Wednesday, October 9, 2024
Homesliderகடல்

கடல்

அசதா

லைகள் ஆக்ரோஷமாக வந்து மோதியபடியிருந்த கரையில் இரண்டு தென்னைகளுக்கிடையேயான சொற்ப நிழலில் அமர்ந்திருந்தனர். முகவாய்க்கட்டையைக் கால்முட்டிகளில் தாங்கி தொலைவில் கடலில் குளித்துக் கொண்டிருப்பவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். கைகள் கரை மணலை அளைந்து கொண்டிருக்க கடற்காற்றும் அவள் தலைமுடிகளில் சிலவும் தீராதவொரு விளையாட்டில் ஈடுபட்டிருந்தன. மெல்லிய உடல்வாகு, அநாதரவான குழந்தையின் ஏக்கம் பீடித்த முகம், ஆனால் தீர்க்கம் மின்னும் கண்கள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். குளிப்பவர்களுக்கு அப்பால் அலைகளற்ற வெளிர்நீல நீர்ப்பரப்பு முடிவற்றுப் பரந்திருந்தது. நீர்வெளியுள் இறங்கியிருந்த தொடுவானமும், அதில் நிழல்போல் ஒட்டியிருந்த மீன்பிடிப் படகுகளும் கடலெனும் சித்திரத்துக்குக் கூடுதல் அர்த்தம் சேர்த்தன.

பலூன்காரர்கள், ஐஸ்கிரீம் விற்பவர்கள், பத்து ரூபாய்க்கு இருபது ரவைகள் வாங்கி விளையாட்டுத் துப்பாக்கியால் பலூன்களைச் சுடுபவர்கள், விரும்பிய இடங்களில் விரும்பிய கோணங்களில் நின்று புகைப்படமெடுப்பவர்கள், சிறு ராட்டினங்களில் சுற்றும் குழந்தைகள் என உற்சாகமாயும் பரபரப்பாயும் ஒரு சுற்றுலாத்தலத்தின் கடற்கரையாக அது இருந்தது. ஒழுங்கான வரிசைகளில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களும் நேர்த்திக்கடனாக மொட்டை போட்டுக் கொண்டவர்களின் சந்தனம் தடவிய தலைகளுமே ஒரு புண்ணியத் தலமும் அங்கிருப்பதை உணர்த்தின.

படபடத்த அவள் இமைகளை அவற்றின் வசீகரிக்கும் கருமையைப் பார்த்தான். இன்று என்னவோ அவளைப் புதிதாகப் பார்ப்பது போலிருந்தது. பேயாட்ட அலைவுகள் அடங்கி இப்போதுதான் அவன் மனதின் பெண்டுலம் அமைதியில் லயம் கொள்ள ஆரம்பித்திருந்தது. கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் எழுப்பிய ஆரவாரக் கூச்சல் அவளுக்குள் உற்சாகத்தைத் தூண்டியது. கலக்கம் தெளிந்து கொண்டிருந்த அவனிடம் அவள் கேட்டாள், “கடல்ல குளிக்கலாமா?”

முகத்தைக் கழுவி இப்போதுதான் கொஞ்சம் துயரத்தைப் பூசிக்கொண்டாற் போன்ற தோற்றத்துடன் முதுகலை முதல் வருடத்தில் அவள் சேர்ந்தபோது அவன் இரண்டாவது வருடத்தில் இருந்தான். அந்த முகத்துக்குப் பொருந்தாத வகையில் அவள் கண்களில் மட்டும் எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. எதேச்சையாக அவளைக் கடந்துபோன தருணங்களில் ஒரு வெளிச்ச முத்தாக, இருளில் கணப்பொழுது ஒளிர்ந்து பின் விலகிப் போய்விடும் மின்மினியாகத் தோன்றினாள். சிலநேரம், மனதின் ஆழத்தில் ஏராளம் வைத்துக் கொண்டு பகிர யாருக்காகவோ காத்துக்கொண்டிருப்பவளைப் போலிருந்தாள்.

அந்த வருடம் கல்லூரியில் கல்சுரல்ஸ்க்கு அவன் பொறுப்பாக இருந்தான். வருடத்தில் இந்த நாட்களை மாணவர்கள் எல்லோருமே ஆர்வமாய் எதிர்பார்த்தார்கள். கலைநிகழ்ச்சிகள் வழியாக தங்களது பிம்பங்களைக் கட்டமைத்துக்கொள்ள திறமைசாலிகளும் வகுப்புகளின் வறட்சியிலிருந்து தப்பித்து ஆடல் பாடல் நடனம் எனப் பொழுதை சுவாரஸ்யமாய் கழிக்க மற்றவர்களும் வரவேற்றுக் கொண்டாடிய நாட்கள் அவை. ஒருநாள் மாலைப்பொழுது அவனிடம் வந்து அப்போது பிரபலமாக இருந்த ஒரு சினிமாப் பாடலுக்கு தான் நடனமாடப் போவதாகச் சொன்னாள்.

“பேரென்ன?”

“ஜான்ஸி மேரி, எம்.ஏ. இங்லீஷ் ஃபர்ஸ்ட் இயர்”

அவன் எழுதிக்கொண்டான்.

“ம்ம்ம்… நல்லா ஆடுவீங்கதானே, ஒரு தடவை மேத்ஸ் டிபார்ட்மெண்ட் ஜோதி மேடம்கிட்ட ஆடிக்காட்டிடுங்க. அவங்க ஓகேன்னா சரி.”

“சரி” என்றுவிட்டு கிளம்பப் போனவளிடம் “நீங்க கிறிஸ்டியனா?” எனக் கேட்டான். அது கிறிஸ்தவப் பெயர்தான் என்பதை அவன் அறியாமலில்லை. ஆனாலும் அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டுமென தோன்றியது. சற்று சங்கோஜத்துடன் “ஆமாம்” என்றபோது அவள் கண்ணிமைகள் நுட்பமாய்ச் செய்த சிறு சீன கைவிசிறிகளைப்போல அவனைப் பார்த்து விரிந்தன.

அந்தப் பார்வை அவனை சலனப்படுத்தியது அவள் விழிகளைப் பார்க்காமலேயே கேட்டான். “சினிமாப் பாட்டு இல்லாம வேற ஏதாவது பாட்டுக்கு ஆடலாமே… பாரதியார் பாட்டு, ஃபோல்க் சாங். ம்… எங்கிட்ட ஒரு கேசட் இருக்கு. திவ்ய பிரபந்தம், சுத்தானந்த பாரதியார்னு நல்ல பாட்டுங்க, டான்ஸுக்கு ஏத்த மாதிரி ட்யூன்ஸ், வித்தியாசமாவும் இருக்கும்…” அவன் தன்னையறியாமல் பேசிக்கொண்டே போனான். அவள் எந்தப் பதிலுமின்றி சங்கோஜமான ஒரு முறுவலுடன் வருகிறேன் எனப் போய்விட்டாள். தன்னைக்குறித்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்படி எந்தப் பெண்ணிடமும் அவன் பேசியதில்லை, அவளோடு பேசிக் கொண்டேயிருக்க வேண்டுமென்ற ஆவல் எங்கிருந்து கிளர்ந்து வருகிறது என யோசித்துப் பார்த்தான். காரணங்கள் தெளிவற்று இருந்தன.

ஆனால் கல்சுரல்ஸில் அவள் பெரிய ஆச்சரியத்தைத் தந்தாள். நடுவில் ஒருமுறை இவனிடம் வந்து அவள் கேசட் வாங்கிப் போனதை சீனியரான அவன் பேச்சை மதிப்பதான ஒரு பாவனை என்றுதான் நினைத்திருந்தான். அன்று அவள் சினிமாப் பாட்டுக்கு ஆடவில்லை. கானம் கிருஷ்ணய்யரின் ‘ஜகத் ஜனனி’க்கு அவள் பிடித்த அபிநயங்களும் வெளிப்படுத்திய பாவங்களும் தொழில்முறை நாட்டியக் கலைஞரையும் விஞ்சுவதாக இருந்தன. அந்த மாலைப்பொழுதில் ‘சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி’யாய் எல்லார் மனதிலும் நிறைந்தாள்.

நேரில் பாராட்டிய ஒரு நாளில் “எல்லாம் உங்களால்தான்” என்றாள், “நீங்க அன்னைக்குச் சொன்னது, அந்தக் கேசட் கொடுத்தது… நீங்க அப்படி ஒரு விஷயத்தைச் சொல்லாமப் போயிருந்தா நான் சினிமாப் பாட்டுக்குத்தான் ஆடியிருப்பேன், ஏதாவது குத்தாட்டம் மாதிரி….” அவன் சலனத்தில் ஆழத்தில் கல்லொன்று விழுந்தது. அவளை அவன் காதலிக்கத் தொடங்கியிருந்தான். தீவிரமாய் மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் மனதிலும் அவன் மட்டிலான சலனமொன்று தொடங்கியிருப்பதை அறிய அவனுக்கு நீண்டநாட்கள் ஆகவில்லை. அடிக்கடி சந்தித்துப் பேசினார்கள். ஒருநாள் தைரியத்தைத் திரட்டி அவளைக் காதலிப்பதாகச் சொன்னான். பதிலேதும் சொல்லாமல் போனவள் நான்கு நாட்களாக அவனைப் பார்க்கவில்லை. அவன் மனமுடைந்து போனான். ஐந்தாவது நாள் அவளே அவனைத் தேடி வந்தாள். வேகமாக அவன்முன் வந்து நின்றவள் அவனையே உற்றுப் பார்த்தாள். அவள் முகத்தில் என்ன இருக்கிறதென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சட்டென்று அவன் கையைப் பற்றிக் கொண்டவள் “ஐ லவ் யூ டூ” என்றாள். அப்போது அவள் கண்கள் கலங்கின, எப்போதையும்விட மிகு துயரில் அவை கரைவதைப் பார்த்தான்.

நகரத்துப் பூங்காவில் நெடிமிக்க பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்த காட்டுவாகை மரத்தடியில் அமர்ந்திருந்தபோது தரையோடு படிந்திருந்த அருகம்புற்களை அனிச்சையாகப் பிடுங்கியவளாக “அரவிந்த்…” என்றாள். சற்றுநேரம் அமைதியாய் இருந்தவள் தொண்டையைச் செருமிக்கொண்டு அந்தக் கண்களின் குறுகுறுப்பு மாறாமலே சொன்னாள், “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சு”. அந்த வார்த்தைகள் அவனுள் இறங்க சில வினாடிகள் பிடித்தன. “விளையாடறியா?” என்றவனிடம் இல்லையென்று அழுத்தமாகத் தலையசைத்தாள். வேர்களை பூமியோடு இறுக்கிக்கொண்ட அருகம்புற்கள் இணுக்குகளாய் அறுபட்டு அவள் கையோடு வந்தன. தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அவன் மனம் உள்ளுக்குள் நடுங்கியது, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. பிறகு அந்த நடுக்கம் ஒருவித ஒவ்வாமையாகயும் எரிச்சலாகவும் பதற்றமாகவும் மாறியது. இல்லை சும்மா விளையாடினேன் என்று சொல்வாளென்று காத்திருந்தான். அவளோ நிதானமாக சொல்லத் தொடங்கினாள். இளங்கலை முடித்ததும் வீட்டினர் கட்டாயப்படுத்தி உறவினர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தது, ஆறு மாதமே நீடித்த அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றியெல்லாம் மிகச் சுருக்கமாகச் சொன்ளாள். உண்மையிலேயே அவன் குலைந்து போனான். இதெல்லாம் உண்மைதானா எனக் கேட்க நினைத்தான், அவளது பேச்சுப் பொய்யில்லை என்பதற்கு நிரூபணம் தேவையிருக்கவில்லை. அதற்குப் பின் எதுவும் பேசிக் கொள்ளாமலே விடுதிக்குத் திரும்பினர். அப்போதிருந்து அவனுள் ஓயாமல் அலைகள் புரள ஆரம்பித்தன.

இரண்டு மாதங்கள் கடந்தன, இடையில் அவளைப் பார்க்கவோ பேசவோ அவனுக்கு மனமில்லாமல் இருந்தது. எதேச்சையாகக்கூட அவர்களிருவரும் எதிரெதிரே சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த இரண்டு மாதங்களும் சதா அவளைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஒரு பெண், ஏற்கனவே மணமானவள், அந்த உறவின் நிமித்தம் ஒரு ஆணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள் என்று அறிகையில் மனம் ஏன் இடறுகிறது, அவள் மீதிருந்த ஈர்ப்பும் பிரியமும் இப்போது ஏன் அருவருக்கின்றன எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். ஆனால் பரஸ்பரம் ஒரு ஆணும் பெண்ணும் ஆத்மார்த்தமாக விரும்புவதில் இந்த விஷயங்கள் ஏன் குறுக்கிட வேண்டும், அவற்றை ஏன் அவன் பொருட்படுத்த வேண்டும். சுய தர்க்கம், விவாதம், கோபம், கழிவிரக்கம் என நாட்கள் கடந்தன. மனம் எப்போதும் பதற்றத்திலிருக்க சிந்தனை கனன்றபடியிருந்தது. ஒருநாள் விடியற்காலை தீர்மானத்துடன் எழுந்தான், உடனே ஜான்ஸியைப் பார்க்கவேண்டும். அவள் விடுதியில் இல்லை. உடம்பு சுகமில்லையென்று விடுப்பில் ஊருக்குச் சென்றவள் இன்னும் திரும்பவில்லையென்று சொன்னார்கள். அவன் துணுக்குற்றான். எப்படியோ அவள் வீட்டு முகவரியை வாங்கினான்.

எட்டுமணி நேரம் பயணித்து அவள் ஊரில் இறங்கினான். இணையான இரண்டு இரும்புக் கோடுகள் வெயிலில் மினுமினுத்தபடி தொடுவானம் வரை நீண்டிருந்த ஒரு ரயில்பாதையையொட்டி அமைந்திருந்தது அவள் வீடு. அவனை அவள் இயல்பாக வரவேற்றாள், வீட்டினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். வேறு ஒரு வேலையாக இந்த வழியாக வர நேர்ந்தபோது சும்மா அவளைப் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்ததாகச் சொன்னான். உடம்பு பரவாயில்லையா, கல்லூரிக்கு எப்போது வருகிறாய், வருவதாக இருந்தால் நானும் நேரே கல்லூரிக்குத்தான் போகிறேன், என்கூட வரலாமே எனக் கேட்டான். ஒரு நிமிடம் யோசித்தவள், வருகிறேன் என்றுவிட்டு உடன் பயணத்துக்குத் தயார் செய்துகொண்டு கிளம்பினாள். அவள் வீட்டில் அவனை யாரும் விகல்பமாகப் பார்க்கவில்லை.

பேருந்தில் இருவரும் எதுவும் பேசாமலே வந்தார்கள். அவள் விலகியோடும் மரங்களையும், அசைந்து மறையும் வயல்களையும் பார்த்தபடி வந்தாள். இடையில் பேருந்து ஒரு ஊரில் நின்றது. ஏதோ நினைத்தவன் “இங்கே இறங்கிடலாம், வா” என்றபடி அவள் கையைப் பிடித்தபடி இறங்கினான். அது கடலோரம் அமைந்த ஒரு புண்ணியத் தலம். அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தபின் இருவரும் கடற்கரைக்கு வந்தனர்.

தென்னைகளுக்கிடையே கடலைப் பார்த்து அமர்ந்திருந்தபோது அவன் சிரித்தபடி சொன்னான், “கடலோட இந்த ஓய்வின்மை எனக்கு எப்பவுமே பதற்றம் தர்றதா இருக்கு. கடலப் பார்த்தபடி கரையில என்னால அமைதியா உக்கார முடியறதில்லை. என்னோட பதற்றத்த கடலோட இந்த அலையடிக்கிற பதற்றம் அதிகமாக்கிடுது”. இதை அவன் சொல்வது முதல் தடவையில்லை. இதுவரை அவன் சென்றிருந்த எல்லாக் கடற்கரைகளிலும் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக உடனிருந்தவர்களிடம் இதைச் சொல்லியிருக்கிறான். பதற்றம் மிக்கவன் என்று அவன் முகத்தை அவன் செயல்களைப் பார்க்கும் யாரும் சொல்ல மாட்டார்கள். பாவனை எனத் தோன்றாத ஒருவித நிதானம் அவன் தோற்றத்திலும், பேச்சிலும் செயல்களிலும் எப்போதுமே இருந்தது. அவனோடு பழகிய இந்த நாட்களில் எதற்காகவும் அவன் பதறி நின்று அவளும் பார்த்ததில்லை.

அவள் அவனை நோக்கித் திரும்பினாள், கடற்காற்றுடன் விளையாடிக் கொண்டிருந்த தலைக்கேசத்தை பின்னால் தள்ளியபடி வாஞ்சையுடன் கடலைப் பார்த்தபடியே சொன்னாள், “அரவிந்த், நாம எங்கிருந்தாலும் கடல்சூழத்தான் இருக்கோமில்லையா. ஆழிசூழ் உலகுங்கிறது கருணை பார்த்து கடல் நமக்கு விட்டுத்தந்த துண்டு நிலங்கள்தானே, அது மேலதானே மனுஷ வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. இந்தக் கடல், அலைகள், அதனோட உப்பு எல்லாம் நமக்குள்ளேயும் இருக்கு, பூர்வீகத்துல கடல்லருந்து வந்தவங்கதானே நாமெல்லாம். அப்புறம் இந்த உலகத்தில ஒவ்வொரு மனுஷனும் ஒரு நீர்வெளி. சிலர் கடல், சிலபேர் குட்டை.” அவள் சிரித்தாள்.

அவன் ஆச்சரியப்பட்டான், கடலைப் பற்றி இவ்விதமாக இதுவரை யாரும் அவனிடம் பேசியிருக்கவில்லை. இவளுக்குள் இவ்வளவு ஆழமா? கடலை அவனாலும் நெருங்கி உணர முடியும் போலத் தோன்றியது. அதேநேரம் வாழ்வெனும் சமுத்திரம் பற்றிய அடிப்படைகளும் அவனுக்குத் தெளிவுபட ஆரம்பித்தன. அவனொரு கடலாகவே இருக்க விரும்பினான், அற்ப விஷயங்களைச் சட்டை செய்யாது பிரியத்திலும் காதலிலும் விரியும் ஒரு கடலாக. மெல்ல அவனது கடல் கொந்தளிப்புக் குறைந்து கரைகள் அகல ஆரம்பித்தன.

மெதுவாகப் பதற்றம் தணிந்துகொண்டிருந்த அவனிடம் அவள் கேட்டாள், “கடல்ல குளிக்கலாமா?”

தயங்கி அவன் கரையில் நின்றிருக்க ஓடி அவள் கடலில் இறங்கினாள். பாதம் கூசும்படி கீழே கரைகிற மணலும் எழும்பிவந்து உடலை மோதும் அலைகளின் விளையாட்டுமாய்க் கடலில் குளிப்பது அவளுக்கு ஆனந்தமாயிருந்தது. கைகளைப் பின்னால் கட்டி அண்ணாந்து கண்களை இடுக்கிச் சூரியனைப் பார்த்தபடியிருந்தவனை பெயரைக் கூப்பிட்டு அழைத்தாள். வெளிர்நீலவண்ணச் சுடிதார் நீரில் நனைந்து அடர்வண்ணமாகியிருக்க வெளித்தெரிந்த அவள் அங்கங்களுக்கு பளபளப்பு கூடிவிட்டிருந்தது. தயங்கித் தயங்கி கடலுக்குள் இறங்கினான். அவனுக்கு இதுதான் முதல் கடல் குளியல். கடலின் அலை நுரைக்கும் பதற்றத்துக்குள் அவன் நின்றான். இடுப்புவரை கடல்நீரின் குளிர். அதற்குமேல் உடல் பதறியது. பரீட்சித்துப் பார்க்கும் விதமாய்க் கடலைக் கைகளில் அள்ளினான். விருப்பமின்றியே முங்கினான். பிறகு மெதுவாகக் கடலிடம் தன்னைக் கொடுத்தான். கண்களிலும் நாவிலும் கடலின் உப்பை உணர்ந்தான். கடலுக்குள்ளாக நீந்தினான். அலை பெரிய சவால். அவனையது புரட்டிப்போட்டது. நிலைகுலைந்து வீழ்ந்து தள்ளாட்டமாய் எழுந்தான், மறுபடியும் வீழ்ந்து மறுபடியும் எழுந்தான். கடல் விளையாட்டின் விதிகள் அவனுக்குப் புரிய ஆரம்பித்தன. கடல் தண்ணீர்தான், பரந்த ஆகிருதியாலும் காற்று எழுப்பித் தரும் அலைகளாலும் முரட்டுத்தனம் கூடிவிட்ட தண்ணீர். காலில் எதுவோ தட்டுப்பட்டது. தலைகீழாகி கடலின் தரையைத் தொட்டு அதை எடுத்தான். ஒருபாதி பழுப்பும் வெள்ளையுமாய் வரிகளோடி மறுபாதி சுண்ணாம்பாய் வெளுத்திருந்த சங்கு. மூடினால் உள்ளங்கைக்குள் அடங்கிவிடுமளவுக்கு சிறியதுதான், ஆனால் அழகாயிருந்தது. தண்ணீருக்கு வெளியே வெளிச்சத்தில் மினுமினுத்தது.

சங்கை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்து அமர்ந்தான். குழந்தை போன்ற குதூகலத்துடன் அவள் குளித்துக் கொண்டிருந்தாள். கைகளிரண்டையும் பக்கவாட்டில் நீர்மட்டத்துக்கு மேலாக நீட்டி ஓசையெழும்ப நீரைத் தட்டிக் கொண்டிருந்தாள், ஒரு நீர்ப்பறவை சிறகடிப்பதுபோல. அவ்வளவு சீக்கிரத்தில் கடல் அவளை விடாது என்று தோன்றியது. இவன் வெளியேறிவிட்டதைப் பார்த்தவள் தண்ணீருக்குள் இருந்தபடியே ஏன் கிளம்பிட்டீங்க என்றாள். கையை உயர்த்தி சங்கைக் காட்டினான். வெளியே வர எத்தனித்தவளிடம் “பொறுமையா குளிச்சுட்டு வா, நான் வெயிட் பண்றேன்” என்றபடி போய் தென்னையடியில் அமர்ந்தான்.

அவள் கரையேறி வந்தபோது அந்த சங்கைக் கொடுத்தான். உற்சாகத்துடன் வாங்கிக் காதில் வைத்து அது ரீங்கரிக்கிறதா எனப் பார்த்தாள். இருவரும் அறைக்கு வந்து பால்கனியில் நின்று கடலைப் பார்த்தனர். மேலிருந்து பார்க்கும் கோணம் கடலுக்கு இன்னும் அழகைத் தந்திருந்தது. இந்தப் பக்கம் பொங்கிக் கொண்டிருக்கும் கடல், அந்தப் பக்கம் அந்திச் சூரியனின் பின்னணியில் தேவாலயத்தின் உச்சி. கன்னித்தன்மை கெடாமல் தான் ஈன்ற குழந்தையை கையிலேந்தி பெண் தெய்வம் பிறைமாடத்தில் சிலையாக நின்றாள். தேவாலய மணி ஒலித்து மக்கள் உள்ளே விரைந்தனர்.

பால்கனி கிராதியில் சாய்ந்திருந்தவளின் தோள்மீது கைவைத்து அணைத்தவன் தன் நாவால் அவள் கன்னங்களை வருடினான். அவள் கன்னங்களிலும், காது மடல்களிலும், உதடுகளிலிலுமிருந்த உப்புச்சுவை அவனுக்குக் கிறக்கம் தந்தது. “யூ ஆர் ஸோ ஸால்ட்டி” என்றபோது அவள் சிரித்தாள். அவளைக் கைகளில் வாரிக்கொண்டு, அவள் நாவைத் தன் நாவால் தொட்டபோது மூளைவரை அதன் குளிர்ச்சியை உணர்ந்தான். உப்புச்சுவையும் குளிர்ச்சியுமாய் அவன் மறுபடி கடலில் மூழ்க ஆரம்பித்தான். பால்கனியிலிருந்து விலகி அறைக்குள் போகையில் “இனிமே கடல் எனக்குப் பதற்றம் தராது” என்றான். அப்போது கைகளில் அவன் கடலை ஏந்தியிருந்தான்.

***

அசதா


ஆசிரியர் தொடர்புக்கு – jayanthandass@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular