Wednesday, April 17, 2024
Homesliderஆயிரம் தசைகள்

ஆயிரம் தசைகள்

விஜயலட்சுமி

வீட்டை நெருங்க நெருங்க சாலையின் இருமருங்கிலும் விரிந்து வளர்ந்திருந்த செம்பனை மரங்களின் குடை நிழல்கள் விலகி வெளிச்சம் கண்ணாடியைத் துளைத்து கண்களைக் கூசியது. அதன் நேரெதிர் திசையில் வசந்தி மனதின் மிக இருண்ட அறையினுள் திசை வழி பொருட்டில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாள். மூச்சு வாங்குவது போல் இருந்தது அவளுக்கு. வளைவதற்கான சமிக்ஞையைப் போடாமல் விருட்டென சாலையை விட்டு விலகி ஓரமாக காரை நிறுத்தினாள். காலை ஏழு மணிக்கு மூளையுள் நுழைந்த கைப்பேசியின் சத்தம் போல மீண்டும் கேட்டது. பின்னொற்றி வந்த வாகனம் ஆரன் அடித்து எண்ணெயை முறுக்கி கடந்து சென்றது.

புறப்படுவதற்கு முன் சிலமுறை செய்து பார்த்த ஒத்திகைகள் அத்தனையும் நொடிபொழுதில் அர்த்தமற்று போனதில் வசந்திக்கு என்னவோபோல் இருந்தது. செல்லய்யா இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதிலிருந்து அதுவரை உடலைப் பிழிந்து உருக்குலைத்துக் கொண்டிருந்த நோவு மனதின்மீது இடறி அடைத்துக் கொண்டதுபோல் கனத்து வலித்தது. அம்மாவை நினைக்க நினைக்க மனம் கனத்தது. வசந்தி அம்மாவிடம் பேசி ஆறு மாதங்களாக விட்டது. அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த நாட்களில் செய்தி காதுக்கு எட்டி அம்மாகவே அழைத்துப் பேசியது நினைவுக்குத் தட்டுபட்டது. சுருக்கமாக வயிற்றில் கட்டி எனச்சொல்லி அழைப்பைத் துண்டித்திருந்தாள்.

அதற்கு முன் அத்தனை மாதங்கள் வசந்தி அழைக்காதது பற்றி அம்மாவுக்குக் கேள்வி ஒன்றும் இருக்கவில்லை. பதிலாக, அறுவை சிகிச்சை செய்தபின் உடன்வந்து அவள் வீட்டிலேயே தங்கியிருந்து உடல் தேறும்வரை பார்த்துக் கொள்வதாக அம்மா சொன்னபோது வசந்திக்கு கொஞ்சம் எரிச்சலாகக் கூட வந்தது. இப்போது சரி தவறு ஆராயும் தர்க்கங்களுக்கு இடம் விடாமல் வசந்தியின் மனம் முழுவதும் குமுறி குமுறி அழும் அம்மாவின் முகம் நீள்திரை காட்சிகளாய் ஓடி வருத்திக் கொண்டிருந்தது. இருப்புக் கொள்ளாமல் சுயமாகவே காரை ஓட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.

சற்று நேரம் கார் இருக்கையில் தலைசாய்த்துக் கொண்டாள். மூச்சு வாங்குவது ஓயவில்லை. மனதின் இருண்ட அறைகள் ஒவ்வொன்றாய் திறந்து கொள்ள, அதில் தனக்குத் தெரிந்த செல்லய்யாவை அறையின் இண்டு இடுக்குகளிலெல்லாம் தேட ஆரம்பித்தாள். மெலிந்த உடல், விறைத்தேயிருக்கும் முடிக்கற்றைகள், மெல்லிய மீசை, சிறிய கண்கள், உருவத்துடன் பொருந்தாத கனத்த குரல், நடப்பதற்கும் ஓடுவதற்கும் இடையேயான பரபரப்பில் சுழலும் கால்கள், எல்லாவித கூட்டங்களிலும் காணாமல் போய்விடக்கூடிய தனித்துவமற்ற உருவம். பார்த்தவுடனே பிடித்துப் போகும் அளவுக்கு தோற்றத்திலோ பேச்சிலோ வசீகரம் இல்லாத ஆள். தனது தந்தையின் மரணத்துக்குப் பின் வாய்ப்பிருந்தும் சொத்துகளைத் தனக்குப் பெயர் மாற்ற மறுத்தவர். பணியோய்வு பெறும்வரை தேயிலைத் தொழிற்சாலையிலும் பின்னர் அப்பா விட்டுப்போன வெற்றிலை தோட்டத்திலும் உழைத்துக் கொண்டே இருந்தவர், ஊடே உதட்டில் எப்போதும் புன்னகையைத் தேக்கி வைத்திருந்தவர்.

‘இந்நேரம் டூசுன் டுரியான் தோட்டமே அவர் வீட்டில் குவிந்திருக்கும்’, வசந்தி நினைத்துக் கொண்டாள். அவருடைய கொடுக்கும் மனமும் எளிய தோற்றமும் ஊரில் நல்லப்பெயரை வஞ்சகமில்லாமல் சேர்த்து வைத்திருந்தது. தோட்டத்தில் வெற்றிலைக் கிள்ளும் மியன்மார்க்காரர்கள்கூட அவரை ‘பாப்பாக்’ (அப்பா) என்றுதான் அழைத்தார்கள். ரொக்கமாகவும் தேங்காய், வாழை, வெற்றிலை என விளைச்சல்களாகவும் செல்லய்யா தோட்டத்திலிருந்து கோயில்கள், பள்ளிகள், ஊர்த்தேவைகளுக்கு இலவசமாகவே போகும். கைச்செலவுக்கும் இதர தேவைகளுக்கும் வந்து நிற்பவர்களுக்கு உதவுவது எதையும் வரவு செலவு கணக்கில் சேர்க்க மாட்டார்.

செல்லய்யாவின் நேரெதிராளி அவர் மனைவி பஞ்சவர்ணம். சாடை பேச்சும் எல்லாவற்றிலும் கணக்குப் பார்க்கும் சிறுபுத்தியும் அவர் தோட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்கு நன்கு பழக்கம். அம்மாவும் அங்குதான் வீட்டு வேலை பார்த்தார். கொழுத்த பணச்சேர்க்கையால் தோலிலேயே ஒட்டிக்கொண்ட அகங்காரமும் அதிகாரமும் தோய பவனிவரும் பஞ்சவர்ணத்தைச் செல்லய்யா கையாளும் விதமே வினோதமானது. முட்டிக்கொண்டு முரண்டு பிடிக்கும் மனைவியிடம் “போடி மயிரு,” என்று அசட்டையாய் சொல்லிவிட்டு மோட்டாரை எடுத்து கிளம்பிவிடுவார்.

பொதுவாக எல்லாருக்கும் தெரிந்ததைவிட தனக்கு மட்டும் அறிமுகமான செல்லய்யாவை வசந்தியின் மனம் நினைவுகளாக மீட்டெடுக்கத் தொடங்கியது. வார இறுதி நாள்களில் அம்மாவுக்குத் துணையாக வசந்தி அவ்வப்போது வீட்டுவேலைக்குப் போவது வழக்கமாக இருந்தாலும் செல்லய்யா வீட்டில் இருந்தால் வசந்தி வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

“உங்கம்மா செத்து மண்ணா போகும்போது அவ வாழ்ந்த வாழ்க்கையும் போவட்டும். அது உனக்கு வேணாம்,” என்பார்.

அப்படியான சொற்களை அவரால் உதிர்க்க முடிவது வசந்திக்கு ஆச்சரியமாக இருக்கும். அம்மாவுக்குச் சார்பெடுப்பதாக நினைத்துக்கொண்டு குடிபோதையில் அடாவடித்தனம் செய்யும் அப்பாவைத் திட்டுவது, பொதுவெளியில் அவரை அவமானப்படுத்துவது, விரட்டுவது, அவரவர் வீடுகளில் மிஞ்சும் உணவையும், சேராமல் போன துணிமணிகளையும் நேர, இட வகையல்லாமல் அம்மாவைக் கூப்பிட்டு கொடுப்பது எனத் தோட்டம் அதுவரை செய்து வந்தவைகளைப் போல் அல்லாமல் அவர் வித்தியாசமாக ஏதோ செய்வதுபோல் தோன்றும். கொஞ்சமாகவே பேசுவார் என்றாலும் அவர் பேசும் ஓரிரு வார்த்தைகள் கூட மனதுக்கு மிக அண்மையில் நின்று உரசிச்செல்பவையாக இருக்கும். வெந்து வெந்து கொப்பளித்துப்போன அம்மாவின் வாழ்க்கை மீது பாட்டிக்கே கூட அப்படியான பார்வை இருந்ததில்லை என நினைத்துக் கொண்டாள்.

அவர் அருகாமையில் அம்மாவின் வேலைகளில்கூட பல சமயம் இலகுவாவதையும் வசந்தி பார்த்திருக்கிறாள். வாளியில் நீர் மொண்டு கொடுப்பது, கனமான பொருட்களை நகர்த்தி சுத்தம் செய்ய வழிவிடுவது போக வசந்தியின் அப்பா மயங்கி விழுந்த தினம் அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தது, அவசர நேரத்தில் வந்து நின்றது, அப்பாவின் மரணத்துக்குப் பின் கொல்லையில் அறுத்துவரும் காய்கறிகளில் கொஞ்சத்தை யாரிடமாவது கொடுத்தனுப்புவது, வீட்டுக்கு வாங்கிய பட்சணங்களில் பங்கு கொடுப்பது என செல்லய்யாவின் இருப்பு பல இடங்களில், பல தருணங்களில் காண முடிவதாக இருந்தது.

வீட்டு வேலைக்கு வந்தவளுக்கு வீட்டு முதலாளியே ஓடியோடி சேவகம் செய்வது எந்தக் கணக்கில் சேரும் என்பதாக சாடை பேசத் தொடங்கிய பஞ்சவர்ணம் ஒருமுறை நேரடியாகவே வசந்தியின் அம்மாவிடம் “சேவகம் மட்டுந்தானா, இல்ல எம்புருசன் தனியா ‘கிம்பளம்’ ஏதும் தர்றானா,” என்று பொரிந்துவிட, வெற்றிலைக் கொடி கம்பத்தை உடைத்துக்கொண்டு புசுபுசுவென சேற்றுக்காலுடன் வீட்டுக்குள் நுழைந்து நையப் புடைத்து விட்டார் செல்லய்யா. கூடுதலாக, “சோத்துக்கு வர்றவங்க சோரம் போவாங்கனு நினைக்கும் பீ புத்திய செருப்பால அடிக்கணும்,” என்று கூறிவிட்டு மோட்டாரை எடுத்துக் கிளம்பி விட்டார். அம்மாவின் தலையணை மந்திரங்கள் ஏக காலத்தில் வேலை செய்யத் துவங்கியிருப்பதாக பஞ்சவர்ணம் தெருமுனையில் மண்ணள்ளி வீசி தூற்றினாள்.

போகும் வழி நடைபாதையில் காத்திருந்த செல்லய்யா வசந்தியைப் பொருட்படுத்தி, “ஏம்மா… நீ ஒன்னும் மனசுல வச்சிக்காத,” என சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தாலும் அவளது மனம் அந்தப் பலிக்கூறலை ஏற்க மறுத்தது.

கார் இஞ்சினை முடுக்கிவிட்டபடி வசந்தி அந்தத் தருணத்தில் அம்மாவின் எதிர்வினை என்னவாக இருந்தது என்பதை நினைவு சேகரத்திலிருந்து துருவினாள். உண்மையில் அம்மாவிடம் பெரிதாய் எதிர்வினை இருந்ததற்கான தடயமே இல்லை.

“இவ்ளோ நாள் அப்பா மாதிரி ஆள்கூட கஷ்டப்பட்டு வாழ்ந்துட்டு வயசான காலத்துல ஏன் இப்படி ஆளுங்க வாயில உழுறீங்க. பேசாம வீட்டுலயே இருக்க வேண்டியதுதான,” என்று வசந்தி சொல்லும்போது அம்மாவின் பதில் அப்போதும் மௌனம் மட்டும்தான்.

மௌனத்தை அடுத்து அம்மாவிடம் தன்னியல்பாய் வெளிப்படுவது கண்ணீர். சுணங்கி, சுருண்டு அழுவது அவர் வழக்கமல்ல. முன்னறிவிப்பே இல்லாமல் எவ்விதக் குறிப்பறியும் வழியும் கொடுக்காமல் வேலை செய்து கொண்டே அழுவார். அதை எவராலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. காலம் கடந்தே வசந்தி இதை அறிந்து கொண்டாள். அப்போதெல்லாம் சமாதானம் சொல்லவோ அணைத்துக் கொள்ளவோ தோன்றினாலும் அதற்கெல்லாம் அவசியம் இல்லாமல் அம்மாவே சமாதானம் ஆகிவிடுவார்.

வசந்தி எவ்வளவோ மன்றாடியும் அங்கு வேலைக்குப் போவதை அம்மா நிறுத்தவேயில்லை. கடைசியில் அவள்தான் அம்மாவுக்கு துணையாகப் போவதை தவிர்த்தாள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அம்மாவையும் தடுக்க முயன்றாள். திருமணமான பின் அதற்கும் வழியில்லாமல் போனது. முன்பைப்போல துணிக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தால் இன்னும்கூட பிடிவாதமாய் தடுத்திருக்க முடியும். மறுவீடு சென்று எல்லாவற்றுக்கும் கணவனை நம்பி வாழ வேண்டியிருந்த சூழலில் வசந்தியின் கையாலாகாத்தனம் அவள் வாய்க்கும் பூட்டு போட்டுவிட்டிருந்தது.

அவ்வளவு நேரம் அழுதது போலவே தோன்றவில்லை. இருப்பு நிலைக்கு மீண்டபோது இமைகளின் ஓரம் பிசுபிசுத்தது. நெஞ்சுக்குழியில் குத்துக்கல்லாய் வேதனை அப்படியே இறுக்கிக் கொண்டு கிடந்தது. கார் கதவைத் திறந்து வெளியே வர உடலை எம்பியபோது விண்ணென்று வலி அடிவயிற்றைக் கிழித்து நிதானத்தைச் சிதைத்தது. அசைவு அத்தனையையும் சட்டென நிறுத்திக் கொண்டு சட்டைக்குள் கைவிட்டு அடிவயிற்றில் தடவினாள். தையல் பிரிந்ததற்கான தடயம் இல்லை. விரல்களைப் பார்த்தாள், ரத்தமும் கசிந்திருக்கவில்லை. மெதுவாக இறங்கி புட்டி நீரில் முகத்தைக் கழுவிக் கொண்டாள். சிமிழைத் திறந்து குங்குமத்தை விரலில் அள்ளி நெற்றியில் அழுத்திவிட்டு, கைகளால் கோதி முடியைக் கலைத்து, வாகெடுத்து விரல்களாலே தலைவாரிக் கொண்டாள். இரவெல்லாம் பெய்து அடங்கிய மழையில் புழுதி படிந்து செம்மண் வாசம் மேலெழுந்து செம்பனை மரங்களுக்கு மத்தியில் வளர்ந்திருந்த எலுமிச்சை செடிகளின் பச்சை வாசத்தையும் சேர்த்து காற்றில் கலந்திருந்தது. வாசத்துடன் இணைந்து சில்லிட்டு வீசிய காற்றில் அன்றைய பொழுது புதுப்பூவாய் அலன்றிருந்தது. ஆனால் வினாடி தோறும் புழுக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதாய் வசந்திக்குத் தோன்றியது. இன்னொருமுறை மழை பெய்தால் தேவலாம் போலிருந்தது.

ஒருவழியாக செல்லய்யாவின் வீட்டு வளாகத்தில் காரை நிறுத்தினாள். கெட்டியாகப் பிடித்து வைத்திருந்த மௌனத்தை சட்டென பூமியில் போட்டுடைத்ததுபோல் இறப்பு வீட்டுக்கே உரிய ஒப்பாரியும் ஓலமும் காற்றுவெளியெங்கும் நிரம்பி கனத்து வசந்தியின் காருக்குள்ளும் நுழைந்தது. உச்சந்தலையில் வியர்த்து வழிந்த நீர் நெற்றியில் முட்டி நின்ற வியர்வையுடன் கோர்த்து அவளது குங்குமப்பொட்டை உருக்கி, வடிவத்தைச் சிதைத்துக் கொண்டிருந்தது. அம்மாவின் நிலையை அவளால் கற்பனை செய்ய முடியவில்லை. அம்மா உள்ளூர புழுங்கி அழுதாலோ அல்லது அதற்கு மாற்றாக இயல்பாய் இருந்தாலோ, எது நடந்தாலும் அவர் முகத்தைப் பார்க்கும்போது தான் முழுவதும் உடைந்து விழக்கூடும் என நடுங்கினாள்.

சிறிது நேரம் கூட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை பஞ்சவர்ணத்தின் அலறல் குலைத்தது. காலையிலிருந்து அழுததில் சட்டென்று மூர்ச்சையாகி விட்டிருந்தார். பதறிப்போன சிலர் தண்ணீரை முகத்தில் அடித்து வாயிலும் ஊற்றி அவரை ஓர் ஓரமாக உட்கார வைத்தார்கள். முகம் தொங்கிப்போய்க் கிடந்தது. சட்டென அம்மாவின் முகம் நெஞ்சை உலுக்க, காரை விட்டு இறங்கி, வலியை மறைத்து, இயன்றவரை சகஜமாக நடக்க முயன்றாள். கூட்டத்துள் ஊடுருவிச் சென்று அம்மாவைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதில்லை எனத் தோன்றியது. முதலில் எதிர்பட்ட பேண்ட் வாத்தியக்காரர்களின் வெள்ளைச் சீருடை அணுவகுப்பைக் கடந்து கூடாரத்தை அடைந்தபோது முன்வாசலில் நின்றபடி பாட்டி ஊர்க்கிழவிகளுடன் அங்கலாய்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். முன்வாசலில் நுழையாமல் பின்வாசல் வழியாகச் சென்று தேடினாள். அம்மாவைக் காணவில்லை.

வீட்டைப் பிதுக்கிக் கொண்டு ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி முன்வாசல் கூடாரத்தை நெருக்கிக் கொண்டிருந்தார்கள். இறுதிச்சடங்கு தொடங்குவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தது தெரிந்தது. செல்லய்யாவின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வெற்றுக்கால்களுடன் காலி குடங்களை ஏந்தி எதிர்விட்டு குழாயடிக்கு வரிசை பிடித்து போய்க்கொண்டிருந்தார்கள். அம்மாவைப் பார்க்கும்வரை படபடப்பு குறைவதாக இல்லை. முன்வாசலில் நுழைந்தபோது எவரோ சட்டென கைகளைப் பற்ற, திரும்பிப் பார்த்தாள்.

“அங்கள தொட்டுக் கும்புட்டு போ,” கையைப் பலமாக இழுத்தபடி பாட்டி கூறினார்.

“கையெ விடு,” மணிக்கட்டில் இறுக்கிக் கொண்டிருந்த பாட்டியின் விரல்களைப் பிரித்து விடுவிக்க முயன்றபடி முனகினாள்.

அப்பாவைக்கூட மன்னித்து விடலாம். நோய் முற்றி, பீ மூத்திரத்துக்குப் போக கைத்தாங்கலாக ஆள் தேவைப்பட நேர்ந்தபோதுதான் அம்மாவை வேறுமாதிரியாக வசைக்க ஆரம்பித்தார்; அதுவும் வீட்டுக்குள் மட்டும்தான். ஆனால், செம்பனைக் காட்டுக்குள் மறைவாய் போய் சாராயத்தை இறக்கிவிட்டு ஊரெல்லாம் பாட்டி பேசியவை கொஞ்ச நஞ்சமல்ல. நினைக்கும் போதெல்லாம் வசந்திக்கு இருப்பு கொள்ளாமல் ரத்தம் கொதிக்கும். குடித்து குடித்து குடல் வெந்து சாகும்வரை தடுக்காமல் காத்திருந்து, பின் செல்லய்யாவுடன் கும்மாளம் போடுவதாக முடிச்சிபோட்டு பேசினார். ஊர் வாய்க்குத் தூபம் போட்டு ஊதிவிடுவது போதாமல், “ஊமச்சியாட்டம் இருந்து இருந்தே உங்காத்தா காரியம் சாதிக்கிறதுல கெட்டிக்காரி. உங்கப்பனையே தூக்கி முழுங்கனவளாச்சே,” என்று வசந்தியிடமே பலமுறை சொல்லியிருக்கிறார். அப்போதுகூட அம்மா எவரிடமும் எதையுமே விளக்க முயலவில்லை.

முரடு பிடித்து இழுத்த பாட்டியின் சிறுத்த கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குள் செல்லய்யாவின் மனைவி மீண்டும் கதறி அழ ஆரம்பித்தார்.

“என் ஐயா… ஊரே வந்து ஒன்னைய கும்புடுதே. அதுகுள்ள அவசரமா போயிட்டியே, என்னைய தனியா பொளம்ப வுட்டுட்டியே..”

அவரது குரல் சோர்ந்திருந்தது. கைகளைக் குவித்து தலையில் அடித்துக் கொண்டதில் கண்ணாடி வளையல்களில் சில உடைந்து விழுந்தன. கூடியிருந்தவர்களின் புலம்பல்களும் உடனிணைந்து ஓங்கி ஒலிக்கத் துவங்கின. மஞ்சள் பூசி அகலமாய் கும்குமம் வைத்து பட்டுப்புடவை உடுத்தி பூ வைத்து கைகள் நிறைய கண்ணாடி வளையல்களுடன் செல்லய்யாவின் மனைவி இறுதிச் சடங்கின்போது நடத்தப்படும் கட்டாய மாங்கல்ய நீக்கத்துக்கு முன்பதான மங்கள அடையாளங்களை உடல் முழுக்கப் போர்த்தியிருந்தார். சவப்பெட்டியின் மேல்முனையில் சாய்ந்து கொண்டு செல்லய்யாவின் தலைமுடியைக் கோதியபடி ஏதேதோ முனகிக் கொண்டே இருந்தார்.

வசந்தியால் சவப்பெட்டியினுள் பார்க்க முடியவில்லை. பெட்டியைச் சுற்றி ஒருகணம் பார்வையை அலையவிட்டாள். அம்மா அங்கும் இல்லை. எதிர்பட்ட அறைக்குப் போய் பார்க்க நினைத்தபோது, “சாமி ரூம்புல இருக்காங்க,” என்று கூட்டத்திலிருந்து குரல் வர சட்டென திரும்பியவள் கால்பின்னி தடுக்கி விழப் பார்த்தாள்.

அது வசுந்திரா அத்தையின் குரல்.

“விருட்டு விருட்டுனு புருசன குழியில கெடத்திட்டு, மினுக்கிக்கிட்டு ஊர்மேய போறா..,” என பாட்டி தூற்றும்போது வாசற்படியை மறைத்துக் கொண்டு வேலைக்குப் போக விடாமல் அம்மாவைத் திட்டித் தீர்த்தவர். வசந்தியின் நெற்றி முழுவதும் பூத்திருந்த வியர்வைத் துளிகள் புருவங்களைப் பிழிந்து சொட்டியது; ஊடே கண்ணீரும் பொத்துக் கொண்டு வந்தது.

“வயசான காலத்துல அப்படியென்ன கட்டுப்படுத்த முடியாத ஆச உனக்கு அண்ணி? எங்கண்ண இப்பவோ அப்பவோன்னு இழுத்துக்குட்டு இருக்குறப்பதான் மஞ்சள் குங்குமத்த கொறச்சலில்லாம அப்பிக்குவ. என்னம்மோ புருசங்கார உயிர தாலியில இழுத்துப் புடிக்க வந்த பத்தினினுல்ல நெனச்சேன். இப்பவும்ல தளதளன்னு புதுப்பொண்ணாட்டம் மினுக்குற. காலயிலயும் ரவ்வுலயும் போன்ல வேற குசுகுசுனு பேச்சு ஓடுதாமே,” என்று வீட்டையே இரண்டாக்கி விடுவதுப்போல் வசுந்திரா அத்தை கத்திக் கொண்டிருந்த தினம், அம்மா சற்று கூடுதலான நேரம் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். எதிர்வினையற்றிருக்கும் அம்மாவின் சுபாவம் பலசமயம் வசந்தியைக்கூட பொறுமையிழக்க வைத்துள்ளது. அம்மாவின் மௌனத்தை எதிர்த்து பேச முடியாத அவரது இயலாமை என்று ஊகித்துக் கொண்ட வசுந்திரா அத்தை அன்றைய தினம் சகட்டு மேனிக்கு வார்த்தைகளை இறைத்துத் தீர்த்தார்.

இன்று நேற்றல்ல, வயதுக்கு வந்தபின் வெள்ளைக்கார துரை வீட்டில் வேலைக்குச் சேர்ந்த காலத்திலிருந்தே அம்மா மழையில் நனைந்து, சிலிர்த்துக் குலுங்கும் பூப்போலதான் இருந்தார். துரை வீட்டு விருந்தில் பிடித்ததாகச் சொன்ன கருப்பு வெள்ளை புகைப்படம் ஒன்றில் பணிபெண்கள் வரிசையில் நேர்த்தியான உடை, அலங்காரத்துடன் தனித்து தெரிந்தார். நடுவாகெடுத்து சீவி, கட்டி மஞ்சள் தேய்த்து பூசி, கோபுர திலகமிட்டு, காதோரங்களில் கொத்து முடிகளை சுழலவிட்டு அம்மா அணியும் உடம்போடு ஒட்டிய ரவிக்கையும் தரைவரை உரசி நிற்கும் மெக்சியும் காலாகாலமாய் அவர் பெயர் சொல்லும் அடையாளங்கள்.

வசந்திக்கு அம்மாவின் மீதிருந்த நம்பிக்கை அரிக்கத் தொடங்கியது வசுந்திரா அத்தை அமர்க்களப்படுத்திய தனித்ததொரு நிகழ்வால் அல்ல. அது வெறுமனே பஞ்சவர்ணம், பாட்டி உள்ளிட்டவர்களின் வசையிலிருந்து நங்கூரம் பாய்ச்சியிருக்கவுமில்லை. தாலி பிரித்துப்போட அம்மா வீட்டுக்கு வந்திருந்தபோதுதான் வசந்திக்கு அம்மாவின் தனித்த உலகம் தெரிய ஆரம்பித்தது. சில விடியற்காலைகளிலும் உலகமே தூங்கிவிட்ட பின்னிரவிலும் அம்மா பின்வாசல் கதவை ஒருக்களித்து வைத்துவிட்டு வெளிப்புறம் சன்னலோரம் நின்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். ஒட்டுக்கேட்டத்தில் அது தொழிலாளி முதலாளிக்கு மத்தியில் நிகழும் உரையாடல்போல் இல்லை எனத் தெரிந்தது ஒருபுறம் என்றால், அம்மா அத்தனை வார்த்தைகளைக் கோர்வையாகப் பேசக்கூடியவரா என்ற அதிர்ச்சி வசந்தியை நடுங்க வைத்தது. தனக்கு தெரிந்த அம்மா எவரிடமுமே அதிகம் பேசாதவர். வாய் செத்தவள் என்றுதான் அப்பாகூட திட்டுவார். அங்ஙனமே வளைத்துப் பிடித்து விசாரிக்க மனமில்லாமல் அம்மாவைப் போகவிட்டு, பின் அவரது கைபேசியை ஆராய்ந்தாள். பெயர் சேமித்து வைக்காவிட்டாலும் ஒரு எண்ணிலிருந்து மட்டும் வந்து கொண்டிருந்த அழைப்புகள்; அவை செல்லையாவுடையது. மூர்ச்சையாகிப் போனவள் அம்மாவிடம் எதையும் கேட்கவில்லை. சடங்கு முடிந்து கணவன் வீட்டுக்குத் திரும்பி, அதற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதையும் நிறுத்தியிருந்தாள்.

இப்போது அதெதுவுமே வசந்திக்கு பொருட்டாகத் தோன்றவில்லை. இப்போது அவற்றையெல்லாம் அசைபோடவும் மனம் திராணியற்றிருந்தது. அம்மாவைப் பார்க்க வேண்டும். அது மட்டும்தான் சோர்ந்திருந்த உடலை உலுக்கி இயக்கிக் கொண்டிருந்தது. செல்லய்யாவின் மரணத்தைக் காட்டிலும் இந்தத் தருணத்தில் இங்கு இவர்களது இருப்புதான் அம்மாவை கூடுதலாக பாதித்திருக்கும் எனத் தோன்றியதும் கால்கள் சுயமாக சாமி அறையை நோக்கி நகர்ந்தன.

முக்கால்வாசி மூடியிருந்த கதவை மெதுவாகத் தள்ளி தலையை மட்டும் விட்டு எட்டிப் பார்த்தாள். சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். “இப்பதான் வந்தியா… உள்ள வா… அங்கிள பார்த்தியா? தூங்குற மாதிரி இல்ல?” அம்மா சலனமற்ற தொனியில் சாதாரணமாகக் கேட்க, அதைச் சற்றும் எதிர்பார்க்காத வசந்தி திகைத்தாள். அறையினுள் நுழைந்ததும் சட்டென எதையும் பேச அவகாசம் கொடுக்காமல் நெகிழிப்பையை நீட்டி “இந்த இலைய முள்ளில்லாம பிச்சி தாம்பள தட்டுல போடு,” என்றார்.

பையை வாங்கும்போது அம்மாவின் முகத்தை கவனித்தாள். விழியோரம் இலேசாகக் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது. முகம் தொங்கியிருந்தது. இறப்பு வீடுகளுக்கு வருபவர்கள் பெரும்பாலும் கொஞ்சமேனும் அழுவதும், அவர்களது முகம் இலேசாய் சோகத்தை கௌவி நிற்பதும் வழக்கம்தான். அதைக் கடந்து அம்மாவிடம் வேறெந்த சலனமும் தென்படாதது வசந்திக்கு மேலும் மேலும் வியப்பை உண்டாக்கியது. எப்போதும்போல் முகம் கழுத்தேல்லாம் மஞ்சள் பூசி, புருவங்களில் மை வரைந்து, கூம்பு வடிவில் பர்கண்டி நிற பொட்டு வைத்திருந்தார். செல்லய்யாவின் மறைவு உண்டாக்கியிருக்கும் இழப்பின் தடயத்தை அம்மாவின் உடல் அசைவுகள், குரலில் தென்படக்கூடிய மெல்லிய மாற்றம் என ஒவ்வொன்றிலும் தேடித்தேடி வசந்தி களைத்துப் போனாள். அம்மாவின் இயல்பான அலங்காரமும் வசந்தியை என்னவோ செய்தது.

அம்மா சிரிக்கவில்லை, ஆனாலும் உதட்டோரம் மென்சிரிப்பிருந்தது. கூரான முகத்தின் முடிவில் சற்றே விரிந்திருக்கும் தாடையின் இருபக்கமும் விழும் சிறுகுழியும் எப்போதும் மேல்நோக்கி வளைந்திருக்கும் உதட்டின் இருபக்க விளிம்பும் அவரை எப்போதும் சிரித்த முகமாய்க் காட்டும். எவ்வித உணர்வையும் மிஞ்சி வெளிபடும் அல்லது மறைத்து பதுக்கி வைக்கும் முக அமைப்பு அம்மாவுக்கு. வசந்தி அலுத்துக் கொண்டாள்.

வில்வம் இலைகளைப் பிய்த்துக் கொண்டே அடிக்கடி அம்மாவைப் பார்த்தாள். இறுதிச் சடங்குக்கான சீர்வரிசை சாமான்களை தட்டுகளில் பிரித்து வைத்துக் கொண்டிருந்தார். வசந்தி வில்வ இலை ஒன்றை எடுத்து முகர்ந்தாள். கரும்பச்சை நிறத்தில் செழிப்புடன் காட்சியளித்தாலும் வாசமற்றிருந்தது. அப்பாவுக்கு இரத்தக் கோளாறு இருந்த காலங்களில் மருந்தாகும் என்று சொல்லி அம்மா வீட்டின் பின்பக்க தூணில் கொடிவிட செய்திருந்தது நினைவுக்கு வந்தது.

“அப்படியே மோந்தா வாசமிருக்காது. கசக்கிட்டு மோந்து பாரு,” அம்மாதான் பேசினார். வாசம் தன்னியல்பில் வர வேண்டும்தானே. வதைத்தா பிடுங்குவது… நெஞ்சில் கனம் அப்படியே இறுகி இருந்ததை அவளால் உணர முடிந்தது. கசக்க மனமில்லாமல் தட்டில் போட்டுவிட்டாள். புறவாசலிலும் நடுவீட்டிலும் அவ்வப்போது ஓங்கி, ஓய்ந்துக் கொண்டிருந்த அழுகைச் சத்தங்கள் மனதை உலுக்கி உலுக்கி வசந்திக்கு அழுகையை முட்டச்செய்தன. அம்மா தட்டுகளைச் சன்னல் வழியாக கூடாரத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஈமச்சடங்கு செய்ய வந்த பூசாரி காற்றில் குரலை இழையவிட்டு அடுத்த ஒரு மணிநேரம் ஓதப்போகும் மந்திரங்களை மனதில் வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். செல்லய்யா இறந்த நேரம் சரியில்லை என்பதால் மறுநாள்வரை காத்திராமல் அன்றைய தினமே அடக்கம் செய்ய ஏற்பாடாகியிருந்தது. பூசாரியின் கரகரத்த குரல் உள்ளும் புறமும் குழுமியிருந்தவர்களின் பரபரப்பு, பால்குடி மறக்காத குழந்தைகளின் அழுகைக்கு மத்தியில் செல்லய்யாவின் மனைவி சோர்ந்து அழும் சத்தம் ஈனமாய் கேட்டது. பெட்டியை வெளியில் கொண்டுவரும்வரை பேண்ட் வாத்திய இசை ஓலங்களை மிஞ்சி கேட்டது. வசந்தி மீண்டும் அம்மாவைப் பார்த்தாள். சுடுகாட்டுக்குப் போய் காரியம் முடித்து வருவதற்குள் வீடு கழுவி, படையல் போடுவதற்குத் தோதான வேலைகளை முடித்துவிட்டு சமையலறைக்குச் சென்றார். பின் தொடர்ந்து சென்றவளிடம் தேநீர் குவளையை நீட்டி,

“போய் பாட்டிக்கு குடு,” என்றார்.

பாட்டிக்குச் சேவகம் செய்ய பிடிக்கவில்லை என்றாலும் அப்போதைக்கு அம்மாவின் ஏவல்களை மறுக்க மனம் வரவில்லை. பின்வாசலில் நின்றிருந்த பாட்டியிடம் குவளையை நீட்டியபோது, “ஏண்டி… உம்புருசங்காரன் வரலியா?” என்றார். இல்லையென தலையசைத்துவிட்டு திரும்பிப் பார்த்தாள். அம்மா அப்போதும் வேலைதான் செய்து கொண்டிருந்தார். பேசனில் குவிந்திருந்த குவளைகளைக் கழுவி அடுக்கிக் கொண்டிருந்தார்.

அம்மா தேறிவிட்டாரா? வசந்தியால் நம்ப முடியவில்லை. முப்பது வருடங்களுக்கு முன்பு டெங்கில் குப்பைமேட்டில் டேக்சியோடு எரியுண்டு மடிந்த தன் அண்ணனைப் பற்றி பேசும்போதெல்லாம் அழுதுவிடும் அம்மாவால் நிச்சயம் செல்லய்யாவின் இறப்பை அவ்வளவு இயல்பாக கடந்து செல்ல முடியாதென தோன்றியது. இன்னொரு பக்கம் அம்மாவின் இயல்பான அன்பை தான் அதிகப்படுத்தி யோசித்து விட்டேனோ என்ற எண்ணம் வந்தபோது மனமெல்லாம் குத்தியது. சோர்ந்து விழும் பஞ்சவர்ணத்தைத் தாங்கிப் பிடிப்பது, சீர் சாமான்களை எடுத்துக் கொடுப்பது, பூசாரி ஏவும் சில்லறை வேலைகளில் மும்முரம் காட்டுவது, பேசுவது, நடப்பது, பம்பரமாய் சுழல்வது எல்லாமுமே அம்மா அவ்வீட்டில் பணிபுரியும் வேலையாளுக்கே உரிய பாவனையில் இயல்பாக இருப்பதைக் காட்டிக் கொண்டே இருந்தது. ஓரிடத்தில் நிலைகொள்ளாமல் அரற்றியலையும் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் வசந்தி தலைசுற்றிப் போனாள்.

அம்மா கையைக் காட்டி கூப்பிடுவது தெரிந்தது. அறை ஒன்றுக்குள் நுழைந்து, “எங்க… காட்டு,” என்றவரை வசந்தி ஆச்சரியமாகப் பார்த்தாள்.

திருமணமாகி விட்ட பின் நிர்வாணத்தைக் காட்டுவது அப்படியொன்றும் வெட்கத்துக்குரியதாக இல்லாவிட்டாலும் இந்தச் சூழலில் அம்மா கேட்பார் என்று அவள் கற்பனையும் செய்திருக்கவில்லை. வெளியே ஈமச்சடங்கு தொடங்கியிருந்தது. பூசாரி மந்திரங்களினூடே பெட்டியைச் சுற்றி எறிந்து, பொசுங்கிக் கொண்டிருந்த நெய்பந்த சுள்ளிகள் கரும்புகையைக் கக்கிக் கொண்டிருந்தன. பெரும்பாலும் எல்லோரும் கண்களைக் கசக்குவதில் மும்முரமாக இருந்தது தெரிந்தது.

“சின்ன வெட்டுதாம்மா. ஆனா தொப்புளுக்குள்ள…”
அம்மா வசந்தியின் அடிவயிற்றில் விரல்களை உலாவவிட்டு அறுவை செய்யப்பட்ட தோல்பகுதி தட்டுப்பட்டதும் வருடிக் கொடுத்தாள். கைகளெல்லாம் ரேகையாகி விட்டதைபோல் அவ்வளவு சுருக்கங்கள். மஞ்சள் காய்ந்து, கை சுருக்கங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிந்தன.
கைகளில் ஓரளவு தசைப்பற்று இருந்தது. நெருங்கி வந்ததில் வியர்வையில் கலந்த மஞ்சள் வாசம் மூக்கின் மிக அண்மையில் காற்றில் ஊடுருவி கரைந்து கொண்டிருந்தது. வசந்தி அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். குட்டையானவர்களுக்கே உரிய இளமை அம்மாவை இன்னமும் நீங்காமல் இருந்தது.

சங்கடத்துடன், “ம்மா” என்றவளிடம்,

“ரொம்பவா வலிக்கிது?” கேட்டுக்கொண்டே மண்டியிட்டு உட்கார்ந்து தொப்புளைக் கூர்ந்து பார்த்தபடி கவனத்தை மூக்கின் நுனியில் வைத்தவர்போல் நெருங்கி வந்து முகர்ந்து, பின் சிறுவிரலை விட்டு இலேசாய் அழுத்தினார்.

“மேல தோலுதான் காஞ்சிருக்கு. அப்படியே அசட்டையா கெடந்துடாத. உள்ள தசமடிப்பு ஆயிரம் கெடக்கு… எங்க எது ரணமாயிருக்குன்னு தெரியாது. காய ரொம்ப நாளாவும். எல்லாத்தையும் மெல்லமா நிதானமா செய்யப் பழகு. பாரம் தூக்காத. ஒறவு வேணாம். ஒருநேரம் போல காணாது. எப்பவும் கர்ணபுறா தைலத்த கொதகொதன்னு பூசி வையி,” என்றபடி எழுந்து நின்றார்.

“அதுக்கில்ல ம்மா..”

சொல்லி முடிப்பதற்குள் உடல் குலுங்கி வெதும்பியது. பிறகு பேசலாம் என சொல்லிவிட்டு, சாமி மேடையிலிருந்து திருநீறை இரு கைவிரல்களால் அள்ளி வயிற்றை சற்று அழுத்தி தடவியவாறு வட்டமிட்டு அடிவயிற்றில் கொண்டு வந்து நிறுத்தி பூமியில் இறக்கித் தட்டினார். இப்படியே மூன்றுமுறை செய்து, மூன்றாம்முறை ‘உஷ்’ என ஓசையெழுப்பி கைகளை பூமியில் வேகமாகத் தட்டி “நல்லா போயிரும், நல்லா போயிரும்,” என்றார்.

வெளியில் எவரோ கூப்பிடும் குரல் கேட்க, பஞ்சவர்ணத்திற்கு மாற்றுப்புடவையை எடுத்துக் கொண்டு அம்மா ஓட்டமும் நடையுமாக அறையை விட்டு வெளியேறினார்.

“யப்பா… பெட்டிய தூக்குங்க. நேரமாகுதுல. தலைய வடக்காலே தூக்கிட்டு வாங்கப்பா.”

அறைக்கதவு இலேசாக அசைந்து நின்றது. உள்ளிழுத்த மூச்சு வெளிவராமல் அடைத்துக் கொண்டு அடிவயிற்றில் பெரும் கனமாய் உருண்டு கொதிப்பது போலானது. புருவங்கள் நெற்றிப்பொட்டை நெருக்கி, கண்கள் சொருகி, உடம்பெல்லாம் வெடவெடத்து மருள் வந்தது போலானது. அடிவயிற்றில் திரண்டிருந்த காற்று பெருங்குரலெடுத்து வெடித்து தீக்குழம்பாய் பீய்த்தடித்தது. நெஞ்சுடைந்த வலியில் வசந்தியின் சொற்கள் அத்தனையும் கரைந்துபோன கணம் “ஐயோ…” என பஞ்சவர்ணத்தின் ஓலம் காற்றை இறுக்கி நிரப்பியது. சுதாரித்துக் கொண்டு வெளியில் வந்த வசந்தி கூட்டத்தில் இல்லாத அம்மாவை நாலாபுறமும் தேடினாள்.

***

விஜயலட்சுமி – மலேசியாவைச் சேர்ந்த இவரது கே.எஸ். மணியம் சிறுகதைகள் எனும் மொழிபெயர்ப்பு கதைகள் தொகுப்பு 2018ஆம் ஆண்டு வெளியானது. மலேசியாவில் நூலகராகப் பணிபுரிந்து வருகிறார். வல்லினம் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு [email protected]

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular