Sunday, October 1, 2023
Homesliderஅவதாரம்

அவதாரம்

  • பாலாஜி பிரசன்னா

“ ஏ..கொழ்ந்தே…அப்பா பேசுரேன்டி.. பத்துக்கு டெலிவெரி ஆயிடுத்துடி.. அந்த பெருமாளே நம்மாத்துல வந்து பொறந்துருக்கான்டி… அப்படியே என்ன உறிச்சுவச்ச மாதிரி கரேல்னு இருக்கான்.. தொட்டு மை வச்சிக்கலாம்னா பாரேன். ”

அப்பா நான் பிறந்த தகவலை இப்படிதான் தனது மூத்த மகளிடம் ஃபோனில் சொன்னார். இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பிறகு அப்பாவுக்கு நான் ஒரே ஆண் பிள்ளை. அம்மாவுக்கு முதல் பிள்ளை.

சேஷாத்திரி அய்யங்கார் பத்மாவதியை இரண்டாந்தாரமாக மணமுடித்தார். முதல் மனைவி வைதேகி. ஒரு வருடத்திற்கும் மேலாகத் தீராத வயிற்றுவலியில் அவதிப்பட்டு இறந்துபோனாள். கடும் அவதியிலும் நித்தம் தவறாமல் பெருமாளுக்கு நிவேத்தியம் செய்து உயிர்வாழ்ந்தவளின் துன்பம் கண்டு துயருற்ற பெருமாள் அவள் அகத்திலிறங்கி வலி விலக வழி சொன்னார். அவள் கிணற்றடி மாமரத்தில் தொங்கினாள். உடல் விட்ட ஆவிக்கு வயிறுமில்லை. வலியுமில்லை.

“ அவ வயத்து வலில துடிக்கிறதுக்கு இது பரவால்லனு தேத்திக்கோ. அவாவா ப்ரதிபலன அவாவாதானே தாங்கனும். பெருமாளுக்கு தெரியாதாடா சேஷு யார எப்ப அழச்சிண்டு போனுன்னு. நீயும் நானும் அவருக்கு குறுக்க நிக்கமுடியுமோ சொல்லு. கவலபட்றத விட்டுட்டு ஆறதப்பாரு.” செளந்தரம் மாமா தேற்றினார். சேஷா ஓரிரு மாதங்களில் தேறினார்.

பெருமாள் வைதேகியை வைகுண்டம் அழைத்துப் போனார். வைதாரையும் வரவேற்கும் வைகுண்டம் வைதேகியையும் எந்த விஜாரணையுமில்லாமல் ஏற்றுக்கொண்டது. சேஷாத்திரி பத்மாவை மயிலாப்பூர் அழைத்துப் போனார். சேஷாத்திரியின் குடும்பம் வைகுண்டம் அல்லவே; பத்மாவை எந்த விஜாரணையுமில்லாமல் ஏற்றுக்கொள்ள மறுத்தது. சேஷாத்திரி இரண்டாம் கல்யாணம் செய்ததில் எந்த சிக்கலுமில்லை. அவள் ப்ரம்மனின் தலையில் பிறக்காமல் விட்டதே சிக்கல், பிரச்சனை எல்லாம். புதுமணத்தார் நயாபைசா நட்டமில்லாமல் ஒதுங்கி.. இல்லை அவர்களை ஒதுக்கி நித்யமும் சுகமாய் வாழ்ந்ததன் அடையாளமாய் என் அவதாரம்.

கறுத்த மேனியுடன் அமாவாசையன்று அவதரித்த பெருமாள் பிறவி. ஆக ஏகபோகமாக மூன்றாம் நாள் நாமகரணம் சூட்டப்பட்டது. நான் காலமேகப்பெருமாள்.
***
அதே நன்னாளில் பாய்க்காரத்தெரு ஒத்தையடிப் பாலத்தின் கீழ் காட்டாமணிச்செடிகள் ஊறும் வெண்ணாற்றின் கரையோரமாக வாலிபப் பிணம் ஒன்று ஊதி கருத்து ஒதுங்கி மிதந்தது. பரியாரி சம்பந்தம் படியிறங்கி அடையாளம் சொன்னார் – “ அய்யேய்யே.. நம்ம பெருமாளு மாரி இருக்கே… அவந்தான்…” மூக்கையும் வாயையும் துண்டால் மூடிக்கொண்டார்.

“ ரெண்டு நாளக்கி மின்னாடி பாத்த ஞாவகம்.. நூரக்கா டீக்கடைல. நல்லா பேசிட்ருந்தானே.. என்ன கெட்ட நேரமோ கொண்டு போய்டிச்சி..”

“ஆமாங்ய்யா… அங்கனதான் நானும் பாத்தன். பீடி கேட்டத்துக்கு சிலுப்பிட்டு போனானே.. அய்யேய்ய.. இப்புடியா போய் சேருவான் ” – மருதனும் வருத்தப்பட்டான்.

இரண்டு நாள் முன்பு டீக்கடையில் பார்த்த கதையை இன்னும் இரண்டு பேர் சொன்னார்கள். ஆம் கதைதான் சொன்னார்கள். சிறுசிறு கதைகளைத் தொடுத்து ஜோடித்தார்கள்.

அதிகாரிக்குத் தகவல் போதுமானதாயில்லை. யாரும் சொல்வதாகவுமில்லை. சொல்வதென்றால் வேலிமுட்டி கசாயம், அதை விற்கும் பாத்திமா, பட்டாளத்துக்காரனின் மனைவி, அவர்களுடன் இவனுக்கிருந்த தொடர்பு எல்லாவற்றையும் சொல்லவேண்டும். இன்றுதான் இவ்விஷயமே தெரிந்தது போல குதிப்பான் இந்த நேர்மையான அதிகாரி. கடையைப் பூட்டி அவளையும் உள்ளே தள்ளிவிடுவான். நேர்மையென்பது சீனியர்களின் சொல்லைப் பிரதியெடுப்பதுதானே.

எம்ஜிஆர் தாய்மார்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக சாராயக்கடைகளை மூடி வருடம் ஒன்றாகிறது. தேர்தல் வர இன்னும் ஒரு வருடமிருக்கிறது. அதுவரை கடை திறக்க வாய்ப்பில்லை. பாத்திமாவும் பெண்தானே. அவள் பிழைப்பில் இந்த பூட்ஸ் கால்களை நுழையவிடக் கூடாது. அதுமட்டுமில்லாமல் ஊரில் யாருக்கும் வேலிமுட்டியை விட்டால் குடியுமில்லை கூத்துமில்லை. அதுவரை துருவிக்கொண்டிருந்த அதிகாரி அவன் அனாதையென்றதும் பிணத்தோடு சேர்த்து நிஜத்தையும் மூட்டைக் கட்டினார்.

இரண்டுமே குழி தோண்டிப் புதைக்கப்பட்டது. புதைக்கப்பட்டு இன்றோடு நாற்பது வருடமாகிறது.
என்னதான் செய்வது. யார்தான் உண்மையைச் சொல்வது. வேறு வழியேயில்லை. நான்தான் சொல்லவேண்டும். நாற்பது வயதுக்குள்ளாகவே லட்சங்களில் சம்பாதிக்கும் நான் கே.எம்.பி. ஒரு மினி தொழிலதிபர். பழைய இரும்பு வியாபாரி. இப்போது மெட்டிரியல் ரீசைக்கிளர் என்று சொல்லிக் கொள்கிறோம். இருபத்துநான்கு மணியும் பணிதான்.

“அண்ணே, செங்கல்பட்டு செக்போஸ்ட்டாண்ட போலிஸ்க்காரன் புட்ச்சிக்கினான்ணே. ஈ.வே பில்லுல பத்து கிலோமிட்டர் கொறையுதுன்றான்.. ”

“நாளைக்கி பணம் வர்ல… நீ வேற மூஞ்ச பாக்கவேண்டிருக்கும்…”

“தலைவரே, கிலோக்கு ஒர்ரூவா பாக்காதிங்கோ.. அடுத்த லோட்ல சேத்து அடச்சிட்லாம்”

“ஜி, ரெண்டுநாள்ள காசு வந்துடும்.. மாத்திவுட்டுறேன்.. வண்டிய நிறுத்தாதிங்க ஜி.. ப்ளிஸ்..”

“மொதலாளி, அவன் ஆள் சுத்தங்கெடாயது… மார்க்கெட்ல காரித் துப்புரானுங்க”

’வண்டிய மோதிட்டான், எட கொறையுது, மிசின்ல கைவுட்டுட்டான்’ இப்படியான போன் உரையாடல்கள், பிரச்சனை, தீர்வு, வரவு செலவு, லஞ்சம், மிரட்டல், குழைதல்’ இதற்கிடையேதான் குடி, பயணம், நட்பு, காதல், கல்யாணம், குழந்தைகள், இன்னொரு காதல், காமம், இச்சை என வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்வது. ’கேஎன்பி வேலக்காரன்யா.. எப்பவும் தொழில் நெனப்புதான்’ என்று ஒரு தரப்பும், ‘எங்கேந்துதான் காசு கொட்டுதுனு தெரில.. எப்ப பாரு ராத்திரியான குடி பொம்பளன்னு எறைக்கிறான்யா” என இன்னொரு தரப்பும் பேசிக்கொள்வார்கள்.
***
“லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா..ஆல்வேஸ் பி ஹப்பி..“ லிரிக்கல் வீடியோ பாடிக்கொண்டிருப்பது மதுரையின் பிரதான பகுதியிலிருக்கும் ஒரு மது விடுதியில். இது 2020. இங்கு இப்போது எந்த பிரச்சனையுமில்லை. ஒவ்வொரு சாலைகளிலும் பரபரப்பாகச் செயல்படும் பல அரசாங்க சாராயக்கடைகளும், அதன் வாசலில் செயல்படமுடியாமல் மயங்கிக்கிடக்கும் சில மனிதர்களையும் காணமுடியும். ஐந்து நட்சத்திர ஹோட்டல் பாரில் ஒரு பெருந்தொழிலதிபருக்குக் கிடைக்கும் எல்லா மரியாதைகளும் ரோட்டோர டாஸ்மாக்கில் குடிக்கவரும் சாக்கடைத் தொழிலாளிக்கும் கிடைக்கிறது.

பெருமாள் காலத்தில் வெளிநாடுகளிலும் ராணுவத்திலும் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்த ரம், விஸ்கி, வோட்கா போன்றவை இப்போது வெறும் நூற்றைந்து ரூபாய்க்கே கிடைக்கிறது. பழங்கள், அவித்த பயிர் வகைகள், முட்டை, மாமிசம் போன்ற புரதம் வாய்ந்த சாக்கனா உப திரவ திட தீனிகள் தருகிறார்கள். யாரோ குடித்த எச்சில் கிளாஸ்கள் இல்லை. ஒரு வாரத்துக்குள் தயாரிக்கப்பட்ட புத்தம்புதிய காகித டம்ளர்கள் தனித்தனியாக வழங்கப்படுகிறது. பெரும்பாலும் டிவி இல்லாத மதுக்கூடமே இல்லை.. இன்னும் சில பார்களில் பெரிய திரைக்கட்டி புரஜக்டர் மூலம் திரையிடுகிறார்கள். காலை மதியம் மாலை பின்மாலை இரவு என நேரத்துக்குப் போல் பாடல்கள், நகைச்சுவைகள் திரையிடப்படுகின்றன.

இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டியன்று டிவி / திரை வைத்த கூடங்கள் நிரம்பி வழியும். மேதைகள் நிறைந்த மேஜைகளில் பெரும் விவாதங்கள் நடக்கும். இந்தியாவிற்கு சாதகமான நிகழ்வுகளில் புல்லரித்து அங்கு ஒரு பெரிய மைதானத்தின் சூழல் உருவாகும். கடைகளில் கட்டிங் விற்பனையில்லாதபோதும் கூடிப் பேசி குவாட்டர் வாங்கி தாங்களே சரிபாதியாகப் பிரித்துக்கொள்ளும் அதிகாரம் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏசி அறையில் குடிக்கும் வசதிகூட அரசாங்க பார்களில் வந்துவிட்டது.

இன்று எனது நாற்பதாவது பிறந்தநாளை பைப்பாஸ் ரோடு டாஸ்மாக்கில் நண்பர்கள் சகிதம் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். போதையும் ஆசைக்காதலியின் நினைவும் தலைக்கேறி ஜிவ்வென்றிருக்கிறது. மூன்று முறை அழைத்துவிட்டாள். இந்தக் கொண்டாட்டம் இதோ பதினோரு மணியோடு முடிந்துவிடும். அவளுக்கு வைகைக் கரையோரமாக அழகிய வீடு. அவளின் சொந்த சம்பாத்தியத்தில் கட்டிய வீடு. பழைய கணிப்பொறி பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அவள் தொழில். அவள் தந்தையின் தொழில். அவர் இறப்பிற்குப் பின்னால் இவள் தொழிலானது.

இதோ மீண்டும் அழைக்கிறாள். மகிழ்வான தருணத்தில் அவளுடனான நெருக்கத்தை நினைக்கவே சிலிர்த்தது. அவள் குரலின் குழைவில் இன்னும் மூச்சுமுட்டியது. காரணங்கள் சொல்லி பணம் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன். காரில் ஏறும்போது தான் ஞாபகம் வந்தது பெருமாளின் கதையைச் சொல்ல மறந்தது. அவள் வீட்டினை சென்றடைய இன்னும் இருபது நிமிடங்கள் பிடிக்கும். அதற்குள்ளாக முடித்துவிடலாம்.

***
கதைச்சுருக்கம்: மேற்படி வழக்கில் பாய்க்காரத்தெரு பாலத்தினடியில் மிதந்த சடலம் மீட்கப்பட்டு உள்ளுர் பரியாரி சம்பந்தம் சொன்ன அடையாளத்தின்படி, அன்னார் திரு. நாராயணப்பெருமாள் என்பதும் அவர் குடும்பமில்லாத அனாதையென்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அன்னாரின் சடலம், அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தலைமை மருத்துவரின் ஆய்வறிக்கையின் படி புறவிசையின் எந்தக் கூறுமில்லாமல் அகவிசையின் தூண்டுதலில் தான் நாராயணப்பெருமாள் தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஊர்ஜிதம் செய்து, இறந்தவருக்கு குடும்பம் இல்லாத காரணத்தால், அன்னாரது சடலத்தைக் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஒப்புதலோடு சமூக சேவகர் உமர் அலி அவரது சொந்த செலவில் பரியாரி சம்பந்தம், வெட்டியான் தேவர்கொண்டானின் உதவியோடு ஊர் ஆற்றங்கரை சுடுகாட்டில் விஏஓ ஒப்பம் பெற்றுப் புதைக்கப்பட்டது.

நாரயணப்பெருமாளின் துஷ்டியை அனுஷ்டிக்கும் பொருட்டு அன்று பாத்திமாவின் கஷாயக்கடை இரவு பத்துமணிக்கு மேலும் தொடர்ந்தது. கடையென்ன கடை. அவள் கூரை வீட்டின் பின்பக்கம் பத்தாள் ஒன்றாய் குந்தி குடிக்குமளவு தென்னவோலை சார்ப்பு எடுத்திருந்தாள். சாணி மெழுகிய சுத்தமான மண் தரை. பெஞ்சு சோபா ஸ்டூல் சேர் ஒன்றும் கிடையாது. கரைவேட்டி கட்டும் சில பெரிய வயிறுகளுக்கு மட்டும் முக்காலி. மூன்று கட்சிகள். மூன்று பெரிய மனிதர்கள். மூன்று முக்காலிகள். கண்ணாடி டம்ளர்கள். எந்த பாகுபாடுமற்ற டம்ளர்கள். எல்லோருக்கும் பொதுவாக ஒரு மண்சட்டியில் மசாலாவிட்டரைத்த கோழி சில்லறைகள். இது இலவசம். இன்னும் பாங்காய் வேண்டுவோர்க்கு அவித்த முட்டை, கடலை, வறுத்த கோழி.

பாத்திமா தன் பங்காக அன்றிரவு சகாய விலைக்கு விற்பனையறிவித்து கல்லு சிலேட்டில் ’இன்ரு மட்டம் ஒரு கிலாசு பாதி வெலை’ என எழுதி போட்டிருந்தாள். சோகம் பல்மடங்கு. வியாபாரம் மும்மடங்கு.

பாத்திமாவும் கொஞ்சம் குடித்திருந்தாள். கட்டுமஸ்தான ஆம்பள. ஒன்னுமண்ணாகப் புழங்கியவன். தினம் இருவேளை உணவு, மும்முறை குடி, ஒருதரமேனும் அவளுடன் பின்னல். பெரும்பாலும் வெறும் பின்னல்தான். சட்டென இல்லாமல் போனது அவளை அரக்கியது. ஆற்றுக்கு அக்கரையில் இவ்வகையிலேயே அவனுக்கு இன்னொருத்தியும் உண்டு. தெரசா. அவள் கணவன் எல்லைபாதுகாப்பு பிரிவில் சிப்பாய். அவள் பெரியாஸ்பத்திரி நர்ஸ். ஒரு வருடத்திற்கு முன்பு மூன்று நாள் மேற்சொன்ன உணவு , குடி, கூடல் என்றெதுவும் இல்லாமல் படுத்தே கிடந்தவனை பாத்திமாதான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள். குடிக்க வந்த யாரோ இவனை சைக்கிளில் வைத்து ஆஸ்பத்திரியில் தள்ளிவிட்டுப் போக இரண்டு நாள் அங்கிருந்து சரியாகி வந்தான். தெரசாவும் இவனுக்கு சரியாகியிருந்தாள். பெரும்பாலும் கடையில்தான் கிடப்பான். கடையில் குடித்ததும் சலம்பும் அல்லுசில்லறைகளை பந்தாவா பேசியே விரட்டியடிப்பான். முக்காலிகள் உள்ளே புழக்கத்திலிருந்தால் பாங்காக வெளியேறிவிடுவான். அன்றிரவு மட்டும் அக்கறை இல்லாமல் அக்கரைக்குப் போய்விடுவான். எப்போதாவது ஆற்றின் குறுக்கே நூல் கட்டி விலாங்கு பிடித்துத் தருவான். வெள்ளிக்கிழமை தவறாமல் திருடியாவது கடல் மீன் வாங்கி வருவான். எந்த சிக்கலும் இல்லாத பரஸ்பர மனிதத் தேவைக்கான உறவு.

***
இரண்டாண்டுகளுக்கு முன் முதன்முதலாக ரிக்‌ஷாவில் இரு சவாரிகளோடு வந்திருந்தான். கரேலென்று கரும்பு போல நறுக்கென இருந்தான். அடர்ந்த முடியை ஏற்றிச் சீவி அலட்சியமாக பார்வையோடு பீடி இழுத்துக் கொண்டு நின்றான். சட்டை ரிக்‌ஷாவிற்குள் தொங்கிக் கொண்டிருந்தது. கறுத்த மார்பிலிருந்த முடிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். கைலியை டப்பாக்கட்டு கட்டியிருந்தான், தோல் செருப்பு அணிந்த புழுதி படிந்த கால்கள். பாத்திமா கடை ரேடியோவில் “ ஏ.. போக்கிரி.. போக்கிரி.. போக்கிரி ராஜா ” என்ற வரிகள் பாடிக் கொண்டிருந்தது. அதை அவன் ரசிப்பது அவன் நடையில் தெரிந்தது. மன்னார்குடியிலிருந்து வருவதாகச் சொன்னார்கள். அன்று தேர்தல் நாள். மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. எங்கோ கேள்விப்பட்டு வந்திருந்தனர். அவன் குடிக்கவில்லை. அவனுடைய சவாரிகள் இருவரும் என்ன ஏதுவென்று புரிவதற்குள்ளாகவே அளவறியாமல் குடித்துவிட்டு எம்ஜிஆர் கலைஞர் சண்டைபோட்டுப் பின் படுத்த படுக்கையாகிவிட்டனர்.

காத்திருந்து பார்த்தவன் அவர்களை விட்டுவிட்டு ஒருவன் பையிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். மறுநாள் காலையில் வந்தபோது அவர்கள் தூங்கிக்கொண்டுதான் இருந்தனர். பாத்திமா அவனிடம் பேயாட்டம் ஆடினாள். சட்டை பண்ணாமல் பீடியிழுத்துக்கொண்டே நின்றான். அவளுக்கே பரிதாபமாக இருந்தது. ஒரு பெருமூச்சுடன் வியாபாரத்தைத் தொடர்ந்தாள். மதியமானதும் அவளிடமே சோறு கேட்டான். யாருமில்லா மதியப்பொழுதில் சாப்பிட்டபடியே அவளுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தான். பொழுது சாயும்போதுதான் இருவரும் எழுந்தனர். அதிகமாகவே காசு வாங்கிக் கொடுத்தான். பின் அடிக்கடி வந்தான். ஒரு நாள் ரிக்‌ஷாவையும் விற்றுவிட்டுக் கட்டிய கைலியோடு வந்தவன் அப்படியே இருந்துவிட்டான். எம்ஜிஆர் தமிழக முதல்வரானார்.
***
பாத்திமாவிற்கு நினைவு கலைந்து வயிறு பசித்தது. குடித்த வயிற்றெரிச்சல் பசியாகக் காட்டியது. ஒரு அவித்த முட்டையை உரித்து வாய்க்குள் போட்டுக்கொண்டாள். அதிகப்படியாக ஏழெட்டுப்பேர் குடிக்குமிடத்தில் இன்று நெருக்கி இருபது பேர். திருவிழா கூட்டம். விசேச வியாவாரம். ‘எல்லோருமே அவன் கதையைத்தான் பேசி மாலாசிட்டுக் கொண்டிருந்தனர். ஒரு ஆளுக்கும் தொல்லை தராத ஜீவிதம். தான் உண்டு தன் வேலையில்லாமலிருப்பது உண்டு கடை, குடி, பாத்திமா, நர்ஸ் எனச் சுத்திச்சுத்தி வந்தவன் இன்று இல்லை. யாருக்கும் நெருக்கமில்லாத விலக்கமில்லாத ஆள். வில்லங்கம் விவகாரமில்லாதவன்.’ பேச்சும் அமைதியுமாய் குடித்து முடித்து எந்த சலம்பலுமில்லாமல் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீடு சேரக் கிளம்பினர்.

ஆண்கள் குடித்துவிட்டுப் போன இடம் காலிக் குவளைகளும், சிந்திய சரக்கின் ஈரமும் சாக்னா மிச்சமுமாக ஈக்கள் மொய்க்கக் கிடந்தது. அவனிருந்திருந்தால் இந்நேரம் கூட்டித்துடைத்து பளிச் ஆக்கியிருப்பான். அவ்வீட்டின் எல்லாமும் அவனையே நினைவூட்டின. வயிற்றைப் புரட்டியது. இன்னும் ஒரு டம்ளர் குடிக்கவேண்டுமென்றிருந்தது. பாட்டிலில் இருந்ததை அப்படியே அன்னாத்தினாள். துவர்ப்பும் காரமும் இதமாயிருந்தது. கொல்லைக் கடைசியில் அவனுடைய காப்பிநிற டவுசர் கொடியில் கிடந்தும் பறந்தும் அல்லாடியது. ”அய்யோ எம்புள்ளய நானே கொன்னுட்டனே” பாத்திமா சத்தமாகவே கதறினாள். அழுகை ஆற்றுப்பட நள்ளிரவானது. வெறுமை நெஞ்சுக்குள் பல்லிபோல ஒட்டிக்கொண்டு மேலுங்கீழுமாய் ஓடியாடிக்கொண்டிருந்தது. பார்வை குத்திட்டு நடந்தவற்றை மனம் அலசிக்கொண்டிருந்தது.

***
அன்று மதியம் ஆளுங்கட்சிப் பிரமுகர் கடையிலிருந்தார். முக்காலியின் முனையில் அமர்ந்து மூங்கில் தூணில் சாய்ந்து குடித்துக் கொண்டிருந்தார். ஆற்றில் குளித்துவிட்டு சைக்கிளில் உள்ளே வந்த பெருமாள் அவ்வாளைப் பார்த்ததும், கொடியில் ஈர டவுசரைக் காயப்போட்டு, காய்ந்ததை உருவி போட்டுக் கொண்டு வந்த வேகத்திலேயே கிளம்பினான். இரண்டு பாட்டில்களை டவுசருக்குள் சொருகிக்கொண்டான். இது மாமூல் நடவடிக்கைதான். அவள் முகம் கூடப் பார்க்கமாட்டான்.

அய்யனார் கொல்லையில் குடித்துக்கொண்டிருப்பதாக பாத்திமாவுக்கு சாயந்தரம் தகவல் வந்தது. முதல் பாட்டிலில் பங்குபெற்றுக் குடித்த பரியாரி தைக்கால் வாசலில் படுத்து மலையேறினார். அவன் அய்யனார் கொல்லையிலேயே சுருண்டுவிட்டான். புது சரக்கு. முதல்நாள்தான் வில்லியம் மூன்று பெட்டிகள் இறக்கிவிட்டுப் போனார். தண்ணீர் கலக்காமல் இருந்ததை மறந்த வாக்கில் எடுத்துவந்துவிட்டான். அதான் கோளாறு.

பெட்டிக்குப் பன்னிரண்டு பாட்டில்கள். எல்லாம் பழைய கண்ணாடி சலைன் பாட்டில்கள். மருத்துவமனைக்குப் பின்னால் பாசி படர்ந்த குளத்தில் வீசப்படும் பாட்டில்களைப் பொறுக்கி செந்நிற கசாயத்தை நிரப்பி ரப்பர் மூடிபோட்டு அடைத்து வரும். இவள் தண்ணீர் கலந்து இருபது பாட்டில்களாக்கி விற்பனைக்கு விடுவாள். தண்ணீர் கலந்ததும் அடர் சிகப்பு நிறம் மாறி வெளிர் செம்பருத்தி நிறமாகிவிடும். பாட்டிலில் இருக்கும்போது அரக்கின் மணம் வீசும். மனித வயிற்றுக்குள் சென்று வரும்போது ஈர உளுந்தின் வாடையடிக்கும். ஒரு பாட்டிலுக்கு ரெண்டுபேர் குடித்தல் நலம். துவர்ப்போடு எரிந்தபடி உள்ளே சென்று மண்டையைக் கவ்விக்கொள்ளும். அத்தோடு நிறுத்தினால் நிலை தடுமாறாமல் வீடு போய்த் தின்று தூங்கலாம். யாரும் இவ்வளவில் கிளம்புவதில்லை. கொஞ்சம் ஏற்றி போட்டதும் தலையைச் சாய்த்துவிடும். போதையெல்லாம் தெளிந்து மயக்கநிலைக்குள் தள்ளிவிடும்.

கடைக்கு வரும்போது சைக்கிளை மிதித்து வந்தவனெல்லாம் திரும்பும்போது தள்ளிக்கொண்டுதான் போவான். சைக்கிள் தான் வாழ்க்கையின் ஒரே பிடிப்பெனத் தோன்றும். அதுதான் அவனை வீடுவரை சேர்க்கும். புவியீர்ப்பு ஒருபக்கமாக சாய்த்தடிக்கும். இந்திய சாலைவிதியின் படி அவன் விதியும் நடக்கும். இடப்பக்க வேலிக்கே உடலைத் தள்ளும். சைக்கிளும் கூடவே செல்லும். தூரத்திலிருந்து பார்க்கும்போது யாரோ அவர்களைக் கயிறு கட்டி வேலியோரமாக இழுப்பது போலிருக்கும். பாத்திமா கடையிலிருந்து வெண்ணாற்றுப்பாலம்வரை தென்னங்கொல்லையும் மாங்கொல்லையுமாக இருக்கும்.

அக்கொல்லைகளின் வேலிகளை உரசியபடியே வீடு போய்ச் சேர்வார்கள். சிலர் வேலிமீது சாய்ந்து இரவைக் கழிப்பார்கள். விடிந்த அடுத்த நாள் ஆசாரி வீட்டில் நிற்கும் சைக்கிளில் கொத்தனார் சாமான்களும், பெயின்டர் சைக்கிளில் ஆசாரி சாமான்களும், கொத்தனார் சைக்கிளில் பெயின்ட்டு பொருட்களும் இருக்கும். விழித்தெழுந்ததும் மாறிப்போன சைக்கிள்களைத் தேடிப்பிடிப்பதே பெரும்பாடாகிவிடும். இச்செந்நீரைத்தான் பெருமாளும் பரியாரியும் தண்ணீர் கலக்காது அப்பட்டமாகக் குடித்திருந்தார்கள்.

பெருமாள் அக்கரைக்கு இக்கரை நூல் போட்டு விலாங்கு பிடிப்பவன். நீச்சலெல்லாம் அவனுக்கு பாத்திமாவுடன் பவுசு பண்ணுவதுபோல. நித்தம் நீந்துங்கதை. அவளின் அவ்வாற்றின் தேகத்தில் மூழ்கிக்கிடக்கும் மேடுகளும் ஆழங்களும் அத்துப்படி அவனுக்கு. அன்றிரவு அவன் விழித்தபோது இடம் நேரம் எதுவும் விளங்கவில்லை. கோயில் விளக்கின் நிழல் இருப்பிடத்தைச் சொல்லவும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது. குடித்திருப்பது புரிந்தாலும், ஞாபகமில்லை.

கடைசியாக அந்த கட்சிக்காரனைக் கடையில் பார்த்தது மாத்திரமே நினைவில் இருந்தது. தலை கனத்தது. உடலும் மனமும் இச்சூழலிலிருந்து வெளிவரத் துடித்தது. சைக்கிள் நின்றிருப்பதைப் பார்த்ததும் மனம் இன்னும் ஆசுவாசமானது. எழுந்து கைலியை ஒழுங்குபடுத்திக்கொண்டு சைக்கிளைத் தள்ளியபோது கால்சட்டை ஜோப்பிலிருந்த இன்னொரு பாட்டில் தட்டுப்பட்டது. சட்டெனக் குடிக்கும் ஆசை உடலுக்குள் அரித்தது. சம்பந்தம் தைக்கால் பள்ளிவாசலின் படியில் படுத்திருந்தான்.

“ சம்மந்தோ…ஹோய்… “ சைக்கிளில் இருந்தபடியே கத்தினான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த பரதேசி சம்பந்தத்தின் உடலை உலுக்கி உசுப்பினான். “ ஏச்சம்மந்தம்.. பெருமாள் கூப்புட்றான் பாரு.”

எழுந்து வந்தவனிடம் கடைக்குப் போய்வரச் சொல்லி சைக்கிளைக் கொடுத்தான்.

“ இத எடுத்துட்டு போயி எதுனா திங்க வாங்கியா… நாங்கேட்டேன்னு சொல்லு..”

சத்தமில்லாமல் எல்லா பற்களையும் காட்டிச் சிரித்தான் சம்பந்தம் “ எனக்கு இத உடத்தெரியுன்னு யாரு சொன்னா.. நடந்து வேணா போறேன்..”

“ சரி சீக்கிரம் வா ”

“ கொஞ்சம் ஊத்து…”

“ போயிட்டு வாடா…எதுனா தொட்டுக்கிட்டு சாப்டுவோம்.. ”

“ அந்த ஜோலியே ஆவாது.. ஊத்தாம வண்டி ஓடாது”

பள்ளிவாசல் பக்கவாட்டு சுவற்றின் ஜன்னலில் சங்கிலியுடன் தொங்கிக்கொண்டிருந்த அலுமினிய டம்ளரில் பாதி ஊற்றினான்.

“ அரவாசிக்கூடயில்ல.. இன்னும் கொஞ்சம் போடுப்பா..”

“ போயிட்டு வாயா.. வந்தோன்ன தர்றேன் ”

சங்கிலி வாகுக்கு உடலை வளைத்து அண்ணாந்து குடித்தான். உடல் சிலிர்த்தது.

“ பாத்திமா ஒனக்குன்னா எதோ பெசலா குடுத்துருக்கா பா. காரம் தூக்குதே… இன்னும் காவாசி ஊத்து.. நா ஓடிட்டு வந்துர்றேன்.. ”

பாத்திமாவையும் தன்னையும் இணைத்துப் பேசியது ஜிவ்வென்றிருந்தது. கால்வாசிக்கு மேலே ஒரு சணல் ஏற்றியே ஊற்றினான். சம்பந்தம் அதே பாணியில் குடித்து மண்டையைச் சிலுப்பி டம்ளரை விட்டான். சுவரை உரசியபடி சங்கிலியுடன் குவளை அரைவட்டம் போட்டது.

“ இங்கயே இரு.. இதப் பாத்துக்க… ஒரு எட்டுல போய்ட்டு வந்துர்றேன் ” சவரப்பையைக் காட்டி சொல்லிக் கிளம்பினான். பெருமாள் குவளைப் பெண்டுலமாடுவதைப் பார்த்தபடியே பாத்திமாவின் நினைவில் மூழ்கினான்.

பத்தடி நடந்த சம்பந்தம் சத்தமாக கத்தி நினைவைக் கலைத்தான். “நீப்பாட்டுக்கு முறுக்கி தோள்ளப் போட்டுட்டு நரசுக்கு வைத்தியம் பாக்க கெளம்பிடாத. நான் செத்த நேரத்துல ஓடியாந்துருவேன்.”

*
சம்பந்தம் சொன்னபடியே அவன் செத்த நேரத்துக்குதான் வந்தான். அவன் பிணத்தை அடையாளம் காட்ட வந்தவன் அவனுக்கு ரெண்டு சொந்தங்கள் இருந்த போதிலும் அனாதையென்று சொன்னான். அதிகாரி முகமலர்ச்சியோடு குறிப்பெடுத்துக்கொண்டார்.

“ ரெண்டு நாளா யாரும் தேடுலுயா? ” என்ற அதிகாரியின் அடுத்த கேள்விக்கு “ அவனுக்குன்னு ஊருக்குள்ள சொந்தக்காரங்கன்னு யாரும் இல்லய்யா.. அவன் அனாத ”.

சொக்கத்தங்கம். அத்தாட்சியுடன் அனாதையென ஊர்ஜிதமானதும் உமர் அலியைத் தொடர்புகொண்டார் அதிகாரி. அரைமணிக்குக் குறைவான நேரத்தில் உமர் நிகழ்விடத்திற்கு வந்து சேர்ந்தார். சில விசாரிப்புகள். சில ஃபோன் கால்கள்.

“ என்ன ஆளுங்கன்னு எதும் தெரியுமா?? ”. பரியாரியிடம் கேட்டார்.

“ தெர்லீங்க.. பேச்செல்லாம் கருப்பு சட்டக்காரனுவோலாட்டங்க.. ”

“ சரி.. இங்கேர்ந்து எடுக்க ஆளுவோளுக்கு சொல்லி வுடு. பொதப்புக்கு ஏற்பாடு பண்ணனும். வெட்டியானுக்கு சொல்லி குழி வெட்ட சொல்லு. ”

“ தோட்டிங்க காலலேயே வந்தாச்சுங்க… சொன்ன எடுத்துப் போட்றுவாங்க.. போலிசு வியாவாரமாச்சேன்னுதான் காத்துக்கெடக்கானுவோ ” கைநீட்டிக் காட்டினார். ஆற்றுக்குள் சரியும் மண்ணில் குத்திட்டு இருந்தவர்கள் எழுந்து நின்றார்கள்.

“ தோட்டிக்கு மூனுபேருக்கும் ஆளுக்கு முப்பது குடு. கட்டுத்துணிக்கு இருவது, குழிவெட்ட நூறு, ஒனக்கும் வெட்டியானுக்கு மும்பணமா அம்பது வைய்யி.. மிச்ச கணக்க அப்றமா பாப்போம்.”

“ ஏ.. கானா.. இந்தா… தூக்கி வெளில வையி..” ரூபாயைக் கொடுத்து வேலையைத் தொடங்கச் சொன்னான் சம்பந்தம். கானன் பணிவோடு வாங்கிக்கொண்டு தன் சகாக்களை நோக்கிக் கத்தினான்.

“ கதனானி திஸ்கோணி ரண்டி..லோய் சிங்கா.. வேகங்கா..வேகங்கா..ரண்டி. லோய் ”

பனவோலைப் பாயைத் தூக்கிக்கொண்டு ராத்தியும், சிங்கானும் ஆற்றுக்குள் இறங்கினர். கானன் லுங்கியை அவிழ்த்து தலைவழியே உருவி பின் உருமாவாகக் கட்டிக்கொண்டு காக்கி டவுசரோடு மண்சரிவில் ஒருக்களித்து இறங்கிக்கொண்டே அவர்களை வேகப்படுத்தினான்.
***

கடைக்குப் போன சம்பந்தம் இன்னும் திரும்பவில்லை. இந்நேரத்துக்கு இரண்டுமுறை கடைக்குப் போய் வந்திருக்கலாம். பெருமாள் மெல்ல சைக்கிளைத் தள்ளியபடியே நடந்தான். எதிரில் வந்த மருதனிடம் பீடிக்கு நெருப்பு வாங்கும்போது விசாரித்தான்.

“ ஏ.. என்னப்பா அவன் புள்ளயார் கோயில்லல்ல கெடக்குறான்.”

“ ஒலுக்கோடிக்கி.. சொல்ல சொல்ல கேக்காம ஜாஸ்த்தியா குடிச்சான.. திங்க வாங்கியாடானு சொல்லி அனுப்சேன்… செத்துட்டானா கம்னேட்டி” – பெருமாள் யாரையும் இப்படிப் பேசிக் கேட்டதில்லை. மருதன் அவனை சமாதானப்படுத்தவேண்டி அவனிடமிருந்த பொட்டலத்தைப் பிரித்துக் காட்டினான்.

“என்னயா இது..கறியாட்டம் இருக்கு” முகம் மலர்ந்தான்.

“ ஆமப்பா.. மாடு… கூத்தானூருல தான் வேல .. வேல செஞ்ச பாயூட்ல குடுத்தாங்க..“ குசுகுசுத்தான்.

“ நீ மால போட்ருக்க மாரியிருக்கு”

“ஆமாமா.. அய்யப்பனுக்கு… இது புள்ளைங்களுக்கு.. சின்னவ ஆசையா திம்பா”

“ சரி சரி… புள்ளைங்களுக்கு வாங்கிட்டு போறதபோய் எடுத்துக்கிட்டு.. உள்ள வய்யி…” சமாதானமாகியிருந்தான்.

“ இன்னொரு பொட்னம் இருக்கு.. அவ நாலுதுண்டு திம்பா.. நீ தின்னு…”

மருதன் மறுத்து உள்ளங்கையில் திணித்து சைக்கிளில் ஏறிக் கிளம்பினான். மசாலா கலந்து வறுத்த துண்டுகள். பொட்டலம் உள்ளங்கையில் சூடாக இருந்தது. கறியின் மணம் உள்ளே சென்றதும் சம்பந்தத்தை மறந்துபோனான். வாய்க்கால் கட்டையில் உட்கார்ந்து பிரித்தான். வாழையிலையில் மடித்திருந்தார்கள். நாட்டு வெங்காயம் மணந்துகிடந்தது. பாட்டிலை அப்படியே சாய்த்து நிமிர்த்தினான். ஒரு துண்டை மசாலாவோடு புரட்டி வாயில் போட்டு மெல்லும்போது கைக்கு உரைக்காத சூடு வாய்க்கு உரைத்தது. ’அருமயான கறி, பதமான வேக்காடு. கொஞ்சம் உப்புதான் கொறச்சல்” மனம் சுவையோடு பேசிக்கொண்டிருந்தது. மீதமிருந்த சரக்கை ஒரே முட்டில் முடித்தான். மிச்சக்கறியை ஒவ்வொன்றாகத் தின்றான். போதையேறி கறி இன்னும் சுவையாகத் தெரிந்தது. கட்டைவிரலால் மொத்த இலையையும் வழித்து நக்கிமுடித்தான். மனம் நிறைந்து றெக்கை விரிக்க ஆரம்பித்தது. தெரஸா அக்கரையிலிருந்து அழைத்தாள். எப்பவும் அப்படித்தான் இவனுக்குத் தோன்றும்.

“ஏன் வேலிமுட்டிய முட்ட வேறாளு வந்துட்டானா.. இல்லன்னா நெனப்பும் ஆளும் இங்க வராதே..” கோபமாகக் கேட்பாள். அவன் கோபத்தை கிளறிப்பார்ப்பாள்.

“ ச்ச..ச்ச.. நீதான கூப்ட.. கேட்டுச்சே…” அசடு வழியக் கொஞ்சுவான்.

“ஆமாமா.. ஆளில்லாமதான் அலையுது இங்க… ஆணழகன கூப்புட்றாங்க” கொஞ்சம் சினம் தாழ்வாள். பின் தளர்வாள். போதையில் கிடப்பவன் மீது அவளே இயங்குவாள்.

பெருமாள் கனவுகளோடு அக்கரைக்கு சைக்கிளை மிதித்தான். ஒரு மைல் கடந்தால் கடைத்தெரு பாலம். பாலத்தைக் கடந்து சுடுகாட்டுச் சாலைக்கு அடுத்த தெருவுக்குள் நுழைந்தால் அவள் வீடு. எட்டுமணிக்கே ஊரடங்கிவிடும். நாய்கூட குரைக்காத தெரு. மூன்றாவது வீடு. ‘பக்கத்தூட்டு சந்துல சைக்கிள வுட்டுட்டு முன்னாடி வழியாவே உள்ள போய்ரலாம். போனதரம் கொல்லைல ஒன்னுக்கு போக வந்த பக்கத்தூட்டுக்காரி பாத்துட்டா’.

உள்நுழைவதற்கான திட்டம் போட்டபடி உற்சாகமாக மிதித்தான். பாலம் நெருங்கும் போது தலையை அசத்தியது. எங்கோ வானத்தில் மிதப்பது போலிருந்தது. கால் உழண்டது. விழிப்பு தட்டியபோது வேலிக்குள் கிடந்தான். தெரஸா மீண்டும் அழைத்தாள். இன்னும் சிறு தொலைவுதான். அவள் மீது அடிக்கும் ஆஸ்பத்திரி மணம் அவனை எழுப்பி நிறுத்தியது. சில சாகசங்கள் செய்து சைக்கிளையும் நிமிர்த்திவிட்டான். கைலியை மடித்து கட்டி மெல்லத் தள்ளியபடியே நடந்தான். ஆற்றுப்பாலம் கண்களுக்குத் தெரிந்தபோது இவன் சாலையோரத்தில் படுத்திருந்தான். இவன் மேல் சைக்கிள் கிடந்தது.

நிதானம் முற்றிலும் அற்றுப்போனது. மீண்டும் அவளின் அழைப்பு. அதே மருத்துவமனை மணம். மீண்டும் அதே சாகசம். எழுந்து நின்றான். பாலத்தைச் சுற்றிப் போவதென்பது இப்போதுள்ள நிலையில் சாத்தியமேயில்லை. கண்கள் மங்கலாகிக்கொண்டே வந்தது. அப்படியே படுக்கச்சொல்லி உடல் அடம்பிடித்தது. மெல்லச் சரியலானான். மீண்டும் அவளின் குரல். காம வைராக்கியம் உள்ளே புகுந்து சட்ரஸ் வழியே ஆற்றைக் கடக்கச் சொன்னது. பெருமாள் சைக்கிளோடு சட்ரஸ் பாதைக்குள் ’ல’னா போட்டபடி நடந்தான். ஆறு தலைதெறிக்க ஓடிவந்து சட்ரஸில் முட்டி வெண்ணுரையைக் கக்கி ‘ஓ’ வென ஓலமிட்டபடி ஓடிக்கொண்டிருந்தது.
***
கானன் பனவோலையில் கட்டிய சடலத்தை குப்பை வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துப்போனான். சிறுவர்கள் வண்டியின் பின்னால் ஓடினார்கள். பெரியவர்கள் சைக்கிளில் இருவர் இருவர்களாகச் சென்றார்கள். மருத்துவர் சடலத்தைப் பார்வையிட்டபின், மன்னார்குடி தலைமை மருத்துவருக்குப் பிரேதப் பரிசோதனைக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதினார். தெரஸா, கடிதத்தில் அரசு மருத்துவமனையின் முத்திரையிட்டு மடித்து உறையிட்டுக் கொடுத்தாள். கருப்பு வேனில் சடலம் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டதும் ஊர் கலைந்தது.
***
பெருமாள் இறந்துவிட்டார். அவரின் அபுனித ஆவியை வைகுண்டமோ கைலாயமோ ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. ஆக வேறு வழியில்லாமல் நாராயணப்பெருமாள் புவியிலேயே அதுவும் தான் பிறந்து இறந்த வெண்ணாற்றங் கரையிலேயே தனது அடுத்த பிறவியை சேஷாத்ரி-பத்மாவதி தம்பதியருக்கு மகனாக, காலமேகப்பெருமாளாக அவதரித்தார். ஒரு கையில் நெஞ்சோடு மகனை அணைத்தபடி ஃபோனில் சேஷாத்திரி, தன் முதல் தாரத்து மூத்தமகளிடம் உற்சாகமாகச் சொன்னார், “ஏ.. கொழ்ந்தே…அப்பா பேசுறேன்டி.. பத்துக்கு டெலிவெரி ஆயிடுத்து.. பெருமாளே நம்மாத்துல வந்து பொறந்துருக்கான்டி… அப்படியே என்ன உரிச்சுவச்ச மாதிரி கரேல்னு இருக்கான்.. தொட்டு மை வச்சிக்கலாம்னா பாரேன்”.

பெருமாள் ஆனந்தமாகச் சிரித்தேன்.


***

நான் கே.எம்.பி – காலமேகப்பெருமாள். நாற்பது வயதுக்குள்ளாகவே லட்சங்களில் புரளும் ஒரு மினி தொழிலதிபர். தொழில்: பழைய இரும்பு வியாபாரி. இப்போது மெட்டிரியல் ரீசைக்கிளர் என்று சொல்லிக்கொள்கிறோம். இருபத்துநான்கு மணியும் பணிதான். இதற்கிடையே தான், ’ குடி, பயணம், நட்பு, காதல், கல்யாணம், குழந்தைகள், இன்னொரு காதல், காமம், இச்சை என வாழ்க்கையையும் வாழ்ந்து கொள்வது.

கார் வைகை ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அவளிடமிருந்து ஒரு வாட்ஸ்அப் பிக்சர் – * உதட்டைச் சுளித்துப் பொய்க் கோபம் காட்டி *, நிமிர்ந்தபோது வானில் பறப்பதுபோல இருந்தது. கீழே வறண்ட வைகை வாயைப் பிளந்து கிடந்தது. அவளிடமிருந்து வீசிய மருத்துவமனை வாசனை சுகந்தமாயிருந்தது.


  • பாலாஜி பிரசன்னா, மன்னார்குடியைச் சேர்ந்தவர். இது இவரது முதலாவது கதை. இவரது மின்னஞ்சல் ஐடி – [email protected]
RELATED ARTICLES

6 COMMENTS

  1. அருமையான எழுத்து நடை. அற்புதமான கதை. வாழ்த்துக்கள் பாலாஜி.

  2. வாசிக்க வாசிக்க காட்சிகள் விரிகிறது. நல்லாயிருக்கு

  3. பாலாஜி பிரசன்னா என்னும் கதைசொல்லியை நாலடி உயரத்தில் நாசர் மூக்கும் நாசா மூளையுமாக இருந்த ஆறாம் வகுப்பிலேயே நானறிவேன் என்ற பெருமை எனக்குண்டு…

    இந்த படைப்பு முழுவதிலும் வெண்ணாற்று மண்ணில் சுட்ட செங்கற்களை கதைமாந்தர்களாய் அடுக்கி தன் வாழ்வியல் அனுபவங்களை சாந்து குழைத்து நிறைக்கிறார். முன்னும் பின்னும் கதை செல்வதெல்லாம் இவர் எழுப்புகிற சுவற்றின் வெவ்வேறு பக்கத்திலும் ரசமட்டம் வைப்பதாகவே உணர்ந்தேன். கதை முழுவதும் கரண்டி கரண்டியாய்ச் சாந்து மெழுகும் அழகையே உடனிருந்து ரசித்ததில் என்ன கட்டியெழுப்புகிறார் என்பதில் எண்ணவோட்டம் செல்லவில்லை.. முழுதும் நிறைவடைந்து தள்ளி நின்று பார்க்கும் போது தெரிகிறது தனக்கான மேடையை தானே உழைத்து வடித்திருக்கிறார் என்று..
    வாசித்து முடித்த பின் என் கைகளில் நான் உணர்ந்த ஈரம், அலைபேசிச் சூட்டில் வந்த என் வியர்வை அல்ல… அயராது உழைத்து சிந்தியிருக்கும் அவரது வியர்வை…

    இன்னுமென்ன தாமதம்… நாற்காலியை மேடையில் ஏற்றுங்கள்!!!!

  4. முன் ஜென்மத்தில் மீதமுள்ள ஆசையையும் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறாரா KMP…
    அருமையான நடை…
    வாழ்த்துக்கள்

  5. Fentastic writing skills .. unmai sarru uraikkirathu ..

    oru kadhal alla iru veri konda kaathalkal ….ingu poda pattta mudichum ..avilaththathum ..saatharana manitharkalin thevaikalai solliyathu

    உடல் விட்ட ஆவிக்கு வயிறுமில்லை. வலியுமில்லை.

    சேஷாத்திரியின் குடும்பம் வைகுண்டம் அல்லவே; பத்மாவை எந்த விஜாரணையுமில்லாமல் ஏற்றுக்கொள்ள மறுத்தது.

    சேஷாத்திரி இரண்டாம் கல்யாணம் செய்ததில் எந்த சிக்கலுமில்லை. அவள் ப்ரம்மனின் தலையில் பிறக்காமல் விட்டதே சிக்கல், பிரச்சனை எல்லாம். புதுமணத்தார் நயாபைசா நட்டமில்லாமல் ஒதுங்கி.. இல்லை அவர்களை ஒதுக்கி நித்யமும் சுகமாய் வாழ்ந்ததன் அடையாளமாய் என் அவதாரம்.

    நேர்மையென்பது சீனியர்களின் சொல்லைப் பிரதியெடுப்பதுதானே.

    நீச்சலெல்லாம் அவனுக்கு பாத்திமாவுடன் பவுசு பண்ணுவதுபோல. நித்தம் நீந்துங்கதை. அவளின் அவ்வாற்றின் தேகத்தில் மூழ்கிக்கிடக்கும் மேடுகளும் ஆழங்களும் அத்துப்படி அவனுக்கு.

    நீச்சலெல்லாம் அவனுக்கு பாத்திமாவுடன் பவுசு பண்ணுவதுபோல. நித்தம் நீந்துங்கதை. அவளின் அவ்வாற்றின் தேகத்தில் மூழ்கிக்கிடக்கும் மேடுகளும் ஆழங்களும் அத்துப்படி அவனுக்கு.

    “ஏன் வேலிமுட்டிய முட்ட வேறாளு வந்துட்டானா.. இல்லன்னா நெனப்பும் ஆளும் இங்க வராதே..” கோபமாகக் கேட்பாள். அவன் கோபத்தை கிளறிப்பார்ப்பாள்.

    “ ச்ச..ச்ச.. நீதான கூப்ட.. கேட்டுச்சே…” அசடு வழியக் கொஞ்சுவான்.

    “ஆமாமா.. ஆளில்லாமதான் அலையுது இங்க… ஆணழகன கூப்புட்றாங்க” கொஞ்சம் சினம் தாழ்வாள். பின் தளர்வாள். போதையில் கிடப்பவன் மீது அவளே இயங்குவாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular