கடற்கன்னியும் சில கடற்பறவைகளும்

3

சித்துராஜ் பொன்ராஜ்

கடற்கன்னி பாடுகிறாள்:

இதோ பிரகாசமான வெயில்: 
கழுத்தின் பின்புறமாய்த் தூக்குக் கயிற்றின் கனத்தோடும்
அசௌகரியத்தோடும் புரள்கிறது.

கடலின் கர்ப்பத்தை என்னுடன் இழுத்து வந்து போட்டதுபோல்
பொன்னிறமான மணலில் சிதறிக் கிடக்கும் நுரைகளின் மத்தியில்
கிடக்கிறேன்.

நுரைகளைப்போலவே கடலின் கர்ப்பமும் அரூபமானது.

கடல் நிழல்களோடு கூடித் திளைக்கும் சூரியக் கிரணங்களால் சூலுற்றுத் தன் கர்ப்பத்தைத் தானே யுக யுகாந்திரமாய்க் கலைத்துக் கொண்டிருக்கிறாள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

நெய்வாசக் குழலுடைய ஒரு பெண் ஆயிரமாயிரம் மனிதர்களின்
காலடிகள் தட்டிப்போட்ட மணற்பரப்பில் அமர்ந்தபடியே கருநீல நிறத்தில்
பாடல்களை நெய்து கொண்டிருக்கிறாள்.

மனிதர்கள் வெவ்வேறு சமயங்களில் நெய்த பாடல்களே கடல்.

அதனால் கடலைச் சார்ந்திருக்கும் பகுதியும்
நெய்தல் என்று அழைக்கபடுகிறது.

கடலுக்கு உருவமில்லை.

கடற்கன்னி பாடுகிறாள்:

கடல், மல்லாந்து கிடக்கும் பிரகாசமான கண்ணாடி.

அதற்கு உருவமில்லை. 

அதன் உருவமின்மையின் மீதுதான் மனிதர்கள்
ஆழமான பெருமூச்சுகளின் ஓசையோடு
சலித்துத் திரும்பும் பாய்மரக் கப்பல்களின் வடிவத்தில்
தங்கள் போதை மிகுந்த ஆசைகளை ஏற்றி வைக்கிறார்கள்.

இந்தப் போதாமை எனக்கு வருத்தம் தருகிறது. 

கடல், திணை மருவி வெறும் வெற்றிடமாகிப் போன மாய நிலம்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

மனிதர்கள் காற்றிலும் ஏறி வருவார்கள்.
கவனம்! கவனம்!
காற்றும் திணை இல்லாத இடம்.

கடற்கன்னி பாடுகிறாள்:

இடுப்புக்கு மேலே மனிதர்களின் உடம்பும்,
கீழே மீனின் வாலும் உடைய சந்ததியை உருவாக்கப் போகிறேன்.
கடலின் மூச்சுத் திணற வைக்கும் கர்ப்பத்தை
எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு.

ஒரு நாள் மூச்சுத் திணறி மனிதர்கள்
திணைகளைத் துறந்து என்னிடம் வரப் போகிறார்கள்.

இதோ கடலுக்கடியில் மலைகள்,
பவளங்கள் வளர்ந்திருக்கும் காடுகள்,
வயல் வரப்புகளாய் விரிந்திருக்கும் வாசனையுள்ள மண்,
நொடிக்கொரு தரம் இருப்பிடமின்றி 
அலைந்து கொண்டிருக்கும் பாலை.

இது, கடல்.
இதுவே போதாமை.
அதனால் இதனை ஆசைக்கு உவமையாய்ச் சொல்கிறார்கள்.

கடற்பறவைகள் பாடுகின்றன:

கடலை மனிதர்கள் தூக்கிக் கொண்டு போகிறார்கள்
கவனம்! கவனம்!

எதிர்காலத்தில் இதுவே உங்கள் பாடலாய் இருக்கப் போகிறது.


***

சித்துராஜ் பொன்ராஜ் – தமிழ் தவிர ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என எல்லா துறைகளிலும் இவரது பங்களிப்புகள் இருக்கிறது. பரிசோதனை முயற்சிகளைத் தொடர்ந்து செயல்படுத்தியும் வருகிறார்.

3 COMMENTS

  1. புதிய கற்பனைகளை பரிசளிக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here