Monday, September 9, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்என்னைக் கொன்று சாப்பிட அப்படியொரு இஷ்டமா?

என்னைக் கொன்று சாப்பிட அப்படியொரு இஷ்டமா?

முதல்கதை

சங்கர நாராயணன்

என்னைக் கொன்று சாப்பிட அப்படியொரு இஷ்டமா?

சில நாள்களாக ஜந்துக்கள் அங்கே அந்த தென்படவில்லை. எங்கே சென்றிருக்கும் அவை? வெகு தூரத்திலிருந்து அவற்றைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அருகே நெருங்குவதற்குப் பயமாக இருக்கும். ஒருமுறை இரவில் உள்நுழைந்து சென்று பார்த்ததில் கொஞ்சம் உணவு கிடைத்தன, அவைகள் நான் இதுவரை தின்றது போல அல்லாமல் நன்றாகவே இருந்தன. ஆனால் போதவில்லை. சிறிது நேரங்களில் கூட்டமாக அந்த ஜந்துக்கள் பெரும் சப்தம் எழுப்பிக்கொண்டு வந்துவிட்டன. கூட்டமாக வரவும் அங்கிருந்து தப்பித்து வந்தேன். இருட்டில் அந்த ஜந்துக்களால் என்னைத் தொடர்ந்து வர முடியவில்லை.
பின்னொரு நாளில் இரண்டு ஜந்துக்களைத் தனியாகப் பார்த்தேன் தூரத்திலிருந்து என்னைப் பார்த்தபடியே நின்றிருந்தன. வெகுநேரம் அவைகள் என்னைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தன. எனக்கு உள்ளூர பயத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு மரக்குச்சியை மேலே நோக்கிக் காண்பித்து பெரும் சப்தம் எழுப்பியது. அதைக் கேட்கவே எனக்கு வெறி உண்டாகித் தொடர்ந்து அந்த ஜந்துக்களைத் தாக்க அவைகளை நோக்கி ஓடினேன். ஆனால் மீண்டும் சத்தம் எனக்கு வெகு அருகிலேயே கேட்டது. எனக்கு முன்னிருந்த சிறிய பனிப்பாறை ஒன்று சிதறின. எனக்கு உள்ளூர உடம்பு அதிர்ந்தது. உடனடியாகத் திரும்பி ஓட ஆரம்பித்தேன்.

வெகுதூரம் வரையிலும் அந்த ஜந்துக்கள் என்னைத் தொடர்ந்ததை என்னால் பார்க்க முடிந்தது. அதன் வாசனையை என்னால் நுகர முடிந்தது. சிறிது நேரத்திற்குப் பின் அந்த வாசனை நுகரக் கிடைக்கவில்லை, ஆனால் இன்று வரையிலும் அவ்வாசனை நினைவிலேயே உள்ளது. அவ்வப்போது அவ்வாசனையை உணர்வேன். தேடும்பொழுது கிட்டுவதில்லை. மேலும் சிலநேரம் அந்த ஜந்துக்களை இவ்விடத்தில் கூட்டமாகப் பார்த்து இருக்கிறேன், ஆனால் நெருங்கிச் செல்ல பயமாக இருக்கும்.
என்னைப் பார்த்தவுடன் கூட்டமாக அவைகள் என்னை நோக்கி ஓடிவர சில வினோத அமைப்புள்ள குட்டி மிருகங்களின் மேல் ஏறி வேகமாக என்னை நோக்கிச் சத்தமிட்டபடியே வரும்.
இதுபோன்றே முன் நடந்த ஒரு சம்பவத்தில் என்னுடன் வந்த எனது சக தோழன் அவைகளிட்ட சப்தத்தில் சுருண்டு விழுந்து ரத்தம் வந்து செத்தான். இத்தனைக்கும் பயத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ளவே திரும்பி அவைகளைப் பார்த்து உறுமினான். ஆனால் விதி அவனை விட்டு வைக்கவில்லை. அதைப் பார்த்த நான் அருகிலிருந்த பனிக்குன்றின் மீது வேகமாக மூச்சிரைக்க ஏறினேன். பல முறை சறுக்கியும், சில முறை விழுந்தும் என் கனத்த உடலைத் தூக்கிக் கொண்டு ஏறிச்சென்றேன். அவைகளிட்ட பெரும் சப்தம் எனக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது, அதையும் மீறி கிலியை உண்டாக்கியது.

எதை உண்ண எதை விட என்று தெரியாமலேயே பார்க்கும் அனைத்தையுமே உண்ண எனக்கு வெறி வரும். இவர்களை என்றேனும் ஒருநாள் சுவைத்துவிட வேண்டுமென்று மனம் லட்சியம் பூண்டது.

சில வேளைகளில் தொலைதூரம் வரையிலும் ஒரேமாதிரி காட்சியாக வெளுப்பாக உலகம் நிலை கொண்டிருக்கும். உணவிற்காகக் காத்திருக்கும் வேளைகளில் நானும் காட்சியோடு ஒன்றிவிடுவேன். நான் இருப்பது தெரியாமல் இரைகள் தானாக வந்து என்னிடம் சிக்கும். இந்த இரண்டு கால் ஜந்துக்கள் கூட சில நேரங்களில் என்னை நெருங்கி வந்துவிடும். ஆனால் எப்படியோ தப்பித்துப் போய்விடும். அவைகளைப் பார்த்தால் எனக்கும் உள்ளூர பயம் தான்.
எனக்குப் பிடித்த சில ஜந்துக்கள் சமுத்திரத்திலிருந்து கூட்டமாக வந்து இரண்டு பற்களைக் காட்டி இளித்துக் கொண்டு என்னைச் சாப்பிடு என்று நிற்கும். ஆனால் இந்த ஜந்துக்கள் அப்படியல்ல, சிறிய ஜந்துக்கள். பல நிறங்களில் பல தினுசாக இருக்கின்றன. அவைகள் எந்தச் சுவையில் இருக்கும் என்று எனக்குத் தெரியாது ஆனால் அவர்களுக்கு ஆர்ப்பரித்துக் கிளர்ந்தெழச் செய்யும் மணம். ஒரு நாளேனும் ஒருநாள் அவைகளைச் சுவைத்துப் பார்த்திட வேண்டும் என்று ஆசை.
கடலிலிருந்து கூட்டமாக வரும் ஜந்துக்கள் வேறுவகையான வாசம் கொண்டவை, சுவை மிகுந்தவை. அவைகளும் எனக்குப் பிரியப்பட்டவை தான். இம்மாதிரியான கால நிலையில் அவைகள் கூட எனக்குக் கிடைப்பது அரிதாகி விட்டது.
தூரத்திலிருந்து பார்க்க இந்த சிறிய ஜந்துக்களின் இயக்கங்கள் வெகுவாக என்னை ஆச்சரியப்பட வைக்கும். சீராக இயங்கும் பல குட்டி ஜந்துக்களை இவர்கள் வைத்திருந்தனர். மேலும் அவைகள் அந்த ஜந்துக்களின் கட்டளையின் பேரிலேயே இயங்கின. மற்ற நேரங்களில் தேமே என்று உட்கார்ந்திருக்கும்.

ஒருமுறை தேமே என்று தனியே நின்றிருந்த குட்டி ஜந்துக்களைத் புசிக்க ஆசைப்பட்டேன் . ஆனால் முடியவில்லை. கடினமாக இருந்தது. உருட்டி விளையாடிவிட்டு வந்தேன். அதைப் பார்த்து அந்த ஜந்துக்கள் மீண்டும் சப்தம் எழுப்பித் துரத்தி வந்தது. நான் அவர்களிடம் சிக்கவில்லை.

மற்றொருமுறை இரண்டு ஜந்துக்கள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே வெகுநேரம் நின்றிருந்தது. அதைப் பார்த்த எனக்கு நிலை கொள்ளவில்லை. பெரும்பான்மையான நேரங்களில் தனிமையிலே இனிமையைக் காணத்தான் விருப்பம். ஆனால் சிலமுறை உடலில் நிகழும் வெப்ப மாற்றத்தால் அவளைத் தேடிப் போவேன். அவளும் எதுவும் சொல்லாமல் என்னை ஏற்றுக் கொள்வாள். ஒருநாள் இருநாள் அவளுடன் தங்கி இருந்து சல்லாபம் செய்துவிட்டு என்னை நான் தனிமைப்படுத்திக் கொள்வேன். ஆனால் அன்று அவர்களின் நெருக்கத்தில் அதுபோல ஒரு வெப்பத்தை என்னுள் உணர்ந்தேன். அவளைத் தேடிப்போய் பார்த்து விட்டு வந்தேன்.

பிறகு பெரும் பனி கொட்டியது, காற்று வீசியது, சில நாள்களாக அந்த ஜந்துக்கள் கண்களில் தென்படுவதே இல்லை.

ஒருவேளை குளிரின் தாக்கம் தாளாமல் உள்ளேயே இருக்குதுகள் போல என்று நினைத்துக் கொண்டேன். என்னைப் போன்ற அடர்த்தியான ரோமம் அதுகளுக்கு இல்லை ஆனால் வினோதமான அமைப்புடனான ரோமங்களை வைத்திருந்தன. சிலமுறை எனது ரோமத்தைக் கூட திருடி வைத்துக்கொண்டது போல எனக்குத் தெரிந்தது. சரி ரோமப்பஞ்சம் என்று நினைத்துக் கொண்டேன்.

வெளிச்சங்களும் இரவுகளும் இடைவிடாது என்னை ஆக்கிரமித்த பொழுதும் இவ்விடம் எனக்குச் சலிப்பைத் தந்ததே இல்லை. அவைகளைத் தொலைத்தது பற்றி வருந்தியது இல்லை. ஒரு நாளும் எதையுமே ரசித்தது இல்லை. ஏனென்றால் சதாசர்வ காலமும் என் எண்ணத்தில் உணவைப் பற்றிய தேடலே இருந்தது. அது என்றுமே எனக்குச் சலிக்கவே இல்லை. தொடர்ந்து உணவு கிடைக்காமல் போகும் தருணங்களில் உடலின் வெப்பத்தைத் தக்கவைக்க ஆங்காங்கே கிடைக்கும் சிறு சிறு உணவுகள் ஆறுதலைத் தரும். ஆனால் அது மட்டுமே போதாது, எனது மனமும் உடலும் ஒரு பெரும் வேட்டைக்கான தயார் நிலையிலேயே என்றும் இருக்கும். இன்று எப்படியாவது சென்று சுவைத்து விட வேண்டும் என்று அவைகளின் இடத்தை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பிக்கிறேன்.

அதே நேரத்தில் சடாரென்று இரு ஜந்துக்கள் என்னை நோக்கி ஓடிவர நான் பயந்து பின்வாங்கினேன். நமக்கான உணவு அவைகள் தான் என்று முடிவுகட்டி அருகிலிருந்த பனிக்குன்றின் பின் காத்திருக்கிறேன் . உணவிற்காகப் பொறுமையே தோற்றுவிடும் அளவிற்குப் பொறுமையுடையவன் நான். எனக்கான இரை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் சரி எனக்குத் தெரிந்துவிடும். அதை அடையும் தந்திரமும் எனக்கு அத்துபடி. என் மொத்த உருவத்திலும் கருப்பான எனது மூக்கை எனது கையை வைத்து மறைத்து விட்டால் பனிப்பாறைகளுடன் ஒன்றிவிடுவேன். இரைகள் என்னைத் தேடிவரும் என்பதை உணர்ந்து நேரம் போவதே தெரியாமல் காத்திருப்பேன். அதுபோல ஒரு காத்திருப்பு முடிவுக்கு வந்தது. அந்த ஜந்துக்கள் எனக்கு மிக அருகினில் வந்துவிட்டன என்பதை நுகர்ந்து அறிந்தேன். மெதுவாக எனது பின்னங்கால்களின் உதவியுடன் அவைகளைப் போலவே மெதுவாக நின்று பார்க்கத் தொலைவில் ஜந்துகள் தெரிந்தன.

சிறிது நேரத்தில் அந்த இரு ஜந்துக்களும் மிக நீண்ட குச்சி போன்ற ஒன்றைக் கையில் வைத்துப் பதுங்கி பதுங்கி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தன. எனது உள்ளுணர்வு அசம்பாவித சமிக்ஞையை கொடுக்க அவ்விடத்தை விட்டு மெதுவாகப் பின் நகர்கிறேன்.

அதே நேரத்தில் பெரும் சப்தத்துடன் மேலே ஒரு பறவை. தனது இறக்கைகளை ஒருபுறம் சுற்றியவாறு பறந்து கொண்டிருக்கிறது. நிலமே அதிருமளவிற்கான பேரிரைச்சல். இதே போன்ற ஜந்துக்கள் ஒன்றுக்கு இரண்டாக உள்ளே இருக்கிறது. உள்ளமர்ந்திருந்த ஜந்துக்களும் மிக நீண்ட குச்சி போன்ற ஒன்றை என்னை நோக்கிக் காண்பித்துக் கொண்டு இருக்கிறது. சுளீரென்று ஏதோ ஒன்று எனது பின்னங்காலில் குத்தியது. வலிக்கவில்லை ஆனால் உடம்பில் ஓர் உதறல். அதை வேகமாகத் தட்டிவிட்டுப் பனி நிரம்பிய பள்ளத்தாக்கில் வேகமாகத் தாவி ஓடுகிறேன்.

சமநிலையை அடைந்து பனிப்பாறைகள் நிரம்பிய நீரினுள் விழுந்து மீண்டும் ஒரு பனிப்பாறையைப் பிடித்து எனது பரந்த உடலைக் கிடத்தி அடுத்த பனிப்பாறையின் மேல் தளத்திற்கு வந்துவிட்டேன். நீரில் நனைந்து எழுந்ததில் எனது எடை வெகுவாகக் கூடி இருக்கிறது அது எனது ஓட்டத்திற்கு மேலும் சிரமத்தைச் சேர்த்து என்னைச் சோர்வடையச் செய்தது. மிதந்து கொண்டிருக்கும் பல பனிப்பாறைகளில் சிரமேற்கொண்டு தாவிக்கொண்டிருக்கிறேன். அண்ணாந்து பார்க்க, அந்தப் பறவை எனக்கு மேல் பெரும் கூச்சலிட்டுப் பறந்து கொண்டிருக்கிறது, என்னைப் பார்த்துக் குறிவைத்து வந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துக்கொண்டே கால் வைக்க அந்தப் பனிப்பாறை எனது பாரம் தாங்காமல் உடைந்து, தடுமாறி நான் நீரினுள் ஆழத்தை நோக்கி வேகமாகத் தன்னிச்சையாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, இழந்த மூச்சை மீட்க அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நீரின் மேற்பரப்பை நோக்கி வந்தாகிவிட்டது. எனக்காகவே காத்துக் கொண்டிருந்த அந்தப் பறவை எனது முன் நெற்றியில் மீண்டும் குத்தியது. குத்திய நொடியில் உடம்பின் இயக்கம் சிறிது தளர்வுற்றது. ஆனாலும் எழுந்து அடுத்த பனிப்பாறையைப் பிடித்து தரைக்கு வந்துவிட்டேன்.

இந்த நீண்ட வானத்தை ஒத்த இந்த வெள்ளை சமவெளி எனது உறுதியை வலுவாக்க இப்பொழுது என் ஓட்டம் வேகமெடுத்தது. எனது காத்திருப்பின் பொறுமை எனக்குத் தெரியும், ஆனால் இந்த உயிருக்கான ஓட்டம் எனது சகிப்புத்தன்மையை எனக்கு விளங்க வைக்கிறது. இது புது அனுபவமா? அவஸ்தையா?
பல காலமாக நடந்தபடியே இருந்திருக்கிறேன். நீந்தியபடியே இருந்திருக்கிறேன், ஆனால் இப்படியொரு ஓட்டத்தை ஓடியது கிடையாது. அடர்த்த வெளிர் மயிர் நிரம்பிய எனது கரிய தேகம், அந்த அடர்த்தியினால் வெப்ப மிகுதியில் கொதித்துக் கொண்டு இருக்கிறது. என்னைக் கொன்று சாப்பிட அப்படியொரு இஷ்டமா?

இத்தனைக்கும் என்னைவிட உருவத்தில் சிறியதாக அல்லவா இருக்கிறது. அதை நினைக்கையிலேயே எனது உடலும் மனமும் ரணமாய் கொதிக்கிறது. தலையின் மேற்புற மையத்தில் நுழைந்த ஊசி செருகல் போன்ற உணர்வு உடம்பின் அனைத்து இடங்களிலும் குத்துகிறது. எனது விருப்பம் இல்லாமலேயே என் வேகம் குறைகிறது. எனது முன்னங்கால் இடற நான் கீழே விழுந்தேன். தொலைவில் பனிமுகடுகள், என்னைப் போன்றே மயங்கிக் கிடக்கிறதோ? சிறிது நேரத்தில் எதனால் இப்படிக் கிடக்கிறோம் என்றுணர முடியாமல் என் இமைகளின் காட்சிகள் அஸ்தமித்தன.

தேவைக்கு அதிகமான உணவு வாய்க்கப்பட்ட நாட்களில் நீண்ட இரவுகளில் பகலை தொலைத்தும், நீண்ட பகலில் இரவுகளைத் தேடியும் நகராமல் இருந்திருக்கிறேன். அது போல ஒரு நீண்ட களைப்பிலும் உறக்கத்திலும் இருந்து எழுந்தது போன்ற ஒரு உணர்வு. மிகவும் இலகுவாக இருக்கிறேன். தண்ணீர் குடித்தால் தேவலாம் என்று தோன்றி நீரின் அருகில் செல்ல, அதில் எனது உருவம். தான் முன்பு போல இல்லையே என்று தோன்றியது.

பசி வயிற்றைக் கிள்ளுகிறது. நீண்ட பனித்தரையின் விளிம்பில் தொடரும் குளிர்ந்த நீரின் கரையில் அமர்ந்தேன். அவ்வப்போது அந்த கடல் மிருகம் மூச்சு வாங்க மேலே வரும். அதன் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். வெகு நேரமாகியும் அது வரவில்லை.

தொலைவில் உணவேதும் இல்லையா அல்லது எனது மூக்கின் நுகர்வுத்திறன் குறைந்து விட்டதா, தெரியவில்லையே என்ற குழப்பம். முன்பு போல ஏன் நம்மால் நடக்க முடியவில்லை, தடுமாறி அதே இடத்தில் அமர்ந்து காத்திருக்கிறேன்.

முன்பு போல ஊசி குத்தாமலேயே இமைகள் சொருக ஆரம்பிக்கிறது. எவ்வளவு நேரம் காத்திருக்கிறோம் என்று தெரியாமலேயே தூங்கித்தூங்கி எழுகிறேன். ஆனால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர முடியவில்லை. அப்படியாகவே விழுந்து உணவும் கிட்டாமல் படுத்த வண்ணமே இருக்கிறேன். நினைவில் மட்டுமே நான் இருக்கிறேன், இயக்கத்தில் நான் இல்லவே இல்லை. அந்த விசேஷ பலம் பொருந்திய சிறிய ஜந்துகளின் வாசனை இப்பொழுதும் கூட நினைவில் இருந்தது. ஏன் அனைத்து வாசனைகளும் நினைவில் உள்ளது. ஆனால் எதையுமே நுகரும் திராணியற்று கிடக்கிறேன்.

அப்படியாகவே வெகுநேரம் என் இயல்பின் பொறுமையையும் இக்கிடத்தல் வென்று கடந்து சென்று கொண்டிருக்கிறது. அப்பொழுது என் கண்ணை நோக்கி ஒரு சிறிய பறவை ஒன்று விஸ்வரூபமெடுத்து அருகில் வந்தது. அந்தச் சிறிய பறவை என்னைக் காட்டிலும் பெரிதாக இருந்தது. இல்லை.. அது எனது பிரமை. கையைத் தூக்கி அதைப் பிடிக்கப் போனேன், அது சிறிது எம்பிப் பறந்து கைக்கெட்டாதவாறு அமர்கிறது. சிறிது நேரத்தில் எனது முகத்தின் மிக அருகினில் வந்து எனது சீரிய பெருமூச்சின் சூட்டில் சிறிது நேரம் குளிர் காய்ந்து நடனமாடிக் கொண்டிருக்கிறது.

என் வலிகளையும், பசியையும் போக்க இந்த ஒற்றைப் பறவை போதாது. ஓராயிரம் கடல் ஜந்துகள் தேவை. ஆனால் இந்த ஒற்றைப் பறவையைப் பிடிக்கக்கூட என் கையைத் தூக்க முடியவில்லை. பறவை மெதுவாக அருகில் வந்து, பாதி இமை மூடிய கண்ணருகில் அமர்ந்தது. தன் முழு பலத்தையும் சேர்த்துக் குலுக்க பறவை பறந்துவிடும். ஆனால் வேண்டாம் என்று தோன்றியது. பெரும்பாலும் தனிமையையே விரும்பிய எனக்கு இந்த சிறு பறவையின் இருப்பு தேவைப்பட்டது. சிறிது நேரம் எனது உடம்பின் மேலே குதித்து விளையாடிவிட்டு, ஆங்காங்கே இருக்கும் ஒட்டுண்ணிகளைப் பிடுங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. சலனமற்று கிடந்த எனது முகத்தின் அருகினில், மிக அருகினில் அதன் வாசத்தை உணர்கிறேன்.

என் பாதி மூடிய கண்ணின் இடைவெளியை உற்று நோக்கிவிட்டு. அதன் அலகைக் கிட்டே கொண்டுவர அதன் எண்ணம் எனக்குப் புரிந்துபோய் விட்டது. எனது இமைகள் தானாக மூடிக்கொண்டது.

இப்பொழுது முழுவதும் இருட்டு. இருட்டின் விஸ்தாரத்தைப் பார்க்கிறேன். எல்லையற்ற ஆனந்தத்தை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. வலிகளிலிருந்து விடுபடும் பொழுது கிட்டும் பேரானந்தத்தின் பேருவகையில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். புதிய உலகின் தொடக்கத்தில் நான்.

***

சங்கர நாராயணன்

நாமக்கல்லில் பிறந்த இவர் தற்போது அமெரிக்காவில் மிக்ஸிகன் மாகாணத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் சிறுகதை இது. shansapmail@gmail.com

ஓவியம் – Katsushika Hokusai

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular