பிறழ்வுத்தன்மை, சமுதாயக் கூறுகளின் கட்டுடைப்புகள் போன்றவை நல்ல இலக்கியத்திற்கான கருப்பொருட்களாக அமையலாம். ஏன் அவை ஓர் இடைப்பட்ட காலத்திற்கான செவ்வியல்களைக் கூட வழங்கலாம். ஆனால் அவற்றால் காவியங்களைச் சிருஷ்டிக்க இயலாது. வேதங்களில் பீறிட்ட இறை; இயற்கை நம்பிக்கைகள் இன்று கவிதைகளாக நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. ராமாயணத்திலும் சிறந்த கவித்துவ தருணங்கள் நேசத்தினாலும், குற்றங்களால் கழிவிரக்கம் கொள்ளும் மனங்களாலும் விளைந்தவை. கடவுளுக்கு நிகரானவர்கள் என்று வர்ணிக்கப்பட்ட கிரேக்க இதிகாச வீரர்களில் ஏன் ஹெக்டர் அக்கிலிஸை விட மகத்தானவன்? ஏனெனில் தலைசிறந்த மானுடப் பண்புகளால் ஆன அவனது தோள்களே இலியட்டை காலநதிக்குள் மூழ்கவிடாமல் சுமந்துசெல்கின்றன. பெண்களும், நிலமும் ஆண்களின் அதிகார வெறிக்கு நடுவே மதிப்பற்று அல்லாடிக் கொண்டிருக்கையில் உயரிய அறமும், அன்பும் எக்காலத்திற்குமானது என்பதை நிறுவும் சாட்சியாக ஹெக்டர் அங்கு இருக்கிறான். அவனது வீரம் அக்கிலிஸினதைப் போல் அசட்டுத்தனமானது அல்ல. எதிரிகளான கிரேக்கர்களின் தரப்பிலும் மரணங்கள் நிகழக்கூடாது என்பதற்காக போரைத் தவிர்க்க முயலும் உயர்ந்த மானுடனாக அவன் திகழ்கிறான். போரை வரவழைத்தான் என தன் உடன்பிறந்த உதிரத்தின் மீதே அவன் சினம் கொள்கிறான். வேறு வழியின்றி தன் மக்களின் உயிரைக் காக்க போருக்குத் தலைபடும் கணத்தில் “நான் இறந்து, அதனால் நீ விம்முவாய் எனில் நீ அழுவது என் செவிகளை எட்டும் முன் இந்தப் பூமி சில்லுகளாய்ப் பிளந்து என்னை மூடட்டும்” என தன் மனைவியிடம் கூறிவிட்டு யுத்தகளத்திற்குச் செல்கிறான். இலியட்டின் மகுடமான தருணங்கள் ஹெக்டரின் நேர்மறை குணங்களால் நிகழ்ந்தவை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. போலவே லஷ்மி சரவணகுமாரின் எழுத்துப் பயணத்திலும் பிழற்வு நிலையை உதறி, நேர்மறையான மனதோடும், உயரிய சிருஷ்டி குணத்தோடும் அவர் எழுதிய கதைகளே அவரை வெகுசன எழுத்தாளர் என்ற இடத்திலிருந்து நகர்த்தி வைக்கிறது. லக்ஷ்மி சரவணகுமாரைத் தொற்றிய துரதிஷ்டமாக அவர் எழுத வந்த காலத்தைச் சொல்லலாம்.
அக்காலத்தை ‘முகநூல் முற்போக்கு எழுத்து, மரபுகள் மீதான மட்டையடிப்பு, செவ்வியல் புறக்கணிப்பு, அதிர்ச்சி மதிப்பீடுகளின் பொற்காலம்’ என்பது போன்ற குறிச்சொற்களுக்குள் அடைக்கலாம். அக்காலத்திற்குரிய பண்பு தவிர்க்கயியலாமல் அவரது நாவல்களில் எதிரொலித்தது, சிலமுறை அது அவரது படைப்பூக்கத்தையும் தாண்டி இரைந்தது என்பது லக்ஷ்மி சரவணகுமார் மீது பலரும் வைக்கும் எதிர்விமர்சனம். நான் அந்த இடத்திற்குள் செல்ல விரும்பவில்லை. அவர் சமகாலத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் என்பதையும் தாண்டி அவர் ஒரு கலைஞர் என்ற கருத்தில் உடன்பட எனக்கு அவரது ‘ஒரு துண்டு வானம்’ ஒன்றே போதுமானது.
லஷ்மி சரவணகுமாரின் பெயர்போன ‘பரிசுத்த வெறுப்பு‘ என்ற பதமும், தன்மையும் இக்கதையில் துளியளவும் இல்லை. தேர்ந்தெடுத்துக் கொண்ட களத்திலேயே இக்கதை ஒரு காலமற்றத் தன்மையை பெற்றுவிட்டது. இன்னும் இருபது, முப்பது ஆண்டுகள் கழித்து வாசித்தாலும், வெவ்வேறு மொழிகளில் மொழிப்பெயர்த்தாலும் இக்கதை மங்காமல் ஒளிவீசிக் கொண்டிருக்கும் என நம்புகிறேன். ஒரு துண்டு வானம் – ஒரு பந்தயக் குதிரைக்கும், அதில் அமர்ந்து பல வெற்றிகளைப் பெற்ற அதன் குதிரை ஓட்டிக்கும் இடையேயான நட்பையும், உணர்வுப் பரிமாற்றங்களையும் விவரிக்கும் கதை. ஆனால் அக்கதை அந்த ஒரே இழையில் நீளவில்லை. ஒரு பந்தயக் குதிரையின் இறுதியோட்டத்திலும், அதில் வெற்றிபெற வேண்டிய எழுச்சி நிலையோடும் தொடங்கும் கதை பந்தயத்தில் நிகழும் விபத்தினால் தடம் மாறுகிறது. அவ்விபத்து குதிரை; குதிரையோட்டி இருவரையும் பந்தயக் களத்திலிருந்து நிரந்தரமாக விரட்டிவிட வழி செய்வதோடு, அவர்கள் அதுநாள் வரை அணிந்திருந்த மேன்மைகளையெல்லாம் பறித்துக் கொள்கிறது. இந்த வீழ்ச்சியிலிருந்து தோல்வியும், ஆத்திரமும் பிறப்பதற்கு மாறாக குதிரையோட்டியிடம் பிரிவுத்துயர் வளர்கிறது. முடங்கிக் கிடக்கும் நிலையிலும் தன் வாழ்விலிருந்து தொலைந்துபோன அந்தக் குதிரையை நேசிக்கிறான். நீரில் கரிய நிழலாய் தெரியும் மற்றொரு குதிரையின் பிம்பத்தை தான் ஏறிப்பறந்த தன் குதிரையின் ஆன்மாவாகக் கற்பனை செய்து கலங்குகிறான். அவனையும் வீழ்த்திவிட்டு, ஒரு மரியாதையற்ற வாழ்வு முறைக்குள் நுழைந்துவிட்ட அந்தக் குதிரையை இறுதியாக அவன் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் வைத்து பார்க்கிறான். மக்கள் திரளின் ஓயாத இரைச்சலுக்கு நடுவே அவனது குரலைக் கேட்டு திரும்பும் அக்குதிரை முதலில் துள்ளிவிட்டு பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறும் கணம் மயிர்கூச்செரிதலோடு இன்னொரு வசப்படாத உணர்வையும் நமக்கு கடத்தி விடுகிறது. அங்கிருந்து அக்கதை இன்னும் ஒருபடி மேலே செல்கிறது. தனக்கு உணவிடும் புது உரிமையாளனின் அதட்டலையும், கட்டளையையும் ஏற்று அக்குதிரை அவனை ஒரே ஒருமுறை மட்டும் திரும்பிப் பார்த்துவிட்டு அகன்றுவிடுகிறது. அந்தப் பிரிவு ஒரு மகத்தான துயரமாக நம்மை ஆட்கொள்கிறது. அந்தக் குதிரையோட்டியைப் போலவே நாமும் உணர்வுகள் பிறழ்வுற்று புன்னகைக்கிறோம். அக்குதிரையின் இறுதி நடை இந்தக் கதையினது மட்டுமல்லாது லஷ்மி சரவணகுமாரின் எழுத்து வாழ்விலும் மிக உன்னதமான தருணம்.
லஷ்மி சரவணகுமார் அவர் காலத்திற்கு நிறையவே எழுதிவிட்டார். அவர் எழுத்துகள் மீது எதிர் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆரம்பகால எழுத்துகள் கூட இன்றும் வாசிக்கப்படுகிறது என்பதை நோக்கத் தவறுகிறோம். வெகுசனத்திற்காக அமைத்துக் கொண்ட எழுத்து வாழ்வேயாயினும் அவரது கலைப்பூர்வமான மனமும், கவிதைகள் மீதான ஈடுபாடும் அவரை வெகுசன எழுத்திற்கு அப்பால் கொண்டுபோய் நிறுத்தவே முயல்கின்றன. அதைத் துறக்கத்தான் அவர் தற்போது அவசரகால தொடர்-கதைகள் எழுதும் முடிவிற்கு வந்துவிட்டாரோ எனத் தயக்கத்துடன் சொல்லத் தோன்றுகிறது.
***
வேல்முருகன் இளங்கோ – திருவாரூர் மாவட்டம் வடுவூரைச் சேர்ந்தவர். அண்மையில் வெளிவந்த இவரது நாவல் ‘மன்னார் பொழுதுகள்’ பரவகான கவனத்தைப் பெற்றது.
இவரது மின்னஞ்சல் முகவரி : vel13591@gmail.com