உன் கவிதைக்கான எரிபொருள்
நிற்கவும் தெரியாத
ஓடவும் தெரியாத
இந்தக் காலத்தை
நீயும்
நாலு கேள்வி கேளேன்
என்று தன் கவிதையில் சொல்வதைத் தானே தென்றல் சிவக்குமார் முயற்சித்த கணங்கள்தான் “எனில்”
ஒரு படைப்பை முழுவதுமாகப் படைப்பாளியின் அனுபவங்கள் மட்டுமே எனக்கருதி ஆளையே கேள்வி கேட்க முனையாதீர்கள் என்று பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். அனுபவம், வாசிப்பு, கேள்விஞானம், சிந்தனை எல்லாவற்றையும் சேர்த்த வார்ப்பாகவே ஒரு படைப்பு இருக்கும்… இருக்க முடியும்.
ஆனால் இது நான்தான் என்று தென்றலோ, நானோ, இன்னொரு பெண்ணோ சொல்லிக் கொள்ளவும் முடியும். ஆயினும் இதைக்கூட ஒரு தகுதி அடிப்படையில் தான் சொல்ல முடியும். என்ன அது?
எழுத்தறிவோ, வெளி உலக அனுபவமோ அற்ற கூட்டுப்புழுக்களாக வாழ்ந்த பெண்கள் ஒருவகை என்றால், வாழ்வின் வரையறைகளை மாற்றி சிந்திக்கவும் செயல்படவும் கற்றுக்கொண்டு விட்ட பெண்கள் புதுவகை.
இவை இரண்டுமாக இல்லாமல், பழைய அடிப்படைகளையும், புதிய ஞானத்தையும் ஒன்றாகவே தரித்துக்கொண்டு வாழும் பெண்கள் பற்றித் தெரிந்தால் கூட அந்தத் தகுதி உண்டு. அவர்கள் கணினியின் உலகத்துக்குள் இருந்தபடியே கறிவேப்பிலைச் செடி ஏன் துளிர்க்கவில்லை எனக் கவலைப்படுவார்கள். வாகனங்களின் திருப்பான்களைப் போலவே உணர்வுகளை முறுக்குவதையும் பயணத்துக்கு என்று கடப்பார்கள். அவர்களாக இருக்கலாம் அல்லது அவர்களை அறிந்திருக்கலாம் அப்போதுதான் அவரவர் வாள் அவரவர்க்கு என்ற விதிமுறை புரியும்.
இது பெண்தான் என்றில்லை. ஆணுக்கும் பொருந்தும். எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட முடியாமல், சிறு வாஞ்சையோடு எடுத்துப் பார்த்துக் கொள்வதற்காகவேனும் ஒரு துண்டுத்துணியை, கிழிந்த பத்திரிகையை வைத்துக் கொள்ளும் இளமனது இருப்பவர்க்குப் பொருந்தும்.
அதுவும்
கிழக்குப் பார்த்த வீடுதானா?
“சாய்ந்து கொள்ளும் பொழுதில்
பின்னிருந்து அணைத்துக்கொள்ளும்
ஒரு சுவர்
அந்த வீட்டிலும் இருக்கும்
அவ்வளவுதான் தெரியும்”
நேரமும் தூரமும் துரத்தும் வாழ்க்கையில் ஆறுதலுக்கு எவ்வளவு கதியற்றுப் போயிருக்கிறோம் என்ற விம்மலை எழுப்புகிறவள் இந்தப் பிச்சி.
உடனடிகளாலான இவ்வுலகில்
பழசாயிருப்பதன்
அபாயத்தை முறிக்க விரும்புகிறாயா
என்ற கேள்வியை அவளன்றி யார் கேட்பார்கள்?
ஒரு
மித வியப்பைக்
கொண்டாடத் தெரியாது
அதி வியப்புக்குக்
காத்திருக்கத் தூண்டும்,
எதிர்பாராமையின்
அச்சு முறிக்க
முயன்று முயன்று
தோற்கும்
அறிவத்த மனசு.
வாசித்துக் கொண்டே வரும்போது ஏன் கடைசி வரியில் மட்டும் இலக்கிய நடை துறந்து வீட்டு முற்றத்தில் கவிதை இறங்கிவிட்டது என்று ஒருகணம் திடுக்கிடும். பிறகு இறங்க வேண்டிய தளம்தான் எனப் புரிகிறபோது ஆறுதல்.
சொல்லாத சொற்களின் கனம் என்னவென்பது புரியும் இடம் அவள் முடிவெடுக்கிறாள்
எனில்,
உரத்துச் சொல்லிப் பார்க்கலாம்
ஒருமுறை,
எதிர்முனைக்குக் கேட்குமளவிலேனும்
கொஞ்சம்
உரத்துச் சொல்லிப் பார்க்கலாம்.
ஓரிரு கவிதைகள் சற்றே வேறு மையம் கொண்டவை போலப்பட்டாலும் பெரும்பாலானவற்றின் கதாபாத்திரத் தன்மை நிழல்போல் அவற்றிலும் படிந்தே இருக்கும் தொகுப்பு.
விரைந்து நகர்ந்து
தளும்பும் கண்களுக்கு
மறைவிடம் தேடப் பணிக்கிறது
எனக்கு அருளப்பட்ட
நார்மல் வாழ்வு
எனில் சாரம் இதுவே. காவியத்தன்மை ஏற்றாது, சிடுக்கான மொழியைத் தொடாது ஒரு தலைமுறைக் குரலாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு. சந்தியா பதிப்பக வெளியீட்டில் வண்ணதாசனின் வாழ்த்துரையோடு வந்திருக்கும் நல்ல தொகுப்பு.
விலை ரூ.80
சந்தியா பதிப்பகம்
***
உமா மோகன் – இவர் பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இதுவரை ஏழு கவிதைத்தொகுப்புகள் மற்றும் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.