Monday, October 14, 2024
Homeஇதழ்கள்2022 இதழ்கள்என் படைப்பில் என் நிலம்

என் படைப்பில் என் நிலம்

ஷக்தி

லாச்சாரங்கள் நிலையாக இருக்கின்ற தன்மை கொண்டவை அல்ல. அவை தொடர் மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடியவை. அந்த ஓட்டத்தைப் புரிந்துகொள்ள ஒரு முயற்சியாக சுவடற்று அழிந்து போகும் மாற்றங்கள் நிகழும் இக்கால கட்டத்தில் நிலத்தைப் பற்றி எழுதிப் பார்ப்பதுதான் இன்னும் வேகமாகப் பரவும் கலாச்சார மாறுபாடுகளையும் பழைய கூறுகளையும் ஞாபகத்தில் அடுக்கி வைக்க இயலும். பழமை மெல்லத் தணிந்து ஒரு வாழ்க்கை முறை என்ற அடிப்படையில் இருந்து மெல்ல தன் தொன்மை சாயத்தை தொலையக் கொடுக்கும் பொழுது அந்த இழப்பை அழுத்தமாகப் பதிந்து வைத்துக்கொள்ள கவிதைகளை நாடி துணைக்கு அழைக்கிறேன். ஒரு சிறிய கவிதை போதுமானது உங்களை புற உலகில் இருந்து துண்டித்து வேறு உலகில் பிரவேசிக்க வைக்க. அதுவும் இந்தக் காவிரி கலாச்சார வழித்தடங்களில் ஒருவித காதல் எனக்குண்டு. காவிரித் தடங்கள் ஒரே கலாச்சாரத்தின் பல வழக்கங்களை கொண்டவை. இந்தப் பார்வை வழியாக எதிர்கொண்டவைகளை எல்லாம் எழுத்துக்களாக உருமாற்ற கவிதைகள் உடன் வருகின்றன.

தமிழக வரலாற்றில் இது ஒரு பகுதி அவ்வளவு தான். இங்கேயும் பொதுவான நிலப்பரப்பில் நிகழும் எல்லா விவகாரங்களும் உண்டு. சாதிகள் துவங்கி சர்வதேச தேவைக்கான சுரண்டல்கள் வரை சொல்லி மாளாது. இங்கும் அழிந்துபோன பயிர் வகைகள் உண்டு. கால்நடை விலங்கினங்கள் உண்டு. மரங்களும் ஆறுகளும் ஓடைகளும் உண்டு. ஒரு கவுளி வெற்றிலையோடு அரசியல் பேசித்தொலைந்த தலைமுறையும் உண்டு. கலயங்களும் கலப்பைகளும் பத்தாயங்களும் கூட தொலைந்து போயிற்று. நெடுவாடைக் காற்று கூட இப்பொழுது பருவம் மாறி விடுகிறது. வைக்கோல் பிரிகள் தென்னை நார் கயிறு திரிக்கும் வாசங்கள் கூட மறந்து போயிற்று. போக்காளி என அல்ப ஆயுளில் போகின்ற இத்தலைமுறையில் எழுதத் துவங்கும் பொழுதெல்லாம் ஞாபகங்களை விட மன அழுத்தம் கூடுகிறது. மூச்சுத் திணற வைக்கும் இந்த மாற்றங்களை எழுத எழுதத் தீராது நீள்கிறது. இன்று இந்த நிலப்பரப்பு நீருக்காக மழையின் கருணைக்கு காத்திருக்கிறது. உயர்நீதி மன்ற அல்லது இடைக்காலக் குழுவின் கருணைக்குக் காத்திருக்கிறது. இந்தக் கேவல நிலை கடந்த தலைமுறைக்கு இல்லை. இந்த விவசாயமும் பால் வளமும் குறைந்து மெல்ல வழக்கொழிந்து வருவதற்கு மனிதர்களின் சுய எண்ணங்களில் சீழ்கோத்ததை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும். இதை முதலாளித்துவத்தின் விளைவு என எடுத்துக் கொள்ளலாமா எனும் கேள்விக்கு எண்ணெய் அரசியல் காரணங்கள் கண்முன் வந்துபோகவும் செய்கிறது. ஒரு செய்தியை, ஒரு துயரை, ஒரு போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது அல்லது அவற்றின் ஆயுளைக் குறைப்பது ஆளும் வர்க்கங்களுக்கு எளிது. இன்னொரு சர்ச்சையை அல்லது ஒரு கருத்தைக் கொண்டு ஒரு விடயத்தை அழகாக இருட்டடிப்புச் செய்வார்கள். ஆனால் இந்த எழுத்துக்கள் ஒரு நூறாண்டிற்காவது இன்னும் உயிர்த்திருக்காதா சொல்லுங்கள். அப்படியிருக்க, ஒரு படைப்பாளனுக்கு இந்த எழுத்துக்கள் தான் வழியும் வாசலும்.

விவசாயக் கூலிகளுக்கு மிகச்சரியான ஊதியம் கேட்டு ஒரு தலைமுறையே அல்லாடிய வரலாறு உங்களுக்கு தெரியுமோ அல்லது தெரிய வாய்ப்பில்லையோ தெரியாது. அம்மக்களின் அவல வாழ்வில் இருந்து மீள ஒரு பெரும் போராட்டம் நடைபெற்றது. உரிமைக்காகவும் போராட்டத்திற்காகவும் தொலைந்த உயிர்களும் வடுக்களும் இன்னும் அகலாதவை. இன்னும் பலருக்கு உணவும் வீடும் நிலமும் கனவுகள் தான். அவர்களின் பிள்ளைகளுக்காக உள் மாநிலத்துக்குள்ளேயே புலம் பெயர்கிறார்கள். அந்த வாதையை என்னால் தாங்க இயலவில்லை. ஒரே ஒரு போகம் மட்டும் விளையும் பருவ காலத்தில் பேய் மழை வந்து கொண்டுபோன பொழுதில், விவசாயம் பொய்த்த மழை இல்லா நாளில் உயிரை மாய்த்து கொண்ட வாதையைக் கண்டிருக்கிறேன். அரசு பிடுங்கிக் கொண்ட நிலத்திற்கு இழப்பீடு கேட்டு மாய்ந்த வாதையை ஒருநாள் முழுக்கச் சொல்லி அழுதாலும் மாளாது. நாம் ஒரு வலுவான கட்டமைப்பில் இருந்து கொண்டு காணும் வரை அதை உணரவும் இயலாது. சாலைகளுக்காக, எண்ணெய் கிணறுகளுக்காக, சுத்திகரிப்பு மண்டலங்களுக்காக, எரிவாயு நிலையங்களுக்காக, துறைமுக விரிவாக்கத்திற்காக, மின் நிலையங்களுக்காக இன்ன பிற காரணங்களுக்காகவும் இந்த வழிப்பறி காலங்காலமாக நிகழ்கிறது. இந்த இடத்தை விட்டு நாளை எங்களின் பிள்ளைகள் வெளியேற்றப்படுவார்கள். இன்னொரு நாள் அவர்களின் பிள்ளைகள் ஆயுதங்கள் கொண்டு துரத்தப்படுவார்கள். இனி சாகும் காலம் வரை ஒருமுறை இழந்த இந்த பசுமையை, இனிமேலும் நாங்கள் காணவே முடியாது. வரும் நாளில் எதிர்கொள்ளப் போகும் இடருக்கு இந்த நிலம் சீரழிந்து போகும்.

அப்பொழுதும் கூட மௌனமாக இருக்கக் குரல்வளைகள் விரும்பாது. அவை எழுத்துகளுக்கு எப்பொழுதும் ஒரு கனலைத் தந்துகொண்டே இருக்கும். விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லா குரலும் ஒருமிக்கும் பொழுது எல்லோருக்கும் இழந்த நிலம் பற்றிய பரிமாணங்களை விளக்கிச் சொல்லவும் அழவும் இந்த எழுத்துக்கள் தான் மீதமிருக்கும். ஒரு நேர்மையான அணுகுமுறையைக் கொண்டு தெளிவான நிலப்பரப்பை நுட்பமான அதன் வாழ்வியலை அடிநாதமாகக் கொண்ட எந்த ஒரு படைப்பும் கொண்டாடப்படாமல் போக வாய்ப்பில்லை. இயற்கையின் கருணை பெரியது தான்.

ஆனால் எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. எழுத வேண்டியதன் அவசியம் உள்ளது. அதன் பொருளும் காரணமும் உணர்ந்து கொள்ள இந்த நிலம் போதுமானதாயிருக்கிறது. அது சொற்களையும் காரணிகளையும் சந்தர்ப்பங்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது. இந்த சராசரி எழுத்துக்களுக்கு மாற்றாக எழுத நிறைய இருப்பதை கண்களுக்குக் கடத்தி இன்னும் முயன்று காட்ட வேண்டிய கவித்துவம் அதனிடமும் இருப்பதை எழுதித் தீர்த்துவிட முடியாத வலிகள் இருப்பதைக் கொண்டுவந்து நிரப்புகிறது. இந்த காவிரித் தடங்களுக்கு பாமரச் சொற்களும் வட்டார மொழியும் ஓர் அழகுடன் கொண்டாடப்படுவதை எழுதிப் பார்க்க இன்னும் அனுபவமும் அதற்குள்ளாக பயணிக்கும் நிதானமும் அவசியமாகின்றன.

இந்த புவிப்பரப்பில் வாழிடமாக கொண்ட எனக்கும் இந்த மண்ணோடு உறவுண்டு. இந்த நிலம் பற்றி எழுத இலக்கிய மரபின்படி ஊடல் மருத நில இயல்பு. இப்பரப்பின் காதலும் கூட பிரதான பாடுபொருள் தானே. பருவங்கள் தோறும் இந்த நிலம் என்னென்ன அடையாளங்களோடு வந்துபோகும் என்பதை எழுத வேண்டிய அவசியமும் அதைக் கற்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இன்னும் பழைய தஞ்சை மொழியைக் கற்றுணரவில்லை. அது மெல்ல மாறுகிறது. காவிரி என்பது மணல் உற்பத்தி செய்து கொடுக்கும் தலமல்ல. அது ஒரு ஜீவன். அது விவசாயம் கடந்த ஓர் உற்பத்தி மண்டலம். நான் இதைத்தான் எழுதிப் பார்க்கிறேன்.

பழைய நஞ்சையின் சொற்களை தற்போதைய மொழிக்கு மாற்றாமல் எழுதினேன். சிலர் புரியவில்லை எனச் சொன்னது கூட எனக்கு ஒரு குறையாகப் படவில்லை. இந்தச் சிரமம் நாம் மண்ணுக்கு அந்நியமான காரணத்தால் வந்ததாகக் கருதினேன்.

ஒரு படைப்பை இப்படி புரிந்து கொள்ளுங்கள் என நெறிப்படுத்தும் முறையில் எனக்கு உடன்பாடில்லை. அது முறையும் இல்லை. பேராசிரியர் ஜெயராமன் கூற்றுப்படி மொழியால் வருகிறவை மொழிக்குச் சொந்தம். எழுதியவருக்கு இல்லை.

என் வயதிற்கு நான் அடைந்த அனுபவங்களை எழுத்து மூலமாக பகிர்கிறேன். அனுபவம் தான் ஆசான் இல்லையா. எனக்குச் சுயமும் அது தான். எழுதிப் பார்ப்பவற்றுள் நிறைகுறை உண்டு தான். வாருங்கள் இன்னும் வேகமாக எழுத, வாசிக்க நிறைய இருக்கிறது. அவை உன்னதமான அனுபவம். கருத்துகளும் அனுபவமும் இந்த மொழிக்குள், சூழலுக்குள் போதுமானவையாகப் பார்க்கிறேன். அனுபவத்தை நம் மொழி மூலம் ரசித்தால் போதுமானது. அந்த நெருக்கம், ஆயுள் நீளமானது. இன்னும் எழுதுவேன்.

நன்றி!

***

ஷக்தி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த இவர் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான மருத்துவத்துறையில் பணியாற்றுகிறார். மரநாய், அபோர்ஷனில் நழுவும் காரிகை என்ற கவிதைத் தொகுப்புகளும் கொண்டல் என்ற நாவலும் இவரது படைப்புகளாகும். மரநாய் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி வழங்கும் 2019 ஆண்டிற்கான யுவபுரஸ்கார் விருது வழங்கப்பட்டது. மின்னஞ்சல்: shakthipoet@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular