Sunday, September 24, 2023
Homeஅரசியல்ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு – தேவையற்ற காலத்தில் தமிழுணர்ச்சி தூண்டிய வியாபாரப் படம்.

ஏழாம் அறிவு பற்றிய முன்னோட்டங்கள் விளம்பரங்கள் என்னைக் கிறுக்குப்பிடிக்க வைக்க திரையிடப்படும் சிறப்பு முதல் காட்சியைப் பார்த்துவிடும் பேராவல் தொற்றிக்கொண்டது. ஆகையால் எவ்வளவு காசு செலவானாலும் பார்த்துவிடவேண்டுமென்ற வெறியுடன் அலைந்து திரிந்து ரூபாய் இருநூறுக்கு சாலிக்கிராமம் எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் திரையரங்கில் முன்பதிவு செய்துவிட்டு தமிழ்திரைப்படம் உலகத் தரத்திற்கு எடுக்கப்பட்டிருக்கிறதென்ற இறுமாப்பில் நண்பர்களிடம் டிக்கெட் எடுத்துவிட்டதைப் பற்றிச் சொல்லிப் புளாகாங்கிதமடைந்துகொண்டேன். இதுவரை எந்தத் தமிழ்த்திரைப்படத்தையும் இவ்வாறு பார்க்காத நான் இப்படத்தைப் பார்க்கும் காரியத்தை அடைந்தேன் எனில் அதற்கு முழு பொறுப்பு இத் திரைக்காவியத்தின் இதுவரை தோல்வியே தராத வெற்றியை மட்டுமே ருசித்து புலன்கள் மயங்கியிருந்த ஏ.ஆர். முருகதாஸையேச் சாரும். பல்லவ மன்னன் போன்றே அரிதாரத்தில் ஆஜானுபாகுவாய்க் காட்சியளித்த சூர்யாவையும் முக்கியமாய்க் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

அவதார் என்ற உன்னதத் திரைப்படத்தை இவ்வுலகிற்கு அளித்த ஜேம்ஸ்கேமரூனின் திறமையைப் பற்றியும் இந்த இயக்குநர் விமர்சித்துப்பேசினார். அவதார் போன்ற படத்தில் கதையென்ற ஒன்றில்லையென்றும் தொழில்நுட்பம் மட்டுமே சிறப்பாக இருந்ததென்றும் தன் ஏழாம் அறிவில் பேசிச் சிறப்புப் பெற்றார். அதனால்தான் என்னவோ தன் அதீத நம்பிக்கையில் உலக சினிமாவில் ஒரு தமிழ் சினிமா என்று சுவரொட்டிகளில் அச்சடித்து பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறார் போலும். தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் இந்தியாவில் ஹிந்தியில் போய் ஒரு படம் பண்ணி மிகப்பெரிய வெற்றியை ஈட்டியும் உலகின் மிகப்பெரிய திரைப்படம் தயாரிக்கும் நிறுவனமொன்றிற்கு இயக்குநராக இருக்கும் தகுதியும் மட்டுமே இருந்துவிட்டால் உலகத் திரைப்படம் பற்றி மிகச் சாதாரணமாக விமர்சித்துவிடாலாம் போலும்.

திரைப்பட மேதைகள் நிறைந்த உலகில் ஏழாம் அறிவை எடுத்த இயக்குநரும் இணைந்திருக்கிறாரென்கிற பெருமிதத்தோடு பண்டிகையின் முதல்நாள் மனைவியின் வசவுகளோடு திரையரங்கிற்கு வந்துவிட்டேன். மொத்தம் நான்கு பேர். பங்கஜம் திரையரங்கில் முன்பு ஒரே ஜனத்திரள். உடலில் சதைகளை அல்வாத் துண்டுகளைப்போல காட்டிக்கொண்டிருந்த பல்லவ வர்மன் சூர்யாவின் விளம்பரத் தட்டியை மிகுந்த பரபரப்புடன் ஒரு கூட்டம் அப்போதுதான் நுழைவாயிலின் மேலே கட்டிக்கொண்டிருந்தது, எங்களுக்கான இருக்கைகளில் டார்ச் விளக்கின் ஒளியில்லாமலேயே சிரமமின்றிக் கண்டுபிடித்து அமர்ந்துகொண்டிருக்கையிலேயே முன்னிருந்த திரை ஐந்தாம் நூற்றாண்டில் பல்லவமன்னனின் மூன்றாவது மகன் போதி தர்மன் இளவரசனாக நின்றுகொண்டிருந்தார்.

கஜினியில் மொட்டையாக ஞாபகமறதிக்காராக நடித்த சூர்யாவா இது என்பதுபோல் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தினார். தற்காப்புக் கலை, இயற்கை மருத்துவம், நோக்கு வர்மம் போன்றவற்றில் மிக வல்லமைவாய்ந்த போதி தர்மர் புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு அம்மதத்தை மேலும் உலகமெல்லாம் பரவச் செய்ய அவர் முதலில் சீனாவிற்கு அனுப்பப்படுகிறார். பெற்றோர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்புகிறார் அவர் எழுதிய பெரிய நூலை ஒன்று கொடுத்துவிட்டு. உண்மையில் படம் ஆரம்பித்ததுமே பிரமிப்பு மேலோங்கியது மிகப்பெரிய உண்மை. மன்னர் ஆட்சி காலத்தை அப்படியே கண் முன் நிறுத்தியிருந்தார்கள். வியப்பு மேலோங்க இமைக்காது சீனாவிற்குக் குதிரையிலேயே கிளம்பிய போதிதர்மனின் பின்னால் செல்லத் துவங்கினேன். சீனாவில் துறவியின்கோலத்திறங்கி அவ்வூர் மக்களை ஆட்கொள்ளி நோயிலிருந்தும் தான் கற்று வைத்திருந்த மருத்துவமுறையினாலும் கற்றுவைத்திருந்த நோக்கு வர்மத்தாலும் தற்காப்பு கலையாலும் கொள்ளையர்களிடத்திலிருந்தும் காப்பாற்றுகிறார் போதிதர்மன்.

இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் மனதை கொள்ளைகொண்டது உண்மை. சூர்யா உண்மையில் காவியுடையில் ஒரு துறவியைப் போல் மிளிர்கிறார். அந்நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்படுபவராகவும் மரியாதைக்குரிய புத்த குருவாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு தாமோ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். அந்நாட்டு மக்களுக்கு தான் அறிந்த ஷாவ்லின் குங் ஃபூவைக் கற்றுத்தருகிறார். இருபது நிமிடங்கள் கழிந்துபின் படம் தாறுமாறாய் ஓடத்துவங்கிற்று தமிழ் திரைப்படமென்றால் ஒரு காதல் பின்னொரு ஊடல் பாடல் கூடல் வேண்டுமில்லையா. அந்தச் சூத்திரத்தையும் தமிழில் தோல்விபடங்களையே தந்திராத இயக்குநர் விட்டுவிட தவறவில்லை. நீள்குடுவை ஜீராவில் ஊறிக்கொண்டிருந்த சூர்யாவைப் பார்த்த போது பரிதாபமாகத்தானிருந்தது. அரவிந்தாகச் சர்க்கஸில் சுற்றிக்கொண்டிருந்தவனைப் பிடித்து சுபா என்கிற விஞ்ஞானி போதி தர்மனின் மரபணுக்கள் அவனின் உடலில் இருப்பதாக ஆராய்ந்து அவனையே பின் தொடர்ந்து அவனை போதி தர்மனாக மாற்றி இவ்வுலகிற்கு நல்லது செய்ய விளைகிறார். ஆனால் அரவிந்தோ சுபா மீது ஒரு தலைக்காதலாகி கசிந்து உருகுகிறார். ஒரு கட்டத்தில் அரவிந்திற்கு சுபா அவனைச் சுற்றிவருகிற காரணம் தெரிந்ததும் காதலித்தவளின் மீது கடுஞ்சினம் கொள்கிறார். தோல்வியடைந்தவிட்ட காதலில் மூழ்கித் தவித்து வழக்கமான தமிழ் திரைப்படத்தில் வரும் சோக கீதம் இசைக்கிறார். படத்தில் வருகின்ற பாடல்கள் அனைத்துமே படத்தின் வேகத்திற்குத் தடையாகவே உள்ளன. ஹாரிஸ் ஜெயராஜின் பழைய இசைக்கோவைகளை கொஞ்சம் மாற்றி வாசித்து வாசித்து உற்சாகத்தைக் குழிதோண்டி புதைக்கிறார். பாடல் தொடங்கியதுமே திரையரங்களிலிருந்து ஒரு கூட்டம் எழுந்து புகைப்பதற்கோ மூத்திரம் கழிக்கவோ செல்கின்றது. அந்தக் கூட்டத்தினிடையே நானும் ஒரு ஆளாகயிருந்தேன்.

பிதாமகனில் பாலாவால் செதுக்கப்பட்ட சூர்யா அவருக்களிக்கப்பட்ட காட்சிகளைத் திறம்பட செய்திருக்கிறாரென்றாலும் படம் முடிந்து திரும்பியதும் அவர் மனதில் நிற்கவில்லை. படத்தில் டோங் லீ என்ற கதாபாத்திரத்தில் தோன்றும் வியட்நாம் நாட்டைச் சார்ந்த நடிகரே மனதில் ஆழமாகப் பதிந்தாரென்றால் அது மிகையில்லை. முருகதாஸ் உருவாக்கிய திரைக்கதையின் போக்கே இப்படியொரு விபரீத்ததைச் செய்கிருக்கிறது. வில்லனின் உடல்மொழியும் குங்ஃபூ சண்டைக் காட்சிகளில் அவரின் அங்க அசைவுகளின் அழகும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. அவருடைய உடல் பாவனைகள் டெர்மினேட்டரில்(பாகம் 2) வில்லனாக வரும் எந்திரனை நினைவூட்டுவதாக இருக்கிறது. இதற்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றியைத் தமிழிலும் ஹிந்தியிலும் கொடுத்த கஜினி என்கிற படம் மெமண்டோ என்ற அமெரிக்கப் படத்தின் முழுத் தழுவலென்பது உலமறிந்த விசயம். ஆகையால் கதையையே எடுத்து கையாண்டவர் கதாபாத்திரத்தின் தன்மைகளை நகலெடுப்பத்தில் ஆச்சர்யங்கள் எதுவும் மேலோங்கவில்லை.

தமிழ் திரைப்படத்தில் வேறு தேசத்தவன் வில்லனாக படத்திற்குள் நுழைந்ததுமே படம் கொஞ்சம் விறுவிறுப்பானது என்னவோ உண்மைதான். நாயகனையும் நாயகியையும் துரத்தி துரத்திக் கொல்ல முனைகிற காட்சிகளில் படம் பார்க்கிறவர்கள் கொஞ்சம் சுறுசுறுப்படைகிறார்கள். திடீரென வேகத்தடைபோல் ஒரு காதல்பாட்டைப் போட்டு பார்வைகளை சோர்வடைய வைக்கிறார்கள். நோக்கு வர்மம் என்ற கலையில் கைதேர்ந்திருக்கும் வில்லன் பார்க்கின்றவர்களையெல்லாம் கண்களாலேயே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவர்களை ஏவியே நாயகன் நாயகியைக் கொல்ல பல தந்திரங்கள் புரிகிறார். சாலைகளில் துரத்தப்படும் நாயகனையும் நாயகியையும் வில்லன் டோங் லீ நோக்கு வர்மத்தை அதிகமாய்ப் பயன்படுத்திப் படாதுபாடுபடுத்திவிடுகிறார். சாலையில் போவோர் வருவோரையெல்லாம் கிழவனிலிருந்து குமரிகள் வரை கண்களால் மயக்கி இருவரின் மீதும் ஏவிவிடுகிறார். வரைவுருவக்கலை (graphics) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏகப்பட்ட கார்களைச் சாலையெங்கும் தொடர்ந்து மோதவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ரசிக்கும்படியில்லாமல் என்னடா இது என்பதுபோல அலுப்பைத்தான் தருகிறதே ஒழிய மகிழ்வைத் தரவில்லை. காரணம் இருபது நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதாக இருக்கலாமென நினைக்கிறேன். இது மாதிரியான நொறுங்குகிற கார்களிடையே சமாளித்து சண்டைவேறு போட்டு மீற முடியாமல் திணறி அவன் கண்டுபிடித்துவிட முடியாத இடத்திற்கு வந்து ஒளிந்துகொண்டு நாயகன் தமிழனின் கோழைத்தனத்தை நாயகியிடம் நொந்து வெறுத்துப் பேசுகிறான்.

தமிழக வரலாற்றிலிருந்து போதி தர்மனை உருவி அவனுடைய மரபணுக்கள் இன்னும் நம்மிலிருப்பதாக பல மைல் நீளத்திற்கு பூச்சுற்றியிருக்கிறார்கள். இந்தியாவின் எதிரியாக விளங்கும் சீனாவை வம்பிற்கிழுத்து வில்லன்களை உருவாக்கி போதி தர்மனின் மரபணுக்கூறுகள் கதாநாயகனுக்காகப் பொருந்திப் போவதாக மரபணு ஆராய்ச்சியில் மருத்துவம் கற்றிற்கும் கதாநாயகி கதைகட்டிவிட திரைப்படம் நம்பகத்தன்மையிழந்து கன்னாபின்னாவென்று நகர்கிறது. ஏமாளித் தமிழனை உறக்கத்திலிருந்து விழிக்க வைப்பதுபோல் வசனங்களை அள்ளியிறைத்து கடைசியில் எதிரியான சீனனை மண்ணைக் கவ்வ வைத்து தமிழனுக்கு அறிவுரைகள் வழங்கி திரைப்படம் உப்புச் சப்பற்று முடிந்துவிடுகிறது. அதிக எதிர்பார்பைப் படுபயங்கரமாய் உருவாக்கி தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்த தமிழனை தமிழ் வெறியூட்டி அனுப்பியதுதான் மிச்சம். ஒரு முழு நீளத் திரைப்படம் பார்த்த திருப்தியை ஏழாம் அறிவு தரவில்லையென்பதுதான் கண்கூடான உண்மை.

மலேசியாவில் இலங்கையில் இப்போது இந்தியாவிற்கு வந்துவிட்டான் சீனன் என்று வீர ஆவேசம் கொண்டு இனிமேல் தமிழன் திருப்பி அடிக்கணுமென்று வசனத்தைச் சொன்னதுதான் தாமதம் திரையரங்கில் தமிழர்களின் உணர்வு கத்தல்களாகவும் கரகோஷங்களாகவும் எழுந்ததை மறுக்க முடியாது. தமிழ் தமிழன் என்று உசுப்பேற்றியே தமிழர்களை வாழவிடாமல் கொன்றழிக்கும் காரியங்கள் உலகெங்கிலும் நடந்துகொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். இந்தக் கத்தல்களையும் இம்மாதிரியான வசனங்களையும் மட்டுமே கேட்டு புளித்துப்போன நாம் இவ்வுலகின் முன்னால் நிராயுதபாணிகளாகவே இன்றுவரை இருக்கிறோம்.

தமிழினத்தைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்த இந்தியக்கண்டத்தின் ஆளும் வெறியையோ அதற்குத் துணைபோன பதவி வெறிகொண்ட தமிழக அரசியல் பற்றியோ ஒரு வரி வசனம்கூட இல்லாமல் சீனன் தான் என்பதுபோல் எழுதி இனழிப்பின் ஒட்டு மொத்த வரலாறையே மறைத்து தமிழனின் வீரத்தை மட்டுமே தட்டியெழுப்பி புத்திக்கூர்மையில் நம்மிடையே வியாபாரத்தை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்களென்பதைத் தவிர உண்மையை உலகிற்குச் சுட்டிக்காட்டும் நல்லெண்ணங்களெல்லாம் இவர்களிடம் ஒரு துளியுமில்லை. இருக்கப்போவதுமில்லை. இலங்கையில் எல்லாம் அழித்தோழிக்கப்பட்டுவிட்டது என்பதை உலகமே அறிந்திருக்கவேளையில் போதி தர்மனின் வரலாற்று கதை வழியாக மிகத் துணிச்சலாகச் சொல்வதாக நினைத்துக்கொண்டு இலங்கையின் இன அழிப்பை வியந்தோதுவதில் எவ்வித புல்லரிப்புகளும் புளகாங்கிதங்களும் இங்கு உருவாகிவிடவில்லையென்பதை இப்படத்தைத் தமிழுலகிற்குத் தந்த கூட்டணிக்குத் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.

இம்மாதிரியான தந்திரங்களுடன் வரும் திரைப்படங்களில் இந்த உண்மையை நாம் கவனிக்கிறபோது நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற வேதனையை அனுபவித்துக்கொண்டுதானிருக்கிறோம். பொருளாதார ரீதியில் வெற்றியடையவேண்டுமென்ற நோக்கத்திற்காக மட்டுமே எடுக்கப்படும் திரைப்படங்கள் இது மாதிரியான இலங்கைதமிழர் பிரச்னைகளை வெறும் வசனங்களில் மட்டுமே வைத்து வியாபார உத்தியாக மாற்றிருப்பது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறதே தவிர உண்மையான தமிழனின் தமிழ்பற்றுதலை வெளிப்படுத்துவதாக நம்பமுடிவதில்லை. படம் வெளியாவதற்கு முன்பு இப்படத்தை திரும்பும் திசையெல்லாம் விளம்பரப்படுத்தி படத்தைப் பார்க்கும் செய்யும் தந்திரத்தைச் செய்யாதார்கள். உண்மையிலேயே இலங்கைத் தமிழனின் விடுதலையைப் பற்றி தன் அடுத்த படமாக முருகதாஸ் எடுத்தாரென்றால் முதலில் பெருமைப்படுபது உலகமெல்லாம் நிரம்பிய தமிழர்களைத்தானிருப்பார்கள்.

இம்மாதிரியான வரலாற்றைத் திரைப்படமாக்கும்போது வரலாற்றறிஞர்களுடன் விவாதித்து உண்மையைக் கண்டறிந்து ஆற்றொழுக்கான திரைக்காவியத்தைப் படைத்திருக்கவேண்டும். தமிழனின் மிகப்பெரும் அடையாளங்களான சிலம்பம், வலரி, களரி, வர்மம் போன்ற நம் கலைகளை பல்லவ ஆரிய வம்சமும் கற்றுத்தேர்ந்தென்று ஆரியர்களெல்லாம் சேர்ந்து கூறுவதை முருகதாஸ் போன்றவர்கள் வேண்டுமானால் நம்பிவிடலாம். உண்மையை அறிந்த தமிழர்களை ஏமாற்றிவிட முடியாது. கதைக்காக பணம் சம்பாதிக்கும் வரலாற்றைத் திரிக்கும் திரைப்படங்களை எடுப்பதை தவிர்த்து தீனா ரமணா கஜினி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் சமூக அக்கறைகளும்கொண்ட கதைக்களன்களை முருகதாஸ் முன்புபோலவே தேர்வு செய்துகொண்டால் உலக சினிமாவில் இடம் பிடிப்பாரோ இல்லையோ தமிழ் வணிகசினிமாவில் மரியாதைக்குரிய தனது இடத்தையெனும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வார் என்பது என் நம்பிக்கை.

– அய்யப்ப மாதவன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular