Monday, December 9, 2024
Homesliderஐயா

ஐயா

தமிழ் சுப்பிரமணி

‘வாடா வந்து பால் ஊத்து, ஒடியா……’

தயங்கித் தயங்கி வீட்டினுள் நுழைந்து கடைசி அறைக்குச் சென்றான் மணிராசு. பெரியப்பாவின் உயிர் வயித்துக்கும் தொண்டைக்கும் இழுப்பாடாய் இருந்தது. அம்மா பால் டம்பளரைக் கொடுத்தாள்.  அதை வாங்கிக்கொண்டு பெரியப்பாவின் வாயருகே சென்றான்.  அந்தக் காவாசி உசிருக்கு முகத்தில் தெளிச்சி தட்டியது.  உறுமல் அதிகமானது.  பயப்படாத ஊத்து என சுற்றி நின்ற குரல்கள் சொல்ல பாலை வாய்க்குள் ஊற்றினான்.

‘உம் பேரச்சொல்லி இன்னாருதேனு ஞாபகப்படுத்து ’ என்று அம்மா சொன்னாள்.  

‘ஐயா..ஐயா..நாந்தேன் மணிராசுயா..ஐயா..ஐயா..என்ன தெரிதா…’

இவன் கேட்கக் கேட்க மூச்சுத் திணறல் அதிகரித்து ஒரு கட்டத்தில் அடங்கியது. ஊரும் சொந்தமும் கூடியது.  தறி ஓட்ட சம்சு விடப்பட்டது.

‘யோவ் எரிக்கலாமா பொதைக்கலாமா.’

‘ஏ..யெப்பா என்ன பேசிட்ருக்க, கண்ணாளமாகாத ஆளுயா புதைக்கிறதாஞ் சரி.’  

‘சும்மா நசநசனு பேசாம முருகன்ட்டயே கேளுங்கப்பா.’  

ஊர் பெரிய தலைகளின் கழுத்து முருகனை நோக்கித் திரும்பியது.  

‘என்னப்பா உங்க அண்ணன எரிப்போமா பொதப்போமா.’

‘சுப்பு மாமா சொன்னபடிக்கே கல்யாணமாகத ஆளு அதனால பொதச்சிரலாமுங்க.  அப்புறங்க கொட்டுகிட்டலாம் அமத்த வேணாங்க.’

‘சரிப்பா முருகா.’

சங்கு ஊத பாடை வண்டி தயாரானது.  பெரியப்பாவைத் தூக்கி பாடையில் வைத்தனர்.  ஒவ்வொருமுறை சங்கு சத்தம் கேட்க கேட்க மணிராசின் அக்கா செல்வி அழுதுகொண்டே இருந்தாள்.  பயந்து போயிருந்ததால் அம்மா அக்காளைத் தேற்றினாள்.  பாடை கிளம்ப ஊர் ஆம்பளைகள் பின்னாடியே சென்றனர். மணிராசு கருப்பு மச்சானுடன் டிவிஎஸ்50ல் முன்னக்கூடிய சுடுகாட்டிற்கு போய்விட்டான். சுடுகாட்டை அப்போதுதான் முதல் தடவை பார்க்கிறான்.  உடனே வலது கையை சட்டைக்குள் விட்டு வயிற்றுத் தொப்புளுடன் வைத்துக்கொண்டான்.  

‘டேய் பதினெஞ்சு வயசாச்சு ஏண்டா இன்னும் சின்ன நொண்ணியாட்டம் பன்ட்டிருக்க, கைய வெள்ளெல்ரா தாயிலி.’

மச்சான் சொன்ன பிறகு கையை எப்போதும் போல் வைத்துக் கொண்டான்.  ’அந்தா கூடாரம் மாரி இருக்கே அங்கதான் பொனத்த எரிப்பாங்களா.’

‘ஆமாடா நாளைக்கு நீ செத்தாலுஞ் சேரி நாஞ் செத்தாலும் சேரி இங்கனதான்.  நம்ம சாலியப்பெய மக்கா எல்லாரும் இங்கெனதேங்.  அங்குட்டு இன்னொரு சுடுகாடு இருக்கே.  ஒரு சுடுகாடு இல்ல சாதிவாரியா பல கிடக்கு.’

‘என்னய்யா, பொணம் எப்ப வரும்’ வெட்டியானின் குரல் கேட்க சங்கு சத்தமும் சேர்ந்து கேட்டது.  ’இந்தா சங்கு சத்தம் கேட்குதுல பக்கத்துல வந்திருச்சு’ மச்சான் சொன்னான்.

‘ஏ முருகா தறியவிட்டு எந்திரிடா. செத்த முண்டயாட்டம் ஓட்டிட்டு கெடக்க. கையவும் காலவும் பாரு வேத்து ஊத்துது.  இப்புடி இருந்தா எப்புர்ரா மிதிப்பலகா கால்ல நிக்கும். இழுவக்கயிறு கைல பிடிபடும். உரப்பான வேல பாத்துத் தொலடா. தள்ளு தள்ளு இடத்த காலி பண்ணு.’

‘இல்லணே நானே ஓட்டிருவேன்.’

‘மொச புடிக்கிறத எங்களுக்குத் தெரியாதாக்கும்.  செத்த நேரத்துல உங் கூட்டாளி வந்துருவானுங்க. ஓட்ன பாதிச் சீலையோட வெளில கெளம்பிருவ.  பூராம் உருப்புடாத கேசு.  கேட்டா கட்சி கொள்கனு பேச வேண்டிது.  நயாப் பைசா புரையோஜனம் இருக்கா அந்த கட்சினால. கேட்டா மொழிய வளக்குறதே நாங்கதானு சொல்றது.’

‘அண்ணே உனக்கு அம்புட்டுதா மரியாத.  கட்சிய பத்தி தப்பா பேசாத’.  

‘ஏண்டா எடுவட்ட முண்ட கட்சியா சோறு போடுது. உந்தாட்டியத்தெல்லாம் இங்க காட்டக்கூடாது.’

‘அண்ணே நீ ரெம்ப மணியம் பன்ற. உஞ் சோலி மயிரப் பாரு. எனன்கெல்லாந் தெரியும்.’

கோபத்தைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிப் போனான் முருகன்.  

‘ஏம்பா நடராசா தம்பிட்ட பாத்து பேச வேணாமாயா’

அடுப்படியிலிருந்து மரகதம் சொல்ல ’சும்மாக் கெட கெழவி உனக்கு ஒன்னுந் தெரியாது. இவன அந்த கட்சில இருந்து அடிச்சு வெரட்டுறானுங்களானு பாரு.’

அன்று பொதுக்கூட்டம் காந்தி மைதானத்தில் நடந்தது. முருகன் மைக்கைப் பிடித்து ஒரு வெளு வெளுத்துவிட்டான்.  கூட்டத்திற்கு தலைமை தாங்கிய விருதை சம்பந்தம் பேசும்போது “தம்பி முருகன் சொன்னது போல” என்று முருகனின் பெயரை அடிக்கடி ஒப்பித்தார். ஒருவாரம் கழித்து கட்சியின் செய்தித்தாளில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் முருகனின் பெயர் இருந்தது. கூடவே அவனது கூட்டாளிகளின் பெயரும். முருகனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  நடராசனுக்கு ஒரே சந்தோசம். இனிமேலாவது வேலை வெட்டினு இருப்பான் கட்சினு திரிய மாட்டான் என மனதில் நினைத்துக் கொண்டார். அந்த சந்தோசத்தை வெளிக் காட்டாமல் ‘இப்பயாது பொழப்பப் பாருடா, தட்சிணாமூர்த்திய எம்புட்டு கும்புட்டாலும் கடைசில கொலதெய்வந்தேன் சோறு போடும்டா’ என்று சொன்னார்.  எதிர்வீட்டு செல்வராசு ‘அந்த கட்சில இருக்குறதுக்கு பேசாம எங்க கட்சில வந்து சேரு முருகா’ என்றான்.  இல்லயா… எனக்கு மேக்கப் போடுறவங்க பின்னாடி போறது பிடிக்காதென ஒரே வார்த்தையால் முகத்தில் அறைந்தான் முருகன்.

‘யெம்மோ நீ எந்திரி நாந் தார் சுத்துறேன்.’  புள்ளைக்கு பொறுப்பு வந்ததை எண்ணி மனங் குளிர்ந்தாள் மரகதம்.  ஊடநூலை சக்கரத்தில் மாட்டி குழலை சுத்துக் கம்பியில் செருகினான். சங்கரலிங்கம் விழுந்தடித்து ஓடி வந்து ’முருகா… உங்கண்ணே கால வெட்டிட்டானுங்கடா… பாப்பணைக்க போன இடத்துல இப்புடி ஆய்ருச்சுடா’ என்று கத்தினான்.  ராட்டை விலக்கிவிட்டு அவனுடன் முத்துச்சாமி வீட்டை நோக்கி ஓடினான் முருகன்.  வீட்டு முற்றத்தில் இரத்தம் ஒழுக நடராசன் கிடந்தார்.  முத்துச்சாமி கொல்லப்புறம் வழியே கம்மாய் தாண்டி ஓடிவிட்டான். முத்துச்சாமியின் பெஞ்சாதி கேவியபடி தரையில் குத்தவைத்து இருந்தாள். பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அண்ணனை தோள்மீது தூக்கிப் போட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். ‘தம்பி போலீஸ் கேசு ஏதும் குடுக்காதடா’ என்ற குரல் முருகனின் முதுகுப் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்தது.

நடராசனுக்கு நெசவு தவிர ஆசாரி வேலையும் அத்துப்படி. வேலாயுதபுரம் ஆறுமுக ஆசாரியிடம் இரண்டு வருடம் வேலை செய்திருந்த அனுபவம் இருந்தது.  இடது கால் இல்லாததால் தனக்காக ஒரு கட்டைக் காலை செய்து கொண்டார்.  இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு, அப்படியே கட்டையை ஊனி ஊனி நடப்பார். மணிராசு நடக்கப் பழகியதே நடராசனிடம் தான். அப்போது நடவண்டி வைத்துத்தான் நடக்கப் பழக்குவார்கள். நடராசன் தன் துண்டை வைத்து மணிராசை நடக்க பழக்கினார்.  துண்டை மணிராசின் மார்பில் கட்டி கம்புக்கூடு வழியே துண்டின் முனைகளை வலது கையில் பிடித்து ஒவ்வொரு எட்டாய் நடக்க வைத்தார். ராத்திரி தூங்கப் போகையில் மணிராசின் காலை அமுக்கிவிட்டு கதை சொல்லி தூங்க வைப்பார்.  கட்டையில் பிளசர், களிமண்ணில் குதிரை எல்லாம் செய்து விளையாடக் கொடுப்பார்.

‘ஐயா’ என்று அழுதபடிக்கே மணியரசு வந்தான்.  

‘என்னடா மவனே என்ன ஆச்சு.’  

‘அந்த வேலு மாமா பெய என்ன ஆட்டைக்கு சேத்திகிட்ட மாட்டுறான்.’

‘ஏன் சேத்துக்க மாட்டுறான்.’

‘பம்பரஞ் சுத்தும்போது கையெல்லாம் வேத்து ஈரமாயிருதுயா. அதனால பம்பரஞ் சரியாவே சுத்த முடியல. பம்பரங் கூட சுத்தத் தெரில உப்புக்கு சப்பாணினு சொல்றாங்கயா.’

’ஏன்டா சீவனத்த வாங்குற.  உங்கொப்பங் கையும் இப்படிதாங்.  சின்ன பெயதான நீ..போவப் போவ சரியா போய்ரும். நா அந்த சில்லுண்டி பெயலுகள்ட்ட உன்ன சேத்திக்க சொல்றேன்.’

மணிராசு அழுகையை நிப்பாட்டி ஓட ஆரம்பித்தான்.

முருகனுக்கு தறி ஓட்ற வேலை இருப்பதாலேயே மணிராசை கவனிக்க முடியாது. வரவு செலவு கணக்கு பாக்க போகனும், ஊட நூலு வாங்க போகனும் ஆயிரத்தெட்டு சோலி இருந்துச்சு. அதனாலேயே நடராசனிடமே மணிராசு அதிகம் வளர்ந்தான். நடராசனுக்கு சோசியம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுதி.  செல்விக்கும், மணிராசுக்கும் சோசியம் பாத்ததே இவர்தான்.  செல்விக்கு செவ்வா தோசம் அத சரியாக்கனும். அதுக்கு இந்த மந்திரத்த தெனமும் ஒருக்க சொல்லனும்னு சொன்னார்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல 
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே”

இந்த மந்திரத்தை செல்வியைவிட மணிராசுதான் நன்றாக மனப்பாடம் செய்திருந்தான். பெரும்பாலும் நடராசனின் சோசியம் பலித்துவிடும். இதை எப்படி கற்றார் என்று கேட்டால் சொல்லமாட்டார்.  

‘ஏய்..ஏய் குத்துனா கும்பம்.’

‘அதெல்லாம் முடியாது.’

‘டேய் ஆக்கர் வைடா அவஞ் செத்தக்கட்டைக்கு.’

குத்துன குத்தில் மணிராசின் பம்பரம் பிளந்து வாய்க்காலில் ஒரு பாதி வேப்பமரத்துக்கடியில் ஒரு பாதி சிதறி ஓடியது. ’கோஸ்’ என்ற கோரஸ் குரல்கள். ‘டேய் கணபதி ஏண்டா யெம் பம்பத்த உடச்ச.’

‘ஆட்டைனா உடயத்தாஞ் செய்யும் போவியா.’

கணபதியை அடிக்க ஓடி வந்த மணிராசு தரை மண் தேய சறுக்கி விழுந்தான். கூட்டாளிகளெல்லாம் சிரிக்க இருங்கடா எங்க அய்யாவ கூட்டி வாரேன் என்று கிளம்பினான்.

‘ஐயா பள்ளியூடத்திலயுஞ் சரி தெருவுலயுஞ்சரி என்ன அந்த கணபதி ஒரண்ட இழுத்துட்டே இருக்கான்யா என்னனு வந்து கேளு.’  

‘கணபதி யார்ர அவென் புதுக் கூட்டாளியா.’

‘கூட்டாளிலாம் இல்ல நம்ம தெருவுக்கு ஒருமாசம் மின்னுக்க புதுசா குடி வந்துருக்காங்க. எங்கூடதா படிக்குறாங்.’

‘அவங்கப்பேன் யாரு.’

‘அதெல்லாம் தெரியாது. ஆனா அவன மத்த பசங்க ஓடிப்போன முத்துச்சாமி பையனு சொல்லி கேலிப் பண்ணுவாய்ங்க.’  

நடராசனின் முகம் சட்டென இறுக்கமானது.

‘என்னயா எதுமே சொல்ல மாட்ற.’  

‘விடுடா பாத்துக்கலாம்’.

‘அவன என்னனு கேக்க போறியா இல்லையா.’

‘விடுன்றேன்ல…’

அடுத்தநாள் நடராசன் ஊடநூலை பசைப்பிரிக்க தரையில் அடித்துக் கொண்டிருந்தார்.  ’நேத்து நாங் கூப்ட்டு வரலல’ சொத்தென்று முதுகில் குத்தி ஓடிய மணிராசின் கால்கள் நூலில் பின்னிக் கொண்டன.  குப்புறடிக்க விழுந்தான்.  வலது நெத்தி தெறித்து ரத்தம் கொட்டியது.  வள்ளிமயில் பதறிக்கொண்டு டீத்தூளை மணிராசின் நெற்றியில் தேய்த்துவிட்டாள்.  

‘ஏண்ணே இப்படி பன்ற அங்குட்டு போயி நூல அடிச்சாதா என்னவாம்.’  

‘அது இல்லப்பா முருகா’

‘விடுணே கட்டுப்போட போயிருக்குறவ வந்து என்ன பாடுபடுத்தப் போறாளோ.’ கூனிக்குறுகிப் போனார் நடராசன்.  

முருகனிடம் நடராசனைக் காய்ச்சி எடுத்தாள் வள்ளி. கேட்டுக்கொண்டே இருந்த நடராசன் கட்டைக் காலை ஊனி வந்து ‘ஒரு நிமிசம்மா’, மணிராசின் கட்டுப்போட்ட தலையில் கை வச்சு ‘இவன் நல்லா வருவான்.  இவன் கைலதான் எனக்கு சாவு. இது நிச்சயம்’, சொல்லிவிட்டு நகர்ந்தார்.  வீடு அமைதியானது.  கிட்டத்தட்ட மயான அமைதி.  

‘ஏற வுடு ஏற வுடு….’ மணிராசு கபாடி என்று கத்திக்கொண்டே யாரைத் தொடலாம் என்ற யோசனையில் இருந்தான். ‘ஏற வுடுங்கடா அவன’ கணபதி கத்த மணிராசின் கண்கள் கணபதியை பார்த்தவாறு இருந்தது. ‘டேய் இவன டேசடிச்சு அனுப்புங்கடா.’ வெடுக்குனு மணிராசின் வலதுகாலை ஒருவன் பிடித்திழுத்தான். மணிராசிற்கு ஈட்டி போட்டு லாபியை தாண்டி வெளியே எறிந்தான் கணபதி. கடுப்பேறிப்போன மணிராசு ‘போட ஓடிப்போன முத்துச்சாமி மவனே’ என்று கத்திவிட்டான். சுத்தியிருந்த அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பித்தனர்.  கபடியின் அடுத்த ஆட்டம் வந்தது.  கணபதி பாடிய படி ஏறுகோட்டருகில் வர கணுக்காலை மணிராசு பிடித்திழுத்தான். படக்கென்று காலை உதறி விடுவிக்க மணிராசு கணபதியின் கையை பிடிக்க வழுக்கிக் கொண்டு போனது. மீதமிருந்தவர்கள் கணபதியின் மேல் பாய முற்பட்டனர். சுதாரித்த கணபதி சொத்தென மணிராசின் நெஞ்சில் ஐந்து விரல்களையும் பதித்து ஒரு புள்ளியோடு வெளியேறினான்.  

மணிராசிற்கு அந்த அடி ஐயாவின் அடியை நியாபகப்படுத்தியது. சின்னப் பையனாக இருக்கையில் முதுகில் அவர் திட்டென கொடுத்தபோது உரைத்த அதே உணர்வு. ‘என்னடா பொம்பள பிள்ளையாட்டம் கைய வச்சிருந்தா எப்படிடா காலு அம்புடும். நல்லா உரப்பான வேல செய்டா’ சக கூட்டாளிகள் சொல்ல காதில் வாங்காதவனாக கணபதி அடித்த அடியை மனதில் ஓட விட்டுருந்தான். இந்த சம்பவத்திற்கு பிறகு கணபதியிடம் பார்த்தே பழகினான்.

முத்துச்சாமி நடராசனின் காலை வெட்டின அடுத்தநாள் வேறு ஏரியாவுக்கு சென்றவள்தான் அவன் பொஞ்சாதி. ஒரு மாசம் முன்னம் தான் பழைய வீட்டிற்கே வந்தாள். தெருக்காரர்களோடு பழகினாலும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தாள். முக்கியமாக நடராசனின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தாள். வெளியே செல்ல வேண்டுமென்றாலும் கூட கொல்லைப்புறம் வழியேதான் செல்வாள். ஒரு அவசர வேலையாக தெரு வழியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட மணிராசின் வீட்டைக் கடக்கும்போது முக்காடு போட்டுக் கொண்டாள். கட்டைக்கால் சுவரில் சாய்ந்திருந்தது.  நடராசன் வீட்டுத் திருணையில் உட்கார்ந்திருந்தார்.  முத்துச்சாமியின் பொஞ்சாதியை அடையாளம் கண்டுவிட்டார். அவளும் இவரைப் பார்த்துவிட்டாள்.  அவளுக்கு மனசு கெடந்து துடித்தது. விருட்டென்று நகர்ந்துவிட்டாள்.  நடராசனுக்கு மூச்சு வாங்கியது. அவரால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.  மயங்கி விழுந்தார். ‘ப்ச்..கொஞ்சநாள்தா தாங்குவாப்ல. எதுக்கும் எல்லாத்துக்கும் தயாரா இருங்கம்’ எல்லா டாக்டரும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.

‘தாய் வயித்துக்காரக மண்ணள்ளி போடுங்கயா.’ முதலில் முருகன் மண்ணள்ளிப் போட்டார்.  அன்னைக்கி கெழவி சாகும்போது ‘உங்கண்ணனுக்கு யாரும் இல்லடா நீதாங் பாத்துகிடனும்’னு சொன்னது கண் முன் வந்து நின்றது.  அடுத்து மணிராசு மண்ணள்ளினான்.  கை நடுங்க ஆரம்பித்தது.  கண்கள் லேசாக கலங்கியது.  ‘தம்பி வெரசா போடுயா மண்ண.’ நடராசனின் கட்டைக்காலும் அவருடன் சேர்த்துப் புதைக்கப்பட்டது.

மூன்று நாள் காரியம் முடிந்தது.  முத்துச்சாமியின் வீட்டைத் தாண்டி மணிராசு போகையில் வாசப்படியில் அவனின் பெஞ்சாதி உட்கார்ந்திருந்தாள்.  எதையோ பறிகொடுத்தவள் போல இருந்தாள்.  ஒருவேளை முத்துச்சாமி இறந்திருப்பார் போல என எண்ணிக்கொண்டான். கணபதி வேற மூன்றுநாள் கண்ணில் தட்டுப்படவில்லை என்பதாலும் அவளின் பக்கத்து வீட்டுக்காரர்களும் இதையேதான் நினைத்துக்கொண்டனர்.  

‘வள்ளிமயிலே மணிராசோட கை மசுர செரச்சுவிடு. பெரியப்பனுக்குதாங் புள்ளையில்ல மணிராசு அவர சுத்தி சுத்தி வந்தாங். பன்னி விடுத்தா’ கலுசு தாத்தா சொல்ல மணிராசின் கை மயிர் மழிக்கப்பட்டது.

‘எம்மா மூனு நாளு லீவு போட்டேன் இன்னைக்காவது ஸ்கூலுக்கு வேமா போனும். சாப்பாட டிபன் பாக்ஸ்ல டக்குனு வைங்க.’  

‘ஏ ரெடி டா.’  

அரக்கப்பறக்க பள்ளிக்கூடம் வந்து வகுப்பறையில் உட்கார்ந்தான்.  பள்ளிக்கூடம் தொடங்கியது.  ’மே ஐ கமின் டீச்சர்.’  

‘ஏண்டா லேட்டு, மூனு நாளு ஆளவேக் காணும்.’

‘அப்பா தவறிட்டாரு டீச்சர். சரிப்பா உள்ள வா.’

முத்துச்சாமி மகன் கணபதி மொட்டைத் தலையுடன் உள்ளே நுழைந்தான். எல்லாரும் பாவ முகத்துடன் அவனைப் பார்த்தனர்.  மணிராசிற்கு முகத்தில் ஒரு அதிர்ச்சி.  கணபதியின் கண்களை உற்றுப்பார்த்தான். அந்தக் கண்கள் ஐயாவின் கண்களாய் தெரிந்தது. அவன் காதுகள் ஐயாவின் காதுகளாக மாறியிருந்தது. அவனின் கைகள் ஐயா உடையதேதான். இவன் கணபதி அல்ல ஐயாவே தான்.  மணிராசைப் பார்த்து ஒரு சிரிப்புடன் கணபதி முன் பெஞ்சில் அமர்ந்தான்.  மணிராசால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அன்று மதியம் வெக்கையை அடக்க பேய் மழை பெய்தது.

***

–  தமிழ்மணி, அருப்புக்கோட்டை

RELATED ARTICLES

4 COMMENTS

  1. கதை சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

  2. கதையின் சாரத்தில் அவ்வளவு விறுவிறுப்பு, மேலும் வட்டார மொழியின் பங்களிப்பு கதைக்கு கூடுதல் பலம், கதை என்னுடைய சிறுவயது சுடுகாட்டு பயத்தை மணிராசு வழியே கொணர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular