Monday, September 9, 2024
Homesliderஇணை

இணை

கார்த்திக்பாலசுப்ரமணியன்

ஞாயிற்றுக்கிழமை பின்மதியப் பொழுதுக்கே உரித்தான சோம்பல் அந்தச்சாலை முழுவதும் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான சாலையோரக் கடைகள் ஆளின்றி வெறிச்சோடியிருந்தன. சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துக்குள் இருந்த ஓரிரு முகங்களிலும் படிந்திருந்த சோகை அப்பயணத்தை மேலும் அலுப்பூட்டியதாக்கியது. அத்தனை நீண்ட பயணம் ஒன்றுமில்லை. நாங்கள் வசிக்கும் ஹோம்புஷிலிருந்து பாரமட்டா வரை போக வேண்டும். இரண்டுமே சிட்னியின் புறநகர் பகுதிகள். ரிகார்டோ, வழியில் ஒலிம்பிக் பார்க்கில் ஏறிக்கொள்வதாகக் கூறியிருக்கிறான். எமிலி வராமல் இருக்க வேண்டும். வரமாட்டாள் என்று தான் நினைக்கிறேன். அவள் உடன் வருவதாக இருந்தால் என்னை ஏன் அழைக்கப் போகிறான்.

அவனுக்காகத்தான் இந்தப் பயணம். கூப்பிட்டுவிட்டானே என்று வேறுவழியின்றி தான் கிளம்பினேன். புத்தம் புதிய டி.வி ஒன்று பாதி விலைக்கு வருகிறது என்பதை கம்ட்ரியில் பார்த்தானாம். கடந்த பத்து நாட்களாக கம்ட்ரியே கதி என்று கிடக்கிறான். உபயோகப்படுத்தப்பட்ட பழைய பொருட்கள் விற்கும் தளம் அது. போன வாரம் இப்படித்தான் அலுவலகம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தோம். ஹோம்புஷ் ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிட நடையில் நாங்கள் வசிக்கும் வீடு. போய்க்கொண்டிருந்த வழியில் மரத்தாலான சாப்பாட்டு மேசையை வீட்டுக்கு வெளியில் போட்டு வைத்திருந்தார்கள். அறைக்குச் சென்று முகம் கழுவி வரக்கூட அனுமதிக்கவில்லை. இப்போது விட்டால் வேறு யாரேனும் தூக்கிக்கொண்டு விடுவார்கள் என்றான். வீட்டை காலி செய்யும் பொருட்டோ, புதுப்பிக்கும் பொருட்டோ தங்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கும் பொருட்களை மாநகராட்சிக்கு தகவல் சொல்லிவிட்டு வீட்டுக்கு வெளியில் வைத்து விடுவார்கள். அப்படித்தான் அந்தச் சாப்பாட்டு மேசையும் வைக்கப்பட்டிருந்தது. நல்ல மரத்தில் செய்தது. பேய்க்கனம். இப்படி ஒவ்வொரு பொருளாக பார்த்துப் பார்த்து வாங்கிச் சேர்த்துக் கொண்டிருந்தான்.

இன்னும் இரண்டு வாரத்தில் எமிலியுடன் தனிவீடு செல்லப் போகிறான். அதன்பின் திருமணம் செய்து கொள்வதாகத் திட்டம். என்னையும் உடன் வந்து தங்குமாறு அழைத்தான். அது சரியாக வராது என்று மறுத்துவிட்டேன். கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இதையே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். எனக்கு அந்த எமிலியைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. சிலபேரைக் காரணமே இன்றி வெறுப்போம் இல்லியா? அவள் அந்தப் பட்டியலில் இருந்தாள்.

அன்று – சனிக்கிழமை மாலை – போதைகூட ஏறியதாகத் தெரியவில்லை. அப்போதுதான் ஆரம்பித்திருந்தான். என் கைகளை இழுத்து தன் கைகளுக்குள் பொதித்துக் கொண்டான்.

“நீ எனக்கு மூத்த சகோதரன் போல் அல்லவா? எங்களுடன் இருப்பதில் உனக்கு என்ன சங்கடம்?” என்றான்.

எப்படி விளக்கிச் சொன்னாலும் அது அபத்தமாய்த்தான் போய் முடியும். புன்னகைத்தபடி மெதுவாக என் கைகளை அவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

ஊற்றியிருந்த விஸ்கியை ஒரு மிடறு விழுங்கினான். காலையிலேயே மசாலா தடவி ஊற வைத்து, பின் ஓ.டி.ஜி-யில் சுட்டு எடுத்த கறித்துண்டுகளில் ஒன்றை நாக்கில் படாமல் பற்களுக்கிடையே கடித்து இழுத்தான். ‘உஸ்’ என்று சத்தமிட்டு அதன் காரத்தை உள்வாங்கிக் கொண்டபடியே ஒரக்கண்களால் என்னைப் பார்த்து, “அப்போ, என்னுடன் சேர்ந்து குடிக்கவாவது செய்யேன்” என்றான்.

நான் அங்கிருந்து எழுந்து விட்டேன். அவன் என்னை வம்புக்கு இழுப்பதானால் குடியைப் பற்றித்தான் ஆரம்பிப்பான். நான் குடிக்க மாட்டேன் என்பதை நம்புவதே அவனுக்கு முடியாத காரியமாய் இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் இந்தக் கேள்வியைக் கேட்காமல் அவன் விடுவதில்லை. “அது எப்படி ஒருவன் வாழ்நாள் முழுவது குடிக்காமலே கழிக்க முடியும்?” என்பது அவன் தரப்பு.

“இதுவரை தொட்டதே இல்லையா?”

“இல்லை.”

“ஒரே ஒரு பெக் கூடவா இல்லை?”

“ஒரே ஒரு சொட்டு கூட இல்லை.”

போதை ஏறிய பிறகு நான் குடிக்காமல் இருப்பது குறித்து பாராட்டுவான். நான் ஒரு லட்சிய மனிதன் என்பான். உயிர் நண்பன் என்பான். தன்னுடைய மூத்த சகோதரன் என்பான். எனக்கும் அவனுக்கும் எட்டு வயது வித்தியாசம். அவனுக்கு இருபத்து ஆறு. எனக்கு முப்பத்து நான்கு.

ஒரு காலத்தில் நானும் குடித்திருக்கிறேன். இப்போது இல்லை அவ்வளவுதான். இதைச் சொன்னால் அவனுடைய வேலை இன்னும் எளிதாகிவிடும். எல்லாவற்றுக்கும் மேல், மனம் மிதக்கும் தருணங்களில் மட்டும் அதுவும் தனியாக குடிப்பதே எனக்குப் பிடிக்கும்.

*

உண்மையில் எனக்கும் அவனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அவனுடைய பெயர் ரிகார்டோ ஹென்ரிக். இருவரும் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து பிழைப்பின் பொருட்டு சிட்னிக்கு வந்து சேர்ந்திருந்தோம். ஆடை வடிவமைப்புத் துறை என்னுடையது. அதே நிறுவனத்தில் உற்பத்திப் பிரிவில் அவன். எனக்கு ஆறு மாதங்கள் முன்னர் தான் அவனும் சிட்னிக்கு வந்திருக்கிறான். அவன் தங்கியிருந்த விடுதியில்தான் நானும் தங்கியிருந்தேன். இரண்டு மாதங்கள் கழித்து திடீரென்று ஒருநாள் “நாம் இருவரும் சேர்ந்து வீடெடுத்து தங்குவோமா?” என்றான். மறுப்பதற்கு என்னிடம் பெரிதாக காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. சரி என்று ஒப்புக் கொண்டேன்.

பிரேசிலின் சால்வடார் நகரின் புறநகர்ப் பகுதியைச் சார்ந்தவன். அவனுடைய அப்பா ஹென்ரிக் இத்தாலியைப் பூர்வீகமாய்க் கொண்டவர். அவரின் முன்னோர்கள் இத்தாலியிலிருந்து இரண்டாம் உலகப்போரின் போது அங்கே இடம் பெயர்ந்திருக்கிறார்கள். பிரேசிலும் இந்தியாவைப் போல பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட மக்கள் சேர்ந்து வாழும் பன்மைத்துவம் மிக்க நாடு. ரிகார்டோவின் அம்மா ஆப்பிரிக்க இனத்தவர். பெயர் ஆம்பர். ஹென்ரிக்கும் அவர் வேலை பார்த்த பேக்கரியினை நிர்வகித்து வந்த ஆம்பருக்கும் திருமணமான போது ரிகார்டோ ஆம்பரின் வயிற்றில் நான்குமாதக் குழந்தை. அதே நேரத்தில் தான் நான், அங்கிருந்து பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால், என்னுடைய அப்பாவினுடைய மரணத்தின் பொருட்டு சூழ்ந்த வறுமையினால் படித்துக் கொண்டிருந்த மெட்ரிக் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பேன்.

எனக்கு படிப்பு ஒருபோதும் பிரச்சினையாக இருந்ததில்லை. அரசுப்பள்ளி, கல்லூரி என அம்மாவுக்கு பைசா செலவு வைக்காமல் படித்தேன். பிறந்த வீடு, புகுந்த வீடு என்று சொந்தம் சொல்லிக்கொள்ள யாரொருவரும் இல்லாத அவளுக்கு என்னால் எந்தவித தொந்தரவும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தேன். இப்படி வந்த அதீத பொறுப்புணர்வின் காரணமாகவோ என்னவோ கல்லூரி காலங்களில் கூட அந்த வயதுக்கே உரிய கேளிக்கை, கொண்டாட்டம் என எல்லாவற்றிலுமிருந்து சற்று ஒதுங்கியே இருந்தேன். கல்லூரி முடிக்கும் முன்னரே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை, நல்ல சம்பளம் என வாழ்க்கை கொஞ்சம் எங்கள் பக்கமும் வளைந்து கொடுக்க ஆரம்பித்தது. அதே காலத்தில்தான் ரிகார்டோ வீட்டுக்கு அடங்காத பிள்ளையாக ஊர் சுற்றிக் கொண்டிருந்திருக்கிறான். பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கிடைத்த வேலையைப் பார்த்துக்கொண்டு கால்பந்து மைதானமே கதியென்று கிடந்திருக்கிறான். பின்பு, பந்தை விட்டுவிட்டு பைக்கைப் பற்றியிருக்கிறான். தனது பதினெட்டு வயதில் அவனிருந்த வடகிழக்கு மாகாணத்திலிருந்து கிளம்பி பிரேசிலின் முழுவதையும் சுற்றியிருக்கிறான்.

என் இருபத்தி ஏழு வயது வரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அதன்பின் அம்மா எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தாள். முதல் இரண்டு வருடங்கள் எனக்கே அதில் பெரிதாக ஆர்வமிருக்கவில்லை. அப்போது ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வரவே கெட்டியாக பற்றிக்கொன்டு கிளம்பி வந்துவிட்டேன். ஆறு மாதங்கள் என்று திட்டமிட்டு கிளம்பியவன் இங்கு வந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டன.

தன்னால் எனக்கு பொருத்தமாக ஒரு பெண்ணைக் கொண்டு நிறுத்த முடியவில்லை என்ற ஏக்கம் அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கத் தொடங்கியது. என் ஜாதகத்தில் தோஷம் என்றாள். கோவில் கோவிலாக ஏறி இறங்கினாள். விரதம் இருந்தாள். தோஷம் கழித்தாள். பூஜை, பொங்கல், பலி என்று எதையும் விட்டு வைக்கவில்லை. ஆனால், பலன் மட்டும் கூடவில்லை. சொந்தமாக வீடு இல்லாததுதான் பெண் கிடைக்காததற்குக் காரணம் என்றாள். நான் அனுப்பிச் சேர்த்திருந்த காசில் நிலம் வாங்கினாள். தனியொருத்தியாக நின்று வீட்டையும் கட்டி எழுப்பினாள். வீட்டுக்கு இப்போது மூன்று வயதாகிவிட்டது. எனக்குத்தான் எதுவும் தகையவில்லை.

நான் ஊருக்கு வந்து சென்றால் எல்லாம் சரியாக வரும் என்றாள். அவளின் திருப்திக்காக மூன்று மாதங்கள் விடுப்பெடுத்து ஊருக்கு வந்து தங்கிப் போனேன். அங்கிருந்த மூன்று மாதங்களில் நேரில் போய்ப்பார்த்த ஆறு பெண்களுக்கும் உரிய நேரத்தில் திருமணமாகியிருந்தால் இந்நேரம் அவர்களின் பிள்ளைகள் பள்ளி செல்ல ஆரம்பித்திருக்கும். என்னுடைய திருமணம் நடைபெறாமல் போனதுக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இன்னொரு திருமணமே காரணமாய் இருந்தது. இது அம்மாவுக்கும் நன்றாகத் தெரியும்.

என்னுடைய முப்பத்து மூன்றாவது பிறந்த நாளுக்கு மறுநாள் போனில் அழைத்திருந்த அம்மா வழக்கத்தை விட அதிகமாய் பேசிக்கொண்டிருந்தாள். எதையோ சொல்ல முயன்று, பயந்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டிருந்தாள். “இங்கே எனக்குத் தோழிகள் யாராவது இருக்கிறார்களா?” என்று விசாரித்தாள். அவள் சொல்ல வருவது எனக்குப் புரிந்தது. அவளைக் கவலைப்படாமல் இருக்கச் சொல்லிவிட்டு, நானும் என் பங்கிற்கு திருமணம் பதிவு செய்யும் தளங்களில் என் பெயரைப் போட்டு சந்தா செலுத்த ஆரம்பித்தேன்.

முதலில் வயது, வேலை, சம்பளம் என்று தான் ஆரம்பிப்பார்கள். கடைசியில் எல்லோரும் ஓரிடத்தில் வந்து நிற்பார்கள். அதன்பின் ஒருவரும் திரும்பி வந்ததேயில்லை. சமீபத்தில் ஆகச்சுமாரான தோற்றத்தில் ஒரு பெண் சுயவிபரக் குறிப்பைப் பார்த்து விருப்பம் தெரிவித்து இருந்தாள். நானும் ஏற்றுக் கொண்டேன். தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தோம். அவளுக்கு முப்பத்தாறு வயது. என்னைவிட இரண்டு வயது மூத்தவள். அவள் ஒருவேளை சரியென்று சொன்னால் வேண்டாம் என்பதை அவள் மனம் புண்படாமல் எப்படிச் சொல்வது என்று பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நல்லவள். எனக்கு அந்தச் சிரமத்தைக்கூடத் தரவில்லை.

*

பேருந்து ஒலிம்பிக் பார்க் நிறுத்தத்தில் நின்றது. முதலில் ரிகார்டோ ஏறினான். பின்னாலே எமிலியும் ஏறி வந்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது. அவள் உடன் வருவதாய் இருந்தால் நான் ஏன் வர வேண்டும். மடையன். அவர்கள் இருவருமே சேர்ந்துபோய் பார்த்து வாங்கி வந்துவிடலாமே? நானும் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியத்தை வீணடித்திருக்க மாட்டேனே. ஏற்கனவே எரிச்சல் மண்டியிருந்த மனத்தில் இது சற்று ஆத்திரத்தைக் கிளப்பியது.

உள்ளே ஏறி வந்தவர்கள் இருவரும் ‘ஹாய்’ என்றார்கள். எனக்கு முன்னால் இருந்த இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டனர். உட்கார்ந்ததிலிருந்து எதையோ இருவரும் முணுமுணுத்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மூக்குகளிலிருந்து எழும்பிய விசேஷமான ‘அவ்’ ஒலியிலிருந்து அது போர்ச்சுகீஸ் என்பதைத் தெரிந்து கொண்டேன். எனக்கு ஒரு வார்த்தை புரியவில்லை. ஆனால், இருவர் சண்டை போடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள பாஷை ஒன்றும் பெரிய தடையாக இருப்பதில்லை. அச்சண்டையைக் கவனிக்காதது போலவும் பெரிதாகப் பொருட்படுத்தாதது போலவும் நடிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். ஜன்னல் கண்ணாடி வழியே தெரிந்த பரந்து விரிந்திருந்த புல்வெளி அந்நேரத்துக்குச் சற்று ஆசுவாசமளித்தாலும் அவர்களின் உரையாடலுக்கு இடையே வந்து விழும் ஒன்றிரண்டு ஆங்கிலச் சொற்களைக் கொண்டு எதையாவது விளங்கிக் கொள்ள முடியுமா என்பதிலேயே மனம் கிடந்து உழற்றிக் கொண்டிருந்தது.

அடுத்த பத்து நிமிடத்தில் பேருந்தை நிறுத்துவதற்கான பட்டனை எமிலி அழுத்தினாள். விறுவிறுவென்று கீழே இறங்கிச் சென்றுவிட்டாள். எங்கள் இருவரையும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதன் பின் ரிகார்டோ எழுந்து என் பக்கம் வந்து அமர்ந்து கொண்டான்.

சில நிமிடங்கள் எதையும் பேசாமல் வெளியே வெறித்துக் கொண்டிருந்தவன், “பிட்ச்” என்று திட்டினான். நான் இதுபோன்ற சமயங்களில் எப்படி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

பேச்சை மாற்றும் பொருட்டு, “நீ அனுப்பிய அந்த டி.வி மாடலைப் பார்த்தேன். அது வெளியாகியே ஆறு மாதங்கள்தான் ஆகிறன. அதை ஏன் அவன் விற்க வேண்டும்? அதுவும் இவ்வளவு குறைவான விலைக்கு?” என்றேன்.

“இங்கே மனிதர்களின் பைத்தியக்காரத்தனங்களுக்கு ஏதேனும் வரைமுறை இருக்கிறதா?” என்றான்.

“சரிதான்… இருந்தும் இது அதன் உச்சம். ஆளை நம்பலாம் தானே?”

“அவனை நாம் ஏன் நம்ப வேண்டும். டி.வி-யை கண்ணால் பார்க்கப் போகிறோம். எல்லாம் சரியாக இருந்தால் பணத்தைக் கொடுத்துவிட்டு தூக்கிவரப் போகிறோம். அவ்வளவுதான்.”

“சரிதான்”

“எல்லாம் நல்லபடியாக அமைந்தால் இன்று மாலை அதைக் கொண்டாட வேண்டும்” என்று சொல்லி கண் சிமிட்டினான். இது அவன் இயல்புநிலைக்குத் திரும்பியதற்கான குறியீடு. அவன் எதை மனதில் வைத்துச் சொல்கிறான் என்பது எனக்குத் தெரியாமல் இல்லை. அவனுக்கு குடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் அவ்வளவுதான்.

“வேண்டாம் என்றால் மட்டும் விடவா போகிறாய்?” என்றேன். சிரித்தப்படி என்னைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

*

பாரமட்டா பேருந்து நிலையத்தில் இறங்கிக் கொண்டோம். வழியில் மாக்ஸ் பிரன்னரில் ஆளுக்கு ஒரு காபி எடுத்துக் கொண்டோம். அங்கிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கு கூகிள் மேப் போட்டு நடக்க ஆரம்பித்தோம். மனம் முழுவதும் வெறுமை படர்ந்திருந்தது. அதை வெறுமை என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கிவிட முடியுமா என்று தெரியவில்லை. அவன் ஒருபக்கம் பேசிக்கொண்டே வந்தான். ‘கொஞ்சம் வாயை மூடிக்கொண்டுதான் வாயேன்’ என்று சொல்ல வேண்டும்போல் இருந்தது. அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை.

அந்த வீடு நல்ல விசாலமாக ஒரு பங்களாவைப்போல் இருந்தது. கார் நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த டெஸ்லாவும் மாஸ்தாவும் அவ்வீட்டின் செழுமையை எங்களுக்கு உணர்த்தப் போதுமாயிருந்தன. வீட்டின் முகப்பு பரந்து விரிந்திருந்தது. விளம்பரத்தைப் பார்க்கும்போது அது சீனராக இருக்கும் என்று நான் சிறிதும் யூகிக்கவில்லை. பெயரில் பிரத்தியேகச் சமிக்ஞை எதுவும் இல்லை. வந்து டி.வி-யைக் காட்டியவர் குள்ளமாக, வயதினை மதிப்பிட முடியாதபடியான தோற்றத்தில் இருந்தார். எங்களை ஒருநிமிடம் அங்கேயே காத்திருக்கச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார். ஓங்கி கையை வீசினால் காற்று கிழியும் சத்தம் கேட்கும்போல் இருந்த அவ்விடத்தின் அதீத அமைதி அச்சமூட்டியது.

டி.வி உண்மையிலேயே புத்தம் புதிதாக இருந்தது. அதற்கான வாரண்ட்டிகூட இன்னும் ஒன்றரை வருடங்கள் மிச்சம் இருந்தது. இதை ஏன் அவர் ஆறில் ஒரு பங்கு விலைக்குக் கொடுக்க வேண்டும்? எனக்கு அதைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

“எனக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு ஆறு வயது. இதில்தான் அவன் கார்ட்டூன்களைக் பார்ப்பது வழக்கம். பெப்பா பிக் தெரியுமா? அதுதான் அவனுக்கு விருப்பமான கார்ட்டூன். அதுவரையில் பிரச்சினை இல்லை. கடந்த சில நாட்களாக கார்ட்டூன்களை மியூட்டில் போட்டு சத்தம் இல்லாமல் பார்க்க ஆரம்பித்தான். பின்னர் ஒருநாள் தான் கவனித்தோம், அதில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு இவனே குரல் கொடுத்து பேசிக்கொண்டிருந்தான். முதலில் ஏதோ விளையாட்டாக அதைச் செய்வதாகத்தான் நானும் என் மனைவியும் நினைத்திருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அதில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களையும் இவனே வேறு வேறு குரல்களில் பேச ஆரம்பித்தான். சிலசமயம் சத்தம் டி.வி-யிலிருந்து வருகிறதா இவன் கொடுக்கிறானா என்று பிரித்தறிய முடியாதபடி அத்தனைத் துல்லியமாக இருக்கும். எங்களிடம் அவன் பேசுவது குறைந்து போனது. ஒரு கட்டத்தில் இது எல்லை மீறவே எங்களுக்கு பயம் வந்துவிட்டது. அவனிடம் நாங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது மட்டும் புரிந்தது. எங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி அவனை மெல்பர்னில் இருக்கும் அவனுடைய சித்தி வீட்டுக்கு என் மனைவி அழைத்துச் சென்றிருக்கிறாள். அவர்கள் இங்கு திரும்பி வருவதற்குள் இதை நான் இங்கிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும். இந்த டி.வி எனக்கு ராசியில்லை. இது வந்து சேர்ந்ததிலிருந்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினை.” என்றார்.

நான் ரிகார்டோவைப் பார்த்தேன். அவன் சிரித்துக்கொண்டே தோள்களைக் குலுக்கினான். எங்கள் இருவருக்குமே இதுபோன்ற அசட்டு நம்பிக்கைகள் மேல் பெரிதாக அபிப்பிராயம் ஏதும் கிடையாது. அவன் இந்நேரத்துக்கு புதிய வீட்டின் பெரிய ஹாலில் இதை மாட்டி வைத்து கால்பந்து போட்டிகளைக் காண்பது குறித்தான கற்பனையில் இருந்திருப்பான்.

“ஒருவருக்கு ராசியில்லாத பொருள் இன்னொருவருக்கு அதிர்ஷ்டத்தின் சின்னமாக மாறலாம் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார் எங்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தபடி.

இருந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கும் மனநிலைக்கும் இதற்கு மேல் இந்த டி.வி வந்து புதிதாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றியது. மேலும், அது எங்கள் வீட்டில் இருக்க போவதும் இல்லை. அதனால் அதைப்பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அவ்வீட்டின் யூகிக்கவியலா அமைதியும் பிரம்மாண்டமும் மனதைவிட்டு நீங்க நீண்ட நாட்கள் பிடிக்கும் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.

*

புதிதாக வந்த டி.வி.யை வரவேற்பு அறையிலேயே வைத்திருந்தான். குட்டி ஃபேன்கள், புதிய ஹீட்டர், ரஜாய்கள், சில பீங்கான் பாத்திரங்கள், எமிலி பரிசளித்த தொட்டிச்செடி என்று அவனுடைய அறை முழுவதும் புதிதாகக் குடியேறப் போகும் வீட்டுக்காகச் சேகரித்த பொருட்களால் நிரம்பியிருந்தது. அவன் அறைக்குள் நுழையவே எனக்குப் பிடிக்கவில்லை. அவன் இங்கிருந்து சீக்கிரம் கிளம்பித் தொலைத்தால் தேவலை என்று தோன்றியது.

திடீரென்று இரண்டு நாட்கள் ரிகார்டோ அலுவலகத்துக்கு வரவில்லை. வீட்டுப்பக்கமும் பார்க்க முடியவில்லை. எப்போதாவது அவனுடைய நண்பர்கள் சிலரோடு பார்ட்டி செய்யும் போதோ, எமிலியின் இடத்தில் தங்கிவரும் நாட்களிலோ அவன் இப்படிச் செய்வது வழக்கம்தான் என்றாலும் ஒருமுறை கூட என்னிடம் இப்படிச் சொல்லாமல் சென்றதில்லை. என்னுடைய அழைப்புக்கு பதில் இல்லை. வாட்ஸ்-அப்பில் நான் அனுப்பிய செய்தியைப் பார்க்கக்கூட இல்லை.

மூன்றாவது நாள், பின்னிரவில் வீட்டுக்கு வந்தான். நன்றாகக் குடித்திருந்தான். மூன்று நாட்களையும் குடித்தே தீர்த்ததைப் போல அவ்வளவு களைத்திருந்தன அவனுடைய கண்கள்.

சோபாவில் அமர்ந்தபடி வெற்றுச்சுவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். மெல்லிய குரலில் “கொஞ்சம் தண்ணீர் கொண்டுவந்து தர முடியுமா பிரதர்?” என்றான்.

கிளாசை எடுக்க கிச்சன் கப்போர்டைத் திறந்ததும் பெரிய கண்ணாடி பாத்திரம் விழுந்து நொறுங்கும் சத்தம் கேட்டது.

வரவேற்பறையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த தொட்டிச்செடி கீழே விழுந்து கிடந்தது. பக்கத்தில் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த டி.வி-யின் திரை உடைபட்டு ஒரு பெரிய சிலந்தி வலை போல விரிசல் படர்ந்திருந்தது.

நான் அவனைப் பார்த்தேன். தலையைக் குனிந்தபடியே “நாங்கள் பிரிந்துவிட்டோம். எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது.” என்று கூறி தன் முகத்தை சோபாவில் புதைத்துக் கொண்டான்.

ஒரு சீரான லயத்தில் குலுங்கிக் கொண்டிருந்த அவன் முதுகைப் பார்த்தபடி நின்றேன். எவ்வளவு நேரம் அப்படிக் கழிந்தது என்று தெரியவில்லை. மனதை அழுத்திக் கொண்டிருந்த இனம் புரியாத கனம் விலகி இலகுவானது போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் அவன் அப்படியே சோபாவில் தூங்கிப் போனான். நான் ஒரு கிளாசில் விஸ்கியை எடுத்துக்கொண்டு பால்கனிக்குச் சென்றேன். அந்தப் பின்னிரவில் ஆளரவமற்று வெறிச்சோடிருந்த புறநகரின் சாலையைப் பார்த்தபடி குடிக்க ஆரம்பித்தேன்.

***

கார்த்திக் பாலசுப்ரமணியன் – மென்பொருள் துறையில் வேலை செய்யும் இவருடைய சிறுகதைத் தொகுப்பாக ‘டொரினா’வும் ‘நட்சத்திரவாசிகள்’ நாவலும் வெளிவந்துள்ளது. தொடர்புக்கு – karthikgurumuruganb@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. “ஒருவருக்கு ராசியில்லாத பொருள் இன்னொருவருக்கு அதிர்ஷ்டத்தின் சின்னமாக மாறலாம் என்பது எங்கள் நம்பிக்கை” 👏👏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular