Monday, September 9, 2024
Homesliderஇலட்சத்தில் ஒரு காதல் கதை

இலட்சத்தில் ஒரு காதல் கதை

பிரபாகரன் சண்முகநாதன்

கதாபதிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. துக்கத்தினாலோ துயரத்தினாலோ பொது அங்காடியில் வரிசையில் காத்திருந்தும் கோதுமை கிடைக்காததாலோ வந்த அழுகை அல்ல இது. குளிர்ந்த நுரைத்திரவம் கிட்டவில்லை என்று கூட அழுதிருக்கிறான். ஆனால் இது அப்படியான அழுகை அல்ல. புதுவிதமாக இந்த அழுகையின் உணர்வு தோன்றவும், அம்மா செய்து வைத்திருந்த கேசரியை அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு, அவசரமாகத்தானே ஒழிய அளவாக இல்லை. சப்பாத்திக்கும் குருமாவுக்கும் என்ன பொருத்தம் என புறங்கையை நக்கி முடிக்கும் வரை யோசித்திருந்ததை மறந்துவிட்டு வெளியே புறப்பட்டு சென்றான்.

காத்திருக்கச் சொல்லிய இடத்திற்கு இருபது நிமிடங்கள் முன்பே வந்து விட்டான். நகரின் பொதுவான இடம் தான் என்றாலும் அன்றைக்கு கூட்டமில்லை. இளநீர் வெட்டிக் கொண்டிருந்த அண்ணனும், கண்களை இறுக்க மூடிப் படுத்திருந்த வயதானவரையும் தவிர்த்து விட்டால் அவன் மட்டுமே அந்த  இடத்தில் நின்றான். பேருந்து நிலைய வளாகத்தைச் சுற்றி செல்லும் அந்த நடைபாதை ஒன்றோடு ஒன்று பொருந்திக் கொள்ளும்  வண்ணக் கற்களினால் கட்டப்பட்டிருந்தது. அதன் மையத்தில் நிற்பது ஒரு மாதிரியாக தோன்றியபடியால் மரத்தின் அருகே தன்னையும் ஒரு மரமாக நினைத்துக் கொண்டு நின்றுவிட்டான்.

கதாபதிக்கு இளநீர் குடிக்க ஆசை வந்தது. ஆசை என்றில்லை தாகம். வேண்டாம் என்று சட்டென்று முடிவு எடுத்தான். குடித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வந்துவிட்டால் தன்னை ஏதாவது நினைத்துவிடுவாள் என்று பயந்து அந்த முடிவுக்கு வந்தான். அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது தன்னால் இவ்வளவு விரைவாக முடிவு எடுக்க முடியுமா என்று. முதல் முறை தன்னை ஒரு பெண் பார்க்க வருகிறாளே என்பதற்குத்தான் அந்த அழுகை. இந்த வாய்ப்பைத் தவறவே விடக்கூடாது என எண்ணிக் கொண்டான்.

மணியைப் பார்த்தான். இந்த நேரத்திற்கு என அவள் சொல்லிய நேரம் வருவதற்கு இன்னும் ஏழு நிமிடங்கள் இருந்தன. அவள் என்ன பல்லவன் விரைவு வண்டியா சொன்ன நேரத்திற்குச் சரியாக வர. இருப்பினும் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது அவனுக்கு. பெண்கள் சொன்ன வாக்கைக் காப்பார்கள் என்று.

டியோ விநா_ ய்க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவன் தான் பேஸ்புக் இல் அக்கௌன்ட் திறந்து கொடுத்தது. பேஸ்புக் இல்லையென்றால் இந்த சந்திப்பு இல்லை.

விநாயகமூர்த்தி இந்தப் பேர் தான் அந்த நிலைக்கு ஆளாகி இருந்தது. அதே வளவில் குடியிருக்கும், அவன் அக்கா என்று வாஞ்சையாக அழைக்கும் அழகம்மையின்  பையன். பத்தாவது தேற மாட்டான் என்று இருந்தவனை கொரோனா வந்து பாஸாக்கி விட்டது. அது என்னடா டியோ என்றால் அந்த வண்டியைத்தான் ஒருநாள் வாங்கப் போவதாகவும் அந்த ஆசையிலேயே இந்தப் பெயரை வைத்துக்கொண்டு சுற்றுவதாகவும் சொல்லிக்கொண்டு திரிந்தான் டிவிஎஸ் எக்ஸெலில். தான் கூட தன் பெயரை ஆடி கதாபதி என மாற்றிக் கொள்ளலாமா என தீவிரமாக யோசித்தான் கதாபதி.

வேலைக்குச் செல்லும் நிறுவனம் மூடியிருந்த காலத்துல, அழகம்மையின் வேண்டுகோளுக்காக விநா_ய்க்கை மாலை நேரங்களில் தன் வீட்டுக்கு அழைத்து கதைகள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். பழைய ராமாயணம் தான். ராமாயணம் அவன் அப்பத்தா இருக்கும் வரை அவனுக்கு சொல்லிக் கொடுத்தது. இந்த பெயரைக் கூட அப்பத்தா தான் வைத்தது. என்னவோ கதாபதிக்கு கதை சொல்ல மட்டும் அழகாக வந்தது. பள்ளிக்கூடத்தில் தாமதமாக சென்று ஆசிரியரிடம் திட்டு வாங்காமல் தப்பிப்பதற்காக கதை சொல்லத் தொடங்கியது. அதற்காக செல்லப்பன் வாத்தியாருக்கு இப்போதும் கடமைப்பட்டு இருக்கான் கதாபதி.

விநா_ய், “மாமா நீ இவ்வளவு அழகா கதை சொல்றீல. இப்படி என் கிட்ட சொல்லி அறுக்காம அதை பேஸ்புக்கில் சொன்னால் இலட்சக்கணக்கான பேர் கேப்பாங்க”. நட்சத்திரம் ஆகும் கனவு அப்போது தான் அவனுக்கு எட்டிப்பார்க்கத் தொடங்கியது.

அவனுடைய பெயரில் ஒரு எழுத்து ஆதாரில் தப்பாக இருப்பது, பேஸ்புக்கில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதுல என்பதை ஒருமுறை கேட்டு உறுதி செய்துகொண்டே பேஸ்புக் கணக்கு திறப்பதற்கு சம்மதித்தான்.

ஒரு வாரத்தில் கேட்பவர்களின் எண்ணிக்கை பதினேழு என்பதில் இருந்து அறுபத்து ஆறு வரை வளர்ந்தது இன்னும் நம்பிக்கையை அளித்தது. அப்போது தான் அவளிடமிருந்து குறுஞ்செய்திகள் வரத் தொடங்கியது.

பேன் கேர்ள் என்பதில் தொடங்கிய அறிமுகம் இன்னும் ஆழமாக வளர்ந்து கொண்டே சென்றது. ஆழமாக என்றால் அவள் டல்கோனா காபிக்காக பால் கொதிக்க வைக்கும் போது கையில் சுட்டுக் கொண்டது என்பதையெல்லாம் பரிமாறிக் கொள்ளுமளவுக்கு ஆழமாகத் தொடங்கியது. இவன் தன்னுடைய எல்லா அறிவையும் பயன்படுத்தி கோல்கேட் பேஸ்ட் இருந்தா சுட்ட இடத்தில் போட்டுக் கொள்ளவும் என்கிற மருத்துவக் குறிப்பில் இருந்து அவள் இவனை நேசிக்கத் தொடங்கிவிட்டதாக இவன் கற்பனை செய்துக் கொண்டான். ஆனால் பிடியே கொடுக்காமல் அவள் பேசுவதாகத் தோன்றவும் என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க பழனியப்பனைக் கூப்பிட்டான். யோசனைக்குக் கூலியாக மீன்கொத்தி இரண்டு போத்தல்களும், சுட்ட கோழி அரை கிலோவுக்கும் செலவு செய்ய வேண்டி இருந்தது.

“நேரில் பார்க்க கூப்பிடு மச்சா. பொம்பளைப் பிள்ளைகளுக்கு ஒருத்தன பிடிச்சுருச்சுன்னா அவங்க உடனே சொல்லிட மாட்டாங்க. நாம சொல்லணும்னு நினைக்கும்க” அதன் பிறகு அவன் பேசிய எதுவும் இந்த கதைக்கு தேவையில்லை என கதாபதியே கேட்டுக்கொண்டதால் நானும் தவிர்த்து விடுகிறேன். பழனியப்பன் மினி பேருந்தில் நடத்துனர். கண்ணன் பஸாரில் காலையில் வதவதவென இறங்கும் பிள்ளைகளின் கூட்டத்தில் அவனும் தென்படுவதால் நண்பர்கள் மத்தியில் அவனுக்கு விளையாட்டுப்பையன் என்கிற தோற்றம் உருக்கொண்டு விட்டது. அவனுக்கு மட்டுமே தெரியும் அதே பேருந்தில் அவன் வாங்கிய காலணிகளின் வீச்சுகள்.

நேரில் பார்க்க அவள் வருவதை யோசிக்கும் போதே மனசு மேலே பறந்தது. பேஸ்புக்கில் இனி கதைகளோடு கவிதைகளையும் சொல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டான். கானாடுகாத்தானில் இருந்து கருத்துகளை இடும் சோனா கானா அண்ணாமலை அய்யா ‘அருமை! நல்ல கருத்துரை! என்றும் வாழ்க வளமுடன்’ என்பதை தான் யோசிக்கும் போதே தட்டச்சு செய்ய தொடங்கிவிடுவார் என இவன் நினைத்துக் கொள்வான். 

இன்னும் அவளைக் காணவில்லை. ஏதும் நிகழ்ந்திருக்குமோ வரும் வழியில். இப்படித் தப்பா யோசிக்கிற வேளையில் முத்துமாரியம்மனை மனதால் வேண்டிக் கொள்வான் கதாபதி.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. அவளது உள்பெட்டிக்கு சென்று கடைசியாக உள்நுழைந்த நேரத்தைப் பார்த்தான். நேற்று இரவு பன்னிரண்டு பத்து என்று இருந்தது.

கிளம்பியிருப்பாளா இல்லையா யோசிக்க யோசிக்க களைப்பாகியது. யோசிக்காமலேயே இளநீர் வெட்டச் சொன்னான். அவள் இன்னும் வந்திருக்கவில்லை. இல்லை தன்னை சோதனையிடுகிறாளா. முன்னப்பின்ன பெண்களிடம் பேசியிருந்தால் தெரியும்.

இப்போது அனிச்சையாக அவள் இந்த இடத்திற்கு வந்துவிட்டாள் என்று தோன்றவும் திரும்பிப் பார்த்தான். ஒரு ஸ்கூட்டியில் இருந்து அழகான ஒரு பெண் இறங்கி இளநீர்க் கடைக்கு வந்தாள். ரோஸ் நிற சுடிதார். கொஞ்சம் உயரம் குறைவு. அழகான முகம். மூக்குத்தி கண்ணைப் பறித்தது. ஒல்லியா இருந்திருந்தா ஸ்ரீதிவ்யாவை தோற்கடித்து விடக் கூடிய அழகு. அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்த இளநீர் கடைக்காரர் அவள் குரல் கேட்டுத் திரும்பினார்.

‘அண்ணே, இளநீ எவ்வளவு’

கதாபதிக்கு ஏமாற்றமாக இருந்தது. இளநீர் கடைக்காரர் நமட்டு சிரிப்பு சிரிப்பதாக தோன்றவும் அங்கிருந்து நகர்ந்தான்.

முதுகில் யாரோ கை வைப்பதாகத் தோன்றவும் திடுக்கிட்டுத் திரும்பிய கதாபதியைப் பார்த்தவாறே நின்று கொண்டிருந்தார் டிஷர்ட் அணிந்திருந்த வாலிபர். கதாபதியை விட அவர்  பதட்டமாக இருந்ததால் கதாபதி ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது. தன்னை கதாபதியின் விசிறி என அறிமுகம் செய்து கொண்டவருக்கு பெருந்தன்மையாக ஏதாவது வாங்கித் தர நினைத்தவன் இளநீர் கடைக்காரர் சிரிப்பு நினைவுக்கு வரவும் அந்த ஆசையைக் கைவிட்டான்.

டிஷர்ட்டை வழியனுப்பி வைக்கும் போது, அவனுடன் எடுத்துக் கொண்ட செல்பியைத் தனக்கும் அனுப்புமாறு கேட்டுக் கொண்டான். பெயர் என்னவென்று கேட்கவில்லை. தானும் பிரபலம் தான் போல எனக் கண்ணீர் சிந்த நினைத்தவன் அவள் வராததற்கும் கண்ணீர் உகுக்க வேண்டும் என்பதால், எதற்கு கண்ணீரை செலவழிப்பது என குழம்பியதால் சிக்கனம் செய்யும் முடிவுக்கு சென்றுவிட்டான்.

காத்திருப்பது பலனளிக்காது என்று வீட்டுக்குப் புறப்பட்டான். எலும்பு குழம்பும் மட்டன் தெறக்கலும் பிற்பகல் திண்ணையில் சாய்வை வேண்டியது. எழுந்த போது செல்பேசியைக் கையில் எடுத்தான். அவள் ஏதாவது அனுப்பியிருக்க கூடும் என்ற ஆசையில் உள்பெட்டிக்கு சென்ற போது அந்த வாலிபருடன் எடுத்த செல்பி வந்திருந்தது. அவனுக்கும் இவளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா. தன்னுடைய குணத்தை தெரிந்துக் கொள்வதற்காக வேவு பார்க்கச் சொல்லி அனுப்பி இருப்பாளோ.

“மகிழ்ச்சியான சந்திப்பு. என்னுடைய புகைப்படத்தை இப்போது தான் முதல்முறையாக பகிர்கிறேன். அன்புகள் கதாபதி ப்ரோ”

அவளுடைய நிலைத்தகவலை சென்று பார்த்த பின் அவள் கிடையாது அவன் என்கிற முடிவுக்கு வந்தான் கதாபதி. இவ்வளவு நாளா ஒரு பையன் கிட்டயா பொண்ணுன்னு நினைச்சு வழிஞ்சுட்டு இருந்தோம் என யோசிக்கும் போதே கதாபதிக்கு மண்டை வலிப்பதைப் போல் இருந்தது.

மனசைக் குடைந்துக் கொண்டிருந்த விஷயத்தைத் தீர்க்கும் பொருட்டு குபேரமூர்த்தியை அழைத்து, குபேரமூர்த்தி விநாயகமூர்த்தியின் தம்பி. இவன் ஆறாவது தான் படிக்கிறான். பின்னாடி காலத்துல டியோவையோ, ஏரோப்ளேனையோ பேருக்கு முன்னாடி சேர்த்துக்குவான் போல.

“டேய், இந்த ப்ரோ-னா என்னடா அர்த்தம்”

“இது கூட தெரியாமல் இருக்கீங்களே அண்ணே. அண்ணனையோ தம்பியையோ இங்கிலீஷ்ல ப்ரோனு தான் கூப்பிடுவாங்க”

கதாபதிக்கு தூக்கிவாரி போட்டது. ப்ரோனா என்னனு முதல்தடவை கேட்டதுக்கு விநா_ய் சொன்ன பதிலை நினைத்துப் பார்த்தான்.

“லவ் பண்றவங்க ப்ரோனு கூப்பிடுவாங்க அண்ணே. ராஜா ராணி படம் பார்த்ததில்லை. அதுல கூட நஸ்ரியா ஆர்யாவைப் ப்ரோனு தான்னு கூப்பிடுவாங்க”

கதாபதிக்கு அந்தப் படம் பார்த்த நியாபகம் இருந்தது. குண்டுப்பய ஒரு வார்த்தைல கவுத்துவிட்டுட்டுப் போயிட்டானே. அது கூடப் பரவாயில்லை. அத்தனை ஆசையோடு பதிலுக்கு பதில் தானும் ப்ரோ என அனுப்பியதை யோசித்தால் விநா_ய் மேல கொலைவெறி… (மன்னிக்கவும் கதாபதி இடையிட்டு நாய் என்று மட்டும் எழுத சொல்கிறார்) வருது கதாபதிக்கு. ஆனா அந்த படத்துல நஸ்ரியா ஏன் ஆர்யாவைப் ப்ரோனு கூப்பிடணும் என்கிற சந்தேகம் தீராத கேள்வியாக மனசுல பதிந்துவிட்டது. யாரிடமும் இனி சந்தேகம் கேட்கப் போவதில்லை என மூன்றாவது முறையாக சட்டென்று முடிவு எடுத்துவிட்டான்.

வெந்த இட்லியும் மதியம் மிஞ்சுன எலும்பு குழம்பும் வளவுக்குள் தன்னை அழைப்பதாக தோன்றவும் கதாபதி கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெறும் மேலைத் தடவிக் கொடுத்தவாறே உள்ளே எழுந்து சென்றார். கதாபதிக்கு அழுகை வருவது போல இருந்தது.

***

பிரபாகரன் சண்முகநாதன் காரைக்குடியைச் சேர்ந்த இவர். விகடன் மாணவர் பத்திரிக்கையாளராக பணியாற்றியுள்ளார். இவரது மின்னஞ்சல் முகவரி – arivar1999@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular