Wednesday, October 9, 2024
Homesliderஆளும் ஆண்குறி

ஆளும் ஆண்குறி

தமிழ் ஸ்டுடியோ அருண்

நான் என் தங்கையை விற்க முடிவு செய்துவிட்டேன். அவள் பெயரை உங்களிடம் சொல்லலாம்தான். ஆனால் சொல்லி என்ன பயன், சொல்லாமல் விட்டால் என்ன பயன் என்று கேட்டீர்களேயானால் கேட்டுக் கொள்ளுங்கள். நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் பெயர் உங்களுக்கு உதவப் போவதில்லை. என்னுடைய பெயரையும் உங்களிடம் சொல்லப் போவதில்லை. நான் ஆணா, பெண்ணா என்றும் கூட சொல்லப் போவதில்லை. நீங்கள் ஆணாக இருந்தால் நான் ஆண், பெண்ணாக இருந்தால் நான் பெண். இப்போதைய பிரச்னை பெயரோ, ஆணா, பெண்ணா என்பதோ இல்லை. என் தங்கையை விற்பதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த, கொடுவெயிலின் சுடுமணலில் நடப்பது பெரும்பாடு. இன்று சூரியனின் சூடு புளியங்கொட்டையை தேய்த்து வைக்கும் சூடு போல இல்லை, வத்திக்குச்சியைக் கிழித்து உடலில் வைப்பது போல் இருக்கிறது, இத்தனை சூடு நிறைந்திருந்தாலும், வானில் சில பறவைகள் பறக்கத்தான் செய்கிறது. தெருவில் நாய்கள் எப்போதும் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது. செடிகள் வளர்ந்துக் கொண்டேதான் இருக்கிறது. பூக்கள் பூத்துக் கொண்டேதான் இருக்கிறது. அவையெல்லாம் இப்படி புகார் சொல்லுமா தெரியவில்லை. ஆனால் புகார் சொல்லாமல் இருந்தால் நம்மையும் இப்படி செடி, கொடி, பூ போல ஜடம் என்று நினைத்து விடுவார்கள். இதே வழியில்தான் ஒருவாரமாக நடந்து செல்கிறேன், சில நாட்கள் அந்தப்பனையை ஒட்டி இருக்கிற கொடிமரத்தில் பஞ்சு போல மஞ்சள் நிறப்பூக்கள் பூத்திருக்கும். மறுநாள் அவை அப்படியே காய்ந்து கருகிப்போய் இருக்கும். இனி அவை வளராது என்று நினைத்தால் அடுத்த நாள் வேறுசில பூக்கள் பூத்திருக்கும். ஒருவாரமாக இந்த பூக்களை பார்த்துக் கொண்டுதான் நடக்கிறேன். அதில் சில பூக்களை பறித்து அதிகாரிக்கு கொடுத்தும் இருக்கிறேன். வேலை முடிந்தபாடில்லை. அரசு அனுமதி என்றால் சும்மாவா, அவர்களுக்கும் ஆயிரம் வேலைகள் இருக்கத்தானே செய்கிறது. இன்று எப்படியாவது வேலையை முடித்துக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அந்த அதிகாரி கனிவாகத்தான் பேசுவார். ஆனால் கனிவானவர் என்று நீங்கள் நினைத்துவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. உருண்டையான முகத்தில் அதே உருண்டை சிறியதானது போல் வாய், அந்த உருண்டையை அப்படியே பிரதியெடுத்து வைத்தது போல் கண்கள், சுருங்கிய நெற்றி, பருத்த உடல், மங்கிய ஒளியில் பார்த்தாலும் பிரகாசமாத்தான் தெரிவார். அவர் உத்தியோகம் அப்படி, கீழே ஒரு தாள் விழுந்தால் கூட அதை எடுத்துக்கொடுக்க இரண்டு பேர் பக்கத்திலேயே நிற்பார்கள். நம்மை போல் இந்தக் கொடுவெயிலில் அலைந்து திரிய வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கவில்லை. அவர் அதிகாரியாக இருந்தார் என்பதை தாண்டியும் அவருக்கு ஆண்குறி இருந்தது. ஆம் சொல்ல மறந்து போனேன் எங்கள் ஊரின் பெயர் பட்டு பீதாம்பரம். இந்த ஊரில் ஆண்குறி இருப்பவர்களே அதிகாரிகள். அவர்களே அரசு, அவர்களே சட்டம். ஆண்குறியில்லாதவர்கள் எல்லாரும் அவர்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். என் தங்கைக்கு ஆண்குறி இல்லை, அவள் பெண்ணாய் பிறந்துவிட்டால் பிறகு எப்படி ஆண்குறி இருக்கும். அதனால் பெண்குறிதான் இருக்கிறது. ஆண்குறி இருப்பவர்கள் பெண்குறி இருப்பவர்களை சமமாக நடத்துவதில்லை. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பெண்குறி இருப்பவர்களை படுக்கைக்கு அழைப்பார்கள். அவர்கள் வராவிட்டால் கட்டாயப்படுத்தி வல்லுறவு கொள்வார்கள். அப்படியும் பிடிக்கவில்லை எனில் அவர்களின் பெண்குறியை கிழித்து எறிவார்கள்.

எங்கள் ஊரின் வடக்கு பகுதியில் படுக்க அழைத்து, வர மறுத்த பெண் ஒருத்தியின் பெண்குறியில் அமிலம் வீசி அதனை சிதைத்தார்கள். இன்னொரு கும்பல் படுக்க வந்த பெண்ணை ருசித்துவிட்டு அவளது பெண்குறியில் கடப்பாரை போன்ற இரும்பு ஒன்றை உள்ளேவிட்டு அவள் புட்டத்தின் வழி வெளியே எடுத்தார்கள். பெண்குறி இருந்த ஒரே காரணத்தால் அவள் அன்று இறந்து போனாள். முன்பெல்லாம் பத்து வயதுக்கு மேல்தான் பெண்குறி இருப்பவர்களுக்கு பிரச்னை இருந்தது, இப்போதெல்லாம் பிறக்கும்போதே பெண்குறி இருந்தால் அவர்களை படுக்க அழைக்கிறார்கள். குழந்தைகள் வர மறுத்து அழுதால், கழுத்தை அறுத்து கொல்கிறார்கள். பெண்குறி உள்ளவர்கள் இன்னென்ன வேலைகள் செய்யலாம் என்று எங்கள் ஊரில் சட்டம் இயற்றி இருக்கிறார்கள். அவர்கள் சமைக்கலாம், ஆனால் சமையல் பொருட்களை ஆண்குறி கொண்டவர்களே வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்கள் வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும், கழிவறையை சுத்தம் செய்ய வேண்டும், இறுதியாக ஆண்குறி கொண்டவர்களோடு படுக்க வேண்டும். பெண்குறியுள்ளவர்கள் பேசினால் அவர்கள் முகத்தில் அமிலத்தை வீசுவார்கள். படுக்க மறுத்தால் இரண்டாக கிழித்து எறிவார்கள். எங்கள் வீட்டிலும் என் இளைய தங்கையை அப்படிதான் இரண்டாக கிழித்தெறிந்தார்கள். இன்னொரு தங்கை இதற்கெல்லாம் பழக்கப்படுத்திக் கொண்டாள். பழக்கப்படுத்திக் கொண்டாள் என்றால், படுக்க என்று புரிந்து கொள்ளுங்கள். இப்படிப்பட்ட ஊரில் என் பத்து வயது தங்கையை வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அதைவிட முக்கியமாக அவளை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டுதான், என் மூத்த தங்கைக்கு ஆண்குறி கொண்ட ஒருவனை பாதுகாப்பாக வைக்க முடியும். இந்த ஊரில் ஒன்று ஆண்குறி இருக்க வேண்டும், இல்லையேல் கொஞ்சம் கூடுதலாக பணம் இருக்க வேண்டும். பணமிருந்தால் அதனை ஆண்குறி கொண்ட ஒருவனிடம் கொடுத்து என் தங்கையை பாதுகாக்க சொல்லலாம். அதனால் அவளை பல கிலோ மீட்டர்கள் தள்ளியுள்ள திருநர் என்கிற ஊருக்கு விற்றுவிடலாம் என்றுதான் அதிகாரியிடம் மனு கொடுத்து காத்திருக்கிறேன். கொடு வெய்யில் இப்போது சோகை வெயிலாக மாறியிருக்கிறது.

2

சிவன் கோவிலைத் தாண்டி எங்கள் வீடு வரும் நான்காவது குடிசைதான் எங்கள் வீடு. ஓ, அப்படியே சொல்லிவிட்டேன். இல்லை.. இல்லை, நான்கு சிவன் கோவிலை தாண்டி ஐந்தாவதாக வரும் குடிசை எங்கள் வீடு. இங்கே வீடுகளை விட கோவில்கள் அதிகமாக இருந்தன. அன்று எதிர்பாராத அந்த சம்பவம் என் வீட்டில் நடந்துவிட்டது. காலையில் சேவல் சிவன் கோவில் மேலேறி கூவத்தொடங்கியது. நான் பொருட்கள் வாங்க வெளியில் சென்றிருந்தேன். பத்து வயது தங்கை தூங்கிக் கொண்டிருந்தாள். மூத்த தங்கை, வெளியில் சென்று பெரிய கழி ஒன்றை கொண்டு வந்தாள். கையில் இருந்த பெரிய கயிறு ஒன்றை உத்தரத்தில் உள்ள கொக்கி ஒன்றில் மாட்ட அந்த கழி போதுமானதாக இருந்தது. பெரிய கயிறு ஒன்றை கழியின் முனையில் நுழைத்து, கொக்கியில் மாட்ட முயன்றாள். உயரம் போதுமானதாக இல்லை, சிறிய கதிரை ஒன்றை எடுத்து அதன்மேல் ஏறி நின்று கழியை தூக்கி கொக்கி மேல் கயிறை மாட்ட எக்கினாள். அப்போதும் உயரம் போதவில்லை. மீண்டும் வெளியில் சென்று இன்னொரு கழியை எடுத்து வந்தாள், இரண்டு கழியையும் அவள் துப்பட்டா கொண்டு சேர்த்துக் கட்டினாள். வெளியில் வானம் பூத்திருந்தது. சூரியன் ஆரஞ்சு நிறத்தில் உதித்து வருவதை எங்கள் ஊரில் அப்படிதான் சொல்வார்கள். சூரியனில் இருந்து பறவைகள் பிறந்து வெளியே வருவது போல், அந்த வட்டச் சூரியனில் இருந்து பறவைக்கூட்டம் இன்னொரு விளிம்பை நோக்கி பறந்து கொண்டிருந்தன. வானில் அவை நடனமாடிக் கொண்டிருந்தன. வீட்டில் என் தங்கை நடனமாடிக் கொண்டிருந்தாள், இரண்டு கழியையும் சேர்த்துக் கட்டியதில் அவை சரியாக இணையாமல் ஆடிக்கொண்டே இருந்தது. ஒருவழியாக கொக்கியில் கயிறை மாட்டிவிட்டாள். அழுத்தி ஒரு முடிச்சுப் போட்டாள். இப்போது அதே கயிறை வட்ட வடிவமாக மாற்றி இன்னொரு முடிச்சு போட வேண்டும். அப்படி அவள் வட்ட வடிமாக கயிறை சுருட்டிக் கொண்டிருக்கும்போதே அதன் உள்ளே சில பூச்சிகள் பறந்து போயின, அவைகளும் சூரியனில் இருந்து பிரிந்த பறவைகள் போல, காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தன. வட்ட வடிவமாக மாற்றுவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாள். வெளியே சென்ற நான் எப்போதோ வந்துவிட்டேன், அவளும் அதனை பார்த்து விட்டாள், ஆனாலும் அவள் காரியத்தில் தடையேதும் இல்லை. நான் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையில் பத்து வயது தங்கையும் எழுந்து கண்களை கசக்கிக்கொண்டு அவளது அக்கா செய்யும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியாக வட்ட வடிவமாக கயிறை மடித்து, அதை கொக்கி மேல் இருந்த கயிற்றோடு இணைத்து முடிச்சுப் போட்டாள். இரண்டு கதிரைகளை சேர்த்து அதன் மேல் ஏறி நின்று வட்ட வடிவ கயிறை தன் தலையில் சுற்றிக் கொண்டாள். கதிரையினை காலால் எட்டி உதைத்தாள். சூரியனில் இருந்து பறவைகளோ, வட்ட வடிவ கயிறில் இருந்து பிரிந்த பூச்சிகளோ இது எதையும் கவனிக்கவில்லை. அவரவருக்கு அவரவர் வேலை முக்கியம்.

கதிரை கீழே விழுந்ததும் தங்கை அந்தரத்தில் தொங்கினாள். அவள் கழுத்தை கயிறு இறுக்கியது. அடுத்த நொடியில் அது அறுந்து போனது, தங்கை கீழே விழுந்தாள், நானும் பத்து வயது தங்கையும் சிரித்துக் கொண்டிருந்தோம். பூச்சி ஒன்று என் வாயருகே சப்தமிட்டு சென்றது, மூத்த தங்கையை பரிகாசம் செய்ததை அந்த பூச்சி ரசிக்கவில்லை போலும். கீழே விழுந்த என் தங்கை கைகளை துடைத்துக் கொண்டே எழ முற்பட்டாள். இடுப்பெலுப்பில் லேசான அடி. நான் பொருட்களை அவளிடம் கொடுத்து விட்டு சொன்னேன், தூக்குமாட்டிக் கொள்ள வேண்டுமென்றால் கூட உனக்கு ஆண்குறி அவசியம்.

3

மஞ்சள் நிற பூவொன்றை அதிகாரியிடம் கொடுத்துவிட்டு அவரிடம் என் மனு என்ன ஆனது விசாரித்தேன். நாளைக்கு அனுமதி வந்து விடுவதற்கான வாய்ப்புண்டு, அந்த அனுமதி கடிதம் வந்ததும் எனக்கு ஐநூறு ஆண் கொடுக்க வேண்டும் என்றார், ஆண் என்றால் எங்கள் ஊர் பணத்தின் பெயர். அதில் இருந்துதான் ஜப்பானிய யென் வந்தது என்று கூட சொல்வார்கள். அவ்வளவு மதிப்பு வாய்ந்த பணம் எங்களுடையது. மறுநாள் அனுமதி கடிதம் வந்தது. திருநர் ஊரில் இருந்து ஆறடி உயரத்தில் ஒருவர் என் தங்கையை பார்க்க வந்திருந்தார். அருகில் இருக்கும் சிவன் கோவிலில் நின்று இது என்ன என்பதுபோல வினவினார். இது எங்கள் ஊர் சிவன் கோவில், உங்கள் ஊரில் கோவில்கள் இல்லையா என்றேன். அப்படி ஒரு வார்த்தையே எங்களுக்கு தெரியாது என்றார். இந்த ஊரில் ஆண்குறிகளால் நடக்கும் அத்துணை அராஜகங்களும், அதிகாரத் திமிரும் எங்கள் ஊரில் எப்போதும் விவாதிக்கப்படும் பொருளாகவே இருக்கிறது, என்று சொல்லிக் கொண்டே கோவிலை சுற்றிப் பார்த்தார். இது என்ன குச்சி ஒன்று வட்டவடிவ கல்லில் இருந்து மேலெழும்பி இருக்கிறது, ‘அய்யய்யோ அதை அப்படி சொல்லக்கூடாது, அதனை எங்கள் ஊரில் லிங்கம் என்பார்கள்’. மீண்டும் லிங்கத்தை உற்று நோக்கினார், ஓ இதுதான் ஆண்குறியா, அவர் ஆச்சர்யமாக அதனை உற்றுப் பார்த்தார். நீங்கள் ஏன் பெண்குறியில் இருந்து ஆண்குறி மேல் எழும்பி இருப்பது போல் வடித்து வைத்திருக்கிறீர்கள், அதனால்தான் ஆண்குறியுடையவர்கள் அதிகாரத்திலும், திமிரிலும் இருக்கிறார்கள். ஆண்குறியின் மையத்தில் அந்த உருண்டை வடிவ கல்லை வைத்தால் இரண்டும் சமமாக இருக்குமே என்றார். இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருந்தால், அவர் அப்படி பேசியதற்கு எனக்கு தூக்குத்தண்டனை கூட கிடைக்கலாம், அவர் கையை பிடித்து வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து சென்றேன்.

தங்கையை பார்த்து சென்ற திருநர் ஊர்க்காரரிடம் இருந்து பதிலேதும் இல்லை. திண்ணையில் சம்மணம் இட்டு உட்கார்ந்திருந்த மூத்த தங்கை நீங்கள் ஏன் என்னையும் விற்றுவிடக்கூடாது என்று ஆசையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். என்னிடம் இருக்கும் பணத்தை வைத்து ஒருவரைத்தான் இப்போதைக்கு விற்க முடியும், சின்னவளை நல்லபடியாக விற்று முடித்த பின்னர் உன்னையும் விற்க ஏற்பாடு செய்கிறேன் என்றேன், அவள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காதில் வாங்கிக் கொள்ளாமல் உள்ளே எழுந்து சென்றாள். எதிர் வீட்டில் இப்போதுதான் ஆண்குறி கொண்ட குழந்தை பிறந்துள்ளது. எப்படியும் அரசு அதிகாரத்தில் அவர்களுக்கு பங்கு வந்துவிடும். மகிழ்ச்சியில் குழந்தையை கையில் ஏந்தி சூரியனை நோக்கி காட்டினார்கள். குழந்தை சூரியனை ஒன்னுக்கடித்தது. எனக்கென்னமோ அந்த ஆண்குறி சூரியனை நோக்கி நீண்டு வளர்வது போலவும், சூரியனை கூட தொட்டுவிடக் கூடிய அதிகாரம் அந்த ஆண்குறியிடம் இருப்பதை போலவும் தோன்றியது. இனி எதிர் வீட்டுக்கார்கள் எங்களிடம் பேச மாட்டார்கள். சட்டப்படி பேசக்கூடாது. இனி அவர்கள் பட்டு பீதாம்பரம் ஊரில் இருக்கும் அதிகாரம் என்கிற தெருவுக்கு இடம்பெயர்ந்து விடுவார்கள். நாளை அந்த ஆண்குறி கொண்ட குழந்தை வளர்ந்து என் பத்து வயது தங்கையை படுக்க அழைக்குமுன்னர் அவளை விற்றுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது. கொடுவெயில் சூட்டில் மீண்டும் அதே பொட்டல்காட்டில் பூத்த மஞ்சள் நிறப்பூவை பறித்துக்கொண்டு அவரைக் காண நடந்து கொண்டிருக்கிறேன். பெண்குறி கொண்டவர்களின் சடலம் இரண்டு பனைமர கொடிக்கு அருகே கிடந்தது. பெண்குறியில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. கோடியில் பூத்திருக்கும் மஞ்சள் நிறப்பூ எப்போது வேண்டுமானாலும் ரத்த சிவப்பு நிறத்திற்கு மாறிவிடலாம். அச்சத்தில் பதுங்கிப் பதுங்கி மலைப்பாம்பு நீண்டிருந்த அந்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன். காக்கையின் குரல் கூட அச்சுறுத்துகிறது. நாய் ஒன்று நடுரோட்டில் நின்று ஊளையிடுகிறது. கருமைநிற அதன் கண்களும், ஈட்டி போன்ற அதன் பற்களும் வானத்தை பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருக்கிறது. இறந்து கிடந்த இந்த இரண்டு பெண்குறிகளுக்காகத்தான் அது அழுகிறதோ என்னவோ.

மஞ்சள் நிறத்தில் உருளை வடிவ விளக்கொன்று அந்தரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது. நீண்ட இரும்புக்கம்பியில் மின்விசிறி பொறுமையாக சுற்றிக் கொண்டிருந்தது. கடக், கடக், கடக்.. அந்த சப்தத்தைத் தாண்டி அதிகாரியின் அந்த அறையில் வேறெந்த சப்தமும் இல்லை. என்னைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் விரலை நீட்டினார். எதிரே இருந்த கதிரையில் உட்கார் என்பது அதன் அர்த்தம். அழுக்கு அப்பி, பழுப்பேறி கிடந்தது அந்த கதிரை. எதிரில் அரசு முத்திரையிட்ட கோப்புகள் இருந்த இடத்தை சுற்றிலும் எட்டுக்கால் பூச்சிகள் மேலும் கீழும் அசைந்து அதற்கென குடில் ஒன்றை கட்டிக் கொண்டிருந்தது. அதிகாரி கையில் இருந்த கோப்புகளை உற்று கவனித்துக் கொண்டிருந்தார். எட்டுக்கால் பூச்சிகள் அதன் வயிற்றில் இருந்து நூல்களை எடுத்து ஒரு கோப்புக்கும் இன்னொரு கோப்புக்கும் இடையே பின்னிக் கொண்டிருந்தன. உற்றுப் பார்த்தால் அதன் உருவம் அச்சமூட்டுவதாக இருந்தது. அதன் பருத்த உடலை, எப்படி அந்த மெல்லிய கால்கள் தாங்குகின்றன, அந்த கால்களுக்கிடையே ஆண்குறி இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், எட்டுக்கால் பூச்சிகளின் ஆண்குறி எப்படி இருக்கும் என்று தெரியாது, ஆனால் அங்கே இருந்த எல்லா எட்டுக்கால் பூச்சிகளும் தனித்தனியாக தங்களுக்கு உணவு குடிலை கட்டி எழுப்பிக் கொண்டே இருந்தன. சின்னஞ்சிறு பூச்சி ஒன்று கோப்புகளில் இருந்து தவறி விழுந்து, அருகில் இருந்த ரேக்குகளில் கூடுகட்டத் தொடங்கியது. மேலே இருந்த விழுந்த பயமோ, குடும்பத்தை விட்டு பிரிந்த உணர்வோ சிறிதும் இல்லாமல், அவை உணவை தேடத் தொடங்கி விட்டன.

அவரது உருண்டைக் கண்கள் அவரது மேசையில் இருந்த தாள்களை பாதியும், என்னை பாதியுமாக பார்த்துக் கொண்டிருந்தது. சட்டென என்னை அழைத்தார். திரும்பிப் பார்த்தேன், பெரிய எட்டுக்கால் பூச்சி போல் அவர் உருவம் மாறியது. கண்களை சிமிட்டிக்கொண்டு மீண்டும் அவரை பார்த்தேன், கொல்லெனச் சிரித்தார். அருகில் இருந்த தாள்கள் பறந்து கீழே விழுந்தது. எப்படி இப்படி ஒரு மனிதரால் சிரிக்க முடியும், எவ்வளவு காற்று அவரது வாயில் இருந்திருக்கிறது, அந்த காற்று அவ்வளவு தூரம் தள்ளி உட்கார்ந்திருந்த என்மேல் படர்ந்தது.

‘நீ என், உன் தங்கச்சிய வாங்க வந்தவருக்கு ஆண்குறி இல்லன்னு எனக்கு சொல்லல’

இதென்ன அநியாயமா இருக்கு அதிகாரி, ஆண்குறிகளால் பிரச்னை வருகிறது என்றுதானே அவளை விற்கவே முடிவு செய்தேன், பின்னர் எப்படி ஆண்குறி இருப்பவர்களுக்கு விற்பனை செய்வேன், நான் ஆண்குறி இல்லாத ஊரில் இருந்துதானே அவளை விற்க விரும்பினேன்.

‘அதை நீ முன்கூட்டியே ஏன் உன் மனுவில் குறிப்பிடவில்லை?’,

அதைக் குறிப்பிட வேண்டும் என்று நீங்கள் சொல்லவே இல்லையே,

‘ நீ ஏன் கேட்கவில்லை, நீதான் கேட்டிருக்க வேண்டும்’

சரி, அதிகாரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும்,

‘பத்தாயிரம் ஆண் கொடுத்துவிட்டு நீ அவளை ஆண்குறி இல்லாத ஊரில் விற்றுக் கொள்ளலாம்’

பத்தாயிரம் ஆண் இருந்தால் நான் என் தங்கையை இந்த ஊரில் வைத்தே பாதுகாக்க முடியும், அவளுக்கும் என் மூத்த தங்கைக்கும் இரண்டு ஆண்குறிகளை வாடகைக்கு எடுத்து பாதுகாத்துக் கொள்வேனே

‘அதெல்லாம் எனக்கு தெரியாது, ஆண்குறி இருப்பவர்களுக்கு அவளை விற்றால் அதற்கு ஒரு தொகை, இல்லாதவர்களுக்கு விற்றால் அதற்கு ஒரு தொகை. இதுதான் அரசுக்கொள்கை’

அது ஏன் அப்படி அதிகாரி?

‘ஏன் உனக்கு இதெல்லாம் தெரிவதில்லை, ஆண்குறிகளில் சாதியிருக்கிறது, சாதியிருக்கும் ஆண்குறிகளுக்கு உன் தங்கையை விற்றால் அவளது பெண்குறிக்கும் ஒரு சாதி கிடைக்கும், ஆண்குறி இல்லாத ஒருவனுக்கு உன் தங்கையை விற்றால் அவனை என்ன சாதியில் சேர்க்க முடியும், உன் தங்கைக்கு என்ன சாதியைக் குறிக்க முடியும்’

ஓ, நம்மூரில் சாதி இல்லை என்றுதானே அரசு சொல்லியிருக்கிறது

‘அட என்னய்யா நீ பீதாம்பர ஊர்க்காரன் போலவே பேசமாட்டேன் என்கிறாய், இங்கே மனிதர்களுக்குத்தான் சாதியில்லை, ஆனால் ஆண்குறிகளுக்கு சாதி இருக்கிறது’ அவர் கோப்புகளை ஆய்ந்துக் கொண்டே பாதிக்கண்ணால் என்னை பார்த்து பேசிக்கொண்டிருந்தார். செந்நிற பாலாடைகள் அப்பிய கண்ணாடி கோப்பை ஒன்றில் தேநீர் வந்ததும், அதை எடுத்துப் பருகினார். மஞ்சள் நிற ஒளி மங்களானது. இருளில் மஞ்சள் ஒளியை நுழைத்து, அதில் பச்சை அப்பிய ஒரு புதுவித நிறத்தில் அவரது நிறம் மாறிக்கொண்டிருந்தது.

கோப்புகளை மூடிவைத்துவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்து வந்தார், வா வெளியில் போய் பேசுவோம், சொல்லிவிட்டு அவரது பருத்த உடலை மெதுவாக நகர்த்தி வெளியே சென்றார். பருத்த அவரது புட்டங்கள் இடதும் வலதும் மேலும் கீழும் ஆடிக்கொண்டே இருந்தது. அதற்கிடையில்தான் அவரது ஆண்குறி பாதுகாப்பாக இருக்கிறது.

ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார், பாதி சிவப்பும், பாதி கருத்துமாய் இருந்த அவரது உதடுகள் சிகரெட்டை லாவகமாக பற்றிக்கொண்டது.

‘உன்னிடம் எவ்வளவு ஆண் இருக்கிறது என்று சொல், நான் ஏதாவது வழி இருக்கிறதா என்று சொல்கிறேன்’

நீங்கள் முன்னமே கேட்டது போல் ஐநூறு ஆண் கொடுத்து விட்டேன். மீதம் என்னிடம் கூடுதலாக ஐநூறு ஆண் இருக்கலாம், அவ்வளவுதான் அதிகாரி.

‘உன் தங்கையை எவ்வளவு ஆணுக்கு அந்த திருநர் ஊர்க்காரன் கேட்டிருக்கிறான்’

அவரிடம் இருந்து பதிலேதும் வரவில்லை அதிகாரி. இரண்டு நாட்களில் வந்துவிடும் என்று நினைக்கிறேன்.

‘அதுவரை பொறுக்க முடியாது, நீ இப்போதே பத்தாயிரம் ஆண் காட்டினால் மட்டுமே அவனிடம் உன் தங்கையை விற்க முடியும்’

என்னிடம் அவ்வளவு ஆண் இல்லை, இப்போது நான் என்ன செய்யட்டும்,

‘நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்வது ஏன் வேலையல்ல, பணமில்லை என்றால் உன் தங்கையை விற்க இயலாது’

‘சரி அப்படியெனில் நான் சென்று வருகிறேன்’

‘சரி, நீ கிளம்பலாம், ஆனால் அதற்கு முன்னர் திருநர் ஊர்க்காரன் ஒருவன் வந்து உன் தங்கையை பார்த்துவிட்டு சென்றதற்காக நீ பணம் கட்ட வேண்டும், அதனைக் கட்டிவிட்டு செல்லலாம்’

அதற்கு நான் பணம் கட்ட வேண்டுமா, இதை ஏன் நீங்கள் முன்னமே சொல்லவில்லை,

‘நீ ஏன் முன்னமே கேட்கவில்லை’

சரி இப்போது கேட்கிறேன், சொல்லுங்கள்,

‘அவன் ஆண்குறியில்லாத ஊரில் இருந்து வந்திருக்கிறான், உன் தங்கையை வாங்கிக் கொண்டாள்ல் பத்தாயிரம் ஆண், அவன் பார்த்துவிட்டுச் சென்றதற்காக ஐந்தாயிரம் ஆண் கட்ட வேண்டும்’

ஓ, என் தலையை அடகு வைத்தால் கூட அவ்வளவு பணம் எனக்கு கிடைக்காதே அதிகாரி.

‘அதுபற்றி எனக்கு அக்கறை இல்லை’, சொல்லிவிட்டு சிகரெட்டை வீசி எறிந்தார், இறுதியாக அதில் இருந்து அரைவட்ட வடிவில் ஒரு வெளிச்சம் புறப்பட்டு பின்னர் மறைந்தது.

அவர் உள்ளே சென்று சில நிமிடங்கள் ஆகிவிட்டது. நான் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதும் சில பறவைகள் வானில் பறந்து கொண்டேதான் இருந்தன.

திடீரென என் தோள்மீது ஒருவர் கை பட்டது. அவர் அதிகாரியின் அலுவலகத்தில் கோப்புகளைத் துடைத்து வைக்கும் வேலைகளை பார்ப்பவர். எங்கள் ஊரில் ஆண்குறி பெரியதாக இருந்தால் பெரிய பதவிகள் கிடைக்கும், சிறியதாக இருந்தால், உதவியாளர் பணிகளே கிடைக்கும்.

‘என்ன, உங்களுக்கு ஒன்றும் தெரியாது அவர் அடிக்கடி சொல்வது சரியாகத்தான் இருக்கிறது, ஏன் பிரச்சனையை வளர்க்கிறீர்கள்’

நான் ஏன் பிரச்சனையை வளர்க்கப் போகிறேன், என்னிடம் அவ்வளவு பணமில்லையே நான் செய்வது, இந்த பணத்தைக் கட்டாவிட்டால் என்னை செய்துவிட முடியும் இவர்களால்

‘ஹ்ம்ம், உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது உண்மைதான் போல, நீங்கள் அதிகாரி கேட்கும் பணத்தை காட்டவில்லை என்றால், பத்து வருடங்கள் சிறைதண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது, நான் சொல்வதைக் கேளுங்கள், உங்களிடம் இருக்கும் ஐநூறு ஆணை அவரிடம் கொடுத்துவிடுங்கள்’

அது போதுமா, அவர் ஐந்தாயிரம் ஆண் அல்லவா கேட்கிறார்

‘நான் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள், உங்களிடம் இருக்கும் ஐநூறு ஆணை கொடுத்துவிட்டு, உங்கள் தங்கையை அவரிடம் விற்று விடுங்கள், அதற்கு அவர் நான்காயிரத்து ஐநூறு ஆண் கொடுப்பார். அதை வாங்கி அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தைக் கட்டி விடுங்கள். அவரது உதடுகள் பச் என்றன. கண்களில் அவ்வளவு நெளிவு சுளிவு இருந்தன. பழுக்கக் காய்ச்சிய எண்ணெயைத் தலையில் ஊற்றி அப்படியே பரப்பிவிட்டது போன்ற தலைமுடி, ரு போலல்லாமல் று போன்றிருந்த நீண்ட முகம், என்ன என்று கேட்டுவிட்டு கண்களை சிமிட்டினார். மங்கிய சிமிழ் விளக்கு ஒளி போல் என் பார்வை மாறியது.

உள்ளே வந்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, நாளை வேலையை முடித்து விடுங்கள் என்று அழைத்துச் சென்றார். எட்டுக்கால் பூச்சிகள் கோப்புகள் முழுவதையும் சுற்றி சூழ்ந்து அதன் மேல் கூடு கட்டியிருந்தன. அதில் சில பூச்சிகள் அகப்பட்டு தப்பிக்க எக்கிக் கொண்டிருந்தன. சட்டென அந்த உதவியாளரிடம் கேட்டேன், இந்த எட்டுக்கால் பூச்சிகளுக்கு ஆண்குறி இருக்கிறதா?,

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், உங்களுக்கு ஒன்னும் தெரியாது என்பது உண்மைதான் போலிருக்கிறது, அவரது சிரிப்பு சப்தம் ஓயவில்லை.

ஆம், எனக்கு ஒன்றும் தெரியாதுதான்.

***

நன்றி: ஜி.நாகராஜன், தற்கொலை விவரணை ஜி நாகராஜனிடம் இருந்து எடுத்தாளப்பட்டது.

***

தமிழ் ஸ்டுடியோ அருண் – தமிழ் ஸ்டூடியோ. பேசா மொழி இதழ். படிமை உள்ளிட்ட அமைப்புகளின் நிறுவனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular