Monday, October 14, 2024
Homesliderஒரு பெண் ஒரு சிறுவன்

ஒரு பெண் ஒரு சிறுவன்

சுரேஷ்குமார இந்திரஜித்

-1-

ஒரு பெண், பத்து வயது சிறுவனுடன் நிற்கும் காட்சி மனதில் தோன்றியது. சத்யனுக்கு ஆத்திரமாக இருந்தது. சமூகம் எத்தனை பேர்களை வரலாற்றில் மதிப்பீடுகள் மூலமாக, சமூகக் கட்டமைப்பு மூலமாகப் பலி வாங்கியிருக்கிறது. குடித்துக்கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைக்க வேண்டும் போலிருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டார். மதிப்பு மிக்க வாழ்க்கை வாழ்கிறார். பொருளாதார ரீதியாக தாழ்வான நிலையில் இல்லை. அவர் செய்து கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம். கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து லேசாகத் திறந்து பார்த்தார். அவருடைய உதவியாளர் ஈஸ்வரன் நின்று கொண்டிருந்தான். இரண்டு புரோக்கர்கள் வந்து காத்திருப்பதாகக் கூறினான். வருவதாகச் சொல்லி உள்ளே வந்து மிச்சமிருந்த பீரைக் காலி செய்தார்.

அவருடைய அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு புரோக்கர்களும் எழுந்து நின்று அவர் அமர்ந்ததும் அவர்களும் அமர்ந்தார்கள்.

“அண்ணே எப்படி வியாபாரம் போய்க்கிட்டிருக்கு”

“நல்லா போய்கிட்டிருக்கு ஆனா பத்தாது. முன்னேயெல்லாம் இவ்வளவு காலத்துக்குள்ளே எல்லா பிளாட்டுகளும் வித்துப் போயிருக்கும்.”

“ஆமா என்னண்ணே செய்றது, பணப்புழக்கம் இல்லை. பணத்துக்கு கட்டுப்பாடு வந்துருச்சு. ரெண்டு பார்ட்டியை கூட்டிட்டு வந்து காண்பிச்சோம். புடிச்சிப்போச்சு, வாங்கற ஐடியாவுலே இருக்காங்க. நாளைக்கி கூட்டிட்டு வாறோம். அட்வான்ஸ் போட்டுட்டு ரிக்கார்டுகளை வாங்கிட்டு போகட்டும். அவுங்க திருப்திபட்டதுக்கப்புறம் பதிவு வைச்சுக்கலாம்.”

“சரி… பண்ணுங்க… பதிவு அன்னிக்கு பணம் கிடைச்ச உடனே உங்க கமிஷன் செட்டிலாயிடும்.”

“சரிங்கண்ணே நாளைக்கி கூட்டிட்டு வாரோம்”

புரோக்கர்கள் சென்று விட்டார்கள். சத்யனுக்கு இன்னொரு பீர் பாட்டிலில் பாதி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அறைக்குள் நுழைந்தார். ரொம்பக் காலமாகவே அவருடைய அம்மா பத்மாவிற்கு மனப்பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. தூக்கம் என்பதே இல்லை. இரவில் வீட்டிற்குள்ளே அலைந்து கொண்டிருப்பாள். அடுக்களைக்குச் சென்று ஏதாவது சாப்பிடுவாள். தற்போது மனநல மருத்துவரிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறாள். மனநல மருத்துவரைப் பார்த்து என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளலாம் என்று நினைத்து அவரை ஒருநாள் சந்தித்தார்.

மருத்துவமனையில் உட்கார்ந்திருக்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. மனநல மருத்துவரைப் பார்ப்பதற்கு வந்திருந்தவர்களின் முகங்களே வித்தியாசமாக இருந்தன. அவர்களின் மனநிலை சரியில்லை என்பதைக் காட்டிக் கொண்டிருந்தன. சத்யன் விசிட்டிங் கார்டை கொடுத்திருந்தார். உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்ததும் உதவியாளர் அவரை உள்ளே போகச் சொன்னான்.

மனநல மருத்துவர் வயதானவராக இருப்பார் என்ற கற்பனை சத்யனுக்கு இருந்தது. ஆனால் இளவயதுடையவராக இருந்தார். பரஸ்பர விசாரிப்பிற்குப்பின் சத்யன் தன்னுடைய தாயாரின் மனப்பிரச்சினை தொடர்பாக  விசாரித்தார்.

“உங்க அம்மாவுக்கு எழுபது வயதுக்கு மேலே ஆகுது. ஆனா அவுங்களுக்கு விருப்பமில்லாம அவுங்க கல்யாணம் நடந்துருக்கு, கணவரைப் பாத்தா அவுங்களுக்கு பயந்தான் ஏற்பட்டிருக்கு, விருப்பமில்லாம பயத்தோட வாழ்ந்திருக்காங்க. அதுவும் ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டிருக்காங்க, இதுதான் பிரச்சனை. அவுங்களுக்கு ஏதோ காரணத்தாலே மன அழுத்தமோ அல்லது நோயோ ஏற்பட்டால் மனப்பிரச்சினை அதிகரிக்கும். மாத்திரை தேவைதான். ஆனா பேசி சரி பண்ணிக்கிட்டிருக்கேன்” என்றார் மனநல மருத்துவர்.

“மறக்கடிக்க முடியுமா”

“மறக்கடிக்க முடியாது. ஆனா, தீவிரத்தை குறைக்கலாம். வாழ்க்கையிலே ரொம்பப் பேர் இப்படித்தான் விருப்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருங்காங்கன்னு சொல்லி ஏத்துக்க வைக்கலாம்.”

மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டுக் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, கடந்த காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். ஒரு பெண், பத்து வயதுச் சிறுவனுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி தோன்றியது.

-2-

விஸ்வநாதன் தன் தாயார் கோமளத்திடம் கேட்டார்  “புள்ளைங்க எங்கே”

“அவுங்க பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க. வர்ர நேரந்தான்.”

விஸ்வநாதனின் மனைவி லட்சுமி இறந்து பத்து வருட காலமாகிவிட்டது. இரண்டு மகள்கள் கங்கா மற்றும் சந்திரா. இரண்டாவது மகளுக்கு இரண்டு வயதிருக்கும்போது மஞ்சள்காமாலை வந்து லட்சுமி இறந்துவிட்டார். லட்சுமியின் அம்மா பரமேஸ்வரியும் தங்கைகள் பத்மாவும், அம்பிகையும் தனியே இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கிறார்கள். லட்சுமியின் அப்பா ஏற்கனவே இறந்துவிட்டார். லட்சுமியின் தம்பி சங்கரன் (பத்மா, அம்பிகையின் அண்ணன்) தஞ்சாவூரில் அரசு வேலை பார்க்கிறான்.

விஸ்வநாதன், தன் தந்தை ராமலிங்கம், தாயார் கோமளம், இரண்டு மகள்களுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். இரண்டு மகள்களும் பெரும்பாலான நேரத்தை அவர்களின் சின்னம்மாக்கள் பத்மாவுடனும் அம்பிகையுடனும்தான் கழிக்கிறார்கள். அவர்களுக்கு அங்கே இருப்பதுதான் பிடிக்கிறது. கோமளத்திற்கு இரண்டு பேத்திகளும் அங்கே இருப்பதில் இஷ்டமில்லை. ஆனால் அங்கே சின்னம்மாக்கள் இருப்பதால், பேத்திகளுக்கு அவர்களுடன் விளையாட முடிகிறது. இங்கே தன்னால் அவர்களுடன் விளையாடுவதற்கு முடியவில்லை. மேலும் அவர்கள் அங்கே சென்றுவிடுவதால் வீட்டில் சத்தமில்லாமல் இருக்கிறது.

விஸ்வநாதன் தெருவில் இறங்கி, மாமியார் பரமேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று, திண்ணையில் உட்கார்ந்தார். அவரைப் பார்த்து, மகள்கள்  கங்காவும், சந்திராவும் அருகே வந்து அவரை ஒட்டி அமர்ந்து கொண்டார்கள். விஸ்வநாதனிடமிருந்து வந்த சாராய நெடி அவர்கள் இருவருக்கும் பழக்கமானதுதான். அவரைப் பார்த்ததும் கொழுந்தியாள்கள் பத்மாவும், அம்பிகையும் அடுக்களைக்குள் சென்று விட்டார்கள். பரமேஸ்வரி வந்து “காபி சாப்பிடுறீங்களா” என்றாள்.

“புள்ளைகளை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.” என்றவர், மகள்களைப் பார்த்து “பால்பேடா வாங்கி வந்துருக்கேன்” என்றார். கங்காவுக்கும் சந்திராவிற்கும் சந்தோஷம். மகள்களுடன் அவர் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார்.

பத்மாவும், அம்பிகையும் அடுக்களையிலிருந்து வந்தார்கள். ஏனோ அவர்கள் இருவருக்கும் விஸ்வநாதனைக் கண்டால் பயம். “என்னேரமும் குடி. எப்படித்தான் ரெண்டு புள்ளைகளையும் கரை சேர்க்கப் போராரோ” என்றாள் பரமேஸ்வரி. பிறகு “அவுங்க அம்மா அவரை சரியா வளக்கலை. அவளே ஒடுகாலி. அவ வளர்த்த மகன் எப்படி இருப்பார்” என்றாள். அவளுக்கும் விஸ்வநாதனின் தாயார் கோமளத்திற்கும் எப்போதுமே உள்ளுக்குள் பகைமை இருந்து கொண்டிருக்கிறது. கோமளத்தைப் பற்றி பரமேஸ்வரிக்குத் தாழ்வான எண்ணம் இருக்கிறது. அண்ணன் ராமலிங்கத்தின் மனைவி என்பதால் சண்டை போடாமலிருக்கிறாள். ஆனால் பேச்சு வளர்ந்தால் எப்படியோ மனஸ்தாபம் வந்துவிடுகிறது.

-3-

உர்..உர்.. உர்…. லலலா… லலலா… என்று கூறிக்கொண்டே அவள், நாவல் மரத்து நிழலில் உட்கார்ந்தாள். விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்துச் சாப்பிட்டாள். பக்கத்திலேயே கொடுக்காப்புளி மரம் இருந்தது. இந்த சீசனில் இதுதான் அவளுக்கு உணவு. சிறுவர், சிறுமியர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவிட்ட நேரம் என்பதால் நாவல் பழத்துக்கும் கொடுக்காப்புளி பழத்துக்கும் போட்டியில்லை. அந்தத் தெருவில் உள்ளவர்கள், அப்பெண்ணை நல்ல நிலையில் பார்த்தவர்கள். இப்போது அழுக்கடைந்த ஆடைகளுடன், எண்ணெயில்லாமல், தலை வாராமல், சிக்கிப்போன கூந்தலுடன் வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் அவள் “உர்” என்றும் ‘லலலா’ என்றும் கத்திக்கொண்டு திரிவதைப் பார்க்கிறார்கள். ஏன் இப்படி ஆனாள் என்று தெரியவில்லை.

விஸ்வநாதன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். உர்..உர்.. உர்…. லலலா… லலலா… என்ற சத்தத்துடன்  வீட்டு வாசலுக்கு அவள் வந்தாள். வாசலில் கையேந்தி நின்றாள். விஸ்வநாதன் அவளை கைப்பிடித்து அழைத்து திண்ணையில் உட்கார வைத்தார். உள்ளே போய் அம்மா கோமளத்திடம் தட்டில் சோறு, குழும்பு ஊற்றித்தரச் சொன்னார். அவள் எட்டிப்பார்த்தாள். “இவளை எதுக்கு இங்க உட்கார வைச்சிருக்கே… இதே பழக்கமா போயிடும். இவளுக்கும் சேர்த்தா நான் சமைக்கிறேன்” என்றாள். “பாவம்;” என்றார் விஸ்வநாதன். அவள் வேண்டா வெறுப்பாக தட்டில் சோறு, குழம்புடன் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள். திண்ணையில் அந்தப்பெண் மலங்க மலங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். திண்ணையில் அவள் உட்கார்ந்திருந்த கோணத்தில், முன்னறையில் சுவரில் அவளும், ராமலிங்கமும் இருக்கும் புகைப்படம் மாட்டியிருப்பது தெரியும். அதை அவள் பார்த்தாளா, பார்த்தாலும் ஏதும் புரிந்திருக்காது என்று தோன்றியது.

தட்டை அவள் கையில் கொடுத்தார் விஸ்வநாதன். அவள் சோற்றை அள்ளி அள்ளி வேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்தார். சாப்பிட்டு முடித்தபின், தட்டை வைத்துவிட்டு, உர்..உர்.. உர்…. லலலா… லலலா… என்று கூறிக்கொண்டே தெருவில் நடந்தாள். தட்டை எடுத்துக்கொண்டு, விஸ்வநாதன் வீட்டின் உள்ளே சென்றாள். “நமக்கு வைச்சிருந்த சோறை அவளுக்குக் கொடுத்தாச்சு, இனி நான் புதுசா வடிக்கணும்” என்றாள், கோமளம்.

“என்ன இருந்தாலும், அப்பாவுக்கு அவுங்க முதல் சம்சாரம்.. விதிப்பயன்.. இப்படி ஆயிட்டாங்க. நாம வசதியாத்தான் இருக்கிறோம். சோறு போட்டா என்ன குறைஞ்சா போயிறும்” என்றார், விஸ்வநாதன்.

“உங்க அப்பா, அவ போக்குலே விட்டுட்டார். அவ இல்லேங்கிறதினாலே நாம இந்த வீட்டுக்குள்ள நல்லா உட்கார்ந்துருக்கோம். அவளை வீட்லே உக்கார வைச்சு சோறு போடறது எனக்கு புடிக்கலை. அது நமக்கு நல்லதில்லை.”

“சும்மாயிரு… அதுக்காக பசிச்ச வாய்க்குச் சோறு போடாம எப்படியிருக்கிறது இந்த வூடு அவுங்க அப்பா, அவுங்களுக்கு எழுதி வைச்சது. அவுங்க நகையை வித்துத்தான் அப்பா ஜவுளிக்கடை வைச்சிருக்கார். ஏதோ அவுங்க நேரம் இப்படித் திரியராங்க.. நம்ம நேரம் இப்படி உக்காந்திருக்கோம்.”

“நீ எப்பவும் இப்படித்தான் ஏடாகூடமா பேசுவே”

விஸ்வநாதன் முன்னறையில் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்தார். “ஏன் அப்பா இதை எடுக்காமல் வைத்திருக்கிறார்” என்று யோசித்தார். அவள் அந்தப் புகைப்படத்தில் லட்சணமாக இருந்தாள். காலம் தயவு தாட்சண்யமில்லாமல் வாழ்க்கையைப் புரட்டுகிறது. அவள்தான் இந்த வீட்டிற்கு உரிமையாளர் என்பதால் அந்தப் புகைப்படத்தை அப்பா எடுக்காமல் இருக்கிறாரோ என்று அவருக்குத் தோன்றியது.

-4-

பரமேஸ்வரி வீட்டுத் திண்ணையில் கோமளம் உட்கார்ந்திருந்தாள். பேத்திகள் உள்ளே ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். பேத்திகளுக்கு பாட்டியிடம்தான் ஒட்டுதல். அப்பத்தாவிடம் ஓட்டுதல் இல்லை. கோமளமும் அதை உணர்ந்திருந்தாள். “பேத்திகளைப் பராமரிப்பது பெரிய மண்டையிடி. மேலும் இரண்டு சின்னம்மாக்கள் பார்த்துக் கொள்வதற்கு இருக்கிறார்கள். எல்லாம் சரிதான்” என்று நினைத்துக் கொண்டாள்.

ராமலிங்கம் வீட்டிற்கு அவரின் மனைவியாக கோமளம் வந்தபோது, அவள் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அழகாகவும் சிவப்பாகவும் இருந்தாள். பரமேஸ்வரிக்கு அவள் அழகு ஆச்சர்யத்தைத் தந்தது. இப்போதும் கோமளம் இந்த வயதுக்குரிய அழகுடனும் கம்பீரத்துடனும் இருக்கிறாள். அவளுடன் தன்னை ஒப்பிடுகையில் பரமேஸ்வரிக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படும்.

“அம்பிகையை காணோமே” என்றாள் கோமளம்.

“அவ டைப் கத்துக்கிட்டிருக்கா, கிளாசுக்கு போயிருக்கா” என்றாள் பரமேஸ்வரி.

“நான் சம்பந்திகிட்டே ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன். உங்க மூத்த மகள் இறந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சு. புள்ளைக இருக்கிறதினாலே நானும் அவனோட மறு கல்யாணத்தை பத்தி நெனைக்கல. இப்ப புள்ளைக ஒரளவுக்கு வளர்ந்து பெரிசாயிடுச்சுக. எனக்கும் அடிக்கடி கை கால் குடையுது. முன்ன மாதிரி வேலை பாக்க முடியலை. உங்க அண்ணனுக்கும் வயசாயிட்டுப் போகுது, அதனாலே விஸ்வநாதனுக்கு ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வைக்கலாம்னு நெனைக்கிறேன். அவனும் ‘சரின்னு’ சொல்லிட்டாள். உங்க அண்ணன்ட்டேயும் பேசிட்டேன். அவரும் ‘எவ்வளவு காலத்துக்கு விஸ்வநாதன் இப்படி இருப்பான். ஏத்த பொண்ணப்பாரு பரமேஸ்வரிட்டே பேசுன்னு’ சொன்னாரு…”

“என்ன சம்பந்தி திடீர்னு இப்படி பேசுறீங்க. ரெண்டு பொம்பளைப் புள்ளைக இருக்கு. நாளைக்கி அதுகளை கரையேத்தணும். வர்றவ எப்படி இருப்பாள்னு தெரியாது. புள்ளைக வாழ்க்கையைப் பாருங்க..”

“அப்ப என் மகன் வாழ்க்கையை நெனச்சுப்பாருங்க.. பொம்பளை துணை இல்லாமல் பத்து வருஷத்துக்கு மேலே கழிச்சிட்டான். நாங்க நல்லா இருக்கிறப்பவே ஓரு கல்யாணத்தை செஞ்சு வைச்சுரலாம்னு இருக்கேன். பொண்ணு பாக்கலாம்னு இருக்கேன்.”

“என்ன சம்பந்தி புள்ளைக அனாதையா போயிருமே”

“எதுக்கு அனாதையா போகுது. என்ன வார்த்தை பேசுறீங்க, புள்ளைகளை வளக்கறதிலே உங்களுக்கு கூடுதல் பங்கு இருக்கு. உங்க மக புள்ளைகளைத் தானே பாக்க போறீங்க. அனாதைங்கிறீங்க.. வார்த்தைகளை அளந்து பேசுங்க…”

“நான் உள்ளதைத்தான் சொல்றேன். புள்ளைகளை கவனிக்க ஆள் இல்லாமல் போகும்னு அக்கறையிலே பேசுறேன். என் மன வேதனை எனக்குத்தான் தெரியும்”

“உங்க அண்ணன் சொல்லச் சொன்னாரு. சொல்லி விட்டேன் நான் வாரேன்” கோமளம் திண்ணையிலிருந்து எழுந்து தெருவில் நடந்தாள்.

“என்ன பாட்டி, அப்பத்தா என்ன சொல்றாங்க..” என்று பேத்திகள் கங்காவும், சந்திராவும் ஒடி வந்தார்கள்.

“போங்கடி தரித்திரம் புடிச்ச முண்டைகளா.. அம்மாவை முழுங்கியாச்சு. இப்ப அப்பாவும் பிரிய போறார்…” என்று அழலானாள். கங்காவும் சந்திராவும் பாட்டியின் பேச்சில் அதிர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

-5-

டைப் அடித்துக்கொண்டே ஒரக்கண்ணால், ராஜேந்திரனைப் பார்த்தாள், அம்பிகை. அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் சந்தித்துக் கொள்வது கிளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருந்தது. மேற்பார்வையாளர் சுற்றிப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இவர்கள் இருக்கும் வரிசைக்கு வரும் போது அவர்கள் இருவரும் பார்ப்பதைத் தவிர்த்து விடுவார்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும்படியாக உட்காருவது வழக்கம். மேற்பார்வையாளரிடம் டைப் அடித்ததைக் கொடுத்து வாங்கிக் கொண்டு இருவரும் ஒளித்து வைத்திருந்த காதல் கடிதத்தை பரிமாற்றிக் கொண்டார்கள். ஒரு நொடி சந்தர்ப்பத்தில் அவள் இடுப்பை அவன் தடவினான். அம்பிகையின் முகம் சிவந்தது.

அவள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அவன் கொடுத்த கடிதத்தை வீட்டிற்குச் சென்று படிப்பதற்கு, அவளுக்குப் பொறுமையில்லை. பர்ஸிலிருந்த கடிதத்தை எடுத்து மர நிழலில் நின்று பிரித்தாள். ‘என் இனிய காதலி அம்பிகைக்கு, முத்தத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.’ என்று ஆரம்பித்திருந்தது. கடிதம் நான்கு பக்கங்களுக்கு இருந்தது. ரோட்டில் அம்மா பரமேஸ்வரி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். கடிதத்தை மடித்து, பர்சுக்குள் வைத்தாள். அம்மா எதற்காக இந்நேரத்தில் வருகிறாள், எங்கு போகிறாள் என்று யோசித்துக் கொண்டே அம்மாவை நோக்கி நடந்தாள். இருவரும் சந்தித்துக்கொண்ட போது அம்பிகை கேட்டாள். “என்னம்மா எங்க போறே? ”

“எங்க அண்ணனை கடையிலே பாக்கப் போறேன். அந்தக் கோமளம் என்னென்னமோ பேசறா. இந்நேரத்துலே தான் கங்கா அப்பா இருக்க மாட்டாரு. அதான் போறேன், நீ வீட்டுக்குப் போய் புள்ளைகளை பார்த்துக்க, பத்மா அவ பாட்டுக்கு உட்கார்ந்திருப்பா”.

அம்பிகை வீட்டையடைந்தாள். கோமளம் ஜவுளிக்கடையை அடைந்தபோது ராமலிங்கம் எதற்காகவோ வெளியே நின்றிருந்தார். பரமேஸ்வரியைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்ன பரமேஸ்வரி கடைக்கு வந்திருக்கே. என்ன விஷயம்” என்றார். வீட்டில் பேச முடியாத விஷயத்தைத் தனியே பேசுவதற்காக கடைக்கு வந்திருக்கிறாள் என அவர் நினைத்தார்.

“ஆமா ஒரு விஷயம் பேசணும்னு நெனச்சேன்”

“உள்ளே வா பேசுவோம்” என்று உள்ளே இருந்த சிறிய அறைக்கு சென்றார்.

“காபி வாங்கிட்டு வரச் சொல்லவா” என்றார். பரமேஸ்வரி “சரி” என்றாள். கூஜாவிலிருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி பரமேஸ்வரியிடம் கொடுத்தார். அவள் அதை வாங்கிக் குடித்தாள்.

“வியாபாரமெல்லாம் எப்படியிருக்கு”

“ஓடுது. சீசன்லதான் நல்லா வியாபாரம் நடக்கும். அடுத்த மாசம் ஆடி வருது. ஆடித்தள்ளுபடின்னு போடுவோம். தள்ளுபடின்னா உடனே ஜனங்க வாங்க வரும். வியாபாரமே ஒரு தந்திரந்தான்”

“கோமளம் வீட்டுக்கு வந்துச்சு. கங்கா அப்பாவுக்கு பொண்ணு பாக்கப் போறதா சொல்லுச்சு. அவருக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க இருக்கு. அதுகளை கரையேத்தணும். உனக்குத் தெரியும்…. கோமளம், மகனோட வந்தாள். நீ விருப்பப்பட்டு ஏத்துக்கிட்டே. குடும்பம் நடத்தரே. என் மூத்த பொண்ணு லட்சுமியை விஸ்வநாதனுக்கு கேட்டே, அண்ணன் அவரை மகனா ஏத்துக்கிட்டாருன்னு, பொண்ணை கொடுத்தேன். அவள் ரெண்டு பொம்பளைப் புள்ளைகளை பெத்து போட்டுவிட்டு போய்ச் சேர்ந்துட்டா. அது போயி பத்து வருஷத்துக்கு மேலே ஆகுது. இப்ப இப்படி ஒரு பேச்சு வந்துருக்கு. நீயும் சரின்னு சொல்லிட்டேன்னு கோமளம் சொல்லுது, புதுசா ஒருத்தி வந்தா புள்ளைக எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலை.

எனக்கு கோமளம் வந்து பேசிட்டுப் போனதிலிருந்து மனசு சரியில்லை.”

“நீ புள்ளைக பக்கம் இருந்து யோசிக்கிற, நானும் அதை யோசிக்காம இருப்பேனா, இப்ப வரவர விஸ்வநாதன் போக்கு சரியில்லை சாராயம் அடிக்கிறது கூடிப்போச்சு. கோமளமும் கை கால் உளையுதுங்கிறாள். அவன் தறிகெட்டுப் போயிரக் கூடாது. இத்தனை வருஷம் வைராக்கியமாத்தான் இருந்தான். இப்ப கோமளம் பேச்சை எடுத்ததும் சரிங்கிறான். அவன் மனசு மாறியிருக்கு. இப்ப நாம ஒரு வழி பண்ணாட்டி அவன் கெட்டுப்போயிருவான்னு எனக்குத் தோன ஆரம்பிச்சிருச்சு. புள்ளைகளை நாம கை வுட்ருவோமா. ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைச்சிருவோம். நம்மளை மீறி எதுவும் நடக்காம பாத்துக்குவோம்.”

“அண்ணே வேறு வழியில்லையா”

“பரமேஸ்வரி நீ பயப்படாதே. ஒன்னும் கெட்டதா நடக்காது.”

காபி வந்தது. கடை வேலையாள், இருவருக்கும் டம்ளரில் காபி ஊற்றிக் கொடுத்தான். இருவரும் காபி குடித்தார்கள். குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. காபி குடித்துக் கொண்டிருக்கும் போது பரமேஸ்வரிக்கு ஓரு எண்ணம் தோன்றியது. அதை இப்போது கூறலாமா, பிறகு கூறலாமா என்று யோசித்தாள். மௌனம் நிலவியது.

“அண்ணே எனக்கு ஒரு யோசனை தோனுது. என் மகள் பத்மாவை ரெண்டாந்தாரமா கொடுத்தா என்னன்னு தோணுது. புள்ளைகளுக்கும் பாதுகாப்பா இருக்கும். கங்கா அப்பாவிற்கும் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கும். பத்மாவுக்கும் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கும். ஆனா இதுக்கு முன்னாடி சங்கரன்கிட்டே பேசி சம்மதம் வாங்கணும். அவன்தான் எங்களுக்கு மாசா மாசம் பணம் அனுப்பறான்.”

“நல்ல யோசனைதான் நீ உன் மகன்ட்டே கேளு அவன் மாட்டேன்னா சொல்ல போறான்.”

“நான் கடிதாசி போட்டு மகனை வரச் சொல்றேன். எல்லாம் முருகன் அருளாலே நல்லபடியா நடக்கட்டும்.

“சேலை காண்பிக்கச் சொல்றேன் உனக்கு பிடிச்ச சேலையா எடுத்துக்க” என்று கூறி வேலையாளை ராமலிங்கம் அழைத்தார்.

ராமலிங்கத்திற்கு கோமளத்தைப் பற்றிய நினைவுகள் ஏற்பட்டன. அவளுக்கு வாக்குக் கொடுத்தபடி அவளை நன்றாக வாழ வைத்துக் கொண்டிருப்பதாக அவர் நினைத்தார். விஸ்வநாதனைப் பற்றி அவள் கவலைப்படுவது நியாயம்தான் என்று தோன்றியது. கோமளத்தின் அழகு இன்னும் வற்றாமல் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.

-6-

விஷயத்தை அறிந்ததும் பத்மாவிற்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கங்கா அப்பாவிற்கு, தான் மனைவியாவதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அண்ணன் சங்கரன் வரப் போகிறான். அவளை மையமாக வைத்து வலை பின்னப்பட்டுவிட்டது. தப்பிக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. புதியதாக ஒரு பெண் கங்கா அப்பாவிற்கு மனைவியாக வந்தால், கங்காவையும், சந்திராவையும் அவள் கொடுமைப்படுத்துவாள் என்பதற்காக தன் வாழ்வு அழியப்போகிறதே என்று நினைத்து அழுதாள்.

ராமலிங்கத்தை ஐவுளிக்கடையில் பார்த்துப் பேசி வந்ததற்கு அடுத்த நாள், பத்மா மாவாட்டிக் கொண்டிருக்கும்போது, பரமேஸ்வரி வந்து நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். பரமேஸ்வரிக்கு, மகள்களிடம் அதிகாரமாகப் பேசித்தான் பழக்கம்.

“இந்தா பாருடி, நான் யாருக்கு கழுத்தை நீட்ட சொல்றேனோ அவருக்கு நீ கழுத்தை நீட்டணும், உனக்குத் தெரியும், அன்னைக்கு கோமளா வந்து கங்கா அப்பாவுக்கு பொண்ணு பாக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டா. நான் எங்க அண்ணன்டே பேசிட்டேன். உன்னைத்தான் கங்கா அப்பாவுக்கு ரெண்டாம் தாரமா கொடுக்கப் போறேன். அப்பத்தான் கங்காவையும் சந்திராவையும் காப்பாத்த முடியும். சங்கரனை வரச் சொல்லியிருக்கேன். அவன் வந்ததும் அண்ணன்ட்டே முறைப்படி பேசி முடிச்சுக்கப் போறேன்.”

பத்மாவுக்கு இதைக் கேட்கும்போதே படபடப்பு ஏற்பட்டு கண்களில் நீர் வந்துவிட்டது. ஓரு கை, உரலை ஆட்டிக் கொண்டிருந்தது. இன்னொரு கை மாவைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. அவள் அழுவதைப் பார்த்ததும் பரமேஸ்வரிக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. “பாவம்… அவள் பேச்சில்லா அப்புராணி. என்ன கற்பனையில் இருந்தாளோ நம்ம குடும்ப சூழ்நிலைக்கு அவளை பலி கொடுக்கிறோம்” என்று தோன்றியதும் அவள் அருகே சென்று தோளைத் தொட்டாள். உடனே பத்மா எழுந்து நின்று பரமேஸ்வரியைக் கட்டிபிடித்துக் கொண்டு அழுதாள்.

“அழாதே.. அழக்கூடாது. பொண்ணாப் பிறந்தவங்களுக்கு தனியா விருப்பம் இல்லை. என் அண்ணனுக்காக உங்க அக்கா லட்சுமியை பலி கொடுத்தேன். இப்ப உன்னை பலி கொடுக்கிறேன், லட்சுமியோட புள்ளைகளுக்காக. எனக்கு மூனு பொட்டப்பிள்ளைக. உங்க அப்பா இறந்து போயிட்டாரு. உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன்னா அப்புறம் அம்பிகைக்கு எப்படியாவது கல்யாணம் செஞ்சுரலாம். உங்க அண்ணனுக்கு வேற கல்யாணம் முடிக்கணும். அழாதே.. முருகன் காப்பாத்துவாரு..”

பரமேஸ்வரி உறுதியான மனசு உள்ளவள். அவளுக்கும் கண்களில் நீர் கசிந்தது. பத்மாவின் வலது கையில் இருந்த மாவு பரமேஸ்வரியின் இடுப்பிலும் சேலையிலும் ஒட்டியிருந்தது. பத்மா கையையும், முகத்தையும் கழுவிவிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். பரமேஸ்வரி மாவாட்ட ஆரம்பித்தாள். சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பத்மா தலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

-7-

அப்பத்தாவிடம் காசு வாங்கிக் கொண்டு கடலை மிட்டாய், முறுக்கு வாங்க, கங்காவும், சந்திராவும் கடைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

“அப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் நடக்கப்போகுது” என்றாள் கங்கா.

“அப்ப புதுச்சட்டை, பாவாடை கிடைக்கும்” என்றாள் சந்திரா.

“போடி புதுசா ஒரு சித்தி வந்தா நம்மை கொடுமைப்படுத்துவான்னு பத்மா சித்தியை அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க.”

“அப்ப பத்மா சித்தி அந்த வீட்லேயிலிருந்து இந்த வீட்டுக்கு வந்துருவாங்களா.”

“ஆமா அப்பத்தா நம்ம கூட ஒன்னுமே விளையாடாது. ஏதாவது சொல்லிக்கிட்டிருக்கும். பத்மா சித்தி வந்துச்சுன்னா நமக்கு ஜாலிதான்.”

“நமக்கு ஜாலி தான். ஆனா பத்மா சித்திக்கு அப்பாவை பாத்து பயம், பத்மா சித்தி அழுதுகிட்டிருந்ததைப் பார்த்தேன்.”

கடை வந்துவிட்டது. நாலு முறுக்கு ஐந்து கடலை மிட்டாய் வாங்கினார்கள். சந்திராவிடம் இரண்டு முறுக்கும் இரண்டு கடலை மிட்டாய்களும் கொடுத்தாள், கங்கா.

மீதி ஒரு கடலை மிட்டாயை பல்லால் பாதியாக உடைத்து சந்திராவிடம் பாதியைக் கொடுத்தாள் கங்கா.

-8-

கோமளம் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். விஸ்வநாதன் தினமும் குடித்துவிட்டு வருவதை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். “என்ன செய்வது. அவனுக்குப் பெண்டாட்டி தங்கலை. ரெண்டு பொட்டப்புள்ளைக. அவனுக்குத் தனியா ஒரு ரவிக்கை பிட் கடை வைச்சுக் கொடுத்தாரு. வீட்டுக்கு காசு கொடுக்கறதில்லை. குடிச்சே தீக்குறான். கல்யாணம் வேற ஆகப்போகுது. தனியா வருமானம் இருக்கட்டும்னு அவரு கடை வைச்சிக் கொடுத்தாரு. அதையும் ஒழுங்கா கவனிக்கிறதில்லை” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

காய்கறி விற்கும் பெண், கோமளத்தை நோக்கி வேகமாக நடந்து வந்தாள். 

“அம்மா, உங்க வீட்டைச்சுத்தி வந்துக்கிட்டிருக்கும்ல ஒரு பைத்தியம். அது நாவல் மரத்தடியிலே பேச்சு மூச்சு இல்லாம கிடக்கு. போய் பாருங்க” என்றாள்.

கோமளத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திண்ணையிலிருந்து இறங்கி பரமேஸ்வரி வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். வாசலில் நின்று பரமேஸ்வரியை வரச்சொல்லிக் கத்தினாள். அவள் வந்ததும் இருவருமாக நாவல் மரத்தடிக்குச் சென்றார்கள். நாவல் மரத்தடியில் கிடந்த அந்தப் பெண்ணை பரமேஸ்வரி தொட்டுப் பார்த்தாள். கையைத் தூக்கிப் பார்த்தாள். கை கீழே விழுந்தது. மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். நெஞ்சில் கை வைத்து பார்த்தாள். கோமளத்தைப் பார்த்து “முடிஞ்சது” என்றாள். தெருவிலுள்ள சிலர் அவர்கள் இருவரும் நிற்பதைப் பார்த்து வந்தார்கள். “அவருக்கும் விஸ்வநாதனுக்கும் தகவல் சொல்லணுமே” என்றாள் கோமளம். நாவல் மரத்துக்கு எதிர்வீட்டில் இருந்தவர் சைக்கிளில் சென்று தகவல் சொல்வதாகக் கூறினார். அந்தத் தெரு முழுக்க ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக இருந்தார்கள்.

சற்று நேரத்தில் குதிரை வண்டியில் ராமலிங்கமும், விஸ்வநாதனும் வந்தார்கள். கோமளத்திடமும், பரமேஸ்வரியிடமும் ராமலிங்கம் பேசினார். வீட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி மற்றவர்கள் உதவியுடன் வீட்டிற்குக் கொண்டு சென்றார்கள். சற்று நேரத்தில் ராமலிங்கமும் விஸ்வநாதனும் வந்தார்கள்.

இறந்தவளின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டு முன்னறையில் கட்டிலில் வைத்திருந்தார்கள். இறந்து கிடந்தவளையும் புகைப்படத்தில் ராமலிங்கத்துடன் இருக்கும் அவளையும் விஸ்வநாதன் ஒப்பிட்டுப் பார்த்தார். மனித வாழ்கை எப்போது புரளும், எப்போது மாறும், எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கோமளம் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். “சீக்கிரம் எடுத்துரணும் இன்னும் பாடை கட்றாங்க. வந்தவங்க சோம்பேறிப் பசங்க” என்று பரமேஸ்வரி புலம்பிக் கொண்டிருந்தாள்.

இறுதிச்சடங்கை ராமலிங்கம் செய்தார்.

-9-

விஸ்வநாதனும், அவரின் நண்பர்கள் இருவரும் அந்தச் சாராயம் விற்கும் இடத்தில் இருந்தார்கள். ஆங்காங்கே மரத்தடியிலும் பெஞ்சிலும் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். குடல் வறுவலும், ரத்தப்பொரியலும் வைத்து ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

விஸ்வநாதன் இருக்கும் தெருவின் கடைசி வீட்டில் குடியிருக்கும் சிவனாண்டி வந்திருந்தான். அவர்கள் குடும்பத்தினருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முந்தைய இரண்டு தலைமுறையாக ஆகாது என்றும் பேசிக்கொள்வதில்லை என்றும் விஸ்வநாதனிடம் கூறியிருந்தார் ராமலிங்கம். அவன் இருக்கும் நேரத்தில் நண்பர்களுடன் வந்தது விஸ்வநாதனுக்கு உறுத்தலாக இருந்தது.

விஸ்வநாதனும் அவருடன் வந்தவர்களும் கடையில் சாராயம் வாங்கிக்கொண்டு பெஞ்சில் உட்கார்ந்து அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். நண்பர்களில் ஒருவர் குடல் வறுவல் வாங்கி வந்தார். மூவரும் அதைத் தொட்டுக்கொண்டு சாராயத்தைக் குடித்தார்கள். ஒரு ரவுண்டு முடிந்து இரண்டாவது ரவுண்டு முடிந்து, மூன்றாவது ரவுண்டு ஆரம்பமானது. இப்போது தொட்டுக்கொள்ள மீண்டும் குடல் வறுவல் தேவைப்பட்டது. விஸ்வநாதன் எழுந்து குடல் வறுவல் வாங்கச் சென்றார். அப்போது யாரோ தன்மேல் மோதியதாக உணர்ந்து பார்த்தார். சிவனாண்டி நின்று கொண்டிருந்தான்.

விஸ்வநாதன் அவனை முறைத்துப் பார்த்தார். அவன் வேறு யாரிடமோ பேசுவது போல் கூறினான். “அப்பன் பேரு தெரியாதவனெல்லாம் ஊரில் பெரிய மனுஷனாட்டம் திரியறான்ங்க” அடுத்த கணத்தில் விஸ்வநாதன் அவன் கன்னத்தில் அறைந்தார். அவன் பதிலுக்கு இவரை அடித்தான். இருவரும் அடித்துக் கொண்டார்கள். விஸ்வநாதனின் நண்பர்கள் வந்து விலக்கி விட்டார்கள்.

 “நான் என்ன இல்லாததையா சொல்லிவிட்டேன்” என்று மற்றவர்களின் பிடியிலிருந்த சிவனாண்டி கத்திக் கொண்டிருந்தான்.

விஸ்வநாதனின் நண்பர்கள் சிவனாண்டியைக் கொண்டுபோய் வெளியே விட்டார்கள். விஸ்வநாதன் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தார். சற்று நேரத்தில் நண்பர்கள் வந்தார்கள். நண்பர்களில் ஒருவர் “சிவனாண்டியை அனுப்பி வைச்சாச்சு. விஸ்வநாதன் நீ ஒன்னும் நெனைச்சுக்காதே. எதையும் மனசுலே வைச்சுக்காதே..”

என்றார். 

            விஸ்வநாதன் அமைதியாக இருந்தார். அவருக்குள் அவமானம் புரண்டு கொண்டிருந்தது. இந்தச் சாராயக்கடையையே சூறையாட வேண்டும் என்ற ஆவேசம் ஏற்பட்டது. அன்று அதிகம் குடித்தார். அவரால் நிற்கவே முடியவில்லை. சிவனாண்டியைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். திட்டிக்கொண்டே கீழே விழுந்து விட்டார்.

நண்பர்கள் வெளியே வந்து குதிரை வண்டியை அமர்த்தி, விஸ்வநாதனை அதில் வைத்து அவர்களும் ஏறிக்கொண்டார்கள். விஸ்வநாதன் வீட்டை நோக்கி குதிரை வண்டி சென்றது.

வாசலில் குதிரை வண்டி நிற்பதை பார்த்ததும் வீட்டின் உள்ளேயிருந்த கோமளம் வெளியே வந்து பார்த்தாள். விஸ்வநாதனை நண்பர்கள் இருவரும் குதிரை வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். “என்னாச்சு” என்றாள் கோமளம். “ஒன்றுமில்லை கூடுதலா குடிச்சிட்டாரு” என்ற பதில் வந்தது. முன்னறையில் இருந்த கட்டிலில் அவரைக் கிடத்தினார்கள். சீக்கிரமா “விஸ்வநாதனுக்கு கல்யாணம் பண்ணனும்” என்று கோமளம் நினைத்துக் கொண்டாள்.

-10-

சங்கரன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். இன்னொரு நாற்காலியில் பரமேஸ்வரியும், தரையில் பத்மாவும் அம்பிகையும் உட்கார்ந்திருந்தார்கள். அழுது அழுது பத்மாவின் முகம் வீங்கியிருந்தது.

“பத்மா கவலைப்படாதே உறவு விட்டுப் போகாம இருக்கும். அவுங்க கங்கா அப்பாவுக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்க. இப்ப நாம என்ன பண்றது அக்கா பெத்த ரெண்டு பெண் குழந்தைகளைக் காப்பாத்தணும். வேறு வழி இல்லை. போகப்போக சரியாயிடும். அவர் என்ன உனக்கு நல்லா தெரிஞ்சவர்தானே. உனக்கு மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு காசு பணம் நம்மகிட்டே இப்ப இல்லை. அப்படி வேறே மாப்பிள்ளை பாத்தா அவரு அறிமுகமில்லாதவரா இருப்பாரு. எப்படி குணம் இருக்கும்னு தெரியாது. மாமியார் எப்படி குணம் இருப்பாங்கன்னு தெரியாது. அதனாலே உனக்கு இங்கே நம்ம குடும்பத்துக்குள்ளே சம்பந்தம் பண்ணிக்கிறதுதான் நல்லது. எல்லாம் நல்லபடி நடக்கும்” என்றான் சங்கரன்.

“வேற வழியில்லைல்ல. நீங்க விரும்புனபடி செய்ங்க. புள்ளைக பாதுகாப்பாக இருக்கட்டும்” என்றாள் மெல்லிய குரலில், பத்மா.

அடுத்த நாள், விஸ்வநாதன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். சங்கரன் இருந்து முறைப்படி திருமணத்தை முடிவு பண்ணினான். ஒரு நல்ல நாள் பார்த்து திருமணமும் முடிந்தது. விஸ்வநாதன் வீடு இரண்டு வீடுகள் தள்ளித்தான் இருந்தது. அந்த வீட்டிற்கு மருமகளாக பத்மா சென்றாள்.

முதலில் சில நாட்கள் விஸ்வநாதன் குடிக்காமலிருந்தார். பிறகு மீண்டும் ஆரம்பித்துவிட்டார். அந்த நெடி பத்மாவிற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வயிற்றைப் புரட்டுவதுபோல் இருக்கும். சமயங்களில் வாந்தி வருவது போலவும் இருக்கும். அந்த நெடியுடன் பத்மா மீது அவர் படரும் போது அவள் கண்களை மூடிக்கொள்வாள். மனதுக்குள் “முருகா முருகா” என்று முணுமுணுத்துக்கொள்வாள். “கண்ணை ஏன் மூடறே.. கண்ணைத்திற” என்பார் விஸ்வநாதன். அவள் கண்களைக் திறந்து மீண்டும் மூடுவாள். கண்களை மீண்டும் மூடும்போது அவர், அவள் கன்னத்தில் அறைவார்.

-11-

வாயாடி வசுந்தரா மூலம் அம்பிகைக்கும், ராஜேந்திரனுக்கும் காதல் என்று தெரு முழுக்கப் பரவி விட்டது. பரமேஸ்வரிக்கும் தெரிந்துவிட்டது. அம்பிகை மறுக்கவில்லை. பரமேஸ்வரி திட்டிக்கொண்டே அம்பிகையை அடித்தாள்.

“கவுரவத்தை கெடுத்துப்புட்டியே. கைம்பெண் மகளை வளத்தது சரியில்லைன்னு என்னயில்ல எல்லோரும் பேசுவாங்க. உங்க அண்ணனுக்கு தந்தி கொடுத்து வரச்சொல்றேன். நீ அவனை மறந்துரு. ஒரே சாதின்னாலும் அவுங்க நம்மைக் காட்டிலும்        வசதியான குடும்பம். எப்படி சம்பந்தம் நடக்கும். இப்ப தெருவுக்கு தெரிஞ்சு போச்சு… நாளைக்கி உன்னை வேற யாரு கல்யாணம் பண்ணுவாங்க… இப்படி பண்ணிட்டியே சிறுக்கி..”

“நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லேன்னா இப்படியே இருந்துருவேன்” என்றாள், அம்பிகை.

“இப்படியே இருப்பியா. உனக்கு யாரு கஞ்சி ஊத்தறது.. என்னடி உனக்கு அவ்வளவு பிடிவாதம்” என்று மீண்டும் பரமேஸ்வரி அடிக்க வந்தாள். அந்த நேரம் வீட்டுக்கு வந்த பத்மா விலக்கி விட்டாள். அம்பிகை பிடிவாதமாக கல் மாதிரி நின்றாள்.

சங்கரன் தந்தி கிடைத்து வீட்டுக்கு வந்து விட்டான்.  வழக்கமாக அமரும் நாற்காலியில் அமர்ந்திருந்தான். விஷயத்தைத் தெரிந்து கொண்டதும் அவன் கொந்தளிக்கவில்லை. அமைதியாக சற்று நேரம் யோசித்தான். வாசலுக்குச் சென்று நின்றுவிட்டு திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்தான்.

“எப்படி பழக்கம்” என்று அம்பிகையிடம் கேட்டான்.

“டைப் இன்ஸ்டீட்யூட்டுக்கு டைப் அடிக்க வரும்போது”.

“டைப் அடிக்கப் போறதை நிறுத்தியாச்சா” என்று பரமேஸ்வரியைப் பார்த்துக் கேட்டான். அவள் “நிறுத்தியாச்சு” என்றாள். “ராஜேந்திரன் அப்பாகிட்டே பேசிப்பார்ப்போம். அதைப் பொறுத்து முடிவு பண்ணிக்கிருவோம்” என்றான் சங்கரன். தினசரி நாட்காட்டியை எடுத்துப் பார்த்தான். “நாளைக்கி காலைலே நல்ல நேரம் இருக்கு. போய் பேசிப் பார்ப்போம். எதையும் தள்ளிப் போட்டுக்கிட்டே போகக்கூடாது.” என்றான்.

அடுத்த நாள் காலையில் ராஜேந்திரன் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான். நல்ல முடிவு கிடைக்கும் என்ற கற்பனையில் அம்பிகை இருந்தாள். ராஜேந்திரனின் அப்பாவிற்கு ஹோட்டல், லாட்ஜ் சொந்தமாக இருந்தன. அவர்கள் இருந்த தெருவில் சில வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.

ராஜேந்திரன் வீட்டையடைந்து வாசலில் நின்றிருந்தபோது, ராஜேந்திரனின் அப்பா உள்ளிருந்து எட்டிப்பார்த்து உள்ளே வரச்சொன்னார். சங்கரனின் அலுவலக வேலை தொடர்பாக விசாரித்தார். கும்பகோணம் ஊரைப்பற்றி பேசினார். சங்கரன் கேள்விப்பட்ட விஷயத்தைக் கூறினான்.

“ஆமா தெருவுக்கே தெரிஞ்சு போச்சு. எங்களுக்கு காதலிக்கிற பொண்ணு வேண்டியதில்லை. நான் என் மகனைக் கூப்பிட்டு சத்தம் போட்டேன். எங்க குடும்பத்துக்கு உங்க சம்பந்தம் ஒத்து வராது. வேற இடத்துலே மாப்பிள்ளை பாருங்க வெளியூர்லே பாருங்க. நீங்க எத்தனை தடவை பேசினாலும் இதுதான் என் பதில்” என்றார், ராஜேந்திரனின் அப்பா.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான், சங்கரன். “நல்ல முடிவு கிடைக்கும் என்று அம்பிகை கற்பனை செய்து கொண்டிருப்பாளே” என்ற கவலை அவனுக்கு ஏற்பட்டது.

அவனை எதிர்பார்த்து, பரமேஸ்வரியும், அம்பிகையும் வீட்டில் காத்திருந்தார்கள். பத்மாவும் வந்திருந்தாள். சங்கரன் வந்து வழக்கமாக அமரும் நாற்காலியில் உட்கார்ந்தான். அம்பிகை எழுந்து போய் சாமி படத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்தாள்.

“ஒன்னும் நடக்கலை. ராஜேந்திரன் அப்பாவிற்கு இந்த சம்பந்தத்திலே விருப்பமில்லை. அந்த பையனுக்கு இதனாலே பெரிய பாதிப்பு இருக்காது. ஆனா நமக்குல்ல பாதிப்பு. ஊருக்குத் தெரிஞ்சு போச்சே. அம்பிகை, நீ நடந்ததை மறந்துரு, அடுத்து நடக்க வேண்டியதைப் பாப்போம். என்கூட ஒருத்தன் வேலை பாக்கறான். நம்ம சாதிதான். அப்பா அம்மா கிடையாது. சித்தப்பா ஒருத்தர் இருக்காரு. முற்போக்கான சிந்தனை உள்ளவன். அவன்ட்டே உள்ளதைச் சொல்லியே கேப்போம். அவன் அதை ஒன்னும் பெரிசா எடுத்துக்கற டைப் இல்லை. ஒருநாள் வீட்டுக்கு கூட்டியாரேன். அவனுக்குப் புடிச்சுப் போச்சுன்னா பெரியவங்களை வைச்சுப்பேசி சீக்கிரத்துலேயே முடிச்சுடுவோம். தள்ளிப் போட்டுக்கிட்டே போறதுலே அர்த்தம் இல்லை.”

சங்கரன் சொன்னதைக் கேட்டதும் அம்பிகைக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “சாமி என்னை கைவிட்டிருச்சே” என்று அழுது கொண்டே சொன்னாள். பத்மா அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

பத்மாவைப் பார்த்து சங்கரன் கேட்டான். “என்ன உன் கன்னம் வீங்குன மாதிரி இருக்கு”

“ஒன்னுமில்லை இடிச்சுக்கிட்டேன்” என்றாள், பத்மா.   

-12-

அம்பிகைக்கு மனக்குழப்பமாக இருந்தது. இன்று பெண் பார்க்க வருகிறார்கள். சங்கரன் கூட அந்த வரன் முருகவேலும், அவனுடைய சித்தப்பாவும், சித்தியும் வருகிறார்கள்.

மூத்த அக்கா, இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான பின் கொஞ்ச வயதிலேயே இறந்துவிட்டாள். இரண்டாவது அக்கா இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டிருக்கிறாள். அம்பிகைக்கும் விருப்பப்பட்டது நடக்கவில்லை. அம்பிகைக்கு தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூடத் தோன்றியது. “ராஜேந்திரன் என்ன செய்வார். அவரோட அப்பா விருப்பப்படலேன்னா என்ன செய்ய முடியும். தற்கொலை பண்ணிக்கிட்டா ராஜேந்திரனையும், அவர் குடும்பத்தையும் பழி வாங்கிவிட்டதா நினைக்கலாம். அவுங்களுக்கு குற்ற உணர்ச்சியே இருக்காது. பிறகு தற்கொலை பண்ணி என்ன பயன். என் வாழ்க்கை முடிஞ்சு போகும். வாழ்க்கைக்கு ஏத்தாப்லே நாம வாழ்ந்து பழகிக்கணும். நடக்கறது நடக்கட்டும்” என்ற வைராக்கியம் அம்பிகைக்கு ஏற்பட்டது.

குதிரை வண்டியிலிருந்து சங்கரனும், முருகவேலும், அவருடைய சித்தப்பா சித்தியும் இறங்கி வந்தார்கள். பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்பிகையும் முருகவேலைப் பார்த்தாள். சித்தப்பா முருகவேலைப் பார்த்தார். அவன் சரி என்பது போல தலையாட்டினான். பின் சித்தப்பா, கல்யாணம் எப்போது எங்கே எப்படி நடத்துவது என லௌகீகமாகப் பேச ஆரம்பித்து விட்டார். பேச்சு நிறைவடைந்தது. முருகவேலுக்கு அம்பிகை மனைவியாகப் போகிறாள்.

குதிரைவண்டி வெளியிலேயே நின்றிருந்தது. வந்திருந்தவர்களை குதிரை வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, சங்கரன் வீட்டுக்குள் வந்தான். அம்பிகையைக் கூப்பிட்டு “முருகவேல் நல்லவன். முற்போக்கு சிந்தனைக்காரன். உன்னை அவன் நல்லா வைச்சிருப்பான்” என்றான். அம்பிகை தலையாட்டினாள். இந்த ஊரில் இல்லாமல் வெளியூருக்குத் திருமணமாகிச் செல்வதில் அவளுக்கு நிம்மதி ஏற்பட்டது.

பெரிய ஆலமரம். விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. மரத்தில் ஆணி அடித்து மாலைகள் போடப்பட்டிருந்தன. சந்தனம், குங்குமம் தெளிக்கப்பட்டிருக்கின்றன. சடைமுடியுடன் மஞ்சள் சேலையில் ஒரு பெண் சாமியாடுகிறாள். அந்தக் காட்சி மறைந்து விடுகிறது. குளத்தில் அம்பிகை தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். மூழ்கி விடுவாள் போலிருக்கிறது. தலையை தண்ணீருக்குள் மேல் கொண்டு வருகிறாள். பிறகு தண்ணீருக்குள் தலை மூழ்குகிறது. மீண்டும் தலையைத் தண்ணீருக்கு மேல் கொண்டு வருகிறாள். அவள் தத்தளிப்பதைப் பார்த்து “எனக்கு நீச்சல் தெரியாது” என்று ராஜேந்திரன் கத்துகிறான்.

அவளுக்குத் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிட்டது. எழுந்து சென்று சாமி படத்தின் முன் தட்டில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு வந்து படுத்தாள்.

-13-

இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. அம்பிகை திருமணமாகி கும்பகோணம் சென்றுவிட்டாள். புது சூழ்நிலை அவளுக்குப் பிடித்துவிட்டது. சங்கரனும் கும்பகோணத்திலேயே வேலை பார்ப்பது அவளுக்குப் பலமாக இருக்கிறது. கங்கா பெரியவளாகிவிட்டாள். விஸ்வநாதனுக்கும், பத்மாவிற்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சத்யன் என்று பெயர் வைத்தார்கள். பரமேஸ்வரி தனியாக இருக்கிறாள். சங்கரனுக்கு கங்காவைத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பரமேஸ்வரி இருக்கிறாள். சந்திராவும், கங்காவும், இரு வீட்டிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருக்கும் போது கோமளத்தின் வீட்டிற்கு பரமேஸ்வரி வந்தபோது எப்படியோ பேச்சுமாறி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது பத்மா மட்டும் இருந்தாள்.

“எங்க அண்ணன் கூட வர்றதுக்கு முன்னாடி பல பேர்ட்ட போனவதானே நீ. உன் மகனுக்கு அப்பன் பேர் தெரியாதவதானே நீ” என்று கோமளத்தைப் பார்த்து ஏசினாள் பரமேஸ்வரி.

“அப்படிப்பட்ட மகனுக்குத்தானே நீ உன் ரெண்டு மகள்களையும் கொடுத்தே. உனக்கு எங்க போச்சு அறிவு. நான் ஒழுங்கு கெட்டவன்னா நீயும் ஒழுங்கு கெட்டவதான்” என்றாள் கோமளம்.

இருவரும் அடித்துக்கொள்ளும் நிலைக்குச் சென்று விட்டார்கள். பத்மா கஷ்டப்பட்டு விலக்கி விட்டாள். கோமளம் விளக்குமாறை எடுக்கச் சென்றாள். பரமேஸ்வரி வெளியேறிவிட்டாள். சத்யன் அழுது கொண்டிருந்தான். பத்மா அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். பத்மாவிடம் பரமேஸ்வரியைத் திட்டி கோமளம் பேசினாள். பத்மா எதுவுமே பேசவில்லை. குடும்பம் பெரிய நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது என்பதை உணர்ந்தாள். கோமளம் அமைதியாகித் திண்ணையில் அமர்ந்தாள்.

விஸ்வநாதன் முதலில் வீட்டுக்கு வந்தார். அவர் வந்தவுடன் கோமளம் ஆக்ரோஷத்துடன் அவரிடம் நடந்ததைக் கூறினாள். பரமேஸ்வரி தன்னைக் கேவலமாகத் திட்டியதைக் கூறினாள். விஸ்வநாதன் அமைதியாகக் கேட்டார். நல்லவேளையாக அவர் குடித்திருக்கவில்லை. விஸ்வநாதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ராமலிங்கமும் வந்துவிட்டார்.

அவரிடமும், பரமேஸ்வரி திட்டியதைக் கோமளம் கூறினாள். அவர் ஆவேசத்துடன் “இரு அவளை நாலு வார்த்தை கேக்கறேன். பரமேஸ்வரி கலகம் மூட்டுறாளா” என்று கூறியபடி ராமலிங்கம் வாசலை நோக்கிச் சென்றார். பத்மா அழுதுகொண்டே அவர் காலில் விழுந்தாள். “பெரிசாக்கிறாதீங்க மாமா எங்கம்மா செஞ்சது தப்புதான். நான் மன்னிப்பு கேக்குறேன்” என்றாள். அவர் தோளில் போட்டிருந்த துண்டை உதறினார். கோமளத்தைப் பார்த்து “சாப்பாடு போடு” என்றார். விஸ்வநாதன் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாயை விரித்துத் திண்ணையில் படுத்துக் கொண்டார்.

விஸ்வநாதன் அசாதாரணமான அமைதியிலிருந்தார். யாரிடமும் பேசவில்லை. வீடே வழக்கமான நிலையில் இல்லை. ஒருவருக்கொருவர் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொண்டார்கள். அடுத்த நாள் ராமலிங்கம் முதலில் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றார்.

விஸ்வநாதன் வெளுத்த வேட்டி சட்டை அணிந்திருந்தார். பத்மா இடுப்பில் சத்யனை வைத்திருந்தாள். பத்மாவிடம் விஸ்வநாதன் வந்தார். “நான் போறேன். திரும்ப வரமாட்டேன்” என்றார். “அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணினீங்க” என்றாள் பத்மா. அவர் எதுவும் பேசாமல் வெளியேறினார்.

மதிய நேரத்தில் வாசலில் குதிரை வண்டி நிற்கும் சத்தம் கேட்டு பத்மா வாசலுக்கு வந்தாள். ராமலிங்கம் முதலில் இறங்கினார். கூடவே சைக்கிள்களில் வந்தவர்கள் குதிரை வண்டியிலிருந்து விஸ்வநாதனின் உடலை இறக்கி முன்னறையில் கட்டிலில் கிடத்தினார்கள். பத்மா அலறினாள். சத்யன் அழுதான். எதிர் வீட்டுப்பெண் சத்யனை வாங்கிக்கொண்டாள். உள்ளிருந்து வந்த கோமளம் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள்.

சத்தம் கேட்டு, கூட்டம் கூடியதைக் கண்டு பரமேஸ்வரி, வந்தாள். விஸ்வநாதன் இறந்து கிடக்கும் காட்சியைக் கண்டாள். “நீ என்னை கேவலமா திட்னதை பொறுக்க மாட்டாமத்தான் என் மகன் விஷம் குடிச்சு செத்துப் போயிட்டான். வீட்டுக்குள்ளே வராதே” என்று கத்தினாள் கோமளம்.

“என்ன எல்லோரும் சும்மா இருக்கீங்களா போலீசு வந்து விசாரிக்கணுமா, பிரேதத்தை பரிசோதனை பண்ணணுமா. சும்மா இருங்க.” என்று ராமலிங்கம் கத்தினார்.

விஸ்வநாதன் முகம் அமைதிக்களையுடன் இருந்தது. உடலில் நீலம் படர்ந்திருந்தது.

-14-

அப்போது ராமலிங்கம் இளைஞன். ஜவுளிக்கடை வைப்பதற்கு முன்பாக ராமலிங்கம், ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்த காலம். போட்டியில்லாததால், பணம் கொழித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் மிக சந்தோஷமாக இருந்த காலகட்டம் அது. பாஸ்கரன் அவருடைய பால்யகால நண்பர். நாட்டியம் சொல்லிக் கொடுப்பவர். அவரிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று ராமலிங்கம் அவர் வீட்டுக்குச் சென்றார். கோயில் விழாக்களில் பாட்டும், நாட்டியமும் ஒரு பகுதியாக இருந்தது. பாஸ்கரன் பாட்டும் சொல்லித்தருவார்.

“திருவிடைமருதூர்லேயிருந்து ஒருத்தி வர்ர நேரம் இது. பெயர் கோமளம். இங்கேயே சில மாதங்கள் தங்கியிருந்து பாட்டும், நாட்டியமும் கத்துக்கிடணும்னு வாரா” என்றார் பாஸ்கரன்.

“அவ இங்கே தங்கியிருந்தா? ”

“ஆமா நீ ஒன்னும் தப்பா நெனைக்காதே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. தங்கியிருந்தாதானே கத்துக்க முடியும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது வாசலில் குதிரை வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. பாஸ்கரன் வாசலுக்குச் சென்றார். பாஸ்கரன் கூட ஒரு சிவப்பான அழகான பெண்ணும் ஒரு சிறுவனும் வந்தார்கள்.

பாஸ்கரன் வேலையாளைக் கூப்பிட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த பெட்டி படுக்கைகளை எடுத்து அறையில் வைக்கச் சொன்னார். அங்கிருந்த பெஞ்சில் அவளும் அந்தச் சிறுவனும் அமர்ந்தார்கள். பாஸ்கரனும், ராமலிங்கமும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். பாஸ்கரன் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். ராமலிங்கம் அவளேயே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது.

“வாழ்ந்தால் இவளுடன் வாழ வேண்டும். அது ஒரு பெரும் சந்தோஷம்” என்று அவருக்குத் தோன்றியது.

“இவுங்க கோமளம். திருவிடைமருதூர்லேயிருந்து வாராங்க. இது இவுங்க பையன் விஸ்வநாதன்” என்று ராமலிங்கத்திடம் அறிமுகப்படுத்தினார். ராமலிங்கத்தை “இங்கே ஹோட்டல் நடத்துகிறார். ஊரில் முக்கியமானவர்” என்று அறிமுகப்படுத்தினார்.

ராமலிங்கம் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

“முருகா… முருகா… ஏன் இப்படி அலைக்கழிக்கிறே. என் முன்னால் சைக்கிள் வருவது கூட கவனத்தில் இல்லை. எங்கிருந்தோ அவள் வந்தாள். மனதில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து விட்டாள். அமர்ந்தது மட்டுமல்ல கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருக்கிறாள். நான் அவள் முன்பாக கையேந்தி நிற்பவன்.”

எந்திரம் போல் ஹோட்டலுக்குள் நுழைந்தார். அவர் உட்காரும் இடத்தில் போய் உட்கார்ந்தார். யார் யாரோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. கோமளம்தான் தெரிந்தாள். நாளைக்கே திரும்பவும் அவளைப் பார்க்கச்செல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

அடுத்த நாள் சென்றார். கோமளம் நாட்டியம் பழகிக் கொண்டிருந்தாள். ராமலிங்கம் நாற்காலியை ஓரமாகப் போட்டு உட்கார்ந்து கொண்டார். அவளின் தோள்களையும், கழுத்தையும், முன்னங்கைகளையும் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார்.

அடுத்த நாளும் சென்றார். கதவு அடைத்திருந்தது. சற்று யோசித்துக் கதவைத் தட்டினார். சலங்கை ஒலி கதவை நெருங்கும் ஓசை கேட்டது. கதவு திறந்தது. கோமளம் நின்றிருந்தாள். உள்ளே வரச்சொன்னாள். “எங்கே பாஸ்கரன்” என்று கேட்டார்.

அவரும் பையனும் வெளியே கடைக்குச் சென்றிருப்பதாகக் கூறினாள். நாட்டியப்பயிற்சியில் இருப்பதாகக் கூறினாள்.

தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அத்து மீறக் கூடாது என்றும் மனதில் இருப்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிவிட வேண்டும் என்றும் ராமலிங்கத்திற்குத் தோன்றியது. அவள் நடக்கும் போது ஜல் ஜல் என்று சலங்கைச் சத்தம் கேட்டது. அவள் தரையில் அமர்ந்து சலங்கையை அவிழ்த்தாள்.

“என் மனசுலே தோன்றதை நான் சொல்லுறேன். உன்னை எனக்கு புடிச்சுப் போச்சு. நீ திரும்பவும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே என் கூட இருந்துக்க. உனக்கு வேண்டியதைச் செய்து தர்றேன். வாழ்க்கை முழுக்க நான் உன்னை கைவிட மாட்டேன். இது சத்தியம்” என்றார்.

“நானும் வயித்துப் பிழைப்புக்குத்தான் நாட்டியம் கத்துக்கிட்டு ஊருக்குப் போய் சம்பாதிச்சு வாழணும்னு நினைச்சேன். நிச்சயமான வாழ்க்கை இல்லை. வாத்தியார்கிட்டே கலந்துகிட்டு சொல்றேன். நாளைக்கு வாங்க. வாத்தியாரும் கூட இருக்கட்டும்” என்றாள்.

“அவளைத் தொட வேண்டும்” என்ற ஆவல் அவரை உந்தியது. கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேறினார். அடுத்த நாள் வந்தார். பாஸ்கரனும், கோமளமும் இருந்தார்கள்.

“இந்தா பாரு ராமலிங்கம் நீ நல்லா யோசிச்சுக்க. கோமளத்துக்கும் நல்ல ஏற்பாடு இதுன்னுதான் எனக்குத் தோனுது. உனக்கு பெண்டாட்டி இருக்கு. சொந்தக்காரங்க இருக்காங்க. கோமளத்துக்கு ஒரு பையன் இருக்கான். அவள் பிழைப்புக்காக நாட்டியம் கத்துக்க வந்தவ. வந்த இடத்திலே இந்த மாதிரி ஒரு சங்கல்பம் ஏற்பட்டிருக்கு. ஏங்கிட்ட சொன்னத இவர்கிட்ட சொல்லு” என்று கோமளத்தைப் பேசச்சொன்னார்.

“வாத்தியாரை சாட்சியா வைச்சு சொல்றேன். எனக்கு சில வாக்குகள் கொடுக்கணும். என்னை தாலிகட்டி கல்யாணம் பண்ணிக்கணும். என் பையனை உங்க மகனா தத்து எடுத்துக்கணும். எனக்கு தனியா வீடு பாத்து குடி வைக்கக்கூடாது. உங்க வீட்டுக்குத்தான் என்னை கூட்டிட்டு போகணும். என்ன சொல்றீங்க” என்றாள்.

“நீ சொன்னதுக்கெல்லாம் சம்மதம். நீ சொன்னபடி செய்றேன். பாஸ்கரனை சாட்சியா வைச்சு சத்தியம்” என்றார் ராமலிங்கம்.

“நீ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா வீட்லே ஏத்துக்குவாங்க. இப்ப பையனோட வந்தவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போனா குழப்பம் வராதா” என்றார் பாஸ்கரன்.

“வராமப் பாத்துக்கறேன். எனக்கு ஒரே தங்கச்சி. நான் சொல்றதை கேட்டுக்குவா. என் பெண்டாட்டியும், நான் சொல்றதை கேட்டுக்குவா. எனக்கு குழந்தையும் இல்லை. அதனாலே பிரச்சனை இருக்காது. நான் வாக்கை காப்பாத்திருவேன்.”

‘சரி நீ போயி உங்க குடும்பத்துலே பேசு. கோமளத்துக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா எனக்கு சந்தோஷந்தான்.

ராமலிங்கம் சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றார். முதலில் தங்கை பரமேஸ்வரியிடம் பேசினார். “குடும்பப் பெண்ணா இருந்தா சரி. உனக்கும், குழந்தை இல்லை. ஆனா நீ நாட்டியக்காரின்னு சொல்றே. அதான் இடிக்குது” என்றாள், அவள். பிறகு அவரின் பிடிவாதத்தைப் பார்த்து “உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டாள்.

மனைவி பாக்கியத்திடம் கறாராகச் சொன்னார். “நமக்கு குழந்தை இல்லை. நான் ஒரு நாட்டியக்காரியை கல்யாணம் பண்ணிக்க போறேன். அவளுக்கு மகன் இருக்கான். அவனை நான் தத்து எடுத்துக்க போறேன். அவுங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுலதான் இருப்பாங்க. எனக்கு குழந்தை பொறக்காமலே கூட போகலாம். அதனாலே இந்த ஏற்பாடு”

அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும், அவளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோமளத்தின் விருப்பப்படி ராமலிங்கம், கோமளத்தைத் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். புரோகிதர்களை அழைத்து வந்து சடங்குகள் செய்து விஸ்வநாதனை மகனாக தத்து எடுத்துக்கொண்டார். கோமளமும், பாக்கியமும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். அந்தத் தெருவிலேயே அந்த வீடுதான் அளவில் பெரியது.

பாக்கியத்திடம், ராமலிங்கம் அதிகம் பேசுவதில்லை. விஸ்வநாதனை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். கோமளத்தின் மீது காதலும், காமமுமாக இருந்தார். பாக்கியத்தை ராமலிங்கம் தொட்டே பல ஆண்டுகளாகிவிட்டன. பாக்கியம் தனியே வாய்விட்டு பேசிக்கொண்டாள். வெறித்துப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பாள். ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசினாள். புத்தி பேதலித்துவிட்டது என்று மந்திரவாதியிடம் கூட்டிச் சென்றார்கள். அவர் சவுக்கால் அடித்து தீய சக்தியை விரட்டிவிட்டதாகச் சொன்னார். ஒன்றும் பயனில்லை. அவளுடைய மனப்பிறழ்வு அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஒருநாள் தலைவிரிகோலமாக அறையிலிருந்து வெளியே வந்தாள். ‘உர்…உர்… உர்… லலலா… லலலா” என்று கத்திக்கொண்டே வீட்டைவிட்டு வெளியேறினாள்.

**********

ஆசிரியர் தொடர்புக்கு – sureshkumaraindrajith@gmail.com

RELATED ARTICLES

3 COMMENTS

  1. சுரேஷ் குமார இந்திரஜித் அவர்களின்
    ‘ஒரு பெண் ஒரு சிறுவன்’ கதை பெண்களின் வாழ்வியலைக் கொண்டு கட்டமைப்பட்ட கதை. ஆண்களின் ஏதேச்சையான முடிவு பெண்களுக்கு ஏற்படுத்தும் சிக்கலை, தனிமையை, துயரின் நீட்சியை முன்வைக்கிறது.

    வாழ்வின் எதிர்பாராத திருப்பங்கள் , உறவு ,உளவியல் சிக்கல்கள், தீராமல் பெண்களைத் தொடரும் துன்பங்கள் என பல அடுக்குகளில் இக்கதை புனையப்பட்டுள்ளது. பெண்களின் பாடுகள் தலைமுறை, தலைமுறையாகத்
    கொண்டே வருகிறது …

    கதையின் தொடக்கத்தில் அதிகளவிலான பாத்திரங்கள் உலவினாலும் இறுதியில் நிற்பது ஒரு பெண்ணும் ஒரு சிறுவனும் தான். அந்தக்காட்சி உள்ளத்தை நடுங்க வைப்பதாக, அச்சம் தரக்கூடியதாக, வாழ்வின் நிலையற்ற தன்மையை உணர்த்தக்கூடியதாக,ஒரு கோட்டோவியமாகக் கண் முன் தெரிகிறது…

    சிறப்பானதொரு கதையை வழங்கியமைக்கு அன்பும் நன்றியும்

  2. அருமையாக பெண்களின் மனபிறழ்வுக்கு அவர்கள் மீதான ஆண்களின் ஆதிக்கமும் சுதந்திர மாக செயல் பட இயலாத நிலைமைதான் என சமூகத்தில் நிலவிவரும் காரணியை இக்கதையில் ஆசிரியர் ஆணித்தரமாக சொல்லி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular