ஹாலாஸ்யன்
இந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே ஒரு பொறுப்புத் துறப்பைச் சேர்ப்பது நல்லதென்று கருதுகிறேன். இந்தக் கட்டுரை, வடிவேலு, கவுண்டமணி ஆகியோர் களைகட்டுகிற, நம் பேஸ்புக், வாட்ஸாப் செயலிகளை நிறைக்கின்ற படங்களைப் பற்றியது கிடையாது. ஆனால் மீம்களுக்குப் பின்னால் இருக்கிற அறிவியல் கோட்பாட்டைக் கொண்டு அரசியல் / சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்கிற ஒரு முயற்சி.
சென்ற பத்தியின் கடைசி வரி உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கலாம். ஆம். மீம்களுக்குப் பின்னால் ஒரு அறிவியல் பின்புலம் இருக்கிறது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அந்த சொல் அறிவியல் ஆய்வேடுகளில் புழங்கியிருக்கிறது. பின்னர்தான் நம் சமூக வலைதளங்கள் அந்தச் சொல்லை தத்து எடுத்துக் கொண்டன. கிட்டத்தட்ட அதே போன்றதொரு நிகழ்வு ‘வைரல் (Viral)’ என்ற சொல்லுக்கும் நிகழ்ந்தது.
நாம் விஷயத்துக்கு வருவோம். அந்தச் சொல், புகழ்பெற்ற பரிணாமவியல் அறிஞர், ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins) என்பவரால் அவருடைய முதல் புத்தகமான ‘சுயநல மரபணு’ (The Selfish Gene) என்ற புத்தகத்தில் வந்தது. அந்த புத்தகத்தின் தலைப்பு சற்றே விசித்திரமானது. அதை அவரே அடுத்தடுத்த பதிப்புகளில் ஒப்புக் கொண்டுள்ளார். அந்த புத்தகம் சொல்லவரும் செய்தியின் சுருக்கத்தையும், அந்தப் புத்தகத்தின் கண்ணோட்டத்தில் மீம் என்பது என்ன என்றும் ஒரு சுற்று பார்த்துவிடுவோம்.
பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசும்போதெல்லாம் நாம் அது ஒரு குறிப்பிட்ட உயிரினத்தில் நிகழ்வதாகக் கருதுகிறோம். உதாரணமாக பென்குயின்கள் தங்கள் பறக்கும் திறனை இழந்து துடுப்பு போன்ற அமைப்புகளைப் பெற்றது ஒரு உதாரணம். டாக்கின்ஸ் நம்மை இன்னும் ஆழமாகச் சென்று, பரிணாமத்தின் செயல்பாட்டை இன்னமும் தெளிவாக விளங்கிக் கொள்கிற தளத்தில் சென்று பார்க்கச் சொல்கிறார். அவைதான் மரபணுக்கள். பரிணாம வளர்ச்சி மரபணுக்களின் தளத்தில் நிகழ்கிறது. சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல காரணங்களால், பல மரபணுக்களில் சில மரபணுக்களே விரும்பப்படுகின்றன. முன்னொரு காலத்தில் பென்குயின்களின் மூதாதைகளிடம் பறவை போன்ற சிறகுகளுக்கான மரபணுக்களும், துடுப்பு போன்ற சிறகுகளுக்கான மரபணுக்களும் இருந்திருக்கும். இயற்கைத் தெரிவு (Natural Selection) துடுப்பு போன்ற சிறகுகளுக்கான மரபணுவைத் தேர்வு செய்ததால், பறவை போன்ற சிறகுகளுக்கான மரபணு மெல்ல மெல்ல மங்கி மறைந்துபோய் காலப்போக்கில் வழக்கொழிந்து போனது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த மரபணுக்கள் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்படுபவை. மரபு என்று வழிவழியாகச் செய்தவற்றைக் குறிப்பதற்கும், மரபணு என்ற சொல்லையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்தால் இது விளங்கும். ஆனால் பரம்பரை பரம்பரையாக மட்டுமே தகவல்கள் கடத்தப்படுவதில்லை. பார்க்கப் போனால் மரபணுக்கள் என்பவை, புரதம் தயாரிக்கும் சமையல் குறிப்புகள். அவையும் தகவல்கள் தான். சில சமயங்களில் பரம்பரையாக அல்லாமலும் தகவல்கள் கடத்தப்படும். அவற்றைத்தான் மீம்கள் என்று அழைக்கிறார்கள்.
காட்டில் இருக்கும் ஒரு குரங்குக் கூட்டம், குப்பைத் தொட்டியில் இருந்து உணவை எடுத்துக்கொள்ள முடியும் என்பது ஒரு மீம். இந்தத் தகவலை குரங்குகளுக்கு அவற்றின் பெற்றோர் மரபணுக்களாகத் தரவில்லை. ஒரு தாய்க்குரங்கு தன் குட்டிகளுக்குச் சொல்லித் தரலாம். ஆனால் ஒரு குரங்குக் குட்டியை தாயிடம் இருந்து பிறந்த உடனே பிரித்து விட்டால் அது தானாக குப்பைத் தொட்டியில் போய் உணவைத் தேடாது. சோதனைகள் மூலம் கற்றுக்கொள்ளலாம். குழுவாக வாழும் விலங்குகளில் இம்மாதிரி மீம்கள் சாதாரணம்.
அவ்வாறு பார்த்தோமானால், மனித வரலாறு பலப்பல மீம்களை உள்ளடக்கியது. நெருப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தது, குகைகளில் வரைந்தது, மேம்பட்ட கருவிகளைக் கண்டுபிடித்தது, விவசாயம், எழுத்து, விலங்குகளைப் பழக்கியது அனைத்துமே மீம்கள்தான். அவை அனைத்துமே ஒரு குழுவுக்குள் வைரலாகப் பரவிய யோசனைகள். எழுதும் தாள், வெடிமருந்து, அணு ஆயுதத்தயாரிப்பு எல்லாமே ஒருவகையில் மீம்கள்தான். சுருக்கமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட குழுவின் ஆட்களுக்குள்ளே, பெற்றோரின் மரபணுக்கள் வழியாக வராத எல்லாமே மீம்கள்தான். இதே விளக்கம் நாம் சமூக வலைதளங்களில் பகிர்கிற எல்லா மீம்களுக்கும் பொருந்தும்தானே.
இதற்கும் அரசியல் / சமூக மாற்றங்களைப் புரிந்துகொள்ளுதல் என தலைப்பில் சொல்லப்பட்டதற்கும் என்ன தொடர்பு என்று சிலர் யோசிக்கலாம். அவ்வளவுதான். வந்துவிட்டோம். மீம் கோட்பாட்டைச் சொன்ன டாக்கின்ஸ், மரபணுக்கள் மற்றும் அவற்றின் போட்டி மரபணுக்கள் என்ற ஒரு கோட்பாட்டைச் சொல்கிறார். ஒரு மரபணுவும் இன்னொரு மரபணுவும் ஒரு உயிரித் தொகையில் (Population) அதிக எண்ணிக்கையில் பரவ போட்டி போடும். இந்தப் போட்டியும், இயற்கைத் தெரிவும்தான் பரிணாம வளர்ச்சிக்குக் காரணம். அதை அப்படியே மீமுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
மீம்களும், போட்டி மீம்களும் இருக்கட்டும். முதன்முதலில் மனிதன் நெருப்பைக் கட்டுப்படுத்தக் கண்டடைந்தபோது, அந்தக் குழுவில் சிலருக்கு நெருப்பைப் பயன்படுத்துவதில் மதரீதியான பயங்களோ நெருப்பைப் பற்றிய பொது பயமோ இருந்திருக்கும். நெருப்பைப் பயன்படுத்துதல் என்னும் மீமுக்கும், நெருப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்னும் மீமுக்கும் நடந்த போட்டி. இன்னொரு பொறுப்புத் துறப்பையும் இவ்விடத்தில் நான் வைக்கிறேன். இதுவரை என் சிறிய அளவிலான வாசிப்பில் இந்த மீம் மற்றும் போட்டி மீம்கள் தொடர்பாக எங்கும் வாசித்ததில்லை. எங்கேனும் யாரேனும் எழுதியிருக்க நிறைய வாய்ப்புண்டு. இது என்னுடைய எண்ணம் எல்லது மீம் ஆவதற்குத் தகுதி உடைய ஒரு கருத்து. அவ்வளவுதான்.
ஒரு அரசியல் / சமூக மாற்றம் என்பது ஒரு பரிணாம வளர்ச்சி போலத்தான். மரபணுக்கள் போட்டி போடுவதுபோல மீம்கள் போட்டி போடுகின்றன. சுற்றுச்சூழல் போல சமூக நிலைப்பாடுகளும் நிலையும் செயல்படுகின்றன. ஒரு மீமை முன்னெடுக்கிற நபர்களும், அதை எதிர்க்கிற நபர்களும் இருப்பார்கள். தலைவர்களும் அவர்களுக்கு எதிர் நிலைப்பாடு எடுப்பவர்களும். டாக்கிஸ் பரிணாம வளர்ச்சியை, ஒரு உயிரி என்ற தளத்தில் நோக்காமல் மரபணுக்கள் என்ற தளத்தில் அணுகச் சொன்னதுபோல, அரசியல் / சமூக மாற்றத்தை ஒரு தலைவர், அவரின் கருத்தியல் எதிரிகள் என்ற தளத்தில் அணுகாமல், மீம் என்ற தளத்தில் அணுகலாம்.
- நாம் ஒரு தனி ஒற்றை மரபணு அல்ல. நாம் என்பது ஒன்றோடொன்று இணைந்து செயல்படக்கூடிய மரபணுக்கள், அவற்றைச் சுமக்கும் ஊர்தி (உடல்) என்னும் அமைப்புதான். அதேபோல ஒரு தலைவர் என்பவர் ஒரு ஒற்றை கருத்து கிடையாது. பெரும்பாலும் ஒன்றோடொன்று ஒத்துப்போகக் கூடிய கருத்துகள் கொண்டவர்.
- சிலநேரம் பிற ஜீன்களோடு ஒத்துழைக்காத ஜீன்களும் உண்டு. அதுபோல ஒரு கருத்தியலை முன்வைக்கும் நபர்களிலும் இருக்கக் கூடும். அவர் முன்வைக்கும் கருத்தியலோடு ஒன்றாத, முரணான கருத்துகளும் இருக்கும். அதனால். ஒற்றைக் கருத்தையோ மேற்கோளையோ எடுத்துக்கொண்டு மதிப்பிடுவதற்கு தலைவர்களும் நபர்களும் உலையில் வைத்த சோறு அல்ல. மொத்தமாகவே மதிப்பிட வேண்டும். உதாரணமாக செல்கள் தம்மைத்தாமே அழித்துக்கொள்ள இருக்கும் மரபணு மட்டும் எடுத்துக்கொண்டு மொத்த ஆசாமியும் தற்கொலை எண்ணம் கொண்டவர் என்று சொல்வதற்குச் சமம்.
- ஒரு மரணுவின் வெற்றி என்பது அது வெற்றிகரமாக எவ்வளவு பிரதிகள்.
உருவாக்குகிறது என்பதைப் போல ஒரு கருத்தியலின் வெற்றி என்பது அது எவ்வளவு பேரிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான். - சூழல் என்பது இந்தக் மீம்களுக்கிடையேயான போட்டியில் முக்கியமானதாக ஆகிறது. வடதுருவப் பகுதியும் தென்துருவப் பகுதியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பருவநிலையைக் கொண்டிருந்தாலும் வடதுருவத்துப் பறவைகள் எதுவுமே பென்குயின் ஆகவில்லை. அதுபோல ஒரு இடத்தில் வெற்றிகரமாக நிகழ்ந்த ஒரு அரசியல் / சமூக மாற்றத்துக்கான மீம் இன்னொரு இடத்தில் அதே போன்று வெற்றி பெற வேண்டும் என்பதில்லை.
- ஒரு வெற்றிகரமான பரிணாம வளர்ச்சிக்குப் பின்னால் நிச்சயம் உயிரியல் ரீதியிலான விலை இருக்கும். உதாரணமாக சிக்கலான செயல்களைச் செய்யவும், தர்க்கத்தைப் பரிசீலிக்கவும் பெரிய மூளை வளர்த்துக்கொண்ட மனிதர்களுக்கு, அந்தப் பெரிய மூளையின் காரணமாக பிரசவம் சிக்கலாகியது. மண்டை ஓட்டின் எலும்புகள் ஒன்று சேராமல் நெகிழ்வாகவே இருக்கும்படியான ஒரு நிலை. அதனால் கைகால் இயக்கங்களுக்கு மாதக்கணக்கில் காத்திருக்கவேண்டிய நிலை வந்தது. பெரிய மூளைக்கு நாம் கொடுத்த விலை இது. ஒரு கன்றுக்குட்டி பிறந்த ஒரு மணிநேரத்தில் துள்ளிக்கொண்டு ஓடுகையில், நாம குப்புற விழுவதற்கு 4 மாதங்கள் ஆகிறது. அதேபோல ஒவ்வொரு சமூக மாற்றத்துக்கும் ஒரு விலை இருக்கும். வரலாறெங்கும் நாம் மாற்றத்துக்குக் கொடுத்த விலைகள் மண்டிக் கிடக்கின்றன. நாம் அவற்றோடு வாழ்ந்தே ஆக வேண்டும்.
- ஒவ்வொரு உயிரியின் மரபுத்தொகுதியிலும் சில பிரச்சனையான மரபணுக்களும் உண்டு. உதாரணமாக நம் அனைவருக்குமே புற்றுநோயைத் தூண்டக்கூடிய புற்றுநோய் முன்மரபணுக்கள் (Proto Oncogenes; Onco-புற்றுநோய்) உண்டு. பரிணாம வளர்ச்சி அதை நசுக்கிவிட்டுப் போயிருக்கலாம் என்று நினைக்கலாம். ஆனால் அவற்றை நசுக்கி நகர்வதற்குத் தேவையான அழுத்தம் போதுமான அளவு இல்லாமல் இருக்கலாம். அல்லது அதனால் வேறு உபயோகங்கள் இருக்கலாம். உதாரணமாகச் சில புற்றுநோய் முன்மரபணுக்கள் செல் பிரிகையைத் துவக்கவும், செல்களின் இறுதி நாட்களில் அவற்றை எப்போது அழிக்க வேண்டும் என்று கட்டளையிடவும் உதவுகின்றன. அதேபோல சமூகத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கருத்து இருக்கக்கூடும். ஆனால் அதை முழுமையாக அழித்து நகர்வதற்குத் தேவையான அழுத்தம் இருக்காது அல்லது அதற்கான மறைமுகத் தேவை எங்கேனும் இருக்கக் கூடும்.
ஹாலாஸ்யன் – மரபுக் கவிதை, சிறுகதைகள், அறிவியல் எழுத்து, குழந்தைகளுக்கான எழுத்து என பல துறைகளில் செயல்பட்டு வருகிறார். இவரது நுண்ணுயிர்கள், எஞ்சின்கள் ஓர் எளிய அறிமுகம், சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, எக்காலம், ஆச்சரியமூட்டும் அறிவியல் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து காணொளி வாயிலாகவும் இதழ்கள் வாயிலாகவும் அறிவியல் பதிவுகள் செய்து வருகிறார். தொடர்புக்கு – yes.eye.we.yea@gmail.com