Wednesday, October 9, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்என் படைப்பில் என் நிலம்

என் படைப்பில் என் நிலம்

பிரமிளா பிரதீபன்

ன் நிலம் பற்றிய நினைவுகளுக்குள் செல்வதில் அனேகமாக நான் விருப்பமுள்ளவளாகவே இருக்கிறேன். எப்போது சென்றாலும் என்னை அரவணைக்கும் உணர்வை மொத்தமாய்ச் சிந்திடும் என் நிலத்தின் மீதான பிடிப்பும் ஈர்ப்பும் எத்தனை வருடப் பிரிவிற்கு பிறகும் குறையவேயில்லை.

என் ஆழ்மனதின் எல்லா நினைவுகளும் என் நிலத்தின் சம்பவங்களுக்கூடானதாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றன. ஊரிலிருந்து வெளியேறி எங்கெல்லாமோ திரிந்துக் களைத்து எப்போதேனும் ஒரு நொடி ஆசுவாசிக்கையில் மறைந்திருந்த என் நிலத்தின் வாசனை ஏதோ ஒருவகையில் என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

அப்போது 2002-ம் வருடம். உயர்தரக் கல்வியை நிறைவுசெய்து எனது மேற்படிப்பிற்காகத் தலைநகரத்திற்குப் பிரவேசித்த ஆரம்பம். அந்நாட்களின் குறுகியகால மண்ணின் பிரிவும், அச்சொற்ப காலத் தொலைதூர ஏக்கமும் என்னை எப்படியெல்லாமோ வருத்தியதை உணர்ந்து அதிசயித்தேன். கிட்டத்தட்ட பித்தேறி நடமாடும் கிறுக்கியாய், ஊர் எல்லையைப் புதிதாய் மிதிப்பது போல் மண்ணைக் கட்டிக்கொண்டு மிதந்தேன். நடந்த பாதைகளில் விழுந்து மணிக்கணக்கில் கிடந்திருந்தேன். மண்ணை அள்ளிச் சுவைக்க முனைந்ததாய்க் கூட ஞாபகம். ஒரு ஆதிமனிதனின் அளவற்ற ஆரவாரத்தையொத்து எனக்கே புரியா மொழிகொண்டு மலைகள் மீதேறி கத்தித் தீர்த்தேன்.

அத்தனைத் தாகமும் சிலிர்ப்பும் எங்கிருந்து தோன்றியதென்றோ… சிறு பிரிவு நிரப்பிய வேதனையை எழுத்தின்வழி தணிக்க முயன்றதையோ நான் திட்டமிட்டுச் செய்ததாக நினைக்க முடியவில்லை. என்னைப் பிடித்தழுத்திய புதிய சூழலும் பொருந்திப்போகா நாட்களின் நகர்வும் சொந்த மண் மீதான மையலை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். எனக்கே தெரியாமல் வாய்க்கும் போதிலெல்லாம் எடையிழந்து பறக்கும் பஞ்சென்றாகி நினைவின் வழியில் என் மண்ணைத் தரிசிக்கத் தொடங்கியிருந்தேன். அம்மண்ணின் மீது நடந்தேறிய அத்தனை சந்தோச நிகழ்வுகளையும் இடையறாது அசை போடவும் ஆரம்பித்திருந்தேன்.

இது மிக முக்கியமான தருணம். இரு நூற்றாண்டுக் காலங்களாக நிலத்தின் உரிமைக்காகப் போராடி முடிவேயற்று தள்ளாடும் மலையகப் பின்புலத்தைச் சேர்ந்த ஒருத்தி எங்ஙனம் மண் மீதான மகிழ்வான தருணங்களை அசை போட முடியும்?

சாத்தியந்தானா?

பிரிவின் வலி தோற்றுவித்த அதிசயமென இதனைக் கொள்ளலாமா? இல்லையெனில் வாழுமிடத்தின் நிறைவுணர்வு கடத்தியப் பரவசமெனலாமா?

சொல்லத் தெரியவில்லை. என் நினைவுகளை எழுத்தில் பதித்து திருப்தியடைதலை ஏன் தொடங்கினேனென்றோ அல்லது தொடர்ந்தேனென்றோ காரணங்களை சேர்த்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எனது முதலாவது படைப்பான ‘பீலிக்கரை’ எனும் சிறுகதை துல்லியமான ஞாபகத்தின் பதிவெனவும் அது மலையகத்தின் முக்கியமான குறியீட்டுச் சொல்லெனவும் பின்நாளில் பேசப்பட்டது.

இப்படி ஆரம்பித்த எனது படைப்புலகம் நிலத்தின் சாரத்தை உறிஞ்சிக்கொண்டபடியே நீளத்தொடங்கியது. குறிப்பாக எனது ஆரம்பகால எழுத்துக்களில் என் மண்ணின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வேகம் என்னிடம் அதிகமாகியிருந்ததை நினைவுப்படுத்தல் இங்கே பொருத்தமாயிருக்கக் கூடும்.

ஒவ்வொரு கோடிப்பக்கங்களதும் ஏதோ ஒரு திசையிலிருக்கும் பலா மரங்களும், வெள்ளை மண் சந்தியும், ஸ்டோர் லயங்களும், செண்டாக்கட்டி மலைகளும், நெத்திகாண்களும், தேயிலைப் பொட்டல்களும் தூரத்தே தெரிந்து மின்னும் ஊமையாறுமென என் மண்ணின் அடையாளச் சொற்களே எனது பிரதான கதைக்களங்களாக மாறியிருந்தன. நான் சேர்த்துக்கொண்டு விளையாடிய சின்னவா, கட்டையா, உக்குலி, பெரியப்பொண்னு, கினிகினி, சூரி, அம்மாளு போன்றோர் சுற்றிச்சுற்றி கதாபாத்திரங்களாகிப் போயிருந்தனர். தேயிலை நுனிக்குருத்தின் விசிலொலியும், பாக்குபட்டை சவாரியும், கள் தரும் மயக்க போதையும், கசிப்பு காய்ச்சும் பெரிய பானைகளும், அவ்வப்போதான பழமொழிகளும், சில கெட்ட வார்த்தைகளும் கதைகளுக்குள் இழையோடிய என் கொண்டாட்டங்களும் வலிகளும் மலையக மண்வாசனையைச் சிதறாமல் தருவதாகக்கூட சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நான் எப்போதெல்லாம் பயப்படுகிறேனோ… அல்லது கொண்டாடிக் களிக்கிறேனோ எப்போதெல்லாம் துக்கமும் நிர்க்கதியும் அடைகிறேனோ அப்போதெல்லாம் ஏதோ ஒன்றை எழுதத் துணிகிறேன். அனுபவத்தைவிடச் சிறந்த வழிகாட்டி வேறெதுவாக இருக்க முடியும்? நானும் எங்கெல்லாமோ பயணப்படுகிறேன். ஒரு கட்டத்தில் மலையகம் தானென்றாலும் தன்னை வெளிக்காட்டாமல் சிங்கள மக்களுக்கு மத்தியில் தம்மை ஒளித்து வாழும் ஒரு சூழலுக்குள் (காலி மாத்தறை) என்னைத் தந்து அவர்களையும் அந்த மண்ணின் மொழிக்கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டவளாய் ‘கட்டுபொல்’ எனும் நாவலை எழுதுகிறேன். ஏதோ ஒருவகையில் அம்மண்ணின் ஈரப்பதத்தையும் ஒளிந்து நெளிந்தாடும் வெயில் கோலங்களையும் என் எழுத்துக்குள் சேர்த்துக் கொண்டதாகவே நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இவர்களின் சிங்களம் கலந்த பேச்சு மொழியையும் கலப்புக் கலாசாரங்களையும் ஓரளவிற்கேனும் பதிவு செய்ததுடன் இந்நிலத்தினை, நிலத்தின் உற்பத்தியை, அவ்வுற்பத்தி அவர்களின் உயிரை உறிஞ்சும் விதத்தை இன்னும் ஒழுக்கத்தை அல்லது மீறல்களை, பயத்தை, முட்டாள்தனத்தை… தமக்கென்றில்லாத நிலத்துண்டுகளில் காலங்காலமாய் விவசாயம் செய்து பிழைக்கும் அவலத்தை… இப்படி ஏதோ ஒருவகையில் நிலம்சார் நினைவுகளைப் படைப்பிற்குள்ளாக்கும் முறைமையை இயல்பாக்கிக் கொண்டமையையும் அதற்கான அங்கீகாரமும் என் அதிர்ஷ்டம் தானென்பேன்.

வேறென்ன?

தொடர்ச்சியாயும் காலத்தின் நகர்த்தல் நிலத்தைத் தாண்டிய வேறு போக்குக்குள் என்னை தள்ளிவிடுகிறதா என்ன?

பின் ஏன் அகவுணர்வுகளையும் உளவியல் போக்குகளையும் என் படைப்புகள் வெளிப்படுத்துவதாகப் பேசப்பட வேண்டும். இருக்கலாம். சூழலின் தன்மையும் அது நம்மை நெருக்கும் முறைமையின் பிரதிபலிப்பும் பதிவாகும் அதிசய தருணங்களை நாமறிந்தா நகர்த்துகிறோம்?

ஆனாலும் நிலத்தையும் நிலத்தின் நினைவுகளையும் புதுப்பித்து அசைபோடும் படைப்பின் சுவைக்கு நிகராக வேறேதும் இல்லையென்பதை மறுப்போர் இருக்க மாட்டார்கள்.
புனைவினூடு ஒன்றை மீட்டிக்கொள்ளல்… பதிவு செய்தல் வலியுறுத்தல் அல்லது வெளிப்படுத்தத் துணிதல் இவையெல்லாவற்றிலும் சமூகப் பெறுமானமொன்று இருக்க வேண்டுமென ஆழமாக நம்புகிறவள் நான். எனவேதான் என் நிலம் பற்றிய நினைவுகளுக்குள் செல்வதில் அனேகமாக நான் விருப்பமுள்ளவளாகவே இருக்கிறேன்

***
பிரமிளா பிரதீபன் – இலங்கையில் உள்ள வத்தளையைச் சேர்ந்தவர். தற்பொழுது ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சிறுகதைத் தொகுப்பாக விரும்பித் தொலையுமொரு காடு யாவரும் பதிப்பகம்வழி வந்திருக்கிறது. மின்னஞ்சல் – pramilaselvaraja@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. பிரமிளாவின் அனைத்துப்படைப்புகளையும் படித்தவனல்ல. படித்தவரையில் அவற்றில் அவரது வாழ்நிலம்பற்றிய ஈடுபாடும் காதலும் கவனிக்கப்படும் வகையில் பதிவுசெய்திருக்கிறார் என்பதை மறுக்கமுடியாது. இவரைப்போலவே எம் முன்னோடி எழுத்தாளர்களான வ.அ.இராசரத்தினமும், எஸ்.பொன்னுத்துரை போன்றவர்களும் மண்வாசம் பதியும்படி பலபடைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.

    ஆனால் அவரது சமீபத்திய நான் விரும்பித்தொலையுமொரு காடு போன்ற தொகுப்புகளில் இடம்பெறும் படைப்புகளில் அவர் செவ்வீதமும் மனித மனங்களை உழுவதிலும் அவற்றின் வேதியியல், உயிரியல் பெறுமானங்களை ஆய்வதிலுமே அதிமாக ஈடுபட்டுள்ளமை தெரிகிறது. அதனாற்றான் போலும் அவர் // அகவுணர்வுகளையும் உளவியல் போக்குகளையும் என் படைப்புகள் வெளிப்படுத்துவதாகப் பேசப்படுகின்றார்.// இன்னும் சில ஆண்டுகள் கடந்தபின் அவரது முழுப்படைப்புகளையும் ஆயும் ஒரு மாணவன் இவை இரண்டையும் தவிர்த்து வேறொருமுடிவுக்கும் வரலாம். ஆக அவரது இவ் அவத்தையின் படைப்புக்களில் காணப்படும் ஒரு போக்கெனக்கொள்ளவேண்டுமே தவிர அதற்காக பிரமிளா பிரதீபன் சிணுங்கவோ, மூக்குசிந்தவோவேண்டியதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular