ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 10

0

சட்டவாக்க அரங்கு ஜனநாயகத்தின் புதிய பரிமாணம்

ரூபன் சிவராஜா

ஜனநாயக அமைப்பு முறையில் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போது மக்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி தமக்கான பிரதிநிதிகளையும் ஆட்சியையும் தெரிவுசெய்கின்றனர். ஆனால் தேர்தலின் பின்னான மக்களின் நேரடியான வகிபாகம் என்பது பெரும்பாலும் வெறும் பார்வையாளர்கள் என்பதாகிவிடுகிறது. இதுவே பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் இயல்பு அல்லது இயங்குநிலை. ஒப்பீட்டளவில் கட்சிகளினதும் ஆட்சியாளர்களினதும் வாக்குறுதிகள் குறுகிய காலத்திற்குள் மறக்கப்பட்டவையாகவும் ஆகிப்போவதுண்டு. ஆனால் Augusto Boal இன் அரங்கக் கலை முன்னெடுப்பு ஜனநாயகத்திற்கு இன்னுமொரு பரிமாணத்தைக் கொடுத்தது. அதனை Boal, ‘Transitive Democracy – நிலைமாறு ஜனநாயகம்’ என்கிறார். சட்டவாக்க அரங்கு மூலம் அதனை அவர் சாத்தியப்படுத்தினார். பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக்கும் அரங்கச் செயற்பாடுதான் இதுவும். ஆனால் நேரடிப் பங்கேற்பு.

இதன் நடைமுறைச் சாத்தியம் பற்றிய கேள்விகள் எழுவது இயல்பு. ஆனால் இதன் சாத்தியப்பாட்டினை விளக்குவதற்கு Boalஇன் தேர்தல் அரசியல் பங்கேற்பினையும் அதற்கான பின்னணியையும் விபரிப்பது அவசியமாகின்றது. இந்தச் செயற்பாட்டின் ஊடாக பல தீர்மான முன்மொழிவுகள் பிரேசிலின் இரண்டாவது பெரிய மாநிலமான Rio de Janeiro சட்டமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றில் 13 முன்மொழிவுகள் பெரும்பான்மையைப் பெற்று நிறைவேற்றப்பட்டன.

வாக்காளர்கள் சட்ட உருவாக்கிகளாக மாறுதல்

முன்மொழிவுகள் வாக்காளர்களிடமிருந்து நேரடியாக வரவேண்டுமென்பதை உறுதிசெய்கின்ற பொறிமுறை இதற்குள் உண்டு. தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பங்களிப்பு என்பது முன்மொழியப்பட்ட எழுத்துமூல ஆலோசனைகளைச் சட்டமன்றத்திற்கு எழுத்துச்சென்று முன்வைப்பதாகும். தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினராக Boal அதனைச் செய்தார்.

Boal இன் வாழ்வுச் சூழல்தான் அவர் உருவாக்கி வளர்த்தெடுத்த அரங்க வடிவங்களுக்கான வடிகாலாக அமைந்தது என்பதை ஏலவே பார்த்திருந்தோம். 1979இல் பிரேசிலில் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது. இருந்தபோதும் தொடர்ந்தும் பிரான்சில் வசித்துவந்தார். அங்கு ஒடுக்கப்பட்டோருக்கான அரங்க மையம் ஒன்றினை நடாத்தியும் வந்தார். Sorbonne பல்கலைக் கழகத்தில் கற்பித்தல் பணியையும் மேற்கொண்டு வந்தார். ஒருமுறை அந்தப் பல்கலைக் கழகத்தில்  இடம்பெற்ற ஒரு கருத்தமர்வில் பங்கேற்பதற்காகச் சென்ற Rio மாநில துணை ஆளுனர், Boal அவர்களை பிரேசிலுக்குத் திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். கல்வி நிறுவனங்களுடன் இணைந்ததாக ஒரு மக்கள் மைய கலாச்சார நிறுவனத்தினை உருவாக்கி வளர்த்தெடுப்பதற்குரிய சாதகமான நிலைமைகள் பற்றி அவரிடம் கூறப்பட்டது. அக்கலாச்சார நிறுவனம் பாரிசில் அவர் நடாத்திவந்த அரங்க மையமும் Paulo Freireவின் ஊடாட்ட கற்றல்-கற்பித்தல் முறைமையின் அம்சங்களையும் இணைத்ததாக அமைய வேண்டுமென்பது துணை ஆளுனரின் பரிந்துரையாக இருந்தது. இந்த வேண்டுகோளும் வாய்ப்பும் Boalஇற்குத் தூண்டுதலாக அமைந்தது. 15 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின் 1986இல், நிரந்தரமாகத் அவர் தாயகம் திரும்பினார்.

நாடு திரும்பிய பின்னர் கல்வி அமைச்சகத்தைச் சேர்ந்த 35 கலாச்சாரப் பணியாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றுடன் அரங்கப்பணிகள் தொடங்கப்பட்டன. நாடு தழுவிய ரீதியில் மக்கள் அரங்கு, கருத்தமர்வுகள் உட்பட்ட வெவ்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டோருக்கான பிரேசில் அரங்கச் செயற்பாட்டு மையம் (CTO, centro de teatro do oprimido) உருவாக வழிகோலியது.

அவ்வாறாக அரங்கச் செயற்பாடுகள் முன்னேற்றப பாதையில் பயணித்துக் கொண்டிருக்கையில், நாட்டில் அரசியல் அதிகார மாற்றம் நிகழ்கிறது. அதன் விளைவாக புதிய ஆட்சியாளர்கள் அரங்கச் செயற்பாடுகளுக்கான ஆதரவினை விலக்கிக் கொள்கின்றனர். ஊவுழுவினைத் தொடர்ந்து இயங்கவைக்கின்ற CTOஇன் முயற்சி வெற்றியளிக்கவில்லை. வள, நிதிப் பற்றாக்குறை காரணமாக அது முடக்கப்படுகின்றது.

அரங்கம் – தேர்தல் அரசியல் – சட்டமன்றம்

1992இல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், கொள்கை ரீதியாகத் தமக்கு நெருக்கமான தொழிற்கட்சியை நாடி, தேர்தல் பரப்புரைகளுக்கு நாடகம், மக்கள் அரங்குகள் ஊடாக உதவமுடியுமெனக் கூறுகின்றனர். அக்கட்சி இவர்களின் வேண்டுகோளுக்குச் சம்மதம் தெரிவித்த அதேவேளை, அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் ஒரு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், கட்சிக்கு அது மேலும் பலமாக அமையுமென்ற தமது விருப்பத்தினையும் முன்வைக்கின்றனர். தகுதியும் பொருத்தமுமுடைய வேட்பாளராக Boal முன்மொழியப்படுகிறார். அவருக்கு நேரடி அரசியலில் ஈடுபடுவதில் விருப்பில்லை. அழுத்தம் காரணமாகவும் அதிலுள்ள வாய்ப்புகள் மீதான நம்பிக்கை காரணமாகவும் வேட்பாளராகப் போட்டியிடுவதற்குச் சம்மதிக்கின்றார். 22 கட்சிகளைச் சேர்ந்த 1200 வேட்பாளர்கள் 42 இடங்களுக்காகப் போட்டியிடும் தேர்தல் அது. இந்நிலையில் வெற்றிவாய்ப்பு கேள்விக்குறி என்பது அவரின் எண்ணம். தவிர நிதிவலிமையுடைய வேட்பாளர்கள் பிரேசிலின் முதன்மை ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அவர்களோடு போட்டியிடுவதிலுள்ள சவால்களும் அவரது தயக்கத்திற்குரிய காரணி.

அரங்கக் குழுவானது Rioவில் மக்கள்கூடும் பொது இடங்களில், திறந்தவெளிகளில் உரையாடல் அரங்குகளை ஏற்பாடு செய்தனர். மக்கள் இயல்பாகக் கூடும் இடங்களில் திடீரெனத் தோன்றி, அரங்க வடிவங்களினூடாக மக்கள் மத்தியில் பரப்புரைகளைச் செய்தனர்.

சம்பா (பிரேசிலிய நடன இசை), உருவக அரங்கம், நையாண்டி நாடக ஆற்றுகைகள் உட்பட்ட பல்வேறு சாத்தியமான ஆற்றுகை வடிவங்களைக் கையாண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டனர். இவர்களின் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடிக்கத் தொடங்கின. எதிர்பார்த்தைதைவிட அதிகமான மக்கள் ஒன்றுகூட இவ்வகை அரங்கச் செயற்பாடுகள் கவனயீர்ப்பினைப் பெற்றன. ஏனைய பேச்சாளர்களின் வீச்சான உரைகளை விடவும் இந்தவகைத் தேர்தல் பரப்புரை அரங்குகள் மாறுபட்டதாகவும் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தன  நாழிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகள் இந்தவகை அரங்குகளைப் பற்றி எழுதுவதற்கும் ஒளிபரப்புவதற்கும் ஆர்வம் காட்டின. இதன் வடிவங்கள் காட்சிபூர்வ பிரதிபலிப்பு நிறைந்ததாக இருந்தமையே ஊடகங்களின் ஆர்வத்திற்குக் காரணமாயின.

விருப்பமில்லாமல் வேட்பாளராகப் போட்டியிடச் சம்மதித்த Boal, ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகுவதென்ற முடிவில் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. இருந்தபோதும் வெற்றிவாய்ப்புப் பற்றிய நம்பிக்கையும் வெற்றியின் மூலம் அடையக்கூடிய சமூக நன்மைகள் பற்றிய எதிர்பார்ப்பும் விலகல் முடிவினைக் கைவிடச் செய்தது.  ஜனநாயகத் தேர்தல் மூலம் பெறப்படும் அங்கீகாரமும்  நிர்வாக அதிகாரமும் காத்திரமான சமூக அரசியல் மாற்றங்களுக்கு பயன்படும் என்ற கருத்தியலின் அடிப்படையில் தேர்தல் வெற்றியில் நம்பிக்கை கொண்டார்.

Rioவின் சட்ட மன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுபவர்கள், 20 தனிப்பட்ட ஆலோசகர்களை நியமிக்க முடியும். இப்படியான சாதகமான சூழலில் அரங்க செயற்பாட்டுக் குழுவினருக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வதோடு, அரங்க செயற்பாட்டு மையத்தினை முடக்க வேண்டிய தேவையும் அற்றுப் போகின்றது. மக்கள் அரங்கின் முடிவில் எட்டப்படும் பல தீர்வுகள், பரிந்துரைகளை அரசியல் அதிகாரத்தின் மூலம் நேரடிச் சமூக மாற்றமாக உருமாற்றலாம் எனும் எண்ணமும் தேர்தலில் களமிறங்குவதற்குரிய உந்துதலை வழங்கியது.

விளிம்புநிலை மனிதர்களின் நலனும் பாதுகாப்பும்

ஒரு அரங்க செயற்பாட்டுக்குழு சட்டமன்றத்திற்குச் செல்வது வரவாற்றில் முன்னெப்பொழுதும் நிகழ்ந்திருக்கின்றதா என்று தெரியவில்லை. பிரேசிலில் நடந்தது. தேர்தலுக்கான பரப்புரை, தேர்தலில் வேட்பாளராக நின்று வென்றமை என்பவற்றைத் தொடர்ந்து பல்வேறு செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன. சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களையும், ஒடுக்கப்படுகின்றவர்களையும் உள்ளடக்கிய வெவ்வேறு அரங்க செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. மாற்றுத் திறனாளிகள், பல்நிற பல்கலைக்கழக மாணவர்கள், ஆதரவற்ற சிறுவர்கள், முதியோர், உளநல மையங்களின் நோயாளர்கள்-மருத்துவப் பணியாளர்கள், சமபால் உறவாளர்கள், வேலையற்ற பண்ணைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களை உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுக்கள் அமையப்பெற்றன.

இக்குழுக்களுக்கெனத் தனித்தனியாக நெறியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டு அரங்கப்பயிற்சிகள் உட்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நெறியாளர் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் Boal இன் ஆலோசகர்களிலிருந்து நியமிக்கப்பட்டனர். குழுக்கள் ஒன்றையொன்று சந்தித்து, ஒன்றுக்கொன்று நிகழ்த்திக் காட்டல், ஒருவரோடொருவர் ஊடாடுதல் போன்ற செயற்பாடுகள் பல மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.

***

ரூபன் சிவராஜா நார்வேயில் வசிக்கிறார். கவிதைகள் மற்றும் அரசியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதிவருகிறார். அண்மையில் இவரது முதல் நூல் “அதிகார நலனும் அரசியல் நகர்வும்” நூல் வெளிவந்து கவனம் பெற்றது. ஆசிரியர் தொடர்புக்கு – svrooban@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here