Thursday, December 5, 2024
Homeஇதழ்கள்2023 இதழ்கள்ஊறும் மிளகாய்

ஊறும் மிளகாய்

க.வசந்த்பிரபு

ப்போதும் இப்படி நேரத்திற்கு ஆபிஸ் வரவேண்டிய வேலை இல்லை தான் என்றாலும், எப்போதாவது இப்படி காலை சாப்பாட்டுக்கு முன்பு வரவேண்டியிருக்கும். இன்றும் அப்பிடித்தான். என் சீனியர் ஸ்டாப் ஆபிஸ் வேலையாக சென்னை செல்கிறார். அவருக்கு தேவையான பைல் ஒன்று என்னிடம் இருந்ததால் இன்று நேரத்திற்கு ஆபிஸ் வரவேண்டியதாகிவிட்டது. இனி வீட்டிற்கு போய்விட்டு மாலை வந்தால் போதும் என்ற எண்ணத்தினோடே பார்க்கிங்-கில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். வழியில் சிகரெட் பாக்கெட் வாங்கிக் கொண்டு, ஒரு சிகரெட்டை தனியாக வாங்கி, பற்ற வைத்து இழுத்த போது, பசிப்பதை போன்ற ஒரு உணர்வைத் தந்தது. அடுத்தடுத்த இழுவைகளில் புரிந்துவிட்டது. பக்கத்திலிருந்த சிறிய ஓட்டல் ஒன்றிலிருந்து வந்த மணமும், மணி 10 ஆகியிருந்ததும் கூட பசியை எனக்கு உணர்த்தியிருக்கலாம். உடனே வீட்டிற்கு அழைத்து வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வருவதாக சொல்லிவிட்டு அந்த ஓட்டலுக்குள் நுழைந்தேன்.

ஒரு உணவுப்பொருள் தரக்கட்டுப்பாடு அதிகாரி போல, ஓட்டலைப் பார்த்துக் கொண்டே நுழைந்தேன். பக்கவாட்டுக் கூரைகளில் எண்ணெய்ப் பிசுக்குகளும், புகைக் கருப்பும் சேர்ந்து ஏறியிருந்தது. கை கழுவுகிற பேசின் மட்டும் வெண்மையை வைத்திருந்தது. கைகழுவ ஏசியன் பெயிண்ட் டப்பாவில் நீரும், அதனுள் ஒரு பிளாஸ்டிக் கிளாசும் இருந்தது. தண்ணீரை கலக்காமல் நீரை மொண்டு கையைக் கழுவி விட்டு திரும்பினால், 12 பேர் மட்டுமே அமரும்படியான அந்த ஓட்டலில் 13 பேர் அமர்ந்தும் 2 பேர் நின்று கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அமர்ந்து சாப்பிட்ட 13 பேரில் ஒருவன் என் ஆபிசின் ஏதோவொரு செக்ஷனில் தான் இருக்கிறான். நான் சட்டென வெளியேறி நின்றேன்.

இதற்குமுன் இப்படி ஒருமுறை காத்திருந்து சாப்பிட்டு இருக்கிறோம். நானும் முரளியும் அப்போது ஒரே அறையில் தங்கியிருந்தோம். இல்லையில்லை அவனது அறையில் தங்கியிருந்தேன். அவன் தான் எனக்குமுன் காஞ்சிபுரம் போய் அந்த அறையை பிடித்து வைத்திருந்தான். அவன் அங்கு ஏதோ ஒரு கொரியன் கம்பெனியில் வேலையில் சேர்ந்த இரண்டாவது மாதத்தில் நான் அந்த அறையில் போய் சேர்ந்தேன். அங்கிருந்த போட்டித் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டரில் சேர்ந்திருந்தேன். காஞ்சிபுரம் தான் கோச்சிங் சென்டர்களுக்கு பேமஸ் அப்போது. இப்போது யாராவது என் ஆபிசில் புதிதாக ஜாய்ன் செய்கிற போது, நான் அவர்களிடம் கேட்பது எங்க படிச்சிங்க என்று தான். என்னைக் கடந்து சென்று வலதுபுறம் வளைந்த டிவிஎஸ் 50 யின் கண்ணாடியில் பட்ட சூரிய ஒளியின் பிம்பம் எனக்கு வலமிருந்து இடமாக சட்டென ஒரு பறவை போல கடந்தது.

ஓட்டலின் உள்ளிருந்து வெளியே சென்ற நான்கு பேருக்கு பின்னால் வந்த ஒருவன், என்னை இடமிருப்பதாகச் சொல்லி உள்ளே அழைத்தான். அமர்ந்ததும் குடிக்க வைத்திருந்த கிளாசையும், தண்ணீர் இருந்த ஜக்கையும் எட்டிப்பார்த்தேன். சுத்தமாகத்தான் இருந்தது. அதற்குள் இலை வந்துவிட்டது. கூடவே உள்ளே வரும் போதே சொன்ன ஆனியன் தோசையும் வந்திருந்தது. வாழை இலையில் வைத்த தோசையின் சூடு இலையின் மணத்தை பரப்பியது. தேங்காய் சட்னியும், இன்னொரு சட்னியும், ஊற்றிவிட்டு, சாம்பாரை தனிக்கப்பில் வைத்துவிட்டு, வேறேதும் சொல்லவா என்றபோது, நான் மற்றவர்களின் இலைகளைப் பார்த்தேன். பலரும் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உடனே பூரி சொல்லிவிட்டு, அந்த இன்னொரு சட்டினியை காலி செய்துவிட்டு அது என்ன சட்டினியாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதற்குள் பூரி இல்லாமலே அருகில் வந்த அவன், “சார் பூரிக்கு கிழங்கு இல்ல, வடகறியும் காலி, சாம்பார், சட்னி தான் ஓகே..வா ” என்றான்.

நான் அதைப்பற்றிய கவலையேதுமின்றி..

“பரவால்ல பூரி போட சொல்லு.. இந்த சட்னி மட்டும் கொஞ்சம் வை” என்றேன்.

வைத்து விட்டு அவன் பூரி எடுத்துவர போய்விட்டான். இது என்ன சட்னி என்று எப்படி அவனிடம் கேட்பது, அருகில் ஆட்கள் அமர்ந்து இருக்கிறார்கள், எனக்கும், அந்த அறைக்கும் இடது மூலையில் என் ஆபிஸ்காரன் வேறு இருக்கிறான். என்ன நினைப்பான்.
இதே போல, என்னோடு கோச்சிங் சென்டரில் படித்த மகேந்திரன் வீட்டில் ஒருமுறை ஒரு சட்னி சாப்பிட்டேன். அது பீர்க்கங்காய் தோலை மட்டும் சீவி, பொன்னிறமாக வதக்கி, மிளகாய், புளி, இஞ்சி வைத்து அரைத்திருந்ததாக சொன்னார் மகேந்திரனின் அப்பா. அவர்தான் அவங்க வீட்டில் சமையல். அவனது அம்மா சென்னையில் வேலை செய்தார்கள். அரசு வேலைதான், தினமும் ரயிலில் போய் திரும்புவார்கள். அப்போதெல்லாம் பல நாட்களில் அவன் வீட்டுச் சாப்பாட்டு ருசியோடே மதிய வகுப்புகளை கடந்திருக்கிறேன். காலையில் மகேந்திரனின் அம்மா போகும் 7.18 ரயில், கேன்சல் ஆகி வேறு நேரத்திற்கு மாறிய போது, அவனது அம்மா அங்கேயே தங்கிக் கொள்வதாய் முடிவாகி, அவனும் அவனது அப்பாவும் இங்கு தங்கி இருந்தார்கள். அவன் கோச்சிங் சென்டரிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டான். பிறகு மகேந்திரனும், அவன் அப்பாவும் சேர்ந்து தள்ளுவண்டியில் ஒரு ஓட்டலை வைத்துவிட்டார்கள். நானும் முரளியும் அந்த ஓட்டலில் பலநாட்கள் காத்திருந்து சாப்பிட்டு இருக்கிறோம். அவன் படிப்பதை நிறுத்தியிருந்ததைப் போலவே, அவனது அம்மாவும் இவர்களிருவரை தவிர்த்து வேறொருவரோடு வாழ்ந்தது பின்தான் தெரிந்தது.

சட்னி காலியாகி இருந்தது. கையில் ஒரு துண்டு தோசை தான் இருந்தது. அதை சாம்பார் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, பூரி வந்துவிட்டது.

அவன் பூரியை வைத்து விட்டு சூடு பொறுக்காமல் கையை காற்றிலாட்டியபடி, சட்னியா.. சாம்பாரா என்றான்.

நான் சட்னி என்று சொன்னவுடன், அவன் தேங்காய் சட்னி கரண்டியில் கை வைத்தவுடன், நான் சட்டென, இதுவேணாம், அந்த சட்னி வை என்றபோது, அவன், கத்திரிக்கா சட்னியா.. என்றபடி வைத்துவிட்டு போய் விட்டான். எதிரிலிருந்தவன் ஆப்பாயிலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பக்கத்திலிருந்தவன் பூரிக்கு காத்திருந்தான். நான் சாப்பிட்டு முடித்துவிட்டு கையை கழுவிவிட்டு திரும்பியபோது, என்னை கடந்த பெண்ணின் முகத்தை பார்க்க தூண்டியது, நான் உண்டுமுடித்த அத்தனை உணவின் வாசமும் கலந்து வந்த அவளின் வியர்வை வாசம். அதற்குள் அவள் உள்ளே போய்விட்டிருந்தாள். எப்படியும் அவளுக்கு 30 வயதிருக்கலாம். பணம் கொடுப்பதற்காக நின்றிருந்தேன். அவள் தான் வந்தாள். 35 வயதுக்கு மேலிருக்கும். கத்திரிக்கா சட்னி வைத்தவன் எனக்கான தொகையை சொன்னான். நான் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் பணத்தை வாங்கியபடி அவனிடம், ஆப்பாயில், ஆம்லேட் எதுவும் இல்லையா என்றாள்.

நான், சிரித்தபடி இல்லை என்றேன். அவள் மீண்டும் அவனிடம், எனக்கான மீதித்தொகையை எண்ணியபடியே, உள்ள போய் கொழம்புல இருந்து மீனெல்லாம் எடுத்துட்டு கொழம்ப மட்டும் அடுப்புல ஏத்து, சுட்டதும், அடுப்ப நிறுத்திட்டு மீன அதுல போட்டுடு.. என்றாள். நான் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போகாமல் ஆபிஸ் வந்துவிட்டேன். மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

முரளி வீட்டில் எப்போதும் மீன் கொழம்பை முதல் நாளே வைத்துவிட்டு, மறுநாள் தான் சாப்பிடுவார்கள். அது நாலைந்து வேளைகள் உணவோடு இருக்கும். சோறோடு, இட்லியோடு, சப்பாத்தியோடு, பூரியோடு என… முரளியின் அம்மா சுவையாகவும், புதிதாகவும் சமைக்கக் கூடியவர். ஊருக்கு வந்து திரும்பினால், நிச்சயம் புளிக்காய்ச்சல் சாறு, ஊறுகாய், சப்பாத்தி மாவு, எல்லாம் கொடுத்து அனுப்புவார்கள். சாதம் மட்டும் வடித்தால் போதும், தயிர் பாக்கெட் வாங்கிக்கொள்வோம், புளிசாதம், தயிர்சாதம், ஊறுகாய் என ஓட்டுவோம். எப்போதாவது மகேந்திரன் ஓட்டலில் கிரேவியோ, இல்லை அவன் வீட்டிலிருந்து கொழம்போ வாங்கிக்கொள்வோம். பதினான்கு முறை தேர்வெழுதி, பதினைந்தாவது முறை தான் செலக்ஷன் லிஸ்டில் வந்தேன். முரளிக்கு வீட்டில் பெண் பார்க்க தொடங்கியிருந்தார்கள். நெருங்கிய உறவுக்கார பெண்ணை பார்த்து முடிப்பதாக தான் திட்டம். இருந்தாலும் வெளியில் கொஞ்சம் பார்த்து விட்டு பார்க்கலாம் என முடிவெடுத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் உறவுக்காரப் பெண்ணையே திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு வேலை செங்கல்பட்டில் கிடைத்தது. இன்னும் ஒரு 5 மார்க் எடுத்திருந்தால் எப்போதோ சொந்த ஊருக்கு வந்திருப்பேன். முரளியின் திருமணத்திற்கு கூட காலையில் தான் வந்தேன். முரளி திருமணத்தில் இரவு உணவு மெனு என்ன தெரியுமா?? கொத்து பரோட்டா, மினி இட்லி வித் சாம்பார், ரவா தோசை, பூசணி அல்வா, கிச்சடி னு கலக்கலா இருந்ததாம். நான் தான் லீவு போடனுமேனு வரல. காலையிலயும் அட்டனன்ஸ் போட்டுவிட்டு ஓடி விட்டேன். ரொம்பநாள் கோவமாகவே இருந்தான். பிறகு செங்கல்பட்டிற்கு ஜோடியாக இருவரையும் வரவழைத்து மதிய சாப்பாட்டை வேதாசலம் நகர், ரங்கா ரெசிடன்சியிலும், இரவு சாப்பாட்டை அண்ணாநகர், வள்ளி பாரடைசிலும் என விருந்து வைத்து பஸ் ஏற்றிவிட்டேன்.

வீட்டிலிருந்து போன் வந்தது, உணவுக்கான அழைப்பென்று எடுத்தபோது, மனைவியின் தங்கை மகள் வயதுக்கு வந்திருப்பதாகவும், பள்ளியில் இருந்து தகவல் வந்ததையும், மனைவியும், மச்சினியும் ஸ்கூலுக்கு போய் கொண்டிருப்பதாகவும், வெளியிலேயே சாப்பிட்டு விட்டு மாலை, மச்சினி வீட்டுக்கு வந்துவிடும் படியும் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள். நான் எழுந்து ஆபிசின் வெளியே வந்து, டீ கடையில் நின்று, பாக்கெட்டை பிரித்து சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே, ஒரு டீ என்றேன். மதிய உணவு நேரமென்பதால் கடையில் கூட்டமில்லை. சிகரெட்டை இழுத்தபடியே மாஸ்டர் டீ போடுவதை பார்த்துகொண்டிருந்தேன். பால் குண்டானில், பால் பாதிக்கும் கீழிருந்ததால், கையை ஊதியபடி பாலை எடுத்தார், வெகுநேரம் காய்கிற பாலில் டீ சாப்பிடுவது தனிசுகம். கடைசி பப் இழுப்பதற்குள் டீ கைக்கு வந்துவிட்டது. டீ நல்லசுவை. பாலின் அடர்த்தியைக் கூட்ட ஒரு வெள்ளை காட்டன் துணியில் கொஞ்சம் ஜவ்வரிசையை கட்டி, பால் குண்டானில் போட்டு டீ சுவையை கூட்டுவார்கள். அந்தச் சுவை இல்லை இது. இந்த ஜவ்வரிசி விஷயமெல்லாம் கூட முரளி சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

டீ கடையிலிருந்து ஆபிசின் உள்ளே வருவதற்குள் புதிய நம்பரிலிருந்து ஒரு போன் வந்தது. எடுத்து பேசிக் கொண்டே வந்தேன். மகேந்திரனின் அம்மா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு. அவருடைய ஆபிசில் ஏதோ சிக்கல், சிக்கல் யாரோடென்றால், செங்கல்பட்டில் என்னோடு பணிபுரிந்து புரோமஷனில் சென்னை சென்றவனோடு. எனவே என்னை பிடித்து சரிசெய்கிற முயற்சிக்காகவே என்னை அழைத்திருந்தார்கள். நான் முழுவிவரத்தையும் கேட்டுவிட்டு சரி பாத்துக்கலாம் அம்மா. ஒன்னும் பிரச்சனை வராது. நான் சொல்றன், என போனை கட் செய்து விட்டு, ஆபிசின் உள்ளே போகாமல் பார்க்கிங்கிற்கு வந்துவிட்டேன். எத்தனை வருடங்கள் கழித்து என்னை பிடித்து பேசுகிறார்கள், அவர்களுக்கு தேவையெனும் போது எப்படி, யாரை வைத்து பேசித் தீர்கலாம் என யோசிக்கிற அவரைக்குறித்து யோசித்துக் கொண்டே, அவனுக்கு போன் செய்தேன். அவனிடம் விவரத்தை கூறினேன். அவன் மகேந்திரனின் அம்மா மீதான குற்றங்களை அடுக்கி தள்ளினான். இந்தமுறை மட்டும் எனக்காக விட்டுவிடுவதாகவும், இனி சரியாக இருக்கச் சொல்லியும், சொல்லச் சொன்னான். கூடவே அவர் வாங்கும் லஞ்சத்தில் தனக்கான பங்கை சரிவர தராமல் போவதில் தான் பிரச்சனை எழுகிறது. அதைச் சரி செய்துகொள்ளச் சொல் என்றான். பிறகு கொஞ்சநேரம் நாங்கள் பழைய கதைகள் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் இரண்டுமுறை அழைத்துவிட்டார் மகேந்திரன் அம்மா. பிறகு அவரை அழைத்து அவன் சொன்னதையெல்லாம் சொன்னேன். அவரும் நன்றி சொல்லிவிட்டு இனி பிரச்சனை வராம பாத்துக்கறன் என்று சொல்லி தொடர்பை துண்டித்துக் கொண்டார். மகேந்திரனைப் பற்றி ஒன்றுமே கேட்கவில்லை. நானும் கூட கேட்கவில்லை. மகேந்திரனிடம் பேசியே 10 மாதங்களுக்கு மேலாகியிருக்கும்.

காலையில் ஓட்டலில் முரளி வீட்டு ஸ்டைலில் செய்த மீன் குழம்பு ஞாபகத்தில் வந்து நீந்திக்கொண்டிருந்தது. நான் வண்டியை எடுத்துக்கொண்டு ஓட்டலுக்கு போனேன். வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சிகரெட்டை இழுத்து முடித்துவிட்டு உள்ளே போகும் போதே, கல்லாவிலிருந்த அந்த பெண்ணிடம், இடம் இருக்கா என்றபடியே அவளைப் பார்த்தேன். அவள், “இடம்லாம் இருக்கு, சாம்பார், கொழம்பு, கூட்டு, பொரியல்லாம் கிடையாது. ரசம், மோர், அப்பளம், ஆம்லேட் தான் இருக்கு ” என்று முடித்த போது நான் டேபிளில் அமர்ந்திருந்தேன். அந்த அளவுக்கு பசியிலிருந்தேன்.

காலையில் கத்திரிக்காய் சட்னி வைத்த அதே ஆள் தான், இப்போதும் இலை வைத்தான். இலையை கழுவி விட்டு நிமிர்ந்த போது ஆவி பறக்க சுடு சோறோடு நின்றிருந்தான். வைத்துவிட்டு, “மீன் கொழம்பு ஊத்தவா” என்றான். நான் பக்கெட்டை எட்டிப்பார்த்தேன், குழம்பு அடியில் இருந்தது, போடு என தலையை அசைத்ததும், கொழம்பை ஊத்திக் கொண்டே, பீஸ் எதுவும் இருக்காது. வெறும் கொழம்பு தான் என்றான். நான் சொல்லாமலே எனக்கு ஆம்லேட் வந்திருந்தது. அப்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டு அடுத்து வாங்கிய சோறுக்கும் மீன் கொழம்பே வாங்கிக் கொண்டேன். பாத்திரத்தை சுரண்டி ஊத்தியதால், இந்த முறை மீனின் கண்ணும், உடைந்த மண்டையின் சிறிய பீஸ் ஒன்றும் கிடைத்தது. இலையிலிருந்த ஆம்லேட் தீர்ந்திருந்தது. இப்போது நான் ஆம்லேட் சொல்லிவிட்டு, அடுத்த சோறு வாங்கிக் கொண்டு ரசம் ஊத்தச் சொன்னேன். ரசம் ஊத்திவிட்டு ஊறுகாய் வேண்டுமா? என ஊறுகாய் பாட்டிலோடு நின்றிருந்தான். நான் பாட்டிலின் ஸ்டிக்கரையும், பாட்டிலில் இருந்த ஸ்பூனையும் பார்த்துவிட்டு வைக்கச் சென்னேன். ஏனென்றால் சில ஓட்டல்களில் மாதக்கணக்கில் கூட ஊறுகாய் தீராமலிருக்கும் படியிலான சுவையிலிருக்கும், அந்த பாட்டில்கள் அழுக்கேறி இருக்கும், ஸ்பூன் சில்வர் கலரிலிருந்து ஊறுகாய் கலருக்கு மாறியிருக்கும். அவன் வைத்துவிட்டு ஆம்லேட்டும் எடுத்துவந்து வைத்துவிட்டு போய்விட்டான். ரசம் சோறை சாப்பிட்டு விட்டு அவனை அழைத்து கொஞ்சமாய் சோறு வைக்க சொல்லி மோர் போட்டுக்கொண்டேன். மீண்டும் ஊறுகாய் பாட்டிலோடு நிற்கிறான். இந்தமுறை அவன் ஊறுகாய் எடுப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிளறிக் கொண்டிருந்தவனிடம், என்ன என்றேன். இல்ல சார் பச்சமிளகா இருக்கு. அதான், தள்ளிட்டு எடுக்கறன் என்ற போது, நான் பச்சமிளகாயை எடுத்து இலையில் வைக்கச் சொல்லி, ஊறுகாயில் ஊறிய பச்சை மிளகாயை தொட்டுக் கொண்டு பல வருடங்களுக்குப் பிறகு, சாப்பிட்டேன்.

கை கழுவிவிட்டு பணம் கொடுக்க வந்து நின்ற போது, அந்தப் பெண், ”கொழம்புல மீன அள்ளிப் போட்டதுக்கு அப்பறம் தீய கொறச்சு வைடா ” என நாளைக்கான வேலைகளை கவனித்தபடியே என் பக்கம் திரும்பி பணம் வாங்கிக் கொண்டார். ஒரு ஆம்லேட்டுக்கு மட்டுமே பணம் எடுத்துக் கொண்டார். கூட்டு, பொரியலுக்குப் பதில் அந்த ஆம்லேட் போல. சோறு போடுவதில் அவர்களுக்கென அறத்தை வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது.

சிகரெட்டை பற்ற வைத்தபடியே, ஆபிசின் எதிர்திசையில் நடந்து போனேன். முரளியோடு அறையிலிருந்த போது, முரளி வீட்டிலிருந்து வரும் ஊறுகாயில் ஊறி இருக்கும் பச்சைமிளகாயை பாதி பாதி எடுத்துக் கொள்வோம். அது காரமும், புளிப்புமாய் மாறி மாறி நாக்கில் நீர் இறைத்து விளையாடும். மனம் எதை எதையோ நினைவூட்டியது. மகேந்திரனுக்கு போன் பண்ணி பேச வேண்டும் போல இருந்தது. நான்கைந்து முறை அழைத்தும், எடுக்கவில்லை. இன்னும் கோவத்தில் தான் இருக்கிறான் போல.

பத்து மாதங்களுக்கு முன், இரவு எட்டு மணியிருக்கும், போனில் அழைத்து முரளி விபத்தில் இறந்துவிட்டான் என்பதையும், தெரிந்தவர்களை வைத்து பார்மாலிட்டிகளை வேகமாய் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், பாடியோடு ஊருக்கு வந்துவிடுகிறேன் என சொன்ன போது, நான் வீட்டிலிருந்தேன், நேராக மாடிக்குப் போய் நான்கைந்து சிகரெட்டை தொடர்ந்து பிடித்துவிட்டு இறங்கி வந்தபோது, பெரிய ஒர்க் ஒன்றை கான்ராக்ட் எடுத்திருந்த கான்ட்ராக்ட்காரர் நாளை ஆபிசில் இல்லாமல் வெளியே பார்க்கலாம். சில விஷயங்கள் பேச வேண்டுமென மெசேஜ் அனுப்பியிருந்தார். இரண்டு மிஸ்டு காலும் இருந்தது. நானே அவரை அழைத்துப் பேசினேன். அவர் அமைச்சரை பார்க்க வந்திருப்பதாகவும், நாளை காலை ஏழு மணி வாக்கில் அழைப்பதாகவும் சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அதற்குள் மகேந்திரன் ஒருமுறை அழைத்திருந்தான்.

என் ஆபிஸ் சீனியர் ஸ்டாப்புக்கு போன் செய்து நாளை லீவு வேண்டும் என சொல்லிவிட்டு, கடைக்கு வந்து சிகரெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு மாடிக்கு போய்விட்டேன். பின் கீழிறங்கி வந்து மகேந்திரனுக்கு அழைத்த போது, அவனுடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. முரளியின் போனுக்கு அழைத்த போது யாரும் எடுக்கவில்லை. மனைவி சப்பாத்தியும், பருப்பு சாம்பாரும் எடுத்து வந்து வைத்தாள். நான் சாப்பிட்டு விட்டு முரளி வீட்டுப்பக்கம் போனேன். முரளியின் அப்பா, அம்மா, அக்கா, இன்னும் சிலரும் அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் இன்னும் அழுகையை கூட்டினார்கள். அக்கா வீட்டுக்காரிடம், முரளியோட தம்பி சென்னையிலிருந்து கிளம்பிட்டானா என்றேன். அவர் தலை அசைத்தபடி கண்களை மூடிக்கொண்டு, உதடுகளை உள்ளிழுத்து அழுகையை அடக்கினார். அடுத்த கேள்வியை நான் தவிர்த்தேன்.

மீண்டும் போனை எடுத்து மகேந்திரனை அழைத்தேன். சுவிட்ச் ஆஃப் லேயே இருந்தது. முரளி போனும் எடுக்கவில்லை. நான் வீட்டிற்கு வந்து காலை 3.30 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். ஆனால் காலை ஆறு மணிக்கு எழுந்தபோது, முரளி நம்பரிலிருந்தும், மகேந்திரன் நம்பரிலிருந்தும் மிஸ்டு கால்கள் இருந்தன. நான் கிளம்பி முரளி வீட்டிற்குப் போன போது, முரளியின் கம்பெனியில் இருந்து யூனியன் ஆட்களெல்லாம் பஸ் வைத்து வந்திருந்தார்கள். கம்பெனி முதலாளி கூட வந்திருந்தார். முரளியின் உடல் அவன் வீட்டு வராண்டாவில் இருந்தது. நான் சென்றவுடன் முரளியின் அக்கா என் கையை பிடித்துக்கொண்டு விடாமல் அழ ஆரம்பித்தாள். இத்தனை மணிக்கு வந்திருக்கும் எனக்கு யார் முகத்தையும் பார்க்க தைரியமில்லை, முரளியின் முகத்தை பார்த்து அழுதபடி நின்றிருந்தேன். என் போன் அடிக்க ஆரம்பித்த போது, முரளியின் அக்கா என் கையை விட்டு விட்டார். நானும் வெளியே வந்து, ஒரு 8 நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.

அதற்குள் மறுபடியும் கான்ட்ராக்ட்காரர் அழைத்து, 7.30 மணிக்கெல்லாம் தயாரா இருங்கள் என்றும், அமைச்சரும் நம்மோடு வருகிறார் என்றும், காரை வீட்டுக்கு அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு வைத்துவிட்டார். என்னால் மறுக்கமுடியவில்லை. அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். 7.40 கெல்லாம் முரளியின் தெருவைக் கடந்து காரில் போய்க்கொண்டிருந்தேன். அங்கிருந்து பாண்டிச்சேரி போய் விட்டோம். இரவாகி விட்டது திரும்பிவர. அதற்குள் மகேந்திரன் பலமுறை அழைத்திருந்தான். அக்கா வீட்டுக்காரரும் சிலமுறை அழைத்திருந்தார்.

அதற்குப்பின் இப்போது தான் மகேந்திரனை அழைக்கிறேன். இப்பொழுது இமைகளை ஒரு முறை நான் மூடினால் கலங்கிய கண்களில் இருந்து நீர் இறங்கும். அதை தவிர்த்து நான், கர்சீப்பை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டேன். நான் வெகுதூரம் நடந்து வந்து விட்டேன். இப்போது திரும்பி நடந்தேன். ஓட்டலுக்கு அருகிலேயே விட்டு விட்டு வந்த வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது, எதிரில் வந்த ஓட்டல்கடை பையனை அழைத்து அந்த ஊறுகாய் எங்கு கிடைக்குமென கேட்க, அலுவலகத்திற்கு பக்கத்திலிருந்த சந்தில் போய், மூன்றாவது லெப்ட்டில் முதல் வீடு என்றான். ஆபிசில் போய் தலையை காட்டிவிட்டு, மூன்றாவது லெப்டில் முதல் வீட்டில் நிறுத்தினேன். வெளியில் நின்றிருந்த முரளியின் அம்மா வேகமாய் வந்து என் கையைப்பிடித்து உள்ளே அழைத்துப்போய் அமர வைத்துவிட்டு, வீட்டின் பின்னால் இருந்த முரளியின் அப்பாவை அழைத்தார். ஒருபக்கம் சில பெண்கள் அமர்ந்து பாட்டிலில் ஊறுகாய் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சிறிய பாக்கெட் பேக்கிங்கும் நடந்து கொண்டிருந்தது. சமயலறையில் இருந்து பால்குக்கர் சத்தமிட்டது.

சுவரில் முரளியின் படம் மாட்டி இருந்தது. அதற்கு கீழே அவனது யூனியன் கொடி இருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, முரளியின் அப்பா சிகப்பு கொடியைக் காட்டி, அவன் யூனியன்காரங்க இதபோத்தி தான் தூக்கிட்டு போனும்னு கேட்டாங்க. அதுதான் நாங்க செய்யற பெரிய மரியாதை னும் சொன்னாங்க. அப்புறம் சுடுகாட்டுல இருந்து திரும்பும் போது கொடிய எடுத்துட்டு வந்து வீட்டுல கொடுத்துட்டு போயிட்டாங்க என்றார். இருவரும் என்னைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும், வேலையைப் பற்றியும் விசாரித்து பேசிக்கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்த முரளியின் தம்பி, அருகில் வந்து நெருங்கி அமர்ந்து கொண்டான். அரைமணி நேரத்திற்கும் மேல் அங்கிருந்தேன். நான் அவர்களிடம் எதுவுமே கேட்கவில்லை, அவர்கள் கேட்டதற்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குள் மனைவியிடமிருந்து போன் வந்தது. நான் இன்னொரு நாள் வருவதாகச் சொல்லி விட்டு வெளியே வந்து போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

பின்னாலேயே வந்த முரளியின் தம்பி இரண்டு பாட்டில் ஊறுகாயை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். பேசி முடித்து போனை வைத்தேன், முரளியின் அப்பா வேறு இரு பாட்டிலோடு வந்து என் வண்டியில் வைத்துவிட்டு, தம்பியின் கைகளில் இருந்த பாட்டிலை காட்டி அது கடைக்கு போட்டது. ஒரு பாட்டிலுக்கு 2 மிளகாய் தான் இருக்கும். இதுல ஆறேழு மிளகாய்க்கு மேல இருக்கும் என என் பெயரைச் சேர்த்துச் சொன்னார்.

மனைவியை அழைத்து வர மச்சினியின் வீட்டுக்கு போகும் வழியிலிருந்த பங்க் கடையில் ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தேன். சனிக்கிழமை கிளம்பி காஞ்சிபுரம் போய், மகேந்திரனை நேரில் பார்த்து பேசவேண்டும் எனத் தோன்றியது.

***
க.வசந்த்பிரபு – இவர் திருவண்ணாமலையில் வசிக்கிறார். தொழில்முறை வடிவமைப்பாளராகவும், நிழற்படக் கலைஞராகவும் இருக்கிறார். மின்னஞ்சல்: vasanthprabu20@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular