Friday, July 12, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 11

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 11

சட்டவாக்க அரங்கம்: பரிந்துரைகள், தீர்மானங்கள், அமுலாக்கம்!

ரூபன் சிவராஜா

பரிந்துரைகள் தெரிவும் மதிப்பீடும்

க்கள் அரங்கின் நிகழ்த்துகைகளுக்கான முக்கிய பகுதி, பங்கேற்பாளர்கள் நாளாந்தங்களைப் பாதிக்கின்ற மோசமான ஒடுக்குமுறைகள் எவை என்பதைத் திட்டவட்டமாக எடுத்துச் சொல்ல வேண்டும். மட்டுமல்லாது சட்டத் திருத்தங்களினால் ஒடுக்குமுறைச் சூழலில் நடைமுறை மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்புகள் எந்தளவில் உள்ளன என்பது பற்றியும் அழுத்தமாக விளக்க வேண்டும். அரங்கக் குழுக்களிலுள்ள பிரதிநிதிகள், குழுக்களில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் மற்றும் தர்க்கவாதங்களை ஆலோசகர்களுக்கான பொதுக்கூட்டத்திற்கு எடுத்துச் செல்வர். அங்கு அனைத்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்படும். பல சந்தர்ப்பங்களில் பரிந்துரைகளின் உள்ளடக்கம் தொடர்பான இறுதி முடிவுக்கு முன்னர், பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டியிருக்கும். அரங்கக் குழுவிலுள்ள சட்ட வல்லுனர்கள் சட்டச் சொல்லாடல்களையுடைய மொழியில் பரிந்துரைகளை திருத்தி எழுதிய பின், சட்டமன்ற அமர்வில் அவை Boal-இனால் முன்வைக்கப்படும்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இந்த வகையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் முதியவர்களின் அரங்கக் குழுவிலிருந்து வந்த பிரச்சனைக்கான தீர்வுவாகும். அது சுய அனுபவத்திலிருந்து முன்வைக்கப்பட்ட ஒரு துயர்மிகு சம்பவம். அரசங்க வைத்தியசாலையில் முதியவர் ஒருவரின் உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பான அறிதலற்ற காரணத்தால் ஒரு இளம் வைத்தியரால் முதியவருக்குத் தவறான சிகிச்சை வழங்கப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் ஆலோசனைக் குழுவினருடன் ஆழமாக இதுபற்றி விவாதித்து, காத்திரமான திட்டம் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அச்சட்ட அமுலாக்கம் மூலம், அனைத்து அரசாங்க மருத்துவமனைகளிலும் வைத்தியர்கள் மற்றும் மருத்துவத்தாதிகள் மத்தியில் முதியோர் வைத்திய நிபுணர்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது. தவிர குறிப்பிட்ட படுக்கைகள் வயோதிப நோயார்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதோடு, வயோதிபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது உறவினர்கள் அல்லது நண்பர்களை உடன் அழைத்துச் செல்வதற்குரிய வழிவகையை ஒவ்வொரு மருத்துவமனைகளும் கொண்டிருக்க வேண்டுமென்பதும் வலியுறுத்தப்பட்டது.

குற்றவியல் வழக்குகளில் சாட்சி சொல்பவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சார்ந்த சட்டம், சமபால் உறவாளர்கள் மீதான பாரபட்சத்திற்கு எதிரான விதிமுறைகள் உட்பட்ட இன்னபிற 13 தீர்மானங்கள் சட்டவாக்க அரங்கச் செயற்பாடுகளின் ஊடாக, Boal அங்கம் வகித்த நான்காண்டு (1993-1996) காலத்திற்குள் நிறைவேற்றப்பட்டன. இவ்வகை அரங்கச் செயற்பாடுகள் மூலம்; நாட்டின் அதிகார மற்றும் நிர்வாக மையத்தில் அடித்தட்டு-விளிம்புநிலை-ஒடுக்கப்படும்-பாரபட்சமாக நடத்தப்படும் மக்கள் எனப் பரந்துபட்ட அளவில் மக்கள் நேரடியாகப் பங்கேற்கின்ற செயல்வெளி உருவாக்கப்பட்டது என்பது முக்கியமானது.

சட்டமன்றத்தில் வாக்காளர்களின் தாக்கம்

சட்டமன்ற அமர்வுகளில் நடைபெறும் செயற்பாடுகளில் வாக்காளர்கள் தாக்கம் செலுத்துவதை Boal முக்கியமாகக் கருதினார். சட்டமன்றத்தின் கிரமமான அமர்வுகளுக்கு முன்னர், மக்கள் கூடும் பொது இடங்களில் ‘The Chamber if the Square’ என அழைக்கப்பட்ட நிகழ்வுகளை ஒழுங்குசெய்தார். முன்மொழியப்பட்ட ஆலோசனைகள்; மீதான விதாதமும் மதிப்பீடும் இத்தகைய நிகழ்வுகளில் முன்னெடுக்கப்பட்டன. ஒரு நாடக ஆற்றுகை வடிவத்தில் சட்டமன்ற அமர்வுகளில் நடைபெறும் செயற்பாடுகளை ஒத்த முறையில், கிட்டத்தட்ட சட்டமன்றத்திற்கு வெளியில், அதே யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. குறித்த விவகாரம் தொடர்பாக மக்கள் உரையாற்றவும் தமது நிலைப்பாடுகளை, வாதங்களை முன்வைக்கவும், அதற்கு எதிரான வாதங்களை மற்றவர்கள் முன்வைக்கவும் விவாதிக்கவுமான சூழல் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டது. முடிவில் குறித்த விவகாரம் வாக்கெடுப்பிற்கு விடப்படும்.  இந்நிகழ்வு எவ்வளவு தூரம் நாடக வடிவத்திற்குரிய உத்திகள், தன்மைகளோடு நடாத்தப்படுகின்றதோ அவ்வளவு தூரம் மக்கள் கூடுதல் ஈடுபாடும் காத்திரமான கருத்துகளும் வெளிவந்ததை அவதானித்தார். இந்தச் செயல்முறையின் ஆழமும் காத்திரத்தன்மையும் பின்வரும் விதிமுறைகளால் உறுதிப்படுத்தப்பட்டன:

-கருத்துகள், முன்மொழிவுகள் முன்கூட்டியே எழுத்துமூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். எளிமையாகவும் அதேவேளை தெளிவான முறையில் சொற்செழுமையுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் தெளிவான பதில்களை எதிர்பார்க்க முடியும்.

-இந்த நிகழ்வுகளில் சட்ட நிபுணத்துவம் மிக்க செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்வது அவசியம். முன்வைக்கப்படும் கருத்துகள், முன்மொழிவுகளைச் ‘சட்டமன்ற’ மொழிக்கு மாற்றுவது அவர்களின் பொறுப்பு.

-இத்தகைய நிகழ்வுகளில் Boal நேரடியாகப் பங்குபற்றாதவிடத்து, நிகழ்வு பற்றிய தகவல்கள் – குறிப்பாக அங்கு முன்வைக்கப்பட்ட பார்வைகள், வாதங்கள், வாக்கெடுப்பு தொடர்பான விரிவான அறிக்கை அவரது பிரதிநிதிகளால் அவருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

Boal முகம்கொடுத்த எதிர்ப்புகளும் அவதூறுகளும்

ஒரு அரசியல்வாதியாக  அவர் தொடர் எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்திக்க நேர்ந்தது. ஊடகங்கள், அவரது அரசியல் எதிரிகளிடமிருந்து இத்தகைய நெருக்கடிகள் வந்தன. இதனால் காவல்துறை விசாரணைகளுக்கும் வழக்குகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

நோர்வேஜிய கல்லூரி ஒன்றின் விரிவுரையாளரும் எழுத்தாளருமான Arne Engelstad இந்நிலை பற்றித் தனது ‘‘Theatre of the Oppressed – Methods and techniques’’ நூலில் பகிர்ந்த சம்பவம் ஒன்றினை நினைவுகூர்வது பொருத்தமானது. Arne Engelstad இலக்கியம்¸ நாடகம்¸ அரங்கவியல்¸ திரைப்படம்¸ மற்றும் ஏனைய கலைப்பாடங்களுக்கான கற்பித்தல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். 90-களின் இறுதியிலும் 2000-இன் ஆரம்பத்திலும் ஐரோப்பிய மற்றும் ஸ்ன்டிநேவிய நாடுகளில் Augusto Boal உடன்  இணைந்து பல அரங்கவியல் பயிற்சிப்பட்டறைகளில் செயற்பட்டவர். 2004-இல் Boal-இன் அரங்கவியல் பற்றிய தனது கலாநிதிக் கல்விக்கான ஆய்வினையும் சமர்ப்பித்தவர். 1996-இல் ஒருமுறை, கருத்தமர்வு ஒன்றிற்காக நோர்வேயின் கிறிஸ்தியான்சண்ட் நகரில் ASSITEJ (The International Association of Theatre for Children and Young People) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தியான்சண்ட்-இல் நாடக விழாவில் கலந்து கொள்வதற்காக அவரை அழைப்பதற்குத் தான் முயற்சி எடுத்தபோது எதிர்கொண்ட சிக்கலைப் பற்றி விபரித்துள்ளார்.

நாடக விழாவையொட்டிய ஒரு வாரகாலப் பயிற்சிப் பட்டறைக்காக அழைப்பதற்கான முயற்சி அது. பிரேசிலிலிருந்து அவருக்கான வெளிநாட்டுப் பயண அனுமதி பெறுவது முதலில் சாத்தியமற்றதாகத் தோன்றியதென்று கூறுகிறார் Engelstad . பாடசாலை மண்டபம் ஒன்றினை நாடகச் செயற்பாட்டிற்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் Rio-வை விட்டு வெளியேறக்கூடாது என அப்போது காவல்துறை கட்டளை பிறப்பித்திருந்தது. உண்மையில் குறிப்பிட்ட அந்தப் பாடசாலை மண்டபத்தை Boal ஒருபோதும் பயன்படுத்தவில்லை. அது பொய்க் குற்றச்சாட்டு. நாடக விழா ஏற்பாட்டாளர்களின் பல கடித மற்றும் தொலைபேசி உரையாடல்களுக்குப் பின்னர் பிரேசிலிலிருந்து வெளிநாட்டுப் பயண அனுமதி வழங்கப்பட்டது. இருந்த போதும் அவரின் நோர்வே விஜயத்தின் போதான அனைத்து பத்திரிகைச் செய்திகள், ஊடக நேர்காணல்கள் தொலைநகல் மூலம் பிரேசில் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டிய நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

நெருக்கடிகளுக்கு மத்தியில் இயக்கம்

இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசியலில் தொடர்ந்து ஈடுபடவே விரும்பினார். அடுத்த தேர்தலில் போட்டியிட்ட போதும் அவர் வெற்றிபெறவில்லை. இருப்பினும் இந்த அரங்கச் செயற்பாட்டு உத்திகள், சட்டவாக்கப் பொறிமுறைகள் தொடர்பான அறிவைப் பரப்புவதில் அவர் தொடர்ந்து இயங்கினார். சட்டவாக்க அரங்கத்தினை பிரேசிலைத் தாண்டி, பல்வேறு நாடுகளிலும் தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது அறிமுகப்படுத்தினார். பாரிஸ், முஞ்சென், வியன்னா, ரொறொன்ரோ, Wijchen, Bradford, Manchester போன்ற உலக நகரங்களில் சட்டவாக்க அரங்கினை அறிமுகம் செய்து அரங்கப் பட்டறைகளை நடாத்தினார்.

மந்தமான பொருளைச் செயலாற்றலுள்ள பொருளாக மாற்றுவதே ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் முதன்மைக் கொள்கை. அரங்க அர்த்தத்தில் பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக-ஆற்றுகையாளர்களாக மாற்றுதல். அரசியல் அர்த்தத்தில் வாக்காளர்களை சட்ட உருவாக்கிகள் ஆக்குவது. சட்டவாக்க அரங்கம் ஒரு முழுமையான அரங்கச் செயற்பாடாக, நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் கருவியாகவும் – மாற்றம் நோக்கிய கூட்டுச் சிந்தனையைத் தூண்டுகின்ற அரங்கப்படைப்பு எனும் நிலையிலிருந்து, சட்டவாக்கம் எனும் கூட்டு அடைவினைக் குறிக்கின்றது.

***

ரூபன் சிவராஜா, நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றுள்ளது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular