Wednesday, October 9, 2024
Homesliderஒரு இரவின் மினிமலிச விளைவு...!

ஒரு இரவின் மினிமலிச விளைவு…!

ஐசக் பேசில் எமரால்ட்

னிதன் உருவாக்கிய போதைகளில் எளிமையானது சாராயம். அப்படித்தான் அன்றைக்கு உணர்ந்தேன். காரணம் உறக்கத்தில் தென்பட்ட அவளின் முகம். இரு சுற்றுக்கள் முடிந்து, மடிக்கணினியின் முன் முடிக்கப்படாத கவிதை ஒன்றிற்காக அமர்ந்தேன். வெள்ளைத்திரையை வெகுநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜன்னலுக்கு அப்பால் வெட்டிக்கொண்ட மின்னல் போல் தோன்றிய மறைந்த நினைவினால் தான் சாராயம் குறித்த மதிப்பீடு. மலைக்காட்டில் பெருமழைக்குப்பின் நனைந்திருந்த கற்றாழை போல் முதுகில் வியர்வை படர்ந்திருந்தது. காரணம் குப்புறப்படுத்திருந்தாள். ஆசிட் ரிஃப்ளக்ஸினால் உணவுக்குழாய் வீக்கமடைந்து, அதனால் அருகாமையில் இருந்த மூச்சுக் குழாயில் திணறல் ஏற்பட்டது போல் வயதாகி சுற்றிக்கொண்டிருந்தது. அவசர நேரத்திற்கு உதவலாம் என வாங்கிய மேஜை விசிறியை அவளின் முதுகிற்கு நேராக திருப்பினேன்.  

அதிக பட்சம் மூன்று பேர், அதற்கு மேல் தங்கினால் உடற்சூட்டினால் அறையெங்கும் அனல் காற்று வீசும். ரெசிடென்சியல் இடம் என்பதால் வாடகை அதிகம். சாதாரணமாகவே தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பதில் எங்களுக்குள் கடும் போட்டி இருந்தது. அதிலும் அவளே என்றும் முந்தி செல்லும் வீராங்கனை. காரணம் பெரும்பான்மை நேரங்களில் அது குறித்த உள்ளுணர்வை இழந்திருந்தேன். ஊரடங்கு என்று அறிவித்தாயிற்று, சொல்லவா வேண்டும்! அறை முழுவதும் கசகசவென இருந்தது. கண்ணாடி டம்ளரில் தரை தட்டியிருந்த மது என்னைப்  பார்த்துக் கொண்டிருந்தபோது, கவிதையும் உயிர்த்தெழுந்து விடும் எனத்  தோன்றியது. மேலே மூச்சுக்குழாய் சுருங்கிக் கொண்டிருந்தது. மிச்சம் இருந்ததைக் குடித்துவிட்டு படுத்துவிட்டேன்.  சிறிது நேரத்தில் கண்ணை மூடி நினைவிழப்பதும், மீள்வதுமாக இருந்தேன். அப்போது சாவதற்கு முந்தைய நொடிகளில் இழுப்பது போன்று மூச்சின் வேகம் குறைந்து கேட்டது. கண் விழித்தேன். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்து. அறை முழுவதும் கும்மிருட்டு. எங்கும் கருப்பு. நான் எதையும் பற்ற வைக்கவில்லை. எனக்குத் தோன்றவில்லை.

இருட்டின் நீளம் அதிகமாக, இருட்டிற்குள்ளே வெளிச்சம் மெதுவாக வந்திறங்குவதை உணர்ந்தேன். ஜன்னலில் வெளியே வானத்தின் வெளிச்சம் நன்றாக தென்பட்டது. இதற்குமுன் கடற்கரையில் வீசிய சுழற்காற்றில் சுருண்டு விழுந்த மணல் சப்தத்தை போல் பிரமாண்டமான சத்தம் கேட்டது. ஜன்னலைத் திறந்தேன். மரங்கள் பிசாசாட்டும் ஆடிக்கொண்டிருந்தது. ஆளைக் கீழே தள்ளிவிடும் அளவிற்கான சூறைக்காற்று. மிதமான சாரல் மழை. சிறிது நேரத்தில் நினைவுகள் கொண்டு உள்ளத்தை ரணமாக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதை நுண்ணுணர்ந்து சாத்திக்கொண்டு படுத்துவிட்டேன்.

இருப்பு கொள்ளவில்லை. கண்ணாடித்தொட்டியில் வண்ணமீன்கள் நீரின் மேற்பரப்பில் வந்து வேகமாக திரும்புகையில் குமிழ் எழும் ஒலி ரம்மியமாக இருந்தது. வானத்தின் ஒளியில் பொன்னிற மீன்களைப் பார்த்தேன். அது ஓவியமாக வரையப்பட வேண்டிய ஒன்று. சிறிய வீட்டிற்குள் நிறைய பொருட்கள் என்பது அந்த மீன் தொட்டிக்கும் பொருந்தும். ஒன்றையொன்று மோதிக்கொள்ள அத்தனை வாய்ப்பிருந்தும் லாவகமாக நீந்தும் திறன் ஏற்பட்டிருந்தது. மொத்தம் இருபத்தியெட்டு மீன்கள். ஒவ்வொரு மீன்களும் மேலெழும்பி கீழே செல்வதால் தொடர்ச்சியாக நீரின் சலம்பல் கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒலி நின்று போயிருந்தது. அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிகழ்ந்த உடனே நான் அதை உணரவில்லை. அனிச்சையாக உணர்ந்த ஒரு சத்தத்தை இழந்தபோது அறை முழுவதும் நிசப்தம். மீண்டும் கருமுறுவென அப்பளம் நொறுங்கி உடைவது போன்ற சத்தம்.  சூறைக்காற்று அடிக்கும்போது தூறல்கள் ஜன்னலைத் தட்டிச்  செல்லும். மீன்தொட்டியில் நீண்ட இடைவெளி விட்டு ஒரே ஒரு குமிழ் சப்தம். என் கண்களின் உள்ளிருந்து ஒளியொன்று வேகமாக ஆழத்திற்கு வளைந்து சென்று கொண்டிருந்தது. அது கடைசியாக தேங்காய் நாரில் ஊர்ந்து கொண்டிருக்கும் அட்டைப் பூச்சியில் முடிந்தது. நினைவை முற்றிலும் இழந்தேன். கண்களை திறக்கவே முடியவில்லை. உயிரை விட்டுவிடக்கூடாது எனப் போராடி கண்களை திறந்தேன், கடுகளவு வெளிச்சமும் இல்லை. கடுகே ஒரு சிறு இருட்டு தானல்லவா..!

டார்ச் விளக்கின் வெளிச்சத்தை மீன்தொட்டியில் பாய்ச்சினேன். ஒரேயொரு மீன் மட்டும் மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. அதிர்ந்தே போனேன். நீரின் பிற இடங்களில் சுற்றி வெளிச்சத்தைப் பாய்ச்சினாலும் தென்பட்டது ஒரு மீன் தான். வாசல் திறப்பானில் வெளிச்சம். பூட்டினது பூட்டியபடியே காணப்பட்டது. ஒரே குழப்பமாக இருந்தது. திருடன் யாரேனும் வீட்டில் பதுங்கி இருக்கிறானா? முகப்பிற்கு சென்றேன். முகப்பு அறை துடைத்து வைத்தது போன்று காணப்பட்டது. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு கண்ணாடி, அதனருகில் ஒரு சீப்பு உட்பட அனைத்துமே ஒவ்வொன்று. குளியலறைக்குச் சென்றேன். அங்கே எந்த மாற்றமும் இல்லை. சமையலறையிலும் பெரிய மாற்றம். அரிசி டப்பாவைத் திறந்து பார்த்தேன். விடிந்தால் பொங்கும் அளவிற்கு மட்டுமே இருந்தது. என்ன நடக்கிறது? நன்றாக முகத்தை, கண்களைக் கழுவிக்கொண்டு டார்ச் வெளிச்சத்தை அறையெங்கும் பாய்ச்சினேன். நான் கண்டது அனைத்தும் நிஜம். நாங்கள் வாங்கிக் குவித்த பொருட்கள் எதுவும் இல்லை. எனது பெட்டியை திறந்து பார்த்தேன். அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு.

அவளை எழுப்ப வேண்டாம். பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. அவளிடம் சொல்ல வேண்டாம் என்று எண்ணிக்கொண்டேன். சங்கடப்பட்டுப் போவாள். அல்லது எனக்கு பைத்தியம் பிடித்துள்ளது என உதாசீனம் செய்வாள். போலீசில் புகார் செய்யலாம் என்று மேஜையில் வைத்த செல்போனை தேடினேன். காணவில்லை. அவள் செல்போன்..? அதுவும் இல்லை. தலையணைக்கு அடியில் வைத்திருப்பாள். அங்குமில்லை.

தொலைபேசி மட்டுமே இருந்தது. அதை இந்த சமூகமே உதவாக்கரையாக உணர்ந்ததால் இணைப்பைத் துண்டித்துப் பல வருடங்கள் ஆயிற்று. பார்வைக்கு ஒரு பொம்மையாக தொல்பொருளாக வைத்திருந்தோம். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மது பாட்டில்கள் வைத்திருந்த அலமாரியைத் திறந்தபோது கடைசியாக மிச்சம் வைத்திருந்த சிறிதளவு மதுவைத் தவிர, திறக்கப்படாத முழு பாட்டில் இல்லை. என் பின்னந்தலை முடியைச் சுற்றி வியர்வை படர ஆரம்பித்தது. சூறைக்காற்று நின்றபின் பேய்மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தபோதே போர்வையை மூடிப் படுத்துக்கொண்டேன்.  

வாங்கிய பொருட்கள் காணாமல் போனால்கூட, சிறிய வயதிலிருந்து சேமித்த எனது அன்பிற்குரிய உயிரற்ற பொருட்கள் தொலைந்து போகாமல் பெட்டியில் இருந்ததை ஆசுவாசமாக உணர்ந்தேன். சட்டையில் இருந்து கழன்ற பொத்தான்களில் இருந்து நடத்துனர் கிழித்து தந்த பயணசீட்டு வரை என்னால் காதலிக்கப்படும் ஒன்றாக இருந்துள்ளது. நான் உயிரற்றவைகளையே அதிகமாக நேசித்து, புணர்ந்து ஆர்கசம் அடைந்து வளர்ந்தவன்.

முகத்தை மூடிப் படுத்திருந்தபோது மீண்டும் மேலே கேட்கும் மூச்சிழுப்பு சத்தம். ஆனால் இந்த முறை மேலிருந்து அல்ல, கீழிருந்து. அனிச்சை என்பதால் காதுக்கு மட்டும் எதிரொலிக்கிறதா..? இடப்பக்கம் சரிந்து படுத்தேன். ஆசிட் ரிஃப்ளக்ஸ் இருந்தால் மருத்துவர்கள் சொல்வது தானே! இடது காதில் ஒலி நன்றாக விழுந்தது. ஆனால் கீழே வெகு தொலைவில் கேட்பது போன்ற உணர்வு. தரையில் காது வைத்தபோது கொஞ்சம் அருகில் இருந்து கேட்பது போன்ற உணர்வு. இடையிடையே பெண்குரலில் கூப்பாடு. “காப்பாற்றுங்க… யாராவது இருக்கீங்களா…?”  மழை இரைச்சலிலும் ஒற்றைக்கல் வேகமாக அறையின் மூலையில் விழுந்த சத்தம் கேட்டது. அதில் ஏற்கனவே தொல்பொருள் ஆகிவிட்ட எங்களுடன் இருக்கும் நாழி ஒன்றை மூலையில் குப்புற போட்டிருந்தோம். அதில் இருந்து தான் கல்லெறி சத்தம் கேட்டது. தூசிகள் படிந்திருந்த நாழியை மெதுவாக நகர்த்திவிட்டு அந்த இடத்தில் டார்ச் அடித்தேன். கண் இமைக்கும் நொடியில் ஒளி விழுந்த இடத்தின் நடுவில் பிளந்து கொண்டு சிறு கல் ஒன்று ராட்சஸ வேகத்தில் வந்தது. சரியான நேரத்தில் சற்று அகன்றதால் முகம் தப்பித்தது. கல் விழுந்த இடத்தில் மட்டும் சிறு துவாரம். மூலையில் கிரிக்கெட் ஆடிய, பேட், ஸ்டம்புகள், ஹெல்மெட் ஒதுங்கிக் கிடந்தது. ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அந்தத் துவாரம் வழியாகப் பார்த்தேன். உள்ளே பொன்னிற வெளிச்சம். தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அலறல் சத்தம். ஸ்டம்பினால் அந்த இடத்தை உடைத்து டார்ச் அடித்துப் பார்த்தேன். ஆழம் இருபது அடி. அதற்கு மேலேயே இருக்கலாம்.

வலுவான கயிறு ஏதேனும் இருக்கிறதா என வீடு முழுவதும் தேடினேன். எந்த கயிறும் கண்ணில் தென்படவில்லை. இருந்தாலும் இக்கட்டான நேரங்களில் தென்பட வாய்ப்பு குறைவு. சட்டென்று ஒரு யோசனை. அவளின் துணி அலமாரியைத் திறந்தேன். உள்ளே எங்கள் திருமணத்திற்கு அவள் அணிந்த சேலையைத் தவிர வேறெந்த துணியும் இல்லை. சட்டென்று நினைவுக்கு வந்தது சற்றுமுன் கலவிக்காக அவள் களைந்த சேலை. நல்லவேளையாக அது அவிழ்த்தெறிந்த இடத்தில் அப்படியே கிடந்தது.

சேலையை அறைக்குள் இருந்த கம்பியில் இறுக்கமாக கட்டிக்கொண்டு துவாரத்திற்குள் விட்டேன்.  டார்ச்சை வாயில் வைத்துக்கொண்டு சேலையை மெல்லப் பிடித்து நிதானமாக ஒவ்வொரு அடியாக உள்ளே இறங்கத்  தொடங்கினேன். “அப்படித்தான், வாங்க, வாங்க…!” சேலையின் விளிம்பிற்கு வந்துவிட்டேன். இன்னும் சரியாக 5 அடி தான் இருக்கும். டார்ச் அடித்துப் பார்த்தபோது நான் இறங்கும் இடத்தில் சரியாக சிமெண்டினால் செய்யப்பட்ட நீர்த்தொட்டி காணப்பட்டது. நீருக்குள் நான் கண்ட காட்சியைப் போல் ஒரு காட்சியை வாழ்நாளில் காணவே கூடாது என்று விரும்புகிறேன். எங்கள் வீட்டில் இருந்த 29 மீன்களும் அந்த நீர்தொட்டியில் இருந்தது. நான் கீழே இறங்குவதற்குள் வேகவேகமாக, தொட்டியில் இருந்த பெரிய மீன் ஒன்று ஒவ்வொரு மீனாக விழுங்கிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு மீனையும் விழுங்க விழுங்க அதன் நீளம் முன்பைவிட இரு மடங்காகும். இருபத்தியெட்டு மீன்களையும் விழுங்கி முடித்தபோது, பொன் நிறத்தாலான விலாங்கு மீன் போன்று வளைந்து வளைந்து ஓடியது. “தொபக்” நீரில் குதித்தேன். இப்போது அந்த மீனை காண நீரை துளாவினேன். எங்குமில்லை. சற்று முன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு என் கண்களால் கண்ட மீன் எங்கே போனது…? தொட்டியிலிருந்து வெளியேறிவிட்டு பார்த்தபோது அதே மீனின் நீரில் மினுங்கும் இரு கண்கள்.

சுவர் முழுவதும் காய்ந்த தேங்காய் நாரினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன் நடுவே அட்டைப்புழுக்கள் ஆங்கங்கே மின்னிக் கொண்டிருந்தன. தரையில் ரத்தத்தினால் பதிந்த காலடி தடங்கள் மேற்கிலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியேறியிருந்தது.

அந்தப் பெண் என்னை சீக்கிரம் வந்து காப்பாற்றுமாறு அழைத்துக்கொண்டே இருந்தாள். என்னை முழுவதுமாக சூழ்ந்து விட்டது, தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இதயம் வெடித்து இறக்க நேரிடலாம் என கதறிக் கொண்டிருந்தாள். அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தபோது பிரம்மாண்டமான அறையின் நடுவே நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி நூற்றுக்கணக்கான கோழிகள் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தன. சில கோழிகள் அவள் காலை கொத்தின. பயத்தினால் உதறினாள். பல சுற்றுக்கள் தொலைவில் இருந்த கோழிகளும் அவளை நோக்கி சீறிப் பாய்ந்தன. அலறி துடித்துக்கொண்டபோது தான் மேலே பார்த்தேன். எங்கள் வீட்டு மின்விசிறி அதே மூச்சிரைப்புடன் சுற்றிக்கொண்டிருந்தது. அதன் மூலமாக அந்நிய வீட்டில் சாமத்தில் நுழைந்த குற்ற உணர்வைக் களைந்தேன். அவள் பாதங்களின் அருகில் கொக்கரித்தும், சீறிக் கொண்டிருந்த கோழிகளை ஒவ்வொன்றாய் தூக்கி சுமந்து வெளியேற்றினேன்.

“உங்களுக்கு கோழின்னா அவ்வளவு பயமா…?” என்று அவளிடம் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன். அவளும் நடுச்சாமத்தில் கோழி பிடிக்க வந்தவன் என்பதை உணர்ந்ததை கண்களினால் வெளிப்படுத்தினாள். அவளிடமிருந்து நான் வலுக்கட்டாயமாக அகற்றிய கோழிகள் அனைத்தும் கோவத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்தது. திடீரென்று மௌனம். வெளியே வந்து பார்த்தபோது ஒரேயொரு கோழி மட்டும் காணப்பட்டது. அது அவளைப் பார்க்காமல் பூழலை காட்டிக் கொண்டிருந்தது. கோழிகளை மறையச் செய்துவிட்டேன் என்று ஆசுவாசப்பட்ட அந்த நொடியே என்மீது காதல் கொண்டாள். எனக்குப் பசிப்பதை உணர்ந்து, சமைத்துத் தருகிறேன் கோழியைக் கொன்று கொடுங்கள் என்றாள். உடனே கோழியை தூக்கிக்கொண்டு நீர்த்தொட்டியில் தலையை அமுக்கிக், கழுத்தைத்  திருகிக் கொன்று, பீட்டையைப் பிய்த்துப் போட்டேன். என் கைகளில் இருந்த ரத்தத்தை நாவால் வருடி சுவைத்தபோது வெறியாகியது.

அவளிடம் “உன் கணவன் எங்கே.?” உற்சாகமான குரலில் உடனே பதில் வந்தது, “நீங்கள் வருவதற்கு கொஞ்சம் முன்புதான் தற்கொலை செய்து கொண்டார். உடல்  சமையலறையில் உள்ள பனை உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சாவதற்கு முன்பு எனக்கு அளித்த சாபங்களின் விளைவால் இத்தனை கோழிகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. நல்லவேளையாக நீங்கள் வந்தீர்கள். சிறுத்தை என்றால் கூட நிதானம் இழப்பதில்லை. இந்தக் கோழிகளை கண்டாலே அடிவயிறு முட்டி  விடும். ஆனால் நீங்கள் வந்ததற்கு பின், என் கணவனின் உடல் காணாமல் போய்விட்டது” என்றாள்.

எனது கைகளில் இருந்த கோழியின் ரத்தம் முழுவதும் அவளின் உடல்களில் கோடுகளாகிப் போனது. அதை ஒரு ஓவியமாக மாற்றியிருக்க வேண்டும். அதற்கு காரணம் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை என்பதாகவே இருக்கும். இம்மாதிரி நேரங்களில் கவித்துவம் என்னைவிட்டு அகன்று விடுகிறது. சபலம் முடிந்தபிறகு சமையலறையில் இருந்து எரிந்த பிணத்தின் வாடையுடன் கலந்து, கோழிக் குழம்பின் மணம் சுண்டி இழுத்தது. எரிந்து போன சதைப்பிண்டங்களின் நுண்துகள்கள், துணிகள் சிதறிக் கிடந்தது. மேலாடையின்றி கொதிக்கும் குழம்பை கரண்டியால் கோதியபடி புன்னகைத்தாள். தள்ளி நின்று கரண்டியை கிளறவில்லை என்றால் முலையில் தடயம் உருவாக வாய்ப்பு உருவாகலாம் இல்லையா என்றேன். உயிருடன் சீறிக் கொண்டிருந்த கோழிகளைக் கண்டு நடுங்கியவள், வெட்டுண்டு கொதிப்பதைக் கரண்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். உண்ட மயக்கம் இந்த நாளின்  முற்பாதியை பேசத் தொடங்கினாள் .

“அதிகாலையில் பனிப்போராக தொடங்கி போர்க்களமானதுக்கு காரணம் பானிப்பூரி. அவரது கடைக்குத் தான் நகரத்தில் மவுசு. காரணம் அனைவரும் ஒரு துளையிட்டு ரசம் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்த நேரம், பானிப்பூரியை உடைத்து ‘ஒடச்ச’ பூரியாக மாற்றினார். ஒரு உடைத்தல் மூலமாக ஏக வரவேற்பு. ரசம் உள்ளிட்ட இதர பொருட்களை ஒன்றாகக் கலந்து கொடுத்ததில் புதிய சுவை கிடைத்தது. பிறர் இந்த கருதுகோளை கையாளாமல் போக, நிறைவின்மையாகவோ, பயிற்சியாகவோ இருந்து போகட்டும். ஒடச்சதன் மூலம் வரும் புதிய வாடிக்கையாளர்களை நிராகரிக்கும் மனநிலை எங்கிருந்து உருவாகிறது?

நாளாக கடையில் கூட்டம் அள்ளியது. ஆறு மணிக்கெல்லாம் கடைக்கு வந்து ஏமாந்து செல்பவர் அதிகம் ஆயினர். ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட் பானிப்பூரி கொண்டு செல்வது வழக்கம். ஆறு மணிக்கு மேல் வருபவர்களுக்காக 2 பாக்கெட் அதிகமாக எடுத்துச் செல்ல சொல்லி விட்டேன். கொள்கை, மண்ணாங்கட்டி, அதிகமாக ஆசைப்படக் கூடாது என வழக்கொழிந்த வசனங்கள். அதென்ன உடலுழைப்பை உறிஞ்சும் விதமாக பல கிலோ எடையாலானதா என்ன? இல்லையே. காற்றை விட அதிகம். தேவை அதிகம் ஆகிறபோது கொடுப்பதில் என்ன பிரச்சனை..? உற்பத்திக்கான உழைப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றாலும் விடுவதில்லை. நானும் பொறுத்துப் பார்த்துவிட்டேன். இனிமேல் நம்பிக்கை இல்லை. அதனால் தான் அவரது ஆண்மையை அவமதித்தேன். ஒரு பவுன் நகையை எனக்குக் கனவாகவே வைத்த இந்த ஆளை தற்கொலை செய்ய வைக்க வேண்டும் என்பது தற்காலிகமாக நடந்தது இல்லை. ரொம்ப நாள் திட்டமிட்டு செய்தேன். வார்த்தைகளினால் புண்படுத்தினேன். அவரது ஆண்குறியில் எச்சிலைக் காரி உமிழ்ந்தேன். என்னைப் பார்த்தார். கோவமும், ஆற்றாமையும் கொள்கையுடன் கலந்து வேகமாக அடுப்பங்கரையில் சென்று மண்ணெணையை எடுத்துத்  தலையில் ஊற்றினார். தீப்பெட்டியை வாயில் கவ்விக்கொண்டு, கயிற்றைப் பனை உத்தரத்தில் போட்டு என் கண்ணெதிரே, தீக்குச்சியைப் பற்ற வைத்து, எரியும் உடலுடன் தூக்கில் தொங்கினார்.  புகை வெளியேறிக் கொண்டிருந்த புகையோட்டின் வழியாகவே கோழிகள் உள்ளே நுழைந்தது. இந்த சாபத்திலிருந்து விடுபடவே முடியாது என்றிருந்தேன். நல்ல வேளையாக வந்தீர்கள். உங்களினால் நான் பாவத்தில் இருந்து முழுமையாக வெளியேறி பரிசுத்தம் ஆனவளாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் எனக்காக ஒன்று மட்டும் செய்ய வேண்டும். ஒரு பவுன் நகை மட்டும் வாங்கித் தரவேண்டும். நீங்கள் என்னுடையவராகிப்  போவீர்கள். ஆனால் ஒருமுறை மட்டுமே. ஒவ்வொரு முறைக்கும் ஒரு பவுன் என்றால் உங்களிடம் என்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்கிறேன்.” என்றாள்.

நானும் அனைத்திற்கும் இசைந்து தலையசைத்தேன். அதற்குமுன் முக்கியமான அந்த முடிவை எடுக்க விழைந்தேன். ஆம், பசிகளுக்குமுன் தேவை முக்கியமாகப்பட்டது. அடைந்த பிறகு லட்சியமும், சமூகம் எனக்கு அளித்திருக்கும் இடமும், அதனால் செய்ய வேண்டிய காரியங்களும். அதிலிருந்து எனக்குள் கிடைக்கப்பெறும் அகங்காரங்களும் எனக்கு முக்கியம். அதனால் தாமதிக்காமல் அவளைக் கொலை செய்ய வேண்டும். அங்கிருந்த நீர்தொட்டியின் அருகில் அழைத்துச் சென்று கோழியைக் கொன்றதைப் போலவே அவளையும் கொல்ல வேண்டும். இப்பொழுது அவளின் கணவனாக மாற வேண்டியது, நான் வாழ்வதற்காக இந்த சமூகம் அளித்த கொடை. ஒரு கணவன் தற்கொலை செய்திருக்கிறான் என்றால் கண்டிப்பாக அவள் செய்த துரோகத்தின் பொருட்டே நடந்திருக்கும் என்று உறுதியாய் நம்பினேன். அவள் கணவனுக்கு செய்த துரோகத்திற்காக நான் செய்ய வேண்டிய கடமை என்று சட்டென்று கையை நீர்தொட்டிக்குள் விட்டு விலாங்காக மாறியிருந்த எனது மீனைக்கொண்டு கழுத்தை நெருக்கினேன். உயிருடன் இருந்த மீனும், அவளும் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.

பிடி இறுகுகையில் அவள் மறைந்து போனாள். சுற்றிமுற்றிப் பார்த்தேன். அவள் இல்லை. மிக அனிச்சையாகி இருந்த வாசம் காற்றில் வீசியது. ஆம், என் மனைவி நான் வந்த வழி சேலையில் தொங்கிக்கொண்டு நின்றாள். என்னைப் பார்த்து நம் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுங்கள், நான் மேலே அடுக்குகிறேன் என்றாள். மூச்சிரைக்கும் விசிறியைத் தவிர அனைத்தையும் எடுத்துக் கொடுத்தேன். அப்போது தொட்டியில் இருந்த மீன், விழுங்கிய ஒவ்வொரு மீன்களையும் வெளியே கக்கிக் கொண்டிருந்தது. அதில் எந்த மீனிற்கும் உயிரில்லை. நீரில் மிதந்து கொண்டிருந்தது.

ஐசக் பேசில் எமரால்ட் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். தற்போது திரைப்படத் துறையில் பணிபுரிகிறார். இவரது நாவல் அண்மையில் வெளியானது

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular