Thursday, June 13, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்என் படைப்பில் என் நிலம்

என் படைப்பில் என் நிலம்

வைரவன்

ழுகினசேரி’ இந்தப்பெயர் இருந்ததால் ‘புறப்பாடு’ என்கிற புத்தகத்தை நான் கையில் எடுத்தேன். அதற்குமுன் இலக்கியம் பற்றிய பெரிய புரிதல் இல்லாதவன் நான். உண்மையில் சொல்லப்போனால் அங்கிருந்துதான் என்னுடைய இலக்கிய வாசிப்பும் ஆரம்பித்தது. அதை யார் எழுதியிருக்கிறார்? அவர் யார் என்பதும்கூட அப்போது எனக்குத் தெரியாது. சரஸ்வதி திரையரங்கும் ஒழுகினசேரியின் சிலப் பகுதிகளை பற்றியும் இந்தப் புத்தகத்தின் சில பக்கங்களில் எழுதியிருந்ததாலேயே அதனை வாசிக்க ஆரம்பித்தேன். அதுதான் என்னை எழுதுபவனாக மாற்றியிருக்கிறது.

எழுத ஆரம்பித்த புதிதிலும் சிறுகதைகள் ஒழுகினசேரியில் இருந்தே பிறந்தன. பால்யம், பதின்பருவம், அது ஒரு கனவுபோல எல்லா இரவுகளிலும் கண்ணை மூடியவுடன் தொடரவேண்டும். பெங்களூருவின் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் நின்றுகொண்டு நிலாவைப் பார்க்கும்போது தென்னை ஓலைகளின் இடைவெளிவழி தெரியும் நிலாவைப் பார்க்கத்தோன்றும். மழைப் பெய்யுந்தோறும், தாடகை மலையை, தோவாளை மலையை, வேளி மலையை அணைத்துச் செல்லும் கருமேகக் கூட்டங்கள் ஞாபகம் வரும். எந்தவொரு நடுத்தர உணவகத்தைக் கண்டாலும் கடைக்கு வெளியே புரோட்டா கல் கிடக்கிறதா என்று கவனிக்கத் தோன்றும். ராத்திரி கொத்து புரோட்டா அடிக்கும் ஓசை ஒழுகினசேரியின் ஒவ்வொரு கடையிலும் வெவ்வேறு லயத்தில் ஒலிக்கும். என் கை புரோட்டா என்று எழுதும்போதே பாய் கடை சால்னா மணம் பெங்களூருவில் என் வீட்டில் மணக்கிறது, கூடவே மட்டன் (உண்மையில் பீப். நாகர்கோயில்காரனுக்கு அதுவும் மட்டன்தான்) ரோஸ்ட்டும் கொத்துக்கோழியும், தேங்காய் எண்ணெய்யில் பொரித்த சிக்கனும் உணவென்றால் எனக்கு எழுதுவதில் கட்டுப்பாடு கிடையாது. இங்கேயே நிறுத்திக்கொள்கிறேன். பால்யமும் பதின்பருவ நினைவுகளும்  இன்னும் ஒழுகினசேரியில் நான் விட்டுச்சென்ற இடத்திலேயே கிடக்கின்றன. கடந்துபோனவை மீண்டும் கிடைக்கப்போவதில்லை. அதனால்  திரும்பத்திரும்ப பால்ய பதின்பருவ நினைவுகளிலே முட்டிக்கொள்கிறேன். ஒழுகினசேரியும், எங்கோடி கண்ட சாஸ்தா கோயிலும், சந்திப்பில் நிற்கும் பெரியார் சிலையும், பழையாற்றின் படித்துறைகளும், சுடுகாடும், விடுமாடனும் மாடத்தியும், மயான சுடலையும், வள்ளியாமடத்து இசக்கியும், துர்க்கை அம்மனும், முண்டனும், கடைத்தெருவும், கலைவாணர் தெருவும் இன்னும் இன்னும்.. ஏன் மொத்த நிலமுமே அந்த மனிதர்களும் என்னுள்ளே இந்தப் பத்து வருடங்களாக நான் விட்டுச்சென்ற அதே ஒழுகினசேரியாக, மனிதர்களாக இருக்கிறார்கள். என் இருபத்து மூன்று வயது எப்படி ஒழுகினசேரி சென்றால் மட்டும் திரும்புகிறதோ! அதேபோல எனக்காக அதே பழைய ஒழுகினசேரி திரும்புமா? அதே மனிதர்களை மீண்டும் சந்திப்பேனா? ஒழுகினசேரியோ ஒரு கிழவியைப்போல நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறது. அதனால்தான் என்னவோ அந்தக் கதைகளிலும் ஊருக்குச் செல்பவனின் நினைவுகள் வழியே கதைகள் விரிகின்றன. அவன் ஊரின், மனிதர்களின் மாற்றத்தைக் கண்டு குழம்புகிறான். உறவுகளைச் சந்திப்பதில் தயக்கம்  கொள்கிறான். புதிய உறவுகளை அணுகத் தெரியாதவனாக இருக்கிறான். தன் பிள்ளைக்கு அவர்களை அறிமுகம் செய்யவோ உறவு முறைகளின் பெயர்கூட அவனுக்கே தெரிவதில்லை. பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்த சிறு, குறு நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்தவனே இக்கதைகளின் வருகிறான். அவன் இரு நிலங்களுக்கிடையே தன்னை, தன் அடையாளத்தை எங்கே பொருத்திக்கொள்ள வேண்டும் என அறியாதவானாய் முழிக்கிறான்.

விடுமாடன் கோயில் கொடை சிறுத்து விளக்குப்பொழிவாக மாறியிருந்த காலம்… மாடனை அசைவத்தில் இருந்து ஏகதேசம் சைவமாக ஆக்கிக்கொண்டிருந்தார்கள். வேண்டாம்! இதைச் சொல்ல ஆரம்பித்தால் இதுவே பெரிய கதையாகிவிடும். நான் சொல்ல வந்தது.. அப்போதெல்லாம் கும்பாட்டாம் ஆட நெல்லை மாவட்டத்தில் இருந்துதான் பெரும்பாலும் வருவார்கள். விடுமாடன் கோயிலில் முந்தின நாள் இரவே தங்கி, காலை கும்பாட்டக்காரியை யார் முதலில் பார்ப்போம் என்கிற ஒரு போட்டியே எங்கள் நண்பர்கள் குழுமத்தில் உண்டு. அப்போது பதிமூன்று பதினான்கு வயதுதான் இருக்கும். அந்த பதின்பருவமே என் முதல் சிறுகதையாகியது. அதுவே பதினாறு வயது ஆகும்போது கும்பாட்டக்காரிகளை பார்க்கத் தோன்றாது. கண்கள் எங்கள் வயதொத்த பெண்பிள்ளைகளின் பக்கம் திரும்பும். இரவு மாடன் வேட்டைக்குச் செல்லும்போது ஒழுகினசேரியின் சாலைகள் வெறிச்சோடிவிடும். அமைதியான உறக்கத்திலாழ ஆரம்பிக்கும். தப்புமேளம் அடிக்க மாடன் சாமிக்கொண்டாடியுடன் பிரமாணக்குடி படித்துறைக்கு செல்லும்போதுதான் நாங்கள் அறியாமல் ஒழுகினசேரியின் பொந்துகளில் வசிக்கும் அவயான் கூட்டங்களையும் இரவுகளில் எல்லைப் பிரிப்பு போராட்டம் நடத்தும் தெருநாய்களின் போர்க்குணத்தையும் பார்க்க முடியும். திருடர்களும் தன் உடலை விற்றுப் பிழைப்போரும் ஸ்தூலமாய் அழையும் நேரமது. அங்கிருந்துதான் கருளிடை பொழில் மருதுவும், பொந்துவும் எழுத வேண்டியதாயிற்று. 

சுடுகாடும், மயான சுடலையும், பாடையும், சவ ஊர்வலமும், சவக்குழியும் எனக்கு இந்த வாழ்க்கையில் எது நிரந்தரம்? எங்கிற வினாவை கேட்டுக்கொண்டே இருக்கும். மண்டையோட்டின் விழிக்கிடங்குகள்வழி புகையும் கங்கையை எத்தனையோ தடவை வெறித்திருக்கிறேன். இதுக்குதானே எல்லாமே? என்றும் தோன்றுவதுண்டு. இதில்தான் எவ்வளவு ஆட்டம் போடுகிறோம். மயான சுடலையும் எப்போது என்னை சுடுகாட்டில் கண்டாலும் புன்னகைக்க மறப்பதில்லை. அதனாலோ என்னவோ சாவும் துஷ்டி வீட்டையும் மீண்டும் மீண்டும் எழுதவேண்டி இருக்கிறது. 

நாகர்கோயிலுக்கும் நெல்லைக்கும் இடையே பெண் எடுத்தோர், கொடுத்தோர் எனும் பெரும் தொடர்புண்டு. அவ்வழியில் வந்தவன் ஆதலால் என் மொழியில் நாஞ்சிலோடு சேர்ந்து நெல்லைத்தமிழும் கலந்துவிடும். இந்த இரண்டு ஊர்களின் மொழியையும் மனிதர்களையும்தான் அதிகம் கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன். இன்றைக்கும் ஊருக்கு ரயிலிலோ, பேருந்திலோ வரும்போது நெல்லை வந்தாலே ஊரை அடைந்துவிட்ட ஒரு உணர்வே மேலோங்கும். நீர்மாலையின் லெட்சுமணன், வெள்ளையின்  தளவாய் அப்படிப்பட்டவர்கள்.

ஊருக்கு ஒரு குணம் உண்டு. ஒழுகினசேரியின் குணம் அங்கே வாழும் மனிதர்கள், அவ்வூரை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகள், ஆட்டோக்காரர்கள். அவர்கள் நளியடிப்பார்கள், நொர்நாட்டியம் காட்டுவார்கள், ஆத்திரப்படுவார்கள், அழுவார்கள், பொறாமைப்படுவார்கள். குசும்பு பிடித்தவர்கள். சிலசமயம் குடித்துவிட்டு விடுமாடன் கோயில் நடையில் போதையில் மல்லாந்து தன்னை அறியாமல் ஒன்னுக்கு இருப்பார்கள், பொண்டாட்டியை அடிப்பார்கள், அடுத்தநாளே சினிமா பார்க்கக் கூட்டிச்செல்வார்கள், ஊர்க்கொடையில் சண்டை போடுவார்கள், மனிதனின் எல்லாச் சிடுக்குகளையும் கொண்டவர்கள். குமரி மாவட்டத்தின் ஒவ்வொரு திசைக்கும் ஒரு இசக்கி இருப்பது போலவே ஒழுகினசேரியின் ஒவ்வொரு திசைக்கும் ஒரு டாஸ்மாக் இருக்கிறது. ஐந்திணைகளைப் போல, அங்கே குடியும் குடிசார்ந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். குமரி மாவட்டச் செய்தியிலே கஞ்சா விற்று பிடிப்பட்டவர் இல்லாத செய்தித்துணுக்கு இல்லாத தினசரி நாளிதழ் வருவதேயில்லை. இதில் சரியென்ன? தவறென்ன? என முடிவெடுப்பவன் நானில்லை. ஆனால் அவர்களின் பாவப்பட்ட அம்மைகளை, பொண்டாட்டிகளை நான் அறிவேன். அவர்களில் ஒருவனின், அவனுடைய மனைவியின், பிள்ளைகளின் கதைகளையும் எழுதுகிறேன்.

‘கோம்பை’, வேறு பெயரில் இன்னும் ஒழுகினசேரியில் சுற்றுகிறான். ஐம்பதை நெருங்கிவிட்ட வயது, முகம் கோணாமல் இன்றைக்கும் யார் சொன்னாலும் கடைகளுக்குப்போய் கொடுக்கிறான். ஆனால் இப்போதெல்லாம் மிக நிதானமாக ஒவ்வொன்றையும் செய்கிறான். நாடார் இன்னும் அப்படித்தான் இருக்கிறார், அதுதானே இயல்பே. அங்கே வெற்றிலை வாங்கவரும் எங்கோடியா பிள்ளைக்கோ ஒருபக்க காது கேக்காமல் ஆயாச்சு. இருந்தும் அவருக்காக பொன்னுருக்கு வீடும், கல்யாண வீடும், சாவு வீடும் காத்திருக்கிறது. அவருக்குப் பின்னால் அவரளவுக்குச் சடங்குகள் அறிந்த இன்னொருவர் இல்லை என்பதுதான் சரியாக இருக்கும். சடங்குகளும் அந்தந்த நிலத்திற்குரியவைதான்.

தற்சமயம் நான் பெங்களூருவில் வசிக்கிறேன், இந்த நிலம் இப்போதுதான் எனக்கு நெருக்கமாகிக்கொண்டிருக்கிறது. என்னைப் பெங்களூருவிற்கு இடம்மாற்றம் செய்ய என் மேலதிகாரி சொன்னது, “இந்த ஊரே ஏசில வச்ச மாதிரிதான்”. அவர் சொல்லியது உண்மைதான். ஒருவேளை சென்னையில் இருந்து இடம்மாறியதால்கூட இருக்கலாம். இந்த ஊர் பன்முகத்தன்மை கொண்டது,  இந்தியாவின் ஏகதேச மொழிகளைச் சாதாரணமாக சாலையில் நடக்கும்போது கேட்கலாம். இவ்வூரை மெதுவாக அவதானிக்க ஆரம்பித்து இருக்கிறேன். புறாக்கள் நிறைந்த அடுக்குமாடிக் குடியிருப்பு என்னுடையது. என் வீட்டில் பொரித்த புறாக்குஞ்சே சூலியானது. ராம மந்திரத்தின் ராமய்யாவை ஒருவேளை நான் சந்திக்கலாம். கோரமங்களாவிற்கும் எம்.ஜி ரோட்டுக்கும் வார இறுதியில் அடிக்கடி செல்லும் ஒருவனே, ‘அவன்’ கதையில் வரும் சூர்யா. நிதர்சனத்திற்கு மிக நெருக்கமான ஒருவன்.

மருத்துவாழ்மலைக்கும் இமயமலைக்கும் எழுத்தின் மூலம் பயணித்தால் அதுவே ஜின்னும் தாணுவும் சந்திக்கும் ‘விளிம்பானது’. தாழைக்கோழியைப் போல நடையால் மட்டும் வாழும் யோவானின் சடையன்குளம் இன்னும் தாமரையிலை நிறைத்து அவனுக்காகக் காத்திருக்கிறது. நான் எழுதி எழுதி உருவாக்கும் என் நிலம் ஒழுகினசேரி மட்டுமே அல்ல. இன்றைக்கு வெவ்வேறு  நிலங்களை நான் பார்க்கிறேன், எழுதுகிறேன், எழுதுவேன். எனக்கே எனக்கான ஒரு வெளியை மட்டும் உருவாக்கும் ஆசையும் இருக்கிறது. அங்கே மொழிகளால் உலாவ வேண்டும்.

***

வைரவன் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணிநிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular