Sunday, July 21, 2024
Homesliderஅம்மாவுக்கு கொரோனா இல்லை (சிறுகதை)

அம்மாவுக்கு கொரோனா இல்லை (சிறுகதை)

அ.மலைச்சாமி


                                                           

திடுமென்ற சத்தம் செவி திருகிய அதிர்ச்சியால் கணிப்பொறியில் நான் ஓட்டிக்கொண்டிருந்த கார் சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. அப்பா பாத்ரூம் பக்கமாக ஓடியது தெரிந்தது.

அம்மா என கூப்பிட்டுக் கொண்டே திறந்து கிடந்த கழிவறைக் கதவருகே சென்றேன். ‘அங்கயே நில்லுப்பா’ என உள்ளிருந்து அப்பாவின் குரல் கேட்டது.

‘என்னாச்சுப்பா’ என்றேன். அப்பா அதற்கு பதில் சொல்லவில்லை. மலக்கோப்பையில் தண்ணீர் உருளும் சத்தம் கேட்டது.

இரண்டொரு நிமிடங்களில் அம்மாவை தன் தோளில் முழுதும் சாய்த்தபடி அப்பா வந்தார். அம்மாவின் நைட்டி நனைந்திருந்தது. ஆறாத்துயரத்தோடு அம்மா அப்பாவைப் பார்த்தாள். அப்பா மீண்டும் கழிப்பறைக்குள் கூட்டிச் சென்றார். சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தபோது, சுவாசிப்பதற்கே அம்மா அசௌகர்யப்படுவது தெரிந்தது. அவள் கண்கள் திறந்திருந்த போதும் எதையும் பார்த்ததாகத் தோன்றவில்லை.

‘வேற நைட்டி எடுத்துட்டு வா’ என்றார் அப்பா. பதற்றத்தோடு ஓடிப்போய் கையில் சிக்கிய ஒரு நைட்டியை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தேன். நைட்டியை வாங்கிக் கொண்டு பாத்ரூம் கதவை மூடினார்.

‘அண்ணன வந்து கார் எடுக்கச் சொல்லு’ என பாத்ரூமின் உள்ளிருந்து அப்பா குரல் கொடுத்தார். ஓட்டமாக ஓடி அண்ணனை மொட்டைமாடியிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தேன். அண்ணன் கிலியோடு ஓடிவந்தான். கதவு மூடியிருந்த போதும் அப்பா மீண்டும் எங்களை வெளியிலேயே நிற்கச் சொன்னார். சில நிமிடங்கள் கழித்து இருவரும் வெளியே வந்தனர். தன்னை முழுவதுமாக அப்பாவின் மேல் சாய்த்தியிருந்தாள் அம்மா. அண்ணனும் நானும் அம்மா கிடத்தப்பட்டிருந்த கட்டிலணுகி நின்றோம். அம்மா கண்களைச் சுருக்கி மூடியிருந்தாள். பேசும் திராணியில் அவளில்லை. அதற்கு அவகாசமும் இல்லை. அண்ணன் சடுதியாகக் கார் எடுக்க ஓடினான்.

ஒரு சட்டைக்குள் தன்னைத் திணித்தவாறு அப்பா வந்தார்.

‘விஷ்வா கார எடு. நானு அம்மாவ தூக்கிட்டு வாரேன்’ என்றார்.

‘மூனு மாசமா எடுக்காததால கார் ஸ்டார்ட் ஆகலப்பா’ என்றான் அண்ணன்.

‘சரி ஆம்புலன்ஸுக்கு போன் போடு’

போன் என்கையில் இருந்ததால் நானே பக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு போன் செய்தேன். நாங்கள் வழக்கமாக செல்லும் மருத்துவமனைதான் அது. நீண்ட கொரோனா எச்சரிக்கைக்குப் பின்தான் அழைப்புமணி அடித்தது. காத்திருப்பை சகிக்கமுடியாமல் இணைப்பைத் துண்டிக்க முனைந்தபோது போனை எடுத்தார்கள். பத்து நிமிடத்தில் வண்டி வந்துவிடும் எனச் சொன்னார்கள்.

நாங்கள் மருகி நிற்பதைப் பார்த்து எங்கள் குடியிருப்பின் பக்கத்து பிளாட்டை சேர்ந்த இரகுநாதன் அங்கிள் வந்து விசாரித்தார். ‘ஆம்புலன்ஸுக்கு காத்திருக்க வேண்டாம். நம் காரில் போகலாம்’ எனச் சொல்லிவிட்டு அவர் காரை முடுக்கிய வேளை. ஆம்புலன்ஸ் எங்கள் குடியிருப்பு வளாகத்துக்குள் வந்தது. முதலுதவி கிடைக்குமென்பதால் அம்மாவை ஆம்புலன்ஸிலேயே ஏற்றினோம். முதல்முறையாக சேலையற்ற வேறொரு வஸ்திரத்தை உடுத்தியபடி அம்மா வீட்டைவிட்டு வெளியேறுகிறாள். நான் எடுத்துக் கொடுத்த நைட்டியின் வலதுகை அக்குள் பக்கம் சிறிய கிழிசலிருந்ததை ஆம்புலன்ஸில் ஏற்றுகையில் பார்த்தேன். சேலை எடுத்துக் கொடுத்திருக்கலாம் தான். ஆனால் அதை அப்பாவுக்கு உடுத்திவிடத் தெரியாது. நான் பெண்ணாய் இருக்கக்கூடும் என்றுதான் மூன்றாவதாக என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி சொல்வாள். கணவன், பிள்ளைகள் என நான்கு ஆண்களுடன் தான் தனித்திருந்தமைக்காக அம்மா துயருற்று நான் பார்த்ததே இல்லை. அம்மாவுக்கு ஏதோவொரு ஊசி போட்டார்கள். அவளிடமிருந்து எழும்பிய ‘ஷ்’ என்ற சத்தம் என் காதில் விழவில்லை. நான் வீட்டுக்குள் ஓடிச்சென்று ஒரு புடவை, ஜாக்கெட்டை எடுத்துக்கொண்டு வந்தேன். முகக்கவசமும் கையுறைகளும் அணிந்திருந்த செவிலியிடம் கொடுத்து, மருத்துவமனை சென்ற பின் அம்மாவுக்கு உடுத்தி விடவேண்டும் எனக் கோரினேன். சேலையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார். விஷ்வா அண்ணனும் அப்பாவும் ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டார்கள். அவர்களுக்கும் முக கவசம் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார்கள் செவிலிகள். அம்மா மிக மெதுவாகக் கையசைத்து எங்களுக்கு டாடா காட்டினாள்.

இளைய அண்ணனான சித்தார்த் எங்கள் ஸ்கூட்டரை வெளியே எடுத்தான். அவன் இன்னும் அந்த வண்டி ஓட்டுவதற்கான உரிமம் வாங்கியிருக்கவில்லை. ஆம்புலன்ஸுக்கு பின்னாலேயே சென்றால் போலிஸ் தொந்தரவு இருக்காது என்று சொல்லியவாறு வேகமாக ஸ்கூட்டரை முடுக்கினான். நானும் அவனுடன் தொற்றிக்கொண்டேன்.

கொரோனா ஊரடங்கு காலமானதால் சாலையில் வெயில் மட்டும் பெருகி நிரம்பி மறுகால் போய்க் கொண்டிருந்தது. வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில்தான் அந்த மருத்துவமனை இருந்தது. ஓரிரு நிமிடங்களில் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றிருந்தோம். ஆம்புலன்ஸிலிருந்து சக்கரப்படுக்கையுடன் அம்மாவைக் கீழே இறக்கி ஐசியூவிற்கு தள்ளிக்கொண்டு போனார்கள். நாங்கள் நால்வரும் அம்மா இருந்த அறைக்கு வெளியே திகிலோடு காத்திருந்தோம். மருத்துவர் கூப்பிடுவதாக ஒரு செவிலி அப்பாவிடம் வந்து சொன்னாள். மருத்துவரைச் சந்தித்துவிட்டு செல்போனில் பேசியபடியே வெளியே வந்தார். விஷ்வா அண்ணனை கூப்பிட்டு ‘ஸ்கூட்டரை ஓட்டிக்கிட்டு நீ பின்னாடி வா’ எனச் சொன்னார். என்னையும் சித்தார்த் அண்ணாவையும் வீட்டுக்குப் போகச்சொன்னார். ஆம்புலன்ஸில் அம்மாவை மீண்டும் ஏற்றினார்கள்.

‘இங்க கொரோனா வார்டு இல்லையாம். அதனால வளசரவாக்கத்தில இருக்குற பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறம்’ என்று சொல்லிவிட்டு விஷ்வா அண்ணன் ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு கிளம்பினான். நானும் சித்தார்த்தும் வீட்டுக்கு நடந்து கொண்டிருந்தோம். வைகாசி உச்சி வெயில். அம்மாவுக்கு கொரோனாவோ என்ற அச்சமே மிகுந்த உஷ்ணமாயிருந்தது. எங்கள் தெருவிலிருந்து மூன்று தெரு தள்ளி ஒரு நபருக்கு போனமாதம் கொரோனா வந்திருந்தது. அதற்காக எங்கள் குடியிருப்பு வளாக ஜன்னல்கள் மூன்று வாரங்கள் பூட்டியே இருந்தன. எங்களிடமிருந்து இந்த சமூகம் விலகிக் கொள்ளுமோ என்று பயமாயிருந்தது.

புனித தோமையார் மலைப் படிக்கட்டருகே இருகரங்களையும் நீட்டிய இயேசுவின் சொரூபம் நிறுவப்பட்டிருந்தது. அவர் வெறும் கைகளையே நீட்டியிருந்தார். பரறங்கிமலையின் அடிவாரத்தில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வந்தோம். இரகுநாதன் அங்கிள் அவரின் எட்டுவயது மகள் மலர்செல்வியுடன் நெகிழிப்பந்தை எத்தி விளையாடிக்கொண்டிருந்தார். எங்களைப் பார்த்தவுடன் மகளுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு சித்தார்த்திடம் விசாரித்துக் கொண்டிருந்தார். நிகழும் விளையாட்டு நின்றுபோன ஏமாற்றத்துடன் அந்தப் பந்தை எத்தினாள் மலர்செல்வி. அது என் காலடியில் மோதியது. அவளின் ஏமாற்றத்தை அசெளகர்யமாக உணர்ந்ததால் நானும் ஒருமுறை பந்தை அவளை நோக்கி எத்தினேன். மலர்செல்வியின் அம்மா வீட்டினுள்ளிருந்து ‘மலரூ’ என உரக்க கூப்பிட்டாள். மலர் செல்வி சிணுங்கலோடு வீட்டுக்குள் போனாள். ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று எங்களுக்கு தைரியம் சொன்னார் இரகுநாதன் அங்கிள். அவர் வீட்டுக்கதவு சாத்தப்பட்டது. நாங்கள் வீடடங்கினோம்.

பணி நிமித்தமாக அம்மா அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று வருவாள். அவ்வாறு வெளியூர் செல்லும்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு வருமளவுக்கு தோசைமாவு, சட்னி அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டுப் போவாள். இருந்தாலும் நாங்கள் கடையில் வாங்கிச் சாப்பிடுவோம். அதற்கெல்லாம் அம்மா எங்களைக் கோபித்துக்கொண்டதில்லை. இன்று காலைதான் ஃபிரிட்ஜை கழுவியிருப்பாள் போலும். இந்த வீடு போல அதுவும் காலியாக இருந்தது.

புக்கத்துறையிலிருக்கும் அம்மாச்சிக்கு சித்தார்த் அண்ணன் போன் செய்து எப்போது வருவாய் எனக் கேட்டான். சென்னை வருவதற்கு இ-பாஸ் கிடைத்த போதும் தன்னை அங்கு கொண்டு வந்துவிட ஆள் இல்லையே என வருந்தினாள். காலையில் மாமாவுடன் வருவதாகச் சொன்னாள். அம்மாச்சியிடம் கேட்டுக்கேட்டு சித்தார்த் அண்ணன் சமைத்தான். அவன் வைத்த குழம்பில் உப்பு, புளிப்பு, காரம் என ஒவ்வொன்றும் மற்றவற்றோடு கோர யுத்தத்திலிருந்தன. அண்ணனும் நானும் அதைச் சாப்பிடவில்லை.

வெண்ணெய் தடவிய பிரட்டை தோசைக்கல்லில் சுட்டு நானும் அண்ணனும் சாப்பிட்டோம். தினமும் காலையுணவாக அம்மா இதையே சாப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறாள். தாத்தாவும் அம்மாச்சியும் அக்கறையான பள்ளியாசியர்களாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள். பெற்றோரின் வழியிலேயே கல்லூரிப் பேராசியரான அம்மா நேரந்தவறுதலை விரும்பியதில்லை. குளியலறையிலேயே சேலையைச் சுற்றிக்கொண்டு வெளியேறி நேராக ஆட்டோவில் ஏறுவதே அம்மாவின் வழக்கம். கேசத்திலிருந்து நீர் சொட்டி அம்மாவின் முதுகும் மேல்சட்டையும் ஊறியபடியே இருக்கும். ஒருநாள் நானும் அம்மாவுடன் ஆபிஸுக்கு போயிருந்தபோது, அம்மாவின் மேசையில் வெண்ணெய் தடவிய சுட்ட ரொட்டி சாப்பிடத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. அம்மாவின் உதவியாளர் கேண்டீனிலிருந்து வாங்கி வந்திருந்தார். ஆனால் அம்மா அன்று நேராக வகுப்பெடுக்கச் சென்றுவிட்டாள். பத்தரை மணிக்கு முதல் வகுப்பை நடத்திவிட்டு மேசைக்கு வந்தாள். நாற்காலியில் உட்காரும்போதே ஃபிரெட்டை எடுத்துத்தின்ன ஆரம்பித்தாள். மேசையிலிருந்த டெலிபோன் ஒலித்தது. உதவியாளர் வந்து போனை எடுத்தார். இரண்டாவது கவளத்தை அப்போது அம்மா மென்று கொண்டிருந்தாள். தொலைபேசி அம்மாவிடம் கொடுக்கப்பட்டது. ஒ.கே மேடம் என்ற ஒற்றை வார்த்தையின் ஒலி எழுந்து அடங்குகையில் அம்மா எழுந்திருந்தாள். கண்ணாடிக் கோப்பையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்து விட்டு அதிகாரியம்மாவை பார்க்கச் சென்றாள். பன்னிரெண்டு மணிக்கு திரும்பி வந்தாள்.

முன்னிரவில் விஷ்வா அண்ணன் வீட்டுக்கு வந்தான். அவனும் வெண்ணெய் ரொட்டிகளையே உண்டான். நாட்டின் பல நகரங்களுக்கு அம்மா அடிக்கடி சென்று வருவதால், அம்மா இல்லாமலும் உறங்கும் பழக்கம் எங்களுக்கு இருந்தது. ஆனாலும் எங்களுக்கு உறக்கம் வரவில்லை.

‘அம்மாவுக்கு கொரோனாவா’ என அண்ணனிடம் கேட்டேன்.

‘தெரியலை’

‘வளசரவாக்கத்துக்கு எதுக்கு கொண்டு போனீங்க?’

‘நெஞ்சு வலிக்குதுன்னுதான் காலைல அம்மா சொன்னாங்கலாம். கொஞ்ச நேரம் கழிச்சு டயரியா ஆகியிருக்கு. அதனால கொரோனாவா இருக்குமோங்குற சந்தேகத்துல வளசரவாக்கம் அனுப்பினாரு’.

‘மியாட்டுக்கோ, இராமச்சந்திரவுக்கோ போயிருக்கலாமே?’

‘நம்ம கையில இப்போதைக்கு காசு இல்ல. கொரோனா சிகிச்சை நம்ம மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில உள்ளடங்கல. ரெண்டொரு நாள்ல அரசாங்கம் அதுக்கு தக்க நடவடிக்கை எடுக்குமாம். அம்மாவோட ஆபீஸ்ல விசாரிச்சோம். இப்ப எந்த ஆஸ்பத்திரியோடவும் MOU (புரிந்துணர்வு ஒப்பந்தம்) இல்லயாம். செலவு பண்ணிட்டதுக்கு அப்பறமா CGHS (மத்திய அரசு மருத்துவ திட்டம்) பிரகாரம் திருப்பி வாங்கிக்கலாமாம். அதுனால அந்த டாக்டர் சொன்னபடி வளசரவாக்கத்துக்கு கொண்டு போனோம்.’

நாங்கள் வழக்கத்தைவிட மிக குறைவாகவே எங்களுக்குள் உரையாடிக் கொண்டோம். காரணமிருந்தும் எங்கள் கண்கள் ஈரமுறவேயில்லை. அழுவதற்கு அதெல்லாம் அனாவசியம்தான் போலும்.

*

காலை எட்டரை மணிக்கு விஷ்வா அண்ணனுக்கு அப்பாவிடமிருந்து போன் வந்தது. அவனை சென்னை சென்ட்ரலில் இருக்கும் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வரச்சொன்னார். காரில் சென்றதால் நானும் அண்ணனுடன் சென்றேன். அம்மாச்சி வருவாளென்பதால் சித்தார்த் அண்ணன் வீட்டிலேயே இருந்தான். காரின் உள்முகப்பில் லூர்து மாதாவின் படம் நின்று கொண்டிருந்தது. தேவாலயம் செல்லும் போதெல்லாம் லூர்துமாதாவின் கெபிக்கு முன்னால்தான் அம்மா தன் செபமாலையை உருட்டுவாள். முக்காடிட்டு முழந்தாளில் நின்று செபிப்பாள்.

அண்ணாசாலையைக் கூட மக்கள் புறக்கணித்திருந்தார்கள். சாலையில் தெரிந்த வாகன ஓட்டிகள் அவசரங்களைச் சுமந்தோடினார்கள். ஒலி எழுப்பாமல் ஒரு ஆம்புலன்ஸ் எங்கள் காரை கடந்ததோடியது. சென்ட்ரல் ரயில் நிலையம் மனிதர்களால் கைவிடப்பட்டிருந்தது. சென்னை நகரையே கொரோனா துப்புரவாக கழுவித் துடைத்து கவிழ்த்து வைத்திருந்தது.

இராஜீவ்காந்தி மருத்துவ வளாகமுகப்பில் அப்பா நின்று கொண்டிருந்தார். அவர் கண்களில் புதிய இடுக்கமிருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லோரும் முகக்கவசம் அணிந்திருந்தார்கள். கண்களை மட்டுமே பார்த்து ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்டனர். ஒரு முகத்தை அடையாளம் காண அதுவே போதுமானது போல. கண்களைப் பார்த்துத்தான் பேசவேண்டும் என அம்மா அடிக்கடி சொல்வாள்.

எங்களையும் அம்மாவைப் பார்க்க விடவில்லை. எங்கள் தேவாலயத்தின் பங்குத்தந்தையான மரியலூயிஸ் வந்திருந்தார். கத்தோலிக்க மதவிவகாரங்கள் குறித்து அம்மா இவருடன் விவாதிப்பதுண்டு. அருட்தந்தை மரியலூயிஸ் எழுதும் செபங்களை அம்மாதான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வாள். இயேசு தன் போதனைகளால் மனிதர்களை பாவிகளாகவே சித்தரிக்கிறார் என சொன்னதற்காக அருட்தந்தை அம்மாவை கோபித்துக் கொண்டார். பின்னொரு நாளில் அருட்தந்தை கொடுத்ததாக ஒரு புத்தர் சிலையை அம்மா கொண்டு வந்தாள். எங்கள் வீட்டு கணிப்பொறி மேசையில் புத்தர் போதித்தபடி இருக்கிறார். அம்மா அவரைப் பார்த்தபடி இணைய வகுப்புகளை நடத்துவாள்.

அப்பா அருட்தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தார். இன்று காலை ஐந்துமணி வாக்கில் அம்மாவுக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்ததாம். வளசரவாக்கம் மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக இருந்ததால், மாரடைப்பு சிகிச்சையளிப்பதற்கான உயர் மருத்துவ உபகரணங்கள் அங்கில்லை. ஆகவே இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்களாம். ஆம்புலன்ஸில் வரும்போதே அம்மாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாம். எதையும் பேச முயற்சிக்காமல் அம்மா, அப்பாவின் கைகளைப் பற்றிக் கொண்டாளாம். இங்கு வந்தவுடன் மருத்துவ சிகிச்சைகள் தொடங்கிவிட்டதாக அப்பா, அருட்தந்தையிடம் துயரத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

அம்மா பணியாற்றும் கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றும் சீனிவாசன் சார் வந்திருந்தார். அப்பாவும் அண்ணனும் அருட்தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தமையால் ‘அம்மாவுக்கு என்னவாயிற்று’ என என்னிடம் கேட்டார். நானும் சொன்னேன்.

அம்மா சிகிச்சை பெறும் வார்டை அருட்தந்தையவர்களுக்குக் காட்டுவதற்காக அப்பா அவரைக் கூட்டிச்சென்றார். விஷ்வா அண்ணன் அம்மாச்சிக்கு போன்செய்து சிகிச்சை நிலவரங்களை விவரித்துக் கொண்டிருந்தான். சீனிவாசன் சாரும் சற்று தள்ளிப்போய் போனில் பேசிக்கொண்டிருந்தார். தேவாலயத்தில் திருப்பலி பூசை தொடங்குமுன், பங்குத்தந்தையிடம் பாவமன்னிப்பு கேட்கும் பக்தனின் பாவனை அவரிலிருந்தது. ஓ.கே மேடம்.. ஓ.கே மேடம் என நெளிந்தார். கைபேசியை காதிலிருந்து எடுத்தபின், சில வினாடிகள் செல் திரையை பார்த்துக்கொண்டே இருந்தார். எதிர்முனையில் பேசியவர் இணைப்பைத் துண்டித்ததை உறுதிசெய்த பின் திரைமூடியை அழுத்தி கைப்பேசியை சட்டைப் பையிலிட்டார். நெடு நேரம் அழுத்திக் கொண்டிருந்த சிறுநீரை கழித்துவிட்ட ஆசுவாசம் போல் ‘ஷ் அப்பா’ என்றார். பின்னர் அக்கறையுடன் என் சேமநலங்களை விசாரித்தார். தைரியப்படச் சொன்னார்.

அலுவல் நிமித்தமாக முன்பொருநாள் அம்மாவுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாராம் சீனிவாசன் சார். திருவான்மியூர் அருகே சாலையோரம் கூட்டமாக மனிதர்கள் நிற்பதைப் பார்த்து அம்மா ஆட்டோவை நிறுத்தச் சொன்னாராம். ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி விழுந்து கிடந்தாளாம். அப்பெண்ணின் காலில், வழிந்த குருதிக்கோடு இருந்ததாம். அம்மா அதனைத் தன் கைக்குட்டையால் துடைத்து விட்டாளாம். சுற்றி நின்றவர்களை ஆங்கிலக் கெட்டவார்த்தைகளால் திட்டினாளாம். தன்னுடைய கைப்பேசியிலிருந்து 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வந்தபின் அப்பெண்ணை அதில் ஏற்றிவிட்டாளாம். இதனால் அன்று வகுப்புக்கு தாமதமாக சென்றாளாம் அம்மா. அதற்காக சீனிவாசன் சார் முன்னாலேயே அம்மாவை அதிகாரியம்மா கடிந்து கொண்டாளாம். இப்போது அக்கறையாக விசாரிப்பதாக விதந்தார்.

நாங்கள் மருத்துவமனையில் காத்திருந்த அந்த இரண்டு மணிநேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பல உடல்கள் வெளியேறிக் கொண்டே இருந்தன. கொரோனா அச்சம் காரணமாக, மூச்சிழந்தவர்கள் படுக்கையிலும், மூச்சுவிடுவோர் அப்படுக்கையைத் தள்ளுகிறவர்களுமாக எல்லோரும் முழுதும் மூடிய சீருடையிலிருந்தார்கள். அந்த உடல்களுக்காக அங்கிருந்தவர்கள் யாரும் அழவில்லை. அழுபவர்களை அங்கு அவர்கள் அனுமதிக்கவில்லை.

பகல் பன்னிரண்டு மணியானது. விஷ்வா அண்ணன், அப்பா, அருட்தந்தை ஆகிய மூவரும் பொசுங்கிய முகத்தோடு வெளியே வந்தார்கள். அம்மாவின் கைப்பேசி விஷ்வா அண்ணனின் கையிலிருந்தது. நான் சேலையைத் திணித்துக் கொடுத்த கட்டப்பை அப்பாவின் கைகளிலிருந்தது. அன்றைய பொழுதுக்கான அழுகை அந்த சூழலுக்கு அப்போது அறிமுகமாகியிருந்தது. அம்மா சர்வலோக வியாபியாக பெருகியிருந்தாள். உடலாக எஞ்சியிருந்தாள். ‘அம்மா’ என வீறிட்டேன். மருத்துவமனைப் பணியாலொருவர் சமூக இடைவெளி விட்டு அருட்தந்தையிடம் வந்து ஏதோ சொன்னார். பின்னர் அருட்தந்தை எங்களை எங்கள் காருக்கு அழைத்துச் சென்றார். காருக்குள் சென்றமர்ந்தோம். சர்வ வல்லமை பெற்ற துக்கம் எங்களைத் தழுவியிருந்தது. யாரும் யாரையும் தேற்றத் துணியாததால் தனித்தழுதோம். அப்போதும் எந்த அழுகைச் சத்தமும் அந்த பிரதேசத்திற்கு கேட்டிருக்காது.

அம்மாவின் பேர்சொல்லி ஒரு மருத்துவப் பணியாள் அழைத்துக் கொண்டிருந்தார். அப்பாவும், அருட்தந்தையும் மருத்துவமனைக்குள் சென்றார்கள். சில நிமிடங்களில் வெளியே வந்தனர். சீனிவாசன் சார் போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச்சில்தான் எத்தனை மேடம்கள், சார்கள்!

விஷ்வா காரை எடு என்றார் அருட்தந்தை. விஷ்வா அண்ணன் அவரை ஏறிட்டுப் பார்த்தான். வார்த்தையாக்கப்படாத அந்தக் கேள்வி புரிந்தது போல ‘அம்மாவுக்கு எடுத்த கொரோனா டெஸ்ட் ரிசல்ட் இன்னும் வரலையாம். அதனால நாளக்கித்தான் கிடைக்குமாம்’ என்றார் அருட்தந்தை மரியலூயிஸ்.

விஷ்வா அண்ணன் காரை முடுக்கினான். உலகிற்கு வருவோர், போவோர், வாழ்வோருக்காக அப்போதும் அந்த மருத்துவமனை வளாகத்தின் முன்கதவம் திறந்தே கிடந்தன. கார் வெளியேறும்போது நான் மருத்துவமனையைத் திரும்பிப் பார்த்தேன். சக்கரப்படுக்கையில் ஒரு உடலை இரு உடல்கள் தள்ளிக்கொண்டு போவது தெரிந்தது. அம்மாவும் இப்படித்தான் போவாளாயிருக்கும். அம்மா தன் பேரில் வங்கிக்கடன் மூலம் வாங்கிய காரின் சக்கரங்கள் அண்ணாசாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. காரில் ஏ.சி போட்டிருக்கவில்லை. காரின் கண்ணாடிக் கதவுகளையும் திறந்து கொள்ளவில்லை. பாடல்கள் ஒலிக்கவும் இல்லை. எங்கள் மூச்சு அக்காரினுள் நிறைந்திருந்தது. எல்லோரின் மூச்சொலியையும் என்னால் தனித்தறிய முடிந்தது. எங்களைக் கண்காணித்தவாறு அருட்தந்தை தன் பைக்கில் பின்தொடர்ந்தார்.

அம்மாச்சி புக்கத்துறையிலிருந்து வந்திருந்தார். அம்மாச்சியிடம் யார் சொல்வது என்று எல்லோரும் சிந்தித்தோம். யாருக்கும் அத்துணிவு வரவேயில்லை. நாங்கள் வீட்டுக்குள் நுழைந்தபோது லூர்துமாதா படத்தின் முன் கண்களை மூடி ஜெபமாலையை நீவி உருட்டிக் கொண்டிருந்தாள். கன்னங்களில் வற்றிய நீர்த்தடமிருந்தது. நாங்கள் யாரும் அம்மாச்சியிடம் எதுவும் சொல்ல முனையவில்லை. அவள் கேட்கவும் முனையவில்லை. அதெல்லாம் அனாவசியம் என்பது போல அம்மாச்சியின் கைகளிலிருந்த செபமாலை சீராக உருண்டு கொண்டிருந்தது.

வீடு வெறும் கட்டிடமாகியிருந்தது. அம்மா உறங்கிவிட்டதால் எங்களில் யாருக்குமே உறக்கம் கூடவில்லை.

அம்மாவின் கைபேசியை அன்றிரவு நான்தான் வைத்திருந்தேன். அதற்காக யாரும் என்னுடன் சண்டை பிடிக்கவில்லை. அம்மாவின் கைபேசிக்கு அன்று எந்த அழைப்புகளும் வரவில்லை. வழக்கமாக உறவுக்காரர்கள் யாராவது அழைத்தால் அந்த அழைப்பையேற்று பேசச்சொல்வாள். அலுவல் நிமித்தமென்றால் அதை அம்மா மட்டுமே பேசுவாள். இப்போது யாரேனும் அழைப்பார்களோ என பயமாக இருந்தது. அழைத்தால் என் செய்வதெனத் தெரியவில்லை.

அம்மா செல்போனின் முகப்பு படமாக லூர்து மாதாவே இருந்தாள். மத்திய அரசின் ‘ஆரோக்ய சேது’ செயலி தரவிறக்கப்பட்டிருந்தது. தொடுமுன் திறந்தது. முகப்பில் ‘நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அம்மாவின் முகநூல் பக்கத்தில் அம்மாவின் பலநூறு முகங்கள் இருந்தன. பெரும்பாலும் அம்மாவின் பள்ளித்தோழிகள் மற்றும் அம்மா கற்பித்த மாணவர்களின் படங்கள். முதுகலை கட்டிடப் பொறியியல் படிக்கும் விஷ்வா அண்ணனின் வரைபடங்களை பெரும் பெருமிதங்களுடன் பகிர்ந்திருந்தாள். புத்தரின் படங்களும் போதனைகளும் அம்மாவால் அதிகம் பகிரப்பட்டிருந்தன. அம்மாவின் மடிக்கணியைத் திறந்தேன். அஜய் கே பாண்டே, ராபின் சர்மா, இராமச்சந்திர குஹா போன்றோரின் மின்புத்தகங்கள் நிறைய இருந்தன.

‘ஆன்மத் திளைப்பு’ என்றொரு தொகுப்பிருந்தது. அது முழுவதும் இளையராஜாவின் பாடல்களாகவே இருந்தன. அவர் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் அம்மா தன்னிலையில் திளைப்பாள். அதுவும் ‘அழகிய கண்ணே உறவுகள் நீயே’ என்ற பாடல் அம்மாவை ஊழ்கத்திலாழ்த்தும்.

இரவு ஒன்பது மணிக்கு அருட்தந்தை மரியலூயிஸ் வீட்டுக்கு வந்தார். அம்மாவுக்கு கொரோனா தொற்று இல்லையென்ற ஆய்வக முடிவு இணையதளத்தில் வெளிவந்திருப்பதாகச் சொன்னார். அம்மாச்சி உட்பட எல்லோருக்கும் ஒரு ஆசுவாசம் கிட்டியது. அருட்தந்தை ஒருமாதிரி நெளிந்தார். அந்த நெளிவில் அவர் கழுத்துச் சங்கிலியில் பிணைத்திருந்த சிலுவை ஊசலாடியது. அம்மாச்சிதான் ‘கர்த்தருக்கு நன்றி’ என அரற்றினாள்.

அம்மாவின் மேசையிலிருந்த இழுப்பறையைத் திறந்தேன். ஒரு பொதி தாள்கள் அதிலிருந்தன. அம்மா வாங்கிய வங்கிக்கடன்கள், திரும்பச் செலுத்திய விவரங்கள் அவை. வீட்டுக்கடனுக்கான தவணைக்காலத்தைப் பார்த்தேன். அக்கடன் தீர இன்னும் இருபதாண்டுகள் அம்மா சம்பாதிக்க வேண்டியிருந்தது. அப்பாவின் சொற்ப வருவாயை நம்பி வாங்கப்பட்டவையல்ல அக்கடன்கள். அவையெல்லாம் அம்மாவின் கனவுகள். விஷ்வா, சித்தார்த், அப்பா, நான் என எங்கள்மீது அம்மா கண்ட கனவுகள். அவள் பிணவறையிலிருக்கும் இவ்வேளையில் அவள் கடன்பட்டு வாங்கிய வீட்டில் படுத்திருக்க என் மனம் பிசைவுண்டது. இந்த தெய்வங்கள் மீதெல்லாம் தீச்சொல்லிட எனக்கேதோ உரிமை வந்துவிட்டது போல ஆவேசம் வந்தது. அந்தத் தாள்பொதியை இழுப்பறைக்குள் வீசினேன். குழந்தை யேசுவை நெஞ்சோடு அணைத்தபடியிருக்கும் மரியாளின் டிஜிட்டல் படமொன்று அப்பொதியிலிருந்து நழுவி விழுந்தது. அந்தப் படத்தை என்னால் நெடுநேரம் பார்க்க முடியவில்லை. அப்படத்தை இழுப்பறைக்குள் போட்டு தள்ளிச் சாத்தினேன். வீட்டைச் சுற்றிப் பார்த்தேன். இரவு போல அம்மா பெருகிக் கொண்டிருந்தாள்.

கிழக்கில் மஞ்சள் முறுகிக் கொண்டிருந்தது. எங்கள் குடியிருப்பு வளாகத்தின் முன்கதவம் நெடுநேரமாக திறந்தேயிருந்தது. வளாகத்தில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகளின் குரல்கள் வற்றியிருந்தன. அபாய ஒலியின்றி ஆம்புலன்ஸ் வளாகத்துக்குள் வந்தது. அதோடு நிறைய மனிதர்கள் மொதுமொதுவென வளாகத்திற்குள் வந்தார்கள். திறந்திருந்த போதும் இவர்கள் ஏன் இரும்புக்கிராதிக்கு வெளியே நின்றார்கள் எனத் தெரியவில்லை. அவர்கள் முகங்கள் பேதலித்திருந்தன. சங்கடமின்றி அழுதார்கள்.

மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் போன அம்மா தன் சிரமத்தைக் கைவிட்டுத் திரும்பினாள். அம்மாவைக் கூடத்தில் கிடத்தினார்கள். புனித தோமையார் மலைக்கோயிலிலிருந்து அருட்தந்தை சந்தியாகு வந்திருந்தார். திருச்சபை சார்பில் செபம் செய்தார். உப்புக்கலந்த நீரை அம்மாவின் மீது தெளித்தார்.

ஜெகநாதன் அண்ணா ரோஜாப்பூ மாலை கொண்டுவந்து அம்மாவுக்கு போட்டார். அவரின் அம்மாவும் வந்திருந்தார். பள்ளியில் தனக்குப் போட்ட சத்துணவில் புழு இருந்ததைப் பார்த்துவிட்டு, அதைக் கொண்டுபோய் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஜெகநாதன் அண்ணா காட்டினாராம். ‘பறப்பயலுக்கு இம்மாந் திமிரா’ என அந்தத் தலைமையாசிரியர், ஜெகநாதன் அண்ணாவை அடித்ததுடன், அவரின் அம்மாவையும் அழைத்துக் கண்டித்தாராம். அம்மாதான் அந்த தலைமையாசிரியர் மீது மாவட்ட கல்வியதிகாரி மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகாரளித்தாராம். இனி அந்தப் பள்ளிக்கு போகமாட்டேன் என அடம்பிடித்த ஜெகநாதன் அண்ணாவை அம்மாதான் கான்வெண்ட்டில் சேர்த்துவிட்டாள்.

முன்பு எங்கள் வீட்டில் பாத்திரம் துலக்க வரும் பார்வதி பாட்டி வந்திருந்தாள். சொந்தவீடு கொஞ்சதூரம் தள்ளி அமைந்து விட்டதால் பார்வதி பாட்டி அடிக்கடி வருவதில்லை. ஆனால் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் எங்களுக்குக் கண்ணேறு கழிக்க வருவாள். அருட்தந்தை மரியலூயிஸ் கட்செவி அஞ்சலில் இதனை ஆட்சேபித்திருந்தார். கிறிஸ்துவிற்கு எதிரானது என்றார். அருட்தந்தை இவ்வாறு ஆட்சேபித்த பத்து நாட்களுக்குப் பின்னர் அம்மா இப்படி பதில் சொல்லியிருந்தாள்.

‘புத்தனைப் பெற மாயா என்ற பெண் கருவுற்றாள். இராமனைப் பெற கோசலை கருவுற்றாள். இயேசுவைப் பெற மரியாள் கருவுற்றாள். புத்தனும், இராமனும், இயேசுவும் தங்களைத் ஒருங்கு திரட்டிக்கொள்ளவில்லை. மாறாக ஒன்றன்மேல் ஒன்றாய் தங்களை அடுக்கிக் கொண்டார்கள். மரியாளில் எல்லா தாயாரும் திகழ்கிறார்கள். ஒரு கிறிஸ்துவ பெண்ணாக நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மரியாளின் மைந்தனான கிறிஸ்துவும் என்னை ஏற்றுக்கொள்வார்.’

பார்வதி பாட்டி தான் கொண்டு வந்திருந்த செவ்வந்தி மாலையை அம்மாவின் காலடியில் வைக்க முயன்றாள். கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அருட்தந்தை மரியலூயிஸ் அந்த செவ்வந்தி மாலையை வாங்கி அம்மாவின் முகத்தருகே சாத்தினார்.

அம்மா பணியாற்றும் கல்லூரியில் துப்புரவு பணியாற்றும் ஊமைப்பெண் வந்திருந்தாள். அம்மாவின் அறையை வழக்கமாக இவள்தான் துப்புரவு செய்வாள். ஒருநாள் அம்மாவின் ஆபிஸிற்கு போயிருந்த போது நான் கேட்காமலே எனக்கு காசு கொடுத்து கேண்டீனிற்கு அனுப்பினாள் அம்மா. கேண்டினில் காபி பருகிக்கொண்டிருந்த போது அருகிலிருந்த எழுதுபொருளங்காடியில் இந்த ஊமைப்பெண் நின்று கொண்டிருந்தாள். கேண்டீனிலிருந்து திரும்பி வந்தபோது அம்மாவின் அறைக்கதவு உள்தாழ் போட்டியிருந்தது. சிறிது நேரம் வெளியிலேயே நின்றிருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து இந்த ஊமையம்மா அம்மாவின் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள். நான் அறைக்குள் சென்றபோது அம்மா சேலையை இழுத்து விட்டபடியே தன் நாற்காலியை நோக்கி போய்க்கொண்டிருந்தாள். ஊமையம்மா துடைப்பத்தோடு மீண்டும் அறைக்குள் பிரவேசித்தாள். தன் பின்னிடுப்பில் இடது உள்ளங்கை வெளித்தெரியுமாறு வைத்து வலது கையால் தரையை பெருக்கிக்கொண்டிருந்தாள். அவளின் இடது உள்ளங்கையில் ‘விஸ்பர்’ என எழுதியிருந்தது. இந்த ஊமையம்மாவைப் அம்மாவிடம் விசாரிப்பேன். பணியாளர்களின் சொந்த வேலைகளை துப்புரவுப் பணியாளர்கள் செய்துகொடுக்கக் கூடாது எனச் சொல்லி ஊமையம்மாவை வேறு தளத்திற்கு மாற்றிவிட்டதாக அம்மா சொன்னாள்.

அக்கம்பக்கத்திலிருந்த உறவுக்காரர்கள் சிலர் வந்திருந்தனர். அலுவல் தொடங்கும் ஒன்பதரை மணிவாக்கில் அம்மாவுடன் பணியாற்றிய கல்லூரிப் பணியாளர்கள் ஒருவர்பின் ஒருவராக வந்து கொண்டிருந்தனர். மரபாகக் கைகூப்பி வாசலில் நின்றிருந்தார் அப்பா. கொரோனா விழிப்புணர்வின் பொருட்டு அரசு வலியுறுத்தியிருப்பதால் அவர்கள் யாரும் அப்பாவின் கைகளைத் தொடவேயில்லை. சிலர் மட்டும் துணிந்தார்கள். அவர்கள் கையுறை அணிந்திருந்தார்கள்.

அஞ்சலி செலுத்திய பணியாளர்கள் அணியணியாக நின்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அணிக்கு ஒருநபர் அடுத்த அணியில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை நோட்டமிட்டபடியே இருந்தனர். எந்த அணியிலும் இல்லாமல் ஓரிருவர் அம்மாவின் அருகில் கசிந்தழுதார்கள்.

ஆம்புலன்ஸ் மீண்டும் வளாகத்துக்குள் வந்தது. எங்கள் சொந்த ஊரான புக்கத்துறையில் அம்மாவை நல்லடக்கம் செய்வதாக முடிவு செய்திருந்தோம். ஆம்புலன்ஸ் வந்தவுடன் சில பணியாளர்கள் அப்பாவிடம் செவிச் சொற்களை அவிழ்த்தனர். சற்று தூரத்தில் ‘எஸ் மேடம்’, ‘கெட்டிங் ரெடி மேடம்’, ‘வி இன்பாம்டு வித் மேடம்ஸ் ஹஸ்பண்ட் மேடம்’, ‘ஷூர் மேடம்’ ‘டெஃபனட்லி மேடம்’ என செல்போனின் எதிர்க்குரலுக்கு தன்னை வளைத்து ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பணியாளர்.

ஒன்றரை நாழிகைக்குப் பின் ஒரு இன்னோவா கார் குடியிருப்பு வளாகத்துக்குள் வர முனைந்தது. ஆம்புலன்ஸ் தவிர புறவாகனங்கள் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. பரபரப்புடன் காவலாளியிடம் அலுவலர்கள் அணியொன்று போனது. அவர்கள் பல்வேறு அணிகளிலிருந்தவர்கள். காவலாளி வருமுன் அவர்களே முன் கதவங்களை அகலத் திறந்தார்கள். இன்னோவா உள்ளே வந்தது. கார் கதவைத் திறப்பதற்காக மூன்றுபேர் ஓடினார்கள். அதிகாரியம்மா மிடுக்கோடு வெளியே வந்தார். நாளிதழில் சுற்றப்பட்டிருந்த சிறிய மலர்வளையத்தை ஐந்துபேர் சேர்ந்து பிரித்தார்கள். மலர்வளையம் வாங்குவதற்காக கூட அதிகாரியம்மாவை அவர்கள் திரும்பவிடவில்லை. மாலைகள் எல்லாவற்றுக்கும் முன்பாக மலர்வளையம் வைக்கப்பட்டது. சில கேமரா வெளிச்சங்கள் அதனை நிழலாவணமாக்கிக் கொண்டிருந்தன.

எதையோ குடைவது போல அதிகாரியம்மா அம்மாவை உற்றுப் பார்த்தாள். அலுவலர்கள் எல்லோரும் அதிகாரியம்மாவை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதிகாரியம்மா தன் கண்களை அந்தக் கூடம் முழுக்க சுழலவிட்டார். அந்தப் பார்வையில் அகப்படுவதற்காகவும், தப்புவதற்காகவுமாய் சமூக இடைவெளி பற்றிய அக்கறையைக் கைவிட்டு அலுவலர்கள் முண்டினார்கள். ஊமையம்மா அதிகாரியம்மாவை சட்டை செய்யாமல் நின்று கொண்டிருந்தாள்.

அதிகாரியம்மா வாசல் பக்கமாக திரும்பினார். அதனைக் கண்டுகொள்ளாதது போல அலுவலர்களும் திரும்பினார்கள். அதிகாரியம்மா வெளியேறினார். அலுவலர்கள் நழுவினார்கள்.

ஆம்புலன்ஸ் வீட்டு வாசலையொட்டி வந்து நின்றது. அம்மாவை ஏற்றினார்கள். அப்பாவும் ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டார். முதல் முறையாக டாட்டா காட்டாமல் வீட்டைவிட்டு வெளியேறினாள்.

வீட்டுக்குள் சென்று புக்கத்துறை போவதற்கு தேவையான பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்தோம். மலர்செல்வி பூக்கள் சிதறிக் கிடக்கும் எங்கள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். நாங்கள் யாரும் அவளிடம் பேசவில்லை. கட்டைப்பையுடன் வாசலுக்கு வந்தேன். விஷ்வா அண்ணன் காரை எடுத்துக் கொண்டிருந்தான். மலர்செல்வி என்னருகே வந்து நின்றாள்.

‘ஆன்ட்டிக்கு கொரோனாவா’

‘இல்ல’

‘அப்பறம்’

‘ஹார்ட் அட்டாக்’

‘அத யாரு ஆன்டிக்கு பரப்புனா’

பதிலுக்காக நான் தவித்துக் கொண்டிருந்தபோது விஷ்வா அண்ணன் என்னைக் காரில் ஏறச்சொன்னான். மலர்செல்வி எங்களுக்கு ‘டாட்டா’ காட்டினாள். வளாகக் கதவருகே காரை நிறுத்தி யாராவது தேடி வந்தால் புக்கத்துறையில் நடக்க இருக்கும் இறுதிச்சடங்கு பற்றிய விவரங்களை சொல்லுமாறு காவலாளிக்கு தகவல் சொல்லிக் கொண்டிருந்தான் விஷ்வா அண்ணன். காவலாளியின் அறையில் தொங்கிய நாட்காட்டியில் விவேகானந்தர் நெஞ்சு நிமிர்த்தி அத்துவானத்தை பார்த்துக் கொண்டிருந்தார். ‘எழுமின் விழுமின்’ என்ற அவரின் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நான் திரும்பி மலர் செல்விக்கு டாடா காட்டினேன்.

சாலையில் கார் இறங்கியது. மலர்செல்வி அப்போதும் தன் கையசைப்பை நிறுத்தவில்லை. அழுவதற்கு அனாவசியமான கண்ணீர் என் கண்களில் திரண்டுருண்டு வழிந்தோடியது.

***

அ.மலைச்சாமி

ஆசிரியர் தொடர்புக்கு thayuran.26@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

 1. அம்மாவுக்கு கொரானா இல்லை

  நன்று….

  கதாப்பாத்திரங்களின் பெரும்பாலா பெயர்கள், அம்மாபட்டிக்காரர்களே எனலாம் அல்லது நினைவூட்டுகிறது எனலாம்.

  பணிவு, நெளிவு, குழைவு, வளைவு…. உதவியாளர்களிடம் மட்டுமே என்பதனை போன்ற கருத்தினை ஏற்க முடியாது. ஏனெனில் தன்னை மிஞ்சிய மேல்மட்டத்திடம், கீழ்மட்டம் அப்படித்தான் இருக்கிறார்கள். இருக்கப்படியே மேல்மட்டமும் விரும்புகிறது. இதை எல்லாத் துறைகளிலும் காண முடிகிறது. ஆங்கியேலர்கள் கற்றுத்தந்த அல்லது விட்டுச்சென்ற அலுவலகக் கலாச்சாரம்
  இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

  திருமண விருந்தில் ரசத்தை உருவாக்கியது.

  ஐந்து அப்பம் & இரன்டு மீனை வைத்துக் கொண்டு பெருங் கூட்டத்திற்கு உணவிட்டது.

  👆 என்றெல்லாம் வாசித்தாலும், பிரசங்கம் கேட்டாலும் ஜாதிய பேதம் முற்றாக மறைந்தபாடில்லை. ஏனெனில் இயேசுவை மதத்தின் ஆக்கக் கர்த்தாவென மட்டுமே பார்க்கிறோம். அக்காலத்திய ” மத, சமூக சீர்திருத்தவாதியாக ” பார்ப்பாரில்லை அல்லது அத்தகைய பார்வையில்லை எனலாம்.

  // என் பாவமே… என் பாவமே…. என் பெரும்பாவமே….. // என்கிற “சுய அறிக்கை” செய்கின்ற முறை இன்றும் திருப்பலிச் சடங்கில் உண்டு. உடல் இச்சை, சரீர சம்பந்தம் என்கிற பாவத்திலேதான் ஜனனம் நிகழ்கிறது என்ற நம்பிக்கையும் உண்டு.

  // கண்களைப் பார்த்து மட்டுமே பேச வேண்டும் // எல்லோருக்குமான நல்லதொரு அறிவுரை.

  மாத விலக்கு, கர்ப்பம் தரித்தல்… பெண்ணினத்திற்கு வரமும் அதுவே
  சாபமும் அதுவே. ஆனால் சிரமத்திற்கு தீர்வும் அவசியம். அது எல்லாப் பெண்ணிற்கும் பேதமின்றி சென்றடைய வேண்டும் என்பது அவசியம். அக் ஷய் குமாரின் Pad Man திரைப்படம் காண வேண்டிய ஒன்று.

  தோமையார் ஆலயப் படிக்கட்டின் அருகேயுள்ள இயேசுவின் பற்றி பேசும் போது,

  “வெறுங்கை” என்ற வார்த்தையமைப்பு நெருடலை தருகிறது. அது பரலோகத் தந்தையை நோக்கி, ஒப்புக் கொடுக்கும் கரங்கள்… ஏந்திக்கொள்ள , எடுத்துக் கொள்ள ஏங்கும் கரங்கள்… என்று பொருள் உணர்த்தக் கூடும். சொருப அமைப்பு ஒரு குறியீடே. பொருள் கொள்வது அவரவர் தனிப்பட்ட எண்ணத்தைப் பொறுத்தது.

  // வீடு கட்டிடமாகி போனது // – நுட்பமான வார்த்தையமைப்பு. வீடு வேறு , கட்டிடம் வேறு.

  ரஜினி காந்த் பண்டரி பாய்க்கு பணி செய்ய, ஜேசுதாஸ் பாடியதெல்லாம் திரைப்படத்தில் கண்டோம். இக்கதையில் மகனை அனுமதிக்காது, தந்தையே பார்த்துக் கொள்கிறார். இல்லறத்தில் பெண் மகவின் அவசியத்தினை உணர்த்திடவே.

  பல்வேறு பட்ஜெட்களை உள்ளடக்கியதே அரசு ஊழியர்களின் வாழ்க்கைப் பயணம்.

  ” சமையற்கலையை ” ஆடவர்களுக்கும் கற்றுத் தரவேண்டும் என்கிற அறிவுரை மறைமுகமாய் உள்ளது. Swiggy , zomoto வந்த பிறகு, அது காலத்தின் கட்டாயம் என்றும் துணிவாய் சொல்ல முடியாதல்லவா?

  // இரண்டு உடல்கள் சேர்ந்து ஒரு உடலை தள்ளிக் கொண்டு சென்றது // – பட்டினத்தார், கண்ணதாசனின் பார்வையிது.

  ” டாட்டா ” சொல்லாது செல்கின்ற பயணம்… நெஞ்சை கணமாக்குகிறது.

  தாயின் கணக்கை முடித்து வைத்தாலும், தன்னம்பிக்கையையூட்டும் கம்பீரத்துடன் விவேகானந்தரின் புகைப்படத்தில் தெரிகிறது
  அத்தாயின் எண்ணம், அறிவுரை.

  அஜய் பாண்டே, ராபின்சர்மா, இராமச்சந்திர குகா போன்ற நடப்பு வட இந்திய எழுத்தாளர்களை நம்மவர்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு பாராட்டுகள்.

  மொத்தத்தில் மெச்சும்படியுள்ளது…💐💐💐

  என் சிற்றறிவிற்கு எட்டியவரை கிறுஸ்த்தவ மதத்தை பின்பற்றுவோர் எவரும் ” விஷ்வா, சித்தார்த் ” என பெயரிட்டு பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை.

  மதத்தை கடந்த புத்தகவாசிப்பாளர்களால் மதப்பற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

  👆 இது மதத்தை வென்ற குடும்பம் போலும். இவர்களின் வீட்டிலே பங்குதந்தையே வழங்கிய புத்தரும் உண்டு. லூர்து மாதாவும் உண்டு. ஜெபமாலை உருண்டுவதன்வழியே தியானமும் உண்டு. வீரத்துறவி விவேகானந்தரும் உண்டு. விஷ்வாவும் உண்டு. சித்தார்த்தனும் உண்டு.
  இந்த அங்கீகாரம் , ஆழ்ந்து அகன்ற அறிவினால் மட்டுமே வரக்கூடும்.

  மூப்பு, பிணி, சாக்காடு

  👆 இதை எல்லோரும் கடந்தேயாக வேண்டும். நாம் புறக்கணிக்க முயன்றாலும்
  இவைகள் நம்மை புறக்கணிக்காது ஆட்கொண்டே தீரும். மதபேதமே இங்கில்லை. எம்மதத்திலும் தீர்வு இல்லை என்பதே எதார்த்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular