எவா

5

மயிலன் ஜி சின்னப்பன்

‘நீ ஏன் அந்த படத்துக்கெல்லாம் போன?’ முகம் நிஜமாகவே சிவந்து போயிருந்தது அவளுக்கு.

‘ஏன்? செமத்தியா இருந்துச்சு தெரியுமா.. ஒனக்கு லீவா இருந்தா நீயும் வந்திருக்கலாம்’

‘லீவுன்னாலும் அதுக்கெல்லாம் நா வரமாட்டேன்’

‘ஏன்?’ காரணம் தெரிந்தேதான் கேட்டேன்.

‘சொல்லமாட்டேன்’

‘ப்ச்.. சொல்லு’

‘ம்ஹும்’

‘சொல்லுன்னு சொல்றேன்ல’

‘ஹீரோயின ட்ரெஸ்ஸே இல்லாம ஹீரோ வரைவானாமே? நீ ஏன் போன? போ அப்டியே..’ இதற்கு அவள் கோபப்படுவது எனக்கு குஷியாக இருந்தது.

‘லூசு.. அதெல்லாம் பொய்யி.. ஸ்கின் கலர்லயே ஒரு ட்ரெஸ் மாட்டிப்பாங்களாம்?’

‘கத விடாத.. உனக்கு யார் சொன்னா?’

‘சத்தியமா லூசே..’ பால்யத்தின் அனேக சத்தியங்கள் எவாவின் கையைத் தொடுவதற்காக மட்டுமே செய்யப்பட்டவை.

கதாநாயகிகளுக்கு எப்போதுமே வடிவான பெயர் அமைந்துவிட வேண்டும். ‘இவாஞ்சலின் ஷர்மிளா’ என்ற பெயரை எந்த கோணத்தில் யோசித்து பார்த்தாலும் அந்த ரம்மியம் கூடிவரவில்லை. அதைச் சுருக்கி வசீகரமாக்கிய அந்த மனிதரை இப்போது கண்டால் ஓர் அன்பு முத்தம் கொடுத்துவிட வேண்டும். ஆனால் நான் அவரை அந்நாட்களிலேயே பார்த்ததில்லை. கிருஷ்ணவேணி காலனிக்கு நாங்கள் குடிவருவதற்கு முன்பே, அவர் அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அவளுடைய அப்பாவைத்தான் சொல்கிறேன். காலனியின் அத்தனை குடித்தனங்களும் காதில் விழும்படி கொஞ்சுவாராம் – எவாத்தங்கோ, எவாச்செல்லோ… அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படித்தான் அவள் ‘எவா’வாகியிருந்தாள்.

ரோஸ்லின் அத்தை மட்டும் ‘இவாஞ்சலின்’ என்றேதான் விளிப்பார் – தன் கணவருக்கு எதிரான வைராக்கியமோ என்னமோ! எவாவின் அப்பா ஃபாரினில் வேலை பார்ப்பதாக அம்மா என்னிடம் அப்போது சொன்னது ஞாபகமிருக்கிறது. ‘ஃபாரின்’ என்பதையே ஒரு நாட்டின் பெயரென்று ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் நீள்வட்டமான முகவெட்டு அவளுக்கு. வலது புருவத்திற்கு கீழே மிகச்சிறிய அம்மை தழும்பு ஒன்றிருக்கும்; அந்த முகத்தை முழுமையடைய செய்ய அது அவசியம் என்பதைப்போல அத்தனை பாந்தமாக இருக்கும். கன்னக் கதுப்பிலிருந்து தாடைமுனை வரை நீண்டிருக்கும் மென்மடிப்பு, செதுக்கி நிரந்தரமாக்கப்பட்ட புன்னகை போல அந்த முகத்தில் எப்போதும் பதிந்திருக்கும். அவள் அழுதாலும் புன்னகைத்துக் கொண்டே அழுவதைப் போலத்தான் தெரியும். அந்த முரண்பாட்டை ரசிக்கவே அவள் அழுகையை ஆற்றுப்படுத்தி நிறுத்த நான் முயற்சித்ததேயில்லை. அழவைக்கவும் செய்திருக்கிறேன். இயந்திரத்தை வைத்து ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து சுருட்டியதைப் போன்ற கேச அமைப்பில் இரட்டை ஜடை பின்னலெல்லாம் சேரவே சேராது; அவர்கள் பள்ளியில் குதிரைவாலை அனுமதிப்பார்களாய் இருக்கும். மிக மெல்லிய தங்கச்சங்கிலியில் ‘Eva’ என்ற டாலர்- அந்த கழுத்தைப் பார்க்க காரணம் கொடுப்பதாலேயே பிடித்து போன வஸ்து அது. உண்மையை சொல்லவேண்டுமெனில் அது அவளது நீண்ட கழுத்தின் கலைத்தன்மையைக் குலைக்கும் ஓர் அபத்த திணிப்பு. இவையனைத்தோடும் சேர்த்து ஒரு கத்திரிப்பூ நிற பாவாடை சட்டை. எவா இப்படிதான் இந்த இருபது வருடங்களில் என்னிடம் மிச்சமிருக்கிறாள்.

ரோஸ்லின் அத்தை, புனித சின்னப்பர் மகளிர் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியிலிருந்தார். ஓரிரு முறைகள் ‘ஆண்ட்டி’ என்றழைக்குமாறு சொல்லிப்பார்த்தார் – எனக்கு அது அனிச்சையாக வரவில்லை. ஆங்கில பரிச்சயமின்மை என்றில்லை. ‘அத்தை’ என்பதில் ஓர் அணுக்கம்; அதுவும் எவாவின் அம்மா வேறு. ஒரு வீட்டிலிருக்கும் பிள்ளையின் பெயரை வைத்து அந்த வீட்டுப் பெரியவர்களை அத்தை/மாமா என்று கூப்பிடுவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது – சுந்தரத்தை, ரமேஷத்தை, ஆர்த்திமாமா… ஆனால் எவாவின் அம்மாவை மட்டும் எவாஅத்தை என்று சொல்லாமல் ‘ரோஸ்லின்’ அத்தை என்று நேரடியாக அவர் பெயரைச் சொல்லியே ஏன் அழைத்தேன் என்று தெரியவில்லை.

கீழ்வரிசையில் நான்கு, மேல்வரிசையில் நான்கென எட்டு குடித்தனங்களைக் கொண்ட குடியிருப்பு அது. நீளவாக்கில் அமைந்த கட்டடத்தில், முதல் இரண்டு வீடுகளைக் கடந்ததும் மாடிப்படி நடுவில் ஏறும். மேல்தளத்தில் படிகளையொட்டிய வலப்பக்க வீடுதான் எவாவுடையது. அதற்கு நேர்கீழ் வீட்டில்தான் நாங்கள் குடியேறி இருந்தோம்.

முதன்முறை, ரோஸ்லின் அத்தையின் சில்வர் ப்ளஸ் மொப்பெடில், பின்னாலமர்ந்து பள்ளிக்கு புறப்படும் எவாவை, பல் தேய்த்தபடி வாசலில் நின்று பார்த்தேன். ஆறாம் வகுப்புக்கு அதிக உயரம்தான். பச்சை நிற கட்டம்போட்ட சீருடை சட்டையும், அடர் பச்சை நிற பாவாடையுமாக அவள் பின்னிருக்கையில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமரும்போது, அவள் உயரத்துக்கு அந்த பாவாடை கொஞ்சம் மூட்டுக்கு மேல் ஏறிவிட்டது. என்னை ஏதோ வெறுப்பாக பார்த்தபடியே அதை கீழே இழுத்து சரிசெய்தாள்; அந்த வயதிலேயே அது எனக்கு கெளரவச் சீண்டலாகப் பட்டது.

‘மொதோ நாள் பாத்தப்ப, நான் உன் முட்டிய பாக்குறேன்னுதான நெனச்ச?’ பின்னொரு நாளில் கேட்டுவிட்டேன். அதை காதிலேயே போட்டுக்கொள்ளாதவள் போல வேறெதையோ பேசினாள். பூப்பெய்துவதற்கு முந்தைய சுதாரிப்புகள் அவளிடம் கச்சிதமாக இருக்கவே செய்தன; இதுப்போன்ற கேள்விகள் இடமளிக்கும் நெருக்கத்தை உடனடியாக அனுமதித்துவிடக்கூடாது என்ற தெளிவு அவளிடம் எப்போதும் இருக்கும். என்னாலும் இன்னொரு முறை அந்த கேள்வியைக் கேட்கும் துணிவைக் குவித்துவிட முடியாது.

நல்லவேளையாக நானும் அப்போது ஆறாம் வகுப்பில்தான் இருந்தேன். ஒன்றிரண்டு வயது பெரியவன் என்றால் ‘அண்ணன்’ என்று பழக்கப்படுத்தி எல்லாவற்றையும் பாழாக்கியிருப்பார்கள். அவளுக்கு பக்கத்து வீட்டிலிருந்த, என்னைவிட சிவப்பான சுந்தரை, அவன் ஏழாம் வகுப்புக்காரன் என்பதாலேயே, ‘அண்ணா’ என்று அவள் அழைக்கும்போதெல்லாம், மனதிற்குள் நானொரு சிறிய குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பேன். ஆனால் போகப்போகத்தான் அண்ணன் என்ற அடையாளத்துடன் அவளைத் தொட்டுத் தொட்டுப் பேசும் அனுகூலத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்று புரியவந்தது. அவளை அவனிடமிருந்து பாதுகாக்கும் அவஸ்தையை தான் கூடி விளையாடும் பொழுதுகளில் அவர்கள் எனக்கு ஒதுக்கியிருந்தார்கள். இருவரும் ஒரே பள்ளி வேறு. என்றாவது ரோஸ்லின் அத்தைக்கு நேரம் ஒத்துவராத நாளில், அவள் சுந்தரின் சைக்கிள் கேரியரில் அமர்ந்தபடி எனக்கு டாட்டா காட்டிவிட்டு பள்ளிக்கு கிளம்பிப் போவாள் – அன்று மட்டும் அதிக நேரம் சாமி கும்பிடுவேன்; கடவுளையெல்லாம் எனக்கு அடியாளாக வைத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை.

‘சுந்தரண்ணாவோடது பாய்ஸ் சைக்கிளா இருக்கு.. நீ ஒன்னோடதுல எனக்கு சைக்கிள் ஓட்ட சொல்லித்தர்றியா?’ அத்தனை நாட்களும் ஆண்மைக்கான இழுக்குடன் ஓட்டிக் கொண்டிருந்த பி.எஸ்.ஏ-எஸ்எல்ஆரை அள்ளியெடுத்துத் தழுவிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. சுந்தரிடமிருந்து அவளைத் தனிமைப்படுத்த எனக்கு இதைவிட்டால் வேறு நல்ல வாய்ப்பு இருக்கவே முடியாது. உட்கார வைத்து கைப்பிடியையும் கேரியரையும் பிடித்துக் கொண்டு, ஐயாறப்பர் தெற்கு வீதியில் மாலை நேரம் முழுக்க ஓடிக் கொண்டிருப்பேன்.

கேரியரிலிருக்கும் பிடியை ஓட்டப்போக்கில் மெதுவாக அவளது இடைக்கு மாற்றினால், வேண்டுமென்றே தடுமாறி விழுவதைப் போல ஏதோ செய்துவிட்டு கொஞ்சம் கடுகடுவென ‘சாரி’ என்பாள். அது என்னைக் கூர்மையாக எச்சரிக்கும் தொனி; ‘அவ்வாறு கை வைத்ததற்கு என்னிடம் மன்னிப்பு கேள்’ என்பதுதான் அந்த ‘சாரி’யின் பொருள். வெளிப்படையாக அதுகுறித்த அதிர்வுகளை ஒருவேளை அவள் உருவாக்கினால், நான் பெரிய ரோஷக்காரன் மாதிரி அவளிடம் முகத்தைத் திருப்பிக்கொள்வேன்; பேசாமலிருப்பேன்; தேவதைகளுக்கேயான கனிவுடன் அவள்தான் மீண்டும் வந்து பேசவேண்டும் – அப்படி பேசிவிட்டால், என் செயலை அவள் மன்னித்ததாகிவிடும்; அந்த மன்னிப்பு, அப்படி கை வைத்ததற்கு அந்தரங்கமான அங்கீகாரத்தையும் கொடுப்பதாகிவிடும். இதற்கெல்லாம் இடங்கொடுக்காமல் இருப்பதற்குத்தான் அந்த ‘சாரி’. அதே நேரம், எத்தனை வேகமாக அந்த முகம் சுருங்குமோ, அத்தனை வேகமாகவே தணிந்திடும். கோபம் கொடுத்துவிடும் உரிமையை மறுக்கும் இணக்கம். பன்னிரெண்டு வயதிலேயே அத்தனை தெளிவாகத்தான் இருந்திருக்கிறாள்.

அது வில்ஸ் உலகக்கோப்பை சமயம் – எவாவுக்கும் ஓரளவுக்கு கிரிக்கெட் தெரிந்திருப்பதை, அவள் சலித்துக் கொள்ளாமல் ஐம்பது ஓவர்களையும் பார்ப்பதிலிருந்து புரிந்து கொண்டேன்; இன்னொரு அனுகூலம், சுந்தர் கிரிக்கெட் பார்க்க மாட்டான். ‘எனக்கு அசார்தான் புடிக்கும்..’ என்றாள். கொஞ்சமும் யோசிக்காமல், ‘எனக்கும்’ என்றேன். அப்போது பூஸ்ட்டுக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட மட்டையைக் கொண்டு, அசாருதீனின் மணிக்கட்டை மட்டும் சொடுக்கும் பேட்டிங் பாணியைக் காற்றில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருப்பேன். ‘அவன் கழுத்துல கருப்பா எதோ கயித்துல கட்டி போட்ருக்கானே.. என்னடா அது?’ இது போன்ற கேள்விகளில் மட்டும் எப்படியோ ஒரு குழந்தைத்தனத்தைக் கொண்டு வந்துவிடுவாள். ‘அது ஒரு சின்ன பர்ஸ் மாதிரி.. ஜிப் இருக்கும்.. உள்ள பிக் ஃபன் பபுள்கம் வெச்சிருப்பான்’ கூச்சமேயில்லாமல்தான் புளுகுவேன்.

அவளுக்கு பிடித்ததால் எனக்கும் அசாருதீனைப் பிடித்தது சரி; ஆனால் அவளுக்கு ஏன் பிடித்தது என்பது எனக்கு குழப்பமாக இருந்தது. ஏனெனில், அந்த உலகக் கோப்பை, ஒட்டுமொத்த தேசத்தின் இதயத்தில் டெண்டுல்கர் என்ற பெயரை ஈரமாக பதிய வைத்திருந்தது. சுந்தர் அதற்கொரு பதில் வைத்திருந்தான்.

‘டேய்.. அவ கிளாஸ்ல அசார்ன்னு ஒரு பய இருக்கான். போன வருஷ ஆனுவல் டே-ல அவனும் இவளும்தான் ஜோடியா ஆடுனாங்க..’ சொல்லிவிட்டு இளக்காரமாக சிரித்தான். அந்த சிரிப்பு, எவாவிடம் நான் கிறங்கிப்போயிருப்பதை அவன் அறிந்து வைத்திருப்பதையும், அவனும் அதே விருப்பத்தில் இருப்பதையும் வெளிப்படையாக காட்டிக்கொடுத்தது.

‘உன்னோட கிளாஸ்ல அசார்ன்னு யாரும் இருக்காங்களா?’ நேராக எவாவிடம் போய் கேட்டுவிட்டேன். கொஞ்சமும் பொறுமை அற்றவனாகவும், சாதுர்யம் அற்றவனாகவும்தான் அவள் விஷயத்தில் இருந்திருக்கிறேன்.

‘ஏன் கேக்குற?’

‘சொல்லு..’ ஏதோ அவள் ஆமாமென்றால் நீடுருக்கு அடுத்த பஸ் பிடித்துப்போய் அவனை வெட்டி பொலி போட்டுவிடுவதைப் போல..

‘ஆமா.. இருக்கான்.. உனக்கெப்டி அவன தெரியும்?’

‘அதனாலதான் ஒனக்கு கிரிக்கெட்ல அசார புடிக்குமா?’ அவள் என்னை வினோதமாக பார்த்தாள்.

‘லூசா நீ?’ உடனே ஆமோதிக்க வேண்டும் போலத்தான் இருந்தது. முகத்தில் பாய்ந்திருந்த ரத்தமெல்லாம் வடிந்துவிட்டன; சிரித்துவிட்டேன். ‘அதுக்கு ஏன் நீ கோவப்படுற?’ என்று அவள் கேட்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அவள் அந்த கதவை மட்டும் திறந்து விடவே மாட்டாள். இந்த ஒரு விஷயத்திற்காகவே சுந்தருக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். அவள் அனுமதிக்காத எல்லைக்குள் என்னை நானே கொண்டு சேர்த்துவிட்டேன்.

‘உனக்கு அதுனாலதான் அசார புடிக்கும்ன்னு நெனச்சு எனக்கு செம்ம கோவம் வந்துருச்சு’ அவளுக்கு ஏற்கனவே புரிந்திருந்த என் நிலைப்பாட்டை இன்னும் கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டினேன். கீழுதட்டை ஒரு மாதிரி கன்னத்தில் குழிவிழும் வாக்கில் உள்ளிழுத்து, கள்ளத்தனமாக சிரித்துவிட்டாள். அந்த சிரிப்புதான் கேட் வின்ஸ்லட்டின் ஓவியம் குறித்த பேச்சுவரை கொண்டுவந்திருந்தது.

கொஞ்சம் நெருக்கத்தை அனுமதிக்கும் சமிக்ஞைகள் அவளிடமிருந்து தெரிந்ததுமே, நெருங்கியிருக்க மட்டுமே விரும்புபவனாக என்னைக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தேன். அதற்காகவே அவள் ராஷ்ட்ரபாஷா படித்துக் கொண்டிருந்த ஷாந்தா ஹிந்தி வித்யாலயாவிற்கு போய், நானும் பிராத்மிக்கில் சேர்ந்தேன். ரென் அண்ட் மார்ட்டின் சகிதம் மாலைகளில் ரோஸ்லின் அத்தையிடம் தஞ்சமடைந்தேன். மொட்டைமாடிக்கு படிக்க போகிறேன் பேர்வழியென, ஏறும்போது இரும்பு நாற்காலியை மாடிப்படிகளில் டமடமவென இழுத்து அவளுக்கும் அதனை அறிவிப்பேன். சில நாட்கள் அதற்கான பலனும் இருந்திருக்கிறது. பிரதியெடுத்ததைப் போலிருக்கும் இரு வீட்டு உள்ளமைப்பில், மேல்வீட்டில் அவள் குளிக்கும் நேரத்தில், கீழே எங்கள் வீட்டு குளியலறையிலிருந்து, ‘லவ் டுடே’, ‘மின்சார கனவு’ பாட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு சத்தமாக பாடுவேன். ‘அட உலகை ரசிக்க வேண்டும் நான்ன்ன்..’ என்ற இடத்தில் குரல் வேறு க்க்கீச்சென்று ஆகித்தொலைக்கும். குறைந்தபட்சம் ஒரு கோமாளியாகவாவது, தொடர்ச்சியாக அவளது கவனத்தைக் கோரிக் கொண்டிருந்தேன்.

இது ஒரு பக்கமிருக்க, ரோஸ்லின் அத்தை, கொஞ்ச நாட்களாகவே என் சேஷ்டைகளைக் கூர்ந்து கவனிப்பவராக தெரிந்து கொண்டிருந்தார். ஓரிரு முறைகள் மொட்டை மாடியில் நானும் எவாவும் படித்துக் கொண்டிருக்கும்போது ஏதோ நோட்டம் பார்ப்பதைப் போல வந்துவிட்டு போனார். அவரும் காதல் திருமணம் புரிந்தவர் என்ற கதை, அந்த குடியிருப்பில் பிரசித்தம் என்பதால், எச்சரிக்கைகளைத் தாண்டியும், எங்கள் விஷயத்தில் எனக்கொரு சலுகை தெரிந்து கொண்டிருந்தது. என் வகுப்பு நண்பன் தாமஸின் வீட்டு கதவில் ஒட்டியிருந்த ‘அநாநி சினேகத்தால் நான் உனைச் சினேகித்தேன் – எரேமியா 31-3’ என்ற திருவிவிலிய வாசகத்தை, எவாவின் கண்ணில் படவேண்டும் என்பதற்காக என் கிராமர் நோட்டில் எழுதி வைத்திருந்தேன்- அதையும் ரோஸ்லின் அத்தை ஒரு நாள் பார்த்துவிட்டார். அவருக்கு ஏதோ பொறி தட்டியிருக்க வேண்டும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில், வழிபாட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அவர்களிடம் போய், ‘அத்த, சர்ச்சுக்கு நானும் வரவா?’ என்றேன்.

பதிலுக்கு முன்னிருந்த கணநேர தாமதத்திலேயே எனக்கு பதில் புரிந்துவிட்டது.

‘போய் உங்க அம்மாட்ட கேட்டுட்டு வா’ வந்து விழுந்த பதிலிலிருந்த வெளிப்படையான வெறுப்பு ஒரு மாதிரி குறுக வைத்தது. விடுவிடுவென இறங்கி வீட்டுக்கு வந்துவிட்டேன். அவரது எண்ண ஓட்டம் எனக்கு புரிந்துவிட்டதென்பதை பதிலுக்கு புரிய வைத்துவிட்டேனென்று உள்ளுக்குள் ஓர் ஆசுவாசம். எக்காரணம் கொண்டும் அந்த வீட்டு வாசலை மீண்டும் மிதித்துவிடக் கூடாதென்று சூளுரைத்தேன். ஹிந்தி டியூஷன் போவதை நிறுத்திக் கொள்ளலாமா என்று யோசித்தேன். என் சுயமரியாதையில் ரத்தம் கசிந்து கொண்டிருந்த நேரம், எவாவின் முகத்தில் களையே இல்லாததைப் போல தோன்றியது. மனக் கண்ணிலிருந்த அவள் முகத்தில் திடீரென எண்ணெய் வழிய ஆரம்பித்தது; கீழ்வரிசையின் முன்னிரண்டு பற்களுக்கிடையிலான இடைவெளி மிக அகலமாக தெரிந்தது; முன்பு ஓர் அதிகாலையில் அம்மா கோலமிடுவதை, வேடிக்கை பார்க்க மாடியிலிருந்து தூங்கி எழுந்த கோலத்தில் வந்து நின்ற அவளின், கொடுவாய் வாடையை நினைவிலேயே ஒருமுறை முகர்ந்துப்பார்த்து முகம்சுளித்துக் கொண்டேன். குளியலறைக்கு போய் ஒளித்து வைத்திருந்த பாட்டு புத்தகங்களைக் கிழித்து கக்கூஸில் போட்டு தண்ணீரை ஊற்றிவிட்டு வந்தேன். எல்லாம் சாக்கடைக்கு போகட்டும்.

அடுத்த நாள் காலை வாசலில் சில்வர் ப்ளஸ் புறப்படும் ஓசை கேட்டது. வெளியே போகவில்லை. சாயங்காலம் அவளுக்காக காத்திருக்காமல், ஹிந்தி கிளாசுக்கு புறப்பட்டுவிட்டேன். பாடநேரத்தில் அவள் ஏதோவொரு விவரிக்க முடியாத துயரத்தை முகத்தில் சுமந்திருந்தது, எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. வகுப்பு முடிந்ததும் என் போக்கில் கிளம்பி நான் வீட்டிற்கு நடையைக் கட்டிவிட்டேன். அவள் பின்தொடர்ந்தேகூட வந்து கொண்டிருக்கலாம்; நான் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்ததும், வாசலை நோக்கியே காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். எவாவின் காலடி ஓசை எனக்கு தெரியும்; ஒரு மாதிரி சரக் சரக்கென தேய்த்து தேய்த்து நடப்பாள். அந்த ஓசை எங்கள் வீட்டுக்குள் வந்து ‘ஏண்டா விட்டுட்டு தனியா போற?’ என்று கேட்கப்போகிறதா? இல்லை, அப்படியே கடந்து படியேறிவிடப் போகிறதா? – அதுவரையிலான என் வீராப்புகள் எதுவும் என் தன்மானத்திற்காக செய்யப்பட்டவையில்லை என்றும், என் எதிர்வினையை எவா உணர வேண்டும் என்பதற்கான பம்மாத்துகள் மட்டும்தான் என்றும் புரிய வந்தபோது, நொடிநேர மன அழுத்தம் வந்து அமைதியிழக்க செய்தது. அதை மேலும் மோசமாக்கும் விதத்தில், அந்த சரக் சர்க் காலடிகள் எங்கள் வீட்டைத் தாண்டிப்போய் படிகளில் ஏறத்தொடங்கின.

ஆனால், அந்த ஓசையில் முன்னெப்போதும் இல்லாத நிதானம்; ஒரு தொய்வு – இவை போதும் எனக்கு.

கொஞ்சநேரத்தில் ரோஸ்லின் அத்தை மாடியில் நின்றபடி என் அம்மாவை அவர்கள் வீட்டிற்கு அழைத்தார். என்ன சொல்வதற்காக அழைத்திருக்கிறார்? – என் நடத்தைகளைப் பட்டியலிட்டு, அவற்றை ஒழுக்கமீறல்களாக கட்டமைத்து, ஒரு வழியாக என் சாயங்களை வெளுக்கவைக்கப் போகிறார்கள். அம்மா இது மாதிரியான குற்றச்சாட்டுகளை எப்படி கையாள்வார் என்று வேறு தெரியவில்லை. அப்பாவிடம் சொல்லிவிடுவார்- அது நிச்சயம். அவர் இடுப்புவாரைக் கழற்றி தோலை உரிக்கப் போகிறார். எங்காவது ஓடிப்போய் விடலாமா? மகாதானத் தெருவில், முன்வாசலிலிருந்து கொல்லைவாசல் வரை தெரியும், நடுவில் துளசி மாடம் இருக்கும் அந்த அய்யர் மாமா வீட்டில் போய் ஏதாவது வேலை கேட்டுப் பார்க்கலாமா? ஸ்கூலுக்கு போகும் வழியிலிருக்கும் அந்த பழைமையான ஓட்டு வீடு, ஏனோ எனக்கு அந்நாட்களில் ரொம்பவே பிடித்திருந்தது. நெடுநேரமாகியும் அம்மா கீழே வரவில்லை. விபரீதம் புரிந்துவிட்டது. கட்டிலில் போய் குப்புற படுத்துக்கொண்டு தூங்குவதைப் போல பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.

அப்பாதான் முதலில் வீட்டிற்குள் வந்தார். அம்மாவை அழைத்து பார்த்தார். அவர் படுக்கையறைக்குள் நுழைந்துவிட்டு வெளியேறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். வாசலில் போய் நின்று, ‘சரஸ்வதீ..’ என்று உரக்க கூப்பிட்டு பார்த்தார். பதிலில்லை என்றதும், ஹாலில் வந்து அவர் அமர்வது காதில் விழுந்தது. சில நிமிடங்களில் அம்மா வீட்டிற்குள் நுழைவதும் கேட்டது. ஒரு மாதிரி இறுகி, ‘எதற்கும் தயார்’ என்ற நிலைக்கு வந்திருந்தேன். அதிகபட்சம் என்ன செய்துவிடப் போகிறார்கள்? போட்டு அடிப்பார்கள்; சுந்தரோடு ஒப்பிட்டு கேவலப்படுத்துவார்கள்; அப்பா ‘போயி அவன் மூத்தரத்த வாங்கிக்குடி’ என்பார் – ஒழுக்கத்திற்கான வேதிப்பொருட்கள் சிறுநீரில் இருப்பதாக அவர் அழுத்தமாக நம்பிக் கொண்டிருந்திருக்க வேண்டும் – அடிக்கடி அதையேதான் சொல்லுவார். நானாகவே அறையைவிட்டு வெளியே வந்தேன்.

என்னைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். டிவி இரைச்சலுக்கு நடுவில் அம்மாவின் அந்த வார்த்தைகள் செவியில் கலந்தது. ‘பாவம்.. யாரும் ஒத்தாசிக்கு இல்ல அவங்களுக்கு.. பதிமூனு வயசுல்லாம் இப்ப லேட்டுதான்.. வசந்தி மவல்லாம் பத்து வயசுலயே குந்திட்டா..’ அதன் பிறகு அவர்கள் பேசிக்கொண்ட எதுவுமே என் மண்டையில் ஏறவில்லை. பயந்துக் கொண்டிருந்த விஷயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பெருமூச்சு அல்ல அது; அதுவரையிலான என் மனவோட்டங்கள் எதுவுமே அக்கணம் என் நினைவிலில்லை. எவா பெரிய மனுஷியாகியிருப்பது, ஏதோ எங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்வாக எனக்கு தெரிந்தது; இன்னும் நெருக்கமாகி விட்டவளாக தெரிந்தாள். சம்மந்தேயில்லாமல் கூடுதல் பொறுப்பு என் தோள்களில் ஏறியிருப்பதாக உணர்ந்து கொண்டிருந்தேன்.

எப்படியும் அவளை அன்றிரவு பார்த்துவிடவேண்டுமென்று மனம் அடித்துக் கொண்டது. எந்த நாடகமுமின்றி சகஜமாக காட்டிக்கொண்டு, மாடியேற போனவனை, ‘எங்கடா போற?’ என்றது அம்மாவின் குரல். அதுவரைக்கும் அப்படி அம்மா கேட்டதாக நினைவில்லை.

‘சும்மா மேல போயிட்டு வரேன்’ காரணம் சொல்லவே அலுப்பாக இருந்தது.

‘இனிமே, ச்சும்மா ச்சும்மா எவா வீட்டுக்குள்ளல்லாம் போயிட்டிருக்கக்கூடாது’ இது என்ன ஒரே நாளில் அமலுக்கு வரும் அவசர ஆணை? அந்த உத்தரவு இனி அவர்கள் கட்டமைக்கப்போகும் புதிய விதிமுறைகளுக்கான முன்னோட்டமாக தெரிந்தது.

‘சுந்தரண்ணா வீட்டுக்குதாம்மா போரேன்’ என்று சொல்ல நினைத்து, சொன்னால் அந்த பொய்யை என் தடுமாற்றம் காட்டிக் கொடுத்துவிடும் என்று சுதாரித்து, எதுவும் சொல்லாமல் அலட்சியமாக மேலே ஏறினேன். எவாவின் வீட்டைக் கடக்கும்போது சீட்டியடித்துக் கொண்டே போனேன். அங்கு ஓர் அச்சுறுத்தும் பேரமைதி நிலவிக் கொண்டிருந்தது. மனதிற்குள் தடுக்கி விழுந்து கொண்டிருந்தேன்- ‘அவளும் இப்போது என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருப்பாளா? இனிமேல் ஒளிந்து மறைந்து அம்மாக்களுக்கு தெரியாமல்தான் பேசிக்கொள்ள முடியுமா? சுந்தர் வீட்டில் இந்த தடையெல்லாம் நடப்பில் இருக்குமா அல்லது அவன் எப்போதும் போல போய் தொட்டு தொட்டு பேசுவானா? – அந்தக் கையை முறிக்க வேண்டும். ரோஸ்லின் அத்தைக்கு வேறு ஏற்கனவே என் மேலே கொஞ்சம் காட்டமிருக்கிறது. இதுவெல்லாம்கூட பரவாயில்லை – எவாவே விலக ஆரம்பித்துவிட்டால்?’ யோசித்துப் பார்க்கும்போதே தோற்றுப்போன ஒரு வலி.

அடுத்த நான்கைந்து நாட்களும் அவளைப் பார்க்க முடியவில்லை. அதில் ஒரு மாலை, பள்ளியிலிருந்து வரும்போது, சாப்பாட்டு மேசையில் இண்டோசிலோன் பேக்கரியிலிருந்து ஹனி கேக் ஒரு பெட்டி வந்திருந்தது.

‘எவாம்மா குடுத்துட்டு போனாங்க.. எவா ஏஜ் அட்டன் பண்ணிருக்கால்ல..’ அம்மா அந்த விஷயத்தை வெளிப்படையாக என்னிடம் சொன்னபோது, அதன் பின்னிணைப்பாக, நான் அஞ்சியிருந்த ஒழுக்கவிதிகள் பட்டியல் எதுவும் அறிவிக்கப்படுமோ என்று கலவரமானேன்; நல்லவேளை, அப்படியெதுவும் இல்லை.

மீண்டும் அவளைப் பார்க்கமுடிந்த நாளில், புதிதாக ஜிமிக்கித்தோடு போட்டிருந்ததைத் தவிர்த்து, வெளிப்படையாக வேறெந்த மாற்றமும் தெரியவில்லை. ஏதோ தடையுணர்வைத் தகர்த்து பேசுபவளைப் போல செயற்கையாக சிறு அபிநயங்கள் பிடித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. எங்கள் அன்யோன்யத்தை சிதைத்த அந்தப் பருவ மாற்றத்தை அந்த நொடியில் நான் மனதார வெறுத்தேன்.

‘பெரிய மனுஷி ஆயிட்டியாம்..?’

நிஜமாகவே ரொம்ப அழகாக வெட்கப்பட்டாள்.

‘இனி எங்க்கூட பேசவேமாட்டன்னு நெனச்சேன்.. அத்தையும் பேசக்கூடாதுன்னு சொல்லிருப்பாங்கல்ல..’ என் தவிப்பையும் அச்சத்தையும் பட்டவர்த்தனமாக்கிவிட வேண்டும். பொய்யாகவேனும் அவள் இதற்கு ‘இல்லை’ என்றுதான் பதில் சொல்ல வேண்டும். அந்த தேற்றல் எனக்கு அவசியப்பட்டது.

‘ஏன்? நா எப்பவும் போலதான் இருப்பேன்’ இதெல்லாம் ஒரு விஷயமேயில்லை என்று மலினப்படுத்தும் குரலில் அவள் பேசும் போது, எனக்கு அவள் கையை ஒருமுறை தொட்டுப்பார்க்க வேண்டும் போல இருந்தது.

‘ஹே.. முன்னமே உங்கிட்ட கேட்டேன்ல.. ஏஜ் அட்டெண்ட் பண்றப்போ என்ன ஆகும்ன்னு.. ஆனதும் சொல்றேன்னு சொன்ன..’

‘லூசு.. போடா’ நாங்கள் பழையவர்களாகத்தான் இன்னமும் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் கொனஷ்டை.

ஆனால் மற்றதெல்லாம் அப்படியே இருந்துவிடவில்லை. அடுத்து வந்த ப்ரவேஷிகா பரீட்சையோடு அவள் ஹிந்தி வகுப்பிலிருந்து நின்று கொண்டாள். அதன் பின்னாலும் நான் அதனைத் தொடர வேண்டியிருந்தது தான், என் வாழ்வின் மிக மோசமான ஹிந்தி திணிப்பாக இருக்க முடியும். பாவாடை சட்டை சீருடைக்கு பதிலாக, சுடிதார் சீருடைக்கு மாறி விட்டாள். ரோஸ்லின் அத்தையுடன் தொற்றிக் கொண்டு போகாமல், புதிதாக கருப்பு வண்ண லேடிபேர்ட் சைக்கிளில் வலம் வந்தாள். எனக்கு போதுமான ஆங்கில இலக்கணம் சொல்லிக் கொடுத்துவிட்டதைப் போல, அத்தையும் வீட்டில் வகுப்பெடுப்பதைக் குறைக்க ஆரம்பித்தார் – அந்த வீட்டிற்குள் நான் நுழைவதற்கான வாயிலாக இருந்ததை காலி செய்துவிட்டார். மொட்டை மாடிக்கு எவா படிக்க வருவது குறைந்து போனது. இதையெல்லாம்கூட பருவமெய்தியதற்கான பரிணாம மாற்றங்கள் என்று பொறுத்துக் கொண்டேன்.

தாங்கமுடியாத ரணமாக தெரிந்தது, எவாவே என்னிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளுவதைப் போல காட்டிக்கொள்ள ஆரம்பித்தது தான். கேரம் விளையாட அமரும்போது பாவாடையைக் கால்களுக்கிடையில் சுருக்கி நிதானமாக சம்மணம்போட ஆரம்பித்தாள். ஸ்ட்ரைக்கரை எடுக்க வளையும்போது, ஒவ்வொரு முறையும் மேல்சட்டையின் கழுத்துப் பகுதியை மிகக் கவனமாக உள்ளங்கை கொண்டு மறைப்பதுப்போல செய்வது, அப்பட்டமாக என்னை அசிங்கப்படுத்துவதைப் போலிருந்தது.

ரோஸ்லின் அத்தையும் அம்மாவும் சேர்ந்து, இன்னொரு பக்கம், எனக்கும் அவளுக்குமிடையில் ஒரு மிகப்பெரிய அரணை எழுப்பிக் கொண்டிருப்பதாக தோன்றியது. இவர்கள் மூவரும் எதற்காக இப்படி என் கைகளைக் கட்ட நினைக்கிறார்கள்? எவா தன் குழந்தைத் தனங்களை எப்படி ஓரிரு மாதங்களில் முற்றிலுமாக தொலைத்தாள்? எதற்காக இப்படி அநியாயத்திற்கு பெரிய மனுஷி போல காட்டிக்கொள்கிறாள்? என்னிடம் அவள் என்ன நிரூபிக்க நினைக்கிறாள்? அவளின் ஸ்பரிசத்திற்காக தவிப்பவனாகவும், அவளிடம் முழுவதுமாக சரணாகதியாகி விட்டவனாகவும் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாளா? இப்படி எளிதாக முத்திரை குத்திவிடும் அளவிற்கு, என் பலவீனங்களைக் காட்டிக் கொள்கிறேனா? நான் நிஜமாகவே பலவீனனா? எவாதான் என்னை இப்படியெல்லாம் யோசிக்க வைத்துவிட்டாளா? அவளுக்கு இதுவெல்லாமும் சாத்தியம்தானா?

ஓராண்டுக்கு முன்னிருந்த என் எவாவை யோசித்துப் பார்த்தேன்..

‘நா அந்த படமெல்லாம் பாத்தா உனக்கென்ன வந்துச்சாம்?’

‘தெரியல.. பாக்கக்கூடாது.. அவ்ளோதான்’

‘வேண்ணா சொல்லு.. நானும் உன்ன அப்டி வரையறேன்..’

‘செர்ர்ருப்பு.. ச்சீ.. மூஞ்சி.. பேசுறத பாரு’ வெட்கம் அவளுக்கு வெடித்துக்கொண்டு வந்தது கண்கூடு. சப்சப்பென்று என் புறமண்டையில் அடித்தாள்.

இந்த தருணங்களெல்லாம் இனி சாத்தியமே இல்லை என்ற தெளிவிற்கு பொறுமையாக என்னை நகர்த்த ஆரம்பித்தேன். அதைப் புரிந்து கொண்டவள் போலவும், தானும் அதைத்தான் விரும்புவதைப் போலவும் எவா நடந்துகொள்ள ஆரம்பித்தாள். ஓரிரு மாதங்களுக்குள் நான் என் தடுமாற்றங்களிலிருந்து தணிந்து நிலைகொள்ள ஆரம்பித்தேன். சுந்தரை நண்பனாக பாவிக்கும் அளவிற்கான ஆழ்ந்த அமைதியை எட்டியிருந்தேன்.

காதலிகளுக்குள் இருக்கும் சாத்தான் அப்படியெல்லாம் விட்டுவிடாதுதானே! எவா மீண்டும் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வர ஆரம்பித்தாள். பள்ளிக்கு புறப்படும் போது அனாவசியமாக சைக்கிள் மணியடிப்பாள். நான் சிடுசிடுவென எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் அதைப் பார்க்கும்போது, என்னை நையாண்டி செய்வதைப் போல வாய்க்குள்ளேயே சிரிப்பாள். எனக்கு விதிகளை வகுத்துவிட்டு, இவள் மட்டும் விளையாடிப் பார்ப்பது, நிஜமாகவே என்னை எரிச்சலடைய வைத்தது. என் சமநிலையிலிருந்து நான் தவற நேர்ந்தால், மீண்டும் அவள் சிலுப்பிக் கொண்டு போவாளோ என்ற எச்சரிக்கையுணர்வுதான் என்னை ரொம்பவே நிதானப்படுத்தி வைத்திருந்தது. தவமெல்லாம் இல்லை – எந்நேரமும் அவளால் நொறுக்கி விடமுடியும். கூடுமானவரைப் தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் அவளே ஒதுங்கிப்போய் விட்டாலும் பரவாயில்லை என்று மனப்பூர்வமாக விரும்பினேன்.

99ஆம் வருட உலகக்கோப்பை காலகட்டம் – குடியிருப்பின் பெரும்பாலானோர் எங்கள் வீட்டில் கூடியமர்ந்து போட்டிகளைப் பார்ப்பது வழக்கமாகியிருந்தது – நான் முழுமையான சச்சின் ரசிகனாக மாறிவிட்டிருந்த காலம் அது. அவளுக்கு எதிர்துருவம் எடுக்க வேண்டுமென்றோ என்னமோ, சச்சின் மீதான பற்று ரொம்பவே உணர்வுப்பூர்வமாகியிருந்தது. போட்டியொன்றின் துவக்கத்தில் சச்சினின் அப்பா இறந்துவிட்டதாக அறிவிப்பு வந்ததும், நான் அங்கிருந்து எழுந்துவிட்டேன். ‘ஒக்கார்ரா.. சடகோபன் ரமேஷ் அடிப்பான் இன்னிக்கு’ என்ற அம்மாவையெல்லாம் என்ன செய்வது? எவாவும் அப்போது அங்குதான் இருந்தாள். எப்படியும் நான் போய் மொட்டை மாடியில்தான் நிற்பேன் என்பது அவளுக்கு தெரியும். என் ரகசியமான அழுகைகளுக்கான இடம் அதுதான். அன்றும் கிட்டத்தட்ட அழுதுவிடக் கூடிய நிலையில்தான் இருந்தேன். மாடிப்படிகளில் எந்த ஓசையும் எழுப்பாமல் மேலே வந்தவள், எங்கோ பார்த்தபடி, வந்து என் பக்கத்தில் நின்றுகொண்டாள். எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பத்து நிமிடங்கள் போயிருக்கும். ‘கீழ போலாமா?’ என்றேன். ‘ம்ம்’ என்றவள், என்ன நினைத்தாளோ, அருகில் வந்து, கைப்பிடி சுவற்றின் மீது அமர்ந்திருந்த என் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு முன்னே நடக்க ஆரம்பித்தாள்.

அந்த ஒரே நொடியில், பாசாங்குகளற்ற அர்த்தமுள்ள உறவிற்குள் நாங்கள் வந்துவிட்டதைப் போல இருந்தது.

முன்பு சேர்ந்திருந்த சுரணையால், அவர்கள் வீட்டிற்கு போவதை அப்போது முழுமையாக நிறுத்தியிருந்தேன். ஆனால், எவாவால் கிரிக்கெட்டைக் காரணமாக வைத்து எங்கள் வீட்டிற்குள் அடிக்கடி நுழைய முடிந்தது. மதியத்தில் துவங்கி முன்னிரவு வரை தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போது, கண்ஜாடைகள், காரணமுள்ள தொடுகைகள் என என்னைக் கலவரத்திலேயே வைத்திருப்பாள்.

அப்படியொரு நாளில், தண்ணீர் குடிக்க அடுப்பங்கறைக்கு நான் போனப்போது, பின்னாலேயே வந்து கட்டியணைத்துவிட்டு பின்கழுத்தில் ஒரு முத்தம் பதித்துவிட்டு போய்விட்டாள். அவள் பூப்பெய்திவிட்டதை எனக்காக பிரத்யேகமாக நிரூபணம் செய்துவிட்ட தருணம் அது. நான் மூச்சுவாங்கிக்கொண்டு நெடுநேரம் உள்ளேயே நின்றிருந்தேன். அவள் உள்ளே வந்துவிட்டுப் போனதை எவரேனும் பார்த்திருக்கக் கூடும் என்ற அச்சம்தான் என்னை அப்போது முழுமையாக ஆட்கொண்டிருந்தது. மேலும் இரண்டு மூன்று லோட்டா நீரை விழுங்கிவிட்டு, நேரத்தைக் கடத்துவதைப் போல கழிவறைக்குள் கொஞ்சம் தஞ்சமிருந்தேன். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்து, ஹாலுக்கு வந்தபோது கங்குலி-டிராவிட் இணை ஏதோ உலக சாதனை ரன்குவிப்பு நிகழ்த்தியதாக எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எவா டிவியைப் பார்த்தபடி, கடைக்கண்ணை என்பக்கமாக உருட்டினாள். நான் வந்தமர்ந்த அடுத்த பந்தில், சச்சினுக்கு ஸ்டம்ப் எகிறியது. எல்லோரும் அமைதியானபோது, எவா மட்டும் சிரிப்பைத் தாளமுடியாமல் வாயைப் பொத்திக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தாள். அவளும் என்னை காலி செய்துவிட்டிருந்ததின் சிரிப்பு அது.

‘அறிவிருக்கா நாயே? கிச்சன்ல வந்து அப்டி பண்ணிட்டு போயிட்ட..’ அடுத்த நாள் மதியம் வலுக்கட்டாயமாக அந்த தருணத்தைப் பேச்சில் கொண்டுவந்தேன். அவள் எப்படியும் மேற்கொண்டு அதைப் பற்றி பேசவோ, என்னைப் பேசவிடவோ செய்யமாட்டாள் என்றுதான் நினைத்தேன்.

‘என்ன அறிவு பத்தல எங்களுக்கு? உங்க டைட்டானிக் ஹீரோயின் மாதிரி கிஸ் பண்ணனுமோ?’ எனக்கு அடிவயிற்றில் ஏதோ கவ்வியது போல இருந்தது. ஒரு விதத்தில், அவள் இத்தனை பகிரங்கமாக பேசியது கொஞ்சம் மெலிதான அருவருப்பாகக்கூட இருந்தது. அசடுவழிவதைத் தாண்டி எதுவுமே எனக்கு பேச வரவில்லை.

கோடை விடுமுறையின் எஞ்சிய அவ்விரு வாரங்கள் முழுக்கவே எனக்கு மட்டும் குளிரடித்துக் கொண்டிருந்தது. உலகின் சகல சந்தோஷங்களும் வந்து என்னிடம் சேர்ந்து கொண்டதாக தோன்றிய நாட்கள் அவை.

கிடைத்த வேகத்தில், கிடைக்கப்பெற்றதை இழந்துவிடும் ராசி எனக்கு இருக்கிறது. அந்த மாதக்கடைசியில் வாடகை வாங்க வந்த குடியிருப்பின் மேலாளர் சொல்லித்தான் எவாவின் குடும்பம் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தோடு வீட்டை காலி செய்யப் போகிறார்கள் என்று தெரியவந்தது. ரோஸ்லின் அத்தைக்கு, அம்மாவைத் தவிர யாருடனும் நெருக்கமான சினேகம் கிடையாதுதான். இருந்தும், அம்மாவுக்கும்கூட அவர்கள் வீட்டை காலி செய்யப்போகும் விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை.

‘எனக்கே என்ன செய்யப்போறேன்னு தெரியாமதான் இருந்தேன்.. நாலு மாசமாதான் அவரும் மறுபடியும் ஒன்னா இருக்கலாம்ன்னு பேச ஆரம்பிச்சாரு. ஒருவாட்டி ஸ்கூள்ல கூட வந்து பாத்துட்டும் போனாரு..’

‘அவரும் இங்கயே வந்து இருந்துட்டா என்ன?’

‘எல்லாரும் எல்லாமும் பேசியாச்சு இங்க.. அவரு இந்த ஊரே வேணாம்ங்கறாரு.. கேட்டு வாங்கி புனேக்கு மாத்தலாயிருக்காரு இப்ப.. அங்கயே செட்டில் ஆகலாம்ன்னு யோசன.. பாக்கலாம்.. எனக்கும் அங்கவொரு க்றிஸ்டியன் ஸ்கூள் வேக்கன்ஸிக்கு பேசிருக்காரு..’

‘இங்க ரிசைன் பண்ணியாச்சா? எவாக்கு ஸ்கூல் டீசிலாம்’ அதுவரைக்கும் மூன்றாவது மனிதனாக இந்த உரையாடலைப் புரிந்தும் புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவளது பெயர் வந்ததும் கண்கள் பெருகிவிட்டன. மேற்கொண்டு அவர்கள் பேசுவதில் எனக்கு எந்த நாட்டமும் இல்லை. எவாவைப் பார்ப்பதற்காக எழுந்து அவர்கள் வீட்டிற்கு போனேன். வாசலில் நின்று சுந்தர் அம்மாவிடம் எவா பேசிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.

‘உனக்கு எப்ப தெரியும்?’ சுந்தர் அம்மா போனதும் கேட்டேன்.

‘ஏன் இப்போ.. நா அழனுமா உனக்கு?’

‘சொல்லு.. எப்ப தெரியும்?’

‘கொஞ்ச நாளாவே.. அம்மாவ வந்து அப்பா ஒன்ஸ் பாத்துட்டு போயிருக்காரு.’

‘உன்ன பாக்கவே இல்லையா? நீ மேஜரானது தெரியும்ல அவருக்கு.. அதுக்குக்கூட எதும் பேசலயா?’

‘ப்ளீஸ்..’ – ‘நம்மைப் பற்றி மட்டும் பேசலாம்’ என்று அறிவுறுத்தும் ‘ப்ளீஸ்’ அது.

‘பழைய மாதிரி பேசாமலே இருக்கவேண்டிதான.. ’

இப்போதும் அப்படியே நினைவிருக்கும் புன்னகை.

‘எதுக்கிப்ப சிரிக்கிற?’

‘அன்னிக்கு நீ மொட்டமாடில தனியா நின்னப்ப.. மேல வந்தேன்ல.. அன்னிக்குதான் ஃபைனலைஸ் ஆச்சு’ சொல்லிய பின்னர் அந்த சிரிப்பு அப்படியே அவள் முகத்தில் இருந்தது. மேற்கொண்டு எதுவுமே பேசாமல் நான் திரும்பி வந்துவிட்டேன். அவளும் பின்னாலிருந்தெல்லாம் என்னை அழைக்கவேயில்லை. எந்த நேரத்திலும் சிந்திவிடக்கூடிய நிலையில் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருந்த அவளது கண்ணீர் அப்போது நிச்சயம் கரையைக் கடந்திருக்கும்.

பிரிவின் துயரத்தைப் பூதாகரமாக்க என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்து முடித்துவிட்டாள். உள்ளிருப்பவற்றை ஒளிவுமறைவற்று உணர்த்தி, உடனிருக்கும் நாள் வரை உண்மையாய் இருந்துவிட்டுப் போக துணிந்திருக்கிறாள். எதிர்கொள்ளவிருக்கும் உண்மையை லட்சியம் செய்யாமல், எஞ்சியிருக்கும் நாட்களை அர்த்தப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு என்னை வாதையில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தாள். அவள் பிரியப் போகிறாள் என்ற நிஜத்திற்கு என்னை தயார்ப்படுத்தி கொள்வதைத் தவிர, எனக்கு வேறு மாற்று வழியில்லை. அழுவதற்கு மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டேன் – அவர்கள் காலி செய்துவிட்டு புறப்படும் வரை அவளைச் சந்திக்கவே வேண்டாம் – அவளும் அதே முடிவிற்குதான் வந்திருப்பாள் போலும்.

அன்றிலிருந்து ஆறாவது நாள், நான் பள்ளி முடிந்து வரும்போது, குடியிருப்பின் வாசலில் ஒரு மினி லாரி நின்று கொண்டிருந்தது. அப்படியே எங்காவது ஓடிப்போய்விட்டு, அந்த லாரி கிளம்பியதும் வரலாமா என்று தோன்றியது. விறுவிறுவெனப் போய் வீட்டிற்குள் பதுங்கிக் கொண்டேன். வேலையாட்கள் சாமான்களை மாடிப்படிகளில் உருட்டி இறக்குவது கேட்டபடி இருந்தது. அந்தச் சத்தம் ஓய்ந்தபோது, ஒரு பதற்றம் பெருகி காதை அடைத்தது.

வெளியே ரோஸ்லின் அத்தையும் அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதாக தெரிந்தது. நடுநடுவே விசும்பல்கள் கேட்டன. என்னையும் மீறி எழுந்து வெளியே வந்தேன். என்னைப் பார்த்து ஒருமுறை தலையசைத்துவிட்டு அத்தை புறப்பட, உடன் அம்மாவும் வழியனுப்பப் போனார். பின்னால் போகலாமா? ஒருமுறை மட்டும் அவளைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம்தானே? விரும்பி அந்த வலியை ஏற்க நினைத்தேன். அதைவிட அவளுக்கும் அப்படியொரு வலியைக் கொடுக்க விரும்பினேன். அதை மட்டும் கடத்திவிட்டால் கூட ஆழ்மனம் கொஞ்சம் ஆத்ம சுகம் அடையும். யோசித்துக் கொண்டிருக்கும்போதே, செருப்புகளின் அந்த பிரத்யேக தேய்மான ஒலி, பொறுமையாக எங்கள் வீட்டை நோக்கி வருவது தெரிந்தது.

நான் சுதாரிப்பதற்குள் எவா வீட்டிற்குள் வந்திருந்தாள். சிறு வார்த்தைக்கும் கூட அவகாசமளிக்காமல் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்டாள். யாரும் பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் எதுவுமின்றி அவளை மட்டுமே என்னால் முழுமையாக அப்போது நினைக்கமுடிந்தது. அவள் முகத்தில் அப்போதிருந்தது, புன்னகையா சோகமா என்பதை என்னால் எப்போதும் வரையறுக்க முடியாது. எதையும் யோசித்துவிட அனுமதிக்காதவள் போல, நிலுவையிலிருந்த அந்த முத்தத்தை அழுத்தமாக பதித்துவிட்டு, கண்களை மூடியபடி பின்னகர்ந்து, என்னைத் திரும்பியே பார்க்காமல் போய், காத்திருந்த வாகனத்தில் ஏறிக்கொண்டாள்.

***

மயிலன் ஜி சின்னப்பன்

5 COMMENTS

  1. பதின்ம வயதின் பிரளயம் ..
    அசத்தலான எழுத்தில்!
    👌👌💐💐

  2. இவாஞ்சலின்ங்கிற பேர ஏவான்னு கூப்பிடறதுல இருந்து தொடங்கிய சுவாரஸ்யம், ஏவா கூட நாயகனுக்கு இருக்கிற காதல், அவனோட வெள்ளந்தியான மனசு. அவங்களுக்குள்ள காதல் வளர்ற தருணம், இறுதியா அவ அவனவிட்டு பிரிஞ்சு போகும்போது கட்டிப்பிடித்து விடைபெற்று செல்லும்வரை தொடருது. அவங்க காதல் கதையை கூடவே இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வைக் கொடுத்தது உங்க எழுத்து!

  3. ரொம்ப நாளாச்சு,இப்படி ஒரு காதலுக்குள் புகுந்து. கரையேறி வந்து காத்திருந்த அந்த வாகனத்தில் நானும் ஏறிக்கொள்ளலாமா என்று கூடத் தோன்றிற்று.
    நன்றி 😍😍🙌🏻

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here