நேர்கண்டவர் – அகரமுதல்வன்
எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார் எனது முன்னோடிகளில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் என்னை வெகுவாக ஆட்கொண்டன. இரண்டாயிரங்களுக்கு பின்னரான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தவிர்க்கமுடியாத எழுத்துக்களுக்கு உரித்தானவர். இன்றைக்கு வாசிப்புக்குள் நுழையும் இளைய தலைமுறையினரால் அதிகமாக வாசிக்கப்படும் இளம் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார். இவரின் சிறுகதைகளைக் கடந்து நாவல்கள் பெருமளவில் வாசிக்கப்படுகின்றன. முதல் நாவலான “உப்புநாய்கள்” நாவல் இவருக்கு பெரிய வாசகத்தளத்தை ஏற்படுத்தியது எனலாம். “கானகன்” நாவல் இளம் படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருதினைப் பெற்றது. அந்த விருதினை மெரினா போராட்டத்திற்கு ஆதரவாக திருப்பியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியம், எழுத்துச் செயற்பாடு போன்றவற்றில் தீவிரத்தன்மை கொண்டவர் நீங்கள். இன்றைக்கு நீங்கள் எழுத வந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இதுவரையிலுமான இந்தப் பயணத்தை ஒரு படைப்பாளியாக எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கூற முடியுமா?
இலக்கியம் ஒரு அடையாளத்தைத் தந்திருப்பதாக மட்டும் சுருக்கிச் சொல்லிவிட முடியாது. துயரங்களுக்குப் பழகிக் கொள்வதற்கும் அதனூடே வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வதற்குமான ஒரு மனநிலையை வாசிப்பும் எழுத்தும் உருவாக்கியிருக்கிறது. மகிழ்ச்சி என்பது ஒரு தற்காலிகமான விருந்தினர் என்பதைத் தாண்டி இதுவரையிலான என் வாழ்வில் அதற்குப் பெரியதொரு பங்களிப்பில்லை. சில உயிர்கள் சபிக்கப்பட்டவை. துயரங்களிலும் அவமானங்களிலும் ஏமாற்றங்களிலும் உழன்று தன்னை ஏதாவதொரு வழியில் மேன்மைப்படுத்திக் கொள்ள போராடுவதைக் காலம் முழுக்கச் செய்து தோற்கும் அந்த உயிர்களில் ஒருவனாக மட்டுமே இப்போது நான் எனக்குத் தெரிகிறேன். யோசித்துப் பார்த்தால் நானென்பது துயரங்களின் மலைக்குவியல். இந்த வேதனைகளின் வடுக்களுக்கு ஆறுதலாயிருப்பது இலக்கியம். இன்னொரு வகையில் சொல்வதானால் எழுத்தின் நிழலில் தான் ஆறுதலாக இளைப்பாற முடிந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்வு ஒருபோதும் என்னை கசப்புகளிலிருந்து விடுவிக்காது என்றாலும் இன்னும் சில காலங்களுக்கு இந்த வாழ்வைப் பற்றிக்கொள்ள எனக்கு இலக்கியம் போதுமானது. எந்தவொன்றும் முழுமையானதல்ல, எந்தவொன்றும் நம்பிக்கைக்குரியதல்ல, எந்த உயிரும் நிரந்தரமானதல்ல என்றானால் உயிர் வாழ்கிற காலத்தில் கலையின் மீதான பற்று ஒன்றே மேன்மையானதென்கிற புரிதலைத்தான் அனுபவம் கற்றுக் கொடுத்திருக்கிறது.
உங்களுடைய நாவல்களில் “கானகன்” முக்கியமான பிரதி. ஆனால் அது உங்கள் புனைவு உலகின் பொதுவான அடையாளங்களிலிருந்து விலகியிருந்ததென நம்புகிறேன். ஒரு படைப்பாளனுக்குரிய சவாலாக அதனை முயற்சித்துப் பார்த்தீர்களா?
ஒரு எழுத்தாளன் எல்லா வகைமைகளிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டுமென்பது என் அபிமானம். மேலும் இந்த எழுத்தாளரின் கதைகள் இப்படித்தானிருக்கும் என்ற ஒற்றைப் புள்ளியில் சுருக்கிக் கொள்கிறவனாக என்னாலிருக்க முடியாது. எனக்கு மிக நன்றாய்த் தெரிந்த ஒன்றை எழுதுவதை விட தெரியாத ஒன்றை எழுதுவதற்கு மெனக்கெடும் போதுதான் என் கற்பனையுலகு விரிவு கொள்கிறது. புனைவெழுத்தாளன் தன் கற்பனையின் எல்லைகளை சிறிதாக்கிக் கொள்வது ஆரோக்கியமானதல்ல. புனைவெழுத்தின் மீதான மயக்கத்திற்குக் காரணம் எல்லையற்ற கற்பனை தரும் இன்பம் தான். ஒவ்வொரு மனிதனின் கற்பனையிலும் ஒரு காடுள்ளது, ஒரு கடலுள்ளது, மலைகளும் தோட்டங்களும் பிரத்யேகமாக அவர்களின் அனுபவ அறிவிலிருந்தும் காட்சி ஊடகங்களின் வழியாகவும் சேர்மானமாகியுள்ளன. புத்தகங்களின் வழியாய் அவர்கள் அந்தக் காட்டை, அந்த மலையை, அந்தக் கடலைத்தான் தேடுகிறார்கள். அவர்கள் கற்பனையிலில்லாத ஒரு உலகைப் படைப்பதே கானகனை எழுதும்போது என் முன்னாலிருந்த சவால். மனிதர்களின் வழியாய்க் காட்டையும், காட்டின் வழியாய் மனிதர்களையும் ஊடுருவிச் செல்லும் ஒரு அனுபவத்தின் வெளிப்பாடே அந்த நாவல். கானகன் எழுதுவதற்காக மேற்கொண்ட பயணங்கள், சந்தித்த மனிதர்கள் நாவலின் உருவாக்கத்தில் மட்டுமல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்வைப் புரிந்து கொள்ளவும் உதவியாய் இருந்திருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவைகளை எளிமையாய் வைத்துக்கொள்ள வேண்டுமென்கிற புரிதலுக்கு நான் வருவதற்கு ஒரு பழங்குடி மனிதரின் அனுபவம் துணையாய் இருந்திருக்கிறது. நான் இன்னொருவரின் வாழ்விலிருந்து தெரிந்து கொண்டதை என் கதைகளில் வெளிப்படுத்துகிறேன். ஒருவகையில் வாழ்க்கைக் குறித்த அபிப்பிராயங்களையும், அறங்களையும், நாவல்களிலும், கதைகளிலும் ஏதோவொரு இடத்தில் குறிப்பிடுவது வாசகனுக்காக மட்டுமல்ல, எனக்காகவும் தான்.
உங்களுடைய படைப்புலகின் பின்னணிக்கு பொதுத்தன்மை கிடையாது. உங்கள் சிறுகதைகள் பல பின்னணிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஒரு எழுத்தாளன் ஒரே பின்னணியை மட்டுமே எழுதுவது என்பது பலவீனமானதா என்ன! அ.மாதவனின் கடைத்தெருக் கதைகளோ, வேலராம மூர்த்தியின் சிறுகதைகளோ அப்படி பலவீனமானதாகவோ சுருக்கிக் கொண்டதாகவோ இல்லையே, இவர்களின் ஒவ்வொரு கதையும் வாசகனுக்கு விரிவை ஏற்படுத்துகிறதல்லவா?
ஒவ்வொரு எழுத்தாளனும் ஒவ்வொரு விதமாக இந்த உலகை அணுகுகிறார்கள். நான் ஒரே இடத்தில் நிலைத்திருப்பதை விரும்பாதவன் என்பதால் நிறைய புதிய மனிதர்களை சந்திக்கக் கூடியவனாகவும், புதிய அனுபவங்களுக்கு ஆட்படுகிறவனாகவும் இருக்கிறேன். ஒருவகையில் இது என் தேர்வு. இதனாலேயேதான் என் கதைகளும் வெவ்வேறு நிலங்களின் பின்னணியில் நிகழ்கின்றவையாய் இருக்கின்றன. ஒரே பின்னணியில் கதைகள் எழுதுவதை பலவீனமானதில்லை, என் இயல்பிற்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிடவே விரும்புகிறேன். நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஆ. மாதவன் ஒரு சின்னஞ்சிறிய உலகத்தைச் சுற்றியே எழுதியிருந்தாலும் அந்த உலகத்திற்குள் இருந்த மனிதர்களை வேறு எவரும் நெருங்கிச் சென்று பார்க்க முடியாத நுட்பத்தோடு அணுகியிருந்தார். ஒரே கடைத்தெருவின் வெவ்வேறு முகங்களைக் காட்சிப்படுத்தக்கூடிய வல்லமை அவருக்குண்டு. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமானதா என்றால் நிச்சயமாக இல்லை. மேலும் வேல ராமமூர்த்தியின் கதைகள் ஒரே பின்னணியில் எழுதப்பட்டதாக நான் கருதவில்லை. ஒரே நிலத்தை மீண்டும் மீண்டும் எழுதினாலும் அவரது கதைகளின் உலகு வெவ்வேறான எல்லைகளுக்குள்பயணிப்பதாகவே இருக்கிறது. அவரால் அன்னமயில் மாதிரியான ஒரு கதையையும் எழுதமுடியும், கோட்டைக்கிணறு மாதிரியான கதையையும் எழுத முடியும். அவரது அனேக கதைகளும் நாடகீயமானதொரு முடிவை நோக்கி நகர்வதால் அந்தக் கதைகள் ஒரே தன்மை கொண்டதாய் நமக்குத் தோன்றலாம், ஆனால் அது உண்மையல்ல.
சமகால சிறுகதைகளில் யதார்த்தவாத எழுத்துக்களே நிரம்பி வழிகின்றன. தமிழில் மாய யதார்த்தவாதச் சிறுகதைகள் அளவில் குறைவெனத் தோன்றுகிறது. அதன் காரணமாக எதனைக் கருதுகிறீர்கள்?
ஊடகங்கள் குறைவாயிருந்தபோது உரையாடுவதற்கான அவகாசமும் தேடல்களும் நிறைய இருந்தன. ஊடகங்கள் அதிகரித்தபின் இரைச்சல்கள் அதிகரித்து கோட்பாட்டு ரீதியிலான ஆரோக்கியமான உரையாடல்கள் அருகிப்போனதை இதற்கொரு காரணமாய்க் குறிப்பிடத் தோன்றுகிறது. புதியவகைக் கதைகள் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் முயற்சித்துப் பார்க்கப்பட்டதற்கு தமிழின் கோட்பாட்டாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மிக முக்கியமான பங்குண்டு. சிற்றிதழ்கள் ஒரு இயக்கமாக செயல்பட்டதை இவ்விடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். ’நடை’ ‘கசடதபற’ ‘அஃக்’, ‘ழ’ ‘எழுத்து’ கல்குதிரை, நிறப்பிரிகை, அட்சரம், புது எழுத்து என ஏராளமான சிற்றிதழ்களை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். புனைவெழுத்தாளர்கள் இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டவர்கள். தமிழின் மிகச்சிறந்த புனைவெழுத்தாளர்கள் சிற்றிதழ்களின் வழியாகவே வளர்ந்து வந்தவர்களாய் இருக்கிறார்கள். முக்கியமாய் புதுவகைக் கதைகளைத் திறம்பட எழுதியவர்களைச் சொல்லலாம். இந்தச் சிற்றிதழ்கள் நடத்துவதற்காக அதை நடத்தியவர்கள் இழந்தவை அதிகம், ஆனால் தன் மொழிக்கு தன்னாலான ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்கிற பிடிவாதம் மட்டுமே அவர்களை இயங்கச் செய்தது. அந்தப் பிடிவாதங்களும் கலையின் மீதான நம்பிக்கைகளும் இந்தத் தலைமுறையினரிடம் சரியத் துவங்கியிருப்பதாக நினைக்கிறேன். நாம் கேளிக்கையைச் சுற்றி எல்லாக் கலைகளையும் நகர்த்திக் கொண்டிருக்கிறோம். கலையை அந்தந்த நேரத்திற்கான களிப்பாய் மாற்றிவிட்டதாலேயே எந்தவொன்றையும் ஆழ்ந்து கற்பதற்கான பொறுமையற்றவர்களாக மாறிவிட்டிருக்கிறோம். அதற்காக யதார்த்தவாதக் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. தமிழில் அந்தவகைக் கதைகளிலும் அசாத்தியமான சாதனைகளைச் செய்தவர்கள் அனேகமுண்டு. இன்றைக்கு எழுதுப்படுகிற கதைகளில் நிதானம் இல்லை என்பதுதான் பெருங்குறையாகத் தோன்றுகிறது.
கே: நீங்கள் கூறும் “நிதானம்” எனும் சொல்லை எந்தப் பொருளில் விளங்கிக்கொள்ள வேண்டும்?
ப: சமீபமாய் எழுதப்படும் கதைகளில் அனேகம் தட்டையான நிகழ்வுகளின் கலவையாக மட்டுமே வெளிப்படுகின்றன. கதை நிகழும் நிலத்தையோ அந்நிலத்தின் மனிதர்களையோ ஆழ்ந்து சென்று பார்க்கும் நுட்பம் இருப்பதில்லை. ஒரு கதை எழுதுவதற்கான உந்துதல் கிடைத்ததும் எழுதத் துவங்கிவிடும் இவர்கள் அந்தக் கதையின் நுட்பத்திற்காக மெனக்கெடுவதில்லை. வண்ணநிலவனும், திலீப் குமாரும், ஆ. மாதவனும் தங்கள் கதையாடலில் இருந்த அடர்த்தியின் காரணமாகவே திரும்பத் திரும்ப வாசிக்கப்படுகிறார்கள். வண்ணநிலவனின் பலாப்பழம் ஐந்து பக்கங்களுக்குள் அடங்கிவிடக்கூடிய கதைதான், சம்பவமென்று பார்த்தாலும் புதிரானதோ மர்மமானதோ இல்லை. அந்தக் கதையின் நுட்பமும் மேன்மையும் சம்பவம் நடக்கும் சூழலினாலும் அதில் வரும் கதாபாத்திரம் எத்தனை பூஞ்சையானவன் என்பதை வெளிப்படுத்துவதினாலும்தான் உருவாகிறது. சம்பவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் வணிக எழுத்துகளில் கூட சிலசமயம் இதுபோன்ற அசாத்தியமான தருணங்கள் உருவாவதுண்டு. உதாரணத்திற்கு சுஜாதாவின் நகரம் சிறுகதை. ஒரு கதைக்கான மெனக்கெடுதலென்பது சம்பவத்தை சுவாரஸ்யமாகச் சொல்வதற்கும் அப்பால் கதை நிகழும் சின்னஞ்சிறு உலகை உயிர்ப்போடு உருவாக்குவதற்காக இருக்க வேண்டும்.
கே: கதையின் உள்ளீட்டை நேரடியாக வாசகனுக்கு அளிக்கும் வகையிலான எழுத்துக்களைத் தான் நீங்கள் தட்டையான நிகழ்வுகளின் கலவையாக வெளிப்படுகின்றன என்று விமர்சிக்கிறீர்கள் என்பது எனது புரிதல். இது சரிதானா?
ப: இல்லை. எந்த உள்ளீடுகளுமற்ற சம்பவக் கோர்வைகளாய் இருக்கின்றன என்று குறிப்பிட விரும்புகிறேன். சம்பவங்களைத் தொகுத்துக் கொடுப்பதுதான் புனைவெழுத்தாளனின் வேலையென்றால் பத்திரிக்கைகளில் துண்டுச் செய்திகளுக்கும் புனைவிற்கும் என்ன வேறுபாடு? எந்தவொரு சம்பவத்தையும் தனது வாழ்வனுபவத்தின் வழியாகவும் வாசிப்பனுவத்தின் வழியாகவும் ஒரு எழுத்தாளன் உள்வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். பார்ப்பது, படிப்பது, கேள்விப்படுவதெல்லாமே எழுதுவதற்கான கச்சாப் பொருட்கள் மட்டுமே. நான் பார்த்த சம்பவத்தை எழுதுகிற போது நான் பார்த்தது போலவே எழுதியிருந்தால் அது எனக்கான தோல்வி.
ஒரு புனைவெழுத்தாளனின் எழுத்து ஊக்கம் அவனது வாழ்வு அனுபவங்களால் மட்டுமே நிகழ்கிறதா?
நிச்சயமாக இல்லை. வாழ்வனுபவம் ஒரு தூண்டுதல் மட்டுமே. எல்லாக் கலைப் படைப்புகளும் அதைப் படைக்கிறவனின் கற்பனையின் வழியாகவே முழுமையடைகின்றன. அனுபவங்கள் வாழ்வின் மீதும், சமூகத்தின் மீதும் கேள்விகளை எழுப்பும்போது அந்தக் கேள்விகளை படைப்பாற்றலாக உருமாற்ற வாசிப்பும் கற்பனையும் அவசியமாகிறது. எப்படி நல்ல வாசிப்பு மட்டுமே ஒருவனை எழுத்துக் கலைஞனாய் மாற்றிவிடாதோ அதுபோலத்தான் அனுபவங்களும். கடலில் நீந்த வேண்டுமென்கிற லட்சியம் கொண்டவனுக்கு நீண்ட கால நீச்சல் அனுபவத்தோடு கடலைக் குறித்த அறிவும் முக்கியமில்லையா? மொழியும் கடல்தான்.
நீங்கள் எழுத்துலகிற்குள் வந்த காலகட்டம் ஆரோக்கியமானதல்லவா. நிறைய உதிரிச் சிறுபத்திரிக்கைகள், இலக்கிய உரையாடல்கள் என ஒரு கலைத்தீவிரம் சூழ்ந்திருந்திருக்கும். எழுத்தாளர் கோணங்கியுடனான பயணமே உங்களின் பொக்கிஷமென சொல்லியிருந்தீர்கள். அந்தக் காலத்தை உங்கள் நினைவில் எவ்வாறு எழுதியுள்ளீர்கள்?
ஆம் அந்தக் காலகட்டம் மிக ஆரோக்கியமானது. 2001-ம் ஆண்டு வாக்கில் சிறுபத்திரிக்கைகளுடனான அறிமுகம் கிடைத்தது. அதன்பிறகு தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட ஏராளமான குரூரங்களையும் வலிகளையும் கடந்து 2006-ம் ஆண்டு வாக்கில்தான் சிற்றிதழ் சார்ந்தவர்களோடு இயங்க முடிந்தது. மதுரையில் அந்தக் காலகட்டத்தில் ஏராளமான இலக்கிய நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்தன. கவிஞர் ஹாமிம் முஸ்தஃபாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த புதியகாற்று சிற்றிதழின் சார்பில் மதுரையில் சிறப்பான கூட்டங்களும் விவாத அரங்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. இன்னொருபுறம் யதார்த்தா ராஜன் உலகத் திரைப்படங்களைத் தொடர்ந்து திரையிட்டுக் கொண்டிருந்தார். பொத்தாம் பொதுவாக இல்லாமல் ஒவ்வொருத் திரையிடலுக்குப் பின்னாலும் ஒரு காரணமிருக்கும். ஒரு உதாரணத்திற்குச் சொல்வதென்றால் மெக்பத் எழுதப்பட்டு 150 வருடங்களானதை ஒட்டி அதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்தத் திரைப்படங்களை திரையிட்டதைச் சொல்லலாம். திரைப்படங்களை எப்படிப் பார்க்க வேண்டும்? என்ன மாதிரி திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும் என்ற புரிதலை உருவாக்கியதில் ராஜன் ஸாருக்கு மிக முக்கியமான பங்குண்டு.
இன்னொருபுறம் அப்போது த மு எ க ச-வில் நான் தொடர்ந்து இயங்கி வந்ததால் தொடர்ந்து வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உரையாடுவதற்குமான ஒரு வெளி கிடைத்துக் கொண்டிருந்தது. த மு எ க ச வின் சார்பில் நடத்தப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் பயிற்சி முகாமும் நாவல் எழுதும் பயிற்சி முகாமும் நிறையக் கற்றுக்கொள்ள உதவியாய் இருந்தன. எல்லாவற்றிலும் முக்கியமாய் சிற்றிதழ்களில் வெளியான கதைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை வெளியானபோது நிகழ்ந்த உரையாடலை இப்போதும் என்னால் மறக்க முடியாது. சிற்றிதழ்களில் ஒரு நல்ல கதையை எழுதிவிடுவது எளிமையான காரியமாய் இருந்திருக்கவில்லை. கதைகளின் மீதான விவாதங்கள் வயதைக் கடந்த நட்புகளை உருவாக்கியது. 2005-ம் ஆண்டு வாக்கில் ஊரிலிருந்து வெளியேறி அலையத் துவங்கியபோது க.சீ. சிவகுமார், கோணங்கி என ஏராளமானவர்களின் வழியாய் என் உலகம் விரியத் துவங்கியது. ஏன் எதற்கென்றில்லாமல் தமிழ்நாட்டின் எல்லா மூலைகளுக்கும் அலைந்து திரிந்திருக்கிறேன். என் கதைகள் இந்த அலைச்சல்களின் வழியாகவும் நான் சந்தித்த நண்பர்களோடு உரையாடியதன் வழியாகவுமே உருவாகின. புதுக்கோட்டை, விருதாச்சலம், ஓசூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, கடலூர், பொள்ளாச்சி, திருநெல்வேலி, தேனி என எந்தப் பக்கமாகச் சென்றாலும் அந்தக் காலகட்டத்தில் பழக்கமான நண்பர்களின் வீட்டுக்கதவுகள் எனக்காக எப்போதும் திறந்திருக்குமென்கிற நிறைவும் மகிழ்வும் எனக்குண்டு. அந்த நண்பர்கள் என் வறுமையையும் துயரையும் பார்த்தவர்கள், அதனால்தான் போராடி மேலேறி வந்த நாட்களில் எனக்காக மகிழ்ச்சியடைந்தார்கள். எழுத்தாளனின் வாழ்வு எழுதுவதோடும், வாசிப்பதோடும் மட்டுமே முடிந்துபோவதாய் எனக்குத் தோன்றவில்லை. சக எழுத்துக்காரனோடு இணக்கத்தோடும் பிணக்குகளோடும் அவன் கொண்டிருக்கும் உறவுகளும் சேரும்போதுதான் அவன் முழுமையடைகிறான்.
வாழ்வின் கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் எழுதுவதால் தணியுமென சிலர் சொல்வதுண்டு. இல்லையேல் புனைவின் வழியாக இன்னும் கொந்தளிக்கிறதா? உங்களுடைய அனுபவம் என்ன?
இயல்பிலேயே நாம் அதீதத்தை விரும்புகிறவர்கள். அதனாலேயே நமது எழுத்தாளர்கள் கொந்தளிப்புகளில் இருந்து தம்மைத் துண்டித்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். ”இலக்கியத்தின் விளைவு வாழ்வை முழுமையாகப் புரிந்துகொள்வதும், அதனை முழுமையாக வாழ்வதும்தான்” என்கிறார் ராபர்ட் ஃப்ராஸ்ட். இந்தியா மாதிரியான அரசியல் குழப்பங்களும் நெருக்கடிகளும் மிகுந்த தேசத்திலிருந்து எழுதும் ஒருவன் ஒருபோதும் கொந்தளிப்புகளில் இருந்து துண்டித்துக் கொள்ளவியலாது என்பதுதான் யதார்த்தம். எழுத்து வாழ்வை பண்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் கொந்தளிப்புகளும் அலைக்கழிப்பும் தணிவதாகத் தோன்றவில்லை. டான் குவிக்ஸாட்டில் வரும் நாயகனைப்போல் வாழ்வை அவலமானதொரு நாடகமாக எதிர்கொள்ள கொள்ள முடியுமானால் கொந்தளிப்புகளை எளிதாகக் கடந்துவிடலாம் தான். நமது சூழலில் அப்படியிருக்க சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது.
உப்பு நாய்கள் நாவலிலிருந்து ரூஹ் வரையிலும் எழுதப்பட்ட உலகங்கள் வேறுவேறானவை. குறிப்பாக கொமோரா நாவலின் உலகம் – பாத்திரங்களின் உளவியல் ஆகியவை இலக்கிய வெளியில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நிகழாமல் போவதற்கான காரணம் தான் என்ன?
கதை சொல்லியை ஒருபோதும் நம்பாதே, கதையை நம்பு என்கிறார் லாரன்ஸ். தமிழ்ச் சூழல் இதற்கு விதிவிலக்கு. ஒரு எழுத்தாளனை அவனது அரசியல் காரணங்களை முன்னிறுத்தி விமர்சனங்களுக்குள்ளாக்கலாம், ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்வை முன்னிறுத்தித் தொடர்ந்து புறக்கணிப்பது அறமற்றது. கொமோராவை முன்னிட்டு எழுப்பப்பட்ட விமர்சனங்கள், அவதூறுகள் எல்லாம் என்னை சோர்வாக்கியது நிஜம். அவதூறுகளை எழுதியவர்களின் நோக்கமும் என்னைச் சோர்வடையச் செய்வதுதான் என்பதைப் புரிந்துகொண்ட தருணத்தில் சோர்வுகளிலிருந்து துண்டித்துக் கொண்டேன். நம்மை வெறுப்பவர்களின் விருப்பங்களுக்காக நாமொரு நாவலையோ கதையையோ எழுதிவிட முடியுமா என்ன? ஒரு எழுத்தாளன் வாசிக்கப்படாமலேயே போவது எத்தனை துயரமோ அதைவிட துயரமானது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது. கொமோரா தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதில் வருத்தமுண்டு. குதிரை ரேஸில் எந்தக் குதிரை வெல்ல வேண்டும், எந்தக் குதிரை தோற்க வேண்டுமென்பதை வைத்து சூதாட்டம் நடைபெறுவது போலத்தான் இலக்கிய அங்கீகாரங்களும் விமர்சனங்களும் சூதாட்டமாய் மாறிக் கொண்டிருக்கிறது. ”விமர்சனங்களின் நோக்கம் ஒரு படைப்பு எதுவாக இருக்கிறது என்பதையும் அது எவ்வாறு அதுவாகவே இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுவதேயன்றி அது என்ன சொல்லவருகிறதென்று விளக்குவதாக இருக்கக் கூடாது.” என்கிறார் சூசன் சொண்டாக், துரதிர்ஷ்டவசமாக தமிழ் சூழலில் விமர்சகர்கள் ஒரு படைப்பு என்ன சொல்ல வருகிறதென்பதை விளக்குவதிலேயே அதிகம் அக்கறை கொண்டவர்களாய் இருக்கிறார்கள்.
எனக்கு எதிரான வசைகளும் வெறுப்புகளுமே ஒருவகையில் என்னைத் தொடர்ந்து எழுதச் செய்துகொண்டிருக்கிறது. மெரினா எழுச்சியின் போது அறிவுசார் சமூகத்தின் ஒரு பகுதியினர் அதனை ஆதரித்தபோதும் இன்னொரு பகுதியினர் அதனை முற்றிலுமாக எதிர்த்தனர். மெரினா எழுச்சிக்கு ஆதரவாக என் விருதைத் திருப்பியளித்ததால் எரிச்சலுற்ற ஒரு நபர் வெறுப்பில் உப்புநாய்கள் நாவலுக்கு எழுதிய அவதூறுகள் இன்றும் பிரசித்தமானது. அந்தக் குழு விமர்சனம் எழுதியதோடு நிறுத்தாமல் அந்த நாவலின் பி.டி.எஃப் ஃபைலை ஏராளமான டெலக்ராம் குழுக்களில் உலவவிட்டனர். உப்புநாய்கள் என்றில்லை, கானகன், கொமோரா, ரூஹ் எல்லா நாவல்களுக்கும் இதேதான் நிகழ்கிறது. வாசு முருகவேலின் நூலுக்கு எழுதிய முன்னுரை நண்பர்களை பகைவர்களாக்கியது. அவர்கள்தான் கொமோராவிற்கான அவதூறுகளை முன்னின்று பரப்பியவர்கள். உண்மையில் அவர்கள் எழுதிய விமர்சனங்களையெல்லாம் வாசித்து முதலில் வருத்தம் கொண்டாலும் பிற்பாடு இத்தனை பூஞ்சையான மனிதர்களுக்கு எதிராக நாம் எழுத என்ன இருக்கிறதென பரிதாபமாகத்தானிருந்தது.
உங்கள் பிரதிகளை முன்வைத்து வசைகளும் அவதூறுகளும் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக உங்களுடைய எழுதும் கலையின் மீது வீசப்பட்ட அவதூறுகளை ஞாபகப்படுத்துகிறேன். உலக சினிமாக்களில் வரும் காட்சிகளை நீங்கள் பிரதி செய்வதாக கூறப்பட்டதல்லவா, இவற்றைத் தான் நீங்கள் விமர்சனமென கருதுகிறீர்களா?
உண்மையில் இந்தக் கேள்வியை எதிர்கொள்வதே இப்போதெல்லாம் சலிப்பாகிவிட்டது. இந்தத் தலைமுறை வாசகர்கள் மற்றும் ஒருசில எழுத்தாளர்கள் காட்சி ஊடகங்களின் வழியாகவே எல்லாவற்றையும் அணுகக் கூடியவர்களாய் மாறிப் போயிருக்கிறார்கள். வீட்டில் அப்பன் ஆத்தா செத்துப்போனால் கூட இந்தப் படத்தில் இந்த மாதிரி ஒருத்தர் சாவாரே அதுபோல் என் அப்பா செத்துவிட்டார் என்று சொல்லக் கூடிய மனநிலைக்கு அனேகர் வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. வாழ்வையே காட்சி ஊடகங்களின் வழியாய்ப் பார்க்கப் பழகிவிட்டவர்கள் இலக்கியத்தை மட்டும் எப்படி அணுகுவார்கள்? துவக்க காலத்தில் என் சிறுகதைகளில் பயன்படுத்தின இறுக்கமான கதைமொழியிலிருந்து நாவல் எழுதத் துவங்கின காலகட்டத்தில் என் புனைவுகளை விடுவித்துக் கொண்டேன். இது திட்டமிட்டுச் செய்த ஒன்றுதான். இன்னொரு வகையில் திரைக்கதைகளிலும் தொடர்ந்து வேலை செய்வதால் காட்சி மொழியிலிருக்கும் சில நுட்பங்களை புனைவுகளில் முயன்று பார்க்கிறேன். நீலப்படம் நாவல் கிட்டத்தட்ட ஒரு திரைக்கதையாசிரியன் எழுதிய நாவல் தான். திரைப்பட உலகின் பின்னணியில் ஒரு நாவலை எழுத வேண்டுமென நினைத்தபோது அந்த வகையான கதைமொழி கை கொடுத்தது. காட்சி மொழிக்கு நெருக்கமான இந்தக் கதைமொழி ஒருவேளை இவர்களைத் தொந்தரவு செய்வதாக இருக்கலாம் என்றாலும் இந்தப் புகார்களை வைக்கிறவர்கள் யாரென யோசிக்க வேண்டியதாய் உள்ளது. இரண்டு கைவிரல்களுக்குள் எண்ணிவிடுகிற நபர்களாகத்தான் இந்தக் குற்றச்சாட்டை வைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து எனது நூல்கள் வெளியாகும் போது உடனுக்குடன் இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்பதைக் கவனிக்கையில் அவர்களது நோக்கத்தின் மீது சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளை எழுத வந்த காலத்தில் நானும் செய்தவன் என்கிற வகையில் ஒரு கட்டத்திற்கு மேல் பொருட்படுத்தமால் விலகிப்போகத் துவங்கிவிட்டேன்.
மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் தமிழ் புனைவுலகை செம்மைப்படுத்தியது என்கிற வாதமுண்டு. அதில் இரைச்சல் மிகுந்த கவர்ச்சிவாதமுமிருக்கிறது. நமது மொழியில் எழுதிய மேன்மைக்குரிய எழுத்தாளர்களைக் கூட வாசிப்பில் கண்டடையாமல் ஒரு மொழிபெயர்ப்பு சிறுகதையை வாசித்துவிட்டு என்னே சிறுகதை என வியப்பவர்கள் இங்கே அதிகம், இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?
நீங்கள் சொல்லும் இந்தக் குற்றச்சாட்டு இலக்கியத்தை மேலோட்டமாய் அணுகும் ஒருசிலரால் வைக்கப்படுவதாகவே பார்க்கிறேன். எந்தவொரு மொழியின் இலக்கியங்களுக்கும் நிகராக தமிழில் செழுமையான புனைவுகள் எழுதப்பட்டுள்ளன. கோட்பாட்டு ரீதியிலான உரையாடலை உருவாக்கியதிலும், வெவ்வேறு விதமான கதைகளை எழுதுவதற்கான சாத்தியங்களை அமைத்துக் கொடுத்ததிலும் நிச்சயமாக மொழிபெயர்ப்பு இலக்கியத்திற்கு பங்குண்டு. ஆனால் புனைவிலக்கியத்தின் மிகப்பெரிய சாதனைகள் எல்லாம் தன்னியல்பாக இந்த நிலத்தின் கதைகளை எழுதியதால் உருவானவை. மதினிமார் கதையை எழுதுவதற்கு கோணங்கிக்கு எந்த உலகச் சிறுகதையும் வழி அமைத்துக் கொடுக்கவில்லை. வண்ணநிலவனின் எஸ்தரும், பாம்பும் பிடாரனும் சிறுகதைகள் நமது கதை சொல்லல் மரபிலிருந்து உருவானவை தானே. பல்லாயிரம் வருடக் கதை மரபு கொண்டவர்கள் நாம். தொன்மங்களை தலைமுறை தலைமுறையாக கதைகளாகச் சொல்லிக் கொண்டிருக்கும் நமக்கு மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் கற்றுக் கொடுத்ததெல்லாம் சில புதிய உத்திகளை மட்டுந்தான். தமிழில் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அவற்றால் மட்டுந்தான் புனைவிலக்கியம் வளர்ச்சி கண்டதென்னும் கருத்துக்களை ஏற்க முடியாது.
அது குற்றச்சாட்டு இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பு இலக்கியங்களை வியந்து வியர்வை சிந்துகிற மனோபாவம், ஏன் நமது முன்னோடி எழுத்தாளுமைகளின் இலக்கியங்களை அணுகுவதற்கு தயாரில்லை என்பதே எனது கேள்வி?
நல்ல கலைஞன் தன் மொழியின் மகத்தான சாதனைகளை வாசிக்கவும் கொண்டாடவும் செய்யத் தவறுவதில்லை. அசோகமித்திரன் தஞ்சை ப்ரகாஷைக் குறித்து எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் அவரை தமிழ் இலக்கியத்தின் யோகி எனக் குறிப்பிடுகிறார். ஏனென்றால் ப்ரகாஷ் எழுதுவதில் மட்டும் அக்கறை காட்டியிருந்தால் அவர் எவ்வளவோ எழுதிக் குவித்திருக்கலாம். ஆனால் அவர் தன் மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் ஒவ்வொருவரையும் கொண்டாடுவதையே பிரதான வேலையாகச் செய்திருக்கிறார். கா.ந.சு-விற்கு இல்லாத ஆளுமையா? அவர் படைப்புச் செயல்பாட்டில் ஈடுபட்டதற்கு இணையாய் அவர் காலத்தின் சிறந்த தமிழ் எழுத்தாளர்களை வெவ்வேறு மொழிகளுக்கு எடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். தன் முன்னோடிகளை ஆழ்ந்து வாசித்துக் கற்கும்போதுதான் ஒருவனுக்கு நல்ல எழுத்து வசப்படுகிறது. அவர்களது படைப்புகளை நாம் ஏற்கலாம் அல்லது மறுக்கலாம், ஆனால் வாசிக்காமல் தவிர்ப்பது அயோக்கியத்தனம்.
திரைப்படங்களில் வசனம், திரைக்கதை போன்றவற்றில் பங்களிப்புச் செய்கிறீர்கள். ஒரு தீவிரமான எழுத்தாளராக திரைத்துறையில் நிறைய சவால்களையும் சோர்வுகளையும் எதிர்நோக்க வேண்டியிருக்குமே?
ஒரு எழுத்தாளனுக்கு எல்லா மட்டத்திலுமே சவால் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் எழுத்தாளனாய் வாழ்வதை விடவும் சிரமமானதில்லை திரைப்படத்துறையில் ஒரு எழுத்தாளனாய் இருப்பது. திரையுலகின் சூழல் நிறையவே மாறியிருக்கிறது. எழுத்தாளர்களுக்கான முக்கியத்துவத்தை உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை எழுதக் கற்றுக் கொள்வதற்கும் திரைமொழிக்குப் பழகுவதற்கும் ஒரு எழுத்தாளன் கொஞ்சம் மெனக்கெடுதல் அவசியம். புனைவுகள் எழுதுவதை விடவும் இறுக்கமானதொரு மொழி திரைக்கதைக்கு அவசியம். புனைவுகளில் அதிகமும் உரையாடலை எழுதுகிற ஒருவருக்கு எல்லாவற்றையும் காட்சியாக யோசிப்பதில் சிரமங்கள் வருவது இயல்பு. அதிலிருந்து விடுவித்துக் கொண்டு காட்சி மொழிக்குப் பழக திரைப்படங்களைப் பார்ப்பதும் அவற்றைப் புரிந்து கொள்வதும் முக்கியமாகிறது. நான் உதவி இயக்குநராகவும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியிருப்பதால் ஒரு திரைப்படம் உருவாவதற்கான தொழில்நுட்ப ரீதியிலான எல்லா விவரங்களையும் அறிந்தவனாயிருக்கிறேன். காட்சியைப் புரிந்துகொள்ள, அவற்றை சுவாரஸ்யமாக எழுத இந்த அனுபவம் பேருதவியாய் இருக்கிறது.
ஜூனியர் விகடன் இதழில் நீங்கள் எழுதி வருகிற “ரெண்டாம் ஆட்டம்” தொடருக்கான வரவேற்பு எப்படியிருக்கிறது?
நான் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏராளமான புதிய வாசகர்கள் இந்தத் தொடரின் வழியாய்க் கிடைத்திருக்கிறார்கள். 800 வார்த்தைகளுக்குள் ஒரு பகுதியை எழுதிவிட வேண்டுமென்கிற கட்டுப்பாடு வரும்போது சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள முடிந்தது. குறைவான சொற்களில் ஒரு காட்சியைச் சொல்லக் கூடிய இந்தப் பயிற்சி எனக்கு முக்கியமானதொன்று.
இதைவிடவும் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் நான் மதிக்கும் மிக முக்கியமான இரண்டு திரைப்பட இயக்குநர்கள் இதனைத் திரைப்படமாக்குவதற்காகக் கேட்டிருக்கிறார்கள். எதையும் பேசி உறுதிப்படுத்தவில்லை. ஆனால் விரைவில் ரெண்டாம் ஆட்டத்தின் திரைவடிவத்தை எதிர்பார்க்கலாம்.
உங்களை எப்படி முதன்மைபடுத்துவீர்கள்? நாவலாசிரியராகவா? சிறுகதை ஆசிரியராகவா?
எண்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். இப்போதும் சிறுகதை எழுதுவதுதான் எனக்கு சவாலானதாக இருக்கிறது. ஆனால் புனைவுகளோடு தொடர்ந்து பயணிக்கும் அனுபவத்தில் என்னை ஒரு நாவலாசிரியனாகவே நான் முதன்மைப்படுத்துகிறேன். சிறுகதைகளுக்கான எல்லைகளிலிருந்து துண்டித்துக் கொண்டு புனைவின் அசாத்தியமான பெருவெளியில் கதை சொல்லும்போது தனிப்பட்ட வாழ்வின் எல்லாத் துயர்களிலிருந்தும் தற்காலிகமாக என்னை விடுவித்துக் கொண்டு எனக்கானதொரு உலகில் என்னால் வாழமுடிகிறது. அந்த உலகம் எனக்கான உலகம், என்னால் உருவாக்கப்படும் உலகம். அங்கு என் கீழ்மைகள் குறித்து புகார்கள் சொல்ல ஒருவருமில்லை. இதனாலேயே நாவல் எழுதுகிற நாட்களில் சடாரென உடலிலும் முகத்திலும் முதுமை வந்துவிடுகிறது. ஒரு முழு வாழ்வை வாழ்ந்து பார்த்துவிட்ட அனுபவத்திலிருந்து துண்டித்துக் கொண்டு அதே வேகத்தில் இன்னொரு நாவலுக்குள் நுழைந்துவிடும் போது நான் புதிய மனிதனாக உணர்கிறேன். இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்திற்காகவேதான் தொடர்ந்து நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
***
அகரமுதல்வன் . இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஒரு தொகுப்பு நூல் ஆகியன வெளிவந்துள்ளன.