Friday, March 29, 2024

அல்லிராணி

பிரமிளா பிரதீபன்

01

நமுனுகுல மலைத்தொடர்ச்சியின் அகண்டவெளிப் பள்ளத்தாக்கிற்குள் இருந்த அந்தத் தோட்டத்தை அல்லிராணி மிக விரும்பினாள். உலகில் வேறெதையுமே அறியாத தனிமையில் அவளும் உரத்தொலிக்கும் அவள் வீட்டு வானொலி பாடல்களுமென குறுகியதொரு வட்டத்திற்குள் அவள் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தாள்.

அல்லிராணிக்கு காதுகள் இரண்டும் அவ்வளவாகக் கேட்பதில்லை. எனினும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து மொத்த லயமும் அதிரும் அளவிற்கு வானொலியை ஒலிக்க விடுவாள். அதன் பேரிரைச்சலானது இடதுப்புற தொரையான் வீட்டுக்கும் வலப்பக்கத்து ரத்தினம் வீட்டுக்கும் நீண்டகாலப் பெருந்தொந்தரவைத் தந்திருந்தது.

தொரையானின் மனைவி ஆனமட்டும் சத்தமிட்டு அல்லிராணியை அசிங்கப்படுத்தித் திட்டுவாள்.

“செவிடி… செவிடி…. செவிட்டு முண்டம் காலங்காத்தாலேயே உசுர வாங்குது’ என்றவாறே தனது விடியலைத் தொடங்க அவள் பழக்கப்பட்டிருந்தாள்.

‘புள்ளைங்க காலயிலேயே எழும்பிகிதுங்க. ஒரு வேலயும் ஓடுதில்ல. அத கொஞ்சம் கொறச்சி வச்சாதான் என்னவாம்’ என்று தொங்கல் வீட்டு மணியம் அத்தையும் சொல்லிப் பார்த்தாள்.

‘அப்புடியே காது கேட்டு வெளங்கிட்டாலும்… பெரிய தொரசாணி மாதிரில்ல பண்றா’ ரத்தினம் வாசலில் வாய் கொப்பளிக்கும் போதே கத்துவான்.

யார் எதை ஓதினாலும் அன்றாடம் அல்லிராணி வீட்டில் வானொலி ஒலித்தபடியேதான் இருந்தது. என்றாலுமே காதுகள் கேளாத அல்லிராணி ஏன் இப்படிச் செய்கிறாள் என்பதை மட்டும் யாராலும் விளங்கிக் கொள்ளவும் இயலாமலிருந்தது.

அல்லிராணி அந்தத் தோட்டத்திலேயே கொஞ்சம் விசேஷமானவள் என்பதை எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள். அவளுக்கு முன் விவாகரத்து எனுமொரு சம்பவம் அந்தத் தோட்டத்தில் இருந்ததேயில்லை. அதற்கு யாரும் துணிந்தது கூட இல்லை. முதல் தடவையாக ராமமூர்த்தியை கோர்ட் கேஸ் என்று அலைய வைத்து வெற்றி கண்டவள் எனும் வகையில் அல்லிராணி மீதான பயம் அனேகருக்குள் இருந்தது.

அல்லிராணி பார்ப்பதற்கு உயரமாகவும் அளவான உடற்கட்டுடனும் இருப்பாள். ராமமூர்த்தியை விவாகரத்து செய்திருந்தாலும் அவனது சேட்டுகளைச் சொந்தமாக்கிக்கொண்டு சேட்டும் பாவாடையும் பாவாடைக்கு மேல் இடுப்பைச்சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் ஒரு குட்டை படங்கும் என்று வேகமாக நடப்பாள். தனக்கு முன்பின் நடப்பவர்களைப் பற்றி அவள் எப்பொழுதும் யோசிப்பதில்லை. மட்டக்கம்பை ஒரு கையில் கிடையாகப் பிடித்து அசைத்தபடி தன்னிடம் எதிர்படுவோரிடத்து ஒரு மெல்லிய சிரிப்பையும் அலட்சியப் பார்வையையும் உதிர்த்துவிட்டு யாரையென்றாலும் வெகு இயல்பாய் கடந்து செல்லக் கூடியவளாக அவள் இருந்தாள்.

அன்று சரியாக ஏழு மணிக்கெல்லாம் வானொலியை அமத்திவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினாள் அல்லிராணி.

அதற்காகவே காத்திருந்தாற்போல் சரியாக அவள் தன் வாசலைக் கடக்கும் நேரத்தில் அரிசி கழுவிய தண்ணீரை விசிறியெறிந்தாள் ரத்தினத்தின் மனைவி. சிலதுளிகள் தன்மீது படிந்ததையும் கணக்கில் கொள்ளாமல் அல்லிராணி வேகமாக அவ்விடத்தைக் கடந்தாள்.

அடுத்ததாய் மணியம் அத்தை வீடு. அவள் தன் வாசற்கதவை வேண்டுமென்றேத் திறந்து மிக வேகமாக அறைந்து சாத்திக் கொண்டாள்.
அல்லிராணிக்கு இவையெல்லாமும் சுவாரசியத்தைக் கூட்டும் சம்பவங்களாகத்தான் தோன்றினவேயன்றி கோபத்தை ஏற்படுத்தவில்லை. சிரித்தவாறே திரும்பிப் பார்க்காமல் நடந்து அந்த லயத்தைத் தாண்டினாள்.

02

வேலை முடிந்து வரும் கையோடே கிணற்றடியில் கைகால் அலம்பிவிட்டு அல்லது ஒரு குளியல் போட்டுவிட்டு வந்தால் நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாமென்று சிலர் துவாயையோ துண்டொன்றையோ தமது கொழுந்து பைக்குள் செருகி பத்திரப்படுத்துவதுண்டு.

தனது பையிலிருந்த கபிலநிறத் துவாயை வெளியிலெடுத்தவாறே அல்லிராணி கிணற்றடியை நெருங்கினாள்.

வழமைக்கு மாறாக கிணற்றடி வெறுமையாய் இருந்தது. குளிக்க வந்தவர்களும் தண்ணீர் எடுக்க வந்தவர்களும் ஒருவர்க்கொருவர் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள்.

பொதுவாக அல்லிராணி காரணங்கள் தேட முயற்சிப்பதில்லை. தன் கொழுந்துப் பையை ஒருபுறமாய் வைத்துவிட்டு பரபரவென தன் குட்டிப்படங்கை அவிழ்த்து மடித்து வைத்தாள். உடுத்தியிருந்த பாவாடையை மாரளவிற்கு உயர்த்தி கட்டியவாறே சேர்ட்டையும உள்ளாடைகளையும் கழற்றி துவைக்கும் கல்லில் போட்டாள்.

‘யாருமே குளிக்காம ஏன் இருக்கணும்?’

அவளைக் குடைந்த வேள்வியை பார்வையால் கேட்டாள்.

‘குளிக்க முடியாது அல்லி… தண்ணில எவனோ கசிப்ப கலந்து விட்டுடாய்ங்க’

அல்லிராணியின் முகத்தைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு வேண்டுமென்றாலும் பேசலாம். உதட்டசைவில் சிறு தடங்களுமின்றி அனைத்திற்கும் பட்பட்டென்று பதிலளிப்பாள்.

‘கசிப்பா..? எங்க தள்ளு கசிப்பா இல்லையான்னு நாம்பாக்குறேன்’

வாளியால் அள்ளியெடுத்த நீரை முகர்ந்து தலையை படாரென பின்னிழுத்தாள். வாளியையும் கயிரையும் தனித்தனியேயும் முகர்ந்து பரீட்சித்துப் பார்த்தாள்.

பழகிப்போன அந்த கசிப்பின் மணம் முகத்திலறைந்து விலகியது.

‘தண்ணியில தாண்டி கலந்திருக்கு’

‘இப்ப எப்புடி குளிக்கிறதாம்?’

காலையில் கதவை அறைந்து சாத்தியதை மறந்துவிட்டு மணியம் அத்தையும் பேசிக்கொண்டிருந்தாள்.

‘பைப் தண்ணில வருதோ தெரியலயே’

காட்டுப்பீலியிலிருந்து குழாய்வழியாகக் கிணற்றுக்குள் விழும் நீரில் ஏதேனும் கலந்து விட்டிருக்க வாய்ப்புண்டென்பதையறிந்து மணியம் அத்தை அவ்வாறு சொல்லிக்கொண்டு நின்றாள்.

‘காட்டுப்பீலிக்கு ஒரு எட்டு போயிட்டு பாத்துருவமா?’

துவாயை தோளுடன் போர்த்திக்கொண்டு ஆயத்தமானவளாய் அல்லிராணி கேட்டாள்.

குளிக்க வழியற்று வியர்வையோடும் பிசுபிசுப்போடும் களைத்து காத்துக்கொண்டிருந்த ஓரிருவர் அல்லிராணியுடன் சேர்ந்து காட்டுப்பீலியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இவர்கள் நடந்து போகும்போதே இடையில் அகப்பட்ட சிறுசுகள் சிலதும் சேர்ந்து கொண்டனர்.

எல்லோரும் பேசிக்கொண்டே நடந்தார்கள். முகத்தைப் பார்த்து அவர்கள் பேசுவதைக் கணித்து பதிலளிக்க அல்லிராணிக்கு சங்கடமாயிருந்தது. அவர்களைக் கடந்து முதலாமாளாய் நடந்து கொண்டிருந்தாள். நீரில் முகர்ந்த அந்தக் கசிப்பு மணம் நாசியின் மொத்தக் கலங்களிலும் தொற்றிக் கொண்டதாய் தோன்றியதோடு அது ராமமூர்த்தியின் வேண்டாத ஞாபகங்களையும் கொண்டுவந்திருந்தது.

துர்மணம் மிதமிஞ்சிய இப்படியொரு குடிவகை உண்டென்பதே ஆரம்பத்தில் அல்லிராணிக்கு தெரியாது. ராமமூர்த்தி அந்தக் கருமத்தைக் குடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்த முதலாவது சந்தர்ப்பத்தில் வயிறு குமட்டி குடற்தசைகள் பிய்ந்து அத்தனையும் வாய்வழியாய் வருமென்றே கக்கிக்கக்கித் துப்பினாள்.

ஆனால் அவனிடத்தே அவ்வுணர்வைப் பற்றி விபரித்து பேசித்தீர்க்குமொரு பொழுதாக அது அமைந்திருக்கவில்லை. அத்தோடு அவன் கண்டுப்பிடித்த அந்தப் புதுவகை வெறியை அவளுடலில் ஊர்ந்து மிதந்தவாறேதான் கொண்டாடிக் களிக்கவும் அவன் விரும்பியிருந்தான்.

எப்போதாவது நடுசாமப் பொழுதுகளில் இருளுடன் சேர்ந்து பதுங்கலாய் வீட்டிற்குள் நுழைந்த அந்தக் கசிப்பின் வாடை நாட்பட நாட்பட வீட்டின் அத்தனை மூலையிலும் அப்பி அப்படியே அவனது அதிரும் சிரிப்பில்… ஆடைகளில் கூடவே அவன் புழங்கும் பண்டபாத்திரங்களிலுமாக ஒட்டிக்கொள்ளத் தொடங்கியிருந்தது.

மழைக்கு கசியும் கூரைவழித் திவலைகளிலும் சுவற்றின் ஈரப்பதத்திலும் இன்னும் பின்வாசல் காணிற்குள் தேங்கிக்கிடக்கும் சிலதுளி முத்திரத்திலும் கூட கசிப்பினது அழுகி அவிந்துப்போன மணமொன்று கவிழ்ந்திருந்தது. அது அவ்வீட்டைத் தாண்டி லயத்தையே கவ்விப்பிடித்து திரும்பிய திசையிலெல்லாம் முகத்தில் மோதியடித்தது.

எத்தனைதான் பொறுத்துக் கொள்ள முடியும்?

அடுத்தமுறை குடித்துவிட்டு வரும்போது அவனை ஊதாங்கட்டையால் அடிக்கவே அல்லிராணி திட்டமிட்டிருந்தாள். முடியாமல் போனபோது எண்ணெய்க் கரண்டியை சூடுபண்ணி வைக்க எண்ணினாள். இறுதியில் கையில் கிடைப்பதை விட்டெறிந்து அவனைத் தாக்குவதுதான் புத்திசாலித்தனமென்று முடிவெடுத்தாள்.

சரியாக அவன் வரும் சமயத்தில் தூக்கியடிக்கக் கூடியதான பூச்சாடியையும் மூன்று சிரட்டைகளையும் ஒரு விறகுக்கட்டையையும் எடுத்து தாயார் நிலையில் வைத்துக் காத்திருந்தாள்.

பூச்சாடி திசைமாறி எங்கோ விழுந்தது. சிரட்டையொன்று அவனது முட்டியில் பட்டு உருண்டது. அடுத்ததாகத் தூக்கியடித்த விறகுக்கட்டையின் சிலாம்புகள் அவனது தொடைப்பகுதியில் குத்தி நின்று பின் விழுந்தது.

அடுத்த நொடியே மடித்துக் கட்டப்பட்டிருந்த சாரத்தைத் தாண்டி இரத்தம் வழியத்தொடங்கியதைக் கண்டு அவள் தன் தாக்குதலை நிறுத்திக் கொண்டாள்.

குடிவெறி அவனை வேகமாக இயக்கியது.

‘சிறுக்கி முண்ட’ என்று அலறினான். வேகமாக எதிர்கொண்டு அல்லிராணியின் முடியைக் கொத்தாகப் பிடித்து அவளை சுவரோடு மோதியடித்தான். அப்படியே தன் பலத்தையெல்லாம் திரட்டி மூன்று அறைகள் விட்டான்.

சுழன்று தடுமாறி ஒருபக்கமாய் விழுந்துக் கிடந்தாள் அல்லிராணி. அவன் தொடர்ச்சியாகவும் ஏதோ பேசுவது போலவேயிருந்தது. ‘ஏன் இவன் சத்தமேயில்லாமல் பேசுகிறான்’ என்று தோன்றியதே தவிர அவளது காதுகள் இரண்டும் அடைத்து போயிருப்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை.

சில நொடிகள் கடக்க தாங்கொணா வலியும் சகிக்க முடியா மெல்லிய இரைச்சலும் காதுகளை நிரப்பிக்கொள்ளத் தொடங்கின. விண்விண்ணென இழுத்து கண்ணுக்குத் தெரியா தசைகளிளெல்லாம் வலியெடுக்க ஆரம்பித்திருந்தன.

அன்றைய தினம் தான் அவசரப்பட்டிருக்கக் கூடாதென இப்போதும் அல்லிராணி எண்ணிக் கொண்டாள். ஒரு ஆணின் மொத்த பலத்தையும் அடியாய், உதையாய், அறைகளாய் வாங்கிச் சகிக்கத் தெரிந்த பெண்மனதிற்கு ஊராரின் கேலிப்பேச்சைத் தாங்கும் திடத்தை ஏன் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லையென்பது பற்றி அவள் யோசித்தாள்.

தனக்குக் காதுகள் கேளாமை பற்றி அப்போதும் கூட ஊரில் யாரோ ஒருவர் பேசிக் கொண்டிருப்பதாகவோ அல்லது தன்னை யாரோ சத்தமாக அழைப்பதை கவனியாமல் தான் நடப்பது போலவோ தோன்றிக் கொண்டேயிருந்தது.

நின்று நிதானித்துத் திரும்பிப் பார்த்தாள். யாரும் அழைத்தது போலாய் இருக்கவில்லை.

காட்டுப்பீலி நெருங்குமிடத்தில் பழம்பாசி செடிகளும் ஒட்டுப்புல்லும் பரந்து வளர்ந்திருந்தன. ஆளுயர பாம்புப் புற்றொன்று தன் உயரத்தை அதிகப்படுத்தியிருந்தது. அவர்கள் அதனைத் தாண்டி நகர்ந்தனர். அவ்விடத்தை நெருங்க நெருங்க உயரத்திலிருந்து பீலிநீர் விழுமோசையும் ஏதோவிதமான மருந்து மணமும் காற்றுடன் கலந்துவரத் தொடங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

அல்லிராணியின் ஆழ்மனது காரணமேயின்றி பதட்டங்கொள்ள ஆரம்பித்தது. காலில் மிதிப்படும் மிலாறு குச்சிகளை கவனியாமல் தேயிலைச் செடிகளின் பொட்டல்களை குறுக்குப் பாதையாக்கி அதனூடு வேகமாக நடந்தாள்.

தனக்குப் பின்னால் வருபவர்கள் இன்னும் தன்னை தொடர்கிறார்களாவென இன்னுமொருமுறை திரும்பிப் பார்த்தாள். ஓரிருவர் குறைந்திருந்தனர். ஒரு எல்லைவரை வந்து பீலி தெரியும் தூரத்தே நின்று உற்று அவதானிக்க முயற்சித்தாள். வெற்று இருளும் அடர்பச்சை நிற பாக்குமர இலைகளின் அசைவுகளுமே தென்பட்டன.

அவ்விடத்துப் பள்ளத்தில் தொடங்கும் கற்படிகளில் பரபரவென இறங்கினாள். அங்குமிங்குமாய் வளர்ந்து நின்ற பாக்கு மரங்களின் உடற்பகுதிகள் நிமிர்ந்து நில்லாமல் சாய்ந்து சரிந்து அவளது பாதையை வளைவு நெளிவுடையதாய் ஆக்கியிருந்தன. வேகமாக இறங்கியோடியவள் அதிலொரு பாக்கு மரத்தின் சாம்பல் வண்ணம் கலந்த தண்டுப்பகுதியை கெட்டியாக பிடித்துத் தன்னை நிறுத்திக் கொண்டாள். கண்கள் மூடி அவ்விடத்தை ஆழமாக நுகர்ந்தாள். கசிப்பைத் தாண்டிய மருந்து நெடியொன்று பரவியிருப்பதை உணர்ந்தாள்.

பின்னால் வந்தவர்கள் படியினின்றும் இறங்கிக் கொள்ளாமல் அல்லிராணியை அவதானித்தவாறே நின்றுகொண்டார்கள்.

அவ்விடத்தே விழுந்துக் கிடந்த பாக்குப்பட்டையொன்றின் பிடிப்பகுதியை முறித்தெடுத்துக் கொண்டாள். அத்தடியினால் கால்களுக்குள் இடைப்பட்ட இலைகுழைகளை பலமாக அடித்தொதுக்கி எதையோ தேடத்தொடங்கியிருந்தாள். சற்று தூரத்தே சாய்ந்து கிடக்கும் பெரிய நீலநிற கசிப்பு பெரல் ஒன்றைக்கண்டு செடிகளை அடித்து விலக்கியபடி அவ்விடத்திற்கருகே சென்றாள்.

முன்னேற முன்னேற மருந்துவாடை பிணவாடையைப் போலாகியது. ஆரம்பத்திலிருந்தே அல்லிராணியிடமிருந்த பதட்டம் பெருக அவள் தீவிரமாய் தேடினாள். அவளது காலடிச் சப்தம் கேட்டு குவியலாய் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கள் விலகியோடத் தொடங்கின. அருகில் சென்று பார்த்தவள் அப்படியே உடல் நடுங்க சிறிதுநேரம் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.

03

ராமமூர்த்தியின் மரணம் கொலையென்பதாய் சந்தேகிக்கப்பட்டது.

ராமமூர்த்தியின் உடலின் மீது க்ரமொஸ்ஸொன் வாசனை வந்ததாலும் அப்பகுதியெங்குமாய் அந்த கிருமிநாசினி தெளிக்கப்பட்டோ அவனது மேனியெங்கும் ஊற்றப்பட்டோ இருந்தமையாலும் தோட்டத்தில் மருந்தடிக்கும் வேலைக்கு பொறுப்பாகவிருந்த வாப்பலம் சந்தேக நபராய் மாட்டிக் கொண்டிருந்தான்.

ராமமூர்த்தியைக் கட்டாயப்படுத்தி யாரோ க்ரமொஸ்ஸொன் மருந்தைப் பருக்கியிருப்பதாகவும் அதன் விஷத்தன்மையாலேயே அவன் இறந்ததாயும் ஊரார் பேசிக்கொண்டார்கள். உடல் முமுதும் அப்படியே கறுத்து எரிந்துபோனாற் போல அவன் கிடந்ததாய் கூறி கவலை கொண்டார்கள்.

அல்லிராணியிடமும் விசாரணை நடந்தது.

கிட்டத்தட்ட அவளை ஒரு கொலைகாரியாகவே தீர்மானித்து போலிஸ் அதிகாரியொருவன் அவளிடமிருந்து உண்மைகளை வரவழைக்க திமிறிக் கொண்டிருந்தான்.

சிங்கள மொழியின் கெட்ட வார்த்தைகளையும் அவன் விசாரணையின் போது பயன்படுத்தினான்.

மிகச்சிறு அளவில் தனக்கிருப்பதான கேட்டல் திறனையும் அவ்வதிகாரியின் உதட்டசைவையும் வைத்து அல்லிராணி பதிலளித்தாள்.

‘தமுசே எய் மாஹத்தியாவ டிவோஸ் கறே?’

விவாகரத்திற்கான உண்மையான காரணத்தை வெளியே சொல்ல முடிந்திருந்தால் எப்போதோ சொல்லியிருக்கலாமே. வழமை போலவே அவன் குடித்துவிட்டு அடித்ததாய் கூறினாள். அது மட்டுமே காரணமென்றாள்.

‘தோட்டத்தில் உள்ள முக்கால்வாசிப் பெண்களது பிரச்சினையிது. நீ மட்டும் எதற்கடி விவாகரத்து செய்தாய்?’

அல்லிராணி எவ்வளவு சொல்லியும் அவன் ஒத்துக்கொள்வதாய் இல்லை.

‘உனக்கும் வாப்பலத்திற்கும் என்ன தொடர்பு? அவனை எங்கே சந்திக்கிறாய்? வீட்டில் சத்தமாக ரேடியோ ஒலிக்கவைத்துவிட்டு உள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

அவன் ஏதோவெல்லாம் கேட்கத் தொடங்கியிருந்தான்.

‘இருவருமாய் சேர்ந்துதான் ராமமூர்த்தியை கொல்ல திட்டமிட்டீர்களோ?’

‘கியப்பங் பெல்லி… எத்த கியப்பங்’ என்று குரலை உயர்த்தி கையை சுவரில் பலமாகத் தட்டினான்.

அவளிடமிருந்த தைரியத்தை சூழ்நிலை கொஞ்சங்கொஞ்சமாக கரைத்துக் கொண்டிருந்தது.

விசாரணையில் அல்லிராணியிடமிருந்து உண்மை வரவில்லை எனத் தீர்மானித்தார்கள். அவளை போலிஸ் ஸ்டேசனில் வைத்து விசாரிக்க வேண்டுமென்பதாய் முடிவெடுத்து இரண்டு பெண்ணதிகாரிகள் வந்து அல்லிராணியை அழைத்துப் போனார்கள்.

இத்தனை காலமாய் ஊரில் திமிருடன் வலம் வந்த பெண்ணா இப்படி உடைந்து பதறுகிறாள் என்பதில் ஊராருக்கு பெரும் வியப்பு.

அவளை போலிஸ்காரர்கள் அடிப்பார்கள் என்றுதான் தோன்றியது. பாடலொலி இல்லாத அவளது வீடு வெறுமையடைந்து லயத்தையே சோர்வாக்கியிருந்தது. பூட்டப்பட்டிருந்த கதவுகளையே வெறித்தபடி அவளைப் பற்றி ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டார்கள்.

04

ஒரு பெண் போலிஸ் அல்லிராணியை தனியாக விசாரிக்கத் தொடங்கியிருந்தாள். தனது விவாகரத்திற்கான காரணத்தை முன்னுக்குப்பின் முரணாக சற்றே மாற்றி சொல்லியமையால் அல்லிராணி மீதான சந்தேகம் வலுவாகியது.

அல்லிராணி அழுதும் பார்த்தாள். தன் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படுவதை அவள் விரும்பவில்லை. வாப்பலத்துடன் தனக்கு எதுவிதமான உறவுமில்லையென எல்லா வகையிலும் சொல்லி இறுதியில் இன்னுமே ராமமூர்த்தி கட்டிய தாலியை தான் பாதுகாப்பதாய் வெளியே இழுத்துக் காட்டினாள்.

‘தாலியை பாதுகாக்கும் நீ புருசனை வேண்டாமென சொல்லியிருக்கிறாயென்றால் அதற்கு நிச்சயமாய் வேறேதும் காரணங்கள் இருக்கும். சொல்லு அதை சொல்லு’

அப்போது வேறிரு போலிஸ் அதிகாரிகள் உள்ளே நுழைந்து ‘என்ன கேஸ்?’ என்றார்கள்.

‘புருசனை கொன்றுவிட்டு நடிக்கிறாள்’ என்று அந்தப் பெண் போலிஸ் சொல்லிக்கொண்டே அல்லிராணியை முறைத்துப் பார்த்தாள்.

‘காரணம்?’

‘வேறென்ன…?’
அவர்கள் சத்தமாகச் சேர்ந்து சிரித்தார்கள். அல்லிராணிக்கு வார்த்தைகளே வரவில்லை. தொண்டையடைத்துப்போய் வறண்டிருந்தது. தண்ணீர் குடிக்க வேண்டும் போலவும். ஆனால் அவர்களிடம் கேட்கும் துணிச்சல் இருக்கவில்லை. அவர்கள் அல்லிராணியை கொலைகாரியாய் கருதியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

வாப்பலமும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தான். அவனுடன் தோட்டத்தில் மருந்தடிக்கும் வேலை செய்யக்கூடிய இன்னும் சிலரும் வந்திருந்தார்கள்.

முதன்முதலில் விசாரித்த அந்தப் போலிஸ் எல்லா ஆண்களுடனும் அல்லிராணியை இணைத்துப் பார்த்து ஒரு விபச்சாரியாகவே அவளை மாற்றிக் கொண்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்திற்கு இவர்களுக்கு பதிலளித்தால் தன் நடத்தையில் தனக்கே சந்தேகம் வந்துவிடுமாப் போலிருந்தது.

அல்லிராணி நொந்து போயிருந்தாள். அவளுடைய திமிர், வீராப்பு, நம்பிக்கை எல்லாமே காணாமல் போய்க்கொண்டிருந்தது. யாருமேயற்ற அநாதையைப் போலுணர்ந்தாள்.

திடீரென ‘உண்மையை சொல்லி விடுகிறேன்’ என்றாள். அவளது முகம் பயத்தாலும் பதட்டத்தாலும் விகாரமடைந்தாற் போலிருந்தது.

அவசரமாக அந்த அதிகாரி ‘ஏன் உனக்கு விவாகரத்து தேவைப்பட்டது?’ என்றார்.

அல்லிராணி எச்சில் விழுங்கியபடி தயங்கித் தயங்கிச் சொல்லத் தொடங்கினாள்.

‘ராமமூர்த்தி ஒரு குடிகாரனாய் இருந்தான். ஆரம்பத்தில் குடித்த அளவை விட நாளுக்கு நாள் அவன் குடித்த அளவும் அவனது மூர்க்கத்தனமும் அதிகரித்தவாறே சென்றது. சாதாரணமாக குடித்து சண்டையிட்டு சமாதானமாகும் ஒருவனாக அவன் இருக்கவில்லை. மிகவும் விசித்திரமாக நடந்துகொள்ள ஆரம்பித்திருந்தான்.’

அல்லிராணி சொல்வதை ஒரு போலிஸ் எழுதிக் கொண்டாள்.

‘ம்ம்… சொல்லு என்ன விசித்திரமாக நடந்து கொண்டான்.?’

‘எனக்கு ஆரம்பத்திலிருந்தே கசிப்பின் மணம் பிடிக்கவேயில்லை. கசிப்புடன் வரும் அவனையும் வெறுக்க ஆரம்பித்திருந்தேன். ஆனால் குடித்த பின்னர்தான் அவனுக்கு நான் அதிகமாக தேவையுடையவளாகியிருந்தேன். என்னுடன் பலவந்தமாக உறவு வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். மறுக்கும் போதெல்லாம் அடித்தான்.’

‘பிறகு’

அல்லிராணியின் குரல் இப்போது மெல்லிய நடுக்கம் கொண்டதாய் மாறியிருந்தது.

‘தொடர்ச்சியாக சிலதினங்களில் கசிப்பை வீட்டுக்கு கொண்டுவர ஆரம்பித்து உறவின் போது இடைக்கிடையே குடித்துக்கொண்டான். அவ்வாறு குடிக்கும்போது என்மீது சிதறிய துளிகளை வெறிகொண்டு நாவினால் வழித்தெடுத்துக் குடித்தான். அது அவனுக்கு புதுவித போதையை உருவாக்கியிருக்க வேண்டும். எனவே ஒரு பைத்தியத்தை போல் என்னவெல்லாமோ செய்து என்னை வதைக்கத் தொடங்கினான்.’

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘அவன் புதுவிதமான உறவுமுறைகளையும் கசிப்பின் சுவையினையும் கலந்து அனுபவிக்க பழகினான். அடுத்தகட்டமாக எனது ஆடைகளை பலவந்தமாக பிய்த்தெறிந்து வேண்டுமென்றே முகம் கழுத்து வயிறு என்றெல்லாம் ஒவ்வொரு அங்கமாக கசிப்பால் நனைத்து அதனை உறிஞ்சிக் குடித்தான்.’

எழுதிக்கொண்டிருந்தவள் அதிர்ச்சியுடன் எழுதுவதை நிறுத்திவிட்டு அல்லிராணியைப் பார்த்தாள்.
‘நான் அருவருப்பில் வெந்து தடுமாறுவேன். ஏற்கவும் முடியாமல் தடுக்கவும் திராணியில்லாமல் அவனாக போதை முற்றி என்னை விடுவிக்கும் வரை அசையாமல் மூர்ச்சித்துக் கிடப்பேன். அப்போதெல்லாம் அந்த மணத்தின் குமட்டலையும் அவன் மீதான வெறுப்யையும் அனுசரிப்பதைவிட இறப்பது மேல் என்று மட்டுமே எண்ணிக்கொள்வேன்’

அவர்கள் எதுவுமே பேசவில்லை. அல்லிராணியை மேலே பேசவிட்டார்கள்.

‘ஒருநாள் … அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. கசிப்பை எனது வாயில் கட்டாயப்படுத்தி ஊற்றி என்னிலும் போதையிருக்க வேண்டுமென விரும்பியவனாய் இயங்கிக் கொண்டிருந்தான். அடுத்ததாய் எனது பிறப்புறுப்பில் கசிப்பை ஊற்றி அதனை குடிக்க எத்தனித்தான். நான் கத்தியலறினேன். என்னைமீறி அவனை எத்தித்தள்ள முயற்சித்தேன்’

சற்று இடைவெளிவிட்டு கண்களை தனது கையிலிருந்த துவாயால் துடைத்துக் கொண்டாள். அவ்விடம் நிசப்தமாகியிருந்து.

‘பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு வந்து கதவைத்தட்டி விசாரித்தபோது நான் அவனை உறவு வைத்துக்கொள்ள அழைத்துக் கத்திக் கொண்டிருப்பதாய் அவர்களிடம் பொய் சொன்னான். அவர்கள் காறி உழிழ்ந்துவிட்டு என்னை கெட்ட வார்த்தையால் ஏசியபடியே சென்றார்கள்.’

‘பிறகு’

‘இதிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் யாரிடம் உதவி கேட்பதென தடுமாறி… எப்படியோ யோசித்து இறுதியில் ராதிகா டீச்சரின் உதவியுடன்தான் விவாகரத்து பெறவும் முயற்சித்தேன்.’

‘ராதிகா டீச்சர் யார்?’

‘எங்கள் தோட்டப் பாடசாலையின் அதிபர்’

அவர்கள் ராதிகா டீச்சரின் பெயரையும் குறித்துக் கொண்டார்கள்.

‘விவாகரத்து பெற்ற பின்னரும் அதிகாலையில், இரவுகளில் என்று அவன் உனது வீட்டை தட்டிக் கொண்டிருப்பானாமே அது உண்மையா?’

அவன் வரும்போதெல்லாம் அல்லது கதவை தட்டுவது பற்றி அறியும்போதெல்லாம் கோபமும் பயமும் சேர்ந்ததான உணர்வும் தனது தனிமையும் இறப்பின் நுனிவரை இழுத்து தன்னை அலைகழித்த அந்த உணர்வை அவளால் சொல்லிக்கொள்ள முடியாமலிருந்து.

அதனை நினைக்கும் போதே உடல் நடுங்குவது போலவும் சிலிர்த்தடங்குவது போலவும் அல்லிராணி பதட்டமடைந்திருந்தாள். முகம் வியர்த்திருந்தது.

அவர்கள் மீண்டும் கேட்டார்கள்.

‘அதிகாலையிலும் இரவுகளிலும் உன் வீட்டை தட்டிக் கொண்டிருப்பானாமே அது உண்மையா?’

அவள் ஆமாமென்பதாய் தலையாட்டினாள். அதனைத் தவிர்க்கவே தான் சத்தமாக ரேடியோவை ஒலிக்கவிட்டதாய் கூறினாள்.

அத்தனை நேரமும் அல்லிராணியை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு மேலதிகாரி சட்டென தன் இருக்கையிலிருந்து எழுந்து அவ்விடத்திற்கு வந்தார்.

‘நவத்தன்ன… மெயாவ யவலாதாலா மங் கியன தே கரன்ன’ என்று கட்டளையிடுவதைப் போல சத்தமாகக் கூறி அவள் பேசிக்கொண்டிருப்பதை இடைநிறுத்தினார்.

‘ஊவ மரலா நெமெய்… புச்சலா தாண்ட திப்பே’ என்று மிகுந்த ஆத்திரத்துடன் அவர் சொல்லிக்கொள்வதை அல்லிராணியால் ஊகிக்க முடிந்தது.

அதுவரை எழுதிய வாக்குமூலத்தின் இறுதிப்பகுதியை காட்டி அல்லிராணியை கையொப்பமிடச் சொன்னார்கள். வாப்பலத்திடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அல்லிராணியை அனுப்பலாம் எனப் பேசிக்கொண்டார்கள்.
அல்லிராணி குடிப்பதற்கு தண்ணீர் கேட்டாள். போலிஸ் ஸ்டேசனுக்கு வெளியே ஓரமாய் தெரிந்த குழாயைக் காட்டினார்கள். அவள் குழாயைத் திறந்து கைகளால் ஏந்தியபடி நீரருந்தினாள். முகத்தை தேய்த்துக் கழுவி துவாயால் துடைத்துக்கொண்டு மீண்டும் வந்து அதே இடத்திலேயே அமர்ந்தாள்.

வாப்பலத்திடம் விசாரணை தொடங்கியிருந்தது. அவன் சோர்ந்து போயிருந்தான்.

‘அன்றைய தினம் நீதான் க்ரமொஸ்ஸொன் கிருமிநாசினியை தோட்டத்திலிருந்து பெற்று மற்றைய தொழிலாளர்களுக்கு விநியோகித்திருக்கிறாய். மிகுதியை நீ ஒப்படைக்கவில்லையென தோட்ட நிர்வாகிகள் கூறுவதிலிருந்து உன்மீதான சந்தேகமே அதிகமாக இருக்கிறது. சொல். ஏன் அவனை கொலை செய்தாய்?’

வாப்பலத்திற்கு சிங்களம் தெரியவில்லை. அவன் தமிழிலேயே பதிலளித்தான். கேள்விகளையும் பதில்களையும் தமிழிலிலும் சிங்களத்திலுமாய் மொழிபெயர்க்க இருமொழிகளிலும் தனக்குப் பரிச்சயம் உண்டென காட்டிக்கொண்ட ஒரு போலீஸ் ஓரளவு அர்த்தம்பட மொழிப்பெயர்த்துக் கொண்டிருந்தான்.

‘அன்னிக்கு மிச்சப்பட்ட மருந்து கேன் காணாம போயிருச்சுங்க. அத அன்னைக்கே கங்காணிகிட்ட சொல்லிட்டேனுங்க’ என்றான்.

‘உன்னுடன் அன்று வேறு யார் யாரெல்லாம் வேலை செய்தார்கள்?’

வாப்பலம் நன்கு யோசித்து அனறைய தினத்தை நினைவிற்கு கொண்டு வந்தான்.

அன்றைய தினம் பக்கத்து மலையில் வேலை செய்த அல்லிராணி சம்பந்தமே இல்லாமல் அந்தப் பாதையில் நடந்து சென்றதை ஞாபகப்படுத்த முடிந்தது. ஆனால் அதனைச் சொல்ல அவனுக்கு விருப்பமிருக்கவில்லை. அவள் வேறு காரணத்திற்காகவும் வந்திருக்க முடியுமெனத் தோன்றியதுடன் அவளைப் பார்க்கவும் மிகப் பரிதாபமாகத் தெரிந்தாள்.

அதனைத் தவிர்த்துவிட்டு அவன் யோசித்தான்.

குறிப்பிட்ட அத்தினத்தன்று வேலையிலிருந்த ஆண்களின் பெயர்களையெல்லாம் வரிசையாகச் சொன்னான்.

தொடர்ச்சியாக வந்திருந்த வேறு சிலரிடமும் விசாரணைகள் நடந்தன. சிறிது நேரத்திற்குள் அவர்கள் அனைவரையும் போகும்படி சொன்னார்கள்.

அல்லிராணி மௌனமாக அவ்விடத்திலிருந்து எழுந்தாள். தன்னை விடுவித்து அனுப்பிவிடும்படி சொன்ன அதிகாரியை ஒரு தடவை நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டாள்.

எப்போதோ இறந்து போயிருந்த தன் தந்தையின் சாயல் அவரது முகத்தில் தென்படுகிறதாவென யோசித்தவாறே அங்கிருந்து வெளியேறினாள்.
………………………

தமுசே எய் மாஹத்தியாவ டிவோஸ் கறே?’ – நீ ஏன் உன் கணவனை விவாகரத்துச் செய்தாய்?
கியப்பங் பெல்லி… எத்த கியப்பங்’ – சொல்லு நாயே … உண்மையை சொல்லு
நவத்தன்ன… மெயாவ யவலாதாலா மங் கியன தே கரன்ன’ – நிறுத்துங்கள். இவளை அனுப்பிவிட்டு நான் சொல்வதை செய்யுங்கள்
ஊவ மரலா நெமெய்… புச்சலா தாண்ட திப்பே’ – அவனை கொன்றல்ல… எரித்துப் போட்டிருக்க வேண்டும்.

***

பிரமிளா பிரதீபன்

இலங்கையில் உள்ள வத்தளையைச் சேர்ந்தவர். தற்பொழுது ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
தொடர்புக்கு: [email protected]

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular