Thursday, December 5, 2024

அவன்

வைரவன்

ன்ன பெங்களூர் வந்திருக்க.. அத்தான்ட்ட ஒரு வார்த்தை சொல்லல.. சாயந்திரம் கோரமங்களா வா.. பாக்கலாம்”. அத்தான் அலைபேசியில் அழைத்ததும் உள்ளே அப்பா சொல்லிய ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் கனத்தைக் கூட்டியது. “அங்க போறதுலாம் சரி. பண்டாரம் மவன்ட்ட ரொம்ப பழக்க வழக்கம் வச்சுக்க வேண்டாம். ஆளு ஒரு மாரியாம். பாத்தீலா ஆச்சிக்க துஷ்டி வீட்டுக்கு அவன் வந்த லச்சணம். போய் ஏதாச்சும் அவன் கூட சுத்துன மாதிரி கேள்விப்பட்டேன். ரெண்டா வகுந்துருவேன் பாத்துக்க. வேலைக்காக மட்டும் தான் அனுப்பியிருக்கேன்” எல்லாம் சொல்லிவிட்டு பண்டாரம் மணி மாமா வீட்டிற்கு செல்லும் போது “நம்ம மருமவன் பெங்களூர்ல இருக்க தைரியத்துலயாக்கும் பிள்ளையை அனுப்புகேன். பயலுகிட்ட சொல்லும் மாப்பிள” அப்பா நளியாய் கூற, மணி மாமா தலையாட்டியபடி சிரித்துக் கொண்டே “உமக்க வாயி தான்டே சனியன்” வாயில் குதப்பிய வெத்திலை சாறு தெறிக்க சொன்னார். உள்ளே பூஜையறைக்கு அழைத்து திருநீறு பூசும்போது “அவன் தெற்று ஒன்னும் செய்யல மக்களே. அப்பன் நானே புரிஞ்சிக்க கொல்லம் ஒருவாடு ஆச்சு. ஊருக்காரன் புரிஞ்சி என்ன மயித்துக்கு. அங்க போய் ஏதாச்சும் உபகாரம் வேணும்னா அத்தான போய் கண்டிப்பா பாரு. இன்னா அவனுக்க நம்பர் பதிச்சு வச்சுக்கோ” நான் வெளியே இறங்கவும், கையில் இருநூறைத் திணித்தவர், மெதுவாய் காதருகே “அம்மை பலகாரம்ல சுட்டு தாரால”, தூரத்தில் அப்பா வழக்கம் போல பக்கத்து வீட்டு ஐயப்பன் மாமாவிடம் ஊர்க்கதை வம்பளந்து கொண்டிருந்தார். நான் மெதுவாய் மாமாவிடம் “ஆமா, அதிரசம் முந்திரிக்கொத்து கட்டி வச்சுருக்கா”, “அவனுக்கும் கொடுத்துவிட ஆசைதான். உங்க அம்மை செஞ்ச அதிரசம் அவனுக்கு இஷ்டம். போய் அவனுக்கு கொஞ்சம் போய் கொடு மக்களே” என்றபடியே நெற்றி சிவக்க முத்தமிட்டார்.

பள்ளிக்கூடம் படிக்கையில் சூர்யா அத்தான் ஊரின் முக்கில் இருக்கும் களத்திற்கு வந்தாலே நான் உட்பட சிறுசுகள் பார் கம்பிகள் பொருத்தப்பட்ட இடத்திற்கு வந்துவிடுவோம். பாரில் ஏறி பல வித்தைகள் காட்டுவான். அவனின் பலமான விரிந்த நெஞ்சும், உலக்கைப் போல கனத்திருக்கும் கைகளும் பார்க்கும் போதே கிறக்கத்தைக் கொடுக்கும். அவனும் சிலரைத் தூக்கி பார் கம்பியில் ஏற்றி விட்டு மெதுவாக அதிலே தண்டால் போட சொல்லிக் கொடுப்பான். என்னைத் தூக்கும் போது மட்டும் கூச்சப்படும் அத்தானைக் கூடி நிற்கும் அவன் நண்பர்கள் கிண்டுவார்கள். முத்தாரம்மன் கோயில் பண்டாரம் மணி மாமாவின் மகன் என்பதால் ஒடுக்கத்தி வெள்ளிகளில் கோயிலில் காவிச்சாரம் கட்டிக்கொண்டு சட்டையணியாமல் கெத்தாக நிற்கும் போது வயதுக்கு வந்த ஊர் பெண்பிள்ளைகளின் கண்கள் அத்தானையே மொய்க்கும். எனக்கும் அவனைப் போலவே சட்டையணியாமல் சாரம் கட்டிக்கொண்டு நிற்க பிடிக்கும்.

சாயந்திரம் எப்படியோ கேப் புக் செய்து கோரமங்களா அத்தான் வீட்டிற்கு வந்துவிட்டேன். தலையில் ஒரு முடியில்லாமல் வழித்து, காதில் கடுக்கனோடு, கை முழுக்க தீப்பிடித்து எரியும் மண்டை ஓடு பச்சை குத்தியிருந்தது. துஷ்டி வீட்டில் அவனை வித்தியாசமாய் எல்லோரும் பார்த்த அந்த நொடி நியாபகம் வர, அத்தான் வழக்கம் போல “சின்னதுல கட்டக்கிளின்னு கூப்பிடுவேன். இப்போ என் உசரம் வந்துட்ட மக்கா” சிறுவயதில் அத்தான் கால் மாட்டிலே சுற்றுவதால் அத்தான் சூட்டிய பட்டப்பெயர் ‘கட்டக்கிளி’. கையில் இருந்த பையை நீட்டினேன், அதில் இருந்த அதிரசத்தை மட்டும் எடுத்தவன் “அத்தை சுட்டதா. நல்ல நெய் ஊத்தி சக்கரப்பாக இந்த பக்குவத்துல செய்ய உங்க அம்மைய விட்டா ஆளுண்டா”, “அத்தான் எல்லாத்தையும் நீயே எடுத்துக்கோ” நான் சொல்லவும், “சின்னதுல பாத்த மாறியே இருக்க. சரி அடுத்து என்ன பிளான். வா வீக் எண்ட் வெளியே போவோம். எப்படி பார்ட்டி ட்ரிங்க்ஸ்லாம் பழக்கம் இருக்கா. பொய் சொல்லாத. இன்ஜினியரிங் மெட்ராஸ்ல படிச்சிருக்க”, “பைனல் இயர்ல கொஞ்சம் பியர் சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்த்தான்”, “போடு வெடிய” அத்தான் சிரித்துக்கொண்டே சொல்லவும் நான் மெதுவாய் வீட்டை நோட்டமிட்டேன். அலங்காரமான வீடு எல்லாமே சுத்தமாக இருந்தது. ஆங்காங்கே செடிகள், பால்கனியில் செவ்வண்ண நிற பூக்கள் படர்ந்த கொடி எல்லாமுமே பசுமையாய் இருந்தது. பக்கவாட்டு சுவற்றில் கண்ணாடி பொருத்தியிருந்த அலமாரி முழுக்க கோப்பைகள், பதக்கங்கள் அலங்கரித்தன. “இதுலாம் நீங்க வாங்குனதா”, “அடியேன் தான், பின்ன வேற யாரு. சரி வா.. வெளியே போலாம்” இருவருக்கும் பேசிக்கொள்ள பல கதைகள் இருந்தன.

சாலை முழுக்க தாழ்ந்து நின்ற மரங்களில் மென்மையாய் தூறிய துளிகள் சிந்த, எங்கும் அழகாய் ஜொலிக்கும் உடைகள் அணிந்த யுவ, யுவதிகள். “வீக் எண்ட் இப்படித்தான் இருக்கும். ஊருல எல்லோரும் எப்படி இருக்காங்க. ஆச்சி இறந்தப்போ வந்தது. மூனு வருஷம் ஆயிட்டு பாத்தியா. ஊருக்கு வரணும். சரி நாகுப்பிள்ள இருக்காரா?”, “அவரு செத்து வருஷம் ஒன்னாச்சு. சாகது வர எந்த மவன் வீட்டுலயும் சேத்துக்கல. எல்லாவனும் கிண்டிட்டு அலைவானுக. சுடுகாட்டு சுடல கிட்ட செத்து கிடந்தாரு. வெட்டியானே எல்லாம் முடிச்சானாம். பைசா மட்டும் மூத்தவன் கொடுத்தான்”, “தேவடியா பசங்க” அத்தான் கோபமாய் வாயில் முணுமுணுத்தது தெரிந்தது, அருகே இருந்த கடையில் சிகரெட் வாங்கி சிலநிமிடங்கள் சற்று ஒதுங்கி நின்றான். அருகில் செல்லவும் கையில் சிகரெட்டை மறைக்க, மீண்டும் விலகி நின்றேன்.

நாகுப்பிள்ளை தாத்தாவைப் பற்றி ஊரில் யாருக்கும் நல்ல அபிப்ராயம் இல்லை. அவரின் பேச்சில் எப்போதும் ஒரு நளினம் இருக்கும். ஆண்கள் மத்தியில் எப்போதும் குழைந்தபடி பேசிக்கொண்டிருப்பார். யார் ஆரம்பித்தார் என ஊரில் யாருக்கும் தெரியாது “நாரோயில் தியேட்டர்ல தான் கிடை. ஆம்பளைக கூடப் போற யோக்கியன். நல்ல வேலை பொண்டாட்டி செத்தா. சாக வர காத்திருந்து இருப்பான். கிழட்டு நாயி” அவர் அடிக்கடி நாகர்கோயில் போவது வழக்கம் தான். ஆனாலும் இந்த பேச்சு அவர் வீட்டுப்படி வரையேறி ஒத்தைக் கட்டையாய் தனிவீட்டில் அமர்த்தும் நிலைக்குத் தள்ளியது. “நாகுப்பிள்ள இன்னைக்கும் தோப்புக்கு அந்த பயல கூட்டிட்டு போனான் பாத்தியா. பண்டாரத்த கண்டா சொல்லணும். பொட்டப் பைய நம்ம குடும்பத்துலலா எழவுக்கு நிக்கான். சூர்யாவுக்கு எதுக்கு அந்த ஆகாதவன் கூட பழக்கம். அவன் கூட எங்கயாச்சும் பேசிட்டு திரியத பாத்தேன். அங்கையே ரெண்டா பொளந்துட்டு ஒரு பொம்பளப்பிள்ள மட்டும் போதும்னு உனக்கு காடாத்து நடத்திருவேன்” அப்பாவின் குரல் காதில் மீண்டும் ஒலிக்க, அத்தான் பக்கத்தில் நின்றிருந்தேன். “ஊரா மக்கா அது. இன்னும் மாற மாட்டாங்க. அதான் அந்த பக்கமே தல வச்சு படுக்கது இல்ல”. அத்தான் என்னையே பார்த்து ஒரு நொடி உதடு விரியாமல் சிரித்தவன் “உங்க அய்யாக்கு தெரியுமா? இப்பிடி என்கூட இருக்கது”, நானும் எதுவும் சொல்லாமல் ‘இல்லை’ என்பது போல தலையாட்டினேன்.

ஊரிலே முதல் ஆளாய் ஐ.டி துறையில் வேலை பார்த்தது சூர்யா அத்தான் தான். அதன் பிறகே பண்டாரம் மாமா தட்டு வீடு கட்டியது, இரண்டு பெண்பிள்ளைகளின் திருமணம் நடந்தது. முத்தாரம்மன் கோயில் வருமானத்தில் என்ன செய்ய இயலும். ஊரார் வரி கொடுத்தால் உண்டு, அதுவும் ஒடுக்கத்தி வெள்ளிகளில் வைக்கும் சர்க்கரை பாயாசத்திற்கும், ஆரங்களுக்கும் மட்டுமே காணும் அளவிற்குக்குதான். சித்திரை கொடைக்கு வரிவசூல் செய்ய தலைவர், செயலாளர், பொருளாளர் உண்டு. அவர்கள் பொடை நிறைய மீதி கொஞ்சம் வரும். மஞ்சனையும் கமுகமும் கைக்காசில் தான் ஓடுகிறது.

அவன் வடசேரி எஸ்.எம்.ஆர்.வியில் படித்தான். அதனாலே ஊரில் பொண்டுப் பொடிசுகள் போர் ரூட் பேருந்து நிறைய படிக்கட்டில் தொங்கியப்படி திட்டுவிளையில் இருந்து வடசேரிக்கு வருவர். கோவை அரசு பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு எங்கள் ஊரில் இருந்து பெங்களூருக்கு முதலில் வந்தவனும் அவன்தான். முடுக்கு வீட்டு வேணிக்கு அத்தான் என்றாலே பிடித்தம், மாறாக துளியும் அக்கறை இல்லாமல் கண்டுகொள்ளாமல் சுத்துவான். இத்தனைக்கும் வேணி என்றாலே ஊர் இளைஞர் கூட்டம் பின்னாலே சுத்தும். சில நேரங்களில் வேணியின் கடிதங்களுக்குத் தூதாய் சென்றுள்ளேன். நான் என்பதால் அத்தான் ஏசாமல் திருப்பியனுப்புவான். பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகே அத்தானையும் நாகுப் பிள்ளை தாத்தாவையும் பற்றி புறணி பேசுவது என் வயது ஒத்தவர்களிடையிலும் நடந்தது. “உங்க அத்தான் இனி உன்கூடலாம் பேச மாட்டான். அவனுக்கு நாகுப்பிள்ளை போதும்” இதை அத்தானிடம் இதுவரையிலும் நானாய் சொன்னது கிடையாது, சொல்பவர்களும் நேராய் அவனிடம் போய் சொல்ல தைரியமில்லை. பண்டாரம் மாமா அதிர்ந்து கூட பேசமாட்டார். அப்பாவும் ஊர்க்காரனை போல அவரிடம் ஏத்திவிட்டுக் கொண்டே இருப்பார். வீட்டில் சிறுபிள்ளைகள் இருக்கும் போது அத்தை வயிற்றில் ஆபரேஷன் என்று கோட்டார் ஆசுவத்திரி போனவர் திரும்பி பிணமாய் வந்தார். நல்ல ஆகாரம் வேண்டும் என்றால் அத்தான், மைனிமார்கள் எங்கள் வீட்டிற்கு தான் வருவார்கள். அப்பாவிற்கு அதில் பெரிதாய் விருப்பமில்லை. ஒருநாள் தோப்பில் இருந்து பண்டாரம் மாமா அத்தானை அடித்து இழுத்து செல்லும் போது, கூசியபடி நடந்த அத்தானின் நடை எனக்கு பிடிக்கவில்லை, மாமாவின் சொற்கள் தெருவெங்கும் சிதறியது “மூத்த ரெண்டு கொமரு இருக்கு. நீ கழுவா போய். அவாளுக்கு மாப்பிளை தரம் வராண்டாம்னு பாக்கியோ”. வேணியும் அதன் பிறகு அத்தானைப் பற்றி பேசியதில்லை. பிறகு ஒருநாள் முத்தாரம்மன் கோயில் வெளிநடையில் அத்தான் அமர்ந்திருந்தான், கோயிலுக்கு சென்ற நான் அருகில் உட்காரவும் “என்ன உன் பிரண்ட்லாம் கத சொல்லலியா. என்கிட்ட இருக்காத தள்ளிப்போ. கருக்கள் நேரம் வேற வீட்டுக்கு போ. சீக்கிரம் படிச்சுட்டு ஊரை விட்டே போணும் மக்கா. எப்படியும் நல்ல வேலைக்கு போய் அக்காவலாம் கட்டி கொடுத்துருவேன். சீக்கிரம் போணும், ஊரை விட்டு போணும்” என் முன்னே அழுவதைத் தவிர்க்க அத்தனை முயற்சித்தும் அவன் தோற்பதை விரும்பாமல் நானே எழுந்து சென்றேன். நினைத்தபடியே கோவை சென்றான். ஊருக்கும் அதிகம் வருவதில்லை, வேலையும் கிடைத்தது. அக்காக்கள் திருமணத்திற்கு வந்தவன் என்னிடம் கொஞ்சமாகவே பேசினான்.

ஒரு குகையில் நுழைவது போல இருந்தது அந்த கட்டிடம். எங்குமே பலவண்ண நிறங்களில் விளக்குகள், அதன் ஒளி விரியும் வெளியெங்கும் புகைக்கோளம். அத்தான் கூட்டிச்சென்ற மேஜை அருகே யாருமே சாதாரணமான தோற்றத்தில் இல்லை, பெண்களின் முடியெங்கும் சாயம், உதட்டில் புருவத்தில் தோடுகள். ஆண்கள் எல்லாருமே பலசாலிகள் போலவிருந்தனர். அங்கே ஒல்லியாய், என்போன்ற உடையில், தோற்றவாக்கில் யாருமே இல்லை. ஒரு பீர் வாங்கி மெதுவாய் பருக ஆரம்பித்தேன். அத்தான் என்னிடத்தில் மட்டும் தமிழில் பேசினான். சுற்றிலும் ஆங்கிலம் மிதக்க கைகள், கால்கள், தோள்கள், மொத்த உடலுமே எடையில்லை. கை கால்கள் அசைய எங்குமே நடனம், அத்தான் ஆட ஆரம்பிக்க விசில், கைத்தட்டல் சத்தம். ஒரு புதிய அத்தானை பார்த்துக் கொண்டிருந்தேன்.

வெளியே வரவும் “பழசு எதையும் யோசிக்க கூடாது. ஊர் ஸ்லாங்கே நீ வரவும் தான் வந்துச்சு. நாகுப்பிள்ளைலாம் பொறந்த காலம், ஊரு தப்பு மக்கா. ஆளும் படிக்கல, அவர மிரட்டி கல்யாணம் பண்ணி வச்சு. ரொம்ப கஷ்டம் அதுலாம். அத்தான் ஓவரா பேசுகனா?”, “இல்லத்தான். அப்பா சொல்லியும் கேக்காம பாக்க வந்திருக்கேன், பொறவு என்ன. நீ பேசு”, “உங்க அய்யா பழைய ஆளு மக்கா. மாறவே மாட்டாரு. இன்னும் கௌரவத்த விடாம வச்சுருக்க மனுஷன், அதுல கால் பைசா பிரயோஜனம் கிடையாது. நல்லவன்தான், எங்கள கண்டா பிடிக்காட்டியும் நல்ல சோறு அவரு சம்பாதிச்ச பைசால தானே சாப்பிட்டோம்”, “அவர விடுங்க அத்தான்”. “நாகுப்பிள்ளை பாவப்பட்ட மனுஷன். அந்த ஆச்சி இருக்க வரை. துணையா கிடந்து, வேற நினைப்பு வராம பாத்துக்கிட்டுச்சு. அதுக்கு காரணம் ஆச்சிக்கு அவர் மேல இருந்த அன்னியோன்யம். ஒரு சூழ்நிலை கைதி தன்னோட விருப்பம் என்னனு தெரிஞ்சும் தன்னையே தண்டிச்சுட்டு வாழ்ந்தாரு. அது சாகவும், பெத்த புள்ளைகளும் மதிக்கல. வெளிய இறங்கிட்டாரு, அதுதான் அவருக்க சுதந்திரம். அது தப்பா மக்கா. நம்ம வேணி.. எப்பா லட்சணமா எப்புடி இருப்பா. ஆனா அவமேல எதுவும் தோணல.” அத்தான் நிலையில்லாமல் பேசுவது ஏற்கனவே ஊரில் நான் கேட்ட கதைகள் தான். எதையும் வெளிப்படையாய் பேசமால் நான் புரியும்படியே பேசிக்கொண்டு இருந்த அத்தானை யாருக்குத்தான் பிடிக்காது. நான் பார்த்த பதக்கங்களில் மிஸ்டர்.கே இந்தியாவில் அத்தான் ராஜவுடையில் தோரணையாய் இருந்ததே இன்னும் கண்ணுக்குள் தெரிகிறது.

அவனது முகநூல் வளையத்தில் நான் இல்லையே ஒழிய, தினமும் அதை ஒருமுறையாவது நோண்டாமல் உறங்கியதில்லை. எப்போதும் அவனின் வித்தியாசமான புகைப்படக் கோணங்கள், அவனின் நண்பர்கள், அந்தக்குழு, அவனின் சில இணையப் பேட்டிகள் அதில் புலப்படும் தனியாளுமை எல்லாமுமே ஈர்க்கும் விஷயங்கள். அதுவே அத்தானைத் தேடி பெங்களூரு வர நிர்பந்தித்தது. எனக்கான கேள்விகளின் விடை அவனுக்குத் தெரியும் என்பதே ஆசுவாசம்.

“அத்தான் அப்போ நீ நாகுப்பிள்ள மாதிரி கல்யாணம் பண்ண மாட்ட அப்படித்தானா”, முகம் பார்த்து அப்படியே தலைக்கோணச் சிரித்தவன் “ஆல்ரெடி எனக்கு பார்ட்னர் இருக்கான். சாகர் இப்போ வீட்டுக்கு வந்திருப்பான். அவன் ஒரு பஞ்சாபி. வீட்டுக்கு போகும்போது பாரு சிக்கன் டிக்கா, கீ ரைஸ் மணக்கும். கெஸ்ட் வராங்கனு மெசேஜ் பண்ணிட்டேன்”, நான் எதுவும் பேசாமல் எனக்குள் குமைய ஆரம்பித்தேன். என்னிலை அறியாதவன் “உனக்கு தெரியுமா இங்க கலாச்சாரம் மாற ஆரம்பிச்சாச்சு. எல்லாமே பரந்த நிலையை நோக்கி நகருது. எல்.ஜி.பி.டி பத்தின புரிதல் ஓரளவுக்கு வர ஆரம்பிச்சாச்சு. நீயும் படிச்சிருக்க, உனக்கு புரியும்னு நினைக்கிறேன்”, “எல்லாம் புரியும் அத்தான். நீ ஒரு கே அவ்ளோதான. அது உன்னோட விருப்பம்”, அத்தான் ஒருமுறை குறுகுறுவெனப் பார்த்தவன் “நான் ஆக்ஸ்போர்ட்ல எல்.ஜி.பி.டி பத்தின கோர்ஸ் படிச்சுட்டு இங்க கவுன்சலரா இருக்கேன். எவ்ளோ கேஸஸ். தன்னோட பாலின விருப்பம் அதுக்கு நேர்மாறான உடல் இருக்கும் போது இயல்பா சுத்தி இருக்கிற சமூக அமைப்பு அது உருவாக்கி வச்சிருக்கற எழுதப்படாத விதிகள், சாதாரணமான ஆணையோ பெண்ணையோ பார்க்கிற போது தான் இவங்க இரண்டும் இல்ல என்கிற பதட்டம் தான் முதல் சவால். அப்புறம் தன்னோட குடும்பம் எப்படி எடுத்துப்பாங்கங்கிற அழுத்தம். அதை மீறும் போது தனக்கான நபர்கள் யாருனு சரியா தேர்ந்து எடுக்கணும். என்னோட புரிதல் மாறுனது நாகுப்பிள்ளையால தான். வேலைக்கு வந்த இடத்துல ஒரு நண்பர் மூலமா இந்த வளையத்துக்குள்ள சேர்ந்த பிற்பாடு தான் எனக்கான சரியான பாதைல பயணிக்க ஆரம்பிச்சேன். இங்க சாதி பாலின வேறுபாடு இல்ல. வெளியேயும் கொஞ்சம் கொஞ்சமா எங்கள தப்பா பாக்குற கண்ணோட்டம் மாறி இருக்கு. இப்போ சின்ன மழைத் தூறல் அளவுக்கு, மொத்தமா ஒருநாள் பாஞ்சு போற வெள்ளம் ஆகும். நான் கே – சத்தமா சொல்றேன், என்னோட அடையாளம் தெரிஞ்சு நம்ம ஊர்ல ஒருத்தன் மேல இயல்பா கை போட்டன்னு வை செக்ஸ்வலா நா முயற்சி பண்றேன்னு சொல்வாங்க. சரியான அணுகுமுறையா அது?”, அத்தான் என் பதிலுக்காகக் காத்திருப்பது போல பார்வையை வீசினான். பதில் சொல்ல விருப்பமிருந்தும், ஆம் எனக்கான பதில் ஏற்கனவே அத்தான் மூலமாக அழுத்தமாக கிடைக்கப் பெற்றேன். ஆனாலும் அதனை மறைக்கும் தொனியில் மெல்லிய புன்னகையை பதிலுக்குக் கொடுத்தேன்.

தொடர்ந்து பேசும் மனநிலையில் அவன் இருந்தான் “ஒரு ஆண் பெண் மேல நட்பா கை போடுற மாதிரிதானே இதுவும். ஊர்ல அதுவே தப்பு. அப்போ என்ன எப்படி புரிஞ்சிப்பாங்க. அப்பாவே என்கூட ஆறு மாசம் இருக்கப் போய் கொஞ்சம் தெரிஞ்சிக்கிட்டாரு. சாகர அப்பாக்கு ரொம்ப பிடிக்கும். நேர்ல பாக்க ரெஸ்ட்லர் கிரேட் காளி மாதிரி இருப்பான். ஆனா பழக குழந்தை மாதிரி. நம்மளோட வாழ்க்கை முறை இருக்க கட்டின சங்கிலி மாதிரி சடங்குகள், சம்பிராதயங்கள் நிறைய. மொகல், பிரிட்டிஷ் இந்தியா வர முன்னாடி ஏத்துக்கொள்ளப்பட்ட பாலினச் சுதந்திரம், அதுக்கு பிறகு மதம் சார்ந்து குற்றமா பாக்க ஆரம்பிச்சிசாச்சு. உலகத்துல நிறைய நாட்டுல இதுக்கு மரண தண்டனை தெரியுமா. இந்தியால கஜூராகோ மாதிரியான கோயில்ல தன்பாலின கலவிச் சிற்பங்கள் இருக்கு, ஆனாலும் இங்கதான் இ.பி.கோ 377-ல மாற்றங்கள் கொண்டு வர சட்ட ரீதியா போராட்டம் தேவைப்படுது, க்ரீக்ல தன்பாலின ஈர்ப்பு அதிகம் உள்ள ஆண்கள் வீரம் நிறைஞ்சவங்கனு தனிப் படைப்பிரிவே இருந்துச்சு. ரொம்ப பேசுறன்லா நான். நீ என்ன எப்படி எடுத்துப்பன்னு இன்னும் தெரியல. ஜஸ்ட் உனக்கு புரியணும்னு பேசிட்டேன்” அத்தான் அமைதி ஆகவும், “எனக்கு உன்ன தெரியும் அத்தான்” என கூறிவிட்டு, அனல் போல குமிழும் அகம் அடங்க அமைதியாக நடந்தேன். அருகே அவன் குடியிருப்பு வரவும் மீண்டும் எனக்குள் பற்றி எரிந்து கொண்டிருந்த கேள்விகள் நாவை நீட்ட ஆரம்பிக்க, மறைக்க இயலாமல் தவிக்க ஆரம்பித்தேன் “கேப் புக் பண்ணுங்க. நான் ரூம் போறேன். லேட் நைட் ஆயிடுச்சு” சொல்லிவிட்டு அங்கிருந்து நகர முயற்சித்தேன், “இது ஒன்னும் ஊரு இல்ல. நீ சாப்டுட்டு போ. கேர்ள்ஸ்க்குலாம் இங்க சுதந்திரம் முழு நாளைக்கும் இருக்கு” விடாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ஒருவேளை செல்லாமல் இருந்திருந்தால் அருமையான உணவு ஒன்றை தவற விட்டிருப்பேன். சாகர் இயல்பாக நட்போடு உரையாடினான், “ஷி இஸ் ப்ரிட்டி” என ஆங்கிலத்தில் அத்தானிடம் கூறும்போது மட்டும் கோபம் வந்தது. அவனுடைய காரிலே அத்தான் என்னுடைய விடுதிக்கு அழைத்துச் சென்றான். விடுதி வரவும் பொறுமை இல்லை, இன்னும் சிலநொடி தேவைப்பட்டது என் மெல்லிய ஆத்துமா பெரிதாய் ஊதிய நீர்க்குமிழியாய் உடைய, காரை நிறுத்தி கதவை அத்தான் திறக்கவும், அவனிடம் மெதுவாகச் சொன்னேன் “அத்தான் இனிமேல் நான் ‘ஷி’ இல்ல ‘ஹி’ ” திரும்பிப் பார்க்காமல் முதல்முறையாய் சுதந்திரமாய், வேகமாக, இன்னும் வேகமாக நடந்தேன்.

***


வைரவன்
vairavanlr@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular