Sunday, October 1, 2023
Homeஇதழ்கள்2022 இதழ்கள்ஊர் எனும் வாக்கியம்

ஊர் எனும் வாக்கியம்

ஜீவ கரிகாலன்

தமிழில் beating around the bush என்பதற்கான அர்த்தம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்று வைத்துக்கொள்ளலாம். இது ஒரு ’விமர்சனம்’ என்றார் என் நண்பர். எனக்கோ இது ஒரு வடிவமாகத் தோன்றியது. சமீபத்திய பயணம் ஒன்று கிளர்த்திய நல்ல மனநிலையை, மேற்சொன்ன இந்த புரிதலுக்கு இரையாக்கிட எனக்கு ஒரு கட்டுரைத் தேவைப்பட்டது :

‘ஒரு பயணம் என்னவெல்லாம் செய்துவிடும்?’ என்கிற வாக்கியம் வேண்டுமானால் தேய்வழக்காய் இருக்கலாமே தவிர ஒரு பயணம் அப்படியானது இல்லை. ஏதோ கணத்தில் முடிவாகின்ற பயணம் உற்சாகம் தருவது மட்டுமல்ல, அது மிகச்சரியானவர்களோடு பயணிக்கையில் சிலவற்றைக் கீறிவிடும் அல்லது விதைத்து விடும். எனக்கு இது ஒரு கீறல் தான். தீபாவுக்கும் கார்த்திக்கிற்கும் விதையிட்டு முளையிட்டு பயிராகப் போவது நிச்சயம், அறுவடையில் பதிப்பாளனுக்கு பங்கிருப்பதால் அதுவே மகிழ்ச்சி தான்.

அரங்கு கிடைத்தாலும் மிகச்சுமாரான விற்பனையே என்ற போதிலும் நெல்லை புத்தகக்காட்சிக்கு பயணிக்க காரணமிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னர் தேடிச்சென்ற செம்புப்பட்டயத்தின் ஆர்வத்தால் விளைந்த பந்தம் அது. யாருமே தெரியாத ஊரை ancestral origin என்று சொல்வதால் என்ன பயன்? பலரைத் தெரிந்திருந்தாலும் அண்மையில் நான் வளர்ந்த கரூரில் இறங்கிய போதும் இப்படித்தான் தோன்றியது.

இவ்வகையான கட்டுரைகளை முன்புபோல் நிதானமாகவே எழுத முடியவில்லை, ஒருபுறம் வரலாற்றை அறிவியல்பூர்வமாக காபந்து செய்வதாக நினைத்துக் கொள்பவர்கள், மற்றொருபுறம் கலாச்சாரம் என்ற பெயரில் மறைமுகமாக இருந்தவர்கள் மதத்தை காபந்து பண்ணுவதாக தம்மையும் பிறரையும் ஏமாற்றுபவர்கள். இவர்கள் எந்த ஒரு சாரரையும் வம்பிக்கிழுக்காமல் உறுதியற்ற தன்மையுடைய வாக்கியங்களை முலாம் பூசுவது போல் பூச வேண்டும். கூடுதலாக அறச்சீற்றம், சில எழுத்தாளர்களின் தனித்தமிழ் மிரட்டல்கள் வேறு..

இரண்டு நெல்லைக்காரர்கள் மத்தியிலே, இரண்டு நாரோயில்காரர்கள் மத்தியிலே, மதுரைக்காரர்கள் மத்தியிலே.. இதுகூட பரவாயில்லை எந்த ஊராக இருந்தாலும் அது டெல்டா தானே என்று சொல்லும், கீழை மேலை தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் பாசம் என்பது என்னவென உறுதியாய் தெரிந்துகொள்ளவே முடியாது.

அப்படியானால் ஊர் என்பது என்ன?


இந்தக் கேள்விக்கு விடை தெரிய பல ஆயிரம் மைல் பயணங்களும் போர்களை முன்வைத்தோ, வணிகங்களை முன்வைத்தோ எழுதப்பட்ட வரலாறுகள் உலகம் முழுக்கப் பரவியிருக்கின்றன. இதில் ஊர் என்பது என்ன? ஒரு சிறு பயணத்தில் கிடைத்த சிறு வெளிச்சம் தான் இக்கட்டுரை. இங்கே வெளிச்சமென்பது ‘கேள்விகள்’ தோன்றுமிடம் தான், வெளிச்சத்தின் எல்லை தான் ‘பதில்’.

முன்கதை:

நெல்லை மாவட்டத்தின் பிரதான விளையாட்டுத் திடல் அது. கேலரியில் அமர்ந்தபடி பொதுவான விஷயங்கள் பேச ஆரம்பித்த கணத்தில் சட்டென பேச்சுவாக்கில் திட்டமிட்டோம். எழுத்தாளர் ஜா.தீபா கொற்கை போய் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். கார்த்திக் ஆதிச்சநல்லூர் போக வேண்டும் என்று விரும்பினார், எனக்கோ மணப்பாடு சர்ச் மீது மையல் இருந்தது. எல்லாமே ஒரே பயணத்தில் போய்வரும் சாத்தியம் இருப்பதை உணர்ந்ததும் அடுத்து அந்த நாளை பயணத்திற்காக எனத் திட்டமிட்டோம்.

*

மு.காமராசு அவர்களின் அனுசரணையோடு காலை உணவு காத்திருக்கிறது என்று முதலில் திட்டமிட்டதால், ரொம்ப நேரம் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்தே நம்பி இறங்கினேன். வந்தது வழிபட அல்ல, ரசிக்க என்பதால் பசி தடுமாறி ரதியின் காலடியில் விழுந்துவிட்டது. ராஜ கோபுரம், மண்டபத்து சிற்பங்கள். குறிப்பாக சிற்பத்தில் இருக்கும் மன்னர்களின் முகவெட்டு, இதே தன்மையில் உள்ள நெல்லையப்பர், ராமேஸ்வரம், தென்காசி கோயில் சிற்பங்கள் ஆகியன. இது ஒரே ஆட்சியில் நிறுவப்பட்டது எனும் தடயங்களைக் கொண்டிருந்தாலும் (போதாக் குறைக்கு நவாப் ஆட்சியின் கோயில் இடிப்பு சமபவங்கள் நடைபெற்றதாக முழுமை இல்லாத செய்திகளை உள்ளடக்கிய கோயில் இது) இவ்வகையான கோயில்கள் 16-ஆம் நூற்றாண்டு கோயில் என்று மட்டும் சொல்லிவிட முடியாது என்கிற எண்ணம் மேலோங்கியது.

கோயிலின் உட்பிரகாரம் என்பது முதல் phase, வெளிப்பிரகாரம் என்பது மூன்றாவது phase, ராஜ கோபுரம் என்பது ஓரளவுக்கு கடைசி அல்லது அதற்கு முந்தைய phase, வெளிப்பிரகாரத்தில் மற்ற தெய்வங்களுக்கான சன்னதிகளை அவ்வப்போது அமைத்துக் கொள்ளலாம். இன்றைக்கு புறம்போக்கு இடத்தில் ஒரு விநாயகர் கோயிலைக்கட்டிவிட்டு முருகன், ஐயப்பன், மாரியாத்தாள் என்று backward integrate செய்யும் உள்ளூர் கவுன்சிலர் அ தர்மகார்த்தாக்களுக்கு ஒரு மரபுத் தொடர்ச்சி இருப்பது இப்படித்தான். அப்படிப் பார்த்தால் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டிலிருந்தே இந்த கோயில் இருந்திருக்கக் கூடும். அதற்கான காரணத்தை தேடித்தான் எங்களது எஞ்சியிருந்த பயணம்.

சிற்பங்களின் காலத்தை நாம் அறிவதால் அல்லது சிற்பம் உருவாக்கப்பட்ட பின்னணியை அறிவதால் அல்லது படிமவியல் கூறுகளைக் கண்டுகொள்வதால் மட்டும் சிற்பத்தை ரசிக்க முடிவதில்லை. சிற்பம் ஒரு கதை கூற வேண்டும் – அந்தக் கதையால் மட்டும்தான் பார்ப்பவருக்கு ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஆரியநாத முதலியாரோ, விசுவநாத நாயக்கரோ நாயக்கர்களை தமிழகத்தில் வேரூன்ற வைக்க அவர்களோடு கலை மரபில் பிணைவது முக்கியம் என்று பெரியதொரு தொலைநோக்குப் பார்வை ஒன்றை வைத்திருக்கலாம், அதுவே இதுபோன்ற பல கோயில்களின் புனரமைப்பிற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

கோயிலின் சிறப்பாக ரதி-மன்மதன் சிற்பங்களைச் சொன்னாலும், வெளிப்பிரகாரத்தில் இருக்கின்ற தன் மகனை மீட்கும் அரசனின் சிற்பமும் சொல்லிய & சொல்லாத கதைகள் தான் இக்கோயிலின் சிறப்பம்சமாக நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வோடு அங்கிலிருந்து கிளம்பலானோம். வற்றாநதியின் வலப்புறத்திலேயே தொடர்ந்தது எங்கள் பயணம்.

கிருஷ்ணாபுரத்தை வைத்து அதே கேள்வியைக் கேட்டேன் – ஊர் என்பது என்ன?

நாயக்கரைப் பொறுத்தவரை ஊர் என்பது தன் பிரதாபத்தை தாங்கி நிற்கப்போகும் நிலம்., அதுவே கோயிலைச் சுற்றி அமர்த்தப்பட்ட 108 அந்தணர்களுக்கு (கல்வெட்டுச் செய்தியின் படி) வேறு ஒன்று. கோயிலை பரமாரிப்பதற்காக தானமளிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு அது வேறு ஒன்று.

*

திச்ச நல்லூர் குறித்து ஒரு தொடரையே எழுத்தாளர் கார்த்திக் எழுத ஆரம்பித்துவிட்டார். விரைவில் அங்கே ஒரு கள அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க இருப்பதாக அறிந்தபோது கார்த்திக் அதற்குள் ஒரு முக்கியமான நூலைக் கொண்டு வந்துவிடுவார் என நம்புகிறேன். ஆதிச்சநல்லூர் என்றதும் முதுமக்கள் தாழி என்பதால் அது ஒரு சுடுகாடு மட்டுமே என்கிற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் இருந்ததுண்டு. பொருநை நதி நாகரிகம் குறித்து தமிழக அரசு கொண்டுள்ள ஈடுபாடு அந்த எண்ணத்தை மாற்றும்.

மு.காமராசு அவர்களின் தொடர்பில் இருந்த அதிகாரி ஒருவர் எங்களை ஆய்வு நடக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார். அவரது அனுபவத்தில் ஆதிச்சநல்லூர் ஆய்வு குறித்த அவரது கருத்துகள் சிலவற்றைக் கேட்டறிந்தோம். 110 கிமீட்டருக்கும் மேற்பட்ட இடம் ஆய்வுக்காக நூறாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் நின்ற இடம் ஒரு சிறு குன்றின் முகட்டைப் போன்றது. பலகாலத்திற்கு முன் அது ஒரு சிறு மலை முகடாகவும் இருந்திருக்கலாம்.

இது வெறும் இடுகாடு மட்டுமல்ல, மக்கள் வாழ்ந்த ஒரு முழுமையான நாகரிகம் என்று அங்கே கிடைத்த பொருட்களைப் பட்டியலிட்டு சொன்னார் அந்த தொல்லியல் அறிஞர். ஈமச் சடங்குகள் நீர்நிலைக்கு அருகில் இருக்க வேண்டுமென்பதால் அவ்விடத்தில் தாழிகள் அதிகம் கிடைக்கின்றன என்றும் சொன்னார்.

கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பின் (பெருமூச்சு விடாமல் படிக்கமுடியவில்லை எனில் அது ரேடியோ கார்பன் டேட்டிங் எனக்கொள்ளலாம்)படி இங்கு கிடைத்த சில பொருட்களின் காலம் கி.மு 9-7-ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கே கிடைத்திருக்கும் எலும்புக்கூடுகள் கி.மு 18-ஆம் நூற்றாண்டு வரை (3800 ஆண்டுகள்) பழையது என்கிறார்கள். மேற்சொன்ன இந்த கால வித்தியாசத்தை எடுத்துக்காட்டும் மண் நிற அடுக்குகளை அந்த அறிஞர் விளக்கினார்.

சங்க காலம் என்று ஒரு தொல்லியல் அறிஞர் பேசுவது ஒரு ஸ்லாம் புக் காதல் கவிதைக்கு நிகரானது

கார்த்திக்கும் தீபாவும் நிறைய கேள்விகள் அந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்த மக்களோடு உரையாட விரும்பினேன்.

“இங்க ஏதாவது கெடச்சதுன்னா உங்களுக்கு என்ன தோனும்”

“காசு கொடுக்கறவங்க சந்தோசப்படுவாங்கன்னு தோனும்”

“என்னங்க.. இங்க பொதஞ்சு கெடக்கறவங்க உங்க முன்னோர்கள்னு நெனப்பிங்களா”

“அது என்ன எனக்கு மட்டும் முன்னோர்கள், எல்லோருக்கும் முன்னோர்கள் தான.. இதுல எங்க சாதி வந்தது?” – ஒரு மானுடவியல் கேள்விக்கு, ஒரு சமூக நீதி பதில் நேரடியானது இல்லையென்றாலும் அதில் துளியும் பாசாங்கு இல்லை, மாறாக 100% உணர்வுப்பூர்வமானது, நியாயமானது.

பெரியவருக்கு இருந்த சமூகநீதிப் பதட்டம் அவருக்கானது மட்டுமல்ல உள்ளே வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் இருக்கும்..

“இங்க ஏதாவது கெடச்சதுன்னா உங்களுக்கு என்ன தோனும்” இதே கேள்வியை அந்த அதிகாரிக்கு கேட்டபோது நேரடியான பதிலேதும் வரவில்லை. அதை மேலும் மேலும் ஆய்வுக்குட்படுத்துவோம் என்கிற ரீதியிலான பதில்தான் வந்தது. கிடைத்த ஆதாரங்களை வரலாற்றுகாலக் கணக்கில், அறிவியல் பூர்வ ஆய்வுக்கூட பரிசோதனைகளில் மானுடவியல் கோட்பாடுகளின் படி, மொழியியல் தகவல்களின்படி என ஆய்வு செய்தால் நம் நிலத்தில் கூடுதலாகவும் ஒன்று துணை (அல்லது இடராக)வந்து நிற்கும் , அது சங்க இலக்கியம். ஆய்வுகள் இவை எல்லாவற்றையும் தாண்டி வந்து நின்றாலும் அது மத்திய, மாநில அரசுகளின், உள்ளூர் அரசியலின், மத நம்பிக்கைகளின் எந்த ஒரு அடுக்கையும் அசைக்கக்கூடிய அல்லது அசைக்கக்கூடாத ஒன்றாக அது வெளிவர வேண்டிய ஏதோ ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிர்பந்தங்கள் இருக்கும் என்று தோன்றியது.

எல்லாவற்றையும் தாண்டி ஆதிச்சநல்லூர் என்பது ஆய்வு செய்பவர்களுக்கு அது எவ்விதம் உணர்வு தரும், அதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அந்த ஊர் என்பது என்ன?

*

அடுத்ததாக,

கொற்கை செல்லும் வழியில் ஆழ்வார் திருநகரியில் சிறு நிறுத்தம். தூரத்து உறவினர் ஒருவர் வீட்டிலிருக்கும் விக்கிரகம் பற்றியும், ஜா.தீபாவின் நினைவில் இருந்த தாமிரபரணி ஆற்று படித்துறை பற்றியும் அங்கிருக்கும் காபி கடை பற்றியும் பேசிக்கொண்டு வந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காபி கடையும் திறக்கப்படவேயில்லை. படித்துறையும் சாக்கடையாலும் சிறுநீர் வீச்சத்தாலும் மகத்தான மனித இனத்தின் பிரதிநிதித்துவம் என்னவென புரியவைத்தது. விழுந்தடித்து ஓடினோம். படித்துறையுள்ள 90% ஊர்களும் இன்று இப்படித்தான் இருக்கின்றன 10% ஆய்வை இன்னும் செய்யாத ஒரு பயணி சொல்லிப்போனார், செல்போன் வந்தபிறகு பாத்ரூமில் தான் குளிப்பதை விரும்புகிறார்கள் என்பது அவர் வாதம்.


புகழ்பெற்ற டி.வி.எஸ் நிறுவனம் பராமரிக்கும் நவதிருப்பதித் தலங்கள் இருக்கின்ற ஊரில் போதிய ஒதுங்கிடங்கள் இல்லை அல்லது போதிய விழிப்புணர்வு இல்லை. இனி ஆழ்வார் திருநகரி என்றதும் படித்துறையின் இந்த வாடைதான் ஞாபகத்தில் வருமோ என்றபடி அவ்வூர் விட்டு நகர்ந்தோம். பெரியாழ்வார் எங்களை மன்னிக்கட்டும்.


கொற்கை தமிழகத்தின் பழைய துறைமுகம். இன்றைய கடற்பரப்பிலிருந்து(புன்னைக்காயல்) சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கின்றது. அதுவும் மிகச்சிறிய கிராமம் தான். பெரிய அளவில் அரசு மேற்கொண்ட ஆய்வுகள் நிறைவடையாமலேயே முடிந்துவிட்டது. அண்மையில் நடந்த ஆய்வுகளுக்குக் கூட எந்த எச்சமும் இல்லை. இன்று அங்கே பயணிப்பவர்களுக்கு சங்க இலக்கியத் தகவல்கள் மட்டுமே கொற்கையோடு நம்மைப் பிணைக்க இருக்கும் ஒரே சக்தி. கார்த்திக் சில சங்க இலக்கிய மேற்கோள்களைச் சொல்ல, ஜா.தீபா தன் புனைவுக்கான நிலத்தைக் காணும் பாவனையோடு உற்சாகமாக இருந்தார் (அது ஒரு மகப்பேறு மருத்துவமனையின் ஸ்கேனிங் சென்டர் போல் இருந்தது).

ஊருக்குள் நுழைந்ததும் தீபாவும் கார்த்திக்கும் நூலகத்திற்குள் நுழைந்து கொற்கை பற்றிய நூல்கள் என்னவெல்லாம் இருக்கின்றன, கொற்கை பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று நூலகரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். நானோ அங்கே எந்த பதிப்பகத்தின் நூல்களெல்லாம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நூலக வருகைப் பதிவேட்டையும் பார்த்தேன்..

“ஆட்கள் வாசிக்க வராங்க போல இருக்கே”

“எல்லாம் போட்டித்தேர்வுகள் புத்தகங்கள் தான்.. வேறெதுவும் தொடுறதேயில்லை..”


சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒரு கிராமத்து நூலகம் கூட அதன் மாண்பைப் போற்றும் வகையில் அல்லது பிற வரலாற்று நூல்களையாவது பிரதானப்படுத்தி வைத்திருக்கலாம். கொல்கத்தாவிலிருந்து பணம் வருது.. அதனால் உங்க முப்பாட்டன் சொத்தா என்று நூலக ஆணை பெறுவோர்கள் கேட்கும்போது, கொற்கையில் தோண்டினாலும் நியாயம் கேட்க ஆட்கள் கிடைக்கப்போவது இல்லை.

கொற்கையின் நினைவாக இருக்கும் ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வன்னிமரத்தை வணங்கிவிட்டு, கொற்கை மக்கள் வழிபடும் அந்த நடுகல்லிற்கு என்ன கதையிருக்கும் என்று கேட்டுக்கொண்டோம். அகழ்வுகள் நடந்தபோது ஆதிச்சநல்லூரில் கிடைத்தது போலவே முதுமக்கள் தாழி, மற்பாண்டங்கள். அதிலும் முக்கியமாக கிமு 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி (அ தமிழி) எழுத்துகள் பொதிந்த மற்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன, எழுத்துகள் குறித்து சரியான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்றாலும். அறிஞர்கள் வாசித்ததாக அறியப்பட்ட சொல் “ஆதன்” இது முழுமையாகக் கிடைக்காத சொல். இதை வைத்துக்கொண்டே பல கதைகள் உருவாக்கப்பட்டன. சமணம், திருமால் வழிபாடு, கண்ணகி வழிபாடு என்று மூன்று தடயங்கள் எஞ்சியிருக்கின்றன.

கடந்த ஆண்டு கூட கொற்கையில் அகழ்வாய்வு நடைபெற்று முக்கியமான சேகரங்கள் பெறப்பட்டன. கொற்கை துறைமுகம் என்பது நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு குளமே. கொற்கை குளம் ஒரு மின்பிடித் துறைமுகம் போன்ற தோற்றத்தை தந்தாலும் அது கடல் இருந்த பகுதி என்பது ஆச்சரியமே. அந்த வெண்மணலில் நிறையவே சிப்பிகள் தென்படுகின்றன, பத்தடி தோண்டினாலே சங்குகளும் கிடைக்கின்றன என்று சொல்கிறார்கள். கொற்கை குளத்தின் முகப்பில் இருக்கும் வெற்றிவேல் அம்மன் “கண்ணகி” என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கண்ணகி கொற்கை வழியாகத் தான் ஈழத்திற்கு சென்றிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டோம். “மிளிர்கல்” குறித்தும் நினைவு கூர்ந்தோம். தீபா ஒரு காலப்பயணத்திற்கு தயாரானதாக உற்சாகமடைந்தார். அங்கிருந்து திருச்செந்தூர் நோக்கி கிளம்பினோம்.


கொற்கை, தமிழகத்திற்கு அதன் பழம்பெருமைக்கு பெரிதும் உதவுகின்ற, நடுவண் அரசுக்கு அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத, உள்ளூர்க்காரர்களுக்கு அதனால் எதுவுமே உதவாத மேலும் ஒரு ஊர். இதனால் பலனடைந்த ஒரேயொரு உள்ளூர்க்காரர் ஜோ.டி.குருஸிற்கு மட்டும் – என்று இந்த கொற்கை நாவலும் கூட இடம்பெறாத அந்த நூலகத்தை நினைத்துச் சொல்லலாம்.


திருச்செந்தூர் போவதற்குள்ளே எங்கள் மூவரின் எண்ண அலைகள் ஒரே அலைவரிசையில் இருந்தன, அரசியல், இலக்கியம், சினிமா, வரலாறு, ஏன் குடும்ப வாழ்க்கை என்று பேசினால் கூட ஒரேவிதமான எண்ணவோட்டம் மையமாக இருந்ததை கவனிக்க முடிந்தது. அதிலிருந்து ஒருவேளை என்னைத் தனித்துப் பிரித்தது பசி மட்டுமே.. திருச்செந்தூரில் முருகனா? அல்லது மணி அய்யர் ஓட்டலா? எது சிறந்தது என்று யோசித்துக் கொண்டேன்.

கோயிலுக்குச் செல்வதாகத் திட்டமிட்டாலும் வள்ளிக்குகை வாசலிலேயே போகக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். கோயிலின் நிறுவனமயம் ஏனோ என்னைத் தடுத்தது எனலாம். தீபா மட்டும் உள்ளே செல்ல, நானும் கார்த்திக்கும் கடலை, மாங்காய், சுண்டல், பைனாப்பிள் என மேய்ந்து கொண்டிருந்தோம். தமிழ் ஆன்மீக மரபில் “அய்யா வழி” குறித்து படைப்புகள் வரவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கிருக்கிறது. மனதில் நாராயண குரு வந்து போனார்.

அய்யா வழி கோயிலைப் பார்க்கையில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி. கடலில் சில கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பாலம் சென்று கொண்டிருந்தது. ஊடகத்தோடும், சமூக விஷயங்களைப் பேசும் மனிதர்களோடும் தொடர்பு கொண்டிருந்த எங்கள் மூவருக்கும் அது என்னவெனத் தெரியவில்லை. திடீரென முளைத்திருக்கும் பாலம் என்ன, நிறைய கப்பல்கள் அந்த பாலத்தை ஒட்டி நிறுத்தப்பட்டிருப்பது எதற்கு என்று கேள்விகள் எழுந்தன. கூடங்குளம், ஸ்டெர்லைட், குளச்சல், கடலூர் என தமிழகக் கடற்கரையோரம் இருக்கும் பிரச்சினைகளில் புதிதாக ஒன்று உருவாகியிருக்கிறதே என்கிற எண்ணம். மணப்பாடு போகும் வழியில் பார்க்கலாம் என்றாலும் அதுவரை பொறுமை இல்லை. மேப் வழியாக அது சரியாக எந்த ஊர் என்று தேடினோம், கல்லாமொழி எனும் ஊர் என்று அறிந்து கொண்டோம்.

சுமார் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு நிலத்திலிருந்து கடலுக்குள் செல்லும் அந்த நிலக்கரி இறங்குதளம் கடலில் கப்பலிலிருந்தபடியே உடன்குடியில் கட்டப்படும் அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரியைக் கொண்டுசெல்லும் கன்வேயர் பெல்ட் கொண்டது என்று சொல்கிறார்கள். 2009-லிருந்தே இந்த திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்கள் மீனவர்கள். இந்தச் செய்தி எங்களுக்கு முற்றிலும் பெரிது. எட்டு கி.மீ கடலுக்கு உள்ளே செல்லும் இறங்கு தளம் இருப்பதால் மண் அரிப்பு, மீன் பிடிப்பதில் உள்ள சிரமம் என பல சிக்கல்களை முன்வைக்கின்றனர் அப்பகுதி மீனவர்களின் போராட்ட அமைப்புகள். இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத செய்திச் சேனல்களும் உண்டு. சூழலியல் ஆர்வலர்களும் உண்டு.


எல்லோருக்குமே ஒரு ட்ரெண்டிங் தேவைப்படுகிறது. திறந்து போட்டிருக்கும் சாக்கடைக் குழியிலோ, ஆழ்துளைக் கிணற்றிலோ சில உயிர்களை பலி கொடுக்காத வரை நாம் அவற்றை பேசுபொருளாக்குவதில்லையே.. அதைப்போல தான் இதுவும். மணப்பாடு குன்றில் இருந்து அந்த நிலக்கரி இறங்குதளத்தைப் பார்த்தவுடன் ஸ்டெர்லைட் மூடப்பட்டதும் வெற்றி கிடைத்தது போன்ற பாவனையில் நிறுத்தப்பட்ட என் வேலை ஒன்றை மீண்டும் தொடங்கும் புள்ளி ஒன்றையும் நினைக்க வைத்தது.

ஆம்.. நாங்கள் மணப்பாடும் வந்துவிட்டோம். மணப்பாடு என்றாலே ‘இயற்கை’ படம் அந்த தேவாலயத்தை ஒரு கதாப்பாத்திரமாக மாற்றியிருந்தது தான் நினைவுக்கு வரும். அது ஒரு சிறிய ரோமாபுரி என்று சொல்வார்கள். உள்ளே போகும்வரை மனதில் ஒலித்த அந்தப் படத்தின் இசையை விட, அந்த தேவாலயம் அமைந்திருக்கும் குன்றிலிருந்து புலனாகும் 360 டிகிரி காட்சி மற்ற புலன்களை ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்று என்று சொல்லுமளவுக்கு பயணிக்கவில்லை என்ற போதும் ஓரளவுக்கு நிழற்படங்களின் வாயிலாகப் பார்த்த அனுபவத்தில் அல்லது தமிழகத்தின் அழகிய கடற்கரைகளில் ஒன்று எனும் தகுதி பெற்றவனாக இவ்வாக்கியத்தை மாற்றிவிடுகிறேன்.


தேவாலயத்தினுள்ளே மூவரும் சென்று அமர்ந்து கொண்டோம், எங்களைத் தவிர நான்கைந்து பேர் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்த நகருக்கு வந்த ஃப்ரான்சிஸ் சேவியர் நிர்மாணித்த தேவாலயம் இது. பிரம்மாண்டமான ஆலயத்திற்குள் வேற்று மதத்தினராய் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நுழைவது, புதிய கூடு ஒன்றில் புறா நுழைவதாய் இருந்தது.

தூத்துக்குடியிலேயே கல்லூரி வாழ்க்கை இருந்திருந்தால் இந்தக் கோயிலில் ஒரு காதலின் அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் என்று மனம் குமுறியது.

சில நூறாண்டுகள் கடந்த போர்த்துகீசிய கட்டுமானம் ஒன்றில் கவிழ்ந்திருக்கும் நிசப்தம் நினைவுகளைத் தூண்டி டி.டியில் பார்த்த “கருணாமூர்த்தி”யின் ஏதோ ஒரு வலியை, ஏசுபிரானின் உருவமாகவே தந்தது. சிறிய கோட்டிற்கு அருகில் பெரிய கோடு போடுவதைப் போலே, துன்பமே வாழ்க்கையாய் கொண்டவர்களை ஆற்றுப்படுத்துவதற்காய் தனது வலியை, பாரத்தைச் சுமந்து காட்டும் ரத்தமும் சதையுமான மனிதர் ஒருவர் வாழ்ந்துவிட்டுப் போய் இருக்கிறார்.

“ஏசு என்றால் என்ன”

“மானுடத்தின் உச்சம்”

அவர்மேல் விசுவாசமெல்லாம் மத நிறுவனத்தின் ஜோடனைகள் தான்.

“கிருத்துவம் என்பது இயேசுவாகுதலை லட்சியமாகப் பார்க்கிறது” வேத ஆகமங்கள் அதை போதிக்கிறதோ இல்லையோ அப்படியான பல கிருத்துவர்களை நான் பார்த்திருக்கிறேன். ரோஸ்லின் அக்கா, ஜான்ஸி மேடம், மரியதாஸ் எனும் கிருத்தவர்களின் வாசம், பெயர் மறந்துபோன ஆல்பன்ஸ் சர்ச்சின் வாசம், அந்த சர்ச்சின் வழியே என் சொந்த ஊரான நாகலாபுரத்து – பள்ளிவாசல்பட்டி வாசம் வந்தது.

ஊர்பெயர் நாகலாபுரம். வீடிருக்கும் பகுதி பள்ளி வாசல்பட்டி நினைவிலோ அந்த ஊர் முழுதும் CSI தேவாலயத்தின் வாசமாகப் படிந்திருக்கிறது.

நேரம் ஆனதால் கடற்கரையில் இறங்காமல், அங்கிருந்தே நெல்லை நோக்கித் திரும்பலானோம். மற்ற புலன்கள் வேலை செய்ய ஆரம்பித்தன, காதில் ஒலித்த வித்யாசாகர் இசை – எனக்கு ஜிக்கியின் குரலாக மாறும் அதே நொடி, தனக்கும் ஜிக்கியின் குரல் கேட்கிறது என்றார் தீபா. இருவரும் சொன்ன உடனேயே மொபைலில் இருந்து காரின் ஸ்பீக்கருக்கு இணைப்பைத் தந்து ஜிக்கியின் பாடலை ஓடவிட்டார். அந்த கணத்திலும் மதம் மாறவிடாமல் பசி எங்களைத் தடுத்தது.

நெல்லையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தோம். வெறும் ஹல்வாவைத் தவிர வேறு எதனையும் சுமந்துகொண்டு நெல்லையை விட்டுப் போக முடியாது இல்லையா என்று கேட்டேன்.

மீண்டும் ஆழ்வார் திருநகரி இறங்கி, அந்த புகழ்பெற்ற காபி கடையில் இறங்கி சூடான வடை, காபி என வேட்டையாடிவிட்டுக் கிளம்பினோம். உபரியாக அங்கே இறக்கிவைக்கப்பட்ட சமோசா எல்லாவற்றையும் விட மிகச் சுவையானதாக இருக்க, எல்லோருமே வாங்கிக் கொண்டோம். இனிமேல் எனக்கு ‘ஆழ்வார் திருநகரி’ எனும் ஊர் அந்த சமோசாவை மட்டும் தான் நினைவெனக் கொண்டிருக்கும்.

இன்னும் வேறெதாவது சாப்பிட வேண்டியிருக்கா என்று தேடினோம். கடைசிவரை நாங்கள் தேடிய பால்பன் கிடைக்கவில்லை. இப்போது பால்பன் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது இருக்கன்குடி செல்லும் வழியில் உள்ள புதூர்..

குடும்பத்தோடு கோயில் திருவிழாவிற்கு வந்துவிட்டு ஊர் திரும்புகையில், ஒரு சாதாரண கடையில் இறங்கி பால்பன் சாப்பிட எத்தனிக்கையில், “பால்பன் ஃப்ரெஷ் தானா.. வயித்துக்கு ஒன்னும் ஆவாதே? ஏன்னா நைட்டு ட்ரைன்ல போறோம்” என்று கேட்டுக்கொண்டிருந்த என் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவருக்கு,

“பால்பன் சாப்பிட்டால் எந்த சாதிக்கலவரமும் நின்றுவிடும்” என்று வேடிக்கையாகச் சொன்ன உள்ளூர்க்காரரின் குரல் என்னால் மறக்க இயலாது. “புதூர்” என்றால் எனக்கு பால்பன்னும் அங்கே நடக்கின்ற சாதிப்பிரச்சனைகளும் தான் நினைவுக்கு வரும். அதற்கு பின்னர் கரிசலில் பொன்னீலன் எழுத்தில் பூதலாபுரம் கலவரம் பற்றி தெரிந்துகொண்டேன்.

“அப்போ ஊர் என்று என்னதான் சொல்ல வருகிறாய்”
ஏற்கனவே பலரும் சொன்னது தான்,
ஊர் என்பது ஒரு கதையைத் தாங்கி நிற்கும் நிலம்.


ஜீவ கரிகாலன் – [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular