பிரார்த்தனையின் ஓசை முனகலாக ஒலிப்பதில்
சுற்றுச் சுவருக்கு மறுப்பேதுமில்லை
மேற்கூரையில் திரளும் பிசுபிசுப்பு
கடவுள் செவியில் படரும் ஈரம் என நம்புக
நடுங்கும் கூப்பிய விரல்களின் சத்தியங்கள் குளிர்வதை
அலையோடும் இமைக்குள் தவித்து உருளும் கண்களில்
பிறழும் காட்சியின் வர்ணங்கள் நனைவதை
மூத்தோர் விந்து உமட்டும் நாபி உள்முடிச்சில்
தாயின் மூச்சுக்காற்று திணறுவதையும்
சரணாகதி செய்ய
முனகலாகும் ஓசையில்
பிரார்த்தனையின் சுற்றுச் சுவரெங்கும்
இருண்ட கண்டத்தில் முளைத்த பிஞ்சு விரல்களின் தடங்கள்
*****
நம்
இருவருக்கிடையில் ஒரு குறுகிய மௌனமிருந்தது
அதுவரை பேசிய உரையாடல்கள் அங்கு மிதக்கின்றன
அவற்றிலிருந்து வெளியேறும் பறவைகள் கூடு திரும்புவதில்லை என்றுமே
நிறமற்ற அதன் சிறகிலிருந்து உதிர்ந்த இரண்டொரு இறகுகளோடு
நாம் திரும்ப வேண்டியிருந்தது
தத்தம் உடல்களுக்கு
சாய்ந்த பொழுதின் துயரைப் பூசி
கூடுடைய பறவையின் திசையெங்கும் பரவத் தொடங்குகிறது
பொன்னந்தி நிறத்தில் உரையாடலின் இசை
ஊற்றுக்கண் பிளக்கும் ரகசியத்தின் முதல் துளியில்
உப்பெனப் பூக்கிறது பறத்தலின் மௌனச் சொல்
****
காயங்கள் ஆறுவதற்கான கயிறு
தனிமைப் பிசிர் கொண்டு முறுக்குகின்றது குரல்கட்டை
சொற்கள் நொறுங்கும் உடைவை
கையேந்தித் தவறும்
கேவல் ஒலி
கண் பிதுக்கும் இறுதிக்காட்சி நொடியிழைப் பிடித்து
உறையத் தொடங்குகிறது அடுக்குக் குலையும் பிம்பமாக
வெளிவரும் நாக்கின் நீளத்தை
நுனியில் தொங்கும் கடைசி உச்சரிப்பை
கால் உதறலோடு உருளும் ஸ்டூலின் கால்கள்
மல்லாந்து திகைக்கின்றன
****
என் நிலத்தில் நடும் துயரத்தில் பறக்காத
தனிமை நீ
மணிக்கட்டு நரம்பூடே ரத்தத்தில் நகரும் நினைவும்
மௌனத்தைச் சொல்ல விடாமல் தவிக்கச் செய்யும் நாக்குழைவுமாய்
உன் பிரியத்தைக் கோர்த்து வைத்திருக்கும் கோப்புகளைத் திறந்து வை
அதன் அடுக்குகளில்
பறவையின் சிறகாகப் படிந்திருக்கும் நம்
முத்தங்களைப் பிரித்தெடு
கொஞ்சநேரம் நம் வனத்தின் இருளில் பறக்க விரும்புகிறேன்
எனக்கு உதவி செய்
நீயென் இராப் புதிரின் ஊற்றுக்கண்
உன்னைப் பருகத் துடிக்கும் உதடுகள் வேறொரு செடியில் பூத்திருப்பதாக
கனவின் முதுகில் மகரந்தம் தூவுகிறது பட்டாம்பூச்சி
வர்ணங்களோடு நடுங்கும் என் விரல்களைப் பற்றிக்கொண்டு உயர்ந்தெழு
சுகந்தம் வீசும் உதடுகள் தேடு
ததும்பும் முத்தத்தின் மீதிறங்கி என்னை மிதக்க விடு
தக்கையாகிப் பிறழும் அசைவின் கணத்தில் உன் கரை ஒதுங்கும்
நொடிக் கொண்டு
அந் நிலத்தில் புதைத்து வை
வனமெங்கும் பரவும் துயரத்தில் நீ பற
*****
அயற்சியோடு நடக்க வைத்துவிட்டாய்
தீர்மானங்கள் பலிப்பதில்லை
தனிமைப் பயணத்தில் அதுவொரு சுமை
திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாய் இல்லை உன் குரல்
நிறைய வாசித்தாயிற்று
நிறைய களைப்புறச் செய்துவிட்டன உன் வரிகள்
பிதற்றலும் கதறலுமாய் அலறும் பைத்தியக் கணங்களோடு
நிழல் வலை வீசுகிறாய்
சிறு விரலசைவில் அவை அறுகின்றன
என்னை எட்டிப்பிடிக்க துரத்தும் உன் காலடியோசை
வேறொரு கிரகத்திலிருந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது
எதை நம்புகிறாய்
உனது பிரத்யேக ஒற்றை விண் கல்லையா
கோடி நட்சத்திரங்களை வாரி இறைக்காமல்
கனக்கும் என் பையோடு
மேலும் நடந்தபடியே இருக்கிறேன் தீர்வதாயில்லை இந்த அயற்சி
காற்றில் வீசியெறிந்த
உன் சமரச வெண் துணியொன்று பற்றியெரிந்து சாம்பலாகிறது
உரசிக்கொண்ட உரையாடலின் பொறிப் பட்டு
உணர்கொம்பில் சுழல்கிறது ஊழிக்காற்றைப் பொருத்தும் மூச்சு
உறுதியான கால்கள் கொண்டிருக்கிறேன்
இறுகும் தசை சபிக்கிறது
முன்பு குடித்த தேநீரின் கசப்பை இன்றையத் தொண்டைக்குழி
திரளச் செய்கிறது
வெட்டியெடுக்காத பெருமலையை
அடுத்தடுத்து அமையவேண்டாம் மேலும் மேலும் ஓர் அண்மை
நடக்க நடக்க ஓயாத அயற்சி
தன் பகலை
சட்டென்று அணைத்துவிட்டது
பெருகும் திசையற்ற இந்த இருள் பிடித்திருக்கிறது
உன் சொற்கூச்சலை வேடிக்கைப் பார்க்கச் சொல்லி
இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன்
வான்கோவின் கத்திக்கொண்டு
நெருங்கும்போது அதை எடுத்துக்கொள்
*****
– இளங்கோ
www.kavithaikarandiary.blogspot.in
elangomib@gmail.com