Monday, October 14, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்ஏவாளின் ஆதாம்

ஏவாளின் ஆதாம்

மயிலன் ஜி சின்னப்பன்

சிம்சன் சிக்னலில் வினாடிகள் ஒவ்வொன்றாக மின்திரையில் குறைந்துகொண்டிருந்த போது மீண்டும் தயக்கம் மேலெழுந்தது. மறுத்துவிடலாமா? வேறு வேலை இருக்கிறது – அவசரமாக க்ரோம்பேட் வரை செல்ல வேண்டும் – அப்படியேதாவது? சால்ஜாப்பெல்லாம் எதற்கு; நேரடியாக சொல்லிவிட்டால்தான் என்ன? இப்படியான சந்திப்பில் எனக்கு விருப்பமில்லை – எத்தனை மிடுக்காக இருக்கும்? – என் தன்மானத்தையும் கொஞ்சம் தட்டிக் கொடுக்கும். அவளிடம் இப்படியெல்லாம் பேசத்தான் எப்போதும் விரும்பியிருக்கிறேன்.

யோசித்துக்கொண்டுதான் இருந்தேனேயொழிய, எப்போது பச்சை விழுந்தது, எப்போது அடுத்த சிக்னலுக்கு வந்தேன் என்று தெரியவில்லை.

மனமொத்த பிரிவுதானே அது? வசைகளுக்குப் பின், விளக்கங்களுக்குப் பின், தேற்றலுக்குப் பின் கலைய முடியாத முரண்களின் மீது காலமெடுத்து நிகழ்ந்த புரிதல்தானே அது… அப்பிரிவுக்கும் அவளது திருமணத்திற்கும் இடையே இருந்த ஐந்தரை மாதங்களில் இருவரும் யாதொரு சமரசத்திற்கும் முயலவில்லையே… ‘அவளுக்கு விரைவில் மணம் முடிந்துவிட்டால் தேவலாம்’ என்றுதான் யோசித்திருக்கிறேன். மணநாளன்று அதிகாலை ‘அத்தனைக்கும் நன்றி’ என குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்; கூர்மையான பாணமெனினும் அது வலிக்கவில்லை. உனக்கையாக உணரச்செய்யும் அபூர்வமான காயமொன்றைப் போல இன்று காய்ந்து வடுவாகியும்விட்டது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு இப்போதெதற்கு அதைக் கீறிப் பார்க்கிறாள்?

வண்டியைப் பார்க்கிங்கில் விடும்போதே தூரத்தில் அவளைப் பார்த்துவிட்டேன். தொலைவிலிருந்து என்னை நோக்கி கையசைத்தபடி வந்துகொண்டிருந்தாள். நடையில் வழக்கமான துள்ளலில்லை. ஒன்றரை ஆண்டுகள் அயல்தேசத்தில் இருந்ததற்கான அடையாளம் எதுவுமில்லை; முன்பு நான் வாங்கிக்கொடுத்திருந்த வெள்ளை நிற குர்த்தியைத் தேடியெடுத்து அணிந்துகொண்டு வந்திருக்கிறாள்; என்ன முயல்கிறாள்?

அருகில் வரவர அதுவரையிலான என் இயல்புத்தன்மையை இழந்து கொண்டிருந்தேன். அன்றைய பொழுது நெடுக்க என்னால் நாடகத்தனமாக மட்டுமே நடந்துகொள்ள முடியும் என்று தோன்றியது.

“ஹை” உற்சாகமின்றி கையை நீட்டினாள். குற்றவுணர்ச்சியை வலிந்து பாவிப்பதாகப் பட்டது. அவளது உள்ளங்கை சில்லென்றிருந்தது. என் கையின் சொரசொரப்பை எனக்கே உணர்த்தும் தொடுகை. நடக்க ஆரம்பித்தோம்.

“எப்ப வந்த இண்டியாக்கு?”

“மூனு நாளாச்சு…”

“என்ன… திடீர்ன்னு…” நான் எதையும் குறிப்பிட்டு கேட்கவில்லை. நடந்து கொண்டிருந்தவள் என் முகத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

“ஏன்… சும்மாதான்…”

சகஜமாகக் காட்டிக்கொள்ள அவளைப் பார்த்தேதான் பேசினேன். கொஞ்சம் பூசினாற்போல ஆகியிருந்தாள்; குர்த்தி இறுக்கமாகியிருப்பதாகப் பட்டது; உட்கச்சின் தடம் அழுத்தமான இரு பிறைகளாகத் தெரிந்தது. கேசத்தைச் சுருளாக்க முயன்று சரியாக பராமரிக்காமல் விட்டிருப்பாள் போலும்; தலையையொட்டி அலைகளாகவும் எஞ்சியவை சிலிர்த்துக்கொண்டும் நின்றன. தொங்கல் இல்லாத காதணி. அடர்த்தியான இமைச்சாந்து. இதழ்களின் ஈரப்பதத்தை மட்டும் உயர்த்திக்காட்டும் மெல்லிய சாயம். இப்படியேதான் ஒன்றரை ஆண்டுகளும் இருந்தாளா? அல்லது இவை இந்நாளுக்காக நினைவிலிருந்து வலிந்து மீட்டிருக்கும் ஒப்பனையா?

“அப்டியே இருக்க…” சொல்லிவிட்டேன்.

“நீயுந்தான்…” மிதமாகப் புன்னகைத்தாள். மிகச் சன்னமாக மறுத்து தலையசைத்தேன். “முன்னவிட இப்ப யங்கா தெரியுற…” முந்தைய கருத்தைத் திருத்துவதைப் போல சொன்னாள். சிரித்துக் கொண்டேன்.

ஹிந்தி திரைப்படமொன்றிற்கு டிக்கெட் வாங்கியிருந்தாள். அவளுக்கு மொழி தெரியும். முன்பும் இப்படித்தான் போய் அமருவது வழக்கம். பரிசோதகனைக் கடந்து இருக்கையைத் தேடிப்பிடித்து உட்கார்ந்த போது, அச்சூழலின் அமைதி உறுத்தலாக இருந்தது. சீக்கிரம் கூட்டம் கூடிவிடவேண்டும் என்றிருந்தது.

“எத்தன நாள் இருப்ப… லீவா எதுவும்?” சாதாரணச் சந்திப்பைத் தாண்டிய எதையும் எதிர்நோக்கவில்லையெனினும் அவள் தரப்பு பொருளை அறியும் குறுகுறுப்பு.

“ஏன்… என்ன வெரட்டிவிடணுமா சீக்கிரம்?”

“ச்ச ச்ச…” அவளால் சகஜமாக பேசமுடிவதே என்னை நிலைகொள்ள விடாமல் செய்தது.

“ஊருக்கு போகலயா? வந்துட்டு ஏன் மூனு நாளா மெட்ராஸ்லயே இருக்க?”

பதிலெதுவும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள். அவளுக்கு உவப்பில்லாத எதையேனும் பேசினால் முன்னரும் இப்படித்தான் இருந்திருக்கிறாள். அழுத்தமான கடந்தகாலத் தருணங்கள் கலவையாகவும் தெளிவில்லாமலும் நினைவில் குறுக்கிட்டன. முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

அவளது திருமண வாழ்க்கையைப் பற்றி நானே விசாரிக்கவேண்டுமென காத்திருக்கிறாளா? அப்படியான பேச்சுக்குள் நுழைவதுதான் அந்தக் கணத்தில் என் கண்ணியத்தையும் உயர்த்திப் பிடிக்கும் – துளியும் பிடிக்காத அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

“ஹஸ்பண்ட் எப்டி இருக்காரு… வந்திருக்காரா?”

முகத்தை கால்வட்டத்திற்கு திருப்பி கண்களை மட்டும் முழுமையாக எனை நோக்கி உருட்டி, மேலுதட்டால் மட்டும் சிரித்தாள். அங்கிருந்த ஊமையொளியில் பரிகசிப்புடன் பார்க்கும் கண்கள் தனித்து மின்னின. இந்தக் கேள்விக்கு அவள் கொடுக்கும் இடைவெளியின் கனத்தை நான் எப்படி உள்வாங்குகிறேன் என மிக அந்தரங்கமாக அவள் ரசிப்பதைப் போலிருந்தது.

“இல்ல… நா மட்டுந்தான் வந்திருக்கேன்” சொல்லிவிட்டு இமைக்காமல் அப்படியே இருந்தாள். மேற்கொண்டு அந்தக் கேள்வியை நீட்டிக்க வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டேன். பத்து வினாடிகளாவது இருக்கும்; முழுமையாக என்னை அளந்து முடிந்துவிட்டதைப் போல சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

கல்லூரி வயதையொத்த சிலர் எங்களுக்கு இருமருங்கிலும் அமர்ந்ததும் சற்று ஆசுவாசமாக இருந்தது. குறைந்தபட்சம் அவளுடன் பேசமாமலிருக்கவேனும் அது சற்று ஏதுசெய்யுமெனப் பட்டது. திரையில் ஒளி வந்ததும், புகைவிளக்குகள் அணைக்கப்பட்டன. இடைவேளை வரை நான் என்னென்னவோ யோசித்துக்கொண்டே இருக்கப்போகிறேன்; வெளிப்படையாக அவளும் எதையும் பேசுவதாகத் தெரியவில்லை; எதற்காக இந்த வதை?

திரைப்படம் தன்போக்கில் எங்கேயோ நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் அந்த இடத்திலிருந்தே பூரணமாக அந்நியப்பட்டிருந்தேன். அதுவரையில் இருவராலும் தீண்டாமல் விடப்பட்ட இடையிலிருக்கும் கையிருக்கையின் மீது அவள் சற்று சாய்ந்து அமருவதை உணர்ந்தபோதுதான் நிலைக்கு வந்தேன். வாசனைப் பூச்சின் கலப்படமில்லாத வியர்வை நெடியில் தகியாய் தகிக்கும் நினைவுகள். எதிர்பாராத கணமொன்றில் மெல்ல என் புஜத்தைப் பற்றிக்கொண்டு கன்னத்தை என் தோள்மீது வைத்துக்கொண்டாள். ஒரு வினாடி உடல் முழுமையாக உதறி அடங்கியது. அசெளகரியத்தின் சலனம் அவளுக்கும் புரிந்துவிட்டதோ என்னவோ, பிடியைக் கொஞ்சமாக தளர்த்தினாள். மிக அந்தரங்கமான கூசல் அது. கையை விலக்கிவிட வேண்டும் என்று மட்டும் தோன்றவேயில்லை. அழுத்தமற்றப் பிடி அளித்த பேராறுதல் அனிச்சையாக இசையச் செய்தது. அதிர்வு தணிந்த பொழுதில் அவளது உச்சந்தலையில் என் கன்னத்தை ஒற்றியெடுத்தேன். பிடியை மீண்டும் இறுக்கிக் கொண்டாள்.

இடைவேளையிலும் ஒரு வார்த்தை பேசவில்லை; சாய்ந்திருந்தவள் எழவே இல்லை. உறங்கியிருக்கவுமில்லை. எத்தனை எளிதாக என்னை மீண்டும் கனிய வைக்கிறாள்? ஒன்றரை ஆண்டுகள் எத்தனை தூரம் அவளிடமிருந்து விலகியிருந்தேன்? இணையத்திலோ, நண்பர்கள் வட்டத்திலோ எப்படியுமே அவளைப் பற்றி எதுவுமே என்னை அண்டவிட்டதில்லை. வலிந்த கட்டுப்பாடு என்றில்லை. பழக்கப்படுத்திக் கொண்ட விலகல். இன்று இப்படி அவளைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருப்பதும் எனக்கு சாத்தியம்தானா?

“ஆர் யூ ஓகே… என்னாச்சு? ஏன் திடீர்னு?” கழுத்தை நிமிர்த்தாமல் கேட்டேன்.

“திடீர்னுனா? புரியல…”

“வந்து என்னை பாக்கணும்ன்னு…”

“உனக்கு எதுவும் இதுல கஷ்டமா இருக்கா?”

இப்படி மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமென்று உத்தேசித்துவிட்டாள் போலிருந்தது. நான் தெரிந்துகொள்ள நினைப்பது அவளுக்கு புரியாமலில்லை. ஆனால் என் தரப்பிலிருந்து அதுகுறித்து எந்த விசாரணையையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறாள்.

கழுத்தில் தாலி இருந்ததா? இருந்திருந்தால் நிச்சயம் அது என்னை முதல் கணத்திலேயே உலுக்கியிருக்கும். மணமுறிவு எதுவும் ஆகிவிட்டதா? இருட்டில் பார்க்கவும் முடியவில்லை.

“கெளம்பலாமா?” புதிய புழுக்கம் பொறுக்க முடியாமல் கேட்டேன்

“படம் முடிஞ்சே போகலாமே… இன்னும் ஒன் ஆர் தானே…” இறைஞ்சலேதான் அது.

இருக்கையில் சாய்ந்து கொண்டேன். திரையரங்கிலிருந்து வெளியே சென்றதும் இது முற்றுப்பெறப் போகிறதா அல்லது இதுவொரு புதிய துவக்கத்திற்கான ஆரம்பப்புள்ளியா..? அவளுடனான என் நீண்ட எதிர்காலத்தைக் கணக்கிட்டுப் பார்த்தேன். எங்கேயோ விட்டு மறந்துபோன கதையின் தொடர்பற்ற தொடர்ச்சி. ஆத்மார்த்தமான ஒன்றாகத்தான் தெரிந்தது. மறுப்பதற்கு யாதொரு கசப்பும் என்னுடைய தரப்பில் எஞ்சியிருக்கவில்லை. கடந்த காலத்து முரண்கள் எதையும் கருத்திலெடுக்க மனம் வரவில்லை.

கன்னத்தைத் தேய்த்துத் திருப்பி இதழ்களை என் தோளில் அவள் பதித்திருப்பதை உணர்ந்தேன். அசையாமல் இருந்தாள். அவளுக்கு என்னால் மறுப்பு சொல்லிவிட முடியாது என்பதை அத்தனை துல்லியமாக கணித்திருக்கிறாளா? அத்தனை எளிதில் யூகிக்கக்கூடியவனாகவா இருக்கிறேன்?

கூட்டம் கலையும்வரை எப்போதும்போல இருக்கையிலேயே இருந்துவிட்டு இறுதியாக எழுந்தோம்.

“லன்ச்க்கு கூட்டிட்டு போறியா?” கையிலிருந்த பையைத் துழாவிக்கொண்டே கேட்டாள். அவள் என்னிடம் உரிமை எடுத்துக்கொள்வது ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் சலிப்பாகவும் இருந்தது. நீளும் அந்தச் சந்திப்பின் சுகந்தம் ஒருபக்கம் என்றால், மறுப்பு சொல்ல வேண்டும் என்ற மனக்கேவலுடன் மறுபக்கம் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தேன்.

வெளிச்சத்திற்கு வந்ததும், கழுத்தில் இருந்த மிக மெல்லிய, ஆனால் ஆடை விளிம்பைத் தாண்டி உள்ளே செல்லும் நீண்ட சங்கிலியைப் பார்த்தேன். நிகழ்காலத்தின் திணிப்பு முகத்தில் அறைந்தது. நிலைதவறுவதை மறைப்பதற்கு நான் சிரமப்படுவது அப்பட்டமாகத் தெரிந்திருக்க வேண்டும்.

“ஆட்டோல போவோமா? நா வந்து அப்றம் பைக்க எடுத்துக்குறேன்…”

“இல்ல ஏன்… பைக்லயே போவோம்…” என் தயக்கத்தைப் பொருட்படுத்தி அது அவசியமில்லை என குறிப்பிடும் அழுத்தம் அந்தப் பதிலில் இருந்தது.

கைப்பாவை ஆகிவிட்டதைப்போல ஏனோ ஒரு தன்னுணர்வு. சுயத்தை நொந்துகொள்வது எப்போதும் எனக்கு சுலபமாகத்தான் இருந்திருக்கிறது. அப்போதே விடைபெற்றுக் கொள்ளலாமென்று பட்டது. அர்த்தமற்ற கனத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டாமென்ற தெளிவுதான்.

“நான் கெளம்பவா? ஏதோ எனக்கு கம்ஃபர்ட்டபிளா இல்ல… மோரோவர் கொஞ்சம் வேலையும் இருக்கு…” தயங்காமல் சொல்லிவிட்டேன்.

கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள். கண்கள் குறிப்பற்று என் மாரில் பதிந்திருந்தன. கீழுதட்டை மடக்கியபடி எதுவும் பதில் சொல்லாமல் நின்றிருந்தாள்.

“என்ன யோசிக்கிற?” என்னால் அவள் அப்படி நிற்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

“நத்திங்… நீ கெளம்பு… நானும் கெளம்புறேன்…” கன்னங்களை இழுத்து புன்னகைத்தாள்.

“எப்டி வந்த?”

“ஆட்டோல… ஏன்?”

“ஹ்ம்… கேட்டேன்…” அவளது முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கத்தான் போராடி தோற்றுக் கொண்டிருந்தேன்.

“எனக்கு தெரியுது நா உன்ன டிஸ்டர்ப் பண்றேன்னு… தேவயில்லாம… பட்…” இதழோரத் தசைகள் விம்மின. “சாரி” தலையைத் திருப்பிக் கொண்டாள், “ரொம்ப செல்ஃபிஷா பண்றேன்ல… உன்னப் பத்தி எதுமே யோசிக்காம… எப்பவுமே அப்டிதான் இருந்திருக்கேன் போல…”

“ஹே… ப்ளீஸ்… அப்படில்லாம் இல்ல” நான்தான் அநாவசியமாக சிலுப்பிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. எதார்த்தத்தை ஏற்காமல் எதையோ நிரூபிக்கத் துடிக்கும் அசட்டுத்தனத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறேன் – இது புரிந்தும் வெளிப்படையாக அவளைத் தேற்றுவதை ஏதோ தடுத்தது. ரணமளிக்கும் நுன்னுணர்வுகளை ருசிக்கத் துடிக்கும் பசி.

“ஐயம் ஜஸ்ட் வர்ஸனிங் யுஅர் டே…” என் மறுப்பை அவள் கண்டுகொள்ளவில்லை. “ஸ்டில்… லன்ச்க்கு மட்டும் போலாமா… ப்ளீஸ்… ஆட்டோலயே போலாம்…” அவ்வளவுதான்; ஒட்டுமொத்தமாக என்னைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டாள். என்னிடம் அவளுக்கு மட்டுமே சாத்தியமானதை அவள் செய்துமுடித்து விட்டாள்.

முகத்தில் சுற்றிக்கொள்ள துணி எதுவும் வைத்திருக்கவில்லை. எப்போதையும் மிதமான வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். முதுகில் சாய்ந்துகொண்டு வந்தவள் காதருகில் வந்து கேட்டாள், “உன்கிட்ட ஒரு லன்ச்க்கு போறதுக்கு நான் அழுதெல்லாம் கேக்கணுமா?” தலைக்கவசத்தோடு பெரிதாக இடவலமாக தலையசைத்தேன். அணைப்பின் நெருக்கத்தைக் கூட்டினாள். சுற்றத்தின் பிரக்ஞையின்றி நடந்துகொள்பவளில்லை. அவளது உறுதியற்ற நிலை என்னை மேலும் மேலும் அசெளகரியப்படுத்தியது. சேரவேண்டிய இடம் சீக்கிரம் வந்து தொலைந்துவிட்டால் தேவலாம் என்றிருந்தது.

இடத்தை அடைந்து வண்டியை நிறுத்த முனைந்தபோது, “ரிட்டன் ஆட்டோல ஏத்திவிட்ரு… பரவால்ல…” என்றாள்.

“ஏன்… நானே டிராப் பண்றேன்…”

“இல்ல பரவால்ல… அப்ப ஆட்டோல போயிக்கிறேன்…” வண்டியை நிறுத்தியும் இறங்காமல் சொன்னாள் “இப்போ இன்னும் கொஞ்சதூரம் பைக்ல போயிட்டு வரலாமா?”

இத்தனை குழந்தைத்தனமாகவெல்லாம் முன்பு எதையுமே அவள் விண்ணப்பித்ததில்லை. எப்போதும் என்னைவிடவும் மனமுதிர்ச்சியுடையவளாகத்தான் நடந்து கொண்டிருக்கிறாள். மிக பலவீனமாக ஏன் இப்படி காட்டிக்கொள்கிறாள் என்றிருந்தது.

“எறங்கி வா… சாப்ட போலாம்… ரிட்டன் நா வர்றேன்”

எத்தனையோ முறை முன்பு இருவருமாக வந்துபோன உணவகம்தான். இடைப்பட்ட நாளில் நான் அங்கு செல்லவேயில்லை. இப்போது அங்குதான் போகவேண்டுமென ஏன் தோன்றியதென்பதும் புரியவில்லை.

வாஷ்ரூமில் அத்துமீறிய நினைவுகள்; கை அலம்பிக் கொண்டிருந்தவளைக் கண்ணாடியில் பார்த்தேன். குறும்பாக ‘என்ன’ என்பதைப் போல புருவத்தை உயர்த்தினாள். “ஒன்னும் இல்ல… வா” புன்னகைத்தேன்.

மறைவாக இருக்கும் கடைசி மேசையில் அமர்ந்தோம்.

“என்ன என்னையெல்லாம் மீட் பண்ணனும்ன்னு தோனிருக்கு…” உணவுப் பட்டியலை மேய்ந்து கொண்டே கேட்டேன்.

“உன்ன மன்னிக்கனும்ன்னு தோனுச்சு அதான்…”

நிமிர்ந்து பார்த்தேன். சிரிப்புடன் கலந்த அதே பழைய குறுகுறுக்கும் கண்கள்.

“ஆமா… பாவிதான நான்…”

“அச்சோ… ச்சான்ஸ் கெடச்சா ஒடனே பெர்ஃபார்ம் பண்ண ஆரம்பிப்பியே… ப்ளீஸ் கீப் திங்ஸ் லைட்டர்…”

“ரொம்ப ஹெவியா தெரியறேனா?”

“ஆமா…”

“இல்ல… அப்படிதான் ஆயிட்டேன் போல…”

சட்டென அவளது முகம் சுருங்குவது தெரிந்தது. எனக்கு தேவைப்படுவதும் அதுவாகத்தான் இருக்கும். வாட்டம் மாறாமல் அப்படியே இருந்தது. முடிவில், “சாரி…” கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தாள். அடர்த்தியாகக் குவிந்திருக்கும் மெளனத்தின் இதம் – அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். முழுமையாக மூன்று நிமிடங்கள்.

“ச்சில்… அதெல்லாம் விடு… ஊர்ல எல்லாம் எப்டி இருக்காங்க…” என்னை நானே தேற்றிக்கொள்வதைப் போல காட்டிக்கொள்ளும் போது அவளது கண்கள் மேலும் சிறுத்தது. அவள் எதுவுமே பேசவில்லை. ஓர் உடைவைத் தவிர்க்கிறாளாயிருக்கும்.

“நானும் பாவ மன்னிப்பு கொடுத்துட்டேன்… கண்ண தெற..”

மெல்லச் சிரித்துவிட்டாலும் கண்களில் திரண்டிருந்த நீர் தன்போக்கில் இறங்க ஆரம்பித்தது. கைக்குட்டையை நீட்டினேன். துடைத்துவிட்டு முகர்ந்துப் பார்த்தாள்.

“சிகரெட் குடிக்க ஆரம்பிச்சிருக்கியா..?”

“ச்ச… இல்ல… தேவதாஸ் சீன்லாம் இல்ல…”

“பொய்யி… கெர்ச்சீஃப்ல நாத்தம் அடிக்குது…”

“ஜீன்ஸ் ரூம்மேட்டோடது… பாக்கெட்ல நேத்து எதுவும் வெச்சிருந்திருப்பான்…”

“ச்சய்… சரியான குப்பமூட்ட… திருந்தவேமாட்ட நீ…” தலையில் கை வைத்துக்கொண்டு சிரித்தவள், மெல்ல அருகில் வந்து, “ஜட்டியாவது உன்னோடதா?” கேட்டுவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள். அவளால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இப்படியெல்லாம் முன்பு அவளால் மிகச் சாதாரணமாக கேட்டுவிட முடியும். ஏன் இத்தனை செயற்கையாக நடந்துகொள்கிறாள் என்றிருந்தது.

இறைச்சித்து ண்டுகளை முழுமையாக உண்ணத் தெரியாது அவளுக்கு. மேலாக சிவந்து மொறுமொறுப்பாக இருக்கும் பகுதியை மட்டும் கடித்துவிட்டு எஞ்சியதை என்னிடம் கொடுத்துவிடுவாள். அத்தனை துண்டுகளுக்கும் அதுதான் விதி.

ஆர்டரின் போது, “லாலிப்பாப் ஒன்னு…” என்ற இடத்தில் நிறுத்தி, அவளைப் பார்த்தேன். அவள் அதை கவனித்ததாகத் தெரியவில்லை.

“நீ ஊருக்கு போனியா?” ஆர்டர் எடுத்துக்கொண்டவர் நகர்ந்ததும் கேட்டாள்.

“நாலு மாசத்துக்கு முந்தி போனேன்…”

“அம்மா நல்லாருக்காங்களா? என்ன பத்தி எதும் விசாரிப்பாங்களா?”

“ஹ்ம்ம்… பேசுனியா? எப்டி இருக்கா? கொழந்த இருக்கா? இப்டி எதாச்சும் கேப்பாங்க…”

தலையாட்டிக் கொண்டாள். இந்த இடத்தில் என் அடுத்த கேள்வியைக் கேட்டுவிடுவதற்கான வெளி கிடைத்துவிட்டதாகப் பட்டது.

“கொழந்த இன்னும்… ப்ளான் பண்ணலயா..?”

அன்று காலையிலிருந்து தொக்கி நிற்கும் என் அத்தனை கேள்விகளுக்குமான முழுமையான விடை அவள் சொல்லப்போகும் பதிலில் இருக்கிறது என்பதால் அவளை கடக்கவிடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தேன்.

“யா… பண்ணனும்”

எனக்கு போதவில்லை.

“ஏன் போஸ்ட்போன் பண்ற… ஆல்ரெடி 29 ஆயிருச்சுல்ல…”

“அதனால..? கெழவி ஆயிட்டேனா?”

“ஹே ப்ளீஸ்… அப்டியா சொல்றேன்… அப்பறம் செகண்ட் ச்சைல்டுக்கு மூனு நாலு வருஷம் ஸ்பேஸ் வேணும்.., அப்போ 35 ஆயிடும்..,”

‘உனக்கு இப்போது என்ன தெரியவேண்டும்?’ என்று கேட்பதைப் போல மூச்சை அழுத்தமாக வெளியேற்றி சிரித்தாள். மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் முன்பு நாங்கள் பேசிக்கொண்டது சட்டென எனக்கு நினைவில் வந்துபோனது. அந்நாட்களில் இருவருக்குமே அது விருப்பமாக இருந்தது. கண்களைத் தாழ்த்திக் கொண்டேன்.

“மூனாவது கொழந்தையப்ப நாப்பது வயசு ஆயிடும்ன்னு கவலப்படுறியா..?” சொல்லிவிட்டு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். எனக்கு தூக்கிவாரிப் போட அடிவயிற்றில் சில்லென்றிருந்தது. காலையிலிருந்து நடப்பவையனைத்தும் என் கட்டுப்பாட்டை மீறியவையாகத் தோன்றின. அவள் சொல்லியதிலிருக்கும் புதிர் மறுபக்கம் குறுகுறுப்பாக இருந்தது. மிக அபத்தமாக உடனிணைந்து சிரிக்க முயன்றேன். நானும் அவளும் மூன்று குழந்தைகளும் சேர்ந்திருக்கும் சுவரோவியத்தை வீட்டின் முகப்பில் வைத்து யோசித்தேன்.

“மூனுதானா இப்பவும்?” பதிலின் முழுமை எனக்கு உடனடியாக அவசியப்பட்டது.

“நீ வேற.., வீ ஆர் ட்ரையிங் தான்.., பாப்போம்… ஹோப்ஃபுலி சூனர்…” அலைப்பேசி திரையைப் பார்த்துக்கொண்டே மிகச் சாதாரணமாக இதைச் சொன்னாள்.

சட்டென என் எண்ணச் சங்கிலி கொத்தாக அறுந்து சிதறியதைப் போலிருந்தது. காட்சிகள் அனைத்துமே கசந்தன. சுயத்தின் மீது அருவருப்பு மூண்டது. கழுத்துப்பட்டியை ஒட்டிய வியர்வையைத் துடைத்துக் கொண்டேன். மேற்கொண்டு என்னால் எதுவுமே பேசமுடியாது என்ற புள்ளிக்கு வந்துவிட்டேன். மிக மோசமாக வீழ்த்தப்பட்டிருப்பதை உடற்சூடு சொல்லியது. பதற்றமானவனாகக் காட்டிக்கொள்ளாமல் ஒரு மிடறு தண்ணீரை எடுத்துக் கொண்டேன்.

அலைபேசியை வைத்துவிட்டு மேசையில் கையூன்றி தீர்க்கமாக சொன்னாள், “லீவ் மை மரைட்டல் லைஃப்… இருக்குற கொஞ்ச நேரம் வேற எதாச்சும் பேசலாம்…”

எதற்காக இந்த ‘கொஞ்ச நேரம்’? ‘என்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டாம்’ என்று அவள் சொல்லியதில் எந்தச் சோகமும் இருக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு கவனித்திருந்தேன். நிறைவான ஒரு வாழ்வில் தன்னைப் பொருத்திக் கொண்டிருப்பவள் எனக்கு ‘கொஞ்ச நேர’ பிச்சை அளிக்க வந்திருக்கிறாளா? அல்லது தன்னிடமிருக்கும் மிச்சக் காயங்களுக்கு களிம்பு பூசிக்கொண்டிருக்கிறாளா? இறுதியில் என்னிடம் ஒரு ‘சாரி’ சொல்லிவிட்டு கைக்குலுக்கிவிட்டு கிளம்பப் போகிறாள். எஞ்சியிருக்கும் குற்றவுணர்ச்சிகளைக் கழுவிக்கொள்ள என்னுடைய ‘கொஞ்ச நேரம்’ மட்டும் அவளுக்கு போதுமாக இருக்கிறது.

கேட்டிருந்தவை மேசையில் வைக்கப்பட்டிருந்தன. இயல்பை இழக்காதவனாகத் தெரியவேண்டும் என்பது மட்டும்தான் அந்தக் கணத்தில் தோன்றியது. அத்தனை நேரமும் வலியை நினைவுக்கூர்ந்து உடல்மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்ததை யோசிக்க வெறுப்பாக இருந்தது. எப்போதோ விடைபெற்றவள் விடைபெற்றவளாகவேத்தான் வந்திருக்கிறாள். நானும் எப்போதோ வேறொரு வாழ்க்கைக்கு முழுமையாக என்னை ஒப்புக்கொடுத்து விட்டேன். காலை அவளுடைய அழைப்பு வந்ததிலிருந்து இல்லாத சலனங்களை வருவித்துக்கொண்டு என்னன்னமோ செய்துகொண்டிருக்கிறேன்.

பழைய சினேகிதர்கள், விபத்தில் இறந்துவிட்ட நண்பனின் மனைவி, தன் அண்ணனுடைய குழந்தையின் அதீத புத்திஜீவித்தனம் என பேச அவளுக்கு எத்தனையோ இருந்தன. நல்ல பசியில் இருப்பவளைப் போல வேகவேகமாக சாப்பிட்டாள். அவள் கடித்துவைத்த இறைச்சித்துண்டுகளை கசடுகளுக்கான தட்டில் பார்க்கும்போது என்மீதே எனக்கு பரிதாபமாக இருந்தது.

வெளியே வரும்போதும் கையைப் பற்றிக்கொண்டுதான் வந்தாள். என் கையை நான் மிகுந்த சிரமத்துடன் தூக்கிக்கொண்டு வருவதைப் போலிருந்தது.

“எங்க டிராப் பண்ணனும்..?”

“கொஞ்ச நேரம் ராண்டமா எங்கயாச்சும் ஓட்டு… அப்றமா சொல்றேன்… டிராப் பண்ணலாம்…” அதே கடினமான புன்னகையை எங்கிருந்தோ மீண்டும் கொண்டு வந்திருந்தாள்.

“இல்ல… க்ரோம்பேட்ல ஒரு ஃப்ரெண்ட பாக்க போகணும்… அப்டியே உன்ன டிராப் பண்ணிட்டு கெளம்புறேன்…”

“கொஞ்ச நேரம்தான… ப்ளீஸ்…” ப்ளீஸ் என்பது அதிகாரம். நிச்சயம் மறுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

“இல்ல லேட் ஆயிடும் ரொம்ப…”

“பையனதான பாக்க போற… இல்ல யாரும் பொண்ணா?” கேலி செய்வதைப் போலத்தான் கேட்டாள் எனினும், ‘இவளுக்கு என்ன உரிமை இருக்கிறது; இதையெல்லாம் கேட்பதற்கு?’ – கோபம் அடைத்தது எனக்கு.

“பையன்தான்… எங்க டிராப் பண்ணட்டும்…” சொல்லிய உடனேயே இத்தனை கடுமையாக பேசியிருக்க வேண்டாம் என்றிருந்தது. பொய்யாகக் கூட ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்ல வராததே எரிச்சலாக இருந்தது. இன்னும் அவளுக்கு அஞ்சுபவனாக இருப்பதா அது? அல்லது அதற்குள் வேறொருத்தியைத் தேடிப்பிடித்துவிட்டதாக அவள் நினைத்துவிடுவதை இழுக்காக நினைக்கிறேனா? எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரத்தில் அவளிடமிருந்து விடைபெற வேண்டும்.

“இல்ல… நீ கெளம்பு… நா பாத்துக்கிறேன்…”

“ஏன்… வா பரவால்ல… டிராப் பண்ணிட்டே போறேன்…”

“பரவால்லன்னுலாம் வேணாம்… நீ போ…” சொல்லிவிட்டு சாலையில் ஆட்டோ வருகிறதா என்பதைப் போல பார்த்தாள்.

வண்டியை ஸ்டார்ட் செய்து அவளருகில் நிறுத்தி, “உட்காரு” என்றேன். பார்த்துக்கொண்டே நின்றிருந்தவள், முகத்தில் அத்தனை வெறுமையுடன் ஏறிக்கொண்டாள்.

பயணம் நெடுக்க பேச்சு எதுவுமில்லை. பிடிமானத்தைத் தாண்டி ஸ்பரிசத்தில் அர்த்தம் இருக்கவில்லை. அந்தச் சந்திப்பை அப்படி முடித்திருக்க வேண்டாம் என்றுதான் தோன்றியது. அவளொரு திருமணப் பந்தத்தில் இருக்கிறாள்; நான் இன்னும் அப்படியொன்றில் நுழையவில்லை. இதனால் மட்டும் அவளையொரு குற்றவாளியைப் போல நான் நடத்தியிருக்க வேண்டாம் என்றிருந்தது. ஒருவேளை எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்திருந்தால், இந்த வேறுபாடு இல்லாமல் இருந்திருந்தால், என் நாடக பாவனைகள் எதுவுமே அவசியப்பட்டிருக்காது. அவளை விடவும் இந்தச் சந்திப்பை நான் அதிகம் விரும்புவனாகக் கூட இருந்திருப்பேன்.

அவள் சொன்ன அடுக்குமாடி குடியிருப்பில் அவளை இறக்கிவிட்டேன்.

“யாரு வீடு இது?”

“மீரா ஞாபகம் இருக்கா?”

“யா… தொரப்பாக்கத்துல ஒன்ஸ் மீட் பண்ணோமே… நெனப்பிருக்கு… ட்டாலா…”

“அதெல்லாம் இருக்கும்…” இன்னும் அவள் மாறவே இல்லை என்பதை அந்தச் சுழிப்பு காட்டியது. நானும் சிரித்து விட்டேன்.

“ஊத்தாத… ஒரு கொழந்த இருக்கு அவளுக்கு…”

“ச்ச…”

“நீங்க கெளம்புங்க… ஒங்க ஃபிரண்ட பாக்க…” அது பொய் என்பது தனக்கு தெரியும் என்பதைக் காட்டும் நெளிவு. பதில் சொல்லாமல் அவள் கண்களிலிருந்த மந்தகாசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“மேல வரியா?” அப்படி நான் பார்த்துக் கொண்டிருப்பதை உடைப்பதற்காக கேட்டதைப் போலத்தான் இருந்தது.

“இல்ல வேணாம்… ஆடா இருக்கும்…”

“அவங்க யாரும் வீட்ல இல்ல… கீ எனக்காக வெச்சுட்டு போயிருக்கா… ஒங்க ஃபிரண்ட லேட்டா பாக்க போலாம்ன்னா… கம்… ஹாவ் சம் டைம்…”

வீடு சாம்பல் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு கலாப்பூர்வமாக வடிவமைக்கப்படிருந்தது. அங்குலம் அங்குலமாக சிற்ப நுணுக்கத்துடனான வேலைப்பாடு. அத்தனை சுத்தம் எனக்கு ஒட்டவேயில்லையெனினும், பொருளீட்டலின் அர்த்தப்பூர்வமான நோக்கமாக அப்படியொரு வீட்டினை எடுத்துக் கொள்ளலாம். புகைப்படத்திலிருந்த மீராவின் கணவனுடைய முன்நெற்றி வழுக்கையை அதனோடு சமன்செய்து கொண்டேன்.

“குடிக்க எதும் வேணுமா… ஜூஸ்… கோக்… தண்ணி…?”

“ஐஸ் வாட்டர்…”

உணவு மேசைக்கு பின்னாலிருந்த அறையிலிருந்து, “பியர்லாம் வெச்சிருக்காங்க… வேணுமா?” என்றாள்.

“சாப்ட்டதே ஃபுல்லா இருக்கு… தண்ணி மட்டும்” என நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு பியர் கேனை உடைத்து குடித்தபடி எனக்கு தண்ணீர் கொண்டுவந்து வைத்தாள்.

“அதான் தொப்பையா? எப்ப ஆரம்பிச்ச இதெல்லாம்…”

“ஆங்… லவ் ஃபெயிலியர்ல குடிக்க ஆரம்பிச்சுட்டேன்…” உதட்டைக் கோணலாக வைத்துக்கொண்டு சொன்னாள். “தொப்பையா தெரியுது..?” வயிறை எக்கிப் பார்த்துக்கொண்டாள். “இதான் செகண்ட் டைம்… ரொட்டீன்லாம் இல்ல… இன்னிக்கு ஏதோ பாத்ததும் தோனுச்சு… அதான்…”

“என்ன பாத்ததுமா?” இவ்வளவு கடந்தும் சுயக்கட்டுப்பாடின்றி அவளிடம் என் முக்கியத்துவத்தைக் கூச்சமேயில்லாமல் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பது உறைக்காமலில்லை. அவளுடைய இருப்பில் அபத்தக் குவியலாக ஆகிவிடுறேன்.

“உம்மூஞ்சி…”

பழக்கமேயில்லாமல் குடிக்கிறாள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஃபிரண்ட பாக்க போறானாம்… பொய் சொல்ல மட்டும் வரவே வராது தொரைக்கு எப்பவும்… பால்வாடி பையன் லீவ் லெட்டர் கதையாட்டம்…” சோஃபாவில் காலை நீட்டி படுத்துக்கொண்டாள். குர்த்தி சற்று மேலே ஏற, ஜெக்கிங்ஸின் பிடிப்பில் தொடைகளிரண்டும் அத்தனை சீராகத் தெரிந்தன. அவற்றின் திரட்சியில் பணிந்த என் கண்களைக் கவனிக்காமல் இருந்திருக்க மாட்டாள். உடனே முகத்தில் அறைந்தாற்போல சரிசெய்யாமல் மெல்ல நிமிர்ந்து எழுந்து உட்கார்ந்துவிட்டாள்.

“இன்னமும் ஏன் அதே கம்பெனில இருக்க? ஸ்விட்ச் ஆப்ஷன் எதுவும் இல்லையா என்ன?” நிச்சயம் நான் பார்த்ததை அவள் கவனித்திருக்கிறாள்.

“ஆப்ஷன்லாம் இருக்குதான்… இதுல ஆன்சைட் வர்ற மாதிரி இருக்கு… அதுக்குதான் பாத்துட்டு இருக்கேன்…” ஏதோ யோசனையில் ஒப்பேற்றுவதைப் போல சொன்னேன்.

“வாட்ட சர்ப்ரைஸ்… சார் சிங்கார சென்னைய விட்டு எங்கயும் போகமாட்டேன்னு பேசிட்டிருந்தாரு முன்னாடி…” – ஏன் இத்தனைப் போலியாக இந்தப் பேச்சை நீட்டிக்கிறாள்…

“முன்னாடி இருந்த மாதிரியா எல்லாம் இப்ப இருக்கு…”

உற்சாகமாகப் பேசிக்கொண்டு வந்தவளுக்கு சுருக்கென்றிருந்ததோ என்னவோ… தொடர்ந்து பேச வரவில்லை.

“என்னை எதாச்சும் சொல்லிக் குத்திட்டே இருக்கணுமா உனக்கு..?” இத்தனை நேரடியாகக் கேட்பாளென நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இலைமறைவாகப் பேசும் வலியின் இதத்தை அவள் பொத்தென போட்டு நொறுக்கிவிட்டதைப் போலிருந்தது. “ஆல்ரெடி சொன்னதுதான்… ப்ளீஸ் எதையும் ஹெவியா ஆக்கிக்க வேணாம். இந்த நாள பின்னாடி யோசிச்சு பாத்து சந்தோஷப்பட்டுக்க முடியணும்… ரெண்டு பேருக்கும்… அவ்வளோதான் எனக்கு…”

அவள் எதையோ விரும்பிக் கொள்ளட்டும்; என்னை வரச்சொல்லி எனக்கும் ஏன் ஏதோ வேலியைப் பின்னுகிறாள். ஒன்றிரண்டு முற்களையாவது தைத்தால்தான், பதிலுக்கு தைக்கப்பட்டால் தான் எனக்கான நிறைவு கிடைக்கும் என்றிருந்தேன். மிக மெல்லிய அந்த சாடிஸ எண்ணத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டாள். அத்தருணத்திற்கு சாத்தியமான சுவாரஸ்யம் ஒரே நொடியில் சூனியமாக்கப்பட்டு விட்டதாகத் தெரிந்தது.

எஞ்சியிருந்த பியரை என்னிடம் நீட்டினாள். குடித்துவிட்டு வைத்தேன்.

“இன்னோன்னு வேணுமா?”

“ஹ்ம்ம்… குடு…”

நான் குடிக்க ஆரம்பித்தபோது அறைக்குள் சென்று ஆடையை மாற்றிக்கொண்டு வந்தாள். முடியை அள்ளி முடிந்துகொண்டு முகத்தில் நீரோடு வந்து உட்கார்ந்தாள். துண்டை வைத்து அழுத்தமாக ஒற்றியெடுத்தபோது கன்னமேட்டின் சிவந்தப் பருப்புள்ளிகள் இன்னும் துலக்கமாயின. சாயம் கலைந்த பழுப்பான இதழ்கள். நீர் பட்டதால் மட்டும் தெரியும் மேலுதட்டு விளிம்பின் பூனை மயிர்கள். அந்த முகம் எனக்கு ரொம்பவே நெருக்கமாகி விட்டதைப்போல தெரிந்தது. அடர்நீல தொளதொளப்பான மேலாடையின் கழுத்துப்பகுதி மிக அகலமாக தோள்கள் வரை சென்று வளைந்து, நெஞ்செலும்பில் இருக்கும் மச்சம் வரை காட்டியது.

“அம்மா அலையன்ஸ் பாக்க ஆரம்பிச்சிருப்பாங்களே? ச்செல்ல புள்ளைக்கு?” சம்மணமிட்டுக் கொண்டு கேட்டாள்.

“ஏன்… நாங்க பாத்துக்க மாட்டோமா?”

“பார்ரா… நெஜமாவா?”

“ஏன் நீ வேற… ரெண்டுது பாத்தாங்க… ஜாதகம் அது இதுன்னு… செட்டாகல..” எங்கள் இருவரின் ஜாதகத்தையும் முன்னர் அவளே எடுத்துச் சென்று பொருத்தம் பார்த்துவிட்டு அத்தனை குதூகலத்துடன் பேசிய இரவு நினைவுக்கு வந்தது.

“அதெல்லாம் ஆகும் ஆகும்… சீக்கிரம் யாருக்காச்சும் அந்த அதிர்ஷ்டம் கெடைக்கும்…” கண்களில் அத்தனைக் காதலுடன் அதைச் சொன்னாள். அருகிலிருந்த சிறிய தலையணையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். அப்படி அமர்ந்தபோது, மார்ப்பிளவு மிக நேரடியாக கண்ணில் பட்டது. அவள் சரிசெய்து கொண்டு அமர முயலவில்லை. நான்தான் தடுமாற ஆரம்பித்தேன்.

“அதிர்ஷ்டம் ஒன்னுதான் கேடு…” சமாளிப்பதைப் போல ஏதோ சொன்னேன்.

“உனக்கு ஒன்ன பத்தி நெறைய ஈகோ… நெறைய ப்ரைடெல்லாம் உண்டு… எனக்கு தெரியும்… ச்சும்மா எனக்காக சொல்லாத…”

“நான் என்ன பத்தி எதேதோ நெனச்சிப்பேன்தான்… மத்தவங்களுக்கு அது அக்ஸ்ப்டபிளா இருக்கணும்ல…”

“ச்சீ… நீ பர்ஃபெக்ட்ன்னுல்லாம் நா சொல்லல… யா அஃப்கோர்ஸ் யூ ஹாவ் ஃப்ளாஸ்… பட் அதெல்லாம் கூட ரசிக்கற மாதிரிதான் இருக்கும்… மோஸ்ட்லி…”

“என்ன பெட்டரா ஃபீல் பண்ண வைக்கணும்ன்னுல்லாம் எதும் சொல்லாத… எனக்கே தெரியும்ல… எனக்கு ஆட்டிடியூட் ப்ராப்ளம் உண்டு… பாப்போம்…”

பெருமூச்சு விட்டுக்கொண்டு நிமிர்ந்தாள். “சாமி… ஓவர் கன்ஃபெஷன் எல்லாம் வேணாம்…” சொல்லியவள் நன்கு நிமிர்ந்து கழுத்தில் ஊதிக்கொண்டாள். தொண்டைக்குழியில் வியர்த்திருந்தது. “எனக்கு தெரியும்… யூ ஆர் நாட் த சேம் பெர்சன் ஆஃப்டர் த ப்ரேக்கப்… நீயே பாசிட்டிவா நெறைய மாறியிருப்ப…” சற்று பின்னே வளைந்து கையைப் பின்னுக்கு கொண்டு போய் சிரமப்பட்டு ஏதோ செய்தாள். உள்ளாடையைத் தளர்த்தும் செய்கை எனப் புரிவதில் சிரமமிருக்கவில்லை. அதை உறுதி செய்வதைப் போல கருஞ்சிவப்பு நிற பட்டி தோளோரத்தில் இளகியது கண்ணில் பட்டது. “அதான் சொல்றேன்… உனக்கு இப்போ ஒரு ரிலேஷன்ஷிப்ப ஹாண்டில் பண்றதுல ஒரு முதிர்ச்சி இருக்கும்… ஒரு பொண்ணுக்கு அதுதான் அதிர்ஷ்டம்…” தலையணையை மீண்டும் மடியில் வைத்துக் கொண்டாள். கழுத்து வரிகளில் ஈரம் பளபளத்தது. முன்பைவிட மேலாடையின் வளைவு மேலும் குறுகியது.

நிச்சயம் திண்டாட்டத்தில் இருந்தேன். அவளுக்கு அது புரியாமலா இருக்கும்? கையிலிருந்த பியரை பாதிக்கு மேல் குடிக்கவில்லை. அவளது ஒவ்வொரு அசைவிலும் என் சலனப்பெருக்குடன் நான் தவிக்க ஆரம்பித்தேன். ‘டோண்ட் பிஹேவ் லைக் ய பிட்ச்’ என கத்தவேண்டும் போலிருந்தது… அவ்வளவு சுத்தக்காரனா நானும்…

“அண்ட் ஐ என்வி ஹர்… ஐ மீன் உனக்கு வரப் போறவள சொல்றேன்…” சொல்லிவிட்டு நிமிர்ந்து கொண்டாள்.

“அதென்ன என்வி… இப்போ புதுசா..?”

“புதுசெல்லாம் இல்ல… எப்பயும் இருக்குறதுதான்… உனக்கும் தெரியும் அது…” கண்களை மூடிக்கொண்டாள். “உனக்கு அப்டில்லாம் எதும் இருக்கான்னு தெரியல… இருக்காது மோஸ்ட்லி…” மெலிதாகச் சிரித்தாள்.

அமைதியாகவே இருந்தேன். அவள் சொல்லிக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளக் கூட என்னால் வளைய முடியவில்லை.

கண்களைத் திறந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தவள், எழுந்து இருக்கையின் கைப்பிடியில் கையூன்றி என் நெற்றியில் முத்தமிட்டு அமர்ந்து கொண்டாள்.

மெல்ல என்னைத் தயார்படுத்திக்கொண்டு அவளை ஏறிட்டேன். உதடுகளை மடக்கிக்கொண்டு மேல்மூச்சுகளுடன் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். மேலாடையின் மெல்லியத்தன்மை அனுமதிக்கும் எல்லை வரை பார்த்துக் கொண்டிருக்கும்போது நிமிர்ந்துவிட்டாள். அனிச்சையாக உள்ளாடைப் பட்டியை உள்ளே தள்ளி சரிசெய்து விட்டு, மெல்லக் கேசத்தை முன்னே இழுத்துவிட்டுக் கொண்டாள்.

“ரெஸ்ட்ரூம் எங்க இருக்கு?” சமாளிப்பதைப் போல கேட்டேன். கை காட்டினாள்.

ரத்தவோட்டத்தின் இளஞ்சூட்டை மிகத் துல்லியமாக உணர்ந்து கொண்டிருந்தேன். தன் ‘கொஞ்ச நேர’ பிச்சையை நீட்டித்து எனக்கு எதுவும் சலுகை அளிக்கிறாளா? பொங்கியெழும் என் நகர்வை எது பிடித்து நிறுத்திக் கொண்டிருக்கிறதெனத் தெரியவில்லை. பேருணர்ச்சியின் கொதிநிலையில் அவள் கண்களைச் சந்திக்கவே முடியவில்லை. அவள் என்னை எப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள்? எதற்கு காத்துக் கொண்டிருக்கிறாள்? ஒருவேளை நான் அடுத்த நிலைக்கு இதை எடுக்க முனையும்போது சட்டென அவள் உதறிவிட்டால்? அந்தக் கட்டத்தில் என்னை நிறுத்தி சிறுமைப்படுத்த நினைக்கிறாளா?

மனக்கண்ணில் அவளை இன்னொரு முறை இந்த அலைவுகள் எதுவுமின்றி அணுஅணுவாகப் பார்த்தேன். கால்கள் அனிச்சையாக நடுக்கமெடுக்க ஆரம்பித்தன. குவிந்த எண்ணங்களை உச்சத்தை எட்டும் புள்ளிக்கு கொண்டுச் சேர்த்துவிட்டு, வியர்த்து அடங்கினேன். நீண்ட பெருமூச்சுகள். ஆசுவாச மூச்சுகள். எல்லாமே தெளிந்துவிட்டதைப் போலிருந்தது. உடனடியாக அங்கிருந்து புறப்பட வேண்டுமென இருந்தது. காரணம் எதுவும் விளக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மேற்கொண்டு என்னை அவள் ஆட்டுவிக்க எதுவும் மிச்சமில்லை.

முகத்தில் நீரையள்ளி அழுத்தித் துடைத்துக் கொண்டேன். கண்ணாடியில் தெரிந்த மிருகத்தின் கர்வம் எனக்கு பிடித்திருந்தது. அப்படியே கிளம்பிவிட வேண்டும். கதவைத் சடாரென திறந்து வெளியே வந்தபோது, கழிவறை வாசலிலேயே அவள் நின்றிருந்தாள்.

அத்தனை கூர்மையாகக் கலங்கியிருந்தன கண்கள். சத்தியமாக ஒரு வினாடி தடுமாறித்தான் நிலைக்கு வந்தேன். நேருக்கு நேராக அவளைப் பார்க்கவே முடியவில்லை.

எதுவுமே பேசாமல் அப்படியே நின்றேன்…

நீண்ட மெளன இடைவெளிக்கு பின், “சரி நீ கெளம்பு…” என்று புறங்கையால் மூக்கைத் துடைத்துக் கொண்டாள்.

***


மயிலன் ஜி சின்னப்பன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular