பிரபு தர்மராஜ்
“இதனால ஊரு சனங்களுக்கு அம்பலப் படுத்துகது என்னன்னா, நம்மூருல உள்ள எல்லா பெயலுவளும் அவங்கவங்களுக்க வூட்டு மேக்கூரையள ஊருக்கு அர்ப்பணிக்கணும் ! நம்ம தலைவரு பக்கத்தூருகார தெய்வங்களுக்கு எல்லாரு வூட்டுக் கூட்டுக் கூரையள தார வாக்குறம்னு வாக்குக் குடுத்துட்டாரு சாமியோ ! டம் டம் டம்!”
இந்த முரசுச் சத்தத்தைக் கேட்ட ஊரிலுள்ள ஆறறிவு படைத்த மனிதர்கள் கோபமடைந்தனர்.
“இவே எவம்புல கோம்பத் தா…ளி நம்மூட்டுக் கூரைய வெளியுருகாரனுக்குக் குடுக்கதுக்கு ? இதுவரைக்கும் வித்து நக்குனதெல்லாம் போறாதா ? கொப்பன…ளி !”
ஊரிலுள்ள இரண்டறிவு படைத்த கசவாளிகள் அனைவரும் கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
“ யேயப்பா ! நம்மூட்டுக் கூரைய வெளியுருக்கு … அதுலயும் தெய்வங்களுக்குக் குடுக்கதுன்னா சாமானியமான காரியமா ? நாம கூரைய குடுத்தம்னாக்கா சாமி கூறையப் பிச்சிக்கிட்டு கூடுதலா குடுக்குமுலேய் ! எண்டே பகவதி மாதாவே !”
முரசறைந்தது வேறு யாருமல்ல ! நம் கோலப்பன்தான். கோலப்பனின் சிறுவயதில் காலில் ஒரு அரணைப் பல்லி நக்கியதால் கோலப்பன் செத்துவிடுவானோ என்று பயந்து அவனது தாய் புய்ப்பம் சாமிக்கு சாராயமும், சுருட்டும் வைப்பதாக வேண்டிக் கொண்டாள். ‘அரணை தன்னுடைய நாக்கினால் யாரையாவது நக்கினால் நக்குண்டவர்கள் நட்டுக் கொள்வார்கள்’ என்றொரு அரிதான கற்பனை ஊருக்குள் திரிந்தது.
‘அரணை ஒரு மனிதனை… அதுவும் கோலப்பன் மாதிரி விஷப் பயல்களை நக்கினால் அரணைக்குதான் மரணம் நேரும்!’ என்ற சின்ன அறிவு கூட இல்லாத ஊர் அது. அந்த அரணை கோலப்பனை நக்கிவிட்டு அவனது வீட்டின் பின்பக்கத்தில் வைத்து பரிதாபமாக மரித்த காரியம் யாருக்கும் தெரியாது. “நாம் இன்னாரை நக்கியதாலேயே தான் மரித்தோம்!” என்ற காரியம் அந்த அரணைக்கும் தெரியாது என்பதுதான் பரிதாபமான காரியம். சாமியின் அருளாலேயே கோலப்பன் அரணையின் கொடும் விஷத்திலிருந்து தப்பினதால் கோலப்பனுக்கு ‘அரணையப்ப கோலப்ப சாமி’ என்ற அரிதான பெயரை வைத்தாள் அறிவாளி புய்ப்பம்.
ஊருக்குள் சதாகலமும் கோள்மூட்டி சண்டை இழுத்து விட்டு ஒவ்வொரு குடும்பத்தைப் பிரித்தும், கொலைக்களங்களுக்கு ஆளாகியதாலும் கோலப்பன் ஒரு மனித உருவிலான அரணையாகவே பாவிக்கப் பட்டான். தரையில் ஊர்ந்து போகாததது ஒன்றுதான் குறை.
அப்படித்தான் ஒருமுறை வடக்குத் தெரு அழகுசுந்தரி தனது வீட்டு அடுப்பாங்கரைக்குள் வைத்து தனது பகல் காதலன் பசுங்கண்ணனோடு சேர்ந்து ரகசிய கஞ்சியும், கூட்டும், கறியும் சமைத்துக் கொண்டிருந்த சமயத்தில் வீட்டுக்குள்ளிருந்து கேட்ட கரண்டியால் சட்டியைச் சுரண்டும் சப்தமும், கசிந்த புகையும் உள்ளே நடந்த ச’மையலை’ ஊருக்குள் அறிவிக்கவே, அதைக்கண்ட கோலப்பன் ஓடிப்போய் சுந்தரி வீட்டுக் கதவை வெளிப்புறமாய்த் தாளிட்டுவிட்டு வந்துவிட்டான்.
அதோடு நில்லாமல் சுந்தரியின் கணவன் கதிரேசனை விளித்துக் கொண்டு வந்து “உன் வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது” என்று சொல்லி கருக்கரிவாளைக் கையில் கொடுத்து வீட்டுக்குள் அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கதவை வெளிப்புறமாகத் தாளிட்டுவிட்டான். உள்ளே கிடந்த பசுங்கண்ணப் பாம்பினைக் கண்ட கதிரேசன் கடும்கோபத்தில் பாம்போடு மோத கதிரேசனின் கையிலிருந்த கருக்கரிவாளைப் பிடிங்கிய பசுங்கண்ணன் கதிரேசனை வெட்டிப் போட்டான். அப்படியாக அந்த நாளானது கருக்கரிவாளால் கழுத்தில் வீசல் வாங்கிய கதிரேசனின் கடைசி நாளாக அமைந்து போனதில் சுந்தரி வெள்ளாடை அணிந்தாள். சொந்தப் பாம்பு மண்ணுக்குள்ளும், அவ்வப்போது வந்த பாம்பு ஜெயிலுக்குள்ளும் போனதால் சுந்தரியின் அடுக்களை வெறிச்சோடிப் போனது.
இப்படியாக ஊர்க்கொடியில் தனது கோவணத்தைக் காயப் போடுவதை கோலப்பன் வழக்கமாக வைத்திருந்தான். இந்த ஒரு தகுதியே அந்தப் பணிக்குப் போதுமான தகுதியாக இருந்ததால் முரசறையும் அதாவது கொட்டடிக்கும் பணியில் கோலப்பனை அமர்த்தினான் ஊர்த்தலைவர் ‘கோணிச்சாக்கு மோணியாண்டி’.
மோணியின் இயற்பெயர் ஆண்ட்டியப்பன். பிறக்கும்போதே அந்த முகமானது ஊரிலுள்ள ஆண்ட்டிகளை நோக்கி மாணியைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து வளைக்கும் கோழியாக இருப்பானோ என்று தோன்றியதால் ஜாடைக்குத் தகுந்தாற்போல ‘ஆண்ட்டி’யப்பன் என்ற பெயரை மோணியின் தாய்தகப்பன் வைத்துவிட்டார்கள். ஆனால் ஆண்ட்டிகளை வளைக்கும் அளவிற்கு ஆண்டியப்பனுக்கு கிளி வேலை செய்யவில்லை.
மோணி ஊருக்குள் சுக்குக் காப்பி கடை வைத்திருந்தான். சுக்காப்பி கடைநேரம் போக மீதமுள்ள ராத்திரி வேளைகளில் கைகளில் ஒரு கோணிச் சாக்கை எடுத்துக் கொண்டு, ஊரிலுள்ள வீடுகளின் மோடுகளைப் (கூரை) பிரித்து இறங்கி மோஷண காரியங்களில் (களவு எடுத்தல்) ஈடுபட்டதால் ஆண்ட்டியப்பன் ‘கோணிச்சாக்கு மோணியப்பனாக’ உருவெடுத்தான். உள்ளூர்த் திருடன்களோடு வெளியூர்த் திருடன்களும் சேர்ந்து கொண்டதால் ஊர்மக்கள் கொடியில் காயப் போட்ட தங்களுடைய கோவணங்களையும் பறிகொடுத்தனர்.
ஆகையால் ஊர்கூடி ‘திருடனின் கையிலேயே சாவியைக் கொடுக்க’ முடிவெடுத்தது. அவ்வூரிலுள்ள மனிதர்களின் நாவுகளின் சுவையை நன்றாக அறிந்து வைத்திருந்த ஒரே நபர் மோணிதான் என்பதால் அந்தப் பதவியும் அவருக்கு எளிதாக வாய்த்தது. மோணியப்பன் ஊர்த்தலையாரியானான். இரண்டறிவு மாக்கள் கோணிச்சாக்கு மோணியப்பனை ‘கோமோ’ என்று சுருக்கமாகவும், ஆறறிவு உள்ள மக்கள் அவனை ‘மோடுமுட்டி ஆண்டியப்பன்’ என்றும் அழைத்தார்கள்.
அரணை கோலப்பன் தன்னுடைய சின்ன வயதில் வாயிலேயே மோளம் அடித்து வந்ததாலும், திருவிழாக் கச்சேரிகளில் பல்படாமல் ஊத்து வாசித்ததாலும் மோணி அவனை அரவணைத்து அவனுக்கு சில பணிகள் கொடுத்தான். முரசு அடித்து ஊருக்குள் கிலி வரத்துவது, பொய்களைச் சொல்லி கிளிகளைப் பறக்கவிடுவது, மற்றும் ஊரின் எல்லைகள் குறித்து ஒற்று சொல்லுவது என அவனது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து போனது. கோலப்பனும் அதைச் சிறப்பாகச் செய்து வந்தான்.
மோணி பிறவீடுகளின் மதிலேறிக் குதிக்கும் நாட்களின் அந்திக் கருக்கலில் ஊர்ச்சந்தியில் முரசடித்து சமீபத்தில் செத்துப் போனவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களது ஆத்துமா ஊர்த்தெருக்களில் அலைவதாக பீதியைக் கிளப்பி ஆட்கள் யாரையும் இரவு வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளுவது போன்ற பணிகளைக் கையாள்வதில் கோலப்பனை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
கோமோவால் ஊருக்குள் மோஷ்டிக்கப் பட்ட வஸ்துக்களை வெளியூரில் விற்பனை செய்யக் கொண்டு போகும் இரவுகளில் கோலப்பன் ஈரச்சாக்கைத் தலையில் மூடி பேய் வேஷம் போட்டு, வாய்க்குள் டார்ச் லைட்டை பொருத்திக் கொள்ளிவாய்ப் பிசாசு வேஷம் போடுவது வழக்கம். இப்படியாகக் கொஞ்சம் நாட்கள் கடந்தது. கொள்ளிவாய்ப் பிசாசு யாரென்பதை ஓரளவு மக்கள் கணித்து ஈரச்சாக்கைக் காயவைக்கவிருந்த நேரத்தில் கோலப்பன் சுதாரித்து கொண்டான். ஆனாலும் பிழைப்பு ஓடவேண்டுமே ? ஆகையால் ஒரு திட்டம் தீட்டினார்கள்.
“ஊர்த்தலைவர் எப்படி கடையைத் திறந்து சுக்குப்பால் ஆத்துவது? அது அவமானமல்லவா ? அப்படியென்றால் வேறு ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்று கோலப்பன் அறிவுரை சொன்னதால் மோணி ஒரு வர்த்தகராக உருவெடுத்தார். ஊர்மக்களின் விளைபொருட்கள் மற்றும் தயாரிப்புகள் போன்றவை கோமோவின் வாயிலாக விற்கப்படும் என்று அறிவித்தான் கோலப்பன்.
முதலாம் வியாபாரமாக ஊர்த்தோட்டத்திலுள்ள விளைபொருட்கள் அனைத்தும் வெளியுருக்குக் கொண்டு போய் விற்கப்பட்டு ரப்பர் தைகள் (கன்றுகள்) வாங்கப் பட்டன. அதற்கு கோலப்பன் தரப்பில் இவ்வாறு முரசறையப் பட்டது,
“அதாகப் பட்டது முக்கியஸ்தர்களே ! நீங்கள் முக்கி முக்கி வித்தாலும் கோமோ அளவுக்கு உங்கள் யாராலும் கூறுள்ள யாவாரியாய் ஆகிவிட முடியாது ! இதோ இங்க கெடக்க ரப்பரு கண்ணு\வள பூரா நம்ம தோட்டத்துல நட்டு வச்சா அது ஏழே வருசத்துல பால் சொரந்து நம்ம ஊருக்க லெச்சனத்தையே மாத்திரும் !”
ஒரு மனிதர் கேட்டார், “ரப்பர திங்க முடியுமா ? ரெப்பரு மரம் மொளச்சா ஜீவ சுவாசத்தப் பூராத்தையும் மரமே நக்கிட்டு கெட்ட காத்த வெளியிடுமாமே ? நிலத்தடி தண்ணியையும் குடிக்கும்னு சொன்னாவளே ? உண்மையா ?”
அதற்குக் கோபித்துக்கொண்ட கோலப்பன் இவ்வாறு பதிலளித்தான், “ இத்தன வருசம் வாழ்ந்து என்னத்த பொளந்தீரு ஓய் நீரு? ஜீவ சுவாசம் வேணுமாமே? பூமிக்குள்ள தண்ணி இருந்தா ஊருசனங்களுக்குத்தா கேடு ! ஒரு பெருவெள்ளம் வந்துன்னு வையும் ! அதப் பூராத்தையும் நெலமே உறிஞ்சிரும்லா ? வெள்ளம் வடிய வரைக்கும் எதுக்குக் காத்துக் கெடக்கணும்? ”
இந்த பதிலைக் கேட்ட மக்கள் கொதித்தனர்,
“இந்த மண்டையன் மோணிக்கெல்லாம் ஒரு சாக்காலம் வார மாட்டங்கே? செத்தும் தொலயானுவ இல்லியே ?”
மாக்கள் கொட்டடித்துக் கொண்டாடினார்.
“தலைவன் கோமோ வாழியவே !”
பின்பொருநாள் ஊருக்குள் இருந்த தேக்கந்தடிகளை வெட்டிக் கொண்டு போய் வெளியூரில் விற்றுவிட்டு முருங்கைத் தடிகளைக் கொள்முதல் செய்து கொண்டு வந்தான் மோணி. அதற்கு கோலப்பன் இவ்வாறு முரசடித்தான்,
“அதாகப் பட்டது முக்கியஸ்தர்களே ! இதோ கிடக்கும் மரத்தடிகள் அனைத்தும் உறுதியானவை ! இவைமட்டும் காய்ந்துவிட்டால் உங்கள் வீட்டின் அடுப்பங்கரையில் விறகாய்ப் பயன்படுத்தலாம் ! உங்கள் வீடுகளின் அடுப்பெரியக் காரணமான தலைவன் மோணியைப் போற்றுங்கள் !”
யாரும் எந்தக் கேள்விகளும் கேட்கவில்லை. மக்கள் மோணியின் உருவத்தை வைக்கோலில் செய்து கொளுத்தினார்கள், மாக்கள் எல்லாரும் ஒன்று கூடி தங்களுடைய தலைவன் கோமோவின் பெயரைச் சொல்லி தீபமேற்றி வழிபட்டார்கள்.
தோப்பு துறவுகளை விற்றான் மோணி! மக்கள் ரப்பர் கொட்டைகளைத் தின்றார்கள். மாக்கள் சாணியை வாரித் தின்றார்கள்.
குளம் குட்டைகளை விற்றான் கோமோ ! மக்கள் கடலுக்குக் குளிக்கப் போனார்கள். மாக்கள் குளிப்பதை நிறுத்திவிட்டார்கள்.
மக்களின் கோவணங்களை விற்றான் கோமோ! மக்களில் இருந்த ஆண்பெண்களும் குழந்தைகளும், கிழடுகட்டைகளும் இலைகளை உடுத்தி ஆதிவாசியானார்கள். மாக்கள் பட்டியலில் இருந்த ஆண்கள் ஜானி சின்சாகவும், பெண்கள் மியா கலீஃபாவாகவும் மாறினார்கள்.
தெருவை விற்றான் கோமோ! மக்கள் புழக்கடையின் வழியாக நடமாடினார்கள். மாக்கள் தங்களுடைய பயணப்பாதை உயர்ந்து விட்டதாகக் கருதி வீட்டுக் கூரையின் வழியாக நடமாடினார்கள்.
ஊரை விற்றான் கோமோ ! மக்கள் ஆகாயமார்க்கமாக நடமாடினார்கள். மாக்கள் வீடுகளுக்குள்ளேயே கிடந்தார்கள்.
இப்போது வீட்டுக் கூரைகளை வீற்றிருக்கிறான் கோமோ ! மக்கள் யாவரும் தங்களது கூரைகளைத் தரப்போவதில்லை.
ஆனால் மாக்கள் தங்களுடைய கூரைகளை ஊருக்குத் தானம் கொடுத்துவிட்டு வெயில் உண்ணப் போகிறார்கள். வீடுகளுக்குள்ளேயே மழையில் நனைந்து மழைப்பாடல்களைப் பாடி ஆடலாம் ! மொட்டை மாடிகளின் மீது ஏறாமலேயே நிலாச் சோறு உண்ணலாம்! என்று மாக்கள் மகிழ்ந்து போயிருந்தார்கள்.
கோமோவின் இந்த அதிரடியான வளர்ச்சித் திட்டங்கள் மீது மிகப்பெரிய ஆர்வத்தைக் கொண்ட முனியம்மாளுக்கு கோமோவின் மீது சொல்லவொண்ணாக் காதல் மலர்ந்தது. ஊர்த்திருவிழாவில் தன்னுடைய காதலை மோணியிடம் சொல்லி மறுநாள் இரவு தன்னுடைய வீட்டிற்கு ரகசியமாக வரச் சொன்னாள். இதுவரையிலும் எந்தக் கூண்டையும் கண்டிராத மோணியின் மொண்ணைக் கிளி மறுநாள் இரவைக் குறித்து இலவுகாக்கத் துவங்கியது.
கோலப்பனும் , மோணியும் சேர்ந்து மறுநாள் இரவில் ஊருக்குள் பேய்நடமாட்டம் நடைபெறவிருப்பதாக முரசறைந்து அறிவித்தார்கள். அரணையப்ப கோலப்பசாமி பேய் வேடம் தரித்தான். மோணியும் கோலப்பனும் ஊரயர்ந்த நேரத்தில் வெட்டுக்கிளி மாதிரி துள்ளித் துள்ளி முனியம்மாளின் வீட்டின் பின்பக்கச் சுவற்றின் பின்பக்கத்தில் போய் நின்று கொண்டார்கள்.
கோலப்பன் மாணியிடம், “எண்ணே ! மொதத்தடவ.. கொஞ்சம் பாத்து பத்தரமா நடந்துக்கா ! புள்ள பாவமாக்கும் சொல்லிப்புட்டேன் ஆமா !”
மோணியின் கருத்த கன்னங்கள் அந்த இருட்டிலும் பச்சை நிறத்தில் சிவந்து போனது,
“சும்ம இரிடே கோலப்பா ! எனக்கு படபடன்னி வருகு !”
“நீ இப்புடி நெளியத பாத்தா எனக்குப் படபடன்னு வருகு ! களவெடுக்கப் போவும்போதே அசால்ட்டாப் போவ ! இந்த எளவெடுக்கப் போறதுக்கு என்ன பயமோ ?”
“அதென்ன பித்தளச் சொம்பா? ஓடிப்போயி பைக்குள்ளாற போட்டுகிட்டு வெடுக்குன்னி ஓடியாறதுக்கு ? பண்டம்டே ! பாத்துப் பதனமாப் போவாண்டாமா ?
“ஆமா செம்புன்னா லெகுவாத் தொடச்சி எடுத்துரலாம்! பித்தள அண்டாவக் கொஞ்சம் பாத்துதான் தொடைக்கணும்! நா இங்ஙனக்குள்ளத்தானே நிக்கியேன்! நீ தைரியமாப் போண்ணே !”
கோலப்பன் கொடுத்த தைரியத்தில் மோணி மதிலேறிக் குதித்தான்.
சற்று நேரத்திலேயே பேய்வேடத்தில் ஊளையிட்டுக் கொண்டே தெருவில் நடமாடிய கோலப்பனை பின்பக்கத்தில் இருந்து மோணியப்பன் அழைத்தான். முனியம்மாளின் வீட்டுக்குள் நுழைந்து முழுதாய்ப் பத்துநிமிடம் கூட ஆகியிருக்கவில்லை. இதனால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த கோலப்பன் மோணியிடம் கேட்டான்,
“என்னண்ணே! அதுக்குள்ளயா முடிச்சிட்ட ?”
“ஆமடே ! எல்லாமே கொஞ்ச நேரத்துல முடிஞ்சி போச்சி பாத்துக்கா ?” என்று மோணி சொல்ல அதற்குக் கோலப்பன்,
“ரொம்ப நாளு காஞ்சி கெடந்த பாதாளக் கரண்டில்லா ! கெணத்தக் கண்டதும் பாஞ்சிட்டு இல்லியாண்ணே? கிகிக்கிகீ ?”
கோலப்பனின் சிரிப்பாணியைக் கண்ட மோணி முகம் வெளிறிப் போய், “முனியம்மைக்கி அத்தாம்பெரிய கெணறு இருக்குன்னு எனக்குத் தெரியாது கோலப்பா ?”
“அத்தாந்தண்டி கெணறாண்ணே ? பாத்தா அப்புடித் தெரியலையே ?”
“ஆமடே ! செவம் இருட்டுக்குள்ள இருந்தத நாந்தாங் காணல்ல !”
“பகலல்ல பாத்தா முனியம்மைக்க பல்லே தெரியாது ! இதுல ராத்திரில போயி அவளுக்க கூந்தல தேடியிருக்க ? வெளக்க போட்டுட்டு பாக்க வேண்டியதான ?”
“பொழக்கடையில யாதுடே வெளக்கு ?”
“ஒன்னய யாருணே பொழக்கடையில பொளங்கச் சொன்னது ? வூட்டுக்குள்ளாற போய்த் தொலைய வேண்டியதான ?”
“வூட்டுக்குள்ள போக வுட்டாத்தானே ?”
“முனியம்மைக்கி அவ்ளோ காச்சலா ? எம்மா பாக்கத்தான் ஆளு ஒடமரங் கணக்கா இருக்கா ? கொப்ப ஒடச்சிப் புடுவா போலுக்கே ?”
“தண்ணியுங் கொறச்சலா இருந்துல்லா ? அதா பொறமண்டையில அடிச்சி ரத்தம் பாஞ்சிட்டு பாத்துக்கா ?”
“ ரத்தம் வர்ற அளவுக்கா பாஞ்ச நீ ? என்னண்ணே ? பாவம்லா அந்தப் புள்ளை ?”
“அவள முழுசா பாக்கமலயே போறனே சாமீ ?” என்று மோணி அழுதான்.
“இதுக்கெல்லாமா சடையிவாவ? நாந்தா இங்க நிக்கம்லா ? இன்னொருமட்டம் போய்ட்டு வாண்ணே ! நின்னு நிதானமா நீந்திட்டு வா ! ஒருபெய வெளில லாந்த மாட்டான் ! நாம் பாத்துக்கிடுகென் !”
கோமோ கோலப்பனை அழைத்தான், “நீயும் எங்கூட வாடே?”
“நானா ? எதுக்கு ? நமக்கு அந்தப் பழக்கம்லா கெடையாதுணே!”
“ஒடம்பையாவது பாத்துட்டுப் போலேய்!”
“சேச்சே ! அது நமக்கு சொகப்படாது ?”
“தொவளத்து மேலயாச்சிம் நின்னுப் பாருடே !”
“ஆளு நின்னு பாக்கக் கூடிய அளவுக்கா பெரிய தொவளம்…. தொட்டி முடிவாளுக்கு ?”
“கூட வாறியா இல்லியாடே ?” மோணி கோபமடைந்தான்.
“அதெல்லாஞ்சரிதான் ! போவும்போது வேற நெரத்துல உடுப்பு உடுத்திக்கிட்டுப் போயிருந்த ? இப்ப வெள்ளையுஞ் சொள்ளையுமா வந்து நிக்கியே ? திருட்டுச் சூடடிக்கிப் போன வூட்டுலயுமா சுருளும், கோடித் துணியுந் தாரானுவோ ?”
என்று கோலப்பனுக்கு ஆச்சர்யமாகிப் போனது. மெதுவாக நடந்து அருகில் போன கோலப்பனை வழிநடத்தினான் மோணி. அவனது பின்னாலயே போன கோலப்பனுக்கு மோணி போய் நின்ற இடம் வியப்பளித்தது. அது முனியம்மாளின் வீட்டுப் பின்பக்கச் சுற்றுச் சுவர்.
“என்னண்ணே இங்கக் கூட்டியாந்துருக்க ?”
“நீ வாடே !” என்றவாறே அத்தனைப் பெரிய மதில்சுவரின் மேல் அசால்ட்டாகத் தாவி ஏறினான் மோணி.
‘இந்த வயிசுலயும் இந்தா ஒசரத்துல இப்புடி ஏறுகானே? அப்புறம் எப்பூடி முனியம்ம தாக்குப் புடிச்சாளோ ? ஒருவேள வாயப் பொளந்துட்டாளோ என்னமோ ? ஒடம்பையாது பாத்துட்டுப் போன்னு கூப்டானே ? அவளுக்க சவத்த பாக்கக் கூப்புடுகானோ ?’
என்று எண்ணியவாறே கோலப்பன் தயங்கித் தயங்கி மோணியிடம்,
“மோணியண்ணே! நா எதுக்குணே அங்குட்டு தேவையில்லாம ?”
“நீயும் வந்து ஏறுடே !” என்றார் கோமோ.
“அய்யே… எனக்கு முனியம்ம அக்கா மொறையில்லா வரும்ணே ?” என்று தயங்கியவனைக் கண்ட மோணி,
“எலேய் ஒன்னிய செவுத்து மேலல்லா ஏறச்சொன்னேன்! செவத்து மூதி!”
என்றவாறே கையைக் கொடுத்து கோலப்பனை மேலே தூக்கிவிட்டான். மேலே ஏறியவனின் கால்களுக்கு நேரே கீழே கிணறு இருந்ததைக் கண்டு திடுக்கிட்ட கோலப்பன் மோணியிடம்,
“என்னணே இது… ? கெணறு கெடக்கு…?”
மோணி அழுதவாறே, “ஆமடே கோலப்பா ! கெணருதா என்னியக் கெடந்துட்டு !” என்று சோகம் பாய்ந்தான்.
“நீரு முனியம்மயல்லா கெடக்க வந்தீரு! கெணத்துல என்ன பரிபாடி ?”
“ஆமலே கோலப்பா ! கெணத்துக்குள்ளதான் பாடி கெடக்கு ! உள்ள டார்ச் அடிச்சி பாரு !”
‘பாடிய கழத்தி எதுக்கு கெணத்துக்குள்ள வீசிச்சி செவம்?’ என்ற குழப்பத்தில் கோலப்பன் கிணற்றுக்குள் டார்ச் அடித்துப் பார்க்க அங்கே மோணியைப் போலவே உருவம் கொண்ட ஒரு ஆள் படுத்து கிடந்தான்.
“என்னண்ணே ! உன்னிய மாதிரியே ஒருத்தங் கெடக்கான் ! கெணத்துத் தண்ணி வேற செங்கப்பொடி கலந்து செக்கச் செவெல்ன்னி இருக்கே ?”
“அது நாந்தாங் கோலப்பா ! அது செங்கப்பொடியில்ல! எனக்க ரெத்தமுடே!” என்று பெருங்குரலெடுத்து அழுதபடியே அந்தரத்தில் எழுந்து பறந்தான் மோணி. அதிர்ந்து போய்க் கிணற்றுக்குள் உற்றுப் பார்த்த கோலப்பன் அலறினான்.
“அப்போ நீ பேயா வந்தா எங்கிட்ட இவ்ளோ நேரம் பேசிக்கிட்டிருந்த ? பாவிமுடிவான !”
என்று பதறியவாறே நடுங்கி கிணற்றின் ஆழத்தை நோக்கிப் பாய்ந்தான் கோலப்பன். சற்று நேரத்தில் கோலப்பனும் வெள்ளுடை தரித்து கிணற்றின் மேல்பரப்பில் உலாவியபடியே காற்றில் கலந்து மறைந்தான்.
கோலப்பனுக்கு விடைகொடுத்த மோணி காதல் மயக்கத்தில் ஏறி மறுபக்கம் குதித்தான். முனியம்மாளின் வீட்டின் பின்பக்க மதிலின் மறுபக்கத்தில் ஒரு பாழுங்கிணறு இருப்பதை மோணியின் துடித்துத் தடித்த கிளி மண்டையை மறக்கடித்திருந்தது. மதிலிருந்து தலைகீழாகப் பாய்ந்த மோணியின் நடுமண்டை கிணற்றின் துவளத்தில் இடித்துத் துவண்டது. இப்படி எதிர்பாராமல் செத்துப்போன மோணியின் ஆவி வந்து கோலப்பனைக் கூட்டிப் போய் கிணற்றில் தள்ளி தன்னுடைய துணைக்கு அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாய் பறந்து நரகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
தன்னுடைய காதலன் வந்து பூக்களில் தேனூற்றுவான் என்று காவல்கிடந்த முனியம்மாளுக்கு தன்னுடைய காதலன் தங்கள் வீட்டுக் கிணற்றில் மண்டையில் தேன்வழிய நித்திய யாத்திரையை மேற்கொண்டான் என்பது தெரியாமல் விழித்து கொண்டே பசலை பூத்தாள்.
தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பெயர்க்காரணியான ஆண்ட்டிகளைக் கண்கொண்டு கூடக் காணாத ‘கோணிச்சாக்கு மோணியப்பன்’ என்ற ஆண்ட்டீயப்பனும், அரணை நக்கியும் சாவாத அரணையப்ப கோலப்ப சாமியும் கிணற்றில் விழுந்து செத்துப் போனதை அடுத்த நாள் முரசறைந்து இவ்வாறு அறிவித்தான் கோலப்பனின் ஒன்றுவிட்ட தம்பி வேலப்பன்,
“நள்ளிரவில் கிணற்றில் தடுமாறி விழப்போன முனியம்மாளின் வீட்டு தண்ணீர் வாளியைக் காப்பாற்றும் நோக்கில் குதித்த ஊர்த்தலைவர் மோணியப்பனும், ஊடகத்தலைவர் அரணையப்ப கோலப்பஸ்வாமியும் நித்தியப் பாதையை எய்தினார்கள் !”
அரணை நக்கினால் யாரும் சாகப் போவதில்லை என்பது அரணைகளுக்குத் தெரிவதில்லை. அவைகள் வேண்டுமென மனிதர்களை நக்குவதில்லை. நக்கினால் நாம் செத்துப் போவோம் என்பது மாத்திரம் அரணைகளுக்குத் தெரிந்தால் அவை கோலப்பன்களின் திசைப்பக்கமே தலைவைத்துப் படுக்காது.
முரசுகளின் பின்பக்கம் இருக்கும் பொய்க் குரல்களை மாக்கள் அறிவதில்லை. அவைகள் பொய் எனத் தெரிந்தாலும் கூட அவர்கள் மோணியையும், கோலப்பன்களையும் நம்பிக் கொண்டேயிருக்கும் வரை முரசுகளின் முழக்கம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதில் மாக்களோடு சேர்ந்து மக்களும் தங்களது கூரைகளை இழப்பார்கள்.
பேய்க்கதையின் முதல் பாராவிலிருந்தே பேய்கள் வரவேண்டிய அவசியம் இல்லை. கதைகளின் இறுதியில் கூட பேய்கள் வந்து கதையில் யாரையும் பயமுறுத்தாமல் அமைதியாகவே போய்விடலாம். ஆனாலும் இரண்டு பேர் செத்துப் போய் பேயானார்கள் என்பதற்காக ஒரு காதல் கதையானது எப்போதும் ஒரு பேய்க் கதையாக மாறிவிடாது என்பதையும் இந்த வாசகப் பேய்கள் உணரும் வரையில் பேய்க்கதைகள் மரிக்கவே போவதில்லை. கோலப்பனும், கோமோவும் கூட… ஏனென்றால் பொய்யர்களுக்கு மரணமேயில்லை!
பிரபு தர்மராஜ்