Thursday, June 13, 2024
Homesliderஅரண்

அரண்

அரசன்

அரண்

“என்ன பெரியவரே, இப்ப ஒடம்பு எப்படி இருக்கு?” நலம் விசாரித்துக்கொண்டே சைக்கிளை ஓரமாக  நிறுத்திவிட்டு வந்தார் பெருமாள்.

“அட, வாய்யா பெருமாளு வா, ஒடம்பு இப்ப கொஞ்சம் தேவலாம்யா. என்ன, எந்திரிச்சி முந்தி மாதிரி  கொல்லக்காட்டுக்கு போயிட்டு வரமுடியல,,, அதானவொழிஞ்சி இப்ப தேவுதலயாத்தான் இருக்கு” என்று கூறிக்கொண்டே வாயிலிருந்த சுருட்டை எடுத்து நாற்காலியின் கீழே நசுக்கினார் பழனிமாணிக்கம். புகை வாயிலும், மூக்கிலுமாக கசிந்தது.

“படுக்கையில கெடந்து எந்திரிச்சி ஒக்காந்த ஒடனே பொகையான பத்த வச்சிட்டிங்க போலையே, இத கொஞ்ச நாளைக்கி வெலக்கி வச்சாத்தான் என்னவாம்?”

“நீ ஒரு ஆளய்யா, பத்து, பதினஞ்சி நாளா ஒடம்ப போட்டு ஒரு பொரட்டு பொரட்டி எடுத்துடுச்சி இந்த காச்ச. வாயெல்லாம் ஒரே கசப்பா கசந்து போயி கெடக்கு, அதப்போக்க இன்னைக்கித்தான் பத்த வச்சி ரெண்டு இழுப்பு இழுத்தேன், அது ஒனக்கு பொறுக்கலையா?”

“ரெண்டு நாளு காச்சலே மனுசுன ஒரு தொவட்டு தொவட்டி எடுத்துடும், நீங்க என்னடான்னா இத்தன நாளு படுக்கையில கெடந்துருக்கீங்க, கேட்கவா வேணும்?, கறிக்கஞ்சி அடிச்சி குடிச்சீங்கன்னா இந்த வாக்கசப்பு எல்லாம் போயிரும்”

“வூட்லயும் அதத்தான் சொல்லிக்கிட்டு இருக்கா பெருமாளு”

“சின்னவருகிட்ட ஒரு வார்த்த சொன்னீங்கன்னா அவரு திருச்சி, மெட்ராஸ்ன்னு இங்க எங்கையாவது கூட்டிக்கிட்டு போயி, பெரிய ஆஸ்பித்திரியா பாத்து காட்டி கொண்டாந்து வுடுவாரு. நீங்க என்னடான்னா இந்த செந்துற, அரியலூரையே புடிச்சி தொங்கிக்கிட்டு இருக்கீக, என்னக்கு என்னமோ இதுக்கு மேற்பட்டு இங்க காட்டுறது சரியா வருமுன்னு தோணல”

“அவனும் இதத்தாம்யா சொல்றான். நாந்தான் வெறும் காச்சலுக்கு போயி எதுக்கு அம்புட்டு தூரம் அலையணும், ரொம்ப முடியலன்னா காட்டிக்கலாமுன்னு சொல்லி வச்சிருக்கேன். இந்த எழவெடுத்த எலக்சன் ஆரம்பிச்சதுல இருந்து நிம்மதியா குந்தி ஒரு வாய் சோறு திங்கமுடியுதா? ராத்திரி, பகலுன்னு பாக்காம சுத்திக்கிட்டே இருக்கான், இந்த நேரத்துல நாமளும், அவன சின்னப்படுத்தக் கூடாதுன்னு பாக்குறேன்”

“சின்னவரைத்தான் நம்ம வட்டத்துக்கு பறக்கும்படை ஆபிசரா போட்டிருக்காங்கன்னு கேள்விப்பட்டேன், ஒரு எடத்துல ஒக்கார முடியாம, ரோடு ரோடா சுத்துற நச்சல் புடிச்ச வேலல்ல அது”

“எவன் எங்க காச எப்படி மறச்சி வச்சி, எந்த நேரத்துல எப்படி வந்து கொடுக்குறான்னு அவனுங்க கோவணத்த புடிச்சிக்கிட்டேவா சுத்த முடியும், என்னதான் கண்கொத்தி பாம்பா திரிஞ்சாலும் எப்படியும் மறச்சிப்புட்டு போயி கச்சிதமா காச கொடுத்துடுறானுவோ, நம்ம சனங்களும் வாங்கிப் பழகிட்டுதுங்க, எப்படி தடுத்து நிறுத்த முடியும்? இந்த லட்சணத்துல கூட வேலப்பாக்குற சல்லிப்பயளுவோ வேற காச வாங்கிக்கிட்டு கண்ண சாச்சிக்கிட்டு வுட்றானுவோளாம், எல்லாத்தையும் போட்டு இவந்தலையில உருட்டுரானுங்கன்னு ரொம்ப நொந்து போயி காலையில சொல்லிக்கிட்டு இருந்தான், போதாதக்கு மருமவப்புள்ளைக்கி கும்பகோணத்துக்கு வேல மாத்தலாம், பேரன் திருச்சி ஆஸ்டல்ல கெடக்குறான், பேருதான் அரசாங்க உத்தியோகமே தவுர இப்பிடி தெசைக்கி ஒருத்தரா கெடந்து அல்லல் படுதுங்க” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் பழனிமாணிக்கம். 

“கொடுமைதான் பெரியவரே, தெசைக்கி ஒண்ணா கெடந்தா சங்கட்டந்தான், இந்த எலக்சன் முடிஞ்சிடுச்சின்னா எல்லாம் சரியாவும், எதையும் மனசுல போட்டு கொழப்பிக்காம தெம்பா இருங்க, எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமலா போயிரும்” என்று தேறுதல் கூறியவாறு பழனிமாணிக்கத்தின் காலடிக்கு அருகில் கிடந்த பட்ட மரத்தில் அமர்ந்து வெற்றிலை பொட்டலத்தைப் பிரித்தார் பெருமாள்.

நாள்முழுதும் காய்ந்த சித்திரை வெயிலுக்கு, புழுதியைக் கிளப்பிச்சென்ற மேற்கத்தி அந்திக்காற்று சற்று இதமாக இருந்தது, பழனிமாணிக்கத்திற்கும் அந்த நேரத்திற்கு அது ஆசுவாசமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

“சாமான் கொண்டாந்திருக்கியா பெருமாளு”

“சாமான்லாம் கொண்டாந்திருக்கேன், இப்பத்தானே எந்திரிச்சி ஒக்காந்திருக்கீங்க, அதுக்குள்ளே என்ன அவசரம், ஒரு ரெண்டு மூணு நாளு போவட்டுமுன்னு பாக்குறேன்”

“இம்புட்டு நாளு படுக்கையில கெடந்ததுல, சவரம் கூட பண்ணிக்காம மொகத்தகண்ணாடியில பாக்க சகிக்கல பெருமாளு, இந்த தாடி மசுரையாவது மழிச்சிவுடுய்யா” என்று தாவாங்கட்டையைச் சொரிந்தார்.

“சரிங்க பெரியவரே” என்று எழுந்து போய் கிண்ணத்தில் நீரை அள்ளிக்கொண்டு வந்து, தாடியை மழித்து, மீசையை ஒதுக்கி விட்டதும் கம்பீரக்களை திரும்பியிருந்தது.

“எப்படியிருக்கான் ஓம்மவன், ஒழுங்கா கடைக்கி போறானா? இல்ல பழைய குருடி, கதவ தொறடிங்குற கத தானா?” என்று கேட்டபடி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்தாள் பழனிமாணிக்கத்தின் மனைவி.

“என்னத்த ஆயி சொல்றது, அதே பழங்கத தான், ரெண்டு நாளு தொறந்தா, நாளு நாளைக்கி மூடிப்புட்டு குடி, கும்மாளமுன்னு திரியுறான், எம்புட்டு சொன்னாலும் மண்டையில ஏற மாட்டேங்குது, எல்லாம் நான் வாங்கி வந்த பொறப்பு அப்படி” என்கையில் பெருமாளின் முகமும், குரலும் அவரறியாமலே உள்ளொடுங்கியிருந்தது.

“கவலப்படாத பெருமாளு, எல்லாம் சரியாப்போவும், ஒடம்புல சத்து கொறஞ்சா தன்னாலே ஒரு எடத்துல குந்திதானே ஆவணும், எம்புட்டுதான் பம்பரம் சுத்திக்கிட்டே இருக்கமுடியும், தலதட்டி வுழுந்து தானே ஆவணும், ஒருநா எப்பிடியும் வழிக்கு வந்துருவான், அத நீயும் பாக்கத்தான் போற” என்று தன் அனுபவமொழியில் ஆற்றுப்படுத்தினாள் கிழவி.

“கொடுக்கவே முடியாதுன்னு சொன்னவங்கள எல்லாரையும் சரிக்கட்டி பேரூராட்சி கட்டிடத்துல ஒரு கடைய புடிச்சி கொடுத்ததோடு, கடைக்கு தேவையான சாமானையெல்லாம் வாங்கி கொடுத்தாரு நம்ம அய்யா, அவருக்காவது மரியாத கொடுத்து ஒழுங்கா பொழப்ப பாத்துக்கிட்டு இருப்பான்னு நெனச்சேன், எதுக்கும் மசியாம திரிஞ்சா நான் என்னத்த தான் செய்யுறது”

“நீ ஒரு ஆளுய்யா, எப்பவோ செஞ்சது, இன்னும் அதயே சொல்லிக்கிட்டு திரியுற” என்ற பழனிமாணிக்கத்திடம்,

“இல்ல பெரியவரே, நீங்க செஞ்சத மறந்துட்டேன்னா நான் மனுசனே கெடையாது, ஒடம்புல உசுரு உள்ளமட்டும் இத சொல்லிக்கிட்டு தான் இருப்பேன்” என்று தழுதழுத்தார் பெருமாள்.

“இப்பத்தானே சொன்னேன் பெருமாளு, ஒனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன், பழச நெனச்சி இன்னும் பொலம்பிக்கிட்டு இருக்காம, பயல சரிக்கட்டி ஒழுங்கா கடையில குந்தி பொழப்ப பாக்க சொல்லு, வெளியூராளு யாரோ கடை தொறந்துருக்கான் போலையே” என்று பேச்சின் திசையை மடை மாற்ற,

“ஆமாங்க பெரியவரே, எம்மவன் பொழைக்குற இலட்சணத்த பாத்துட்டு, பெண்ணாடத்துல இருந்து ஒருத்தர் வந்து இங்க கடை தொறந்துருக்காராம். ஆளும், தொழிலும் சுத்தமாம், கூட்டம் அல மோதுதுன்னா பாத்துக்குங்க”…

“நாம சரியா இருந்தோம்னா, எத்தினி போட்டி வந்தாலும் நம்மள அசச்சிக்க முடியாது, ஓம்மவனுக்கு போறாத நேரமோ என்னவோ?, இப்படி திரியுறான், சரி இரு பெருமாளு குடிக்க எதுனா கொண்டு வரேன்” என்று கூறிவிட்டு கிழவி வீட்டிற்குள் சென்றாள்.

“ஓம்மவன நாளைக்கி ஒரு எட்டு வந்து என்ன பாக்கச்சொல்லு, நானும் எம்பங்குக்கு புத்திமதி சொல்லிப்பாக்குறேன், கேட்டுப் பொழச்சிக்கிட்டா நல்லது அப்புறம் அவம்பாடு” என்று, கீழே விழுந்திருந்த காய்ந்த பூவரசம் பூவொன்றை கையில் எடுத்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பெருமாளின் சிந்தனையைக் கலைத்தார் பழனிமாணிக்கம்.

“சரிங்க பெரியவரே, வர சொல்றேன்… ஏதோ மருமக கொஞ்சம் கருத்தா இருக்குறதுனால பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு. இந்தப்பய குடிச்சிட்டு வந்தா, அந்தப்புள்ளைய போட்டு அடிச்சிப்புடுறான், அதுவும் எத்தன நாளைக்கித்தான் தாங்கும், நான் எங்கப்பன் வூட்டுக்கே போயிடுறேன்னு ஒத்தக்காலுல நிக்குது… இந்தப் பாழுங்குடியால எங்குடும்பம் மாதிரி எத்தன குடும்பம் தெருவுல நிக்குதோ? தெரியலையே”

“நீயா பெருமாளு இப்படி பேசுற, ஓங்காலத்துல எப்படி இருந்த?, அப்புறம் எல்லாஞ்சரியாகி புரிஞ்சிக்கிட்டு பொழப்ப பாக்கலையா, அந்த மாதிரி தான் ஒம்மவனும் வாட்டத்துக்கு வருவான், ரொம்ப போட்டு புழுங்காதய்யா”

“தடுக்கி வுழுந்த என்னைய, நீங்க தூக்கி வுட்டீங்க, கெட்டியா புடிச்சிக்கிட்டேன், ஆனா இவன ஒக்கார வச்சி பாடமா படிச்சாலும் மண்டைக்குள்ள எறங்க மாட்டேங்குதே… எதோ எம்மூச்சு இருக்குறவரைக்கும் நான் பாத்துக்குவேன், அதுக்குப் பொறவு ரெண்டு பொட்டப்புள்ளைகள வச்சிக்கிட்டு மருமவப்புள்ள இவங்கிட்ட என்ன பாடுபடுமோன்னு நெனச்சாலே சோறு தொண்டக்குழிக்குள்ள எறங்க மாட்டேங்குது பெரியவரே”

“ரொம்ப போட்டு யோசிச்சி மனசையும், ஒடம்பையும் கெடுத்துக்காத பெருமாளு, நாங்கல்லாம் இருக்கோம் அப்பிடி சும்மா வுட்ற மாட்டோம், அவன நாளைக்கி வந்து என்னைய பாக்கச் சொல்லு, நான் பேசி பாக்குறேன், சரி… இரு சாப்புட்டு போலாம்”

“இல்லைங்க பெரியவரே, மத்தியான சோத்தையே நாலு மணிக்குத்தான் சாப்புட்டேன், இப்ப ஆயி கொடுத்த மோர் வேற குடிச்சேனா வவுறு மந்துன்னு இருக்கு, சோறு இப்ப எறங்காது, பயல கூட்டிக்கிட்டு நாளைக்கி நானும் கூட வரேன்” என்ற பெருமாளின் குரலிலும் மோரின் குளுமை கொஞ்சம் இறங்கியிருந்தது.

“அப்ப சரி பெருமாளு, நாளைக்கி பாப்போம், ரொம்ப நேரம் குந்தியே இருந்தது அசந்து போயி வருது, செத்த நேரம் படுக்குறேன்” என்று எழுந்து சென்ற பெரியவரின் நடையும், உடலும் ரொம்பவே தளர்ந்து போயிருந்தாலும் கம்பீரத்தில் குறைவில்லை.   

மோர் சொம்பை வாங்க வந்த கிழவியிடம், “படுக்கையில கெடந்தவர் மாதிரி தெரியல, அய்யா மொகம் ஏகத்துக்கும் தெளிச்சி கொடுத்திருக்கு.ஆட்டுக்காலு, கோழி ஏதும் கெடச்சா அடிச்சி சாறு வச்சி கொடுத்து கவுனிச்சி பாத்துகிடுங்க,கொஞ்சம் தெம்ப கூட்டும், அப்போ நான் வாறன் ஆயி” என்றவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு கிளம்பினார்.

அக்கினி நட்சத்திரத்தின் வெக்கையை உணர்த்தும் அந்திநேரத்து வாடைக்காற்று முகத்திலறைய, சைக்கிளின் சக்கரம் மண்சாலையில் புதைந்து மெல்லச்சுழன்றது.

****

முன்னூறு தலைக்கட்டுகள் கொண்ட அவ்வூரின் பொது நாவிதர் பெருமாள். பழனிமாணிக்கத்தை விட மூன்று வயது மூத்தவர். நாற்பது முடியுமுன்னரே மொத்த முடியும் கொட்டி தலை வழுவழுவென்றாகிவிட்டது. உயரமும் ஐந்து அடிக்கும் குறைவு. நீலவண்ண கால்சட்டையும், அதன்மேல் சுற்றியிருக்கும் காவி வேட்டியும், கிளிப்பச்சை வண்ணத்தில் இடைவாரும் தான் பெருமாளின் அடையாளங்கள், இவை தவிர மேற்சட்டை அணிந்திருந்தால் அன்று தொலைதூரப்பயணம் போகிறார் என்று அவர் கூறாமலே அறிந்து கொள்ளலாம், மற்றபடி சட்டையணிந்து வழக்கமில்லை. பதினாறு வயதில் கையில் கத்தியைப் பிடித்தவருக்கு இந்த எழுபது வயதிலும் ஓய்வில்லை. சதை வற்றி எலும்பும், தோலுமாய் உடல் நலிந்துவிட்டாலும் கரம் நடுங்காமல் சவரம் செய்வதில் கில்லாடி.

பெருமாளுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தாலும் நிலைத்தது என்னவோ கடைக்குட்டி மணி மட்டுந்தான், மணிக்கு மூன்று வயதிருக்கையில் குடும்பத்தகராறில் முன்கோபியான பெருமாளின் மனைவி ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொள்ள, தனிக்கட்டையாகிப் போனார். ஒரே பையன் என்றும், தாய் இல்லாத காரணத்தாலும், மணிக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்த பலனை இந்த வயதிலும் அறுவடை பண்ணிக்கொண்டு இருக்கிறார்.

ஊரிலுள்ள பெரும்பாலானவர்களின் அந்தரங்க ரகசியங்களை அறிந்து வைத்திருந்தாலும், அதைப்பற்றி இதுநாள் வரை யாரிடமும் எள்ளளவு கூட கசியவிட்டதில்லை. யாராவது கூப்பிட்டு வாயைக் கிளறினாலும், அவர்களைப் பேசவிட்டுக் கேட்பாரே தவிர, இவராக எதையும் தொடங்குவதுமில்லை, தொடுவதுமில்லை. இத்தனை வருட காலவெளியில் இரண்டு தலைமுறைகளைக் கண்ட அனுபவசாலி. நாற்பதைக் கடந்தவர்களை ‘பெரியவரே’ என்றும், நாற்பதுக்குக் கீழுள்ளவர்களை ‘சின்னவரே’ என்றும் விளிப்பது பெருமாளின் வழக்கம். சிறுபிள்ளைகள் பெயரைச்சொல்லி அழைத்தாலும் கூட, நின்று “என்ன சின்னவரே” என்று சிரித்த முகத்தோடு கேட்கையில், அவரின் முகத்தில் ஒரு அழகு மிளிரும்.  

****

மறுநாள் காலையில் கருப்பஞ்சருகுகளை தூக்க முடியாமல் தூக்கிச்சுமந்து சென்று கொண்டிருந்த பெருமாளை நிறுத்தி, “லேய் பெருமாளு ஒன்னைய எங்கையெல்லாம் தேடுறது, பெரியவரு பழனிமாணிக்கம் போயி சேந்துட்டாருடா, விடிகாலையில தூக்கத்துலயே உசுரு பிரிஞ்சிருச்சாம், நான் பூமாலைக் கட்ட மாத்தூருக்கு தான் போறேன், ஒன்னைய வெரசா வரச் சொல்ல சொன்னாங்க.  ஓம்வூட்டுக்கு போனேன், நீ எங்கையோ வெளிய போயிருக்கிறதா ஓம் மருமவ சொல்லுச்சி. நல்லவேள ஒன்ன வழியிலையே பாத்துட்டேன், சீக்கிரம் வந்து சேரு என்ன” என்று மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே நிறுத்திய வண்டியைத் திருகிக்கொண்டு போனான் கொளஞ்சி.

உறைந்து நின்ற பெருமாளுக்கு சற்று நேரத்தில் எல்லாம் புரிந்துவிட, ‘எந்த நேரத்துல அப்படியொரு வார்த்தைய சொல்லிட்டு வந்தேனோ?, சொன்ன மாதிரியே நம்ம நாறவாய் முகூர்த்தம் பலிச்சிருச்சே’ என்று ஓட்டமும், நடையுமாக விரைந்த பெருமாள், வீட்டிற்கு போனதும் மணியைத் தேடினார். காணவில்லை. பெரியவர் இறந்த செய்தியை மருமகளிடம் சொல்லி, அவன் வந்தவுடன் அங்கு அனுப்புமாறு கூறிவிட்டு அவசர அவசரமாக வந்து சைக்கிளை எடுத்தார், பின் வீல் மெத்தென்று இருந்தது. நேற்று இரவு கல்லடியோ, கருவேல முள்ளோ இதன் சீவனை பிடுங்கியிருக்க வேண்டும். “இந்த எழவுக்கு நேரங்காலம் தெரியாது” என்ற முனகலுடன் சைக்கிளை சுவற்றோரம் சாய்த்துவிட்டு நேரே குடிக்காட்டிற்கு நடக்கத் துவங்கினார் பெருமாள்.

நினைவுகள் துளித்துளியாய் பெருக்கெடுத்து சமுத்திரமாய் உருமாறி பேரலைகளாய் திமிறிக் கொண்டிருந்தன.வெடித்தெழ வேண்டி சிறு திறப்பிற்கான புள்ளியை அது தேடிக்கொண்டிருந்தது. தங்களுக்குள்ளான  சித்திரத்தின் தொடக்கப்புள்ளியை தேடித்தேடி தோற்று, மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டே நடந்தார் பெருமாள். நடைதான் பழனிமாணிக்கத்தை நோக்கி இருந்ததே தவிர, சிந்தனை வேறெங்கோ சீறிக்கொண்டிருந்தது. கடைசி வரையிலும் இருவரது இணைப்பிற்கான துவக்கப்புள்ளி மட்டும் அகப்படவே இல்லை. அகப்படாது என்று தெரிந்தும் பெருமாளும் தேடலை நிறுத்தவில்லை.

மொத்த ஊரும் நம்மை அடித்துத் துரத்த முயலுகையில், இவர் மட்டும் ஏன் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்?, எல்லோரும் தெருநாயை விரட்டுவது போன்று விரட்டுகையில், இவருக்கு மட்டும் எப்படி அதற்கு  உணவளிக்க தோன்றியிருக்க வேண்டும்? ஊரே இறுகிப்போன பாறை போன்று இருக்கையில், இவருக்குள் மட்டும் எப்படி நீர்ச்சொட்டு கசிந்தது?, அந்தச்சொட்டின் ஒரு பகுதியை என்மேலும் ஏன் விழச் செய்திருக்க வேண்டும்? காட்டுமுயலைக் கண்ட வேட்டை நாயைப்போன்று விரட்டுகையில், இந்த மனுசனுக்கு மட்டும் எப்படிக்  கருணை சுரந்தது? என்றெல்லாம் தன்னைக் காத்த அரணுக்கான ஆரம்பப் புள்ளியை தேடித் தேடி ஓய்ந்து போனார் பெருமாள். 

இதோ ஊர் நெருங்கிவிட்டது, இப்பவாது ஒருதடவை வாய்விட்டு அழுதுவிடலாமா? அங்கு சென்று அழக்கூடிய வயதுமில்லை, அழுகைக்கு வயது ஒரு தடையா? வந்தால் அழுதுவிடத்தானே வேண்டும்? ஆணின் அழுகையை கோழைத்தனமாக அணுகும் இச்சமூகம் பெண்களை மட்டும் ஏன் அழவிட்டு வேடிக்கை பார்க்கிறது? தடையின்றி வயது வித்தியாசம் பாராமல் அவர்களால் சுதந்திரமாக எல்லா சூழல்களிலும் அழுதுவிட முடிகிறதே? இது என்ன முரண்? என்கிற தர்க்க சிந்தனையோடு நடந்தவருக்கு காலைக்கஞ்சியை குடிக்காமல் வந்தது வேறு பசி வயிற்றைக் கிள்ள, தூரத்தில் கொட்டுச்சத்தம் காதில் நன்றாக விழுந்தது. எங்கே அந்த இணைப்புப் புள்ளியைக் காணோமே? ஒருவழியாக பழைய சித்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் மீட்டுக்கொண்டு வர முடிந்தது பெருமாளால்.  

ஐந்து தெருக்களைக்கொண்ட ஊரில், இரண்டு தெரு பங்காளிகளைக் கொண்ட வலுவான குடும்பம். சொத்துக்கும் பஞ்சமில்லை, நஞ்சை, புஞ்சை என்று முப்பது காணிகளுக்கும் மேல் கொண்டிருந்தாலும் யாவரிடமும் எளிமையாக பழகும் குணம் கொண்டவர் பழனிமாணிக்கம்.

ஊர் நிகழ்வு ஒன்றில், பழனிமாணிக்கமும், பெருமாளும் பேசிக்கொண்டு இருப்பதைக்கண்ட அவரின் மச்சான் ஒருத்தன்,

“என்னங்க மாமா முடி வெட்றவனையெல்லாம் சரிக்கு சமானமா ஒக்கார வச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க” என்கிற அந்தக்கேள்வியின் உள்ளர்த்தத்தை புரிந்து கொண்ட பழனிமாணிக்கம்,

“பெருமாளு கையில இருக்குற கத்தியும், அவன் செய்யுற தொழிலும் தான் ஓங்கண்ணுக்கு தெரியுது, அதான் அவன எளப்பமா பாக்குற. எங்கண்ணுக்கு மொதல்ல பெருமாளுங்குற மனுசனா தெரியுறான், அப்புறந்தான் அவனோட தொழிலு. நமக்கு இருக்குற அதே சூடும், சொரணையும் தான அவனுக்கும் இருக்கும், அவஞ்செய்யுற சோலிய ஒரே ஒருநா ஒன்னால செய்ய முடியுமா சொல்லு?, ஓடமும் ஒருநாள் வண்டியில ஏறும் மாப்ள” என்று அவனுக்குப் பதிலுரைக்கையில், பெருமாளுக்கு கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது.

அதன்பிறகொரு ஊர்ச் சாவில் சிதைக்கு தீமூட்டிவிட்டு, பெய்த மழைக்கு இதமாக சாராயம் குடித்துக் கொண்டிருந்த பெருமாள், பேச்சுவாக்கில் வழக்கத்தை விடவும், கூடுதலாக இரண்டு கிளாஸ் உள்ளே ஏற்றிவிட்டார். சாமம் கடந்திருந்தது. போதை கண்களை மறைக்க வழியை மறந்தவர், சாராயக் கொட்டகைக்கு பின்புறம் மரக்கட்டைகள் அடுக்கியிருந்த இடத்தில் படுத்துவிட்டார். மறுநாள் காலையில் காடணைத்துவிட்டு பெருமாளுக்காக காத்திருந்தனர் சாவு வீட்டாட்கள். தேடி ஆளனுப்பியும் கிடைத்தபாடில்லை. கோபத்தின் உச்சத்தில் தகித்துக் கொண்டிருந்தார்கள்.

போதை தெளிந்து பெருமாள் திரும்பி வருகையில் மதியம் மணி இரண்டு. “ஏண்டா மயிரான், இப்ப மணி என்னடா? இதான் வர நேரமா? ஒனக்காக எம்புட்டு நேரமாடா காத்திருக்கிறது?, எப்படா பாலு தெளிச்சி, எப்ப சாம்பல கரைச்சி, எப்போ வெரதம் பண்றது? இந்த லட்சண மயிருல பால் தெளி சாமான வாங்கிட்டு வந்துடுறேன்னு காச வேற வாங்கிட்டு போயிட்ட… இது நீ பொழைக்கிற பொழப்புக்கு நல்லதில்ல பாத்துக்கோ” என்று ஒவ்வொருவரும் கூப்பாடு போட, அப்போதும் “வுடுங்கப்பா, வுடுங்கப்பா.. மொதல்ல ஆவ வேண்டியத பாருங்க, அப்புறம் பேசிக்கலாம்” என்று ஊராரை ஆசுவாசப்படுத்தினார் பழனிமாணிக்கம்.

“அப்படி என்ன சினேகிதப் பாசமோ, இவனுக்கு ஒண்ணுன்னா கழுகுக்கு மூக்குல வேர்த்தது மாதிரி இந்த மனுசன் முன்ன வந்து தலைய கொடுக்குறதே பொழப்பா போச்சி” என்று உள்ளுக்குள் சிலர் பொறுமினாலும், யாரும் துணிந்து வாய்விட்டுப் பேசியதில்லை.

இன்ன மாதிரி முடி வெட்டிவிட வேண்டும் என்று சொல்லுகையில் கூர்ந்து கேட்டவாறு, “சரிங்கய்யா.. சரிங்கய்யா, அப்படியே செஞ்சிரலாம்” என்று தலையாட்டிக் கொள்வார். உண்மையில் பெருமாளுக்கு தெரிந்தது இரண்டே வகை வெட்டு தான். ஒன்று சட்டியை கவிழ்த்தது போன்று கிராப்பு; மற்றொன்று மொத்தமாக வழித்தெடுப்பது. இந்த விசயம் புரிந்தபின் இளவட்டங்கள் யாரும் பெருமாளிடம் தலையைக் கொடுப்பதில்லை. டவுணுக்குள் சென்று திருத்திக்கொண்டு வந்து ஊரிலுள்ள இளசுகளை வட்டமடிக்கும். ஊர்ப்பெருசுகளும், பொடிசுகளுக்கும் தான் இவரின் கத்தி. அப்படித்தான் ஊரிலுள்ள பொடியன் ஒருவனுக்கு வெட்டிக்கொண்டிருக்கையில், பொடியன் தலையை ஒரு நிலையில் வைக்காமல் ஆட்டிக்கொண்டே இருக்க, ஆடும் தலையை நிறுத்தி வைத்துவிட்டு முடியை வெட்ட ஆரம்பித்தார். மீண்டும் தலை துவண்டது. பெரியவர்களுக்கே கத்திரிச்சத்தத்தை காதுக்கருகில் கேட்டால் கண்ணை இழுத்துக்கொண்டு செல்லுகையில் சிறுசுகளுக்கு கேட்கவா வேண்டும்?, பொடியன் மறுபடியும் தூக்கத்தில் சொக்கி விழ, நிறைபோதை கிறுகிறுப்பிலிருந்து பெருமாள் பொறுமையிழந்து, “சொல்லிக்கிட்டே இருக்கேன், கேக்காம அப்படி என்ன தூக்கம் வேண்டி கெடக்கு” என்று கத்திரியினால் தொடையில் ஒரு குத்து குத்திவிட்டார். நல்லவேளை வலுவான குத்து இல்லையென்றாலும் கூர்முனைப்பட்டு பையனின் தொடையிலிருந்து ரத்தம் கசியத் துவங்கிவிட்டது. பொடியன் கத்திக் கூச்சலிட, சுற்றி இருந்தவர்கள் திரண்டு பெருமாளை அடித்து, நொறுக்கி, “எந்நேரமும் போதையில திரியுறவனுக்கு எதுக்கு இந்த தொழில்… இனி இவன் வேற எங்கையும் தொழில் செய்ய கூடாது”ன்னு சொல்லி கையை உடைக்கப்போனவர்களை அமைதிப்படுத்த வந்த பழனிமானிக்கத்திடம்,

“எல்லாம் நீங்க கொடுக்குற துணிச்சல்ல தான் இவன் இந்தாட்டம் போடுறான், இந்த தடவ நீங்க இதுல தலையிடாதிங்க மாமா, நாங்க என்ன செய்யணுமோ செஞ்சுக்குறோம்… எத்தினியோ விசயத்துல பாத்துட்டோம், எம்புட்டு தடவ சொன்னாலும் குடியே கதின்னு கெடந்தா என்ன அர்த்தம், முன்ன மாதிரி தொழிலுக்கும் சரியா வரதுமில்ல, நாளு கெழமன்னா வரும்படிக்கு மட்டும் கரெக்டா வந்துடுறான், தொடையுல பட்டது, கொஞ்சம் பெசகி படாத எடத்துல பட்டுருந்தா எம்புள்ள உசுருல்ல போயிருக்கும், இவன் சென்மத்துக்கும் கத்திய தொடாதமாதிரி செஞ்சாத்தான் இவனுக்குலாம் புத்தில ஒறைக்கும்” என்று ஆளாளுக்கு எகிறிய சனங்களிடம்,

“இந்த ஒரு தடவ மட்டும் எனக்காக அவன, மன்னிச்சி வுடுங்க, இனிமே இப்பிடி நடக்காம நான் பாத்துக்குறேன், இதுக்கு மேல அவன் குடிச்சிட்டு வர மாட்டான், மீறி வந்தான்னா அவங்கைய நானே முறிச்சி வுடுறேன், அதுக்கு நான் பொறுப்பு” என்று தன்மையாகப் பேசி சமாதானப்படுத்தினார்.

“ஒங்க வார்த்தைய நம்பித்தான் இந்தத் தடவ சும்மா வுடுறோம். இதான் கடசியா இருக்கணும், அவங்கிட்ட சொல்லி வையுங்க” என்று சொல்லிக்கலைந்தது ஊர்சனம்.

ஊரார் அடித்த அடியில் கண், வாயில் இரத்தம் ஒழுக நின்று கொண்டிருந்தவரின் முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், “ஊர்சனம் சொன்னது காதுல வுழுந்துருக்கும்னு நெனைக்கிறேன், இதுல தனியா சொல்றதுக்கு எதுவுமில்ல, புரிஞ்சி நடந்துக்கிட்டா சரி” என்ற பழனிமாணிக்கம் அதற்குமேல் அங்க நிற்க விரும்பாமல் நடையைக் கட்டினார். அன்று கலைந்த போதை தான். அதன்பிறகு குடி பற்றிய நினைவு கூட வரவில்லை பெருமாளுக்கு.

***

கம்பீரமான உடற்கட்டு, சலித்த கோதுமை மாவு நிறம், முறுக்கேறிய மீசை, நரை காணாமல் தளர்ந்த வயதிலும் மிடுக்கென்று தோற்றத்தில் கொஞ்சமும் குறையாமல் வெள்ளைவேட்டி போர்த்தப்பட்டு பந்தலுக்கு மத்தியில் கிடத்தப்பட்டிருந்த பெரியவரின் உடலை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்த பெருமாளுக்கு, முகம், நேற்றை விட இன்று கூடுதல் பொலிவாக இருப்பதுபோல் தோன்றியது. கூட்டத்தில் கிழவியின் ஒப்பாரிச்சத்தம் மட்டும் தனித்துக் கேட்டது.

“என்னடா பெருமாளு இதான் வர நேரமா? போயி ஆவ வேண்டிய சோலிய பாரு.. சாயந்திரத்துக்குள்ள பொணத்த எடுக்கணும்” என்று கவனத்தைக் கலைத்தது சிவலிங்கத்தின் கரகரக் குரல்.

பதில் எதுவும் பேசாமல், பந்தலை விட்டு வெளியே வந்தார் பெருமாள். வழமையாய் சுட்டெரிக்கும் காலை வெயில் இன்று கூடுதல் அனலைத் தகித்தது..

வெளியூர், உள்ளூர் சனம் என்று பந்தலுக்குக் கீழ் போட்டிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் நிரம்பியிருந்தது. பறையோசையும், பேண்டு வாத்தியமும் மாறி மாறி முழங்கி ஓய, புதுக்குடி கூத்து ஆரம்பமாகியது. ஒப்பாரிக்குரல்களை மிஞ்சி, கூத்தின் பாடல் உரக்கக் கேட்டது. சனிக்கிழமை என்பதினால் அன்றே சடலத்தை எடுத்துவிட வேண்டுமென்கிற முனைப்பில் அந்தக்குடும்பத்தின் பங்காளிகள் ஒவ்வொருவரும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

“ஒன்னும் அவசரமில்லப்பா, சனிப்பொணம் தனியா போவாதுன்னு தான் சொல்வாங்க… அதெல்லாம் ஒரு பெரிய விசயமில்ல… பாடையில ஒரு கோழிக்குஞ்ச கட்டி தொங்கவிட்டு எடுத்துட்டுப்போயி சுடுகாட்டுல அறுத்து வீசுனா ஆச்சி… நெதானமாவே செய்ங்க” என்று தேறுதல் சொல்லிக்கொண்டிருந்த பெரியவரின் பேச்சைக் கேட்க அங்கு யாருக்கும் நேரமில்லை.

வெளியூரிலிருந்து வந்திருக்கும் சனங்களுக்கும், வரப்போகும் உறவுகளுக்கும், சேர்த்து உறவுக்காரப் பெண்கள் உதவியுடன் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. விரிசலாகிக்கிடக்கும் உறவுகள் இம்மாதிரி சந்தர்ப்பங்களில் பிணக்குகளை மறந்து ராசியாகிக் கொள்வார்கள். நல்ல நிகழ்வுகளில் கூட முறுக்கிக்கொண்டு, வீம்போடு திரிந்தாலும், இம்மாதிரி துக்க நிகழ்வுகளில் பதறியடித்துக்கொண்டு வந்து சேர்ந்துகொள்வது வழக்கம்.

தோட்டத்தின் மாமரநிழலில் குந்தியிருந்த பெருமாளைச்சுற்றி ஆண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. காடு கழனிகளில் உழலும் சம்சாரிகளுக்கு முடிவெட்டி சவரம் செய்துகொள்ள எங்கே நேரம், இம்மாதிரியான நேரங்களில் தங்களது தலைச்சுமைகளை இறக்கிவைத்தால் தான் உண்டு, அதுவும்போக, இந்த சந்தர்ப்பங்களில் வெட்டிக்கொண்டால் பணம், காசு என்று தனியாகக் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்காது. இதற்கென்றே சிலர் காத்திருப்பதுமுண்டு.

பொழுது உச்சியைத் தாண்டியும் சிரைத்துக் கொண்டிருந்தவரிடம், “டேய் பெருமாளு, இங்க வெட்டி முறிச்சது போதும், போயி சோத்த தின்னுட்டு ஆவ வேண்டிய சோலியப் பாரு.. அப்புறம் கடைசில அத வாங்கிட்டு வரல, இத வாங்கிட்டு வரலன்னு, காட்டுல நின்னு சொல்லிக்கிட்டு இருந்தியன்னா வாய பொளந்துருவேன் பாத்துக்கோ” என்று சாராய நெடியில் சலம்பிவிட்டு போனான் பெரியவரின் பங்காளி ஒருத்தன்.

இறுதியாக சவரத்துக்காக காத்திருந்த ஊர்க்காரர் ஒருவரிடம், “பெரியவரே நாளைக்கி பால்தெளி முடிஞ்சதும், நானே ஒங்க வூட்டுக்கு வரேன்” என்று கூறி எழுந்து வேட்டியை அவிழ்த்து மேலில் சிதறிக்கிடந்த முடிகளை துண்டினால் துடைத்துவிட்டு சாப்பிடச் சென்றார் பெருமாள்.

பழனிமாணிக்கத்தின் மகன் மற்றும் மகள் வீட்டுப்பேரப்பிள்ளைகளை கணக்கிட்டு, எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் நெய்ப்பந்தம் உருட்டி வைத்துவிட்டு, சடலத்தைக் குளிப்பாட்ட தண்ணீர் எடுப்பதற்கும், வாய்க்கரிசி நெல் எடுப்பதற்காகவும் பெரியவரின் உறவினர்களை ஆயத்தப்படுத்தினார்  பெருமாள்.

“அந்தி மானம் மழ வர மாதிரி இருக்கு… சீக்கிரம் கொடத்த எடுத்துக்கிட்டு வாங்க..” என்று சொல்லிக்கொண்டே விபூதி பொட்டலத்துடன் முன்னே போனார்.

பெரியவரை குளிப்பாட்டி, புதுவேட்டி மாற்றி, பாடையில் தூக்கி வைக்கும்போது சொந்தங்கள் எல்லாரும் கதறுகையில் பெருமாளுக்கும் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தது. நெல்லோடு கலந்திருந்த தானியங்களை வழி நெடுகிலும் விசிறிக்கொண்டே பாடைக்கு முந்தி நடக்கையிலும் கூட யாரிடமும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

ஊரே நாவிதனாக பார்த்தபோது இவர் மட்டுந்தானே மனிதனாக பாவித்தார் என்று பழனியுடனான பழைய நினைவுகளோடும், முந்தினநாள் அந்திப்பொழுதில் பேசிக்கொண்டிருந்த பேச்சும், “நாங்கல்லாம் இருக்கோம், அப்படி ஒன்ன சும்மா விட்ற மாட்டோம்” என்ற பெரியவரின் நினைவு கலக்கத்தோடு, சுடுகாட்டில் சிதைக்கு தீமூட்டும் முன் செய்யும் சாங்கியங்களை செய்து கொண்டிருந்த பெருமாளின் பின்னங்கழுத்தில் பொத்தென்று ஒரு அடி பலமாக விழ, நிலை குலைந்து கீழே விழப்போனவரை அருகிலிருந்தவர் தாங்கிப்பிடித்தார்.

“நானும் வந்ததுல இருந்து பாக்குறன், எல்லா சாங்கியத்தையும் மாத்தி மாத்தி செஞ்சிக்கிட்டு இருக்க… இதவுட முக்கியமா அப்பிடி என்ன புடுங்குற வேல ஒனக்கு இருக்கு” என்று மீண்டும் பெருமாளை நோக்கி அடிக்கப்பாய்ந்த சிவலிங்கத்தை பக்கத்தில் நின்றவர்கள் பிடித்து நிறுத்தினார்கள்.

“சரிதான் வுடு மாமா.. அவந்தான் எதோ நெனப்புல மாத்தி மாத்தி பண்ணிபுட்டான், அதுக்காக அவனப்புடிச்சி அடிச்சா சரியாகிருமா?, மழ வேற வர மாதிரி இருட்டிக்கிட்டு வருது… சீக்கிரம் கொள்ளி வச்சாச்சின்னா, அதது அவுங்க ஊர பாத்து போவும்ல” என்று வெளியூரிலிருந்து வந்திருந்த ஒருவர் சிவலிங்கத்தை அமைதிப்படுத்த,

“நானும் வந்ததுல இருந்து மூணு தடவ சொல்லி பாத்துட்டேன், சொன்னத காதுல வாங்கிக்காம அவம்பாட்டுக்கு முன்னுக்குப் பின்ன மாத்தி செஞ்சிக்கிட்டு இருந்தா மனுசனுக்கு கோவம் வருமா? வராதா?” என்று சொல்லி தளர்ந்து போயிருந்த இடைவேட்டியை அவிழ்த்து இறுகக்கட்டினார் சிவலிங்கம். மண்டைக்கேறிய போதையில் கண்கள் சிவந்திருந்தது.

இறந்த பிணம், காடு போய் சேர்வதற்குள் சிறு சிறு விஷயங்களைக் கூட பூதாகரமாக்கி பெரும் சண்டையில் கொண்டு நிறுத்திவிடுவார்கள். அதற்கென்றே போதையேற்றிக் கொண்டு சிலர் திரிவதுமுண்டு. மாமன், மச்சான் நையாண்டி பேச்சுக்கள், இறுதியாக மண்டை உடைப்பில் தான் நிறைவுறும். நிறைய சண்டைகளை கவனித்துப்பார்த்தால், உப்புக்கும் பெறாத காரணமாக இருக்கும். இன்றைக்கு சிக்கியவர் பெருமாள்.

பூராப்பேரும் நெகா தெரியாம தளும்ப தளும்ப போதையில நிக்குறானுவோ, பேசிப் பேசியே பிரச்சினையைப் பெரிதாக்கி கலவரமாக்கி விடுவார்கள் என்கிற பதட்டத்தில் “டேய், பெருமாளு ஒழுங்கு மயிரா வேலைய பாக்குறதுன்னா பாரு.. இல்லைன்னா பொட்டியத் தூக்கிக்கிட்டு நடையக் கட்டு, நாங்க வேற ஆளவச்சி  பாத்துக்குறோம்…” என்று காட்டமாக எரிந்து விழுந்தார் உள்ளூர்க்காரர்.

“அட வுடுங்கப்பா, இதெல்லாம் ஒரு விசியமா பெருசுபடுத்திக்கிட்டு இருக்கீங்க, சீக்கிரம் ஆவுற வேலைய பாருங்க” என்று ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகப் பேச, எந்தக்குரலுக்கும் பதில் பேசாமல் குனிந்த தலையோடு செய்ய வேண்டிய சாங்கியங்களை செய்து முடித்து சிதைக்கு தீ வைக்க, பந்தத்தைக் கொளுத்தி, பழனிமாணிக்கத்தின் மகனிடம் நீட்டினார் பெருமாள்.

பாடை திருப்பத்திற்கு முன்னாடி இருக்கும் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, சாவு வேலை செய்தவர்களுக்கு கூலி கொடுப்பது வழக்கம். எல்லோருக்கும் கொடுப்பது போல், பெருமாளுக்கும் கொடுத்துவிட்டு, “நாளைக்கி நேரத்துலையே வந்துடுறா பெருமாளு, பால் தெளிச்சிப்புட்டு சாம்பலை கரைக்க திருவாடுதுறை வரை போகணும்” என்று சொல்லுகையில் கூட, ‘அவன் ஏதோ ஆத்ரத்துல கைய நீட்டிபுட்டான், மனசுல ஒன்னும் வச்சிக்காத’ என்று சொல்வார்களென, எதிர்பார்த்த பெருமாளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

‘இந்த ஊர்ல எத்தன சீழ்ப்பிடிச்ச மண்டைகள வழிச்சி பண்டுவம் பாத்துருப்பேன், அதுல ஒன்னு கூட நமக்கு ஆதரவா ஒரு வார்த்த பேசலையே’ என்கிற ஆற்றாமையில் மனம் வெதும்பி நின்றார் பெருமாள்.

வெளியூர், உள்ளூர் என்று முன்னூறு நபர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த அவமானம், அடியை விடவும் பலமாக வலித்தது பெருமாளுக்கு. அதுவும் தன்னைவிட வயதில் இளையவன் கையால் அடி வாங்கியது கள்ளிப்பழ முள்ளாக உடலெங்கும் அருவியது. ‘சாங்கியத்த முன்ன பின்ன மாத்தி செஞ்சதுனால பொணம் எரியமாட்டேன்னு எந்திரிச்சி ஒக்காந்துக்குமா? வெயிலு மழன்னு கூட பாக்காம எத்தன தடவ இந்த ஊரு சனங்களுக்காக நாயா ஒழச்சிருக்கேன், அந்த நன்றியெல்லாம் இல்லாம பொசுக்குன்னு கைய நீட்டிட்டாங்களே…. எனக்கு கொடுக்காத மரியாதைய, என் வயசுக்காவுது கொடுத்து கைய ஓங்காம இருந்திருக்கலாம்’ என்று அலை அலையாக அந்த அவமானமே அவரை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.

ஒரே ஒரு அடி, ஒரு மனிதனுக்கு எவ்வளவு பெரிய காயத்தைத் தந்திருக்கிறது. அடி என்பதைவிடவும் அவமானம் தான் பெரிய உளைச்சலைத் தருகிறது. ஆதரவுக்கரங்களே நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்தால் யாரிடம் சென்று முறையிடுவது?. சாதாரண நாவிதன் தானே என்கிற அவர்களின் அலட்சியப் பார்வைகள் பெருமாளை என்னென்னமோ யோசிக்கத் தூண்டியது. நூறு கழுகுகள் ஒன்று சேர்ந்துகொண்டு தன்னுடலை கொத்தித் தின்பது போன்ற உணர்வில் இப்படியே இந்த மரத்தடியிலேயே தூக்கு மாட்டிக் கொள்ளலாமா? என்கிற ஆவேசம் கூட வந்து போனது. இதுநாள்வரை தனக்கு அரணாக நின்றவருடைய மரணத்திலேயே அடித்து அவமானப்படுத்திவிட்டார்களே என்கிற வெதும்பலுடன் கண்ணீர் வழிய மரத்தடியில் அமர்ந்திருந்தவர் திடீரென ஆவேசம் கொண்டு எழுந்து சுடுகாடு நோக்கி நடந்தார்.

கரும்புகையுடன் மேலெழும்பிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளை கொஞ்சநேரம்  உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த பெருமாள், இடுப்பில் மடித்து வைத்திருந்த சவரக்கத்தியை எடுத்துப் படமெடுத்து ஆடும் பாம்பைப் போல் வெடித்து எரிந்து கொண்டிருந்த சிதைக்குள் வீச, எரிந்து கொண்டிருந்த உடல் விரைத்து எழும்பி, கடைசியாகத் துடித்து அடங்கியது.

***

அரசன் – பெரம்பலூர் மாவட்டம் , உகந்த நாயகன் குடிக்காடு. சென்னையில் வசித்து வருகிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு “இண்ட முள்ளு ” சமீபத்தில் மறுபதிப்பு கண்டது

RELATED ARTICLES

5 COMMENTS

 1. அரசன்- நீங்க இந்த காலத்து பாரதிராஜா பாஸு! செம்ம, கலக்கீட்டீங்க!

 2. அருமையான கதை. எதார்த்தம் மாறாத தடத்தில் கதையை நகர்த்திச் சென்ற தங்கள் கதையில் இந்த நூற்றாண்டிலும் இந்த அவலம் தொடர்ந்து வருவது பெரும் சாபம். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

 3. அருமையான கதை. எதார்த்தம் மாறாத தடத்தில் கதையை நகர்த்திச் சென்ற தங்கள் கதையில் இந்த நூற்றாண்டிலும் இந்த அவலம் தொடர்ந்து வருவது பெரும் சாபம். வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

 4. அரண் அருமையான கதை.மண்ணின்மொழிபேசும்
  மாந்தர்களின் கதை.
  தன்மானப்பெருமாளும்
  மணிதநேயமாணிக்கமும்
  உணர்வாய் இணைந்தசையும்
  புள்ளியில் முரணாய்
  வந்துவிடும் சமூகநோய்
  கிருமிகள்.
  ஈழத்து டானியலின் பல
  கதைகள் மீள்நினைவெழந்தது.
  படைப்பாளிக்கு வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular