Wednesday, October 9, 2024
Homesliderஉஷ்ணம்

உஷ்ணம்

  • சித்துராஜ் பொன்ராஜ்

மின்தூக்கியின் ஓரமாய் இருக்கும் குண்டு கண்காணிப்புக் காமிராவின் மீது பதிக்கப்பட்டுள்ள தடித்த கண்ணாடியில் விழும் உனது சாம்பல் நிற நிழலைப் பார்த்துக் கொண்டே உன் தலையில் அணிந்திருக்கும் துணித்தொப்பியை நேராக்கிக் கொள்கிறாய். பின்பு உனது தாடையை நன்றாகத் தாழ்த்தி உன் விரல்நுனிகளில் எச்சிலைத் தொட்டுப் புருவங்களில் தடவுகிறாய். 

என் வீட்டின் வாசல் கதவினோரமாய் இருக்கும் சின்னஞ் சிறிய தொலைக்காட்சித்திரையில் நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் இடது கையிலிருக்கும் பெரிய அட்டைப் பெட்டியை மின்தூக்கிக்கு அருகிலிருக்கும் வெள்ளை வெளேரென்ற சுவர்மீது முட்டுக் கொடுத்து நிறுத்தியிருக்கிறாய். உன் மார்புக்குக் குறுக்கே நீ அணிந்திருக்கும் பையின் வார் அழுத்துவதால் உன் மார்பு லேசாய்ப் பொங்கி அதன் திண்மையும் ஆண்மைத்தனமான திமிரும்கூட எனக்கு இந்தச் சிறிய திரையின் வழியாகப் புலனாகின்றன. திரையில் தெரியும் சாம்பல், கறுப்பு, வெள்ளையாகிய நிறங்கள் மட்டுமே தெரிந்தாலும் நீ தொளதொளப்பான பச்சைநிறக் கால்சட்டையையும், உனது  இடது தோள் பட்டையிலிருந்து மேலிருந்து கீழாக ஓடும் மூன்று மஞ்சள் கோடுகளுடைய கன பச்சை டீ சட்டையையும் அணிந்திருக்கிறாய் என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். டீ சட்டையின் இடது மார்பின் மீது சிவப்பு நிறமாய்ப் பொறிக்கப்பட்டிருக்கும் உன் நிறுவனத்தின் சின்னமும் முழக்க வாசகமும் திரையில் ஆஷ் டிரேயில் தட்டிவிடப்பட்ட சிகரெட் துகள்களின் சாம்பல் நிறத்தில் சிரிக்கின்றன.

உன் மார்பின் இடது பக்கத்தைக் குறிபார்த்து யாரோ கைத்துப்பாக்கியால் சுட்டது போலவும், குண்டு நுழைந்த இடத்திலிருந்து ரத்தம் பெருகி மார்பெல்லாம் பரவுவதுபோலவும் அந்தக் காட்சி இருக்கிறது. எனது இடது கண்ணை இறுக்க மூடி வலது கையின் ஆள்காட்டி விரலை முன்னுக்கு நீட்டிக் கட்டை விரலை விறைத்து வைத்துக் கொண்டு திரையில் தெரியும் உன்னைப் பொய்யாய்ச் சுடுகிறேன். உனது கழுத்தின் ஒளி மிகுந்த பகுதியைச் சொறிந்து விட்டபடி மின்தூக்கியின் மேல் பதிக்கப்பட்டிருக்கும் சின்ன சதுரத்தில் மாறிக் கொண்டிருக்கும் எண்களை நீ அலுப்புடன் பார்க்கிறாய். 

என் வீட்டு வாசலுக்கு வெளியே கேட்கப் போகும் மின்தூக்கியின் சிறு குலுக்கல் சத்தத்துக்காகவும், அதன் கதவுகள் திறக்கும்போது கேட்கும் மெல்லிய பெருமூச்சுக்காகவும் காத்திருக்கிறேன். என் உடம்பு ஜுரம் வந்ததுபோல் தகிக்கிறது. ஆனால் இது எந்த வகையிலும் எனக்கு கவலையை ஏற்படுத்தவில்லை. மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்கு என் உடம்பு அனலாய்க் கொதிக்கும். எப்போதும்போலத்தான் இது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இயற்கையிலேயே சூடான உடம்பு. பதினைந்து வயதில் என் முகத்தில் கொத்துக் கொத்தாய்ப் பருக்கள் புறப்பட்டிருப்பதைக் கண்ணாடியில் பார்த்து வீட்டிலிருந்தவர்களின் மீது எரிந்து விழுந்தபோது அம்மா ‘உனக்கு உஷ்ணமான உடம்புடி’ என்று அடிக்கடிச் சொல்வாள்.

 பெரிய நில மோசடி வழக்கை வெற்றிகரமாக முடித்த கையோடு இரண்டு வாரம் விடுப்பு எடுத்திருந்தேன். நாளையோடு முடிகிறது. ஆனால் மீண்டும் வேலைக்குப் போகத் தோன்றவில்லை பதினான்கு நாள்களில் வீடு என்னைச் சுற்றி மிகப் பரிச்சயமானதும் சவுகரியமானதுமான பழைய பாவாடைச் சட்டையாய் உருமாறியிருந்தது. அலுவலகத்துக்குப் போய் கணினியில் பழைய கோப்புகளைத் திறந்து மீண்டும் வழக்குகளைக் குறிப்பெடுப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன். முழங்காலுக்குக் கீழுள்ள பகுதியை நிச்சயமாய் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் கறுப்பு நிற ஸ்கர்ட்டோடும் தோளில் கனமாய்ப் பொருந்தியிருக்கும் கனமான கறுப்பு நிறக் கோட்டோடும் முற்றும் இழுத்துப் போர்த்துக் கொண்டு கணினியின் விசைப்பலகையை விரல்களால் தடவிக் கொண்டிருக்கும் என் தோற்றம் எனது கண்களின் முன்னால் தோன்றி மறைகிறது.

ஆனால் கை நிறைய சம்பளம் தருகிற வேலை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். நிச்சயம் போய்த்தான் ஆக வேண்டும். 

மின்தூக்கி என் வீட்டு வாசலுக்கு வந்து சேர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் இடுப்பிலிலுள்ள சேலைக்குள் இரண்டு விரல்களைச் செருகிச் சேலையை இன்னமும் தாழ்த்திவிட்டுக் கொள்கிறேன். சேலைக்குள் நுழைத்திருக்கும் என் பளபளப்பான விரல்கள் வெள்ளி நிற மீன்கள். பாவாடை பதிந்து கறுப்பாய், வழவழப்பாய் இருக்கும் தடம் ஆழப் பெரும்கடல்.  நுரை பொங்கிக் கிடக்கும் கடல் தண்ணீராக உடை என் கையிலிருந்து நழுவிப் போகிறது. மிக மெல்லிய மஞ்சள் நிறச் சேலை. அதன் சின்ன விலகலில் என் அடிவயிறு வாசல் கதவின் பளபளப்பை உள்வாங்கி வெண்மையாகச் சுடர்விடுகிறது.  

அம்மா என்னை நிச்சயம் கடுமையான வார்த்தைகளால் வைதிருப்பாள். இதை யோசிக்கும்போதுதான் அம்மா உடைமாற்றுவதை நான் என்றுமே பார்த்ததில்லை என்ற எண்ணமும் எனக்குத் தோன்றுகிறது. 

தியோங் பாரு வட்டாரத்தில் பெருநகர வாகனப் போக்குவரத்து போயும் வந்தும் கொண்டிருக்கும் முக்கிய சாலைக்கு முன்பாகவே ஐந்து மாடி அரசாங்க வீடமைப்புக் கட்டடம். அதில் சீனக் கிழவிகளின் வறட்டு இருமலும் அந்தக்கால ரெடிஃபூஷன் சீன ஒலிபரப்புகளும் எதிரொலிக்கும் முதல் மாடி இரண்டறை வீடு. அண்ணா இராணுவச் சேவையை முடித்துவிட்டு வேலைக்குப் போகும் வரைக்கும் அப்பாவும் அவனும் பல வகையான கேலிச் சித்திரங்கள் போட்டிருக்கும் மெல்லிய சீன மெத்தைகளை விரித்துக் கூடத்தில் தொலைக்காட்சிக்கு முன்னால் படுத்துக் கொள்வார்கள். 

படுக்கையறையில் நானும் அம்மாவும் குறுகலான கட்டிலில் தூங்குவோம். 

கூடம், படுக்கையறை இவ்விரண்டையும் தவிர்த்துக் குளியலறையோடு கூடிய சின்ன சமையலறை. எல்லோரும் அந்தக் குளியலறையில் உடுப்புகளை மாற்றிக் கொண்டோம். 

சுவற்றிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் தண்ணீர்க் குழாயும் தரையில் பதிக்கப்பட்டிருந்த ‘ஆசிய பாணி’ கக்கூஸும் போகக் குளியலறை, துணி வைக்கும் பீரோவின் உயரத்திலும் அகலத்திலும் பாதியே இருந்தது. இரண்டு கைகளையும் உயரத் தூக்கி உடைகளை அணிந்து கொள்ளும்போது கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் சங்கிலி சிக்கிக் கொள்ள முழங்கைகள் சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் வெந்நீர் குழாய்கள்மேல் உரசிச் சிராய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. 

குளியலறையைப் பயன்படுத்த வெளியில் நிற்பவர்கள் அவசரப்படுத்துவார்கள். பதினெட்டு வயதில் மேலாடையைத் தலையிலிருந்து இழுத்துவிட்டுக் கொண்டு குளியலறையிலிருந்து புறப்படும்போது ஆடைக்குள்ளிருந்து உள்ளாடை எட்டிப் பார்ப்பதைப் பார்த்தால் சமையல் மேடையில் நின்றபடி சட்டியில் எதையோ கிளறிக் கொண்டிருக்கும் அம்மா சீறுவாள்.

“என்னடி பாடி தெரியற மாதிரி உடுத்திகிட்டு வெளிய வர? கண்ட கண்ட தேவடியாப் பொம்பளைங்க மாதிரி?”

அம்மாவின் சீறலில் குழம்பை நன்கு தாளித்த வாடை. இரவு ட்யூட்டி முடித்துவிட்டு பாதுகாவல் நிறுவனத்தின் நீல நிறச் சீருடையைக் கழற்றாமலேயே சமையல் அறை மேஜையில் தோசை தின்று முடித்துவிட்டுக் கை அலம்பிக் கொண்டிருக்கும் அப்பா நரைத்துக் கிடக்கும் மீசையைக் கையால் ஒதுக்கிக் கொண்டே என்னை ஏளனத்துடன் ஓரப்பார்வை பார்ப்பார். முரட்டு துண்டு ஒன்றை கழுத்தைச் சுற்றிப் போட்டு இரண்டு கைகளாலும் அதை முன்னும் பின்னும் நகர்த்திக் கொண்டிருக்கும் அண்ணா என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்புச் சிரிப்பான். 

கொஞ்சம் கால் அகட்டியபடி உன் வருகையை எதிர்பார்த்து நிற்கிறேன். ஓரமாய் இருக்கும் விசாலமான கண்ணாடி மேஜையின் மீது உயரமான கண்ணாடி ஜாடியில் நீண்ட தண்டுகளையுடைய வெள்ளை நிற டூலிப் பூக்கள் சுடர்விட்டுக் கொண்டிருக்கின்றன. கண்ணாடி ஜாடியைச் சுற்றியும் சாவிக் கொத்து, பணப்பை, கழுத்து வாருடன் கூடிய அலுவலக அடையாள அட்டை, வங்கியிலிருந்து எனக்கு வந்திருந்த கடிதங்கள், சில நாளேடுகள், சஞ்சிகைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. உனக்குத் தரவேண்டிய பணத்தை நான் பணப்பையிலிருந்து உருவி சாவிக் கொத்தின் அடியில் கவனமாக மடித்து வைத்திருக்கிறேன். 

எனக்கு முன்னால் வெறுமையாய் நிற்கும் வாசல் கதவின் தோற்றம் அம்மாவின் முகத்தோற்றம் போலவே இருக்கிறது. தியோங் பாரு வீட்டில் மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்திருந்த அவளுடைய உடலைக் கடைசியாக நீட்டிப் படுக்க வைத்தபோது அவள் முகம் இப்படித்தான் வெறுமையாய் இருந்தது. 

“புடவை வெலகி இருக்குது பாருடி. எந்த ஆம்பிளை பார்ப்பாங்குறதுக்காக இப்படிக் கோவிலுல மாரைக் காட்டிகிட்டு நிக்குற?”

வாண்டையார் அண்ட் சன்ஸில் வாங்கிய முப்பது வெள்ளி கத்திரி நிறச் சேலையை முதல் முறையாகக் கட்டிக் கொண்டு மாரியம்மன் கோவிலில் தீமிதி பார்ப்பதற்காகப் போயிருந்தபோது அம்மா இப்படிச் சொன்னாள். 

கோவிலில் பெரும் கூட்டம். என்னைச் சுற்றி நின்று கொண்டிருந்த ஆண்களின் கண்கள் என்னைப் பயமுறுத்தின. எங்கள் பக்கத்தில் மருத்துவமனை ஆயா உடையிலிருந்த குள்ளமான கறுப்புப் பெண்மணி அம்மா சொன்னதைக் கேட்டு என்னைப் பார்த்துப் பல் தெரியச் சிரித்தாள். மிக நீளமான தண்டுகள் பூட்டியிருந்த பல்லக்கின் மீது வைத்து பத்துத் தடித்த ஆண்பிள்ளைகளின் தோள்மீது கோவிலைச் சுற்றி வலம்வந்த மாரியம்மன் விக்கிரகம் அன்று தீ போல ஜ்வலித்தது.

அழைப்பு மணியின் ஓசையை வைத்தே உனது தயக்கத்தை அறிந்து கொள்கிறேன். முதலில் ஒரு சிறிய ஒலிச் சிதறலாகவும், பின்பு ஒரு நீண்ட கூவலாகவும் அழைப்பு மணியை அழுத்துகிறாய். வாசல் கதவின் பக்கமாகவே நான் நின்றிருந்தாலும் நிறைய இடைவெளி விட்டே நான் கதவைத் திறக்கிறேன். நான் கதவு திறப்பதற்கு எடுத்துக் கொள்ளும் அவகாசத்தில் உனக்கு ஏற்படக் கூடிய குழப்பம் என்னை மகிழ்விக்கிறது. அந்த நேரத்தில் நீ ஒரு முறையாவது அட்டைப் பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருக்கும் இளம்சிவப்பு நிற ரசீதை விரல்களால் திருப்பி உண்மையிலேயே நான்தான் இந்த உணவை வரவழைத்தேனா என்று பதற்றத்துடன் பார்த்திருப்பாய். 

கதவைத் திறந்தவுடன் என்னிடம் உன் கையிலிருக்கும் அட்டைப் பெட்டியைத் தந்துவிட்டு வாசல் கதவின் விளிம்பில் ஒரு கையை ஊன்றியபடி உன் சப்பாத்துகளைக் கழற்றிப் போடுகிறாய். மிகச் சாதாரணமான கான்வாஸ் சப்பாத்துக்கள். நண்பகல் வெயிலில் மோட்டார் சைக்கிளில் வந்ததால் உன் நெற்றிப் பொட்டிலிருந்து வியர்வை வெள்ளிக் கம்பிகளாய் இறங்குகிறது. சப்பாத்துக்களைக் கழற்ற நீ கால் தூக்கி நிற்கும்போது உன் டீ சட்டைக்குள்ளிருந்து சிறிய தொப்பை பிதுங்கி நிற்கிறது. அதற்குப் பொருத்தமில்லாதபடி குச்சிபோல் இரண்டு கறுப்பான கைகள். மஞ்சலேறிய கண்கள். உன் தலையின் பின்பகுதியில் ஐம்பது காசு நாணயத்தின் அகலத்திற்குச் சொட்டை விழுந்திருப்பதை நான் அறிவேன்.

அட்டைப் பெட்டிக்குள்ளிருக்கும் உணவுப் பொருளின் உஷ்ணம் என் உடம்பின் சூட்டைவிட  உக்கிரமாக என் கைகளில் தகிக்கிறது.

சப்பாத்தைக் கழற்றி விட்டு நீ நிமிர்கிறாய். உன் மஞ்சலேறிய கண்கள் என்னையும் தாண்டி நான் குடியிருக்கும் வெகு விசாலமான வீட்டின் படுக்கையறைகளின் பக்கமாக அலைகின்றன. நான் மட்டுமே தனியாக வசிக்கும் இந்த அடுக்குமாடி வீட்டில் நான்கு படுக்கையறைகள். ஆனாலும் எப்போதும் நான் உன்னை விருந்தினர் அறைவரை மட்டுமே வர அனுமதித்திருக்கிறேன். என் படுக்கையறைக்குள் வர நான் உன்னை அனுமதித்ததே இல்லை.

உன் கால்கள் ஓயாமல் அசைந்து கொண்டிருக்கின்றன.

“சீக்கிரம் போகணும். இன்னைக்கு உன்னோட ஆர்டர் வர லேட்டானதால என்னை வேற ஒரு ஆர்டருக்கு அனுப்பப் பார்த்தாங்க. நல்ல வேளையா வவுத்து வலி அப்படி இப்படினு சொல்லி வேறொருத்தன அனுப்பி வச்சுட்டேன். இல்லனா அந்த நாய் மூஞ்சி நாராயணன்தான் வந்திருப்பான், பிட்ஸாவத் தூக்கிக்கிட்டு.”

 உனக்கு தமிழ் சினிமா பார்க்கும் பழக்கம் அதிகம். வாரக் கடைசிகளில் செகாமாட்டிற்குத் திரும்பும்போது நண்பர்களோடு தவறாமல் இரண்டு திரைப்படங்களையாவது பார்த்துவிடுவாய் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாய். நான் தமிழ்த் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை. தியோங் பாரு வீட்டில் இருக்கும்வரையிலும் இரவு சாப்பாட்டுத் தட்டுகளைக் கையில் தூக்கிச் சாப்பிட்டபடியே அப்பா, அம்மா, அண்ணா, நான் வாரம் தவறாமல் சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் வரும் சினிமாப் படங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த வீட்டை ஞாபகப்படுத்தும் எல்லா விஷயங்களையும் நான் அழுத்தித் துடைத்துவிட்டிருக்கிறேன். 

அம்மாவின் சாவுக்குப் பிறகு வீட்டைப் பராமரிக்க முடியாமல் அப்பா முதியோர் இல்லத்தில் பன்னிரண்டு வருடங்கள் வாழ்ந்து செத்துப் போனார். அண்ணா இப்போது ஜூரோங்கில் அவன் மனைவியோடும் இரண்டு குழந்தைகளோடும் குடியிருக்கிறான். நான் அவன் வீட்டுக்குப் போய் ஆறு வருடங்கள் ஆகின்றன.

கையிலிருந்த அட்டைப்பெட்டியைக் கண்ணாடி மேஜைமீது வைத்துவிட்டு உன்னிடம் திரும்புகிறேன். 

“என்ன ஒண்ணும் சொல்லாம இருக்க?”

“அதான் நீ எந்தந்த நேரத்துல வேலையில இருப்பனு எனக்கு முந்தியே சொல்லியிருக்கியே. அந்த நேரத்துலதான நான் ஆர்டர் கொடுத்தேன்.”

“ஆனா முந்தியெல்லாம் ராத்திரி நேரத்துலதான ஆர்டர் கொடுப்ப. இந்த ரெண்டு வாரமா மத்தியான நேரத்துல ஆர்டர் கொடுக்குறியா, அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு. நான் வேற டெலிவரிக்குப் போகவும் இன்னொருத்தன் இங்க வரவும் வாய்ப்பிருக்கு. இந்த நாலஞ்சு நாளைக்கும் உன்னப் பார்க்க முடியாதுனு வேற சொல்லிட்ட”

சொல்லிவிட்டு என்னைத் தின்றுவிடுவதுபோல் உற்றுப் பார்க்கிறாய்.

உன்னைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய். உன் மார்பை விரித்து இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி பெருத்த கெக்கலிப்புடன் என்னைப் பார்க்கிறாய். கண்ணாடி மேஜை மீதிருந்த பொருள்களை ஒவ்வொன்றாக இடம் மாற்றி வைத்துக் கொண்டிருக்கும் நான் எந்தப் பதிலும் சொல்லாமல் இருக்கிறேன்.

“என்ன ஒண்ணுமே சொல்லாம இருக்க? ஒரு வேளை வேற எவனாவது வருவானு எதிர்பார்த்துகிட்டு இருந்த போலிருக்கு.”

விருந்தினர் அறைக்குள் நுழையப் போனவள் நீ சொன்னதைக் கேட்டுச் சட்டென்று நின்று உன்னைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆளில்லாத அந்த பெரிய வீட்டில் எதிரொலிக்கும் உன் குரல் என் அம்மாவின் குரல்போலவே ஒலித்ததைக் கேட்டு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  என் உதடுகளின் ஓரத்தில் மெல்லிய புன்னகை தோன்றி மறைகிறது.

என் ஆச்சரியத்தையும் புன்னகையையும் நீ தவறாகப் புரிந்து கொள்கிறாய். என்னைச் சமாதானம் செய்யும் நோக்கத்தோடு தட்டுத் தடுமாறிப் பேசுகிறாய். 

“இங்க பத்து மணிக்கு வந்து சேர நான் மலேசியாவிலேர்ந்து பைக்குல ஐஞ்சரை மணிக்கே கிளம்ப வேண்டியிருக்கு தெரியுமா? பாலத்துல க்யூ புடிச்சுத் தாண்டவே ரெண்டு மணி நேரம் மூணு மணி நேரமாகிடுது. அப்பா, முடியல.” 

கைகளை உயரத் தூக்கிச் சோம்பல் முறிக்கிறாய். உன் கைகளை நீ உயரத் தூக்கும் சமயத்தில் உன் டீ சட்டை மேலேறி உன் வயிற்றின் பழுப்பு என் கண்களில் படுகிறது.

விருந்தினர் படுக்கையறை. இருவருக்கான இரட்டைக் கட்டில். பழைய நாள்களில் என் அம்மாவுடன் நான் படுத்திருந்த கட்டிலைப் போலவே. 

என்னுடைய சேலையைக் களையத் தயாராகிறாய். நான் உன் கைகளை இறுகப் பிடித்துக் கொள்கிறேன். 

என் முகத்தில் தெரியும் மூர்க்கத்தைப் பார்த்து நீ தயங்குகிறாய்.

“என்ன இன்னைக்குப் புதுசா?” என்கிறேன்.

“ஆறு மாசத்துக்கு முன்னால மொத மொத உன் வீட்டுக்குப் பிட்ஸா கொண்டு வந்ததுல இருந்து பேசிக்கிட்டு இருக்கோம். ரெண்டு மூணு வாரமா நெருக்கமா பழகுறோம். இப்பவும் உன் உடுப்பைக் கழட்ட உட மாட்டேங்குற. நான் என்னோட உடுப்பைக் கழட்டுறேன்னாலும் அதுவும் வேணாங்கிற.”

“முதல்லயே சொல்லிட்டேன் இல்லையா?”

“உன் உடம்பக் காட்டுறதிலயும், என் உடம்பைப் பார்க்குறதுலயும் அப்படி உனக்கு என்ன கஷ்டம்? என்னமோ போ. எல்லாமே ரொம்ப விநோதமா இருக்கு. வெளிய எவனாவது கேட்டான்னா வாய்விட்டுச் சிரிப்பான்.”

“அது அப்படித்தான். இஷ்டமிருந்தா இரு. இல்லனா போயிட்டு வா.” என்று ஒருக்களித்துப் படுத்துக் கொள்கிறேன்.

“ஏன், வேறு எவனையாவது சேர்த்துக்கலாம்னு பார்க்குறியா?” என்று மறுபடியும் கேட்கிறாய். 

“நான் ஆர்டர் கொடுக்கலனா நீ இந்தக் கட்டடத்துக்குள்ளயே கால் வைக்க முடியாது ஞாபகம் இருக்கட்டும்,” என்று மடிந்திருக்கும் என் இடது கைக்குள் நான் முணுமுணுக்கிறேன்.

நீ புரண்டு படுக்கும்போது உன் நிறுவனத்தின் சின்னம் பொறித்த டீ சட்டை வியர்வையால் மேலும் நனைந்து லேசாக நாற்றமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. 

இயற்கை விதிகளுக்கெல்லாம் மாறாக என் உடம்பின் உஷ்ணம் உன் உடலுக்குப் பாயாமல் என் உஷ்ணமே உன் உஷ்ணத்தை இழுத்துக் கொண்டது. உன் உடம்பு லேசாய் நடுங்குகிறது.

நான் பாதுகாப்புக்காகப் படுக்கை உறையை இழுத்து அதனால் என்னைப் பாதி போர்த்தியபடி கிடக்கிறேன்.

கட்டிலில் லேசாய்த் துள்ளியபடி கீழிறங்கியிருந்த உன் கால்சட்டையை மேலே இழுத்துவிட்டபடி என் வீட்டின் சுவர்களையும் அதில் மாட்டியிருக்கும் அலங்காரச் சாதனங்களையும் உற்று உற்றுப்    பார்க்கிறாய். உன் கண்களில் பசியெடுத்த வேட்டை நாயின் வெறித்தனம். 

“கல்யாணம் பண்ணிக்கலாமில்லையா. ஒரு ஆள் துணையிருந்தாலும் நல்லதுதான.”

மடியில் கசங்கியிருக்கும் சேலையைக் கையால் தட்டிவிட்டபடி நான் எழுகிறேன்.

“பால் வேண்டும்கிறதுக்காக பசுமாட்டையே வாங்கச் சொல்றியா?”

பழைய நகைச்சுவைதான். ஆனால் வாய்விட்டு நெடுநேரம் சிரிக்கிறேன்.

நீ கிளம்பிவிட்டாய் என்று ஒரு முறைக்கு இரண்டு முறை கதவின் பூட்டை அசைத்துப் பார்த்து உறுதி செய்கிறேன்.  உன் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பி எனது அடுக்குமாடி வீட்டின் வளாகத்தை விட்டுக் கிளம்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை அடிக்குரலில் எனக்கு மட்டும் கேட்கும்படி மூச்சுமுட்ட எண்ணுகிறேன். பிறகு என் உடுப்புகளை ஒவ்வொன்றாய்க் கழற்றி மெத்தையின்மீது கவனமாக மடித்து வைக்கிறேன். 

அட்டைப் பெட்டியிலிருந்த உணவு குளிர்ந்து போயிருக்கிறது. முழு நிர்வாண உடம்போடு அதைக் குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்காகக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் பின்புறத்தில் வெகு தூரத்தில் இருக்கும் சமையலறைக்கு நடக்கிறேன்.

வழக்கம்போல் அங்கே அம்மா நின்று கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் அசாதாரணமாய்ப் பளபளக்கின்றன. இம்முறை அவள் குரலில் ஏதோ ஒரு கனிவு இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது.

எப்போதெல்லாம் ஒரு ஆண்பிள்ளையை அனுப்பிவிட்டு இப்படி நிர்வாணமாய் சமையலறைக்குள் வருகிறேனோ அப்போதெல்லாம் என் அம்மாவின் குரலில் கனிவு தொனிக்கும்.

‘உனக்கு உஷ்ணமான உடம்புடி’ 

அம்மா என்மீது வைத்த பார்வையைச் சற்றும் விலக்காமல் சொல்கிறாள்.

அந்தக் கணத்தில் மிகவும் குளிர்ந்து போனவளாய் என் அம்மாவின் கையை இறுகப் பிடித்துக் கொள்கிறேன்.

பதினெட்டு வருடங்களாய் திருமணத்தைத் தவிர்த்தும் என்னை அண்ட வந்த ஆண்களைத் துரத்தியும் சிறுகச் சிறுகச் சேமித்து வாங்கியிருந்த அந்த சொகுசு வீடு என் பழைய தியோங் பாரு வீடாகச் சுருங்கியிருந்தது.

***

சித்துராஜ் பொன்ராஜ் – இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன

RELATED ARTICLES

4 COMMENTS

  1. கதையை வாசித்து முடித்தேன். சொல்லப்போனால் கதாப்பாத்திரமாகவே ஆகியும்விட்டேன். கதை சொல்லிய பாங்கு அப்படியாக அமைந்திருந்தது. முதல் முறை வாசிப்பு முடிந்ததும், மீண்டும் வாசித்தேன். சிசிடி-யில் தெரிந்த காட்சி வாசிக்கையிலும் தெரிந்தது. ஒன்றின் பின் ஒன்றாக சொல்லிக் கதையை அழகாக நகர்த்தியுள்ளீர்கள்.
    சொல்லிவிட்டதை விட சொல்லாமல் விட்டதில்தான் கதை வாசிப்பவர்களை உள்ளே இழுத்துக்கொண்டு தனியான கேள்விகளை தேட வைக்கிறது.
    அவளில் செயல்பாடுகள் அர்த்தமற்றவை அல்ல, ஆனால் அதன் அர்த்தம் ஆளுக்கு ஆள் மாறிக்கொண்டே இருப்பதுதான் விந்தை.
    மாற்றம் சமயங்களில் கேள்விகளுக்கு அப்பால் நின்றுக்கொண்டு நம்மை நோக்கி சிரிக்கவும் செய்கிறது.
    நல்ல கதை, நடை, வாசிப்பரும் ஒரு பாத்திரமாக ஆகிவிடுவதாய் அமைந்து விடுவது சிறப்பு…..

  2. சிறப்பான கதை. மூன்றாம் நபரின் பார்வையில் முதன்மைக் கதாபாத்திரத்தின் படைப்பு மிகவும் வித்தியாசம். கதாபாத்திரத்தோடு ஒன்றும்போது பல பரிணாமங்களில் அது பயணிக்கத் தொடங்கி விடுகிறது. வாழ்த்துகள் நண்பரே.

  3. lovely read..! Thank you for the experience..!

    Mothers are that..! Theryudhu paaru.. saryaa dress pannu.. any girl goes through that willingly or unwillingly with her mother. Here, her mother using the word “thevdya pombalainga maadry” was a bit shocking because mothers don’t talk like that to their daughters, at least from the background that has been described. (Leads to the question, if her mother was abused with such because victims normally become abusive later.)

    Father’s and brother’s behavior/reaction to mother’s words is unfortunate, yet only a reflection of the patriachal cultural roots?

    Also, “ammavin seeralil thaalitha kuzhambin vaadai” doesn’t sound traumatic, but was she affected over time.?

    If she felt abused, suffocated from all of her mother’s words, wouldn’t she break free at her first chance? Normally anybody would..! (Break free as in getting married/elope/ reverse psychology of exploring sex or intimacy even as a youngling)

    Her mother’s words/behavior traumatise her to the point that she pushes away males, avoids getting married, but she is professionally successful, bought a house with savings.

    Any trauma heals over time! Someone as successful as her, especially a lawyer(?), didnt realise in time that she should move on/not be traumatised over her mother’s words/sense of shame that it brought on? The same woman buys an expensive house because she hated her old home and didn’t want to be reminded of the old home. Contradicting.?

    Loneliness is understandable! Women generally look for more of an emotional resort in a man/men than sex. Of course, we cannot generalise women or their needs/behaviors, but what about her emotional needs?

    If she had physical needs, why would she go for a pizza guy? Did she like him or is attracted/attached to him.? unlikely from what has been said, but 6 months of talking to each other and few weeks of physical intimacy, but doesn’t seem like a relationship either because he suggests she get married.

    So, a random for physical needs, yet she is picky about who she sleeps with by taking time, but there is no friendship/understanding between them. Their bond is just physical..!

    This is also evident from his casual comment.. vera evanaavadhu varuvaannu paathya.? It is so degrading!

    Yet she smiles because it reminds her of her mother. Does she love her mother beyond the abuse that she looks for subtle abuse? – Even if her mother turns out to be the constant voice in her head that she avoids undressing even while having sex!

    She seeing her mother in everything/her mother talking to her is also a sign of mental illness, also elaborates the depth of her trauma.

    She walking into the kitchen naked after sex everytime is simply an act of defying her mother/mother’s words, an establishment of self.?

    Words can make or break..!! Especially the near and dear ones’ words..! It affects an individual in ways no one would have imagined, it could make or break one’s belief system, thought process, behavior, personality and thus LIFE..!

    Here, the mother broke her..! (Unintentionally, let us believe) It is not just the mother’s fault, but a cultural error that constantly wants its women covered.?

    And the saddest part is, she had not come across one human that had the kindness to redirect her thought process/perspectives about all of it..! Sometimes, life is such..! So so unfair..!!

    Ushnam avaladhu udambil alla..! Agathil..!
    Ammaiyum arindhaalo.?
    Irudhiyaai..!
    Akkanivil ival Aarinaalo..?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular