Tuesday, April 23, 2024
Homeஇதழ்கள்2021 இதழ்கள்அவனொரு குழந்தை வளர்க்கிறான்

அவனொரு குழந்தை வளர்க்கிறான்

ஐ.கிருத்திகா

டுக்கு நந்தியாவட்டை வட்ட வட்டமாகப் பூத்திருந்தது. குட்டை மரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பால் சிந்தியது போல. மரம் இளசு. எண்ணி ஏழெட்டுப் பூக்களிருக்கும். அதுவே பெரிய விஷயம்தான். ஒரு பூ பூத்தாலும் மனம் பொங்கிவிடுமே. ஏழெட்டுப் பூக்கள் அதிகம்தான். இதற்கே எத்தனை ஆயாசம். செம்பருத்தியும், நீல சங்கும் கிராமபோன் போலவும், இங்க் சொட்டு போலவும் பொக்கென்று பூத்திருக்கையில் நந்தியாவட்டைக்கு மட்டும் ஏனிந்த பிடிவாதம் என்று கதிரேசன் பலமுறை எண்ணியதுண்டு.

கொல்லையின் முடிவில் மூங்கில் கழிகள் செழித்திருந்தன. அதுதான் காரணம் என்றாள் கவிதா. மூங்கில் எதையும் அண்டிப் பிழைக்க விடாது என்பது அவள் தர்க்கம். செம்பருத்தி செழித்தது எப்படியென்றால், வாழ்வின் சூட்சுமம் அறிந்தது அது என்று சிரிப்பாள். இளமஞ்சள் நிறத்தில் முற்றிய மூங்கில் கழிகள் நீண்டும், வளைந்தும் நிற்பதை யாராவது விலை கேட்டு வருவார்கள்.

கழிக்கு இவ்வளவு ரூபாய் என்று நூறைப் பத்தாக்கி விலைபேசி வாங்கிப் போவார்கள். அதில் பொருளாதாரம் உயர்ந்துவிடவோ, சரிந்து விடவோ இல்லை. இருந்தும் வேரோடு அகற்ற மனம் வரவில்லை. வேலிக்கு முள் அறுத்துக் கொள்ளவாவது வேண்டுமே. மாமரம் வளர்ச்சியில்லாத குழந்தை போலத்தான் நிற்கிறது.

கதிரேசன் மாமரத்தடியில் நின்று நந்தியாவட்டைப் பூக்களைப் பார்த்தான். தொடர் முயற்சியில் வெற்றியடைந்தது போல உள்ளே ஒரு துள்ளல் எழுந்தது. மாமரத்தின் சிறு கிளையொன்று அவன் முன்னே அசைந்தது. சவலைக் குழந்தையின் கையசைப்பு போல திராணியில்லாத அசைவு. பிறந்த குழந்தையின் பால்வாசம் மாறாத அம்மாவினுடைய கவனத்தை ஈர்க்க முயலும் முயற்சியாக அப்படியொரு மெலிதான சவலைக் குழந்தையின் ஏக்கமான அசைவு. தடவிக்கொடுக்க வேண்டும் போலிருந்தது. கதிரேசன் மரத்தை இதமாகத் தடவிக் கொடுத்தான்.

அந்தி வெயில் சிந்திய அவன் முகத்தில் தாய்மையின் கனிவு பொலிந்தது. நந்தியாவட்டை செடி காற்றில் அசைந்து குதூகலித்தது. கவிதா காபியோடு வந்தாள். ஒரு கையை மரத்தில் பதித்து இன்னொரு கையை இடுப்பில் ஊன்றி கதிரேசன் நின்றிருந்தான். தன் வகுப்புப் பிள்ளைகள் அனைவரும் பாஸாகிவிட்டது போல முகம் நிறைந்த களிப்பு.

சடுதியில் மின்னி மறையும் மின்னல் போல அதைத் துடைத்துப்போட மனமின்றி கவிதா அப்படியே நின்றாள். மூங்கில் கழிகள் உராய்ந்து ஒருமாதிரி ப்ளிச் என்ற சத்தத்தை உண்டாக்கியதில் இயல்பாய் திரும்பிப் பார்த்தவன் மெல்லமாய் சிரித்தான்.

“எட்டு பூ…..”

ஐந்தும். மூன்றுமாய் விரல்களைக் காட்டினான். வைத்தியச்சி பிரசவ அறையிலிருந்து எட்டிப் பார்த்து இளகிய குரலில் பாலினம் சொல்வதைப் போலிருந்தது. வைத்த மூன்றாவது செடி அது. முதல் செடி நட்டு சில வாரங்களில் வாடி வதங்கிப் போனது. கந்தையா வீட்டு வாசலிலேயே வைத்திருப்பார்கள். சைக்கிளைக் காம்பவுண்டு சுவரையொட்டி வேப்பமர நிழலில் நிறுத்தி வைக்கும்போதே கதிரேசன் நந்தியாவட்டைப் பூக்களை எண்ணிவிடுவான். இருபது, இருபத்தைந்துக்கு குறையாது. இத்தனைக்கும் ஒரு சத்து, சவரட்சணை கிடையாது. சீந்துவாரின்றி நிற்கும். தண்ணீர் ஊற்றுவார்களோ என்னவோ…..நின்று பார்த்தால்,

“அது கெடக்கு வாங்கண்ணே….” என்பாள் கந்தையாவின் மனைவி கோமதி. சட்டென உள்ளே சென்றுவிட மனம் வருவதில்லை. படியில் செருப்பை விடுவதுபோல் சற்று தாமதிப்பான்.

“கொல்லையில ஏகப்பட்ட ரோசு பூத்துக் கெடக்கு…..”
அவளுக்கு அதுதான் பெருமிதம்.

“எல்லாமே பன்னீர் ரோசு….. வந்து பாருங்க…..”

ஒருமுறை விடவில்லை. அவள் சொன்னதற்காக கொல்லைக்குப் போனான். கந்தையா முண்டாசு கட்டிக்கொண்டு கடப்பாரையில் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தான். கிணற்றடியில் துணி துவைக்கும் கல்லுக்கருகில் பம்மலாய் அடர்ந்திருந்த செடியில் இளஞ்சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் கொல்லென்று பூத்திருந்தன.

“பத்து பூ பறிச்சி சாமிக்கு சாத்திட்டேன்.”

கோமதி பூத்திருந்த பூக்களோடு அதையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளச் சொல்வது போலிருந்தது. கதிரேசன் கல்லில் அமர்ந்தான். கந்தையா கடைசி தேங்காயை உரித்து மட்டையைக் குவியலில் லாவகமாய் விட்டெறிந்துவிட்டு காயை காதிற்கருகில் கொண்டு சென்று ஆட்டிப் பார்த்தான். கருங்கல் குளிர்ச்சியாக இருந்தது. வழுவழுப்பற்று கரடுமுரடாயிருந்தது பெரிதாய் தெரியவில்லை. அதன் சாய்மானம்தான் சற்று இடைஞ்சலாயிருந்தது. கதிரேசன் நகர்ந்து அமர்ந்து கொண்டான்.

“போவும்போது பூப்பறிச்சி தர்றேன். கொண்டுக்கிட்டு போங்கண்ணே….”
கோமதி ஒரு கையில் காபியும், இன்னொரு கையில் பிளாஸ்டிக் கவருமாய் வந்தாள்.

“நந்தியாவட்டை செடி ஒன்னு வைக்கணும்.”

காபியை ஒரு மிடறு விழுங்கிவிட்டுச் சொன்னவனை கோமதி வித்தியாசமாய் பார்த்தாள். முட்களை உரசிக் கொண்டு பூப்பறிக்க தேவையில்லை என்று தோன்றிவிட்டது. ஒரு பக்கமாய் உதடிழுத்து சிரித்து வைத்தாள்.
கந்தையா இரண்டடி தடிமனான குச்சியை வெட்டித் தந்தான்.

“அரையடி மண்ணுல பொதையிற மாதிரி ஊனி நுனியில சாணியத் தடவிவுடுங்க….”

கோமதியின் குரல் பின்னோடு மிதந்து வந்தது. அதுதான் முதல் செடி. கொல்லையில் தோதான இடம் பார்த்து குச்சியை நட்டு வைக்க ஒருமணி நேரத்திற்கும் மேலாயிற்று. டியூஷன் படிக்க வந்த பிள்ளைகள் திண்ணையிலமர்ந்து கதை பேசிப்பேசி நேரத்தைப் போக்கினர். இரண்டாள் உயரத்துக்கு வளர்ந்து நின்ற தென்னை மரத்துக்குப் பத்தடி தள்ளி ஆனால் தூரத்திலிருந்து பார்க்கும்போது இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் கதிரேசன் குச்சியை நட்டு வைத்தான். களைக்கோட்டு உதட்டில் சேறு அப்பியிருந்தது. அதைக் கையில் பிடித்தபடி நட்டு வைத்த குச்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“என்னங்க, வேல ஆச்சா….?”

சுண்டல் குலுக்கிக் கொண்டிருந்த கவிதா அடுப்பைத் தணித்து வைத்துவிட்டு கொல்லை நிலைப்படியில் கையூன்றி எட்டிப்பார்த்து கேட்டாள். கதிரேசன் தலையசைத்தான்.

“புள்ளைங்க ரொம்ப நேரமா ஒக்காந்துருக்குதுவோ…..”

“இதோ வர்றேன்.”

களைக்கோட்டை நீர்விட்டு அலம்பி வைத்துவிட்டு முகம் கழுவி நிமிர்ந்தபோது அடுக்கு நந்தியாவட்டை செடி பச்சைப் பட்டு கட்டிய சிறு பெண்குழந்தை போல நின்றிருந்தது. தலை நிறைய பூ தைத்த பெண் குழந்தை. கதிரேசன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

குச்சி துளிர்க்க தொடங்கி இரண்டு வாரத்தில் நம்பிக்கையின் வேர் பற்றுறுதியுடன் வளர்ந்த சமயத்தில் செடி பொசுக்கென வாடிப்போய் உயிரைவிட்டது. மனம் துக்கத்தின் சாயலைப் பூசிக்கொண்டது. இரண்டாவது குழந்தைக்கான முயற்சி போல மறுபடியும் குச்சி நடப்பட்டது. இந்தமுறை வேறு இடத்தில் நட்டு வைத்தான். அது சிறு தளிர் கூட விடாமல் காய்ந்து போனது.

“பரவாயில்ல விடுங்க. இன்னொன்னு வச்சாப்போவுது. ” கவிதா அவன் முகம் பார்த்தபடி கூறினாள்.

“இந்த வருஷம் விட்டத அடுத்த வருஷம் பிடிச்சிடலாம்.”

தேர்வில் தவறிய மாணவர்களுக்கு அவன் ஆறுதல் சொல்லுவான். சில பேரைத் தோளோடு அணைத்துக் கொள்வான். அப்படியொரு அணைப்பின் இதம் அவள் வார்த்தையிலிருந்ததை அவன் புரிந்துகொண்டு லேசாய் தலையாட்டி சிரித்தான். கவிதா கொடியில் கிடந்த புடவையை இழுத்து மடிக்கத் துவங்கினாள்.

மெரூன் நிறத்தில் வெள்ளைப்பூக்கள் சிதறிய புடவை. பூக்கள் நந்தியாவட்டை போல தகடு, தகடாக புடவையில் மிதந்தன. புதுப்புடவை. அதனால் பூக்கள் வெண்மையின் நிறம் மங்காது ஒளிர்ந்தன. நந்தியாவட்டையின் அழுத்தமான இதழ்களைத் தடவினால் மெத், மெத்தென்றிருக்கும். குழந்தையின் கன்னம் போல.

கதிரேசன் நினைத்துக்கொண்டே பெஞ்சில் மடித்து வைக்கப்பட்டிருந்த புடவையை வருடினான். மிருதுவாய், மொது, மொதுவென்று போர் செட்டிலிருந்து கொட்டும் நீர் போலிருந்தது. பூக்கள் நீரில் நீந்தும் மீன்களாய் அலைந்தன. மூன்றாவது குச்சி உயிர் பிழைத்துவிட்டது. அழுத்தமான பச்சையில் இலைகள் துளிர்க்கத் தொடங்கின. பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் அதிலிருந்து திட்டு வாங்கவேயில்லை.

“நீங்கள்லாம் பொறுப்பா படிச்சு பெரியாளா வரணும்.”
கதிரேசன் அறிவுரை சொன்னான். குரல் தழைந்தே வந்தது.

“நாளைக்கு நல்ல நிலைமைக்கு வர்றதுக்கு இன்னியிலிருந்தே முயற்சி செய்யணும். “

இரண்டு கைகளையும் விரித்து மெதுவாக சொன்னான். எப்போதும் அவன் இளகினவன்தான். பிள்ளைகளை அனாவசியமாக கடிய மாட்டான். அவனையும் சோதிக்கும் மாணவர்கள் இருந்தார்கள். அவர்களிடம் மட்டும் கடுமையைக் காட்டுவான். செடியில் மொட்டுகள் உருவான சமயத்தில் அவர்களிடமும் கனிவாகவே பேச முடிந்தது. குரலில் ஒரு அவுன்ஸ் கனிவு கூடிப்போயிருந்தது. கவிதாவுக்கே ஆச்சரியம் தான்.

கொல்லையில் அவனொரு குழந்தை வளர்க்கிறானென்று எல்லோரிடமும் சொல்லிச் சிரித்தாள். காலை, மாலை இருவேளையும் செடியுடன் முக்கால்வாசிப் பொழுதுகள் கழிந்தன. மஞ்சளைக் கரைத்து கொஞ்சம் ஜிகினாத்துகள்களைத் தூவி விட்டது போன்ற மாலை வெயிலில் கதிரேசன் பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு கொல்லையில் நின்றிருப்பான்.

சிவிக், சிவிக் ஒலியெழுப்பும் பறவை காலை நேரத்தில் அவனோடு ஜோடி போட்டுக் கொண்டது. அது தென்னை மரத்திலமர்ந்து குரல் கொடுத்தபடியிருக்கும். கிணற்றடி சாக்கடையோரம் வளர்ந்திருந்த ஒற்றைக் கல்வாழை செடியின் யானைக் காது இலையொன்று காற்றுக்கு எப்போதும் அசைந்தபடியிருக்கும். அது மௌனமாக ஞானிபோல நின்று சுடர்விடும் கண்களுடன் பார்த்தபடியிருக்கும் கதிரேசனை புத்தனாகக் கருதக்கூடும் என்று கவிதா நினைத்துக் கொண்டாள்.

நினைத்தது நடந்துவிட்ட நிறைவில் அவ்வபோது பரவசத்துடன் செடியைப் பார்ப்பவனிடத்தில் காரணம் கேட்க கவிதாவுக்குத் தோன்றவில்லை.

மயில் கழுத்து வண்ண சேலை உடுத்திக் கொள்ளும்போது அவளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். உற்சாகமாக பாட்டு பாடியபடியே வேலை பார்ப்பாள். அன்று சாம்பார், கூட்டு கூட பிரமாதமாயிருக்கும். வெள்ளிக்கிழமை தலைக்கு நீர் விட்டுக்கொண்டு அந்த சேலையைக் கட்டிக்கொள்வாள். மயில் கழுத்து வண்ண சேலைக்கும், மன மகிழ்வுக்கும் நடுவில் இருப்பதென்ன என்று அவளால் ஊகித்தறிய முடியவில்லை. கதிரேசன் மனநிலையை அதைக்கொண்டே அவள் புரிந்து கொண்டாள். கந்தையா வந்திருந்தான்.

“நாளைக்கி பழனி கெளம்புறேன். அவன்கிட்ட சொன்னனே. சொன்னானா….?”
சாய்வு நாற்காலியில் இதமாய் சாய்ந்தபடியே கேட்டான். கவிதா தண்ணீர் தந்தபடியே தலையாட்டினாள்.

“கோமதி ஒங்கிட்ட குடுக்க சொன்னாம்மா.”
கையிலிருந்த பிளாஸ்டிக் பையை நீட்டினான். பன்னீர் ரோஜாப்பூக்கள் பையை மீறி வாசனையை கூடத்தில் கொட்டின.

“நல்ல வாசனை. இப்பெல்லாம் இந்தப்பூ கெடைக்கிறதேயில்லண்ணே…”

கவிதா கூடத்தில் வரிசையாக மாட்டப்பட்டிருந்த தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் படங்களுக்கு பூக்களை சாத்தினாள். கொல்லையிலிருந்து வந்த கதிரேசன் முகம் துலக்கமாய் மினுங்கியது. கந்தையாவின் வருகையை எதிர்பார்த்திருந்தவன் போல,

“பத்து பூடா…..” என்றான். கந்தையா கொல்லைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்தான்.

“எங்க வீட்டுல இருக்குறதோட வாரிசுடா.”

அவன் சொன்னதைக் கேட்டு கவிதாவுக்கு சிரிப்பு வந்தது. கதிரேசனைப் பார்த்தாள். அவன் வாய் திறவாமல் சிரித்துக் கொண்டிருந்தான். வேட்டி நுனி மண்ணில் புரண்டதற்கு அறிகுறியாக புழுதியேறியிருந்தது. கடந்த சில நாட்களாக அவன் வாகாக அமர்ந்து கொண்டு செடியைத் தடவிக் கொடுப்பதை கவனித்தாள்.
பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்தி வேலிக்கு அந்தப்புறமிருந்து அதைப் பார்த்துவிட்டு ஒருநாள் கேட்டான்.

“அண்ணியாரே, அண்ணன் நான் பாக்கும்போதெல்லாம் அந்த செடிக்குப் பக்கத்துலயே நிக்கிறாரே…… என்ன சங்கதி……?”

“அவரு நந்தியாவட்டை செடி வளக்குறாரு. “
அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“பெரியவனுக்கு மொட்டை போட்டுட்டு வந்துரலாம்னு இருக்கோம்.”
கந்தையா, கதிரேசனிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

விடுமுறை என்பதால் திண்ணை வெறிச்சோடியிருந்தது. டியூஷன் பிள்ளைகளின் வரத்தின்றி மௌனம் அங்கு அடைபட்டுக் கிடந்ததில் மாடக்குழியில் கவிதா ஏற்றிவைத்த விளக்கின் சுடர் சின்ன அசைவுமின்றி முருகன் கைவேல் நுனிபோல கொழுந்து விட்டிருந்தது. கந்தையா, கவிதா தந்த அவலைச் சுவைத்து விட்டுக் கிளம்பினான்.

“அவல்ல வெல்லம் கடிபடுற மாதிரி உடைச்சும், உடைக்காமலயும் போட்ருக்குறது நல்லா இருக்கும்மா. கோமதி கிட்டயும் சொல்றன். “

கந்தையா கிளம்பிவிட்டான். கிரில் கதவைத் திறந்து அவனை வழியனுப்பிவிட்டு கதிரேசன் காம்பவுண்டு சுவரில் முழங்கைகளை ஊன்றி சிறிதுநேரம் நின்றிருந்தான். தெருவிளக்குகள் பளிச்சிடத் தொடங்கின. ஒரு குழல் விளக்கு மட்டும் சிமிட்டி, சிமிட்டி தன்னிருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த விளக்கு வெகுநாட்களாக சரிசெய்யப்படாமல் அப்படியே இருந்ததில் கதிரேசன் அதைப் பார்க்கும்போதெல்லாம் முனகிக் கொண்டேயிருப்பான்.

அன்று கண்கள் அந்த விளக்குக் கம்பத்தையொட்டிய வேலியில் படர்ந்திருந்த பெயர் தெரியாத கொடியின் மீது பதிந்திருந்தது. சிறுசிறு மூக்குத்திகளாய் பூத்திருந்த பூக்களின் மையத்தில் முட்டைக்கருவின் மஞ்சள் நிறத்தில் ஒரு மேடு. ஒரு கையரிசியை அள்ளி இறைத்துவிட்டாற்போல் அவனுக்குத் தோன்றியது.

வயலில் வேலைப் பார்த்துவிட்டு இரண்டு பெண்கள் ஆண்பிள்ளை சட்டையணிந்து கையில் தூக்குவாளிகளோடு பேசியபடி தெருவில் நடந்து போயினர். அவர்கள் கடந்ததில் கவனம் சிதறியவன் கையிலூறிய எறும்பைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான்.

கவிதா தூபக்காலோடு எதிர்ப்பட்டாள். கந்தையா வீட்டு ரோஜாவிலொன்று அவள் தலையில் ஏறியிருந்தது. சடையைத் தளரப் பின்னியிருந்தாள். ரோஜாவின் ஓரிரு இதழ்கள் தரையில் சிந்தியிருந்தன. வெள்ளிக்கிழமை வாசனை வீடெங்கும் பரவியிருந்தது. தூபக்காலில் கனன்று கிடந்த நெருப்பில் சாம்பிராணி புருபுருத்து வழிய புகை சிறுசிறு வளையங்களாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கவிதா கூடத்துப் படங்களுக்கு சாம்பிராணி காட்டினாள். வயிறு நன்றாகவே மேடிட்டிருந்தது.
ஏழாம் மாதம். மசக்கை எதுவுமின்றி பிடித்ததை சாப்பிட்டு உடம்பு மெருகேறியிருந்தது.

“ராத்திரிக்கு அவல் உப்புமா பண்ணட்டுமா….?”
கவிதா தூணில் சாய்ந்தமர்ந்து கொண்டாள்.

“கஷ்டப்படாத. மாவு இருந்தா நான் தோசை சுட்டுப் போடுறன். “

கதிரேசன் டிவியில் அலைவரிசையை மாற்றியபடியே சொன்னான். இதுதான் வேண்டுமென்கிற பிடிவாதமில்லை. பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். அது போதும். கவிதா கால்களை நீட்டிக்கொண்டாள். வயிறு கனத்தது. இப்போதெல்லாம் அவள் அதிகம் தூங்குகிறாள். குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டுமென்றார்கள். உறக்கத்தை ஏன் சொல்லவில்லை என்றிருந்தது. வளைகாப்பு வளையல்கள் கைகளில் சிணுங்கின. அம்மாவுக்கு அவளை அனுப்ப மனசேயில்லை. அவள்தான் பிடிவாதம் பிடித்து வளைகாப்பு முடிந்த கையோடு கிளம்பிவிட்டாள். கதிரேசன் டிவியை நிறுத்திவிட்டு அவளருகில் அமர்ந்துகொண்டான்.

“பேசாம அங்கயே இருந்திருக்கலாம். இங்க வந்து கஷ்டப்படுற.”

இடதுகையால் அவள் வயிற்றை இதமாக தடவிவிட்டான். கொலுசு அழுந்திய கணுக்காலில் உண்டான பள்ளத்தைக் கூர்ந்து கவலைப்பட்டான். எதிலும் ஒரு நுண்ணிய அவதானிப்பு. அதுதான் அவன் குணம். விலகலற்ற பொருந்திய தன்மை இழைந்து கிடக்கும் குணம்.

மழை சன்னமான ஊசித்தூறல்களாய் விழுந்தது. கவிதா கொல்லைப்புறம் வந்தபோது கதிரேசன் பிரஷுடன் நந்தியாவட்டை செடியருகில் நின்றிருந்தான். கிணற்றடி சிமிண்ட் தளத்தில் ஈரம் படர்ந்திருந்தது.

”படி ஈரமா இருக்கு. பாத்து எறங்கு.”

அங்கிருந்தே சைகை செய்தான். காலைநேர அசதி உடம்பை அசத்திற்று. ஈரமற்று குளிர்ந்திருந்த முதல் படியில் கவிதா கையூன்றி அமர்ந்தாள். காற்றின் வேகத்தில் சில தூறல்கள் முகத்தில் விழுந்தன. கதிரேசன் கிணற்றில் நீர் இறைத்து வாய் கொப்பளித்து முகம் கழுவினான்.

“மணி ஆறுதான ஆகுது. அதுக்குள்ள ஏன் எழுந்த….?”
நெற்றி சுருக்கிக் கேட்டவன்,

“வாயேன்…..” என்று அவள் கைப்பிடித்து அழைத்துப்போனான்.

மூங்கில்கள் பிளிச் சத்தத்தோடு அசைந்தன. தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக்கொள்வது போலிருந்தது. ஒற்றை மாமரமும், தென்னை மரமும் தங்கள் வீட்டுப்பிள்ளைகள் என்பது போல் பெருந்தன்மையாக நின்றிருந்தன. கதிரேசன் பூக்களைக் காட்டினான்.

“பதிமூனு பூ….”

தலையசைத்து கண்கள் விரித்து அதிராமல் சொன்னான். கந்தையா வீட்டு வாசலில் படியேறுபவர்களுக்கு பூச்செண்டு கொடுப்பது போல் செடி நின்றிருக்கும். அதேபோல் இங்கேயும். கவிதாவுக்கு அவன் கைகளைப் பிடித்துக்கொள்ள வேணும் போலிருந்தது. வயிற்றுக் குழந்தையின் சாயல் அவன் முகத்தில் தெரிந்தது.

***

ஐ. கிருத்திகா


ஓவியம் – Katsushika Hokusai

RELATED ARTICLES

1 COMMENT

  1. அருமையான கவித்துவமான கதை. சிறுகதையின் இலக்கணம் மீறாத எழுத்தாளர் கிருத்திகாவின் திறமை பளிச்சிட்டது பாராட்டுகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular