கார்த்திக் பாலசுப்ரமணியன்
நான் என் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. முதலில் கல்லூரிப் படிப்பு பின்பு வேலை போன்ற காரணங்களுக்காக என் சொந்த ஊரான இராஜபாளையத்திலிருந்து வெளியேறி கோவை, நொய்டா, சென்னை, சிட்னி போன்ற பெருநகரங்களில் வசித்திருக்கிறேன். தற்போது பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறேன்.
இதுவரையில் வெளியான என் சிறுகதைகளிலும் நாவலிலும் நிலமாக வந்தவை எல்லாம் மேற்சொன்ன இடங்களைச் சுற்றியே எழுதப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இராசை போன்ற ஒரு சிறு நகரத்திலிருந்து வெளியேறி, பெருநகரங்களின் நெருக்கடிகளாலும் அலைச்சல்களாலும் அழுத்தி வெளியே தள்ளப்பட்டு, பின்பு வாழ்ந்திருத்தலின் பொருட்டு அவற்றுக்குப் பழகி, மெல்ல மெல்ல வேர் பற்றி எழுந்துவரும் ஒரு தலைமுறையின் பிரதிநிதியாகவே இக்கதைளில் அவற்றைப் பற்றி எழுதியிருக்கிறேன். இந்த மாற்றத்தின் போது நேர்கொண்ட அவமானங்களும் பலவீனங்களும் தோல்விகளும் தொடர்ந்து என் கதைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன.
இத்தகைய இடப்பெயர்வுகளின் காரணமாய் கிடைத்த பெரும்பாலான அனுபவங்கள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்த ஒரு தலைமுறைக்கே பொதுவானவை. அதனால் தான் நட்சத்திரவாசிகளின் நித்திலன் கதாப்பாத்திரத்தோடு நாவலை வாசித்த பலரும் தங்களை நெருக்கமாகப் பொருத்திக் கொண்டனர். நாம் பிறந்த இடமும் சுற்றியுள்ள மனிதர்களுமே நம்முடைய மனப்போக்கையும் அதன் வழியே உருவாகி வரும் நமது ஆளுமையையும் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றனர். நாவலில் வரும் நித்திலன்-மீராவுடைய அத்தியாயங்கள் அவ்விருவரின் பிரச்சினை மட்டுமல்ல, அவற்றை இருவேறு நிலங்களின் தாக்கத்தால் நிகழும் அகச்சமர்கள் எனவும் கொள்ளலாம்.
சமீபத்தில் தமிழினி மின்னிதழில் வெளியான “கோவா” சிறுகதையில் இப்படி ஒரு வசனம் வரும் “இடம்னா இடம் மட்டுமில்லயே. மனுஷாலாம் சேர்ந்துதானே ஒரு இடம்? இடம் தெரிஞ்சா தானே மனுஷன் தெரியும். சமயங்கள்ல வைஸ் வெர்ஸா.”
நேரடியாக என் மண் சார்ந்து, சொந்த ஊர் சார்ந்து எழுதிய கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பூர்வீகத்தின் வேரை அறியப் பயணப்படும் ‘முடிச்சு’ சிறுகதையும் இளம் பிராயத்து அக்காக்களின் மேலிருக்கும் பிள்ளைக் காதலைப் பேசும் முதல் தொகுப்பின் தலைப்புக் கதையான ‘டொரினா’வும் அவ்வகையில் சேர்த்தி. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘முன் நகரும் காலம்’, ‘சக்கரம்’ ஆகியவற்றையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.
மற்றவையெல்லாம் சொந்த நிலம் என்றில்லாமல் சொந்தமாக்கிக் கொண்ட நிலங்களைப் பற்றி எழுதியவை. அதிலும் குறிப்பாக அக்கதைகள் அப்படியான இடப்பெயர்தல்களின்போது எதிர்கொண்ட முரண்களை, சிடுக்குகளை, இன்னபிறச் சிக்கல்களைப் பேசுகின்றன. ஒரு பக்கத்தில் பாரதூரங்களைச் சுருக்கியும் அதே நேரத்தில் அண்மையிலிருந்தாலும் விலக்கியும் வைக்கும் தொழில் நுட்பங்கள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் இராசை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் ஒட்டுமொத்த உலகுமே சந்திக்கும் பிரச்சினைகள் இவை என்று தோன்றுகிறது.
என்னுடைய ‘மண்’ சிறுகதை, பெயருக்கேற்றாற் போல முற்றிலுமாக நிலம் சார்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு கோணங்களில் பேச முனையும் படைப்பு. உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் சந்திக்க நேரிடும் பல்வேறு அக மற்றும் புறச் சிக்கல்களைப் பேசுகிறது. இன்றைய ஆஸ்திரேலியாவே வெறும் இருநூற்றுச் சொச்சம் வருட வரலாற்றைக் கொண்டது. இங்கிலாந்தின் குற்றவாளிகளை அங்கிருந்து நாடு கடத்திக் குடியேற்றக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தீவு. அதன் பொருட்டு அங்கே கிட்டத்தட்ட 45000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை ஒடுக்கி விரட்டிவிட்டு பிரிட்டிஷ் அரசு தன் காலனியை அங்கு அமைத்தது. பிரிட்டிஷ்காரர்களே அந்நிலத்தைப் பொருத்தவரையில் வந்தேறிகள். இருந்த போதும் பிற்காலத்தில் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து குடியேறியவர்களிடத்தே அங்கிருக்கும் சிலருக்கு ஒருவித கசப்பு மனப்பான்மை புரையோடியிருக்கிறது. இந்தப் பிரச்சினையை மைய இழையாகக் கொண்டு எழுதப்பட்ட கதையே மண். இக்கதை இப்போது வெளிவந்திருக்கும் ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ தொகுப்பில் இருக்கிறது. இது வெளிவந்த காலத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்ட கதையாகும்.
முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘ஐபோன் எக்ஸ்’ கதையும் இப்படியான ஒரு கதை தான். ஜார்கெண்ட் போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தின் தொலைதூரக் கிராமத்திலிருந்து வந்த ஒருவன் சென்னை போன்ற பெருநகரத்தின் ஆடம்பரத்தை ஏற்றுக்கொள்ளவியலாத மனநிலையைப் பேசுகிறது இக்கதை.
கோவா போன்ற ஒரு நகரத்தை செய்திகள் வழியாகவும் பிறருடைய அனுபவங்கள் வழியாகவும் தெரிந்து வைத்திருப்பதற்கும் நேரடியாக அனுபவித்து உணர்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. உற்று நோக்கும் ஒருவனிடத்தில் எந்தவொரு நகரமும் தன்னை அடுக்கக்கடுக்காக திறந்துகொள்ள மறுப்பதில்லை. வேண்டியதெல்லாம் சற்று அதிகமான மெனக்கெடல் மட்டுமே. அப்படியாக நான் சந்தித்த ஓர் எதிர்பாராத அனுபவத்தைக் கதையாக எழுதிப் பார்த்தது தான் ‘கோவா’ சிறுகதை.
மேற்கத்திய நாடுகளின் குடும்ப அமைப்பு பற்றி இங்கே பொதுவாக கட்டமைக்கும் பிம்பத்துக்கும் உண்மைக்கும் நிறைய இடைவெளி உண்டு. சிட்னியின் ஃபெளமிங்க்டன் சந்தைக்குப் போய் திரும்பும் வழியில் அந்த வாரத்துக்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டு தள்ளு வண்டியைத் தள்ளியபடி, ஆதுரமாக ஒருவரை ஒருவர் கட்டியணைத்தபடி நடந்துபோய்க் கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியைப் பார்த்த தருணத்தில் உதித்த கரு தான் பின்பு முதல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘இரு கோப்பைகள்’ சிறுகதையாக விரிந்தது.
வேறுபட்ட நிலங்களும் அவற்றின் பண்பாட்டுக் கலாச்சார முறைமைகளை எதிர்கொள்ளும் வாய்ப்புகளும் நம் அனுபவ எல்லைகளை விரிக்கின்றன. அவ்வனுபவங்கள் வாழ்வின் புத்தம் புதியதொரு கோணத்தைத் திறந்து காட்டுகின்றன. உள்ளோடும் படைப்பு மனத்தை அவ்வனுபவங்கள் சந்திக்கும் புள்ளியில் அவை கதைகளாகப் பரிணமிக்கின்றன. என்னுடைய சில கதைகளில் நேரிடையாகவும் பல கதைகளில் மறைமுகமாகவும் நான் அத்தகைய அனுபவங்களையும் அவற்றின் வழி நேர்கொண்ட மனிதர்களையும் பற்றியுமே தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இனியும் எழுதுவேன்.
***
கார்த்திக் பாலசுப்பிரமணியன்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். டொரினா, ஒளிரும் பச்சைக் கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் நட்சத்திரவாசிகள் என்கின்ற நாவலும் இவரது படைப்புகளாகும். க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி-2020 -ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது.
தற்போது நட்சத்திரவாசிகள் நாவலுக்கு சாகித்ய அகாடமியின் 2022-ஆம் ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்: karthikgurumuruganb@gmail.com
உங்கள் ஒவ்வொரு கதை பற்றியும் ஒரு சிறிய அறிமுகமாகத் திகழ்கிற இந்தக் கட்டுரையை மிகவும் ரசித்தேன். கதைகளை வாசிக்க ஆசை. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 நன்றி