறிவிடும். அந்தச் சுவை வருடக்கணக்கான தண்ணீர் உதட்டில் படாத தாகத்தை உண்டாக்கும். நாக்கு தாண்டவமாடும் மடமடவென உறிய .. உறிஞ்சி எடுத்த பின் இனி வாழ்வதற்கான அர்த்தம் கிடைத்தது போல்.. அய்யோ..! அந்த சுகம் கிடைக்கும்.

இது உணர்வு மட்டுமல்ல, உயிருடன் இருப்பதற்கும் என் குறிக்கோள் அடைவதற்கும் இருக்கிற பசி. டாக்டர் மனோ சித்திரன் போல் என்மீது அன்பானவர்கள் என்னிடம் இறக்கத்தான் செய்கிறார்கள்‌. அவர்களை எல்லாம் நிலவொளியில் நடுக்கடலில் எடுத்துச்சென்று போட்டுவிடுவேன். என் துக்கம் போக நிலவை என் தோழியாக பாவித்துப் பாவ மன்னிப்பாய் பாட்டு பாடுவேன். கடலின் ஓசையும் காற்றும் கூட சேர்ந்துகொள்ளும்.

இதுவரைக்கும் எத்தனையோ பேர்.. நான் கணக்கு வைத்திருக்கவில்லை. இப்படி நான் ஒரு ஜந்துவாக பூமியில் இருக்கிறேனே.. மனிதர்களிடமிருந்து தப்பாமல் வாழ்ந்துவிட முடியுமா! நான் சக்தியை உபயோகிக்கும்போதோ, கொலை செய்யும் போதோ பார்த்தவர்கள் நிறைய பேர். அவர்களுக்கெல்லாம் நான் கடவுளாகவும் சாத்தானாகவும் இருந்திருக்கிறேன். பல பேருக்கு என்னுடைய இருப்பே மர்மம்தான். அப்படி அரசல் புரசலாகப் பரவின்னாலும் பேயையும் கடவுளையும் நம்பாதவர்க‌ள் அச்செய்தியை கேலிப்பேச்சாய் முடக்கி விடுவார்கள். என் காவல் தெய்வமே அவர்கள்தான்.

ஐம்பது வருடத்திற்கு முன்புதான் நகரத்தில் வசிக்க ஆரம்பித்தேன். அதற்கு முன்பெல்லாம் காடுதான் வாழ்க்கை. வேட்டையாடுவதற்கு மட்டும் நகரத்திற்கு வருவேன். பின் காடு சலித்தது..! நகரம் பிடித்தது..!

நகரத்தில் மனிதனாக வாழ பணம் என்கிற காகிதம் வேண்டும். அதற்கு வேலை செய்தாக வேண்டும். எனக்கு தெரிந்த வேலையெல்லாம் கொல்றதுதான். ஆதலால் கான்ட்ராக்ட் எடுத்தேன். இரத்தக் காட்டேரி என்பதை மறைத்து பெண்ணாகப் போனேன். அவர்களிடத்தில் எழுந்த ஏளனச் சிரிப்பால் வேலை வராமல் இருந்தது‌. அத்தருணத்தில் உதவியது டேவிட்.

டேவிடிற்கு என் ரகசியம் தெரியும். அவனிடம் மௌனமும் சமபந்தமில்லாத நேரத்தில் ஒரு அசட்டு சிரிப்பும் இருந்துக்கொண்டே இருக்கும். அது எனக்கு எப்பவுமே பிடித்தமானது. அவனுடைய இருபது வயதில் எனக்கு கைகொடுத்தவன். இன்றும் அதே நம்பிக்கையோடு பல கான்ட்ராக்ட் கில்லிங் கொடுத்துக் கொண்டு இருக்கிறான். என்னை ஒரு ஜந்துவாக அவன் பார்க்கவில்லை சாத்தானாகப் பார்த்தான். அவனுக்கு சாத்தான்தான் கடவுள். ஆகவே நான் அவனுடைய கடவுள்.

ஆனால் நான் சகோதரன் பிள்ளை நண்பன் என எல்லாமுமாக அவனை அணுகுபவள். எனக்கு உறவு என அவன் மட்டும்தான்.

மனித வேலையாக கில்லிங் பண்ணுவது சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும். நான் கொல்பவர்கள் நல்லவரா கெட்டவரா என்று தெரியாது‌. எப்படி செய்து முடிக்க வேண்டும் என்கிற பிளான் இருக்கிறதோ அதேபோல் செய்துவிடுவேன். சில நேரங்களில் டார்கெட்டின் புத்திசாலித்தனத்தால் நான் சொதப்பி விடுவேன். அந்நேரங்களில் சண்டையிடுவது போல் எதிர்கொள்ள வேண்டிருக்கும். காண்ட்ட்ராக்டில் இருக்கும் கட்டுப்பாடு என் இரத்தப் பசியையும் பலத்தையும் உபயோகிக்கக் கூடாது. சாதாரண மனிதனைப் போல் அவர்களைக் கொல்ல வேண்டும். ஆனால் இரத்த வேட்கையை பல சமயங்களில் என்னால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.

அப்படி ஒரு சொதப்பல் சம்பவத்தில் மற்றொருவன் எனக்கு அறிமுகம் ஆனான். என்னுடைய ரகசியத்தைத் தெரிந்த இரண்டாவது ஆள்.

அது ஒரு அமாவாசை இரவு. மழை பெய்யாத மின்னல் வெட்டு வானத்தில் மின்னியது.

டார்கெட்டை எதிர்கொள்வது கடினமாக இருந்தது.

இறுதியாகப் பிடியில் மாட்டினான். அவனை இரும்புக் கம்பியால் கொலை செய்வதற்கு முன் அவன் கண்களைப் பார்த்தேன்.

பொதுவாக கொலை செய்யப்படுபவர்களின் கண்களில் பயம் இல்லையென்றால் அவன் அதிர்ஷ்டத்திற்கு இரு வாய்ப்பாய் அவன் எதிர்பார்க்காத இரண்டு விஷயங்கள் அங்கே நடக்கும்.

ஒன்று என் முகத்தைக் காட்டினேன்.

“பொண்ணா!?” என்பது அவனுடைய அதிர்ச்சி.

மற்றொன்று “உன்னோட கடைசி ஆச என்ன?”

அவன் என்மேல் துப்பி.. “உன்ன கொல்லறது”

துப்பிய இரத்தம் என்னைக் கிறங்கடித்தது.. இரத்த வேட்கையைத் தூண்டியது. இருந்தாலும்..

அவனிடம் இரும்புக் கம்பியைக் கொடுத்து. “என்னை கொல்!” என்றேன்.

முடியாதவனாய் எழுந்தவன் என் பிடரிமயிரைப் பிடித்து பின்னிழுத்தபடி நிமிர்ந்தான்.

“என் கடைசி ஆச என்னன்னு கேட்க மாட்டாயா..?” என்றேன்.

அவன் “முட்டாளா.. நானு..” இரும்புக் கம்பியால் என் இடுப்பில் சொருகிய பின் “இப்ப சொல்லு.. உன் ஆச என்ன..”

முன்பு என் முகத்தைப் பார்த்து அதிர்ந்தவனுக்கு அடுத்து என் கூர்மையான கடைவாய் பற்களைக் காட்டினேன். அவனது பயம் கண்களில் தெரிந்தது..

அப்பொழுது “என் ஆசை.. உன் இரத்தம் தான்” என நொடி தாமதிக்காமல் கழுத்தைக் கடித்து உறிய ஆரம்பித்தேன்.

அந்த மின்னல் வெட்டில்‌ சன்னல் ஓட்டையின் வழியாய் என்னை எவனோ ஒருவன் கவனித்தது கூட தெரியாமல் இரத்ததைக் குடித்துக்கொண்டு இருந்தேன். ஆனால் சில நொடிகளுக்குப் பின் வெளியே எடுக்கப்பட்ட காரின் சத்தம் என் சந்தேகத்தைத் தூண்டியது‌.

அந்தக் காரை பின்தொடர்ந்து போய் அவன் இருப்பிடத்திற்கு நுழைந்து அவனைக் கொலை செய்வதற்காக உள்ளே பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என் புகைப்படங்கள், வைம்பயர் பற்றின புத்தகங்கள், இரத்தம், பிணங்கள் இன்னும் பல எனக்குத் தெரியாத ஆராய்ச்சிப் பொருட்களெல்லாம் அந்த இடம் முழுவதும் நிறைந்திருந்தது. ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக்கொண்டு இருக்கையில் உள்ளே வந்தான். என் இருப்பை அவன் கவனிக்கவில்லயா இல்லை அவனது கவனமின்மை எனக்காக அவன் காத்துக்கொண்டு இருப்பதைக் குறிக்கிறதா?.

உள்ளே வந்தவன் மெல்ல என் முன்னே இருக்கும் பிரேதத்தை அறுக்கத் தொடங்கினான். நான் இருள் புகையாய் மின்னல் வேகத்தில் அவன் முன் நின்றேன்.

“என்னை பற்றி எப்படி உனக்கு தெரியும்?”

“நான் டாக்டர் மனோசித்திரன்” எனக் கை கொடுத்தான்.

நான் அவனைத் தூக்கியெறிந்தேன்.

அவன் முடியாதவனாக எழுந்து “பதினைஞ்சு வயசுல உன்ன முத தடவ பார்த்ததுல இருந்தே நான் பையத்தியக்கார பட்டத்தோட தான் சுத்திட்டு இருக்கேன்.. உன்ன தேடாத இடமில்ல, படிக்காத புத்தகமில்ல.. ஆஹா..! பசிக்கு மனித இரத்தம்.. மரணமில்லா வாழ்க்கை..! சாகாவரம்..” என மெய் மறந்தான்

நான் என் கூர்மையான பற்களைக் காட்டியபடி “சாகாவரம் ஒரு சாபம்..! மந்த புத்திக்காரனே!”

“அப்படினா அந்த சாபத்தை நான் உடைக்கிறேன்.”

“என்ன.. என்னை கொல்லறதுக்கு வழிய கண்டுபுடிக்க போறியா..?”

“இல்ல.. மனுசனா மாத்துறேன்.. இத்தன வருஷமா இரத்தத்த குடிக்கற சாத்தானா இருக்கற நீ.. மனுச வாழ்க்கையின் மேல ஆச இருக்காதா என்ன..”

“நீங்களெல்லாம் மந்த புத்தி பயலுங்க.. மந்த புத்தி பயலுங்க.. வாழ்வை அனுபவிக்க தெரியாதவனுங்க.”

“ஹா.. எல்லா வாழ்வும் ஒன்று தான்.. இக்கரைக்கு அக்கரைக்கு பச்சை.. ஆனா மாற்றம் எடுக்க ருசி வேட்கை இருக்குமே ”

“சரி.. அது எப்படி உன்னால் முடியும்”

“ஆராய்ச்சி செய்கிறேன். உன் இரத்தம் வேண்டும்”

“முடியாது.. என் இரத்தத்தால் இன்னொரு வைம்பயர் உன்னால் உருவாக்க முடியும். அப்படி செய்ஞ்சினா.. உன்னையும் அதையும் சேர்த்து கொல்வேன்”

“ஏன்?”

“என் அப்பன் சொன்னது இன்னும் காதுலே இருக்கு.. நான் வாழ வேண்டுமாம்.. முடிவே இல்லாமல் எடுக்கற பசிக்கு நான் கொல செய்து ஆகணும் … கெட்ட ஆன்மாவா இருந்துதான் ஆகணும்…”

மனோ சித்திரன், “அதனால என்ன?”

“கெட்டவங்க முழு வாழ்க்கையும் அப்படியே இருக்கறவங்களுக்கு பிரச்சன இருக்காது.. எப்ப நல்லது பத்தி யோசிக்க ஆரம்பிக்கறமோ.. குற்றவுணர்வு உண்டாகும்.. மண்ட சூடு பிடித்து பித்தமாய்.. மேலும் மேலும் இரத்தம்.. கொலை.. கணக்கில்லை..! அதனால என் இரத்தத்தை கொடுக்க மாட்டேன்”

“என் மேல் நம்பிக்கை வை… கண்டிப்பாக இன்னொரு வைம்பயர் என் கையால் உருவாகாது. உன் இரத்ததை கொடு”

“கொடுக்கிறேன்.. இந்த முயற்சி சரியா வரல்லைன்னா..”

மனோ சித்திரன்.. “என் இரத்ததை எடுத்துக்கோ?..”

வெடித்துச் சிரித்தேன்.

இப்பொழுதும் சிரிக்கிறேன்.. அவனது நம்பிக்கை துரோகமா.. இல்லை நான் ஏமாளியா..!

புரியாமல் சிரிக்கிறேன்..! எங்கே அந்த கர்ப்பிணி பெண்.. ஆ..!

நான் கடவுள்…!

அவளைத் தேட டேவிட்தான் உதவியாக வேண்டும்.. அவனது டெய்லர் கடைக்கு போகவேண்டும். அது ஒரு சின்ன கடை…‌

டேவிட் வெளி உலகிற்கு அவன் தையல் வேலை பார்க்கிறான். ஆனால் கான்ட்ராக்ட்டில் வரும் பணத்தை என்ன செய்வான் என்று தெரியாது‌. அவனுக்கு குடும்பம் இருக்கிறாதா? அதுவும் தெரியாது.

வேலை முடிந்த இரவே அவன் வீட்டிற்குப் போவேன். கூலியாக பணமும் ஒரு டம்ளர் அளவு இரத்தமும் கொடுப்பான்.

அது என்னைக் கடவுளாய் பாவித்து காணிக்கையாகக் கொடுப்பதாக இருக்கும்.

எனக்கு அந்தச் செயல் முதலில் வித்தியாசமாகவும் சிரிப்பாகவும் இருக்க “பணத்தை எடுத்துக்குறேன்.. இரத்தம் யாருடையது..?”

“என்னோடயது கடவுளே!” என்று தலை குனிந்து கொடுத்தான். அவனிடமிருந்து இச்செயல் இரத்த தானம் அளிக்கும் போது மட்டுமே வரும்.

“கடவுளா..?!” எனக்கு மேலும் சிரிப்பு வந்தது.

அவன் மௌனமாகவே இருந்தான்.

பின் அதை அவன் பழக்கமாவே செய்ய ஆரம்பித்தான்.

பணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு இரத்ததை குடிக்காமல் போக.. நான் கடவுள் இல்லை சாத்தான்..

குடித்தேன்.. ஒவ்வொரு முறையும் ருசி அறிந்துக் குடித்தேன்‌..!

டேவிட்டைப் போல் என்னால் வாழ முடியாது. இரவில் பப்பிற்கு போவதற்கும் பகலில் சூரிய ஒளியில் படாமல் நான் பதுங்கியிருக்கும் வாடகை வீட்டுக்கும் பணத்தேவையாய் இருந்தது. பொதுவாக நான் பணத்தை மதிப்பவள் கிடையாது. ஆதலால் அதை லாக்கரில் பூட்டிவைப்பதோ பதுக்கி வைப்பதோ என் சுய புத்தியில் தோன்றியதில்லை. வீட்டுக்குள் குப்பையாய்தான் சிதறி கிடக்கும். ஒவ்வொரு இரவிலும் பணத்தைப் பொறுக்கி எடுத்து பப்பிற்குப் போவேன்.

எல்லா நேரமும் கொலை இல்லை. அமைதியான நாட்களும் வரும். அப்பொழுது நான் இந்த இரண்டு இடங்களில் இருப்பேன். பப் மற்றும் கடற்கரை.

மனிதர்கள் பப்பில்தான் தன்னிலை மறந்து குத்தாட்டம் போடுவார்கள். நானும் அவர்களுடன் நிலைமறந்து ஆடுவேன். பின் கடற்கரைக்குச் சென்று அமைதியான சூழலில் தன்னிலை உணருவேன்.

தன்னிலை மறப்பதற்கும்..! உணர்வதற்கும்..!

இனிப்புக்கு பின் காரமாய் இரவு நிலவைப் பார்த்தபடியே போகும்.

இரு இடங்களில் இருக்கும் பிரச்சினையே… என் புட்டத்தை தேய்க்கவும் மார்பைக் கசக்கவும் ஆண்கள் நெருங்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது.. அவர்களை இருட்டில் அழைத்துக் கொண்டு போய் குமுறுவேன். சில நேரங்களில் என் இரத்தப் பசிக்கும் அங்கே நேரம் ஒதுங்கும்.

அன்றொரு நாள் ஏனோ அவர்களின் ஆபத்தை எண்ணி கடற்கரையிலிருந்து ஓட்டம் பிடித்தேன். அப்பொழுதுதான் சிவன் எனக்கு அறிமுகம் ஆனான். என் கரங்களைப் பிடித்து மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்றான்.

அன்றைக்கு என்னிடமிருந்து அந்தக் கூட்டம் தப்பித்தது..! ஆனால் சிவன் என் வலையில் விழுந்தான்…! இல்லை நான் அவனிடத்தில் விழுந்தேன்..!

என் வாழ்நாளில் எத்தனை காதலர்களைக் கடந்திருப்பேன். நான் எதுவும் கணக்கு வைத்திருக்கவில்லை. உண்மையாகத்தான் காதலிப்பேன். ஆனால் காதல் மலர்ந்து வரும்போது விலகிவிடுவேன். அவர்களிடத்தில் நான் வைக்கும் மிகப்பெரிய காதல் உணர்வு அதுதான். விலகுதல்.

சிவன் அவர்களிடமிருந்து எல்லா விஷயங்களிலும் தனிப்பட்டவனாகவே இருந்தான். அதனால் அவனிடத்தில் காதலும் எப்போதோ மலர்ந்து விட்டது..! பல இரவுகள் கடந்துவிட்டது‌..!

என்னால் அவனிடமிருந்து விலக முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் “நாளை வருவாயா!!” என்று ஏங்கும் கேள்வியாய் அவனைப் பார்ப்பேன்.

அவன் என் கால்களைப் பார்த்து, “நிச்சயமாக” என்பான். ஏன் கால்களை ரசிக்கிறான் என்று தெரியாது. அதைப்பற்றி அவனிடம் கேட்டால், “தெரியவில்லை.. உன் கால்கள் என்னை வசீகரிக்கிறது” என கவிதை போல் சொல்லி தொடையிலிருந்து குதிகால் வரை நீவி எடுப்பான். அய்யோ..! சுகம்..!

இரவு முழுவதும் அவன் கைகள் என் தொடையின் மேலேயே இருக்கும்.

என்னென்னமோ பேச்சு வரும்.. பேசியதைத்தான் பேசுவோம்.. பின்பு அதை அறிந்து சிரித்துக்கொள்வோம். இப்படிச் சலிக்காத நாட்களில் இன்பமாய் வாழ்ந்துகொண்டு இருந்தேன்..

ஒருநாள் இரவு அவனை என் இல்லத்திற்கு அழைத்துச் சென்றேன். இதுவரை யாரையும் அனுமதிக்காத என் வீடு. அன்று காதல் காம உணர்வோடு இருவரும் சுழன்றடித்து உள்ளே சென்றோம். படுக்கையை அடைந்தவுடன் முதல் பத்து நிமிடம் என் கால்களிலேயே படுத்துக் கிடந்தான். முத்த மழையாய் கால்களைப் ஸ்பரிசித்தான்.
நான் அவன் பிடரி மயிரைப் பிடித்து மேலே இழுத்தேன். என்மேல் இயங்க ஆரம்பித்தான். ஒவ்வொரு அசைவிலும் என் கூரான பற்களில் கூச்சம் அதிகரித்தது. கடிக்க வேண்டும்..! இரத்த ருசி வேண்டும்..!. கண்கள் மேலோங்க பட்டென அவன் தோள் பட்டையைக் கடித்தேன். ஆனால் இயங்குவதில் மாற்றம் இல்லை. என் நகங்கள் தலையணையும் படுக்கையும் பிரித்து எடுத்தது. சுற்றிலும் பஞ்சாய் பறக்க இரவும் நீண்டது‌.

என் சுயரூபம் தெரிந்து நடுவிலே எழுந்து ஓடிவிடுவான் என நினைத்தேன். ஆனால் முடிந்த பிறகும் என் பக்கத்திலேயே படுத்துக் கிடந்தான். அப்பொழுது அவன் சொன்ன மூன்று விஷயங்கள்

“உன்னை எனக்கு முன்னயே தெரியும்” என்றான்

அது என்னுடைய கூரான பற்களின் மேல் அவன் முத்தமிடும் போதே தெரிந்தது.

“உம்” என்றேன்

“என் பேரு சிவன் இல்ல”

“உம்” என்றேன்.

“எனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருசம் ஆச்சு. ஆனா எனக்கு குழந்தை இல்லை” என்றான்.

நான் அவனிடம் திரும்பி ‘ஏன்?’ என்றேன்.

அவன் தோள்பட்டையில் இருக்கும் காயங்களை வருடியபடி, “அதுக்கு விடைக் கிடைச்சிருச்சு” என்றான்.

இருவரும் சிரித்து முத்தமிட்டுக் கொண்டோம். அவனுடைய தலை என் மார்பகங்கள் மேல் இருக்க வெகுநாள் கழித்து நிம்மதியான தூக்கம் பிடித்தேன்.

மறுநாள் விழிக்கும் போது சிவன் இல்லை‌. அன்றைய இரவு கடற்கரைக்கும் அவன் வரவில்லை. எப்பொழுதும் நான் விலகிப்போகும் காதல் அன்று என்னை விட்டு விலகியது.

நிலவு, காற்று, தனிமையென பின்வரும் எல்லா இரவிலும் தொடர்ந்தது.

நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சிவன் இல்லாத இரவுகள் முன்பு சலித்த காடு வாழ்க்கை போல் ஆனது. பல இரவுகளில் வெளியே போகாமல் வீட்டிலே கிடந்தேன். அதுவும் அர்த்தமற்று போக ஊரைச் சுற்றி வந்தேன். அப்பொழுதுதான் பலபேர் என்னை வேட்டையாடவும் பழி தீர்க்கவும் வந்தார்கள்.

யாரெனத் தெரியாமல் தினம் தினம் பல கொலைகளைச் செய்து வந்தேன். ஆடு தானாக வந்து தலை கொடுத்தது போல் என் இரத்த வேட்கைக்கும் நிறைவு கிடைத்தது. இருந்தாலும் வந்தவர்கள் எல்லாம் சொல்லி வைத்தாற் போல் சில்வர் கத்தி வைத்திருப்பதுதான். இது முடியப்போவதில்லை என்று தோன்றியது. என்னைக் கொலை செய்ய ஏவியவன் யார் என்று தெரிய ஒருவனுக்கு மரணத்தை காட்டி கேள்வி எழுப்பினேன்‌. அவன் சொன்னதெல்லாம்.. கர்ப்பிணி பெண்..! அவளைப் பாதுகாக்க உன்னைக் கொல்ல வேண்டும்

அதற்கு என்னை ஏன் கொல்ல வேண்டும்..?

அவள் வயிற்றில் இருப்பது உன்னைப் போல் ஒரு குட்டி.

அவனிடம் அதற்கு மேல் எனக்குப் பேச்சில்லை. இனி என்னுடைய ஒவ்வொரு நிமிடமும் அர்த்தமாகிறது. அது முழுமை பெற நான் அந்த கர்ப்பிணியைக் கொல்ல வேண்டும். என்னைப் போல் ஒரு சாத்தானைக் கொல்ல வேண்டும்.

இரண்டு மாதங்களாகத் தேடுகிறேன். என் அர்த்தமான வாழ்வு முழுமை பெறவே இல்லை. அப்பொழுது ஒருவன் என்னைத் தேடிவந்து டேவிட் இருப்பிடத்தில் அவள் இருப்பதாகச் சொன்னான். டேவிட்டிற்கு எதுவும் ஆகக்கூடாது என மின்னல் வேகத்தில் போனேன். எப்பொழுதும் நாங்கள் சந்திக்கும் இடம். அங்கே ஒரே இரத்த வாடை. சுற்றிலும் மெழுகி எடுத்தது போல் இருந்தது. அது டேவிட் உடையதுதான். என்ன ஆனான் அவன்…? எனத் திரும்புகையில் கர்ப்பிணிப் பெண் உள்ளே வந்தாள். அங்கிருக்கும் மர நாற்காலியில் முடியாதளாய் உட்கார்ந்தாள். பின் பெரும் மூச்சுக்குப் பிறகு,

“உன்னை பார்த்தா எனக்கு எப்பவுமே பொறாமை வரும்”

“யார் நீ..?”

“கெட்ட கடவுள் கிட்ட வேலை பார்க்குற நல்ல சாத்தானோட பிள்ளை..” என்றாள்.

“டேவிட் எங்க?”

“அந்த நல்ல சாத்தன் கூடத்தான் இரண்டு குட்டி சாத்தான் இருந்துச்சு..” என்னைப் பார்த்து மீண்டும் தொடர்ந்தாள், “ஒன்னு பிள்ள சாத்தான் இன்னொன்னு மருமகன் சாத்தான்… அந்த இரண்டு பேருக்குமே ரகசியமா கெட்ட கடவுள பார்க்கணும்னு ஆச எப்பவுமே இருக்கும். ஒரு சின்ன ஓட்ட அதுல கடவுளோட கால் மட்டுமே தெரிய.. இடிச்சுகிட்டு இரண்டும் பார்க்கும். அந்த ஆர்வம் மருமகன் சாத்தானுக்கு மோகமா மாறுச்சு. பிள்ளை சாத்தானுக்கு பொறாமையா மாறியிடுச்சு. இந்த விஷயம் நல்ல சாத்தானுக்கு தெரியவர இரும்பு கம்பிய பழுக்க காய்ச்சி சூடு போட்டான். நெஞ்சுல சூடு வாங்கியும் மறுபடியும் ஒளிஞ்சிருந்து பார்த்துச்சு அந்த மருமகன் சாத்தான். நாட்களும் அப்படியே போச்சு, வயசும் வந்துச்சு பிள்ள சாத்தானுக்கும் மருமக சாத்தானுக்கும் கல்யாணம் ஆச்சு. அஞ்சு வருஷம் ஆகியும் பிள்ள சாத்தானுக்கு குழந்தையே இல்ல. ஒருநாள் எங்கயோ பொழங்கிட்டு வந்த மருமக சாத்தான். என்மேல பொழங்குனான். அப்ப.. அப்ப பார்த்தேன் சாத்தான் கடவுளா மாறுனத.. என்ன கடிக்க வந்தப்போ எங்கிருந்து பலம் வந்ததுன்னே தெரியல.. தள்ளி விட்டேன். வெளியே போய் விழுந்து உருமாறுன கடவுளா கதவ இடிச்சு மல்லுகட்டுனா.. பிள்ளைய பெத்த நல்ல சாத்தான் எதுக்கோ வைச்சிருந்த கத்தியெடுத்து மருமகன தலைய வெட்டிட்டான்..” பெரும் மூச்சு விட்டு, “நான் வாழாவெட்டியா ஆயிட்டேன்.. ஆறு மாசும் ஆச்சு..” என வயிற்றை தடவினாள். “என் வயித்துல இருக்கறது.. கடவுளா..! சாத்தானா..! எனக்கு தெரியாது.. ஆனா இது என் பிள்ள” என முடியாதவளாய் எழுந்தாள்.

அப்பொழுது டேவிட் நீண்ட வெள்ளிக் கத்தியோடு உள்ளே நுழைந்தான்

“என்ன..?.. கொல்ல போறீயா..?” எனக் கேட்டேன்.

அவன் சற்று தாமதிக்காமல் சுவரில் இருக்கும் சுவிட்சை போட்டான். அடுத்த நொடி தலைக்கு மேல் டங்குன்னு கூண்டு வந்து விழுந்து என்னை அடைத்தது. அதில் ஆயிரம் நூல் கோர்க்கும் வெள்ளி ஊசிகள் என் உடம்பைத் துளைத்தது. என்னால் நகர முடியவில்லை. ரோமம் அதிர அவனிடம், “டேவிட்.. அவ வயித்துல இருக்கறது‌‌ சாத்தான்..” என்றேன்.

அப்பொழுது அவனுக்கே உரித்தான அசட்டுச் சிரிப்போடு கதவை அடைத்தான்.

சூரிய ஓளி மெதுவாக சன்னல் வழியாகப் படர்ந்து என்னைச் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

இன்னும் சற்று நேரத்தில் சாகப் போகிறேன்.

பெருமூச்சாய் கண்களை மூடி யாரை நினைத்து கொள்வது என யோசித்தேன். உண்மையில் நான் நேசித்தவர்கள் யாரும் வரவில்லை..!

சூரியன் முழுவதுமாய் சுட்டெரித்தது.

சன்னல் வெளியே கரிய புகை சென்றது.

பத்து வருடங்கள் கழித்து டேவிட் படுத்த படுக்கையாய் இறப்பை எதிர்பார்த்துக் கிடந்தான். அது ஒரு மழை பெய்யாத மின்னல் வெட்டின் அமாவாசை இரவு.

டேவிட் அறையில் பத்து வயது குழந்தை நுழைந்தது. வெளியே அவளது அம்மா “மாயா.. மாயா..” எனக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள்

மாயா, “தாத்தா..?”

டேவிட், “வாடி.. உன்ன எதிர்பார்த்துட்டு இருந்தேன்‌. சாத்தானா பார்த்து கடவுள அனுப்பி வைச்சிருக்கான்.. அந்த டேபுள் பக்கத்துல இருக்கற ஊசி எடு..”

கையில் வாங்கியவன் ஊசியால் கழுத்தில் ஒரு கோடு போட்டான். இரத்தம் வழிய ஆரம்பித்தது.

“கடவுளே.. என்னை மன்னிப்பாயாக..!” எனக் கழுத்தைத் திருப்பினான்.

மாயா சற்றும் தாமதிக்காமல்.. தன் கூர் பற்களோடு…

கொடக்! கொடக்! கொடக்!

***

அக்னி பிரசாந்த் வீ – சொந்த ஊர் தஞ்சாவூர். தற்போது கோவையில் பணிபுரிகிறார். 2020 வாக்கில் எழுத ஆரம்பித்து தற்போது வரை பன்னிரண்டு சிறுகதைகள் எழுதி இருக்கிறார். முதல் கதையாக யாவரும் இதழில் வெளியாகிறது. மின்னஞ்சல்: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular