Thursday, December 5, 2024
Homeஅரசியல்இக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான் - டிராட்ஸ்கி மருது

இக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான் – டிராட்ஸ்கி மருது

(யாவரும் ஆசிரியர் குழு..)

ஒரு நன்பொழுதில் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் நடத்திய நேர்காணல்:

தமிழகத்தில் உள்ள ஓவியக்கல்லூரியில் பயிலும் மாணவனுக்கு, தான் எங்கெங்கெல்லாம் பயணிக்க முடியும் என்கிற ஐயமோ அல்லது யோசனையோ இருக்கிறதெனில் அங்கெல்லாம் மருது அவர்களின் கால்தடம் இருக்கும். ஓவியங்கள், விபரணப்படங்கள், நூல்அட்டை ஓவியங்கள், வடிவமைப்பு, விளம்பர படங்கள், நாடக அரங்குகள், திரைத்துறையில் பல்வேறு பொறுப்புகள் அதில் முக்கியமாக கலைஇயக்குநர், காமிக்ஸ், அனிமேஷன், லோகோ வடிவமைப்பு, இதர வடிமைப்புகள் என பல்வேறு துறைகளில் பரிணமித்தவர். அரசு வேலையைத் துறந்துவிட்டு ஒரு free lancerஆக பல்வேறு ஊடகங்கள் வழி தமது நவீன ஓவியங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்தவர். ஓர் இனத்தின் நீண்ட வரலாற்றில் அதன் நாயகர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்கிற ஆதாரமே இல்லாதபோது, “வாளோர் ஆடும் அமலை” நூல் மூலம் தமிழ் மக்களோடு பேசியவர் டிராட்ஸ்கி மருது. ஓவியம் மட்டுமின்றி தொழில்நுட்பம், இலக்கியம், சினிமா, பகுத்தறிவு, அரசியல் என பல்வேறு களத்தில் இவரது செயல்பாடுகள் உற்சாகம் குன்றாமல் இருந்துவருகிறது.

சிற்றிதழ், வெகுஜன இதழ் என ஒருசேரப் பயணித்து வருகிறார். பாப்புலர் கலை குறித்த டிராட்ஸ்கியின் மதிப்பீடுகள் மிக முக்கியமானவை, அதே சமயம் கலைப்போலிகள் (Art Snob) யார் என்கிற தெளிவும் அவருக்கு உண்டு. முப்பது வருடங்களுக்கும் மேலாக தமது நீண்ட பயணத்தில் நம் சமூகத்தோடு நிறையவே உரையாடியிருக்கிறபோதும், அவரிடம் பேசி ஆவணப்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது. எப்போதும் தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் அடுத்தக்கட்ட முன்னேற்றங்கள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார். தமது கலை மற்றும் தொழில்நுட்ப அனுபவத்தின் வாயிலாக சமூகத்தில் நிகழ இருக்கும் மாற்றங்களை அவர் முன்கூட்டியே சொல்லிவருகிறார். அதன் தீர்க்கதரிசனங்களையும் அக்கறையையும் புரிந்துகொண்டாலே அவருடனான பல உரையாடல்கள் ஆவணப்படுத்தப்படாமல் இருந்துவிட்டதே என்கிற ஆதங்கங்கள் வந்துவிடும்.

இது 2017ன் இறுதியில் நான் செய்த இந்த நேர்காணல். சில காரணங்களால் வெளிவராமல் போக, இப்போது நமக்காக…

(அவரோடு தொடர்ந்து உரையாடல் செய்து அதனை ஆவணப்படுத்தும் எண்ணம் இருக்கிறது என்பதை முன்வைத்துதான் இந்த நேர்காணலை வெளியிட அவரிடம் ஒப்புதல் பெற்றோம் என்பது கூடுதல் தகவல்.)

-ஜீவ கரிகாலன்.

*

1. டிராட்ஸ்கி மருதுவின் படைப்புவெளியை நாங்கள் எங்கிருந்து அணுகுவது?

முதலில் நான் ஒரு சமகால ஓவியன். எனது வெளி ஏற்கனவே கற்பிக்கப்பட்ட வெளி கிடையாது. எனது செயல்பாட்டு எல்லை விரிவானது. பல ஊடகங்களின் கூறுகளைக் கொண்டது எனது படைப்புவெளி. சமகாலத்து படைப்புலக சாத்தியங்களை அறிந்து, அதில் நீந்தி மகிழ்பவன் நான்.

2. உலக அளவில், இன்றைய தமிழ் நிலத்தின் கலை என்று பார்ப்பதை நீங்கள் என்னவாக நினைக்கிறீர்கள்? ஒருபுறம் க்ளோபல் வில்லேஜ் என்று சொல்கிறோம், இவற்றை இப்படி பிரித்துப் பார்க்கவேண்டிய நிலம்சார் அரசியல் நிலைப்பாடுகள் கலைக்கு இப்போது அவசியமானதா?

அடிப்படையான அடையாளம் தேவை என்றுதான் சொல்வேன். ஆனால் அவையே பழமைவாதமாக மாறிவிடக்கூடாது. இப்பொழுது அடையாளத்தை சொல்கிறோம். அதேநேரம் அடையாளங்களை, எங்கையோ ஓர் இடத்தில் காட்சிப்படுத்தும் தன்மையை விட்டுவிட்டோம். அந்த நிலைக்கு நாம் உணர்ந்து திரும்ப வரவேண்டும்.

3. நம் நிலத்தில் கலை குறித்த புரிதல்களில் மக்களுக்கும் கலைஞர்களில் இடையே இருக்கும் தொலைவுக்கும் காரணம் என்ன?

பொதுமக்களுக்கும் படைப்பாளனுக்கும் இடையில் படிநிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இந்த கலை ஒருவருக்கு புரியாதென்று சொல்வதும், அதே நேரங்களில், பொதுமக்களைப் பார்க்கையில் இந்த கலைகளை முயற்சி செய்யச் சொல்கிற மாதிரியான நிறைய பொய்த்தனங்களை உருவாக்கியுள்ளது. பிறகு, எங்கோ ஓர் இடத்தில், இதைத் தொடர் சங்கிலியாக செய்யவேண்டும் என்கிற ஒரு பரந்த நோக்கம், சமகாலத்தில் உள்ள நிறைய பேருக்கு இல்லாமல் போய்விட்டது. எப்படி என்றால், நீங்கள் அமெரிக்காவிற்கு சென்றால் அங்கு ஹோவர்ட் பைலையும் (Howard Pyle)  நார்மன் ராக்வெல்லையும், ஃப்ரெட்ரிக் ரெமிங்டனையும், Rose O’Neillஐயும் கொண்டாடுவார்கள். அங்கு எல்லோருக்கும் ஓர் இடம் இருக்கிறது. முதலில் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஓவியர்கள்தான், அவர்களின் ஓவியங்கள் விளக்கப்படங்களாகப் பயன்படுத்தப்பட்டது.

பத்திரிகைத்துறையில் கூட மாதவனையும், கோபுலுவையும் பேசமாட்டார்கள். ஆனால் Off the record எல்லாருக்கும் அவர்கள் மீது நல்ல மரியாதை இருக்கிறது. எல்லோரும் நேரடியாக இயங்குபவர்கள், தளம் வேறாக இருப்பதால் தனித்தனியாகப் பேசவேண்டியதிருக்கிறது.

ஆனால் யாரும் யாரையும் குறைவாக மதிப்பிடுவது இல்லை. என்னைப் பொறுத்தவரை அடிப்படையிலேயே எனக்கு பாப்புலர் ஆர்ட் மேல் பிரியம் இருக்கிறது. நான் அதனாலும் வளர்க்கப்பட்டேன். இங்கு ‘அவன் கெட்டிக்காரன், இவன் கெட்டிக்காரன்’ என்று பேசுவதைவிட அந்தப் படைப்பாளன் எதற்காக வேலை பார்த்தான் என்பதைப் பேசவேண்டும்.  

4. ஒரு காலத்தில் தீவிர இலக்கியத்தோடு நவீன ஓவியங்களும் ஒன்றாக இயங்கியதால், ஓர் ஓவியக்கல்லூரி மாணவனை விட ஓர் இலக்கிய வாசகன் அன்றைய நாளில் நவீன படைப்பாளிகளோடு நெருக்கமாய் இருந்தார்கள். நீங்களும் நவீன கலைகளை விபரணப்படங்களாக கொண்டுவந்து அவற்றை அறிமுகப்படுத்தும் ஓர் இடத்தில் இருந்தீர்கள்? ஆர்ட் கேலரிகளைக் காட்டிலும் ஊடகங்கள் உங்களின் தேர்வாக இருந்ததன் காரணம் என்ன?

தீவிர இலக்கியத்திற்குள் இரண்டையும் இணைத்தது எங்கள் காலம்தான். ஒருபோதும் நாங்கள் பத்திரிகைகளின் சித்தாந்தத்திற்கு தகுந்தவாறு ஓவியங்கள் வரைந்து அந்த பத்திரிகைகளுக்கு டோலக் வாசித்தது இல்லை. படைப்புகளோடு சமமாக, சிற்றிதழ்கள் நவீன ஓவியங்களை மதித்ததும் ஒரு காரணம். அதனால் அப்போது ஒன்றாக இருந்தோம்.

அதே சமயம் ஆர்ட் கேலரி..? ஆம் வரைந்த ஓவியங்களை கேலரியில் வைத்தால் பணம் பண்ணமுடியும், ஆனால் அந்த நேரத்தைத்தான் நான் பத்திரிகைகளில் செலவு செய்தேன். ஆனால் பத்திரிகைகளில் என்ன கொடுப்பார்கள் என்று நினைத்திருந்தால் இதற்குள்ளே போயிருக்கவே முடியாது. என் தகுதிக்கான பணத்தை, பத்திரிகைகள் எனக்குத் தரவும் இல்லை. என் நோக்கம் அதுவும் அல்ல, என் நோக்கம் மக்களுக்கு பத்திரிகைகளின் வழியாகக் கொண்டுசேர்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆதி (ஓவியர் ஆதிமூலம்) சொல்வார், ‘பத்திரிகைகளில் நான் இயங்குவதை நிறுத்தினாலும், நீங்கள் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் மருது’ என்று.  எண்பதுகளில் எங்கள் செயல்பாடுகளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். 

5. நார்மன் ராக்வெல்லின் நேர்காணல்கள் சிலவற்றை வாசித்தால், விபரணப்பட ஓவியர்கள் கலைஞர்கள்தானா என்ற சச்சரவு உலகளவில் இருக்கிற விவாதங்கள்தான். இந்த விழுமியங்களை எப்படி புரிந்துகொள்வது? அல்லது இந்தப் பிரிவுகள் போலியானவையா?      

ஆம், இல்லை என்றால் எதுவும் இணையாது.

சேரன், சோழன், பாண்டியன், திருவள்ளுவர் இந்தப் பெயர்களை நான் சொன்னதும், நம்மால் உடனடியாக காட்சிப்படுத்தக் கூடிய முகம் திருவள்ளுவர் உடையது. சேரன், சோழன், பாண்டியன் இவர்களைத் தமிழ் அறிஞர்களால் வார்த்தையாக மட்டும்தான் சொல்ல முடிந்தது. உங்களுக்கும் எனக்கும் Common Image கிடையாது. நம் தமிழ்நாட்டில் இவற்றை இப்படியெல்லாம் கட்டமைக்கவும் இல்லை.

அப்படி செய்பவர்களையும் ஒரு கூட்டம் புறம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. அதாவது காலத்தோட எல்லா சக்கரங்களையும் நீங்கள் ஒன்றாகத்தான் இழுத்து வரவேண்டும். ஒன்றை விட்டு ஒன்று தனித்தனியாக எல்லாம் போகமுடியாது. எல்லோரும் சேர்ந்து அவரவர் வேலைகளை அவரவர் செய்திடவேண்டும்.

6. வாளோர் ஆடும் அமலையை அதில் ஒரு சிறந்த உதாரணமாக இப்போது என்னால் உணர முடிகிறது.

புரிஞ்சா சரி கரிகாலன்.

7. நவீன ஓவியங்கள், தமிழின் வெகுஜன இதழ்களுக்குள் எப்படி நுழைந்தது?

இப்பொழுது அந்த நிலைமை அப்படியே பரிணமித்துவிடவில்லை என்பதும் வேறு விஷயம்.  

முதலில் நான் இதற்குள் செய்த காரியங்களைச் சொல்கிறேன். சுஜாதாவுடன் ஒரு வருடம் பணிபுரிந்திருக்கிறேன். அதற்கு பெரிய பணமெல்லாம் கொடுக்கவும் இல்லை. சுஜாதா கேட்டுக்கொண்டதால் அவருக்காக அதைப் பண்ணினேன். ஒன்பது வருடத்தில் அன்றைய நிலையில் மாதம் எழுபதினாயிரம் சம்பளம் கிடைத்த வேலையையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

நான் ஒரு freelancer.

நான் நினைத்த பாதையில்தான் நான் போகவேண்டுமென்று நினைத்தேன். நான் பணத்தை பெரிதாக கருதவும் இல்லை. பிறகு சுஜாதாவும் கூப்பிட்டார், இனி என்னால் ஒரு பணியாளராக வேலை பார்க்கமுடியாது என்றேன். பிறகு அவருக்காக ஓர் ஆலோசகராக ஒரு வருடமாக, வாரத்தில் ஒரு மூன்று மணிநேரம் மட்டும் அவர் குமுதம் அலுவகத்தில் இருக்கையில் அங்கு போவேன்.    

குமுதமில் அப்பொழுது புத்தகத்தை இரண்டாகப் பிரித்து வேலை பார்ப்போம். நீங்கள் பார்த்திருப்பீர்கள். அங்கு சீரியஸான மெட்டிரியல் எதையும் உடனே உள்ளே கொண்டு போகமுடியாது. அப்பொழுது இரண்டு குமுதமாக வந்தது. பிறகு கவரோட இணைந்து பைண்ட் ஆகி வந்தது. அதற்குப் பிறகு அந்த கவரை எடுத்துவிட்டோம். அப்படித்தான் வெகுஜன மற்றும் தீவிர இலக்கியங்களை ஃபிசிக்கலாக கனெக்ட் பண்ணினோம். இவை ஒரு வகையான பழக்கப்படுத்துதல்.     

அப்படி பழக்கப்படுத்தியதில், இரண்டாவது பிரசுரத்தில் மார்ஷல் அரிஸ்மனின் (marshall arisman) படைப்பு, அட்டையாக வந்தது. இப்படி எல்லாம்தான் அதைக் கொண்டுவந்தோம். அதன் பிறகு ஓவியக்கல்லூரி மாணவர்களின் ஓவியங்களை, அவர்கள் வைக்கும் ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்று பார்த்து, அந்த ஓவியங்களை வாங்கி, கவிதைகளோடு அந்த ஓவியங்களை இணைத்தோம்.

அதில் கவிதைக்கு ஓவியம் வரைந்தவர் என்று அந்த ஓவியர்களின் பெயர்களை இணைத்தார்கள். அவை புதுக்கவிதைகளுக்காக வரைந்த படங்கள் இல்லை, ஓவியம் என்றுதான் போடவேண்டும் என்று சொன்னேன். இரண்டு படைப்பையும் இணைக்கும் வேலையைத்தான் நாம் செய்யவேண்டும் என்று சொன்னேன். 

இப்படி செய்வதின் வழியாக ஓவியனும் அடையாளப்படுவான், பத்திரிகையும் புதிதாக ஓர் ஓவியத்தை பிரசுரம் பண்ணும். இந்த இரண்டையும் இணைக்கும் வேலையைத்தான் நான் முயற்சித்தேன்.

8. கலைக்கான தேவையைக் காட்டிலும், சமூக அரசியல் தேவைக்காகவாவது இந்த காலத்தில் மேலே நீங்கள் சொன்னது போன்ற ஒரு பொதுவான பிம்பம் தேவைப்படுகிறது என்று உணர முடிகிறது. ஆனால் இந்தச் சமூகத்தில் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு ஓர் ஓவியன் உத்வேகத்துடன் எழுந்துவர முடியுமா? அதுவும் இத்தனை வேகமான காலமாற்றம், பொருளாதார நிர்பந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு?

தமிழ்ச் சமூகம் அடிப்படையில் ஒரு Verbal சமூகம். இதை நான் பலகாலமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். மேடைப்பேச்சால் தான் நீங்களும் நானும் உயிர்ப்பெற்றோம். ஒரு பெரிய கூட்டம் உங்களையும், என்னையும் அடக்கி வைத்திருந்தது. அதை, பெரியார் வந்து உடைத்து படிக்க வழி செய்தார். வேறுபக்கம் நடடா, இவர்கள் சொல்வது எல்லாம் ஒன்றுமே கிடையாது என்றார்.

இப்பொழுது மூன்றாவது, நான்காவது தலைமுறை படித்திருக்கிறது. படித்ததினால் எளிய வேலைகள் செய்ய தமிழ்நாட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லை. வடநாட்டுக்காரர்கள் இங்கு வருகிறார்கள். அதாவது நாம் எங்கு வந்துவிட்டோம் என்றால், விவசாயக்கூலி தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை, கட்டிடத் தொழிலாளி கிடைக்கவில்லை. வேலை பார்க்கக்கூடாது என்று இல்லை. அந்த இடத்தை நம் படிப்பு தாண்டிவிட்டது. அதற்காக வெளிமாநிலங்களில் இருந்து ஆட்கள் வருகிறார்கள்.

இப்படி படித்துவிட்டாலும் நீங்களும் நானும் கனெக்ட் ஆகவில்லை.

சர்வதேச சமூகம் காட்சிப்பூர்வமாக (Visual) கற்றுக்கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

இப்பொழுது எல்லோர் கையிலும் பேனா இருக்கிறது, கேமராவும் இருக்கிறது. இன்னுமொரு ஐந்து வருடத்தில், முகநூல் முழுவதும் வீடியோதான் இருக்கும் (நேர்காணல் செய்த வருடம் 2017) என்றும் இனி யாரும் டைப் பண்ணமாட்டார்கள் என்றும் நான் அதை சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அதாவது மொழிபெயர்ப்பாளர் என்பவர் செத்துவிடுவார் என்று சொல்லியிருக்கிறேன்.

நான் ஒரு 150 மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தால், உங்களுடைய நண்பர்கள் இந்த உலகத்தில் வேற மொழி பேசுபவர்களாய் இருந்தாலும், நான் பேசுவதை அவர்கள் மொழிக்கு மாற்றி, குரல் வழியாக அதைக் கொடுப்பதற்கு மென்பொருள் உபகரணங்கள் வந்துவிட்டது. கிரியேட்டிவ் ஆட்களுக்குத்தான் என்றைக்கும் ஸ்பேஸ் இருக்கிறது. மற்ற வேலை பார்க்கின்ற மக்களுக்கு அவர்கள் வேலையை ரோபோட்டிக் டிவைஸ் காலி பண்ணிவிடும். அதற்கு நாம் ரொம்பதூரம் போகவேண்டும். நாற்பது வயதைத் தாண்டிவிட்டால் நாம் என்ன செய்யவேண்டும், அதற்கு முன்பு நாம் என்ன செய்திருக்கவேண்டும் என அதை யோசிக்கிற நிர்பந்தத்திற்கு உலக மக்கள் வந்தாச்சு.

செய்தித்தாள்கள் எல்லாம் இறந்துவிட்டது. அச்சுக்குப் போய் வருவதற்குள் எல்லாத் தகவல்களும், செய்திகளும், இணையம் வழியாக நம்மை வேகமாக வந்தடைகிறது. அப்போ செய்தித்தாள்களுக்கான பிரிவில் இருக்கின்ற அத்தனைப் பேரின் உழைப்பும் வீணாகிறது.

என்னுடைய அபிப்பிராயம் புத்தகம் அவசியம் வேண்டும் என்பதுதான். என் ஐபாட்டில் இருநூறு புத்தங்களை வைத்திருக்கிறேன். இதே எண்ணிக்கையில் புத்தகங்களை நினைத்த இடத்திற்கு எடுத்துச்செல்ல முடியுமா? புத்தகத்தில் படித்தால்தான் படித்த மாதிரி என்று சொல்வதெல்லாம் சென்டிமென்ட்.

கேலரிகள் மட்டுமில்லை, இனி வரும் ஓவியர்களுக்கு இங்கு வேறு நிறைய இடங்கள் வந்துவிட்டன.   

9. இந்த மாற்றங்களை எல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது?

காமிக்ஸ் புத்தகங்கள் எதுவும் வெளியாகவில்லை. காமிக்ஸ் புத்தகம் டிரான்சிஸ்ட் ஆகின்றது. கிராஃபிக் நாவல் என்று எண்பதுகளில் முன்னணியில் வருகின்றபோது, நான் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டு அவற்றோடு நகர்ந்துகொண்டு இருக்கிறேன்.

நான் முதல்முதலாய் கணினியை பயன்படுத்தும்பொழுது, காமிக்ஸ் புத்தகங்களை வடிவமைக்க மேக்கிண்டோஷ் கணினியைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தார்கள்.

Ashley Wood, Dave Mckean, Moebius ஆகியோரைத் தெரியுமா? அவ்ளோ இண்டென்சிவா அவர்கள் காமிக்ஸ் புத்தகத்திற்கு வொர்க்  பண்ணியிருக்கிறார்கள். இந்தமாதிரி காமிக்ஸ் புத்தக ஆர்டிஸ்ட்டோட வேலைகளை, நீங்கள் ஃபைன் ஆர்ட் என்றும் சொல்லிவிடமுடியாது, ரிட்டன் வொர்க் என்றும் சொல்லிவிடமுடியாது, ஏனென்றால் எல்லாமே இங்கு இணைந்துவிட்டது.

ஐந்து  பக்கங்கள் காமிக்ஸ் புத்தக வடிவிலும், ஐந்து பக்கம் எழுத்து வடிவமாகவும், ஐந்து பக்கம் ஓவியங்களாகவும் இருக்கிறது. எல்லா வடிவங்களும் கலந்துவிட்டது. பிகாஸோவின் நிறைவேறாத கனவாக காமிக்ஸ் இருந்தது எனச் சொல்வார்கள்.

ஜெயமோகன் மாதிரி ஒரு ஆள் 20000 பக்கம் அளவுல புத்தகம் எழுதுறாங்க இல்லையா, அது ஓர் அம்மிக்கொத்துவது தான். இதனை இப்போது எத்தனைப் பேர் படிப்பார்கள்?

குறும்படங்களே இப்பொழுது இன்னும் சுருக்கமாகிவிட்டது. Short film has to be short என்று சொல்கிறார்கள். அரைமணிநேரக் குறும்படத்தை யார் பார்க்கிறார்கள்? இரண்டு நிமிடங்கள்தான் அதற்கான ஐடியல் டைம். ஃபிலிமில் இருந்து க்ளிப்ஸ் ஆகிவிட்டது.  நான் அடிக்கடி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

மீம்ஸ் நம் சமூகத்திற்கு வந்தது, Visual culture இங்கு பெரிதாக இல்லாததினால் தான்.

தற்பொழுது இங்கு யார் சர்வீஸ் பண்ணுகிறார்கள் என்று கேட்டால், வடிவேலுதான் இருக்கிறார். இங்கு Common Image ஆக வடிவேலுதான் இருக்கிறார்.

10. மீம்ஸை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மீம்ஸை நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், இனி நாம் காட்சிகள் வழியாகத்தான் பேசவேண்டும். ஒரு பத்துவருடங்களுக்கு முன் என்ன சொன்னார்கள் என்றால், animation is actually global art அதுதான் இனி மொழி.  இவற்றை எங்களை மாதிரி அனிமேஷன் பக்கம் ஆர்வமாக இருக்கிற ஆட்கள் ஏற்றுக்கொண்டோம்.

அறுபது, எழுதுபதுகளில் நான் மட்டும்தான் அனிமேஷன் பற்றிய பேச்சை எங்கள் ஓவியக்கல்லூரியில் பேசுகிறேன். எங்களுடைய ஆசிரியர்களுக்கும் அதன் மேல் ஆசை இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு பேசத்தெரியாது, பெருசா Exposure கிடையாது. அனிமேஷன் துறையை Art Form ஆக யாரும் யோசிக்கவில்லை. எனக்கு அப்படி இல்லை. நான் வளர்ந்துவந்த விதம் அப்படி. காமிக்ஸ் புத்தகம், அனிமேசன் ஃபிலிம், பெயிண்டிங், இந்த மூன்றையும் கலந்துதான் நான் பார்த்துக்கொண்டே வந்திருக்கின்றேன். ஆகையினால்தான் நான் சீக்கிரம் கணினியைத் தெரிந்துகொள்ள முடிந்தது. நான் அடுத்ததாக Virtual Realityயில் பெயிண்ட் பண்ணும் இடத்திற்கு வந்துவிட்டேன்.

நான் காலத்தோடு ஓடிக்கொண்டே இருக்கிறேன். இங்கு இருக்கிறவர்கள் இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதும் இல்லை, அப்டேட்டும் ஆகவும் இல்லை. அப்படி ஆகாது இப்போதைக்கு, தான் இயங்குவதற்கு தன்னைச்சுற்றி இருக்கிற இளைஞர்களையும் கண்ணைக்கட்டிவைத்துக் கொண்டே இருக்க, முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அதுதான் தவறு.

11. உலக அளவிலான கலை என்னவாக இருக்கிறதோ, அதை சமகாலத்தில் நீங்கள் முயற்சித்துக்கொண்டே இருக்கிறீர்கள். நாங்கள் இப்பொழுது செல்ல விரும்புகிற சர்வதேசக் கண்காட்சிகளையும், நீங்கள் இருபது வருடங்களுக்கு முன்னே போய் பார்த்ததாக சொல்கிறார்கள். ஒருபுறம் தமிழ்ச் சமூகத்தோட வளர்ச்சியை நாம் ஒத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் இந்த உலக வளர்ச்சிக்கு இணையா அப்படிங்கற தொடர்பறுந்து போனதற்கு அரசியல்ரீதியான தாக்கங்கள் இருக்கிறது. இவற்றை எப்படி அணுகுகிறீர்கள்? 

எப்பொழுதும் ஓர் இயக்கம், உண்மையான இயக்கத்தை இயங்க, அரசியல் நிலைப்பாடு இங்கு விடவில்லை. ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சமூகம் அதை அடைத்து வைத்திருந்தது, அவற்றை முதலில் உடைக்கிறது. பெரியார் வருகிறார் எல்லோரும் படிப்பதற்கான இடம் வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத சமூகச் சீர்திருத்தம், தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. இப்பொழுது பேசுகிற அடிப்படைவாதிகள் அவற்றை மடைமாற்ற முயற்சிக்கிறார்கள். அதுவல்ல இது.    

பிறகு அரசு அவற்றைக் கையில் எடுக்கிறது. எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் வருகிற ஊழல். அதே நேரங்களில்தான் சோ மாதிரியான ஆள், திராவிட இயக்க வரலாற்றை முழுதும் ஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் ஏன் சொன்னார் என்றால், அவர் தன் அதிகாரத்தை இழந்துவிட்டார். யாரை எதிர்த்தாரோ அவர்களிடம் முழு அதிகாரமும் போய்விட்டது. சோ, சமூகநீதி பற்றி ஒருநாளும் பேசவில்லை. நாற்பத்தைந்து வருடம் பத்திரிகையாளராக இருந்து, ஒருநாளும் அவற்றை எழுதவில்லை. இவற்றுக்கு மாற்றுக்கருத்து சனாதனம் கிடையாது. எல்லா நெளிவுசுளிவுகளோடு கருணாநிதி தலைமை ஒன்று இருந்தது. எம்.ஜி.ஆர் நிகழ்த்தியது அல்லது அவர் நடந்துகொண்டது அதற்கு உதவியிருக்கிறது.

பெரியார் உங்களை ஒன்றுநடத்தியிருக்கிறார். இந்தத் தலைமைகளில் உங்களுக்கு கிடைக்காதது அல்லது அவர்கள் தவறவிட்டவைகளையோ, அடைந்தவைகளையோ தாண்டித்தான் அடுத்தத் தலைமையை நாம் கொண்டுவந்திருக்க வேண்டும். நாம் நடந்துவந்த பாதைக்கு மேல் ஏறிதான் தலைமையைத் தேடவேண்டுமே தவிர, பழையவை சரி என்றும் இன்று இருப்பது தவறு என்றும் கிடையாது. என்னுடைய அபிப்பிராயம் தமிழ்நாட்டில் இருக்கிற இளைஞர்கள் அவற்றைச் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தப் பயம் எனக்கு எப்படி வந்தது என்றால், there are people – பிளாஸ்டிக் ஆர்ட்டை  மதத்தோடு சேர்ந்துப் பார்க்க நிறையபேர் கிளம்பிட்டார்கள். அது அப்படி இல்லை. முதலில் கலையையும், மதத்தையும் தனியாக படிப்பதற்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். இங்கு திரும்ப அதை இணைக்கப் பார்க்கிறார்கள். அதாவது சில இடங்களில், சுற்றுலா மாதிரி அழைத்துக்கொண்டு போய், பண்டையகால இடங்களைக் காட்டுகிற மாதிரி. சில பேரையெல்லாம் கவனித்தேன். சில பேரெல்லாம் ஸ்தல புராணம்தான் பேசுகின்றான், வரலாற்றைப் பேசுவதில்லை. அவையெல்லாம் தவறு, கட்டுக்கதை. ஸ்தல புராணம் கட்டுக்கதை. ஒரே வள்ளி ஒவ்வொரு கோயிலிலும் முளித்திருப்பார் என்று எல்லாம் அந்த அந்த ஊருக்கு தகுந்தவாறு அவரவர் சொல்லுவார்கள், அவையெல்லாம் Myth. அதேமாதிரி விநாயகர் இங்குதான் குளித்துவிட்டு எடுத்திட்டு போனார் அது எல்லாம்தான் ஒன்பதானது, ஆயிரமானதென்று சொல்லுவார்கள். அதெல்லாம் கட்டுக்கதை. மக்கள் கட்டுக்கதைகளால இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தக் கதைகள் தேவையாக இருக்கிறது, வாழ்வதற்கு அந்த நம்பிக்கைத் தேவையாக இருக்கிறது.

நீங்கள் துறவிகளை நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் பல்வேறுவிதமான அறிவியல், அதோடு நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார்கள். கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தால், ஊரைவிட்டு வெளியில் நாற்பது கிலோமீட்டர் வரையிலும் கூட போகாமல் இறந்து போனவர்கள் கூட, ஒரு காலத்தில் இருந்திருப்பார்கள். படைவீரர்கள் வெளியில் போயிருப்பார்கள், அதோடு அறிவைத் தேடிப் போகிறவர்களும் வெளியில் போயிருப்பார்கள். எனக்குத் தமிழ் புலமை இருக்கு, என் டிராவலே அவைத்தான் என்று, நான் போய் வந்து நடராஜர் இந்த காலைத் தூக்கி ஆடினார், பாடினார் என்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் பயண அனுபவம்தான். அவற்றால் கலைக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லை. நீங்கள் அவற்றை அப்படித்தான் பார்க்கவேண்டும். இங்கு நமக்கு அவற்றை வேறுமாதிரி பழக்கி வைத்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் முதலில் அந்தப் பிடியில் இருந்து வெளியில் வரவேண்டும், அப்பொழுதுதான் தமிழனோட மேன்மையை, தனியாகப் படிக்கமுடியும். இன்று தமிழை, நீங்கள் இந்தியாவில் இருக்கிற ஒரு எல்லையோடு அதைப் பார்க்கவேண்டியது இல்லை. இப்போது உலகம் முழுவதும், அதாவது நானூறு வருடங்களில் இங்கிருந்து வெளியில் போன தமிழர்களை, ஒருங்கிணைக்கும் பட்சத்தில் நீங்கள் தமிழைப் பேசுகிற உலக மக்களைக்கொண்டே அவர்களுக்குத் தேவையானதைக் கட்டியெழுப்ப முடியும்.

இங்கிருந்து புலம்பெயர்ந்து போன ஒரு குடும்பத்திலேயே, அண்ணன் லண்டனிலும், தங்கை கனடாவிலும், இன்னொருவர் ஜெர்மனியிலும் வாழ்கிறார்கள். ஆனாலும் கூட தமிழ் அவர்கள் அடையாளமாகவும் இருக்கிறது.

தமிழன் அந்தகாலத்திலேயே மொரிசியஸ் போயிருக்கிறான். அவன் வாழ்க்கையை எல்லாம் நாம் பேசவேண்டும். அந்த வலியை இப்போது இருக்கிற பிள்ளைகள் படிக்கவேண்டும். இவையெல்லாம் மறைக்கப்பட்ட ஒன்றுதான். அவற்றையெல்லாம் நாம் இணைக்கவேண்டும். கடவுள் நம்பிக்கை தனி, உலகம் முழுவதும் கிறிஸ்துவர் இருக்கிறார்கள். யாரும் கிறிஸ்துவர் என்று சொல்லிக்கொள்வது இல்லை.    

ஜெர்மானியன், ஜெர்மானியன் என்றுதான் சொல்கிறான். ஆனால் ஜெர்மானியனுக்குள் இருக்கிற கிறிஸ்துவம் வேறு, இயேசுநாதர் ஒன்றுதான். ஆப்பிரிக்காவில் இருக்கிற இயேசு கருப்பாக இருப்பார். அனுமான் நூறுகிலோமீட்டருக்கு ஓர் இடத்தில வேறுவேறாக இருக்கிறார். அவை என்னவென்றால், கதைகளோடு என் நற்பண்புகளையும் என்னுடைய கலாச்சாரத்தையும் நான் இணைத்துக்கொள்கிறேன்.  

இல்லையென்றால் சோழர்களின் வெங்கலத்தை (Chola bronze) அப்படித்தான் ட்ரீட் பண்ணவேண்டும்?

கல்யாணசுந்தரர் சிற்பத்தைப் பார்க்கும்பொழுது சிவனும் பார்வதியும்தான் தெரியும். அவற்றைத் தாண்டி பார்க்கும்பொழுது தான், சோழ சமூகம் தெரியும். அந்தச் சமூகம் எப்படி? ஒரு கலைஞன் எப்படி வந்தார்? எவற்றையெல்லாம் செய்தார்? அப்பொழுது அந்தச் சமூகம் அவரை எப்படி வழிநடத்தியது? அப்படி ஒரு சமூகம்தான் அந்தக் கலைஞனை அப்படி செய்வதற்கு தூண்டுகிறது. அவனுக்கு ஒரு மதம் சார்ந்த தாத்பரியம் இருக்கிறது. ஆனால், நான் இப்பொழுது சொல்வது, அதற்காக ஒரு நாடராஜர் சிற்பத்தை இப்பொழுது செய்யவேண்டும் என்று அல்ல.

அந்த இலக்கணம் நமக்கு வேண்டும் என்று பேசுகிறவன் முட்டாள். அது அயோக்கியத்தனமும் கூட.

வாழ்க்கையில் நமக்கு தேவையானவற்றை எல்லாம் நாம் அடாப்ட் பண்ணிக்கொள்கிறோம். அவன் வந்து நம்மை மடைமாற்றி, மத நம்பிக்கைகளோடு கொண்டுபோகிறான். அங்குதான் நீங்கள் பார்த்து, வரைந்துப் பழகவேண்டும். இயற்கையைப் பார்த்து வரையவேண்டும். வரைதல் பற்றி சொல்லவும்தான் ஞாபகம் வருகிறது. இங்கு அரூப ஓவியங்களை மட்டும் வரைபவர்கள், மற்றவர்களை ஏளனப்படுத்துகிற காட்சியும் இருக்கிறது. அது, Draftmenship-யே ஏற்றுக்கொள்ளாத தொனி தானே?

முட்டாள் மாதிரி பேசுகிறான். நகல் எடுப்பதென்றால், ஒரு பெண்ணைப் பார்த்துத்தான் பார்வதியை  செய்கிறான். ஆனால், அவனுக்கு அன்று ஓர்  இலக்கணம் வேண்டியதாக இருந்தது.  பெண்ணை வந்து உருவகப்படுத்துகிறான். பிறகு தத்துவங்கள் வழியாகவும், உள்ளிருந்து புறமாகவும், புறத்திலிருந்து உள்ளாகவும் இப்படி இரண்டு தன்மை இருக்கிறது இல்லையா? இந்தத் தன்மைகளை அன்று வரைக்கும், அதாவது கண்டங்கள் இணையாத வரையில்தான் அவையெல்லாம்.

ஆனால் இவையெல்லாம் எங்கோ எப்பொழுதோ கலந்துவிட்டது. நீங்களும் நானும் பயன்படுத்துவதை, அவன் பயன்படுத்துகிறான். அவன் பயன்படுத்துவதை நாம் பயன்படுத்துகிறோம். நாம் இப்பொழுது உலகப் பிரஜைகள். மதம் சார்ந்த அம்சங்கள் எதுவும் கிடையாது.

அப்போ உங்களுக்கென்ற அடையாளம் எதுவென்றால், மொழியியல் ஊடாகக் கூடி நம்முடைய வாழ்க்கை முறையும், அதில் இருக்கின்ற நெறிமுறையையும் பண்பையும் நாம் பதிவு செய்யவேண்டும். நான் எங்கு நெகிழ்கிறேன் தெரியுமா? சண்டை போடும்போது எதிராளியுடைய ஆடை அவிழ்ந்தால் சண்டை போடுவதை நிறுத்திடச் சொல்கிறது. அங்குதான் பண்பு இருக்கிறது. அதைத்தான் சொல்லவேண்டும். குறள் என்னவெல்லாம் சொல்கிறது! நான் குறளைப் படிக்கும்போதும் கேட்கும்போதும் நெகிழ்கிறேன்.

பிறகு நம் கட்டடக்கலைகள் எவற்றை முன்னிறுத்தி பேசுகிறது? திண்ணை கட்டியிருந்தான். எவ்வளவு பெரிய திண்ணை! அவை நமக்காக இல்லை. மற்றவங்களுக்காகக் கட்டியது. நாம் இதெல்லாம் சொல்லிக்கொடுப்பதை விட்டுவிட்டு,  மடைமாற்றி கோயிலுக்குள்ள கொண்டுபோய்… நடப்பது எல்லாமே தப்புதானே? கோயிலைக் காப்பாற்ற நாங்களும்தான் சொல்கிறோம். இதை மாற்றுகிறவர்களுக்கு பின் இருந்து போறவனும் இவன்தான், அதாவது மேலே போய் சுண்ணாம்பு அடிச்சவனுக்குப் பின்னாடி இருந்தவனும் இதே மடாதிபதி. இந்தச் சிற்பங்களை செய்ததும் நாம், இவற்றைக் காப்பாற்ற வேண்டுமென்று நினைப்பதும் நாம். இடையில், நீ திரும்பவும் எங்களை வேறுமாதிரி தவறாக வழிநடத்துகிறாய். இவற்றையெல்லாம் சொல்லவேண்டும். ஆக, இவற்றை எல்லாம் காட்சிப்படுத்த வேண்டியது மிகமிக அவசியம்.

இங்கிருக்கின்ற இந்தப் படிநிலைகள் எல்லாம் முட்டாள்தனம். இதுநாள்வரை நான் இவற்றுக்காக கேள்வி கேட்கின்றேன், இப்பொழுது இந்தப் பாடத்திட்டங்களை மாற்றவேண்டும் என்ற  முயற்சியோடு, அனந்த கிருஷ்ணன் மாதிரி குறிப்பிடத் தகுந்த ஆட்கள் வருகின்றபோது, அது வேறமாதிரி ஆகிறது. நாம் சொன்னா கேட்கிறார்கள், முக்கியமான அதிகாரிகள் தமிழ் மேல் ஒரு காதலோட இதைச் செய்யவேண்டும் என்ற அதிகாரிகளோட ஒரு கூட்டமும் வந்துவிட்டது.

அதேமாதிரி காமிக்ஸ் வடிவில், குழந்தைகளுக்கு நாலுமாடு இருக்கும், ஒரு நரி  போய் அவற்றைப் பிரிக்கும், இப்படி ஒரு நாலு, ஐந்து கதைகளைத் தவிர, காமிக்ஸ் புத்தகவடிவில் கடந்த ஐம்பது வருடத்தில் ஏதாவது வந்திருக்கிறதா நம் பாடப்புத்தகத்தில்?
 

12. பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட உருவாக்கத்தில், இப்பொழுது ஓவியர்களுக்கு இடம் கொடுத்திருகிறார்கள், விபரணப் படங்களுக்கான முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் பயணிக்கவேண்டிய தூரங்கள் என்ன?

இடம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பள்ளியிலும் ஓவிய ஆசிரியர்களை கடைநிலை ஆசிரியர்கள் போல் நடத்தப்படுவதை மாற்ற வேண்டும் என்று வலியுருத்தியிருக்கின்றேன். ஓவியமும், அறிவியல் போல் ஒரு பாடமாக வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஸ்டுடியோ, கிரியேட்டிவாக ஓர் இடம் இருக்கவேண்டும் என்று சொல்லி வலியுறுத்திக்கொண்டே இருக்கிறேன். அதே போல் பாடத்தில் தொழில்முறைக் கல்வி (Vocational) இருந்தது.

கல்வித்திட்டம் தொடர்பாக இப்பொழுதுதான் அதிகமாக விவாதத்திற்கே வந்திருக்கிறோம். அதுவே பெரிய மகிழ்ச்சி. இப்பொழுது இதைக் குறித்து பேசுவதற்கும் கேட்பதற்கும் காதுகள் இருக்கின்றன.  இவற்றை நாம் ஒரு முப்பது, நாற்பது வருடமாக சொல்லிகொண்டேதான் இருக்கிறோம். யார் காதிலும் விழவில்லை.

என்னைப் பொறுத்தவரை நிறைய தமிழ் அறிஞர்களுக்கு, காட்சியை எப்படி பார்க்கப்படணும் என்பதைப் பொறுத்தவரை, தீபாவளி மலர் அறிவைத் தவிர வேறு கிடையாது. அதாவது கல்கிக்கு பொன்னியன் செல்வனுக்கு ஓவியம் வரைந்தவர் மணியம். கல்கியோட இலக்கியம் எல்லாம் வாரப் பத்திரிகை என்று ஒன்று தோன்றி மக்களை வந்து அடைய, அவற்றை வாங்கிப் படிக்க மக்களைத் தூண்டுவதற்காக எழுதப்பட்ட கதைகள். வாரா வாரம் நீங்கள் வாங்கி படித்தே ஆகவேண்டும். அவருக்கு தஞ்சை மாவட்டத்தின் மேல் இருக்கிற இணக்கமும், அதேமாதிரி சரித்திரக்கால விஷயங்கள் மேல இருக்கிற பார்வையும், கூடவே அவர்களுக்கான திறமையை வெளிக்கொண்டு வந்ததும்தான்.

பிரிட்டிஷ்காரன் வந்து அதற்கு முன்னாடி செய்தவையெல்லாம், அவர்கள் பார்ப்பதற்கானது, வேறு சிலர் புத்தகங்களைப் பார்த்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அங்கு இருக்கிற வரலாறு, மன்னர்கள் பற்றிய விஷயங்கள் எல்லாம். பத்திரிகை என்று வரும்போது, அதற்கு முன் ஓவியர்கள் மட்டானி, பாலி, ஆர்தர் ரஹம் என்று இருந்தார்கள். இவர்கள் எல்லாம் உலக இலக்கியத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பத்திரிகை ஓவியர்கள் மணியம், கோபுலு போன்றவர்களுக்கே இவர்கள்தான் வழிகாட்டி.

ரொம்ப சிலபேர்தான், எங்களுக்கு நாங்கள் பார்க்கத் தகுந்த விதத்தில் முன் இருந்தார்கள். அடுத்து வந்தவர்கள் எல்லாம் கீழ் இறக்கி இறக்கி, கொண்டுபோனார்கள். மக்களோடு தொடர்பு இல்லாத, தனக்கு கீரிடம் இருக்கிறது, அதெல்லாம் செய்யக்கூடாதென்று நினைத்துக்கொண்டு, அதோட செய்நேர்த்தி இல்லாதவர்கள் எல்லாம் சேர்ந்து அதற்குள் போய் உட்கார்ந்துகொண்டார்கள்.

13. செய்நேர்த்தியை இரண்டாம் தன்மையாக பகடி செய்யும் மேதமைகள் பற்றி?

Draftmenship-பை கேலி பண்ணுகிறவர்கள் போலிகள். அது ஒரு தவம் மாதிரி. ஒரு மொழியைப் படிப்பது போல. நீங்கள் அ, ஆ என்னவென்று தெரியாமல் தமிழை எப்படி எழுதுவீர்கள்? மொழிப் பாண்டித்தியம் வந்துதான், ரெண்டு வரியில் குறள் எழுத முடியும். அவை இல்லாமல், நீங்கள் எப்படி அதை செய்யமுடியும்? ரூபம் தெரியாமல் அரூபம் எப்படி வரைவது என்றால், உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். எனக்கு ரூபம் தெரியவேண்டும், அப்போதுதான், நான் அரூப நிலையில் பல அர்த்தங்களோடு கூடியதாக, நீங்கள் நினைக்கின்ற மாதிரி நான் பேசமுடியும். அப்போதுதான் அதில் Subtext இருக்கும்.

14. அப்போ போலிகள்?

தொண்ணூறு சதவீதம் போலிகள்தான். இந்த சமூகம் எதெல்லாம் போலி என்று எப்பொழுது கண்டுபிடிக்கும் என்றால், கோடும் வார்த்தையும் வேறு வேறு இல்லை என்பதை எப்பொழுது படிக்கிறதோ, அன்றைக்குத்தான் இது சாத்தியம். கோடு என்பது வார்த்தைத்தான். Line is a kind of an organized talk, when of an artist – Monologist.

என் கோட்டை நீங்கள் படிக்கத் தெரிந்துகொண்டால்,  அதுதான் முக்கியமான விஷயம். அப்பறம் எப்படி ஒரு கட்டத்தை நான் நிர்மாணிக்கிறேன், எப்படி மாஸ்டர்ஸ் ஒரு சட்டகத்தை எழுப்புகிறார்கள் என்று அந்த அறிவை, ஒரு படத்தை, எப்படி நீங்கள் படிப்பது, ஒரு திரைப்படத்தை எப்படி நீங்கள் படிப்பது? ஓவியத்தை எப்படி படிப்பது? புகைப்படத்தை எப்படி படிப்பது? இது மாதிரியான ஒரு படிப்பு பள்ளிக்கூடத்தில் கடந்த ஐம்பது வருடத்தில் இல்லை. வேலை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று புரிகிறதா?

15. இன்றைய நம் அரசியல் நிலையில் கலைஞர்களுக்கு நிறையவே நெருக்கடிகள். ஆனால் இதுபோன்ற நெருக்கடிகளை கலையும், இலக்கியமும் எதிர்கொள்ள போதுமான ஆகிருதி இருக்கின்றதா?  

சமூகம் ஒரு நெருக்கடி கொடுக்கிறது. சமூகத்தை திசைத் திருப்ப, மடைமாற்ற, புத்திசாலிகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதை நேரடியாக அவர்கள் செய்வதில்லை. கலை உறங்கிய மாதிரி இருக்கும், ஆனால் வெடிக்கும். நாஸிசத்தை எதிர்த்து டாடாயிஸம் மொமண்ட் அப்படித்தான் வந்தது. இந்த மாதிரியான இக்கட்டான அரசியல் சூழலில் வேலை செய்பவன்தான் மாற்றங்களை உருவாக்குகிறான்.

ஜக்காடு (Jacquard) ஒருத்தர் கண்டுபிடிக்கிறார். இந்த ஜக்காடோட தன்மைதான், அடுத்த இடத்துக்கு பிரிண்டிங் டெக்னாலஜியைக் கொண்டுவருகிறது. ஒரே நேரத்தில் பிரிண்டிங்கில், ஆப்செட் பிரிண்டிங், லித்தோ பிரிண்டிங், கலர் பிரிண்டிங் என்றும் அதோட தொடர்ச்சியாக கலர் டிவி வரைக்கும் வந்திருக்கிறது. பின்னர் கணினி வரவும் அது உதவுகிறது.

16. இன்றைய அரசியல் சூழலில் கலைக்கான இடம், அதற்கான நம்பிக்கைகள் எப்படி இருக்கிறது?

உண்மையாக சொல்லவேண்டும் என்றால் நீர்த்துப் போகவில்லை, அதாவது கருகிப் போகவில்லை. ஆனால், ஓர் ஆபத்து இருக்கிறது. எல்லா நிலையிலும் விழித்துச் செயல்படவேண்டிய, மிகமிக முக்கியமான தருணத்தில் தமிழ்நாடு இருக்கிறது. இல்லையென்றால், அது தேடுகிற அடையாளத்தைக் கண்டிப்பாக இழக்கும்.

உலகில் வளர்ந்த நாடுகள் என்றால், ஃபிரஞ்சையும் ஜப்பானியர்களையும் சொல்கிறோம்.

ஆனால் இனிமேலும் மேடைப்பேச்சு மயக்கத்திலேயே  இருக்கவேண்டியது இல்லை. மேடைப்பேச்சு நம்மை உயிர்பித்தது. அவற்றைச் சொல்லாமல் தவிர்க்கமுடியாது. ஒருகாலத்தில் திராவிட இயக்கம் வந்து பண்ணிய பத்திரிகைகளில், நான் பார்த்த சித்திரங்கள், இதழ்கள் கடை முழுவதும் தொங்கும்.

நான் சொல்லறது 62-ல். நான் ஒரு மூன்றோ, நான்கோ படிக்கின்றேன். அப்போ கண்ணன் பத்திரிகை (சிறுவர் இதழ்*) வாங்கிப் பார்ப்பேன். அந்த ஆர்வம் அப்படி வந்தது, கண்ணன் வந்திருக்காவென்று கேட்பேன் கடையில் இருக்கிறவர்களிடம், நாளைக்குத்தான் வருமென்று சொல்லுவார்கள். அதாவது மதியம்வரை கூட பொறுக்கமாட்டேன். திரும்ப அந்த கடைக்குப் போவேன். நாளைக்கு ‘வா’யென்று திட்டுவார்கள். அடிக்கடி அந்த பத்திரிகை வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டே இருப்பேன். அப்போது கடையில் தொங்கும் பத்திரிகைகளில் நாற்பதுக்கும் மேற்பட்டவை திராவிட இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டவையாக இருக்கும்..

திராவிட இயக்கக் கட்சி நடத்திய, கட்சிக்காரர்கள் நடத்திய இதழ்கள் பெரும்பான்மை. அவற்றில் இருந்த பழைய வேலைப்பாடுகள், ரூசோ பற்றி, உலக நாடுகளில் இருக்கிற இலக்கியங்கள் பற்றி, அறிஞர்கள் பற்றி, அத்தனையான விளக்கங்களும், தகவல்களும், படங்களும் எனக்கு கண்ணன் இதழில்தான் தெரிந்துகொள்ள முடிந்தது. அப்போது இதழ்கள் எல்லாம் டேப்ளாய்ட் சைஸ் தான். அப்போது இதழ்கள் செய்துவந்த அந்த அற்பனிப்பான சேவையை, அந்தக் காரியங்களை ஒருபோதும் எழுபதுகளுக்குப் பிறகு பார்க்கமுடியவில்லை. 

நவீன ஓவியத்திற்கு போனோமே தவிர, கலந்துரையாடல்கள், விவாதங்கள் இதெல்லாம் விட்டுவிட்டது.

இப்போ நீங்க நன்றாக பார்த்தால் தெரியும், எனக்குத் தெரிஞ்சு ஒரு பதினைந்து வருடத்தில், நாங்கள் எல்லாம் இணைந்து வேலை பண்ணிட்டு இருந்தபோதும், அதன் பிறகும் வந்த எந்த பத்திரிகைகளிலும், எந்த பத்திரிகையோட பதிப்பகமும், ஓவியத்தை பொருட்டா நினைக்கவே இல்லை. அது முழுதும் நீர்த்துப் போயிடுச்சு. அவர்களை யாரும் போஷிக்கவும் இல்லை. சிறு பத்திரிகை முதலாளிகள், பெரும் பத்திரிகை முதலாளிகளாக மாறிவிட்டார்கள். ஆனால் கூட ஓவியர்களுக்கு கொஞ்சமாவது பணம் கொடுத்து போஷிக்க வேண்டும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இப்போ சமகாலத்தில் கடினமாக வரையும் ஒருவரைக் கண்டுபிடிப்பது அரிதாக இருப்பதாக, அவர்களே குறையும் பேசுகிறார்கள்.

ஓவியர்களையும் அவர்களது குறுகிய மனப்பான்மை பிரித்து வைத்திருக்கிறது.

ஓவியர்களின் வளர்ச்சியில், அவர்களே குறுக்கிட்டார்கள். இவனைவிட நான், என்னைவிட அவன், ஐந்து கொம்பு அதிகமா முளைத்துவிட்டதாக நினைக்கிறார்கள். பொது மனநிலையில் அவர்கள் இல்லை.

அப்பறம் குழு சேர்ந்து ஒருவரை ஒருவர் பேசிக்கொள்வது, நோக்கமும் தவறாக போய்விட்டது.

இங்கு பரந்த மனப்பான்மை யாருக்கும் இல்லை. அவன் அவன் பிழைப்பதற்காக போனால் கதவை சாத்துவது, ஏன்னா அவன் பிழைக்கவேண்டியது இருக்கிறது. போட்டி வந்துவிட்டது. கார்டியலா இருக்க மனம் வரவில்லை. நீங்கள் செய்கிற கலைவடிவமே உங்களைப் பண்படுத்தவில்லை என்றால்.. உங்க கலைவடிவம் வேறு யாரைப் பண்படுத்தும்? ஓவியக்கலைக் கல்லூரிகள் இன்னும் அப்டேட் ஆகவில்லை. அனிமேஷன் என்று  சொன்னதும், அனிமேஷன் ரொம்பத்தான் பாடாப்படுத்துகிறது என்று ஒருகாலத்தில் என்னிடம் பகடி செய்தவர்கள் எல்லாம், அனிமேஷன் இன்ஸ்டிடியூட்டுக்குப் போய் ஓவியத்தை சொல்லிக்கொடுக்கிற இடத்துக்கும் போனார்கள். காலம் வந்து தள்ளுகிறது. முதலில் அவர்களுக்கு வேறமாதிரி தெரியுது. நான்  யூகித்துத்தான் நடக்கிறேன். என்னுடைய தளம், எனக்கான தளமாக இருக்கவேண்டும். என்னை யாரும் வழிநடத்தக்கூடாது. ‘நீ இதைச் செய், அதைச் செய்’ என்று. இதுவரை என்னை யாரும் சொல்லவும் இல்லை.

நான் அரசுக்கு செஞ்ச வேலையை, அரசு அதை ஏற்றுக்கொள்கிற இடத்தில், அந்த விதத்தில்தான் செய்திருக்கிறேன். இல்லை என்றால் எனக்கு வசதியான இடத்திற்குள் நான் வேலைப் பார்ப்பேன். ஏன் சினிமாவிலும் பெரிய நடிகர் அழைத்து வேலை கொடுக்கிறார் என்றாலும் நான் இயங்கும் முறைக்கு புறம்பானதாக இருந்தால் முடியாது என்றே சொல்லியிருக்கிறேன்.

17. ஏன் அந்த செயல்பாடு நின்றுபோய்விட்டது?

ஏன் என்றால் 80-களுக்கு பிறகு விஷுவல் கம்யுனிகேசன் என்றும், டிவி என்றும் வந்துவிட்டது. நம்மை தொடர்புகொள்வதற்கு வசதிகள் வந்த பிறகு, டிவி, இணையம் இவையெல்லாம் வந்துவிட்டது. இவை வந்ததும், இலங்கை பிரச்சனை உலகத்திற்கு தெரியவேண்டிய இடத்தை, இணையம் கொண்டுவந்தது. இங்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களுக்கே அந்தச் செய்திகள் வரவிடாம இருப்பதற்கு, சில கண்காணிகள் வேலை பார்த்தார்கள். அதையெல்லாம் உடைத்தது இணையம். இணையம் மூலமா வெளியில் நடப்பதை உள்ளே சொல்லவும், உள்ளே நடப்பதை வெளியில் சொல்லவும் இணையம் பயன்பட்டது.

அதன்பிறகு தொலைக்காட்சி அவசியமானதாக வந்தவிட்டது. இப்போது யூடியூப், இப்படி கிரியேட்டிவா இருக்கிறவர்களுக்கான நிறைய வாய்ப்புகள் வந்துவிட்டது. இதனுடைய அவசியம், அதைத் தெரிந்துகொள்ள  உங்களை நோக்கித் தள்ளுகிறது.

எல்லா கல்லூரிகளிலும் Visual communication-க்கான பாடத்தை வைக்கவேண்டிய இடம் வந்துவிட்டது. ஆனால் அந்தப் பாடத்தை, நானே பல கல்லூரிகளுக்கு வடிவமைத்துக் கொடுத்திருக்கிறேன். அங்கு எல்லாம் காமிக்ஸ் புத்தகத்துக்கான ஒரு படிப்பு வேண்டும். எல்லாருமே எப்படி தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக போகமுடியும்? எல்லாருமே எப்படி கேமராமேனாக போகமுடியும்? பத்திரிகைத்துறை என்றால் ஜெர்னலிஸ்ட்டாக போவதற்கு ஓர் இடம் இருக்கிறது. அங்கும் எல்லாருக்கும் இடம் இல்லை. அப்படியென்றால் நீங்கள் சுதந்திரமான ஒருவராக வரவேண்டும்.

ஐந்து நபர் சேர்ந்து ஒரு புத்தகத்தை கொண்டுவரலாம். ஐந்து பேர் சேர்ந்து ஒரு கிராஃபிக்ஸ் நாவல் பண்ணலாம். ஏன் அதெல்லாம் செய்யமாட்டிங்கிறீங்க? அப்படின்னு பசங்ககிட்ட சொல்லுவேன். அப்படி ஒரு ஸ்பேஸ் இன்னைக்கு வந்துவிட்டது. அதை உணர்ந்து காலத்தோட, கலைக்கல்லூரிகளும் அப்டேட் ஆகணும். நான் அங்கு கணினி எல்லாம் வாங்கிப்போடுங்க என்று சொன்னேன். செய்தார்கள். என்னுடைய ஆசிரியரே கல்லூரி முதல்வராகவும் இருந்தார். அதெல்லாம் செய்தார்கள். ஆனால் அதற்கு தகுந்த ஆசிரியர்களோ, அங்கு மட்டும் இல்லை, பல கல்லூரிகளில் விஷுவல் கம்யூனிகேசன் பாடங்களை நடத்தினார்களே ஒழிய, அவனுக்கு இந்தப் பாடங்கள் என்னவென்று புரிவதற்குள், அந்தப் பாடங்களை முடித்து வெளியில் வந்துவிடுகிறான்.

இப்போது எட்டாவது படிக்கும்பொழுதே, ஒருவன் தயாராகணும். ஒன்பதாவது படிக்கும்போது, மெதுவா வந்து சினிமா என்று சொன்னால் பயப்படுகிறான். சினிமா என்றால் என்ன என்றும், சினிமாவை எப்படிப் பார்க்கிறது என்றும். ஓவியத்தை எப்படி பார்க்கிறது, புகைப்படக்கலையை எப்படித் தெரிஞ்சுக்கிறது.

நூற்றி ஐம்பது ஆண்டுகளாக புகைப்படம் என்று நானும் நீங்களும் கருதி வேலை செய்தது, இனி புகைப்படம் கிடையாது. இனிமேல் அது டேட்டா தான் என்று சொல்லும்போது, அதைக்கேட்டு ஒருநாள் முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தேன். இனிமேல் அப்ளிகேஷன், டேட்டா தான். அப்ளிகேஷன் நிறைய விசயங்களைக் கொடுக்கிறது  அதைத் தெரிந்து வைத்துக்கொள்வதன் வழியாகத்தான்.

இப்போது நான் வேற நாடுகள் போகும்போது, வெறும் ஐபோனைத்தான் கொண்டுபோகிறேன். பெரிய கேமராவை எல்லாம் எடுத்துகொண்டு போவது இல்லை. ஐபோனில் எடுத்த புகைப்படங்களைத் தொகுத்து ஒரு புத்தகமா கொண்டுவருகிறேன்.

ஐரோப்பாவில் பத்து ஓவியர்கள் இணைந்து கண்காட்சி வைக்கிறார்கள். எல்லோரும் எட்டுப் படம், பத்துப்படம், அன்றைக்கு ஒரு புத்தகம் விற்கிறார்கள். புகைப்படங்களை வாங்கக்கூடிய மனிதர்கள் வாங்குவார்கள், ஆனால் அதற்கு வேல்யு குறைந்துகொண்டே இருக்கிறது. யார் வேண்டுமென்றாலும் புகைப்படத்தை எடுக்கமுடியும். எல்லாம் தாண்டி, எதையும் நமக்கு பழக்கப்படுத்துறது இல்லை. ஒரு வலுவான கலைஞன் 50 வயது 60 வயது ஆனால்தான், யுரோப்பில் எஸ்டாபிளிஷ் ஆவான். அப்படி இல்லையென்றால் அவன் முக்கியமான ஆளாக இருக்கவேண்டும். அங்கீகாரம் என்பது இந்த அளவில் தானிருக்கிறது.

புகைப்படம் எல்லாம் மாறிகொண்டே வருகிறது. நான் படித்த சினிமா இப்போது கிடையாது. அன்று இருந்த கேமரா அசையவே அசையாது, அதை ஐந்துபேர் தூக்கி வைக்கவேண்டும். அதற்கு ஒரு கிராமர் இருந்தது. இன்று கேமராவின் அளவு மாறிவிட்டது.  பத்து கேமராவை வைத்து எடுத்து, ஒரே ஒரு தடவை சேர்த்தால் போதும், எனக்கு அரைமணி நேரக்காட்சி கிடைத்துவிடும்.  

இன்றைக்கு சினிமா அப்படி ஒரு இடத்திற்கு வந்துவிட்டது. நிறைய விஷயங்கள் மாறிவிட்டது. அது எப்படி நீங்கள் பேசவேண்டும் என்பதை மாற்றிவிட்டது. மொழியை மாற்றிவிட்டது. டெக்னாலஜி, மொழியை மாற்றுகிறது. அப்படியென்றால் டெக்னாலஜியை கற்றுக்கொண்டே வரவேண்டும். இங்கு அழகியலை சொல்லிக்கொடுப்பவர்கள் இல்லை. அவர்கள் தொலைந்தே போய்விட்டர்கள்.

அப்போ அழகியல்.

அதாவது காண்பியல் ரீதியாக படைப்புகளில் இயங்குகிற கலைஞர்களின் செயல் ஒன்றுதான். டெக்னிக் எப்போதும் ஒன்றுதான். டெக்னாலஜிதான் மாறிக்கொண்டிருக்கும்.

சமகாலத்தில் சமூகம் காண்பியல் ரீதியாகத்தான் பேசுகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் சமகாலத்தில் ஒரு கலைஞன் வேலையைத் தொடங்கவே முடியாது.

****

சந்திப்பு – ஜீவ கரிகாலன்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular