Monday, October 14, 2024
Homesliderஇளவரசன்

இளவரசன்

ஷான்

நானும் இளவரசனும் அந்தச் சிறிய குன்றின் உச்சியில் அமர்ந்திருந்தோம். அவன் தொலைவில் மறைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்த்துக் கொண்டிருந்தான். சூரியன் ஏரியில் மறைகிறதா தொடுவானத்தில் மறைகிறதா என்று நான் கவித்துவமாக ஏதோ யோசித்துக் கொண்டிருந்தேன்.

“மேத்ஸ்னால சால்வ் பண்ண முடியாத ப்ராப்ளமே உலகத்துல இல்லை தெரியுமாடா” என்றான்.

அது 1995.

நாங்கள் இருவருமே நான்காம் ஆண்டு ஆர்க்கிடெக்சர் படிப்பில் இருந்தோம். நாங்கள் தங்கியிருந்த புதிய ஹட்கோ குடியிருப்பு அந்த மலையிலிருந்து பார்த்தால் நெருப்புப் பெட்டிகளை அடுக்கி வைத்தது போல் தெரிந்தது. அடிக்கடி நாங்கள் இருவரும் நடந்து இந்தக் குன்றின் உச்சிக்கு வருவோம். எப்போதாவது நண்பர்களும் உடன் வருவார்கள். ஹட்கோவைச் சுற்றிலும் வீடுகள் இல்லை. கரடுகளும் செடிகளும் புற்களும்தான். ஆங்காங்கே சிறு கற்குன்றுகள். அந்த இடத்திலிருந்து ரயிலே வராத மீட்டர் கேஜ் ரயில் நிலையம் தெரியும். இடது புறம் அகண்ட ஏரி ஒன்றும் தெரியும். ஏரியில் சூரியன் மறையும் அந்தக் காட்சி இளரசனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் உட்காரும் இடம் மாறவே மாறாது. அந்த பாறையின் மீது நானோ வேறு யாருமோ அமர்ந்துவிட்டால் கோபித்துக் கொள்வான். அதற்காகவே அங்கே அவனுக்கு முன் ஓடி அமர்ந்து அவனை வெறுப்பேற்றுவோம்.

இளவரசனுக்கு உயரமான ஒல்லியான உருவம். முழுதாக வளராத மீசை. இவற்றோடு ஏதோ காரணத்தால் ஏகமாக உதிர்ந்து கொண்டிருந்த முடியும் சேர்ந்து கொண்டு ஒரு விதமான குழந்தைத் தோற்றத்தை அவனுக்குத் தந்தது. நாங்கள் அனைவரும் காதலன் படத்தின் பிரபுதேவா ஸ்டைலில் கூடாரம் போல ஜீன்ஸைத் தைத்துப் போட்டுக் கொண்டு விதவிதமாக வண்ணத்தில் சட்டை போட்டுக் கொண்டு திரியும்போது அவன் மட்டும் மெல்லிய நிறத்தில் கோடு போட்ட சட்டையை இன் செய்து அளவெடுத்துத் தைத்த பேண்ட் போட்டுக் கொண்டு கலெக்டர் ஆஃபீஸ் குமாஸ்தா போல இருப்பான். அடர்த்தி குறைந்த முடியைப் படிய வாரியிருப்பான்.

“நீயே சொல்லுடா.. அந்தப் படம் வரதுக்கு முன்னாடி இப்படி கோமாளி மாதிரி டிரஸ் போட்டுட்டு யாராவது வந்திருந்தா நீங்களே கிண்டல் பண்ணி இருப்பீங்க. ஒரு படத்துல ஹீரோ போட்டுட்டு வந்ததும் திடீர்னு இது ஃபேஷன்னு சுத்தறீங்க. நாளைக்கு இன்னொன்னு வரும். காசுக்குக் கேடு”

ஆனால் குமாஸ்தா தோற்றத்தை வைத்து அவனை எடை போடக்கூடாது. வாயைத் திறந்தால் கணிதமும் ரிலேட்டிவிட்டி தியரியும் வானவியலும் வந்து விழும். அவனும் என்னைப் போல் பன்னிரண்டாம் வகுப்பு மட்டும்தான் படித்துவிட்டு வந்தானா அல்லது ஏதேனும் கல்லூரியில் டாக்டரேட் படித்துவிட்டு வந்தானா என்று ஒரு சந்தேகம் வரும். படிப்பில் படு கெட்டி. தேர்வு நெருங்கினால் அவனிடம்தான் நாங்கள் நோட்ஸ் கேட்டு வரிசை கட்டி நிற்போம்.

“நோட்ஸ் தரேன். ஆனா ஒரு கண்டிஷன். இந்த வீட்டை விட்டு வெளியே கொண்டு போகக்கூடாது. என் கண் முன்னால காப்பி பண்ணி எழுதிட்டு திரும்பத் தரணும். என் நோட்சைப் பாத்து படிக்கவோ, ஜெராக்ஸ் எடுக்கவோ கூடாது”

“டேய் டேய்.. ப்ளீஸ்டா… நீ மொத சேப்டர் படிக்கும்போது நான் கடைசி சேப்டர் படிக்கலாம்ல?”

அவன் ஒத்துக் கொள்ளவே மாட்டான். வேறு வழியின்றி மாங்கு மாங்கென்று நான் அதைப் படியெடுப்பேன். மற்றவர்கள் அவனுக்குத் தெரியாமல் என்னிடமிருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அப்படிப் படியெடுப்பது தேர்வில் எனக்கு நிறைய உதவும். அவன் ஏன் சொல்கிறான் என்பது அப்போது புரியும்.

அவனிடம் பெரும்பாலும் யாரும் அதிகம் பேசமாட்டார்கள். திடீரென்று இந்தக் கதையின் ஆரம்பத்தில் வந்தது போல் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் ஏதாவது சொல்வான். நண்பர்கள் அவனிடம் விவாதம் தொடங்குவதைப் பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். முடிந்த அளவு கழன்று கொள்வார்கள். ரஜினி ரசிகர்களிடம் லா ஆஃப் தெர்மோடைனமிக்ஸ் பேசினால் எப்படி இருக்கும். நான் கொஞ்சம் அறிவியல் புனைவுகள், சுஜாதா என்று படித்திருப்பதால் அவனிடம் தம் கட்டிப் பார்ப்பேன்.

“மேத்ஸ் எப்படிடா உலகத்துல எல்லா பிரச்னையையும் சால்வ் பண்ண முடியும்?”

“நம்மைச் சுத்திலும் பாருடா… அந்த ஏரியில எவ்வளவு தண்ணி இருக்குன்னு எப்படி கால்குலேட் பண்ணுவே? சூரியன் இருக்கு. அதோட லைஃப் என்னன்னு எப்படித் தெரியும்? நாளைக்கு வெதர் எப்படி இருக்கும்னு எப்படி ப்ரெடிக்ட் பண்றாங்க? மேத்ஸ் மை ஃப்ரண்ட்… எல்லாமே மேத்ஸ்”

சொல்லிவிட்டு 1942 எ லவ் ஸ்டோரி படத்திலிருந்து ஒரு பாட்டை கீச்சு கீச்சென்று விசிலடிக்க ஆரம்பித்தான். காது கூசியது. ஆனால் அவன் மனதுக்குள் அது புல்லாங்குழலாக ஒலித்துக் கொண்டிருக்கும். தூர்தர்ஷனில் ஒரு முறை கேட்டதிலிருந்து அந்தப் பாடலின் ரசிகனாகிவிட்டான். இந்தி தெரியாது. மெட்டு மட்டும் விடாமல் அவனோடு ஒட்டிக் கொண்டது. அவனுக்கு ஏதோ ஒன்று பிடித்துவிட்டால் அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சில வாரங்கள் பயணிப்பான். அதைப் பற்றியே விடாமல் பேசிக் கொண்டிருப்பான். அவனுடைய இப்போதைய போதை ஆர் டி பர்மனின் இசை. முன்பு ஒரு காலத்தில் டெபோனேர் புத்தகம்.

“அது எப்படிடா முடியும்? நிஷாவோட அக்கா புருஷன் தினமும் அவங்களைப் போட்டு அடிக்கறாராம். அதை எப்படி மேத்ஸ் சால்வ் பண்ணும்?”

“பண்ணும்டா… உலகத்துல எல்லாமே கணக்குதான். அந்த அக்காதான் அந்தக் கணக்கை போட்டுப் பாக்கணும். ஆனா மேத்ஸ்க்குன்னு ஒரு மரியாதை இல்லையாடா? இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாச்சுன்னு மேத்ஸ்கிட்ட கேளு. பதில் சொல்லும். இது வரைக்கும் மேத்ஸ் தீர்க்க முடியலைன்னு நீ ஏதாவது சொன்னா அது மேத்ஸ் பிரச்னை இல்லை. அந்த ஃபார்முலாவை நாம இன்னும் கண்டுபுடிக்கலைன்னு அர்த்தம்”

ஒரு கல்லைக் கையில் எடுத்து உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“சரி.. இப்ப நிஷா இருக்காள்ல. அவகிட்டே எப்படி என் லவ்வை சொல்றது? எதையாவது எறிஞ்சுடுவாளோன்னு பயமா இருக்கு. உன் மேத்ஸ் மூலம் அதுக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லு. இப்போதைக்கு எனக்கு சொல்யூஷன் இல்லாத பெரிய ப்ராப்ளம் அதுதான்”

நிஷா. எங்கள் கல்லூரியின் அதே வளாகத்தில் நடக்கும் இன்னொரு கலைக் கல்லூரியில் கேட்டரிங் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். இருவரும் ஒரு ஆண்டுக்கு மேல் பேசிப் பழகிக் கொண்டிருந்தாலும் அவளிடம் என் விருப்பத்தைச் சொல்ல எனக்கு ஒரு பெரிய தயக்கம் இருந்தது.

“போடா டேஷ்.. ரெண்டு கேள்வி கேட்டிருக்கே ரெண்டுலயும் நிஷா… ”

நண்பர்கள் அனைவரும் கெட்ட வார்த்தை சரளமாகப் பேசுவோம். இளவரசன் அதிலும் ஒரு கொள்கை வைத்திருந்தான். டேஷ் என்றுதான் சொல்லுவான். நாம் ஃபில் அப் செய்து கொள்ள வேண்டும்.

“இதுக்கு நீயே நேரடியா திட்டலாம்டா. எங்க சாய்ஸ்க்கு விட்டா இன்னும் அசிங்கமாத் தோணுது”

“மொதல்ல உன்னோட அந்த கவிதை நோட்டை எடுத்து நெருப்புல போடறேன் பாரு. எப்பப்பாரு கண்ணே மணியேன்னு கிறுக்கிக்கிட்டு. அவ போற எடத்துக்கெல்லாம் போய் நின்னுக்கிட்டு. ப்ரொடக்டிவா யோசிக்க வேண்டிய வயசுடா இது”

“டேய்.. லவ்வுடா.. அது இருந்தாதானே ப்ரொடக்ட்ஷன் ரீ-ப்ரொடக்ஷன் எல்லாம்?”

“சரிடா… பளிச்சுன்னு அவளுக்கு உன்னைப் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுட்டா அப்புறம் நிம்மதியா போன வருசத்து அரியர்க்கு படிக்கலாம்ல.. நான் ஒண்ணு சொல்லட்டா?”

“சொல்லு”

“நீயெல்லாம் லவ் பண்ற மெட்டீரியலே கிடையாது. உன் குடும்பம் பத்தி எனக்குத் தெரியும். உன்னைப் பத்தியும் எனக்குத் தெரியும்.”

எனக்கு சுருக்கென்று கோபம் வந்தது. அவனுக்குத் தெரியும் என்றால் அது சரியாகவும் இருக்கும்.

“உனக்கு மயிர்ல தெரியும்”

“உனக்கு காதலை சொல்றதுக்குக் கூட பயமில்லை. ஆனா சொல்லி அவ ஒத்துக்கிட்டா அதுக்கப்புறம் என்ன ஆகும்னு பயம். நிஜமா உனக்குத் தேவை அவளோட ஃப்ரண்ட்ஷிப்தான். ஒரு நெருக்கம். அப்பப்போ கையைப் பிடிச்சுக்கணும். அவ்வளவுதான். அது கிடைச்சுட்டா நீ தெளிஞ்சுடுவே”

அவனிடம் பேசிப் பயனில்லை. காதல், பெண்கள், கவிதை இதெல்லாம் அவனைப் பொருத்தவரை நேர விரயம். மக்கள் தொகையை அதிகரித்து நாட்டை இன்னும் வறுமையில் வீழ்த்தும் வழிகள். ஆனால் அவனுக்கும் ஒரு காதல் இருந்தது. விண்வெளி மீது. ஆனால் அவன் தந்தை பொதுப்பணித்துறையில் பொறியாளர். ஆர்க்கிடெக்டுகளின் சந்தை மதிப்பு அறிந்தவர். அவன் இதுதான் படிக்கவேண்டும் என்று கட்டாயமாக சொல்லிவிட்டார். தந்தையிடம் மன்றாடிப் பார்த்துவிட்டான். பயனில்லை. உனக்கெல்லாம் ஒண்ணும் தெரியாது என்று சொல்லிவிட்டார். வானத்தைப் பார்த்து புலம்புவான்.

“இந்த பூமி ரொம்ப ரொம்ப சின்னதுடா. இன்சிக்னிஃபிகன்ட். அந்த வானத்தைப் பாரு. அதுல பறக்கணும்டா. பைலட்டுங்களைப் பாருடா. பொறாமையா இருக்கு. ரெக்கையே இல்லாம பறக்கறாங்க. அவங்க மட்டும் போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணிட்டு வந்திருக்காங்க”

“ஆமாம்டா.. நானும் ஒரு படத்துல பாத்திருக்கேன். ஏர்ஹோஸ்டஸ் கூடவே போவாங்க… வருவாங்க… வெளிநாட்டுல ஒரே ஓட்டல்ல ஒண்ணா தங்குவாங்க.”

“உனக்கு ஏன்டா எப்ப பாத்தாலும் புத்தி இப்படிப் போகுது?”

“நான் மனுசன்டா… நீ தெய்வம். சரி போலாமா? ப்ராஜக்ட் முடிக்கணும்”

இருவரும் எழுந்து கொண்டோம். இன்னும் இரண்டு நாட்களில் எங்களுடைய இந்த செமஸ்டருக்கான ப்ராஜக்ட்டின் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு பெங்களூரின் புறநகர்ப் பகுதியில் ஸ்டேடியம் ஒன்றை கற்பனையாக வடிவமைக்க வேண்டும். இரவு பகலாக அறையில் அனைவரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்கான திட்ட வரைபடங்கள், ஓவியங்கள், குறுக்குவெட்டுத் தோற்றங்கள் என்று நிறைய வரைய வேண்டும். வழக்கம் போல நாள் நெருங்க நெருங்க தூக்கம் சாப்பாடு இல்லாமல் அடித்துப் பிடித்து வேலை நடக்கும்.

எத்தனை நாள் கொடுத்தாலும் நாங்கள் வெட்டியாக ஊர் சுற்றிவிட்டு அப்படித்தான் வேலை பார்ப்போம். இளவரசன் போன்ற ஒரு சில மண்டைகள்தான் ஆரம்பத்தில் இருந்தே வேலை பார்த்து கடைசியிலும் அதே வேகத்தில் உழைப்பார்கள். அவன் பேசுவதில் பாதி கல்லூரியின் பேராசிரியர்களுக்கே புரியாது. ஏதோ வானத்தில் இருந்து இறங்கி வந்த விண்கப்பலைப் போல தன் ஸ்டேடியத்தை வடிவமைத்திருந்தான். பார்க்கவே மிரட்டலாக இருந்தது.

அவன் அருகில் என்னுடைய ஸ்டேடியமும் உருவாகிக் கொண்டிருந்தது. ஸ்டேடியத்தை நீள்வட்ட வடிவத்தில் உருவாக்கினால் அதை வரைவதற்குக் கடினமாக இருக்கும் என்று அதை செவ்வகமாக வடிவமைக்கும் ஆள் நான். இருக்கு என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது என்ற அளவில்தான் என்னுடைய வேலை இருக்கும்.

ஹவுசிங் போர்டை அடைந்து நாங்கள் குடியிருந்த நடுத்தர வருமானக் குடியிருப்புக்கு வந்தோம். பொன்ராஜ் சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தான். ஜேக்கப் ஏற்கனவே தயாராகி அமர்ந்திருந்தான்.

“டீ சாப்பிடப் போறோம். வரீங்களாடா”

அந்த அழைப்புக்கெல்லாம் நான் உடனே கிளம்பி விடுவேன். ப்ராஜெக்ட் எல்லாம் பிறகுதான். இளவரசன் வேலை பார்க்க வீட்டுக்குள் சென்றுவிட்டான். அவன் வரமாட்டான் என்று எங்களுக்கும் தெரியும். எட்டு மணிக்கு சாப்பிடத்தான் இனி வெளியே வருவான்.

டீ சாப்பிட்டு முடித்து வீடு வந்த பிறகும் எங்கள் அரட்டை தொடர்ந்தது. ரங்கீலா என்று ஒரு படம் வெளிவருகிறது. வழியில் போஸ்டர் பார்த்துவிட்டு வந்திருந்தோம். நம்ம ஊர் ஏ ஆர் ரகுமான் இசையில். ப்ராஜக்ட் முடித்ததும் அந்த மாலையில் அனைவரும் செல்ல முடிவு செய்துகொண்டோம். இப்போது ஸ்டேடியம் ப்ராஜக்ட் பக்கம் பேச்சு திரும்பியது.

“நான் ப்ராஜக்ட் பண்ணலைடா” என்றான் பொன்ராஜ்.

“ஏன்டா?”

“பிஜூ சார்தான்டா டிசைன் ஜூரி. எனக்கு இங்கிலீஷ் சுட்டுப் போட்டாலும் பேச வராது. அந்த ஆளைப் பாத்தா தமிழும் சேர்ந்து வராது. எப்படியும் ஃபெயில் பண்ணிடுவான். அடுத்த வருசம் வேற யாராவது ஜூரி வருவாங்க. அப்ப பாத்துக்கலாம்னு இருக்கேன்”

உயரம் குறைவு என்றாலும் பிஜூ சார் எங்களுக்கு ஒரு நீண்ட கொடுங்கனவு. நாட்டின் பெரிய ஆக்கிடெக்சர் கல்லூரியில் படித்துவிட்டு வந்தவர். எங்கள் கல்லூரியையே கொஞ்சம் தீண்டத் தகாத கல்லூரியாகத்தான் நினைத்தார். ஆர்க்கிடெக்சர் படிக்கும் மாணவர்கள் கஷ்டப்படவும் அவமானங்களை சந்திக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்று அவர் முடிவு செய்திருந்தார். ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் வகுப்புக்குள் செல்ல முடியாது. ஜன்னலுக்கு வெளியே பார்வை திரும்பினால் சாக்பீஸ் பறந்து வரும். வகுப்பறைக்குள் தமிழில் பேச முடியாது. எங்களைப் போன்ற தமிழ் மீடியம் மாணவர்கள் அவர் கேள்விகளுக்கு திமிங்கலத்தை விழுங்கியது போல் விழிப்போம்.

ஆனால் வெளியே வந்தால் தோள் மீது கை போட்டு லோக்கலாகப் பேசுவார்.

“இத பாரு மச்சி. நீ எப்படியும் இந்த செமஸ்டர் இன்டர்னல் பாஸ் ஆக மாட்டே. ஏன்னா நான்தான் ஃபெயில் பண்ணப் போறேன். எதுக்கு ரொம்ப அலட்டிக்கறே? வா டீ சாப்பிடப் போலாம்”

ஆனால் அவரை அப்படியே ஒதுக்கவும் முடியாது. அபாரமாகப் பாடம் எடுப்பார். எங்களோடுதான் டீ சாப்பிட வருவார். கல்லூரி கேண்டீனில் எதுவும் சகிக்காது. கல்லூரிக்கு வெளியே ஒரு தாபா இருக்கிறது. அரை கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

“நியாயமா உன்னை பாஸ் பண்ணி விட்டுடலாம். ஆனா ஆர்க்கிடெக்சர் விளையாட்டு இல்லை மச்சி. தினமும் கிரவுண்ட்ல கிரிக்கெட் விளையாடிட்டு கடைசி நாள்ல அவசர அவசரமா ஏதோ ஒண்ணை வரைஞ்சு அதை டிசைன்னு சொல்லி வெச்சிருக்கே. இப்ப பாஸ் பண்ணி விட்டுட்டா அப்புறம் பின்னாடி வாழ்க்கைல நீ கஷ்டப்படுவே. இப்ப கஷ்டப்பட்டா ஆறு மாசம்தான் மச்சி”

இத்தனைக்கும் அவரும் கூட வந்து கிரிக்கெட் ஆடியிருப்பார். ஏற்கனவே ஐந்து வருடங்கள் படிப்பு. பிஜூ சாரால் அது பலருக்கு ஆறு வருடங்கள் கூட ஆகியிருக்கிறது.

“உனக்கு வேலைதானே. நான் வாங்கித் தரேன் மாப்ள. நீ வேலை பாத்துட்டே வந்து அரியர் எழுது. எங்க காலேஜ்ல மூணு நாலு வருசமா டிசைன் அரியர்ஸ் வெச்சவங்க எல்லாம் இருக்காங்க தெரியுமா?”

பிஜூ சாரின் பெயர் எங்களை மீண்டும் ப்ராஜக்ட் வேலையை நோக்கித் திருப்பியது. இந்த முறை ஸ்கீம் எனப்படும் திட்ட வரைபடங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு ரிவ்யூ என்று பெயர். அதில் திருத்தங்கள் சொல்வார்கள். அதன் பிறகு ஒரு மாத காலத்தில் ஃபைனல் எனப்படும் முழு வண்ண வரைபடங்களை முன் வைக்க வேண்டும். அதற்கு ஜூரி என்று பெயர். கூடவே அந்த வரைபடங்களுக்கான மாதிரியை அட்டையில் செய்து எடுத்துச் செல்ல வேண்டும். அதைப் பொறுத்துதான் இறுதி மதிப்பெண். பிரசன்டேஷனுக்கு என்று தனி மதிப்பெண் உண்டு. ஜூரி நடக்கும் தினங்கள் ஒரே களேபரமாக இருக்கும். இரண்டு கைகளிலும் வரைபடங்கள், மாடல்கள் என்று சென்றால் தெருவே எங்களை வேடிக்கை பார்க்கும்.

“டேய் ஓடி வாங்கடா எட்டு பத்து பஸ் விட்டுட்டா அப்புறம் எட்டு நாப்பதுக்குதான் பஸ். அது லேட்டா போகும். அப்புறம் பிஜூ சப்மிஷனை ஒத்துக்காது” என்றான் ஜேக்கப்.

ஒன்பது மணிக்கு இரண்டு நொடிகள் தாமதம் என்றாலும் அப்படியே திரும்பி வர வேண்டியதுதான். பிறகு அடுத்த கதவு ஆறு மாதங்கள் கழித்துத்தான் திறக்கும். டவுன் பஸ்ஸில் அட்டையால் செய்யப்பட்ட மாடல்களை திக் திக் மனதுடன் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். அருகிலேயே மண்வெட்டியோடு ஆட்கள் ஏறுவார்கள். பள்ளிச் சிறுவர்கள் சுரண்டிப் பார்ப்பார்கள்.

இளவரசன் காலை ஆறரை மணிக்கே கிளம்பிவிட்டான்.

“நான் போற ஏழு மணி பஸ் பஞ்சர் ஆகிட்டா கூட பின்னாடி எட்டு பத்து பஸ் வரும். நேரா எட்டு பத்து பஸ்க்கு போறது ரிஸ்க். ஏதாவது ஆகிட்டா ஆறு மாசம் வேஸ்ட் ஆகிடும். அதுக்கு ஒரு மணி நேரத்தை இப்போ வேஸ்ட் பண்றது தப்பில்லை”

இது அவன் லாஜிக். எட்டு பத்து பஸ்சையும் விட்டுவிட்டு போக்கு லாரியில் ஏறி தொங்கிக் கொண்டு சென்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி கடைசி நிமிடத்தில் டிராயிங்கை உள்ளே வைப்பது எங்கள் லாஜிக். பொன்ராஜ் கையை வீசிக் கொண்டு ஜாலியாக வந்தான்.

பிஜூ ஏற்கனவே வகுப்பில் இருந்தார். அப்படி ஒரு அமைதி. இளவரசனின் ரிவ்யூ நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய ஸ்டேடியத்தில் கார்கள் எப்படி நேரடியாக ஆட்களை கேலரியில் இறங்கி விட்டுவிட்டு பிறகு பார்க்கிங் நோக்கி செல்ல முடியும் என்று அவன் விவரித்துக் கொண்டிருந்தான்.

“குட்” என்றார் பிஜூ. அவர் திட்டாமல் இருந்தாலே பாராட்டுதான். அவரிடமிருந்து குட் வாங்குவதென்றால் அது சூப்பர் குட் என்று பொருள். இளவரசன் முகத்தில் பெரும் மகிழ்ச்சி. அவனுக்கும் பிஜூ சார் மீது அத்தனை மரியாதை. கிட்டத்தட்ட கடவுள்.

“குட்” என்றார் மறுபடியும். இப்போது அவர் பார்வை எங்கள் மூவர் மீது திரும்பியது.

“என்ன மாப்ள கை வீசிட்டு வந்திருக்கே” என்றார் பொன்ராஜைப் பார்த்து.

“நான் ப்ராஜக்ட் பண்ணலை சார்” என்றான் பொன்ராஜ். ஆனாலும் அவனுக்கு தைரியம்.

“சூப்பர்.. அப்புறம் இங்கே என்ன புடுங்கறதுக்கு வந்திருக்கே? கெட் த ஹெல் அவுட் ஆஃப் மை க்ளாஸ்”

அவர் புன்னகை மாறாமல் சொல்ல பொன்ராஜூம் அதே புன்னகையுடன் எழுந்து வெளியேறினான்.

“நீங்க என்ன?”

நானும் ஜேக்கப்பும் வரைபடங்கள் சுருட்டி வைத்திருந்த நெகிழி உருளைகளை உயர்த்திக் காட்டினோம். உள்ளே சென்று அமரும்படி சைகை காட்டினார். எங்களுக்குப் பின்னால் வந்த யாருக்கும் அனுமதி இல்லை. நேரம் கடந்துவிட்டது.

என் முறை வந்தது. பிஜூ சார் என்னுடைய ஸ்டேடியத்தை கட்டுவதற்கு முன்பே சல்லி சல்லியாக இடித்துக் கொண்டிருந்தார். அடுத்த முறை ஜூரிக்கு வரும்போது தவறுகளை சரிசெய்தால் மட்டுமே பாஸ் மார்க் கிடைக்குமென்ற எச்சரிக்கையுடன் அனுப்பப்பட்டேன். ஒரு சிலரின் டிராயிங்குகளில் மார்க்கர் வைத்துக் கிறுக்கினார். அதை வரைந்து வந்த தோழி கேண்டீனில் குமுறிக் குமுறி அழுதாள். ஜேக்கப்பின் வரைபடம் டர்ரென்று கிழிந்தது.

“கம் நெக்ஸ்ட் செமஸ்டர்”

பிஜூ சாரின் ரிவ்யூ என்றாலே கால்கள் நடுங்கும். அன்று இன்னும் உச்சத்தில் இருந்தார். எட்டு பேர் மட்டுமே அடுத்த கட்டத்துக்குத் தேறினோம். முப்பது பேர் அடுத்த செமஸ்டர் என்று சொல்லிவிட்டார். துறையின் தலைவர் கொஞ்சம் பதறிவிட்டார். தனியாகச் சென்று அவரிடம் பேசிப் பார்த்தார். ஆனால் பிஜூ சார் அதற்கெல்லாம் மசியவில்லை.

அன்று மாலை அறையில் பலத்த நிசப்தம் நிலவியது. என்னையும் இளவரசனையும் தவிர மற்றவர்கள் ப்ராஜக்டில் ஃபெயில். ஜேக்கப் பிஜூ சாரை வாயில் வந்தபடியெல்லாம் திட்டிக் கொண்டிருந்தான்.

“அவன் ஃபெயில் போடட்டும் இல்ல பாஸ் போடட்டும். மயிரு என் டிராயிங்க எப்படிடா கிழிக்கலாம். கோர்ஸ் முடியட்டும். ஒரு நாள் தெருவுல ஓட விட்டுப் புரட்டி எடுக்கறேன்…”

இளவரசன் இதையெல்லாம் கவனிக்காமல் ஆர்டி பர்மனை விசிலடித்தபடி தன்னுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜூரிக்கான வேலையை அவன் இப்போதே தொடங்கியிருந்தான். ஜேக்கப் அவனை முறைத்தான்.

“டேய்.. .இன்னும் ஒரு மாசம் இருக்கு. ஓவரா பண்றான்டா அவன்.”

அவன் கையிலிருந்த பென்சிலைப் பிடுங்கினான்.

“டேய் டேஷ்… பென்சிலக் குடுடா”

“நாங்க ரங்கீலா போறோம். வரியா இல்லையாடா?”

“நான் வரலை. அந்த லவ் ஸ்டோரில புதுசா என்னடா இருந்துடப் போகுது?”

“இப்படியே போனா நீ தனியாதான் இருக்கணும். இங்க மட்டுமில்ல, வாழ்க்கைலயும்” என்றான் ஜேக்கப் பென்சிலை அவனிடம் வீசியபடி.

அந்த ஹவுசிங் போர்டில் எழுநூறு வீடுகள் இருந்தாலும் நான்கைந்து வீடுகளில் மட்டுமே ஆட்கள் குடிவந்திருந்தார்கள். அவற்றில் எங்கள் வீடும் ஒன்று. இரவு நேரத்தில் ஒருவித அமானுஷ்ய அமைதி நிலவும். ஏதோ யோசித்தவன் பேண்ட்டை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான். அன்று இளவரசன் அத்தனை சந்தோஷமான மன நிலையில் அவன் இருந்தான். போஸ்டரைப் பார்த்து ஒரு வினாடி நின்றான். வழக்கம்போல அவன் கேள்விகளுக்கு நான்தான் பதிலளிக்க வேண்டியிருந்தது. ஜேக்கப்பும் பொன்ராஜும் நகர்ந்துவிட்டார்கள்.

“அது யாருடா?”

“ஜாக்கி ஷெராப்”

“அதில்லடா.. இது?”

“இது அவரோட பனியன்”

“டேய்”

“பனியனுக்கு உள்ளேயா? ஊர்மிளா டா.. ”

“அழகா இருக்காள்ல”

படக்கென்று திரும்பிப் பார்த்தேன்.

“டேய் நீயாடா பேசறே?”

ஊர்மிளாவை மறுபடி பார்த்தேன். எனக்கு எதுவும் விசேஷமாகத் தெரியவில்லை. இன்று அவனுக்குப் பிரியமான பிஜூ சாரிடம் பாராட்டு வாங்கியதில் கூடுதல் குதூகலமாக இருக்கிறான். நாளை சரியாகிவிடுவான் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் படம் பார்த்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. ஆர்டி பர்மனை விட்டுவிட்டு அவன் ஊர்மிளா பைத்தியமாக மாறிவிட்டான். அறையில் ஒரு அசெம்பிள்டு டேப் ரெக்கார்டர் இருக்கும். ஆம்ப்ளிஃபையருடன் ஒரு பானையில் ஸ்பீக்கரைக் கவிழ்த்து வைத்து பாடல்களை அலற விடுவோம். படம் பார்த்துவிட்டு வந்த பிறகு இளவரசன் வேறு பாடல்களைப் போட விடுவதே இல்லை. ரங்கீலா பாடல்கள்தான் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கும். ஆளுயர ஊர்மிளா படம் ஒன்றை வாங்கி வந்து அறையில் மாட்டினான். ஊர்மிளா குறித்த செய்திகளை தேடித் தேடிப் படித்தான். ரங்கீலா படத்துக்கு ஐந்து முறை போயிருந்தான். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

“அவனுக்கு என்னடா ஆச்சு?” ஜேக்கப் ஆச்சரியப்பட்டான்.

“விடுடா இப்பதான் வயசுக்கு வந்திருக்கான். அப்படியாவது ஸ்பேஸ், மேத்ஸ்னு எல்லாம் பேசாம இருக்கானே?”

“இதுக்கு அதுவே பெட்டர். வாயைத் திறந்தா ஊர்மிளா ஊர்மிளான்னு கொல்றான்டா…”

அங்கு நானும் இளவரசனும் மட்டும் ப்ராஜக்டைத் தொடர்ந்து செய்தோம். மற்றவர்கள் அழுத்தம் எதுவுமின்றி வேறு பாடங்கள் படிப்பதும் அடிக்கடி கிரிக்கெட் விளையாடப் போவதுமாக இருந்தார்கள். எனக்குப் பொறாமையாகக் கூட இருந்தது. அறையில் பெரும்பாலும் நானும் இளவரசனும் மட்டும்தான். அவனுக்கு அது இன்னும் வசதியாகி விட்டது. ரங்கீலா கேசட் தேய்ந்தது. எனக்கு அந்த இசையே ஒவ்வாமையாகிவிட்டது.

ஒரு மாதம் எப்படி அத்தனை வேகமாகப் போனதென்று தெரியவில்லை. நாளை ப்ராஜக்ட் ஜூரி. நான் எப்போதும் போல இரவு உணவு கூட சாப்பிடப் போகாமல் வரைந்து தள்ளிக் கொண்டிருந்தேன். இரண்டு இரவுகள் தூக்கம் இல்லை. இன்று இரவும் இருக்கப் போவதில்லை. இளவரசன் ஆறாவது முறை ரங்கீலா படத்துக்குப் போயிருந்தான். ஏனென்றால் அவன் தன்னுடைய வேலையை நேற்றே முழுவதுமாக முடித்து வைத்திருந்தான். கூடவே அசத்தலாக அச்சு அசலாக ஒரு உருவ மாதிரியும் செய்து வைத்திருந்தான். அது பற்றிக் காற்று வழியாகக் கேள்விப்பட்டு அதைப் பார்க்க எங்களுடைய சீனியர்கள் கூட தூரத்திலிருந்து பஸ் பிடித்து வந்து சென்றிருந்தார்கள். வந்தவர்கள் என்னுடைய டிசைனை எட்டிப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டுப் போனார்கள்.

திடீரென்று மழை தொடங்கி வலுத்துப் பெய்தது. நிற்கவே இல்லை. இளவரசன் தெப்பலாக நனைந்து வந்து சேர்ந்தான். வெடவெடவென நடுங்கினான். உடைகளை மாற்றிக் கொண்டு படுத்துவிட்டான்.

காலை ஆறு மணிக்கு அவனை எழுப்பினேன். உடல் அனலாக சுட்டது. போர்வையை இழுத்தால் பதிலுக்கு இழுத்துக் கொண்டான். நான் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டே அவ்வப்போது அவனை உலுக்கிக் கொண்டிருந்தேன்.

“டேய் எழுந்திருடா.. ஜூரிக்கு நேரமாச்சு. நீதான சீக்கிரம் போகலாம்னு சொன்னே?”

அவனால் பதில் சொல்ல முடியவில்லை. முனகினான். பிறகு மெல்ல எழுந்தான். கண்களை சிரமப்பட்டு விரித்தான். முனகலாக சொன்னான்.

“நீ முன்னாடி போய் என்னோட டிராயிங்கை சப்மிட் பண்றியா? நான் ஜூரிக்கு வந்து சேர்ந்துடுவேன்”

“நீ வரும்போது எடுத்துட்டு வாடா. பிஜூ சார்கிட்டே நான் சொல்றேன்”

“இல்லடா அவர் ஒத்துக்க மாட்டாரு. நீ ஹெல்ப்புக்கு ஜேக்கப்பை கூட்டிட்டு முன்னாடி கிளம்பு. நான் எப்படியாவது வந்துடறேன். ப்ளீஸ்டா…” தள்ளாடியபடி எழுந்து குளிக்கப் போனான். ஜேக்கப் குளிக்காமல் கொள்ளாமல் பேண்ட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினான். காலையில் பனி இன்னும் விலகவில்லை. வழியில் ஒரு டீயை மட்டும் உள்ளே தள்ளிவிட்டு நானும் ஜேக்கப்பும் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தோம்.

இளவரசன் செய்த ஸ்டேடியத்தின் மாடலை உடைந்து விடாமல் தூக்கிச் செல்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டோம். ஒரு வழியாக சரியான நேரத்தில் வகுப்பை அடைந்து வரைபடங்களையும் மாடலையும் உள்ளே வைத்துவிட்டோம். மொத்தமே எட்டு பேர்தான் இரண்டாவது ரிவ்யூவுக்குத் தகுதி பெற்றிருந்தோம் என்பதால் வகுப்பில் கூட்டம் குறைவு. ஜேக்கப் பிஜூ சாரின் கண்களில் படாமல் அப்படியே நழுவி கேண்டீன் போய்விட்டான்.

என்னைத்தான் முதலில் அழைத்தார் பிஜூ சார். வகுப்பறையின் வகுப்பின் முன்பக்கம் பாடம் எடுக்கும் கரும்பலகை. வகுப்பின் பின்புறச் சுவரில் வரைபடங்களை அதற்கான பலகைகளில் குத்தி வைக்க வேண்டும். மாடலை இறுதியாக வைக்க வேண்டும். நான் மாடல் செய்யவில்லை. அதற்கு மதிப்பெண் குறையும். பிஜூ சார் காலியாக இருந்த அந்த இடத்தைப் பார்த்தார்.

“என்ன மாப்ள ? மாடல் இல்லையா? ஏற்கனவே நீ பார்டர் மார்க்… சரி வா பாக்கலாம்”

கைகளைத் தேய்த்துக் கொண்டு தயாரானார்.

ஜூரி தொடங்கியது. ஸ்டேடியத்தை வடிவமைக்க நான் எடுத்துக் கொண்ட காரணிகள், பருவநிலை, காற்று, வாகனங்கள் நிறுத்தம், நீர் வடிகால், கூட்டத்தை நிர்வகித்தல் என்று கேள்விகள் சரமாரியாக வந்து விழுந்தன. ஏதோ சமாளித்தேன். இளவரசன் இது பற்றியெல்லாம் அறையில் ஓயாமல் பேசுவான். என்னிடமும் கேள்வி கேட்பான். அது எனக்கு உதவியாக இருந்தது.

“பரவால்ல மாப்ள.. ஒளறினாலும் கொஞ்சம் தெளிவா ஒளறிப் பழகிட்டே” என்றார் பிஜூ. தேறிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் வரைபடங்களை சுருட்டத் தொடங்கினேன்.

கடைசி ஆளுக்கு ஜூரி நடந்து கொண்டிருந்தது. இன்னும் இளவரசன் வந்து சேரவில்லை. எனக்கு மனது அடித்துக் கொண்டது. என்னுடைய ஜூரிக்குக் கூட நான் அவ்வளவு கவலைப்படவில்லை.

முடியும் தருவாயில் ஒரு வழியாக இளவரசன் வந்து சேர்ந்தான். கண்கள் காய்ச்சலால் சிவந்திருந்தன. கடைசி ஜூரியை முடித்துக் கொண்டு பிஜூ சார் தனது நோட்டுப் புத்தகத்தில் மதிப்பெண்களை எழுதிக் கொண்டிருந்தார். இளவரசன் அவசர அவசரமாக தனது வரைபடங்களைப் பலகையில் குத்தினான். நான் அவனுக்கு உதவினேன். பிஜூ சார் தனது குறிப்புகளை முடித்துக்கொண்டு நோட்டுப் புத்தகத்தை மூடிக் கிளம்பினார். இளவரசனை அவர் பார்த்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.

“சார்.. எனக்கு இன்னும் ஜூரி முடியலை” என்றான் இளவரசன் குழப்பமாக அவர் பின்னால் சென்று. பிஜூ சார் நின்று திரும்பிப் பார்த்தார்.

“நீதான் டைமுக்கு வரலையே மாப்ள.. அடுத்த செமஸ்டர் பாக்கலாம்”

இளவரசன் பதறிவிட்டான். அவர் நடக்க அவர் பின்னால் ஓடினான். நானும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஓடினேன்.

“சார் சார் அவனோட டிராயிங், மாடலெல்லாம் நான் வரும்போதே கொண்டு வந்துட்டேன். அவனுக்கு ஒடம்பு சரியில்லை… ”

கை உயர்த்தி நான் பேசுவதைத் தடுத்தார்.

“உன்னோட ஜூரி முடிஞ்சாச்சுல்ல. ஷட் அப் அண்ட் கோ டூ யுவர் ப்ளேஸ்”

ஒரே அதட்டலில் எனக்கு எல்லாமே அடங்கிவிட்டது. இளவரசன் பயப்படவில்லை.

“சார்… உங்களுக்கு சப்மிஷன் பண்ணனும். அதை சொன்ன நேரத்துக்கு பண்ணியாச்சு. ப்ளீஸ் சார்.. இதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”

பிஜூ சார் அவன் எதிர்த்துப் பேசியதை ரசிக்கவில்லை. ஒரு நொடி முகம் சிவந்து பிறகு முகம் மாறி புன்னகைத்தார். இது அதைவிட அபாயமானது.

“யார்.. நீயா? இன்னைக்கு ஜூரியை வெச்சுக்கிட்டு நேத்து உன்னை யாரோ தியேட்டர்ல பாத்ததா சொன்னாங்களே மச்சி”

அந்த யாரோ அவராகத்தான் இருக்கும்.

“சார். அது என்னோட இஷ்டம்.. டிசைன் எப்படி இருக்குன்னு மட்டும் ஜூரி பண்ணுங்க. என்னை ஜட்ஜ் பண்ணாதீங்க”

அவன் குரல் உயர்ந்தது. டேய் வாயை மூடுடா என்று என் மனதுக்குள் கத்தினேன். பிஜூ சாரின் கோபம் உச்சத்தை அடைந்திருந்தது.

“ஜூரிதானே? பண்ணிட்டாப் போச்சு”

வேகமாக நடந்து சுவரில் குத்தியிருந்த அவனுடைய வரைபடங்களின் அருகே சென்றவர் ஒரு காகிதத்தைப் பிடித்து இழுத்தார். நட்ட நடுவே டர்ரென்று கிழிந்தது.

“இப்ப எதை ஜூரி பண்றது மச்சி?”

எனக்கு பகீரென்றது. ஒன்றன் பின் ஒன்றாக அவற்றைக் கிழித்தார். அவற்றை வரைய இளவரசன் எத்தனை இரவுகள் கஷ்டப்பட்டான் என்பதை அருகிலிருந்து பார்த்தவன் நான். அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்து கொண்டிருந்தது.

“உனக்கு இன்னும் ஆறு மாசம் டைம் இருக்கு மாப்ள. இன்னும் நல்லா புதுசா பண்ணிட்டு வந்துடு”

சொல்லிவிட்டுத் தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார். இளவரசன் அப்படியே உடைந்து அழத் தொடங்கிவிட்டான். நாங்கள் அனைவரும் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தோம். பிறகு நான் மெல்ல அவனை நெருங்கினேன்.

“டேய்.. அழாதடா ப்ளீஸ்”

“அவர் சரியா வேலை செய்யாதவனைத் திட்டட்டும். டிராயிங்கை கிழிக்கட்டும். என்ன வேணா பண்ணட்டும். நான் எல்லாமே சரியாப் பண்ணியிருக்கேன். திஸ் ஈஸ் நாட் ஃபேர்டா”

அழுகையினூடே ஆவேசமாகச் சொன்னான் இளவரசன். ஏதோ நினைத்தது போல் ஆவேசமாக எழுந்தான். தனது ஸ்டேடியம் மாடலைத் தூக்கிக் கீழே போட்டான். காலால் ஓங்கி மிதித்தான். அது முழுதாக உடையும் வரை மிதித்துக் கொண்டிருந்தான். நான் ஓடிச்சென்று அவனைப் பிடித்து இழுத்தேன்.

“டேய்.. கிறுக்கா.. என்னடா பண்றே.. வாடா..”

யாரும் பார்க்கும் முன் அவனைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன். பொங்கென்று எடையற்று இருந்தான். ஒரு வழியாக இறுகிய முகங்களோடு வீடு வந்து சேர்ந்தோம். அவன் வழியெங்கும் பேசவில்லை.

வீட்டிற்கு வந்ததும் படுத்துவிட்டான். மூன்று நாட்கள் கடும் காய்ச்சல். ரொட்டியும் பாலும்தான் உணவு. அருகே இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர் எழுதித்தந்த மருந்து சாப்பிட்டபின் காய்ச்சல் குறைந்திருந்தது. காய்ச்சலை விட அவன் முகத்தில் தங்கியிருந்த பார்வை அச்சமூட்டுவதாக இருந்தது.

“வீட்டுக்கு போன் பண்ணட்டுமாடா” என்று கேட்டேன். இளவரசன் சுவரை வெறித்தபடி பேசினான்.

“நான் ஃபர்ஸ்ட் மார்க்னு சொல்றதையே எப்பவும் எங்கப்பா சாதாரணமாத்தான் கேட்டுக்குவார். ஒரு சப்ஜெக்ட்ல ஃபெயில் ஆகிட்டேன்னு அவர்கிட்ட எப்படிடா சொல்லுவேன்?”

“சரி சொல்லாதே.. விட்டுடு. அடுத்த செம்ல க்ளியர் பண்ணிட்டு சொல்லிக்கலாம்”

“அது எப்படிடா? நான் இப்ப வரைக்கும் வீட்டுல எதையும் மறைச்சதில்லை. இதையும் மறைக்கப் போறதில்லை”

எனக்கு அவனை அறையலாம் போல இருந்தது.

“சரி… இப்ப என்னதான்டா பண்ணலாம்?”

“ரங்கீலா போலாமா?” என்றான். ஊர்மிளாவே துணை என்று அவனுடன் நானும் கிளம்பினேன். படத்தின் பாதியில் தூங்கியும் போனேன்.

ஆனால் இந்த முறை ஊர்மிளாவால்கூட அவனை மகிழ்விக்க முடியவில்லை. இரண்டு வாரங்களில் மற்ற பாடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் தொடங்க இருந்தன. நாங்கள் படிக்கத் தொடங்கிவிட்டோம். எப்போதும் விழுந்து விழுந்து படிக்கும் இளவரசன் அந்த முறை புத்தகங்களைத் தொடவே இல்லை. அடிக்கடி காணாமல் போய்விடுவான். தேடிப் போனால் அந்தக் குன்றின் உச்சியில் அவனுக்கான பாறையில் தனியாக அமர்ந்து கொண்டிருப்பான். சில நேரங்களில் நான் அருகே அமர்வேன். எத்தனை நேரம் ஆனாலும் எதுவும் பேசாமல் இருப்பான். நான் அவனோடு பழைய மாதிரி உரையாடல்களை உருவாக்க முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன்.

தேர்வுக்கு முன்பான ஞாயிறு, குளித்துவிட்டுத் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்தவன் அறையில் அமர்ந்திருந்த பெண்ணைக் கண்டதும் பதறிவிட்டேன். அறையில் ஒரு பெண் இருந்ததே பேரதிர்ச்சி. அதிலும் நிஷா. இவள் எப்படி இங்கே? பரபரவென்று உடை மாற்றிக் கொண்டு அவளை அருகிலிருந்த மலைக் கோவிலுக்கு நடத்தி அழைத்து வருவதற்குள் இதயம் வாய்க்கு வந்துவிட்டது. தனிமை கிடைத்ததும் வெடித்தாள்.

“சொல்ல தைரியம் இல்லாதவன்லாம் எதுக்குடா லவ் பண்றீங்க?”

அவள் என் முகம் பார்க்க நான் புற்களைக் கிள்ளிக் கொண்டிருந்தேன்.

“இல்லை.. செமஸ்டர் எக்ஸாம் முடிச்சு சொல்லிடலாம்னுதான் இருந்தேன்”

“கிழிச்சே… இளவரசன்.. ஹாஸ்டலுக்கு வந்தான். உன்னை லவ் பண்றவன் இதயம் படம் பாத்துட்டு ஃபீல் பண்ற டைப். இப்படியே இருந்துட்டு ஊருக்கும் போயிருவான். உனக்கு விருப்பம்னா நீயாவது போய் பேசுன்னு சொன்னான்”

எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. இளவரசன் திடீரென்று ஏன் அப்படிச் செய்தானென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“சரி வா… லவ் பண்ணுவோம்” என்றாள் நிஷா.

அந்த தினம் எனக்கு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. இருவரும் இணைந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். கை கோர்த்தபடி படம் பார்த்தோம். இளவரசன் சொன்னது நினைவுக்கு வந்து தொலைத்தது. ஒரு வழியாக அவளை ஹாஸ்டலில் ஒப்படைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு நண்பர்களின் ஆரவாரத்துக்கு நடுவில் வீட்டுக்குள் நுழைந்தேன்.

நெஞ்சம் நெகிழ முதலில் இளவரசனைத்தான் தேடினேன். அவன் இல்லை.

“சாயந்திரமா வந்தான்டா. திடீர்னு ஊருக்குப் போறேன்னு கிளம்பிட்டான். அவனோட நோட்ஸ், புக்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்துட்டுப் போனான்”

எனக்கு ஏனோ அது சரியாகப்படவில்லை.

“ஊருக்கா? நாளைக்கு எக்சாம்டா”

“ஆமாம்டா.. நாங்க அவன் பையைக் கூடப் பிடுங்கி வெச்சோம். ஆனா சண்டை போட்டுட்டு வாங்கிட்டுப் போயிட்டான்”

“அப்படி என்னடா அவசரம்? என்கிட்ட சொல்லாம கூட போற அளவுக்கு?”

என் குரல் கம்மியது. அவசரமாகப் பேருந்து நிலையத்துக்கு ஓடினேன். தேடிப் பார்த்தேன். அவன் அங்கு இல்லை. இல்லாதபோது இளவரசன் இன்னும் நெருக்கமாகத் தோன்றினான். ஜேக்கப் என் தோள் மீது ஆதரவாகக் கை வைத்தான்.

“என்னமோ அவன்கிட்டே சரியில்லடா. வீட்டுல போய் இருந்துட்டு வரட்டும். அவன் நினைச்சா மூணு செமஸ்டர் ஒண்ணா எழுதிக்கூட பாஸ் பண்ண முடியும். எக்சாம் எல்லாம் ஒரு பிரச்னையே இல்ல அவனுக்கு”

எனக்கு சமாதானமாகவில்லை. எதிலும் மனம் ஒட்டவில்லை. அடுத்த நாள் அவன் வீட்டுக்கு போன் அடித்தேன். அவன்தான் எடுத்தான்.

“வீட்ல எல்லாம் சொல்லிட்டேன்டா. அப்பா எதுவும் திட்டலை. கொஞ்ச நாள் காலேஜ்ல இருந்து தள்ளி இருக்கலாம்னு வந்திருக்கேன். அதனால இனிமே வீட்டுக்கு போன் பண்ணாதடா. நான் அங்க வந்துட்டு பேசறேன்… சாரிடா” என்றான். ஓரளவு தெம்பாக இருக்கிறானென்று தோன்றியது. நிஷா பற்றிப் பேசும் முன்பாக வைத்துவிட்டான்.

தேர்வுகள், விடுமுறை என்று நாட்கள் ஓடின. மீண்டும் அனைவரும் அடுத்த செமஸ்டரைத் தொடங்க விடுமுறை முடிந்து திரும்பியபோது இளவரசன் வரவில்லை. ஓரிரு வாரங்கள் பார்த்துவிட்டு அழைத்தபோது அவன் அப்பா எடுத்தார்.

“அவன் இப்ப பேசற நிலைமைல இல்லைப்பா. யார் கூடவும் பேசறது இல்லை. சொல்லிப் பாத்துட்டு விட்டுட்டோம்”

அடுத்த சில வாரங்களில் நிஷா, தேர்வுகள், நிஷா, அடுத்த டிசைன் ப்ராஜக்ட், நிஷா, சினிமா, பெங்களூர் என்று என் நாட்கள் நிறைந்து இளவரசன் கொஞ்சம் பின்னணிக்குப் போய்விட்டான். அந்த செமஸ்டர் முடியவிருந்த ஒரு நாளில் திடீரென்று இளவரசன் தன் அப்பாவுடன் வந்திருந்தான். அவன் அப்பா ஹெச்ஓடியுடன் பேசி தேர்வு எழுத ஸ்பெஷல் அனுமதி வாங்க வந்திருந்தார். ஏதோ ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டோம். இளவரசன் அவன் அப்பாவுடன் ஓட்டலில் தங்கிக் கொண்டு தினமும் வந்து தேர்வு எழுதினான்.

உடம்பு பெருந்திருந்தான். அவனிடம் இருந்த குழந்தைத் தன்மை தொலைந்திருந்தது. நான் பேசப் போனபோதெல்லாம் ஓரிரு வார்த்தைகளுடன் அவசரமாக கண்கலைத் தவிர்த்து விலகிவிட்டான். கடைசித் தேர்வு முடிந்த அன்றே கிளம்பிவிட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

கடைசித் தேர்வு முடிந்த அன்றே கிளம்பிவிட்டான். யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

கல்லூரி முடிந்ததும் அனைவரும் வெவ்வேறு திசைகளில் பறந்துவிட்டோம். நான் ஒரு வேலை கிடைத்து இரண்டு ஆண்டுகளாக பெங்களூர் வாசியாகியிருந்தேன். நிஷா சிங்கப்பூரில் திருமணம் முடிந்து செட்டில் ஆகியிருந்தாள். இளவரசனின் கணிப்புப்படி இப்போது நாங்கள் நல்ல நண்பர்களாக மட்டும் இருந்தோம். தன் குழந்தையின் படத்தை பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தாள்.

ஒரு வார இறுதியில் அலுவலகத் தோழர்களுடன் பிரிகேட்ஸ் சாலையில் சுற்றிக் கொண்டிருந்த போது தோளில் ஒரு கை விழுந்தது.

“டேய் மாப்ள” அது ஜேக்கப்.

திடீர் சந்திப்பில் இருவரும் குதூகலமாக உரையாடிக் கொண்டோம். பிஜூ சார் இப்போது கல்லூரியிலிருந்து சென்றுவிட்டார் என்பதால் அவன் உட்படப் பலரும் ஸ்டேடியம் ப்ராஜக்டை முடித்து பாஸ் செய்துவிட்டதாக சொன்னான். எனக்கு அப்போதுதான் இளவரசன் நினைவு வந்தது.

“இளவரசன் என்னடா செஞ்சான்?”

நான் இதைக் கேட்டதும் ஜேக்கப் முகம் மாறியது. தடுமாறி பிறகு குரலைத் தணித்து சொன்னான்.

“உனக்குத் தெரியாதாடா? அவன் சூசைடு பண்ணிக்கிட்டான்”

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

“ஒளறாதடா”

“பொன்ராஜூம் நானும் நாலு மாசம் முந்தி அவன் வீட்டுக்குப் போனோம்டா. அப்பதான் எங்களுக்கே தெரிஞ்சது. மேத்ஸ், ஸ்பேஸ் அது இதுன்னு ஏதோ லெட்டர் எழுதி வெச்சிருக்கான். அவன் அப்பா காட்டினாரு. பாவம்டா”

ஒரே அறையில் தங்கி உரையாடி, சண்டையிட்டுக் கிடந்த ஒரு ஆன்மா திடீரென்று இல்லை என்பது காலடியில் இருந்த நிலம் உருவப்பட்டது போன்ற உணர்வைத் தந்தது. அது எனக்குத் தெரியவே இல்லை என்பது இன்னும் தாள முடியவில்லை.

அன்று இரவு நன்றாகக் குடித்துவிட்டு நிஷாவுக்கு ஐஎஸ்டியில் அழைத்துப் பேசினேன். நான் எப்போதாவது இப்படி செலவு செய்து அழைத்தால் ஒன்று குடித்திருப்பேன் அல்லது ஏதாவது முக்கியமான உரையாடலுக்காக இருக்கும் என்று அவள் அறிவாள். செய்தியைச் சொன்னதும் சில நொடிகள் அந்தப் பக்கமிருந்து சத்தம் இல்லை. குழந்தை மெலிதாகச் சிணுங்கும் ஓசை கேட்டது. அதை ஸ்ஸோ ஸ்ஸோ என்று ஆசுவாசப்படுத்தினாள்.

பிறகு “சாரிடா…” என்றாள் மெல்லிய குரலில்.

“அவன் என்னென்னமோ தத்துவம் பேசுவானேடா… அவனுக்கு எல்லாமே தெரியும்னுதான் நான் நினைச்சிருந்தேன். அவன் எப்படிடா?”

“அவனுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு நிஷா. ஆனா ஒரு தோல்வி எப்படியிருக்கும்னு தெரியலை. எல்லாத்துக்கும் மேத்ஸ்ல ஒரு சொல்யூஷன் இருக்குன்னு சொன்னவனுக்கு தோல்வியை ஜெயிக்க என்ன ஃபார்முலான்னு கண்டுபிடிக்க முடியலை. அது ரொம்ப சிம்பிள்னு அவனுக்குத் தெரியலை” என் குரல் உடைந்தது.

“உனக்குதான் அவன் ரொம்ப க்ளோஸ் இல்ல…?” என்றாள்.

சில நொடிகள் அமைதியாக இருந்தேன். எனக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. ஏதோ ஒரு புள்ளியில் என்னை அவனும் அவனை நானும் தவறவிட்டிருக்கிறோம்.

“நாளைக்கு ஹட்கோ போலாம்னு இருக்கேன்” என்றேன்.

மறுநாள் அலுவலகத்துக்கு விடுப்பு சொல்லிவிட்டு மதியம் போல் கிளம்பி நான் இளவரசனோடு எப்போதும் அமரும் அந்தக் குன்றின் உச்சிக்கு வரும்போது மாலையாகியிருந்தது. இப்போது ஹட்கோவைச் சுற்றிலும் இன்னும் பல குடியிருப்புகள், வீடுகள் முளைத்திருந்தன. நகர வளர்ச்சியால் மனிதர்களைப் போலவே ஹட்கோவும் தன் தனிமையை இழந்திருந்தது. சூரியன் அதே ஏரியில் எப்போதும் போலவே இறங்கிக் கொண்டிருந்தது. இளவரசன் எப்போதும் அமரும் பாறை காலியாக இருந்தது. ஒரு நொடி தயங்கிவிட்டு அவன் இடத்தில் அமர்ந்து வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அது எல்லையற்று விரிந்திருந்தது.

***

ஷான் - கவிதை, நாவல், அறிவியல் கட்டுரைகள், திரைக்கதை என பல்துறையில் இயங்கும் இவர்.. ஒரு தனியார் இணைய வழிக்கற்றல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகத்திலும் இருக்கிறார். அவரது “வெட்டாட்டம்”, “பொன்னி” ஆகிய நாவல்கள் சமீபத்தில் பெரிதும் கவனிக்கப்பட்டவை. தொடர்புக்கு - shan.mugavari@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular