Monday, October 14, 2024
Homesliderஎல்லை நீத்த தமிழ் படைப்புக்களம் (கட்டுரை)

எல்லை நீத்த தமிழ் படைப்புக்களம் (கட்டுரை)

நாஞ்சில் நாடன்

(இந்த மாதம் வெளிவரயிருக்கும் இசூமியின் நறுமணம் சிறுகதைத் தொகுப்பு குறித்த எழுத்தாளார் நாஞ்சில்நாடனின் மதிப்புரை.)

சூமியின் நறுமணம்’ என்ற தலைப்பிலான ரா.செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுப்பு பன்னிரு சிறுகதைகள் கொண்டது. இவற்றுள் பல கதைகள் இணையத்தின் மூலம் வாசிக்க வாய்த்தவை. முன்னுரை எழுதும் பணிக்காக ஒருசேர வாசித்தேன். நான் முன்னுரை எழுதும் எந்த நூலையும் இரண்டு முறை வாசிப்பேன். எனவே இரண்டாம் முறையும் வாசித்தேன். புத்தக வடிவில் என் கையில் கிடைத்ததும் இன்னொரு முறையும் வாசிப்பதற்கான தூண்டுதல் இக்கதைகளில் உண்டு.

பன்னிரு கதைகளில் நான்கு கதைகள் நீங்கலாக மற்றெல்லாம் ஜப்பானிய சூழலில் எழுதப்பெற்றவை. அவற்றுள் நடைமுறை, அலுவலகம், குடும்பம், வாழ்க்கை, மாநகர இயக்கங்கள் மற்றும் ஜப்பானிய தேசத்தின் குணநலன்கள் நுட்பமாகப் பேசப்படுகின்றன.

வழக்கமாகப் பிறமொழிக் கதைகளை, ஆங்கிலம் வழித் தமிழ் மொழிபெயர்ப்புகளாக வாசிக்கும்போது நாம் ஒரு அந்நியத்தன்மையை உணர்வோம். விதிவிலக்குகள் இருக்கலாம். என்றாலும் அதே பாடுபொருள்கள், மூலமே தமிழாக அமையும்போது வாசிப்பின் வசீகரம் அதிகரிக்கிறது. தலையாய எடுத்துக்காட்டு மூத்த தமிழ் எழுத்தாளர், கனடாவில் வாழும் அன்னார் அ.முத்துலிங்கம் அவரை மூத்த இலங்கை எழுத்தாளர் என்று பிரித்துப் பேசுவதில் எனக்கு ஒவ்வாமையுண்டு. மேலும் சில இலக்கியவாதிகள் பெயர் குறிப்பிடலாம். நாகரத்தினம் கிருஷ்ணா, ஷோபா சக்தி, காலம் செல்வம் என்ற அருளானந்தம், டி.சே.தமிழன் என்று அறியப்படும் இளங்கோ, ஆசி.கந்தராசா, நொயல் நடேசன், வ.ஐ.செ.ஜெயபாலன், தமிழ்நதி என்று சிலர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.

புலம்பெயர்ந்து இருநூறு ஆண்டுகளோ, இருபதாண்டுகளோ அவர்கள் மூலமாகத் தமிழ் வாசகனுக்கு நேரடியாகத் தெரியவரும் அந்நிய மண்ணின் மரபுகள் உண்மையான அனுபவங்களாகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, வளைகுடா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் பண்பாடுகளை நேரடியான தமிழ் எழுத்தாளர் அனுபவமாகவே நமக்கு இன்று வாசிக்க இயலும். ஆனால் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நிலப்பரப்புகளின் ஆக்கங்களை மொழிபெயர்ப்பு மூலமாகவே இதுவரை அறிந்த்து வந்தோம். ஆனால் அண்மைக்கால அனுபவம் வேறு. அந்த வகையில் ‘இசூமியின் நறுமணம்’ எனும் இந்தத் தொகுப்பின் எட்டு கதைகள் மூலம் ஜப்பானியப் பண்புகளைப் படைத்துக்காட்ட முயலும் ரா.செந்தில்குமாரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது, வரவேற்கத் தகுந்தது. ‘எல்லை ஒன்றின்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ என்றுதான் பாரதியார் கம்பனையே முயற்சி என்கிறார். அந்த மதிப்பீட்டிலேயே ரா.செந்தில்குமாரின் இந்தக் கதைகளையும் முயற்சி என்கிறேன். ரா.செந்தில்குமார் என்பது பெயர்தான் என்றாலும் டோக்கியோ செந்தில் எனும் பெயரிலேயே நண்பர் பலரும் அறிவார் அவரை. எதிர்காலத்தில் ‘நாமமும் அனுமன் என்பேன்’ என்று கம்பன் கூறுவதைப்போல தமிழிலக்கியத்தில் பெயர்நிலைக்க அவர் முயல வேண்டும்.

காதலியின் திருமண வரவேற்புக்குப் பரிசுப்பொருள் தேர்ந்து வாங்கிப்போகும் காதலனின் மெல்லுணர்வுகளும் வஞ்சிக்கப்பட்ட தாம்பத்யத்தின் வல்லுணர்வுகளுமாக மிடைந்து காட்சிதரும் கதை ‘மலரினும் மெல்லிது’. நொடித்துப் போனதொரு குடுப்பத்துப் பெண்டிரின் கையறு நிலையை சூசகமாக உணர்த்தும் கதை ‘மடத்து வீடு’. வளர்ந்ததொரு கழுகின் உச்சியில் ஏறி இன்னொரு கழுகுக்குத் தாவும் சாகசப் பயிற்சி இருப்பவர் மட்டுமே இக்கதைகளின் உளவியல் அறிந்து அனுபவிக்க இயலும். உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் கோஷம் உரத்துக் கேட்ட காலத்தின் கதை ‘அனுபவ பாத்தியம்’. எத்தரப்பில் நின்றும் நியாயத்தை அத்தனை எளிதாக உரைத்துவிட இயலாது என்பதை வாசகனுக்கு அர்த்தப்படுத்தும் சிறுகதை. மனித வாழ்க்கையில் சூதும் வாஞ்சனையும் புதிய சங்கதிகள் அல்ல. அதன் ஒரு வடிவம் ‘அறமெனப்படுவது யாதெனக் கேட்பின்’ எனும் கதை. வஞ்சிக்கப்பட்டவரின் அவமானமும் வீழ்ச்சியும் அதன் காரணங்களும் பேசும் கதை.

மேற்சொன்ன நான்கும் சமகாலத் தமிழ்நாட்டுச் சூழலில் உரைத்தல் படும் கதைகள். மீதி எட்டும் ஜப்பானியப் பின்புலம். ரா.செந்தில்குமார் பதினெட்டு ஆண்டுகளாக ஜப்பான் நாட்டில் டோக்கியாவில் வாழ்பவர். இந்தத் தொகுப்பின் ஜப்பானியத் தளத்தில் நடக்கும் கதைகளை வாசிக்கும்போது 2018-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜப்பானில் வாழ்ந்த ஒன்பது நாட்களும் எனக்கு நினைவு வந்தன. முழுமதி அறக்கட்டளையின் அழைப்பில் சென்று வந்தேன். ரா.செந்தில்குமார் – காயத்ரி தம்பதியினரும் கவின், கவிதா என்ற அவர் மக்களும் – எனக்கு பேரனும் பேத்தியும் – காட்டிய அன்பு என்றும் நிலைத்திருக்கும் நெஞ்சில். அஃதே போன்று ரகுபதி ராஜசேகர் – ரம்யா தம்பதியினரும் அவர்தம் இரு பெண்மக்களும். உலகெங்கும் நமக்கு இன்று பேரன் பேத்திகள்.

ஜானி வாக்கர், புளூ லேபில், ஜாக் டேனியல்ஸ், க்ளென் லிவெட், க்ளென் ஃபிடிஷ் விஸ்கிகளுக்கு சற்றும் பின்வாங்காத ஜப்பானிய சிங்கிள் மால்ட் விஸ்கியொன்று பருகினேன் சிலநாட்கள். தொகுப்பின் கதையொன்றில் அந்த விஸ்கி குறிப்பிடப் பெறுகின்றது. யமாசாகி என்பது அதன் பெயர். எதற்குச் சொல்கிறேன் எனில் மலர்கள், உணவுகள், இசை எனப் பல குறிப்புகள் உண்டு இந்த எட்டுக்கதைகளிலும்.

ஜப்பான் பயணத்தின் போது தகவலாகத் தெரிந்து கொண்ட விடயம் ஒன்றுண்டு. அங்கு பிரசவங்களின் போது சிசேரியன் என்பது மிகமிக அரிது என்பதது. இன்னொன்று ஆண்டுதோறும் அந்நாட்டில் நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை. ‘அன்பும் அறனும் உடைத்தாயின்’ எனும் சிறுகதையில் சிவநேசன் எனும் மலேசியத் தமிழரின் தற்கொலை அந்தத் தகவலை உறுதி செய்தது. இன்னதென அறிகிலாத காரணத்திற்காக அங்கு வழக்கமாக நடக்கும் இரயில் முன் பாய்தல்களில் இதுவுமொன்று என வாசகனால் இயல்பாகத் தாண்டிப் போக இயலாதபடி சித்தரிக்கப்பட்ட கதை.

சாவு பற்றிய இன்னொரு கதை ‘செர்ரி பிளாசம்’ ஆனால் இங்கு மரணம் தற்கொலையல்ல, கொலையல்ல, நோய். இளம் கணவர் உடலுடன் காதல் மனையாட்டி ஊர் திரும்பும் கதை. என்னை சாலவும் பாதித்த கதை. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெதர்லாண்டில் இருந்து பம்பாய் – திருவனந்தபுரம் மார்க்கமாக சடலமாக நாகர்கோயில் திரும்பிய என் தம்பியின் நோய்ப்பட்ட மரணத்தை நினைவூட்டியது. உடன் பயணித்து வரும் பிணத்துக்காக ஊரில் காத்திருந்தவரும் அறிவார் அதன் வலியை.

‘கனவுகளில் தொடர்பவள்’ என்ற தலைப்பு காதலை, காமத்தை நினைவுறுத்தக் கூடும். ஆனால் கதைப்பொருள் அவையல்ல. நூதனமான அனுபவம் தரும் கதை. குளிரும் மதுவும் தனித்த இரவுகளுமாகக் கடந்தும் முடிவிலே மர்மம் தெளிவுறாதக் கதை.

‘ஒரு அறைக்குள் தமது வாழ்க்கையை சுருக்கிக் கொண்டவர்கள் ஜப்பானில் பதினைந்து லட்சத்திற்கும் மேலான போது’ என்றொரு வரி நம்மைக் கவலைக்கு உட்படுத்தும் கதை – ‘சிடியா கிராசிங். இது வேறொரு அனுபவம்.

‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பின் தலைப்புக் கதை. அலுவலக நண்பர்கள் ஆறுபேர் குட்டை மேசையில் குழுமி அமர்ந்து கொண்டாட்ட மதுபாவிப்பில் உரையாடும் கதை. பாலியல் தொடர்பான செய்திகள் விளம்பப்படும் உரையாடல். ஆனால் ஒருசொல்லும் வாசகனை வக்கிரத்தின்பால் இட்டுச் செல்வதில்லை. வட இந்திய ‘சாய் கா துக்கான்’ என்று அழைக்கப்படும் சாயாக்கடைகளில், வாடிக்கையாளர்கள் சிலர் கேட்பார்கள் ‘கொஞ்சம் மலாய் சேர்த்துப் போடுங்கள்’ என்று பாலியல் சம்பவங்கள் வரும் கதைகளில், நாவல்களில், எழுதியவரைப் பார்த்து, படைப்பாளப் பதிப்பாளர்கள், பாலியல் சம்பவங்களை ‘கொஞ்சம் ஏத்தி எழுதிக்கொடுங்கள்’ என்று கேட்பதுண்டு எனும் செய்தி நினைவுக்கு வருகிறது.

எட்டு மாதங்களாக, வாரம் முன்று நாட்கள் மட்டும் மென்பொருள் நிர்வகிக்க நண்பர்களின் அலுவலகத்துக்கு வரும் இசூமி எனும் இளம் பெண்ணிலிருந்து பகரும் மேனி வாசம் பற்றிய உரையாடலே மேற்சொன்ன சிறுகதை. அற்புதமான கடைசி வரிகளுடன் கதை முடிகிறது. அறிவார் அறிவார், அறியார் அறியார் அந்த மணத்தின் தனித்துவத்தை.

‘தானிவத்தாரி’ எனும் கதைத் தலைப்பு ஜப்பானியச் சொல். அதன் பொருள் கவிதை போலிருக்கிறது – அடர்ந்த பள்ளத்ததாக்கைக் கடந்து மற்றொரு பள்ளத்தாக்குக்குச் செல்லும் பாடல். இந்த கதையின் கதாபாத்திரம் கஷூமி சிறப்பான படைப்பு.

சிறுகதைகளில் சில நாவலுக்கான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. ரா.செந்தில்குமார் முயன்று பார்க்கலாம். அதற்கான அனுபவப் பரப்பு அவருக்கு உண்டென இக்கதைகள் உணர்த்துகின்றன. ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ என்பார் குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுக்கோ.

***

வாழ்த்துக்களுடன்
நாஞ்சில் நாடன்
கோயம்புத்தூர்.


RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular