Wednesday, October 9, 2024
Homeஇலக்கியம்அபுனைவு“கடலெனும் வசீகர மீன் தொட்டி”யும் சொற்களைப் பற்றியிருக்கும் திரவத்தன்மையும்

“கடலெனும் வசீகர மீன் தொட்டி”யும் சொற்களைப் பற்றியிருக்கும் திரவத்தன்மையும்

சுபா செந்தில்குமாரின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து குட்டி ரேவதி சிங்கப்பூரில் நூல்வெளியீட்டின் போது வழங்கிய கட்டுரை

2020 – இல் தமிழில் கவிதை எழுத வரும் ஒருவர் முதலில் தமிழின் மரபை மூர்க்கமாக எதிர்கொள்ளவேண்டியிருக்கும். பின், அங்கே தன் நவீன வாழ்வின் பின்னல் முறைகளை மொழி மயப்படுத்தவேண்டியிருக்கும். எல்லாவற்றினூடும் நம் முன்னே கடந்து சென்ற பல கவிஞர்களின் மொழியாக்கப் பிரதிகளின் சாயல்களை உதறித்தள்ள வேண்டியிருக்கும்.

இன்றைய மொழியரசியலின் நிலையில், இதையெல்லாம் விவரித்து நாமெல்லோரும் விளங்கிக் கொள்ளவே ஊடகமும் போதாது, காலமும் இல்லை. ஆக, எப்படி நவீனக் கவிதையின் நடையை அதில் பெண்ணியப் போக்கை நம் தடமறிந்து கொள்வது. இந்நிலையில், நமக்கு உதவியாக இருப்பவை சுபா செந்தில்குமாரின் தொகுப்பைப் போன்று நம் முன்னே வந்து நிற்கும் நவீனக் கவிதைப் பிரதிகள் தாம்.

தமிழ்ப்பெண் கவிதை வெளியில்,  ஒளவை, ஆண்டாள், வெள்ளிவீதியார் என்ற பெயரெல்லாம் கோலோச்சிய மொழியின் கருத்தியல் வெளியில்,

தமிழ்க் கவிதையின் வேரும் மரபும் நவீனமும் அறிந்து எழுதும் நுண்மாண் நுழைபுலமே கவிதைக்குத் தேவையாக இருக்கிறது. நாங்கள் எழுத வந்த காலத்தில், எங்கள் மீது எழுந்த சர்ச்சையால், தொடர்ந்து எழுத வந்த பெண்கள் எல்லோரும், ‘நாங்கள் அவர்களைப்போன்ற கவிஞர் இல்லை’, என்று அறிவிப்புச் செய்துவிட்டே எழுத வேண்டியதாக இருந்தது. எங்களுக்குப் பின் இரண்டு தலைமுறைகள் எப்படியெப்படியோ எழுதி அழுத்தமான பதிவுகள் எதுவும் இல்லாமல் ஆனால், கடல் அலை போல உருவாகிக்கொண்டிருந்த பெண் கவிஞர்களையும் கண்டுகொண்டுதானிருந்தது.

ஏனெனில், பெண்ணின் மொழியாற்றலும் அறிவாற்றலும் முழுமையாக வெளிப்பட, வாய்ப்பாக அமைவது கவிதையே. அல்லது, பெண்கள் அதை வெளிப்படுத்துவதற்கான தம் முழுவாய்ப்பையும் தேடிக் கவிதையில் தாம் கண்டடைகின்றனர். உச்சபட்சமான மனித அறிவாற்றல் கவிதையில் தான் வெளிப்படும் என்பது என் அழுத்தம் திருத்தமான  கருத்து. நான் முன்பு சொன்ன பெண்ணியம் என்ற இணைப்பு கூட இதை அடிப்படையாகக் கொண்டதே. ஒரு இண்டெலெக்சுவல் பணியை, கவிதை என்னும் மொழியியல் பணி வழியாக ஒரு பெண் எப்படி செய்து முடிக்கிறாள் என்பதே, இன்றைய நவீனக்கவிதையின் வடிவம்.

நவீனக் கவிதையின் முழுமையை அல்லது உச்சத்தை அல்லது அதிநவீனத்தைத் தொட, மொழியின் மரபுணர்வைப் பெற வேண்டியிருக்கிறது. மரபுணர்வு என்பது படைப்பியக்கத்தின் செழுமைக்கு விளைநிலமான மனப்பின்னணியே என்று பிரமிள் கூறுவார்.

இந்த மரபுணர்வப் பெறாமல், தமிழ் படைப்பியக்கத்தின் சங்கிலியில் ஒருவர் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது.

தனித்தமிழ்க் கவிதை இயக்கத்தின் கூறுகளான, நவீனம், கையாளப்படும் உணர்வுலகம், அகத்துறை புறத்துறையில் கவிஞர் முன்வைக்கும்  கருப்பொருட்கள், தேர்வுகள், இரண்டையும் இணைக்குமிடத்து அவரின் உத்வேகம் (ஓட்டப்பந்தயத்தில் ஓடத்தொடங்கும் முன் கொள்வோமே மனவெழுச்சி, அதைப் போல), தன் முன்னே அமர்ந்திருக்கும் எல்லா தலைகளையும் மீறி உயரே, தாண்டி எதிர்கால வாழ்வைக் கணித்துவிடும் தனித்த சிந்தனை முறை, சுயத்தன்மை, தெறிப்பான படிமங்கள், ஆற்றொழுக்க நடை, மனமுதிர்ச்சி, தன் வயதிற்குள் காலத்திற்குள் அடங்காத மானுடப் பரவசம் எல்லாமே கவிதையின் கூறுகளாகித் தொடர்ந்து இயங்கினால் மட்டுமே ஒரு கவிதையை எழுத முடிகிறது நம்மால். அப்பொழுது தன் கவிதையும் நிறைவு அடைகிறது.

*

கடலெனும் வசீகர மீன்தொட்டிக்கு வருவோம்.

இயன்றவரை, இக்கவிதைகளில் சுபா செந்தில்குமார் கையாண்டிருக்கும் கவித்துவக்கட்டமைப்பில நான் புரிந்துகொண்டவற்றையெல்லாம் எளிதாக, நேரடியாக உங்களுக்குப் புரியவைத்திட முயல்கிறேன். முக்கியமான அம்சங்களைச் சுட்டிக்காட்டிவிட்டால் அவர் கவிதைத் தொகுப்பையும் கவிதைகளையும் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்ற எளிய வழியை இங்கே பின்பற்ற விரும்புகிறேன். இதற்கு முக்கியமான காரணம், அவரின் கவிதைகள் எல்லாம் மனித வாழ்வின், மனத்தின், அகத்தின் நுட்பமான தளத்தில் நின்று இயங்குவதே.

கவிதையின் வழியாகத் தன் வாழ்வின் பார்வையை முழுவதும் வெளிப்படுத்தும் மூர்க்கமான சொல்வெளியைத் (அதாவது, நிறைய அகப்பொருட்கள் ஒன்று சேர்ந்த வெளியைத்) தன் கவிதையாகக் கண்டுள்ளார், சுபா. இந்த ஒரு வரி தான் அவருடைய மொத்த கவிதைகளையும் பற்றி நான் சொல்லவிரும்புவது. ஆனால், இது சாதாரணமன்று. மீண்டும் சொல்கிறேன். “கவிதையின் வழியாகத் தன் வாழ்வின் பார்வையை முழுவதும் வெளிப்படுத்தும் மூர்க்கமான சொல்வெளியைத் தன் கவிதையாகக் கண்டுள்ளார்.”

அரவமற்று வெளியேறிய பூனை (கவிதை)

கால்கள் விளங்காமல் கிடந்தவளையும்
கருவுற்றிருந்த கறுப்புப்பூனையையும்
வீட்டுக்குள் வைத்துப் பூட்டிவிட்டுத்தான்
இரவுக்காட்சிக்குச் செல்லமுடிகிறது
ஒவ்வொரு முறையும் வீடு திரும்பும் வரை
நகர இயலாத மனதை
உருட்டிக் கொண்டே இருக்கிறது பூனை
வெறும் பொழுதைப் படுத்தே கிடக்கப்
பழக்கப்படுத்தப்பட்ட பூனைக்கு
என்ன விருப்பம் இருந்துவிடப்போகிறது
நேரம் கடத்தும் கேளிக்கைகளில்
அவள் அப்படித்தான்
பூனை இல்லாத நாட்களிலும் கூட
ஃப்ளாஸ்கைத் திறக்கும் போதெல்லாம்
அந்த சனியன் கத்திக்கிட்டே இருக்கு
அதுக்கும் கொஞ்சம் பாலை ஊத்து என
அக்கறையையாய்ச் சலித்துக் கொள்வாள்
முழுநீளப்படம் முடித்த மறுநாள்
தலைமாட்டில் வைக்கப்பட்ட பாலுடன்
சுருண்ட பூனை போல்
சலனமற்றுக் கிடத்தப்பட்டிருந்தாள்
இதுவரை திரும்பவே இல்லை
சப்தங்களை வீட்டுக்குள் பதுக்கிவிட்டு
கதவு திறந்ததும்
அரவமற்று வெளியேறிய அந்தக் குரல்

கவிதை தன் ஓட்டத்தில் பூனையிலிருந்து அவளுக்கு இடம்பெயர்கிறது. மீண்டும் பூனைக்கு நகர்கிறது என்பது முதல் தன்மை. அதாவது, கவிதையின் அரூப உலகிலிருந்து தூல உலகிற்கே எப்பொழுதும் தன்னை அழைத்துச் செல்கிறார். இது ஒரு சீரிய கவித்துவம். சில நேரங்களில், ஒரு சிறுகதையைப் போல கவிதையை முதல் வாக்கியத்தில் தொடக்கிக் கடைசிவாக்கியத்தில் கவிதையை முடித்துவிடும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடும்  இலக்கிய வெளியில், கவிதையின் பரப்பில் எல்லா நகர்வுகளையும் தனிப்பட்ட அதனதன் மனவெளியிலேயே நகர்த்திச் செல்கிறார். பெரியவரோ, யானையோ, பூனையோ, பெண்ணோ, மீனோ தனியான உலகில் அவர்கள் மட்டுமே இருக்கின்றனர். முற்றிலும் தனித்துவிடப்படுகின்றனர்.

தவம் (கவிதை)

நிசப்தமாக நீந்தியது மீன்
நானும் படகும்
பார்த்துக்கொண்டே இருந்தோம்
தண்ணீரின் தவம் கலைக்க
எவருக்கும் விருப்பமில்லை

இப்படி தனித்துவிடப்பட்டவர்களின் கண்ணுக்குப்புலனாகும் உலகில், உருவமின்மையான விடயங்களை எல்லாம் கண்டறிந்து பதிவு செய்கிறார்.  இவர் கவிதைகளில் எங்கும் இப்படியாகத் தனித்துவிடப்பட்ட தன்மை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது கழிவிரக்கமோ, தன் மீது தானே பரிவு கொள்ளும் ஓர் அபலையின் தனிமையோ அன்று. அறிவியல் வெளிகளுக்கு அப்பால் கடந்து சென்று புலனறிவுகளைப் பயன்படுத்தும் ஓர் உணர்வு ஊடகமாகக் கவிதையை மாற்றும் ஆற்றல்.

இரண்டாவது தன்மை, சுபாவின் கவிதைகளில் நுண் உணர்வுகளைச் சொற்களாக்கும் ஓர் எளிய வித்தையும் அசுரத்தனமும் ஒன்று சேர்கிறது. சொற்களை இறைக்காமல் அவற்றிற்கு ஓர் அடர்ந்த அர்த்தம் கொடுத்து கவிதை மொழியின் போக்கை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சட்டென்று திருப்புகிறார். அந்த இடத்திலிருந்து அக உலகின் உண்மைகள், நொய்மைகள், கண்டறிதல்கள், பரிணாம வளர்ச்சி என எந்த வகையான தன்மையும் பளீரிடும் ஓர் ஒளிக்கற்றை போல நமக்கு வெளிப்படும். ஆனால், எல்லாவற்றிற்கும் மையமாய் கருத்தொன்று இருக்கிறது. அது உணர்ச்சியுடன் கலக்கும் இடத்தினை கடலெனும் வசீகர மீன் தொட்டி, ஊற்றுக்கண்ணில் வழியும் ஈரம், நிறைந்து வழியும் நிலவு, கருநீல உரையாடல் ஆகிய கவிதைகளில் உணரலாம். உணர்ச்சியும் கருத்தும் தனித்து இருந்து கவிதையாவதில்லை. எங்கேயோ கருத்தை முன்னொட்டி அதன் மீதான உணர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் சொற்களை நாம் கண்டறியும் சிறிய கால, மிகக் குறுகிய கால உத்வேகத்தில் கவித்துவத்தின் மேல்நிலையையும் உச்சத்தையும் தொடும் முயற்சி தான் கவிதை.  கவிஞர் தன் அனைத்துக் கவிதைகளிலும் இந்த முயற்சியை ஒவ்வொரு முறையும் புதியதாக ஒரே சீராக அணுகியிருப்பது ஆச்சரியமூட்டியது. ஒரு முழுமையை, அர்த்தத்தின் விளைவைத் தொட்டுவிடுகின்றது ஒவ்வொரு கவிதையும்.

மூன்றாவது, இவர் கவிதைகளில் மட்டுமே காணப்படும் சிறப்புத்தன்மை என்று நான் அறிவது, கருப்பொருளின் திடத்தன்மையோ திரவத்தன்மையோ அவர் கவிதைகளில் ஆளும் சொற்களை விடாது பற்றியிருத்தல். இதைப் புரியும் படி, இன்னும் நுணுகி விளக்குவது அவசியம் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் அதாவது, நான் கவிதை எழுத வந்த தொடக்கக் காலத்தில் எனக்கு ஒரு கவி அறிவுரை வழங்கினார். ஒரு கவிதையை எழுதும் ஒரு பொருள் சம்பந்தப்பட்ட இனச்சொற்கள் மட்டுமே அக்கவிதையில் இருக்கவேண்டும் என்று. அந்தக் கவி சொன்னது ஒரு பழமை வாதம்  என்பது போல், சுபாவின் கவிதையில்  ஒரு பொருளுக்குப் பயன்படுத்தும் சொல் திரவத்தின் உணர்வைப்பெற்று கரைந்து ஓடி, அதன் நிறத்துடன் திடத்துடன்  சம்பந்தமில்லாத இன்னொரு ஒரு பொருளுக்கும் ஆகி நிற்கும். இதில் அவர் கவனமாக இருப்பது இரண்டுக்கும் பொதுவான உணர்வின் தன்மையையும் கண்டறிவதில் தான். அதாவது, பொருண்மையான உலகத்தையும் கருத்து உலகத்தையும் இணைத்துவிடும் கவிதை மொழியை இயற்றுவதில் தான்.

அவ்வப்பொழுது நான் முகநூலில் கவிதைகளைத் தேடி வாசிப்பதுண்டு. புதிதாக எழுத வருபவர்கள் இப்படியான குறிப்பிட்ட பரிசோதனை முறையை முயற்சிசெய்வார்கள். ஆனால், அதைக் கவித்துவமாக்கும் முயற்சியில் அந்தக்கவித்துவ எழுச்சியற்று,  இணைப்புகளுமற்று எங்கெங்கேயோ அது அறுந்து தொங்கிவிடும். கவிதையின் விறைப்பும் நீட்சியும் தொய்வடையாத ஒருநிலையை சுபா தன் மனவெளிக்குள் திரித்துவிடுகிறார். இந்தச் சொற்களின் திரவத்தன்மையைக் கருத்தில் கொண்டு, நவீன மொழியில் சொல் கரைந்து பட்ட இந்த நிலை எங்கெங்கும் சமூகப்புழக்கத்தில் இருந்தாலும்தொங்கி, இதை ஒரு கவிமொழியாக மாற்றியதால், நவீன நடையின் போக்கை நிர்ணயிப்பவராகிறார். நிறைந்து வழியும் நிலவு கவிதையும் கடலெனும் வசீகர மீன் தொட்டி கவிதையும் சிறந்த உதாரணங்கள்.

நான் சொன்னது போல், கவிதையை அணுகுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் கடலெனும் வசீகர மீன் தொட்டி கவிதையையே எடுத்துக்கொள்ளலாம்.  இப்பொழுது இந்தக் கவிதையை வாசித்துப்பாருங்கள்.

கடலெனும் வசீகர மீன் தொட்டி (கவிதை)

ஈரச்சந்தையில் மீன் வெட்டுபவன்
கையளவு நீரள்ளித் தெளித்து
வாய்பிளந்து துடித்துக் கொண்டிருக்கும்
ஞாயிற்றுக்கிழமைகளை எழுப்புகிறான்
தனித்திருக்கும் தன்னுடல் சிலுப்பி
நிறைந்திருக்கும் வெற்றுக்காற்றை
பெருங்காமத்தில் தவிப்பனின் அவசரத்தோடு
அள்ளி அள்ளி விழுங்குகிறது
சுவாசித்தலுக்குக் காத்திருக்கும் ஆண் மீன்
உலர்ந்து போன இன்னொரு தேசத்தில்
தாம்பத்யத் தொட்டியில் நீந்திக்கொண்டிருக்கும்
பெண் மீனுக்கு அலைபேசியில் வந்து சேர்கிறது
பளபளப்பானதொரு தூண்டில் முள்ளில்
ஆண் வாசனையைச் சுமந்து வரும் இரை
நீர்த்துளிகள் உருண்டோடும் வாழை இலையில்
மீன் துண்டுகளைப் பரிமாறிவிட்டு
காத்திருக்கத் தொடங்கும் அவள் கரங்களில்
ரகசியமாய் உதடுகள் குவிந்து நீந்துகின்றன
ஈரமில்லாமல் வந்து சேர்ந்த முத்தங்கள்
சிலிர்த்தடங்கும் உடல் வளைத்து
செதில்களின் நுனிகளில் வியர்வை அரும்ப
வலதும் இடதுமாய் அலைந்து திரும்புகிறது
பகிர்ந்து கொள்ளப்படாத காமம்
இரு தேசங்களுக்கு இடையில்
வசீகர மீன்தொட்டியாய்
விரிந்து கிடக்கிறது கடல்

சுபா செந்தில்குமாரின் கவிதைத் தொகுப்பை வாசித்ததும் எனக்கு நானே ஓர் இலட்சியத்தை வடிவமைத்துக் கொண்டேன். அது, இன்றைய நவீனக்கவிதை இயக்கத்தின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்று சுபா செந்தில்குமாரின் கவிதைகளினூடாகக் கண்டறிவதே. கலையின் நோக்கம், கவிதை எத்தகைய கலைப்பணியை இன்று செய்யவேண்டியிருக்கிறது, அதன் திருகுமொழியில் கவிதை வடிவத்தின் நவீனத்தன்மை முழுமை பெறுகிறதா, பெண் கவிதை இயக்கத்தின் முனைப்பையும் விசையையும் கொண்டிருக்கின்றனவா என்பவை எல்லாம் என் கேள்விகள்.

முன்பே குறிப்பிட்டது போல, கவிதையே அறிவுசெறிந்த பணியின் உச்சமும் அதிமேல் நிலையாகவும் இருக்கிறது. கவிதை இந்த உயர்ந்த இலட்சியத்தை அடையவில்லையென்றால், அக்கவிதை வெறும் சொற்களாய்ச் சரிந்து விழுகின்றது. கடலெனும் வசீகர மீன் தொட்டி, நான் மேலே குறிப்பிட்ட எல்லா விடயங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. சமூக வாழ்வில் பாலியல், தனிமை, நிலக்காட்சியின் தத்துவம், அழகியல், நுண் அரசியல், மானுட குலம் பிரிந்து கிடக்கும் எல்லைகள் எல்லாவற்றையும் கூட்டியிணைத்து, ‘கடலெனும் வசீகர மீன் தொட்டி’ என்று ஆக்கிவிடுகிறார். ஒட்டுமொத்த சமூக அரசியலின் குறியீடு இதுவென ஆக்குவதை நாம் பெரிய பரிமாணத்தில் இங்கே உணரமுடிகிறது.

சம்பவங்களை நிகழ்வுகளை அடுக்கி எழுதுவது கவிதையன்று. அது சிறுகதை. அகவெளி உலகையும்  புறவெளி உலகையும் சொல்லிச் சொல்லி இரண்டு வெளியிலும் இயங்கும் உணர்ச்ச்சிகளை தகுந்த சொல் கொண்டு கோர்த்துக் குறைந்தபட்ச அவகாசத்தில் மனதில் தங்கிவிடும் “நவீனச் சுயஉணர்வு” தான் இன்றைய முக்கியமான கவிப்பொருள். ஆனால், இதை எவ்வளவு அகலமாக விரித்து உலகிற்கான விழிப்புணர்வுப் பொருளாக மாற்றித்தருகிறோம் என்பதில் தான் கவித்தரமும் கவித்துவமும்  துலங்குகின்றன.

அடிப்படையில், கவிதை என்பது தனிப்பட்ட திறன். நாளுக்கு நாள் அதனுடன் நாம் நெருக்கமாகி, நம் அந்தரங்கத்தை முற்றுமாக கவிதைக்கு மட்டுமே விட்டுக்கொடுத்து, தன் வாழ்வை முழுவதுமாகக் கபளீகரம் செய்ய அனுமதித்துவிடுவது ஒன்று மட்டுமே அத்திறனை வளர்க்கும். என்னைப்பொறுத்தவரை, அடுத்தடுத்த கவிஞர்களின் கவிதைகளுக்கும் தன் கவிதைகளுக்கும்  எந்த உறவோ நெருக்கமோ தொடர்போ இல்லை. முழுவதும் சுயம் ஒளிரும் இடம் கவிதை தான். இது அடிப்படையில் தனிப்பட்ட முழு அறிவு பலமும் வெளிப்படும் திறன் தான். இந்தத்திறனைத் தேர்ந்தெடுத்த தன் இலட்சியத்திற்காக மட்டுமே பயன்படுத்துவது நெடிய பயணத்தில் தனக்கு விளக்காகவும் கிழக்காகவும் இருக்கும்.

ஆனால், இவையெல்லாம் தாண்டிக் கவிஞருக்கான சவால்கள் எங்கே இருக்கின்றன என்பதையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

அடுத்தடுத்து கவிஞர் எழுதும் தொகுப்புகள் இந்தப்பாதையின் அடுத்த புள்ளிக்கு அவர் தன்னைத்தானே அழைத்துச்செல்வதில் இருக்கிறது.

கவிதையும் கவிஞரும் புறக்கணிக்கப்படும் இடங்களில் எல்லாம், அது எந்தக் கவிதை என்றாலும் எந்தக்கவிஞர் என்றாலும் தன்னையே தன் கவிதையையே புறக்கணிக்கப்பட்டதாய் உணரும் இடங்களில் எல்லாம் அதைப்பொருட்படுத்தாமல் மேற்சென்று எழுதும், இயங்கும் திறத்தில் இருக்கிறது.

ஓர் இயக்கத்தின் முன் சக்கரம் போல் எதையும் கண்டுகொள்ளாமல், சமகால வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடுவதில் இருக்கிறது.

கலெக்டிவ் கான்ஷியஸ்னஸ், தான் வாழும் சமூகத்தின் கூட்டு விழிப்புணர்வின் குரலாக, சாட்சியாக, தனித்த ஒரு மனிதராகத் தன் வாழ்வையும் எழுத்தையும் ஒப்படைப்பதில் தான் ஒரு கவிஞராக மாறமுடிகிறது.

சுபா செந்தில்குமார், அந்த ஒரு புள்ளியிலிருந்து தான் தன் கவிதை இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் என்பதால், மேற்கண்ட சவால்களையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடையவராய் இருப்பார் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்!

கவிதை குறித்த ஒரு நிகழ்வில் வாசிக்கப்படும் ஓர் உரையை, வெறும் உரைநடையாக முடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் இத்தொகுப்பில் எனக்குப் பிடித்தமான சில கவிதைகளை வாசித்துவிட்டு உங்கள் வாசிப்பிற்கும் திறந்து வைத்து முடிக்கிறேன்.

முதலில் மிகவும் அழகான ஒரு காதல் கவிதை.

பசி

கண்ணில் தெரியும் பசியை
மெதுவாய்த் தின்னத் தொடங்குகிறது
இன்னொரு பசி.
தின்னத் தின்னத் தீராத பசி
கொஞ்சம் கொஞ்சமாய்
விழுங்கத் தொடங்குகிறது இலையை.
மொத்த வனத்தையும்
விழுங்க எத்தனிக்கும் பசியை
நெளிந்தும் நெகிழ்ந்தும்
சிந்தாமல் செரிக்கிறது இலை.
மிச்சம் வைத்துப் பசியடங்கிய போது
காணாமல் போயிருந்தது இலை.
இலைக்குள் நீ.

நீருடல்

என் நினைவுகளை
இரண்டாய்
நான்காய்
எட்டாய் மடித்து
உன் பரந்த நீர்நிலையினில்
மிதக்க விடுகிறேன்
அடிவயிறு நனைந்த படகாய்
மெதுவாய் நெகிழ்ந்து
நீருடல் பற்றி எழும்புகின்றன
நம் அலைகள்

தகிக்கும் பாலை

ஒரு மணற்புள்ளியில்
நீயும் நானும் எழுதத் துவங்குகிறோம்.
நெளிந்தூறும் சர்ப்பங்களாய்
வளைவெழுத்துகளின் தடம்பதித்தபடி
அலைகிறது நம் அனல்மூச்சு.
எழுத எழுதத் தீராமல் தகிக்கிறது சந்தனப்பாலை.
விளிம்பென்று சமரசம் செய்து கொண்ட
ஒரு கானல்நீர் சுனையில் நின்று
இருவருமாய்த் திரும்பிப் பார்க்கிறோம்.
இருவரின் கையெழுத்திலும்
நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது
ஒரு மணற்கவிதை.
முடிவில்லா அம்மணற்பரப்பில்
உன்னைத் தடுக்க விழையும்
கோட்டெழுத்துக்கள் பற்றிய கவலை
இனியும் எனக்கில்லை.
இதோ தோல்வியுறும் என் கரங்களையும் பற்றி
இனி நீயே அம்முடிவிலியைத் தொடர்ந்து போ.
இப்பொழுதென்பது கட்டுடைதலுக்கானது.

இத்துடன் என் உரையை நிறைவு செய்கிறேன். கவிஞருக்கு வாழ்த்துகள். நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

***

குட்டி ரேவதி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular