ரவிசுப்பிரமணியன்
”கூடு திரும்புதல் எளிதன்று” – தங்கம் மூர்த்தியின் கவிதைத் தொகுதிக்கான மதிப்புரை
இரண்டு முகக்கவசங்களை
அணிந்தே செல்கிறாய்
தோலில் ஒன்று
துணியில் ஒன்றென.
வெட்டுக்காய்களை மாற்றி மாற்றி வைத்து காலம் ஆடும் விளையாட்டை, மனிதனின் நிரந்தர குணாம்சத்தோடு இப்படி எளிமையாய் கவிதையில் படம் பிடிக்கும் தங்கம் மூர்த்தி பிரபலமான கல்விப்புல நிறுவனத்தின் நிறுவனர். எழுதியவர்கள் பிரபலமான காலம் போய் பிரபலமானவர்கள் எல்லாம் எழுதுகிற காலத்தில் தன் கவிதைகளால் ஊர்ஜிதமாக தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர்.
நடைபாதையில் கிடந்த சிறு மலரொன்றை
மிதிப்படக் கூடாதென்று கையிலெடுத்துப் போன குழந்தையிடத்தில்
தன் வாசம் முழுவதையும் பரவிட்டது மலர்.
கவிதைகளில் மட்டும் இப்படி அர்த்தம் ததும்பும் சுகந்தம் பரவவிடுபவர் அல்ல இவர். தன் வாழ்வின் செயல்பாடுகளாலும் கவிதைகளை எழுதிப் பார்ப்பவர். இலக்கியம் பற்றி எழுதுவதும் பேசுவதும் மட்டுமின்றி புதிய இலக்கிய முயற்சிகளுக்கு, இலக்கியவாதிகளுக்கு, தன் பேச்சுத் திறத்தால் தமிழைப் பரப்புபவர்களுக்கு, கல்வியாளர்களுக்கு, மாணவ சமூகத்துக்கு, புதுமையான ஆக்கப்பூர்வ கற்பனைக் கண்டுபிடிப்புகளுக்கு அவர் எவ்வித உற்சாகத்தை, உதவிகளை எல்லாம் வெளியே தெரியாமல் செய்து வருகிறார் என்பதை நான் ஓரளவு அறிவேன். வார்த்தையில் வசப்பட்டு விடுவது மட்டுமா கவிதை.
எம்.வி. வெங்கட்ராமின் நூற்றாண்டு இது. அவரது மொத்த கதைகளையும் தொகுக்கும் வேலையை நான் செய்து வருகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தகம் வந்துவிடும். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இந்தப் பணியில் ஈடுபடத் துவங்கிய என் கையில் எந்த பணமும் இல்லை. கதைகள் இருக்கும் ஊர்களைத் தேடி அந்த அந்த ஊருக்குப் போகும்போது அங்கிருக்கும் அந்த உள்ளூர் நண்பர்கள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர், அதே பல்கலைக்கழகத்தின் இலக்கியதுறை ஆசிரியர் காமராஜ் உட்பட எங்களுக்கு தங்குமிடம், சாப்பாடு, வாகன வசதிகள் போன்று ஊர்கள் தோறும் சிலர் செய்து தந்த உதவிகளை என்னால் மறக்க இயலாதது.
புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தில் இருந்த சில மூலக்கதைகளுக்காக நானும் இந்த தொகுப்பு பணியில் என்னோடு உதவியாக இருந்த பேரா. கல்யாணராமன், ஆய்வு மாணவர் தனசேகர் ஆகியோரோடு ஐந்து நாட்கள் புதுக்கோட்டையில் தங்கியிருந்து தேடி நகல் எடுக்க வேண்டிய சூழல். என்ன செய்வது என்று தவித்த போது தங்கம் மூர்த்தி தானாக முன்வந்து வழக்கம் போல் நேசக்கரம் நீட்டினார். நவீன இலக்கியத்துக்கான ஒரு தமிழ்ப்பணியை நீங்கள் செய்கிறீர்கள். நான் உங்களுக்கு எதும் செய்யவில்லை. அந்த பணிக்கான செலவில் என்னாலியன்றதைச் செய்வது என் இலக்கியக் கடமை என்று ஐந்து நாட்கள் எங்கள் மூவருக்குமான எல்லா செலவைகளையும் பார்த்துக் கொண்டார். கிட்டத்தட்ட கணக்கு வழக்கு தெரியாத என் கணக்குப்படி 45,000-க்கு மேல் செலவு செய்திருப்பார். இதை பணமிருக்கும் யாரும் எளிதாய் செய்துவிடலாம் தான். ஆனால் மூர்த்தி கவியல்லவா. அந்தக் கவிமனசு அதோடு நிற்குமா. மிகவும் பரபரப்பான வேலைகளுக்கு மத்தியில் நாங்கள் இருக்கும் நூலகத்துக்கு அவரால் முடிந்த இரண்டு நாட்கள் மதிய உணவை கட்டிக்கொண்டு வந்து எங்களுக்குப் பரிமாறுகிறார். ஊர் திரும்ப விடுதி வாசலுக்கு வருகிறோம். அவர் காரில் வந்து எங்கள் மூவருக்கும் பெரிய கட்டை பை நிறைய பழங்கள், கேக்குகள், ஸ்வீட்ஸ் என்று தூக்க முடியாத அளவுக்குக் கொடுத்து எங்களை வணங்கி வழியனுப்பிச் செல்கிறார். அது வெறும் தின்பண்டங்களா, பொருள்களா, உபசரிப்பா, மூர்த்தியின் மனசு அல்லவா. அலங்கார வித்தாரமாய் ஊருக்கு உபதேசமாய் மேடையில் ஏதேதோ முழங்கிவிட்டு அடுத்த லாபத்துக்கு என்ன காரியம் செய்யலாம் என்று மட்டுமே பார்க்கப் போய்விடும் சராசரி பிரகிருதி அல்ல மூர்த்தி. அதனால் தான் இப்படி ஒரு கவிதையை அவரால் எழுத முடிகிறது.
யாரோ ஒருவரின் துயரத்தை விரட்டலாம்
வீணையின் நரம்புகள்
யாரோ ஒருவரின் தற்கொலையைத் தடுக்கலாம்
சில வரிகள்
யாரோ ஒருவரின் தனிமையை தகர்க்கலாம்
வந்தமரும் சில குருவிகள்
யாரோ ஒருவரின் தைரியத்தை வளர்க்கலாம்
நண்பனின் சில சொற்கள்
யாரோ ஒருவரின் கண்களை நனைக்கலாம்
ஸ்வர்ணலதாவின் போறாளே பொன்னுத்தாயி
உங்களுக்குள்தான் ஒளிந்திருக்கிறார்
அந்த யாரோ ஒருவர்
என்று கவிதையை முடிக்கிறார். எதையும் முதலில் உன்னிலிருந்து துவங்கு என்கிறார் விவேகானந்தர். அப்படிச் சொல்பவரே செயலாளராகவும் வாழும் ஒருவரால் தான் இப்படி எழுத முடியும்.
உணர்வுகளில் மட்டுமல்ல சுயமுகம் மாறி நிற்கும் ஊர்களைப் பற்றியும் விசனப்பட்டு அவர் எழுதியுள்ள இந்தக் கவிதை – எவ்வளவு எல்லாம் நாம் இழந்து போனோம் என்று பட்டியலிட்டு ஏங்க வைக்கிறது. மரங்களாலும் வயல்களாலும் சூழப்பட்ட எங்கள் ஊர் வெறும் ஜிகினாக்களாலான அலங்கார பாலைவனம் போல் இன்று காட்சியளிகிறது. மாலை நேரங்களிலும் இரவுகளிலும் ஆன்மா துலங்க தெரிந்த எங்கள் ஊர் கரகாட்ட கலைஞர்களின் மினுமினுக்கும் பளபள உடைகள் ஊள்ளீடற்ற வெற்று ஹேங்கரில் ஆடுவது போல் ஆடிக்கொண்டிருக்கிறது. எதைக் கொடுத்து நாம் எதை வாங்குகிறோம். அல்லது எதையெல்லாம் வாங்க எது எதையெல்லாம் மதிப்பறியாது கொடுத்து நிர்கதியாக நிற்கிறோம் என்று எத்தனையோ கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கவிதை. எதையோ ஒன்றைச் சுட்டி சொல்லாத வேறொன்றை நோக்கி நகர்த்தி உங்களை அல்லாட வைக்கும் வித்தையல்லவா கவிதை.
கவிஞனும் பைத்தியமும் ஒன்று என்கிறார்கள் மனோதத்வ வல்லுனர்கள். மூர்த்தி ஒரு கவிதையில் இப்படி எழுதுகிறார்.
நானொரு புத்தகம்
அதிலும் கவிதை புத்தகம்
நீ அதை இன்னும் தப்பு தப்பாய் வாசிக்கிறாய்
நானே லூசு. அதிலும் கவிதை எழுதும் லூசு. அப்பறம் நான் எழுதுவது எப்படி இருக்கும். அதையும் நீ தப்பும் தவறுமாய் வாசித்தால் விளங்குமா என்று கேட்கிறார்.
நான் எப்படிப்பட்ட ஒரு அதிர்ஷ்ட்ட கட்டை தெரியுமா என்று இன்னொரு கவிதையில் சொல்கிறார்.
எனக்கென ஒர் கவிதை எழுத நினைத்தார்
கடவுள்
அந்த அருள் வேளையில்
அவரிடம் காகிதம் இல்லை
எழுதுகோலுமில்லை
தானொரு கடவுள் என்பதை உணர்ந்து
அவற்றை வரவழைத்தப்போது
கவிதை மறந்திருந்தது கடவுளுக்கு.
யோசித்தால் எவ்வளவு அர்த்த தளங்களுக்கு இட்டுச்செல்கிறது இந்தக் கவிதை. கடவுளாலும் கைவிடப்பட்ட லூஸ்ஸுகளாகவே நாம் இருப்போம். அதனால்தான் நம்மால் இப்படி ஏதும் செய்ய முடிகிறது. நீங்களும் அப்படியே இருக்க என் கவிதைச்சகாவான உங்களையும் நான் வாழ்த்துகிறேன் மூர்த்தி.
***
கவிதை நூல் தலைப்பு : “கூடு திரும்புதல் எளிதன்று”
ஆசிரியர் : தங்கம் மூர்த்தி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர் வெஸ்ட்,
சென்னை – 78.
discoverybookpalace@gmail.com
kaviyamoorthi@yahoo.com
ரவிசுப்பிரமணியன்
ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் முதுகலைப் பொருளியல் (1983-85) பயின்றவர். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் என்ற நிலையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 80க்கு மேற்பட்ட நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார். சாகித்திய அகாதமி ஆலோசனைக்குழுவில் உறுப்பினராக (2003-2007) இருந்துள்ளார். இயக்குனரும், படத்தொகுப்பாளருமான பி. லெனினிடம் ஐந்து ஆண்டுகள் உதவி இயக்குனராகவும், விஜய் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி இயக்குனராகவும், முதுநிலை செய்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஆம்பல் கலை இலக்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலராக கலை, இலக்கியப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். 65 வது தேசிய திரைப்பட விழாவின் விருதுக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். தற்போது தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு இலக்கிய ஆளுமையாக உள்ளார்.
மின் அஞ்சல் முகவரி : ravisubramaniyan@gmail.com
ஓவியம் – Katsushika Hokusai