Thursday, December 5, 2024
Homesliderஉதிரம்

உதிரம்

அனோஜன் பாலகிருஷ்ணன்

***

“ஹாய் ஹரி, எல்லாம் நன்றாகச் செல்கிறதா?”

“இப்போதைக்கு ஒன்றும் சிக்கலில்லை” என்றேன். கை குலுக்கிவிட்டு அவர் புன்னகைக்குப் புன்னகைத்தேன். முப்பது வயதுக்குள் இருக்கக்கூடிய ஒடிசலான உடல் தோற்றம் கொண்ட பெண்மணி. கோதுமை நிறம் கொண்ட தேகத்தில் மணிக்கட்டு வரை நீள்அங்கி அணிந்திருக்க கைகள் மட்டும் வெளித்தெரிந்தன.  அவர் சாய்ந்து பார்த்த விதத்தில் ஒரு மனநல மருத்துவருக்கு உரிய தொழில் நேர்த்தியிருந்தது. பொன்னிறமான முடியை வாரிக் கொண்டையாக முடிந்திருந்தார். வெண்ணிற சட்டகங்கள் இடப்பட்ட மூக்குக்கண்ணாடி விளிம்பில் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து துடித்தது. அந்த அறை நாலடிக்கு குறைவான அகலத்தில் இருந்தது. பழுப்பு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்ட சுவரில், கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனியே திகைத்து நடப்பது போல ஓவியம் மாட்டப்பட்டிருந்தது.

முதல் தடவையாக பல்கலைக்கழக மனநல ஆலோசனைப் பிரிவுக்கு வருகிறேன். பெரும்பாலும் மாணவர்கள் மன அழுத்தம், தனிப்பட்டப் பிரச்சினைகளுக்கு உள சிகிச்சைக்காக இங்கே வருவார்கள். கூம்பு வடிவ கட்டடத்தின் தோற்றமே உளச்சிகிச்சை மையத்தை வித்தியாசமாக வளாகத்தில் காட்டியது. எத்தனையோ முறை இக்கட்டடத்தைக் கடந்து சென்று இருக்கிறேன். இன்றுதான் முதன்முதலாக இணையத்தில் சிகிச்சைக்கான அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். வரவேற்பு மையத்தில் கொடுக்கப்பட்ட படிவத்திலுள்ள மூன்று பக்கங்களில் மனநலம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தேன். சீரான நித்திரை வருகிறதா, கவலையாக உள்ளதா, உடலை தன்விருப்பாக துன்புறுத்தத் தோன்றுகிறதா போன்ற கேள்விகள், அதற்கான வீரியத்தின் அளவை இலக்கங்களில் வளையமிட வேண்டும்; சில சொற்களில் விபரிக்கவும் வேண்டும். என் கோணலான கையெழுத்தில் நிரப்பிய அந்தப் படிவத்தை புரட்டிப் பார்த்துவிட்டு மேசையில் மடிக்கணினி அருகே வைத்தார்.

“என்னுடையை பெயர் கிளாரா ஸ்பொளடிங். என்.எஹ்.எஸ் மனநல மருத்துவராக இங்கே வாரத்துக்கு இரண்டு நாட்கள் பணிபுரிகிறேன். சரி ஹரி, நீங்கள் பல்கலைக்கழகத்தில் என்ன துறை, படிப்பெல்லாம் எப்படிச் செல்கிறது?”

“மருத்துவப் பீடம்; படிப்பு நன்றாகச் செல்கிறது”

“நல்லது. சரி உங்களுக்கு எந்த வகையில் நான் உதவ முடியும்.? உங்களது பிரச்சினையை மனம் விட்டுச் சொல்லலாம்,”

“எனக்கு சமீப காலமாக அதிகமாகக் கோபம் வருகிறது,”

“எதனால், குறிப்பாக எவர் மீது?”

“எதனால் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அம்மா மீது வருகிறது,”

“அப்படி அம்மா மீது என்ன கோபம்?”

“ஹ்ம்ம்…”

“ஹேய் நீங்கள் என்னிடம் மனம்விட்டுப் பேசலாம். மிக இளையவர் நீங்கள். இந்த வயதில் எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இது இயல்பானது!”

மருத்துவர் என்னை இலகுவாக்கச் சொற்களை அலங்கரித்து விரித்துத் தடவிச் சொன்னாலும் அங்கிருக்கும் நம்பகத்தன்மை என்னை ஈர்த்தது. மெல்ல உடலைச் சாய்த்து இலகுவானேன். மருத்துவ பீட மாணவன் ஆகையால் எனக்கு இங்கிருக்கும் நடைமுறையும், நுட்பமான நடிப்பும் நன்கு தெரியும். இருந்தும் அதை விரும்பினேன். என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க விரும்பினேன்.

“எங்கள் குடும்பம் மிக விசித்திரமானது,”

“குடும்பங்களுக்கு தனித்தனி இயல்புகள் இருக்கும். இது பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாடு அல்லவா?”

“உண்மைதான், சில விடயங்களில் அடிப்படையே தவறி இருந்தால் கஷ்டம் இல்லையா?”

“புரியவில்லை ஹரி, சரி நீங்கள் சொல்ல விரும்புவதை நண்பியிடம் சொல்வது போல சுதந்திரமாக என்னிடம் சொல்லலாம்” கண்ணாடி சட்டகத்திற்குள் கிளாராவின் கண்கள் விரிந்தன.

“பெரும்பாலான நாட்களில் பாடசாலை முடிந்து வீட்டுக்கு என் இளைய சகோதரியுடன் வரும்போது அப்பா தூக்கி எறிந்த பழக்கூடையிலிருந்து சிதறிய பழங்கள் தரையில் அனேகமாக வீழ்ந்திருக்கும். ஒவ்வொரு சண்டையின் போதும் அப்பா தனது கட்டுப்படுத்த முடியாத மூர்க்கத்தை வெளிக்காட்ட அதைச் செய்வார். ஜன்னலை நோக்கிக் கைக்கு அகப்படும் பொருட்களை மேசையிலிருந்து தூக்கி வீசுவார். அவை பட்டுச் சிதறி தரையெங்கும் பரவும். அப்பா சென்றவுடன் அம்மா அவற்றைப் பொறுமையாகப் பொறுக்கி, மேசைத்துணி விரிப்பைக் கசங்கல் இல்லாமல் சீராக விரித்து எடுத்து வைப்பார். சிதைந்த பழங்களையும், நொறுங்கிய கோப்பைகளையும் அப்புறப்படுத்தி மீண்டும் சளைக்காமல் அலங்கரிப்பார். அம்மாவை அப்பா அடித்ததை சிறுவயதில் பலமுறை பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மாவின் விழிகளில் குமிழ் கொள்ளும் விழிநீரைப் பார்க்க முடியாத வண்ணம் கேசம் கலைந்து விழிகளை மறைந்திருக்கும்.

என் பதின்ம வயதில் அப்பா ஒருமுறை அம்மாவை அடித்துத் தரையில் வீழ்த்தி விட்டார். நான் கோபம் கொண்டு அப்பாவின் இடுப்பைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டேன். நிலை தடுமாறி பிடித்துக்கொள்ள ஏதும் இன்றி சுவரில் சாய்ந்து ஒற்றைக் கையை ஊன்றி நின்று என்னைப் பார்த்தார். விழிகளில் அதிர்ச்சி இருந்தாலும் அவசரமாக அவற்றை கோபமாக மாற்றினார். நான் அம்மாவை அணைத்துக் கொண்டு “இப்போது நீங்கள் வீட்டை விட்டு உடனே கிளம்புங்கள். அம்மாவை மீண்டும் அடித்தால் பொலிசாரை அழைத்து வரச்சொல்வேன்” என்றேன். அப்பா அதிர்வுகள் உடலில் படர்ந்து செல்ல என்னைப் பார்த்தார். அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திரண்ட கோபத்தை அள்ளியெடுத்து அம்மா மீது காட்டக் கையை ஓங்கினார். எனக்குள் மூர்க்கம் எங்கிருந்தோ சட்டென்று வந்தது. எனது இடது காலால் அவர் காலை தள்ளி, நெஞ்சைப் பிடித்து அழுத்தி சுவருடன் சாய்த்தேன். நிலை தடுமாறி விழுந்தார். விழப்போன அவரை என் கைகள் தாங்கச் சென்றன, இருந்தும் என்னால் பிடிக்க முடியவில்லை. என் கண்களைப் பார்க்க அவர் கண்கள் தடுமாறின. அவர் விழுந்தவுடன் அவர் மீது அச்சம் தான் கிளர்ந்தது. அப்பாவின் எதிர்வினைக்காகப் பயந்தேன். ஆனால், அவர் கண்களிலிருந்த திகைப்பு என்னை சமாதானப்படுத்தியது. கொஞ்சம் திருப்தி. கொடூரமான திருப்தியது. உள்ளூர மகிழ்ந்தேன். அதுவே எனக்குப் பெரிய தெம்பைக் கொடுத்தது.

தரையில் வீழ்ந்திருந்த அம்மா எழுந்திருக்கவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கம் சாய்ந்தார். முகம் தரையின் பக்கம் திரும்பியிருந்தது. வலி பொறுக்க முடியாமல் அழுதிருக்க வேண்டும். அம்மாவின் தேகம் அதிர்ந்தவாறிருந்தது. இடுப்பின் பின்பகுதியிலிருந்து இரத்தம் கசிந்து பரவியது. அந்த இரத்த(த்)தின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளும் வயதில்லை அப்போது. ஆனால் மிகுந்த ஒவ்வாமையை அந்த இரத்தம் கொடுத்தது. அப்பா ஒரு கணம் திகைத்து பின்னர் சுதாகரிந்து அம்மாவை இருகரம் கொண்டு தூக்கினார். அம்மா எதுவும் பேசாமல் வயிற்றை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தார்.

“இன்று அந்த நாட்கள் என்று ஏன் முன்னமே சொல்லவில்லை?”, என்பது மட்டுமே அப்பாவிடம் இருந்து வந்த வார்த்தைகளாக இருந்தன.

அன்றிலிருந்து அப்பா அம்மாவை அடிப்பது வெகுவாகக் குறைந்து இல்லையே என்று சொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டது. எனக்கும் அப்பாவுக்கும் இடையே விரிதல் சன்னமாக வளர்ந்து இட்டு நிரப்ப முடியாதவாறு பிளந்து சென்றது. அதை இருவரும் உணர்ந்தோம். மின்கலத்தின்  இருமுனை போல ஒவ்வொரு திக்கில் இருந்தோம்.

அம்மாவும், அப்பாவும் இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கிலாந்துக்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள். நானும் எனது இளவயது சகோதரியும் இங்கேதான் பிறந்து வளர்ந்தோம். அப்பா முரட்டு மனிதர். என்ன கோபம் என்றாலும் அம்மா மீதுதான் காட்டுவார். அம்மா எல்லாவற்றுக்கும் அப்பாவுக்கு பயப்படுவார். எதிர்த்து இரண்டு வார்த்தைகள் பேசக்கூட திராணியும் சத்தும் இருக்காது. ஆரம்பத்தில் அம்மாவின் பயந்த சுபாபம் மீது இருந்த இரக்கம் எனக்கு காலப்போக்கில் எரிச்சலைத் தரத் தொடங்கியது. எதிர்த்துப் பேசவும் குரலை உயர்த்திக் கதைக்கவும் அம்மாவுக்கு சொல்லிச் சொல்லியே எனக்கு அலுத்து விட்டது. என்னுடைய பாடசாலை நண்பர்களின் பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்குள் பொறாமையும் கவலையும் பரவும். எனக்கு இப்படிப் பெற்றோர்கள் இல்லையே என்று தோன்றும்.

அப்பா தேவைப்பட்டால் கோட் ஷூட் அணிவார். ஆங்கிலத்தில் உரையாடுவார். தபால் நிலையத்துடன் சேர்ந்து இயங்கும் தனது சிறிய பல்பொருள் அங்காடிக் கடையை இரண்டு இலங்கையைச் சேர்ந்த ஊழியர்களை வைத்து திறம்பட நடந்துவார். ஆனால் அவரது மூளையின் பல பகுதி இந்த நாட்டுடன் ஒன்ற முடியாதவை. என்னையும் சகோதரியையும் தனது இருண்ட மூளையின் பாதிப்பகுதியிலும் இங்கிலாந்தில் ஊன்றிய மிச்சப்பகுதியிலும் வைக்க முயன்று தடுமாறிப் போவார். என்னுடையை பதினான்காவது வயதிலிருந்து என் போக்கை எனது இஷ்டப்படி அமைக்கத் தொடங்கியபோது அப்பா அடைந்த பதற்றம் என்னை இரசிக்கச் செய்தது.”

“உங்கள் மீது கோபம் வந்தால், அப்பா உங்களை அடிப்பது இல்லையா?”

“மிகச்சிறு வயதில் அடித்திருக்கிறார். பிற்பாடு குரலை உயர்த்திப் பேசுவார். என் மீது எழும் கோபத்தை அம்மா மீதுதான் வன்முறையாகக் காட்டுவார்”

“மிகச் சிறுவயதில் கூட அப்பா உங்கள் மீது அன்பாக இருந்தது இல்லையா?”

“ம்ம்… இருந்தார். அப்பா என்னையும் என் சகோதரியையும் அன்பில்லாமல் வளர்த்தார் என்று சொல்ல இயலாது. அவர் அன்பை வெளிக்காட்டும் விதம் நிறைய பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதூடாக வெளிப்படும். சிறுவயதில் கோபமாகப் பேசினாலோ அல்லது மூர்க்கம் கொண்டு அடித்தாலோ பின்னர் அதற்காக வருத்தப்படுவார். வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அம்மாவின் ஊடாகவே அறிய நேரும். அப்பா தன்னிடம் வருத்தப்பட்டார் என்று அம்மாதான் சொல்வார். அப்போது அப்பாவின் மீது வாஞ்சை பிறக்கும். பின்னர் பொடிப்பொடியாக உடைந்து விடும்”

நான் சொல்லச் சொல்ல கிளாரா சில குறிப்புகளை நோட்டில் வேகமாக குறித்துக் கொண்டிருந்தார்.

“கடைசியாக எப்போது அப்பா உங்கள் மீதும் கோபம் கொண்டார்?”

“மூன்று வாரங்கள் முன்னர்”

“எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?”

“அன்று அப்பா என் மீது கோபம் கொண்டது எனது நண்பியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என்பதல்லாமல் அவளை எனது அறைக்குக் கூட்டிச்சென்று பேசி(க்)கொண்டிருந்தேன் என்பதற்காக. என்னுடன் வெளிப்படையாக எரிந்து விழாமல் அம்மா மீது என் மீதான சினத்தை காட்டித் தன் இயலாமையை தீர்த்துக் கொள்கிறார். இத்தனைக்கும் என் சிநேகிதி மிக இனிமையும், பண்பும் நிறைந்தவள். என்னுடன் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்”

“அப்பா மீதுதானே உங்களுக்கு கோபம் வரவேண்டும். எதற்கு அம்மா மீது வருகிறது?”

“அதைத்தான் என்னால் யாருடனும் பகிர முடியவில்லை. மிகுந்த தொந்தரவைத் தருகிறது”

“நீங்கள் உங்கள் பிரச்சினையைச் சொல்வதில் எதற்கும் தயங்கத் தேவையில்லை ஹரி. நான் உங்களுக்கு உதவவே இருக்கிறேன். என்னால் முழுமையாக உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் ஒரு மருத்துவ மாணவர், உங்களுக்குத் தெரியும் இங்கே நம்பிக்கையும், மனம்விட்டுப் பேசுவதும் அவசியமானது. நான் இத்துறையில் முறையாகப் படித்தவள். இவ்வாறான பல்வேறு சிக்கல் கொண்ட பல மாணவர்ளை இங்கே சந்தித்துச் சிகிச்சை அளித்திருக்கிறேன். உளவியல் அழுத்தங்களுக்குள்ளிருந்து மீட்டிருக்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம். சொல்லுங்கள்”

“ஒரு குறுந்தகட்டால் நான் நிலையிழந்து விட்டேன்”

“குறுந்தகடு?”

“ஆம், அப்பாவின் அறையினுள் இருந்து அந்த குறுந்தகட்டைக் கண்டுபிடித்தது மிகத் தற்செயல். பொதுவாக நான் அப்பாவின் அறைக்குள் நுழைவதில்லை. சிறுவயதில் அடிக்கடி சென்று இருக்கிறேன். வளர்ந்த பின்னர் செல்வதில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. ஏனோ செல்லப் பிடிக்கவில்லை. அப்பாவுடன் பேச்சுக் குறைந்த பின்னர் ஒருநாள் அந்த அறைக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கதவு பூட்டி இருக்கவில்லை. உள்ளே சென்றேன். விதவிதமாக பல பழைய காலணிகள், முன்சில்லு கழட்டப்பட்ட நிலையில் நீலநிறத்தில் சைக்கிள் ஒன்று, அதன் மேல் சில ஆடைகள். தரையெங்கும் காகிதங்களும் கடிதாசிப் பெட்டிக்களுமாக இருந்தன. அப்பாவின் மனம் போல், பிடிவாதம் போல் அந்த அறையிருந்தது. மெல்ல மெல்ல அறைக்குள் சென்றேன். ஒழுங்கின்மையாகவிருந்த அந்த அறையில் அப்பா தங்குவதோ உறங்குவதோ இல்லை. அதன் அருகே தள்ளியிருக்கும் அறை இன்னும் விலாசமானது. அம்மாவும், அப்பாவும் அங்கு தான் உறங்கச் செல்வார்கள். அம்மா இருப்பதாலோ என்னவோ அந்த அறை ஒழுங்காகத் தூய்மையாக இருக்கும். ஆனால், அவர்கள் தங்கியிருக்கும் தூய்மையான அறைக்குள் நான் செல்வதில்லை. மீண்டும் மீண்டும் அப்பாவின் தனியறைக்குள் நுழைந்தேன்.

பழைய ஒளிப்படக் கருவிகள், ஒளிப்பட நாடாக்கள் என்று பல பாவனையில் இல்லாத உபகரணங்களை பெட்டிகளுக்குள் தடித்த வயர்கள் தெரிய புதையுண்டு இருந்தன. அவை எல்லாம் முன்னர் அப்பா நடாத்திய ஒளிப்படப் பதிவெடுக்கும் நிறுவனத்தின் பழைய உபகரணப் பொருட்கள். அங்கிருந்த புத்தகத்திற்குள் அதைக் கண்டுபிடித்தேன். தூய்மையான மெல்லிய பேழைக்குள் வைக்கப்பட்ட குறுந்தகடு. அதனைப் புரட்டிப் பார்த்தேன். எந்தவிதக் கீறலும் அல்லாமல் பாவிக்கும் நிலையில் இருந்தது. கணினியில் அதனைச் செலுத்தி இயக்கிப்பார்க்கும் எண்ணம் எழுந்தது. பின்னர் அதைப்பற்றி முற்றாக மறந்து விட்டிருந்தேன். சில நாட்களின் பின்னர் கணினியை இயக்கி குறுந்தகட்டைச் செலுத்தி இயக்கிப் பார்க்கும் உவகை எழுந்தது.

என்னுடைய கணினியில் செலுத்தி  இயக்கிப் பார்த்தேன். அப்பாவினதும், அம்மாவினதும் பழைய புகைப்படங்கள் இருந்தன. ஒவ்வொன்றையும் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். புன்னகை விரிய சட்டை தொளதொளக்க அப்பா நிற்க அருகில் அம்மா காதில் தோடு மின்ன சேலையில் இருக்கும் புகைப்படங்கள், என்னுடையதும் இளைய சகோதரியினதும் சிறுவயதுப் புகைப்படங்கள், விளையாட்டுப் பொம்மைகள் சூழ அப்பாவின் மடியிலும் தரையிலும் நாங்கள் இருக்கும் படங்கள். என்னை மறந்து ஆனந்தமாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவையெல்லாம் ஆல்பங்களில் இல்லாத படங்கள். சில படங்கள் இலங்கையில் எடுக்கப்பட்டவை. நந்தியாவட்டை வெள்ளைப் பூக்கள் பூத்த மரங்களின் கீழேயும் கிணற்றுக்கட்டுகள் அருகேயும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றை எல்லாம் அப்பா நினைவிலிருந்து அழியாமல் செல்ல ஆவணப்படுத்தியிருந்தார் போல.”

அங்கே எனது பேச்சை நிறுத்தினேன். தொடருங்கள் என்ற ரீதியில் கிளாரா என்னை ஊற்றுப் பார்த்தார். நான் அவர் விழிகளைத் தவிர்த்து விட்டு தொடர்ந்தேன்.

“அப்போதுதான் அந்தக் கோப்பில் படங்களுடன் ஒரு ஒளிநாடாவும் பதியப்பட்டு இருந்ததைக் கவனித்தேன். சாதாரணமாக அதனை இயக்கினேன். அப்போது எனக்குள் ஒரு அதிர்வு எழுந்தது. அதுவொரு பாலியல் படம். நிர்வாணமாக ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் காணொளி. இது எப்படி இதற்குள் என்ற ஆச்சரியமும் திகைப்புமாக உறைந்து போனேன். நிலையாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவியால் படம்பிடிக்கப்பட்டு இருந்தது. ஆணுக்கு மேல் பெண்ணொருவர் இயங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அதைக் கண்டுபிடித்தேன். அந்த ஆண் எனது தந்தை. எனது உடல் சிலிர்த்தது. அந்தப் பெண் யார் என்று பார்த்தபோது எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அது எனது அம்மாதான். அம்மாவின் சாயலிலுள்ள வேறு பெண்ணா என்று திரும்பவும் நோக்கினேன். இல்லை என் அம்மாவே தான். எனது அம்மா வெறிகொண்டு தந்தை மீது இயங்கிக் கொண்டிருந்தார். இதுவரை நான் புரிந்து வைத்திருந்த அம்மா அல்ல திரையில் நான் பார்ப்பது. முற்றிலும் ஆக்ரோஷமாக தனது ஆக்கிரமிப்பில் ஓர் ஆணைப் பந்தாடிக் கொண்டிருக்கும் பெண்ணாகத் தெரிந்தார். நிஜமாகவே அம்மாவைப் பார்த்து பயப்பட்டேன். ஒன்றரை நிமிடங்கள் இயங்கக்கூடிய அந்தக் காணொளியை முழுவதுமாகப் பார்வையிட்டேன். மரக்கட்டை போல என் அப்பா படுக்கையில் படுத்தபடியே இருந்தார். அவரிலிருந்து எந்தவிதமான அசைவும் இருக்கவில்லை. இறந்த பிணம் போலவே இருந்தார். இருவரையும் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

அன்று முழுக்க யோசிக்கவே திராணியற்று எனது படுக்கையில் படுத்திருந்து அந்தக் காணொளி பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஆக்ரோஷமான அம்மாவின் உடல் மொழி என்னை அரித்துக் கொண்டிருந்தது. துணுக்குற்றுத் தூக்கம் கொள்ளாமல் விழித்து எழுந்தேன். தேகம் முழுவதும் கொதித்து உருகி வழிந்தேன். நிலை கொள்ளாமல் தவித்தேன்.

மீள மீள என் அப்பாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் அமைதியாக நிலம் போல் இருக்க, புயலில் அறைபட்டு ஆடும் மரம்போல் இயங்கிக் கொண்டிருந்த அம்மாவின் சித்திரம் என்னைப் புரிந்துகொள்ள முடியாத வெளிக்குள் தள்ளியது. நான் ஏன் தொந்தரவுக்குள் உள்ளாக வேண்டும். காணக்கூடாத காட்சியைக் கண்ணுற்றேன் என்றா அல்லது அம்மா மீதிருந்த விம்பம் மாறிவிட்டது என்றா எனக்குத் தெரியவில்லை. உணர்வுகளால் சிதைந்து அலைகழிந்தேன். அந்த கலவிக் காட்சியை வைத்து ஒட்டுமொத்தமாக அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றேன். என்னை நுண்மையாக்கி, கூர்படுத்தி மனதை பிளந்து பகுத்துச் சென்றேன். அகம் எங்கோ முட்டி நகராமல் நின்றது. அங்கே கொப்பளித்தது சினம். என் அம்மா மீது வெறுப்பும் கோபமும் கிளர்ந்தது. அன்றிலிருந்து தான் வீட்டில் பிரச்சினை.”

“ம்ம், உங்களுடைய தொந்தரவு புரிகிறது. நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான். இது உங்களுக்கு வீட்டில் என்ன வகையான பிரச்சினையைத் தோற்றுவித்தது?”

“அம்மா பேசுவதும் வீட்டில் நடமாடுவதும் போலி நடிப்புப் போல் தோன்றத் தொடங்கியது. எல்லாமே நாடக பாவனையென. பயந்த சுபாவம் கொண்டவர் போல் இருப்பதும் அப்பாவை எதிர்க்காமல் இருப்பதும் அவர் விரும்பி அணிந்த வேடம் என்று தோன்றியது. உள்ளூர அதற்காக நடித்து அதுவாகவே ஆகிவிட்டாரா அல்லது புன்னகையுடன் அதை உள்ளூ(ர) இரசித்து மகிழ்கிறாரா தெரியவில்லை. ஆனால் ஒன்று முன்னம் போல என்னால் அம்மாவை பார்க்கவோ, அவருடன் பேசவோ முடியவில்லை.”

கிளாரா குறிப்பு நோட்டை மூடி வைத்துவிட்டு, “அதிகம் யோசிக்க வேண்டியதில்லை ஹரி. இத்தனை வெறுப்பு தேவை இல்லை. இதை இப்படிப் பார்க்கலாம், இது அவர்கள் அந்தரங்கம் சார்ந்தது. அதற்குள் சங்கதிகள் தலையிட முடியாது. இதை யோசித்து துயர் அடைய ஏதும் இல்லை. அந்தக் ஒளிப்படக் காட்சி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. சரி, அந்தக் காணொளியை அவர்கள் தான் எடுத்தார்களா?”

“ஆம், என் அப்பா அதை எடுத்திருந்தார்”

“அப்படியா, அதனை அவரிடமே கேட்டீர்களா?”

“ஆம். அம்மா மீதான வெறுப்பு கட்டுக்கடங்காமல் வளர்ந்து சென்றது. குரலை உயர்த்திப் பேசாத நான் அம்மாவுடன் எரிந்து விழுந்தேன். என் கண்களில் அவர் தென்படும் போதெல்லாம் அதிகம் வெறுத்தேன். அவர் சமைத்ததை அவர் முன் உண்ண(ப்) பிடிக்கவேயில்லை. ஒருமுறை இரவு உணவு உண்ணும் போது ‘என்னடா பிரச்சினை?” என்று கேட்டு என் தலையைத் தடவினார். எனக்குள் முகிழ்ந்த ஒவ்வாமை சினமாக மாறியது. அவர் கையை தட்டிவிட்டது மட்டுமல்லாது சாப்பாட்டுத் தட்டை விசிறி எறிந்தேன். தட்டு உடைந்து உணவுடன் தரையில் தெறித்திருந்தது. அம்மா அரண்டு போனார். எதுவும் பேசாமல் என் அறைக்குள் எழுந்து சென்று விட்டேன்.”

“உன் அப்பாவுக்கு வரும் அதே கோபம் போல”, என்று கிளாரா சொல்லும்போது ஒரு திடுக்கிடல் எழ நிமிர்ந்து பார்த்தேன்.

“ஆம், அந்தக் கோபம் தான் எனக்கு பிரச்சினையே. அன்று அப்பா என்னை நேருக்கு நேராகப் பார்த்து அழைத்தார். நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவரிடம் சென்றேன். உண்மையில் அப்படியொரு அழைப்பை உள்ளூர எதிர்பாத்து இருந்தேன் போல. சிறிய ஆசுவாசம் கிடைத்தது. ‘நீ சிறிய வயதிலிருந்து அம்மா பிள்ளைதானே, எதற்கு அம்மா மீது இத்தனை கோபம் சமீப காலமாக?’ என்று கேட்டார். இதற்காகவே காத்திருந்தது போல அந்த குறுந்தகட்டை எடுத்து அவர் முன்னம் வைத்தேன். பின்னர் அதில் நான் பார்த்ததை சுருக்கமாகச் சொன்னேன். அப்பா அதிர்ச்சி அடைவார் என்று நினைத்தேன். அல்லது சங்கடம் கொள்வார் என்று எதிர்பார்த்தேன். மாறாக அவர் நிதானமாகவும் தெளிவாகவும் பேச ஆரம்பித்தார்.

“இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த பின்னர் நான் ஆரம்பித்தது சிறிய ஒளிப்பட நிறுவனம். அப்போதுதான் ஒளிப்பட கருவிகள் மக்கள் பயன்பாட்டில் வந்து கொண்டிருந்தது. அனைத்து நிகழ்வுகள் சடங்குகளை மக்கள் படம் பிடிக்க விரும்பினார்கள். அதனைக் கணித்து என் வியாபாரத்தை நடாத்தினேன். சிறப்பான வரவேற்பு இருந்தது. இயல்பிலே ஒளிப்படங்கள் மேல் ஆர்வம் இருந்ததால் இன்னும் திறமையாக நடாத்த முடிந்தது. அப்போது நீங்கள் பிறக்கவில்லை. ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்காமல் தள்ளித்தள்ளியே சென்றது. இது உன் அம்மாவுக்கு அதிக கவலையைக் கொடுத்தது. அவள் பிள்ளை வேண்டும் என்று ஏங்கத் தொடங்கியிருந்த காலம். எங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் மருத்துவ ரீதியாக இல்லை. விரைவில் சரியாகும் என்று நம்பினேன். அப்போதுதான் கரு உண்டாகும் அந்தக் கணத்தை அழியாமல் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. படு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினாலும் எனக்குள் அதைச் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உன் அம்மாவிடம் சொன்னபோது அதை மறுக்கவில்லை. வேடிக்கையாக அதை ஏற்றுக் கொண்டாள். பிற்பாடு ஒளிப்படம் பிடித்த பல காணொளிகளை அழித்தேன். இதை மட்டும் விட்டு வைத்தேன். காரணம் இது நீ தோன்றிய கணம்.” என்றார். எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே அப்போது இருந்தது. நான் வேறு எதுவும் பேசவில்லை.

அப்பா இதனை எங்கோ பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். சுழன்று என் கைக்கே தற்செயலாக வந்துவிட்டது. அதன் பின்னர் எனக்கும் அப்பாவுக்கும் இடையிலிருந்த இடைவெளி மெலிதாகச் சுருங்கி வருவதுபோலத் தோன்றியது. அப்பாவும் நானும் அதிகம் பேசிக்கொள்ளா விட்டாலும் ஒரே மேசையில் இரவு உணவை உண்கிறோம். எங்களுக்கு இடையே அம்மா ஒரு தடையாக இருப்பதில்லை.”

“இப்போது அப்பாவிடம் நெருக்கமாக இயல்பாக பேச முடிகிறதா?”

கிளாரா எழுதித் தந்த மருந்துகள் மூளையின் மின்ரசாயனச் செயல்பாடுகளைக் குறைக்கும் மாத்திரைகள். சிந்திக்கும் வேகத்தை குறைக்கும். இதனைத் தொடர்ந்து உள்ளெடுத்தால் மந்தமாகி விடுவேன். எந்த வேலையிலும் ஆர்வம் காட்ட முடியாமல் போகும். வன்முறை எதையாவது நான் கையிலெடுப்பேன் என கிளாரா எண்ணுகிறாரா தெரியவில்லை. இன்னும் வாரத்துக்கு ஒருமுறையாக ஏழு தடவை தொடர்ச்சியாக கிளாராவைச் சந்திக்க வேண்டும். நான் சொன்னவற்றை வைத்து என்னை ஆராய்வார்கள். எனக்கு என்ன சிக்கல் என்று கண்டுபிடித்து, அந்த மையத்தைக் கலைக்கும் விதமாக பல்வேறு உரையாடல்களைத் தொடுப்பார்கள். அந்த உரையாடல்கள்தான் எனக்குத் தேவையா எனத் தெரியவில்லை.

000

சைக்கிள் நிறுத்தத்திற்குச் சென்று இரும்புக் கேடயத்தில் பிணைக்கப்பட்ட என் சைக்கிளை விடுவித்து ஏறி  மிதித்துப் புறப்பட்டேன். வெளிக்காட்சிகள் எல்லாம் ஒரு பெரிய மௌனப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன. அம்மாவின் நினைவுகள் வந்தன. சிறுவயதில் அம்மாவுடனே எப்போதும் இருப்பேன். எனக்கு மூன்றரை வயது இருக்கும். ஈரம் பொதிந்த கடற்கரை நிலம், என் கால்கள் புதையப் புதைய அப்பாவின் கையைப் பிடித்து நடந்தவாறு இருந்தேன். சட்டென்று பெரிய அலை எழுந்து உடைந்து வழிந்து வந்த வேகத்தில் என்னை சாய்த்தது. அரைக்கணத்திற்கும் குறைவான பொழுது உப்புத்தண்ணீர் மூக்கில் நுழைய தத்தளித்தேன். அடுத்த அரைக்கணத்தில் அம்மாவின் இடுப்பில் இருந்தேன்.

நான் சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்த போது அப்பா அம்மாவுடன் வாய்தர்க்கத்தில் இருந்தார். என்ன பிரச்சினை என்று நான் புரிந்துகொள்ள முற்படவில்லை. ஏதாவது ஒரு நொண்டிக் காரணமாக இருக்கும். அம்மா மௌனமாகவே இருந்தார். எனக்கு அந்த மௌனம் ஒரு நடிப்புப் போலத் தோன்றியது. எங்கேயோ சுரந்த இரக்கம் தடைபட்டு நின்றது. இருவரையும் அவர்களின் உலகத்திலே விட்டுவிட்டு விலகிச் செல்லவே விரும்பினேன். மாடிப்படியிலுள்ள எனது அறைக்குள் நுழைய முற்படும்போது கீழே பெரிய சத்தம் கேட்டது. அம்மாவின் அலறல். என்னை மீறி கீழே படிகளின் மீது தாவி ஓடிச்சென்றேன். அப்பா, அம்மாவை மூர்க்கமாக அடித்திருக்க வேண்டும். அம்மா தரையில் வீழ்ந்திருந்தார். அவர் கன்னங்கள் தடித்து சிவந்திருந்தன. முடிக்கற்றைகள் குழம்பிப்போய் ஒரு பக்கம் சாய்ந்திருந்தன. அப்பாவின் கண்களும் என் கண்களும் சந்தித்துப் பிணைந்து விலகிக் கொண்டன. அனிச்சையாக உடல் திரும்ப, வாசல் கதவைத் திறந்து கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறினார். அம்மா அருகே சென்றபோது அதைக் கவனித்தேன். தரையில் இரத்தம். அவரது இடுப்பின் பின்பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அம்மாவின் தோள்மூட்டைப் பிடித்துக் தூக்கினேன். எனது தோளை அவரது கைகள் ஆதரவாகப் பற்றிக்கொண்டன. “ஐயோ அம்மா, என்ன ஆகிவிட்டது?”

“ஒன்றும் இல்லை, இதுதான் என் கடைசி மாதவிடாயாக இருக்க வேண்டும். அவ்வப்போது   வந்து நீண்ட நாட்களாக வராமல் இருந்தது. இப்போது கடைசியாக… இனிமேல் ஒரு போதும் வராது. இதற்கான வயதை நான் கடந்து விட்டேன்” என்று அம்மா மெலிதாக ஆங்கிலத்தில் சொன்னபோது அவர் என் கண்களைப் பார்த்தார். என் கண்கள் ஒரு கணத்தில் அஞ்சி விலகிக் கொண்டது. ஏன் இத்தனை வெளிப்படை, அதற்கு தயார் இல்லாததால் அரண்டு சுருண்டு கொண்டேன்.

அம்மாவை குளியறையில் விட்டுவிட்டுத்  தரையில் படர்ந்திருந்த இரத்தத்தை சுடுதண்ணீர் நிறைத்து, சுத்திகரிப்பான் கலந்து மொப்பரால் துடைத்துச் சுத்தம் செய்தேன். பளபளப்பாகிய ஈரத்தரையில் என் முகம் தெரிந்தது. அரைக்கணம் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். மிகக் குரூரமான விடுதலையை அடைந்தது போலத் தோன்றியது. உடனே உடலில் அலையலையாக கசப்பு எழுந்து பற்றிக் கொண்டது.

***

RELATED ARTICLES

4 COMMENTS

  1. ஹரியின் அதிவுவுகள் வாசகர்களிடமும்
    ஏற்பட்டிருக்கும். ஹரி உதிரம் துடைக்கப்பட்ட
    ஈரத்தரையில் தனது முகத்தைப் பார்த்துக் கொண்டார்? வாசகர்கள் தங்கள் முகங்களைப் பார்க்க கண்ணாடியைத் தேடிக்கொண்டிருப்பார்கள்

    • மிக நேர்த்தியான கதை சொல்லல். ஃப்ராய்டியன் கோட்பாட்டின் அடிப்படையில். அம்மாவின் காமம் ஏன் இத்தகைய ஒவ்வாமையை அளிக்க வேண்டும்? அதுவும், ஃப்ராய்டியன் கோட்பாடுகள் மறுதலிக்கப்பட்ட காலகட்டத்தில். ஒருவேளை, (காணொளியில் இருந்ததைப்போல) நிஐத்தில் அம்மா தனித்த ஆளுமையாக (அப்பாவை எதிர்த்துப் பேசி அல்லது அவரை அடக்கி ஆள்பவராக) இருந்திருந்தாலும் மகனுக்கு இதே ஒவ்வாமை இருக்கக்கூடுமோ? இங்கு பெண்ணியம், பெண் விடுதலை பேசும் பலரும் இத்தகைய மனநிலையில் இருப்பதாகப்படுகிறது.

      நாம் கற்பிக்கப்பட்ட அல்லது கற்பித்துக்கொண்ட ஒழுக்க விதிகளின்படியே ஒவ்வொன்றையும் மதிப்பிடுகின்றோம் எனத் தோன்றுகிறது. மேலும், நம் மனம் பூர்வ சிந்தனைகளுக்கும் புதுச் சிந்தனைகளுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டும் இருக்கிறது. அப்பா அம்மாவை வதைப்பது குற்றம் என்று தீர்ப்பு எழுதிய கையோடு அவள் கற்பிக்கப்பட்ட ஒழுக்க விதிகளை மீறினால் நாமும் சேர்ந்து அவளை வதைக்கிறோம். ஆணின் ஒழுக்கமீறலை முற்போக்காக, அவனது ஆளுமையாக எடுத்துக்கொள்ளும் அதேவேளையில் பெண்ணின் சுதந்திரத்தை ஒழுக்கமீறலாகக் கொள்கிறோம். பலதாரம் கொண்ட தலைவர்களின் அடிவருடிகள் பாஞ்சாலியைப் பரத்தை என்பதைப் போல.

      அந்த கடற்கரை நிகழ்வு அவனுக்கு அப்பாவிடம் இருந்து விலக்கமும் அம்மாவிடம் நெருக்கமும் உருவாக்கி இருக்கலாம். அம்மா என்பது அடைக்கலம் அளிக்கும், கருணை பொங்கும் ஒரு முகம். அதன் மறுபக்கத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எனினும், அவள்தான் அடைக்கலம். ஆகவே, காணொளியைப் பற்றிய அப்பாவின் விளக்கம் தரமுடியாத தீர்வை, அம்மாவின் உதிரம் தந்துவிடுகிறது.

  2. தாங்களுடைய WhatsApp or Email ID தரமுடியுமா ? கதைக்கவேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular