அமிர்தம் சூர்யா
1. வானிலை அறிக்கை
*
பசுவின் மடியை முத்தமிட துடித்து தோற்கிறது
நேராக பெய்யும் மழை
கருப்பு மரவட்டையை நனையாமல் காக்கிறது
அந்த வெள்ளை காளான் குடை
சிலிர்க்கும் குளிரை பூசிக்கொள்ளவே
உரிக்க தொடங்குகிறது அரவம் தன் சட்டையை
ஒரு போதும் நனைவதில்லை – தொப்பலான பின்னும்
காக்கை அடைக்காக்கும் முட்டை
குட்டிகுட்டி சமுத்திரத்தால் மூழ்குகிறது
கீற்று குடிசையில் தலையணை தீவு
நனைந்தபடி தலை துவட்ட யசோதரையின்
கதவை தட்டுகிறான் கடைசி புன்னகையோடு புத்தன்
மழை இப்போது தான் நிற்க தொடங்குகிறது
***
2. — போல–என்று இருப்பதால் இது கவிதை அல்ல
*
அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழைக்குள்ளிருக்கும்
எலும்புகளை வேடிக்கை பார்க்கும் சபிக்கப்பட்ட நாயை போல்
புரூப் ரீடரின் எல்லா கனவிலும் ஓடும்
ஒற்று எழுத்துக்களை போல்
பெருக்க வைக்க விரை நசுக்கி திணிக்கப்பட்ட சாம்பலின்
எரிச்சலை மொழிபெயர்க்கும் பன்றியின் ஓலம் போல்
என் பிரதியை எனக்கு எதிராக அர்த்தப்படுத்துகையில்
வரிகளை சிலுவையாக்கி அறையப்படுவதை போல்
கொட்டாங்கச்சி மார்பகத்துக்கும் வக்கில்லாமல்
தரையை புணரும் பிரம்மசாரிகளை போல்
போகன்வில்லா மலர்களுக்கு தினந்தோறும்
வாசனை திரவியம் அடிக்கும் ஊழியன் போல்
நான் முடிக்க முடியாமல் கடைசி வரிக்கு திணறும் போது
…அடப்பாவிகளா இருக்கும் துயரை இருப்பது போல் சொல்லமுடியாம
இலக்கியத்தை இப்பட்டி நாசமாக்கீட்டீங்களே…
என்றபடி கடக்கிறான் சாமத்து கோடாங்கி.
***
3. அழுகை குறித்தான அறிக்கை
*
எப்போதும் சிரித்தபடியே இருக்குமெனக்கு
வாய்விட்டு அழவேண்டும் என்பது நெடுநாளைய ஆசை
அன்பே சிவம் என்ற பெயர் தாங்கிய அந்த வீட்டில் தான்
என் தைரியமான தோழி தூக்கிட்டுக் கொண்டாள்.
ஓடிப்போய் நின்றேன் வாசலில்
நின்று கொண்டிருக்கும் கூட்டத்தில் நடுவே
படுத்துக்கிடந்தாள் அழகி.
நாகரிக மெளனத்தை அந்தச் சூழலின் மீது
லேமினேஷன் போல யாரோ போர்த்தியிருந்தனர்.
என் ஆசை நிராசையானதாய்
நினைக்கும் போது
இறந்தவளின் செல்ல மகள்….
அம்மா நான் உன்னைப் பாத்திரமா பாத்துப்பேன்
ப்ளீஸ் போகாதம்மா- என்று அழுதபோது…
அரசின் உத்தரவுக்குக் காத்திருந்து
கிடைக்காத நீர்
மதகுகளை உடைத்துக்கொண்டு
பேரிரைச்சலோடு வெளியேறியதைப் போல்
கூட்டத்தோடு நானும் ஓ வென கதற…
சடலத்தின் அருகே இருந்த வள்ளுவன்
தம் சங்கை எடுத்து ஊதத் தொடங்கினான்
அந்தச் சங்கின் பேரோசையில்
மூழ்கிச் செத்து மிதந்தன அழுகையின் கூக்குரல்கள்.
4. அப்பாவின் ரத்தக் காட்டேரி
*
மணிக்கணக்கில் பெளத்தம் பேசும் அப்பா
வார்த்தைக்கு வலிக்காதபடி கடிந்து கொண்டாலும்
ரத்தக் காட்டேரிக்கு பூசையிடாமல் தொடங்கியது இல்லை
எந்த நற்காரியத்தையும்
பூசையின் போது
மதகு உடைத்த நீராக
அவர் அதரத்திலிருந்து அவரை மீறி
வழியும் சந்திரா சந்திரா என்ற வினைசொல்
அப்பாவின் காதலி ரத்தக்காட்டேரியானதா?
ரத்தக்காட்டேரிக்கு காதலி பெயர் சூட்டினாரா?
குழப்பத்தை தெளிவிக்க
ஒருபோதும் விரும்பியது இல்லை.
குழப்பம் – கடிகாரத்தின் சாவி
குழப்பம்- வாழ்வின் சுருக்கு பை
குழப்பம் – விழ வைக்காத மயக்கம்
குழப்பம்- குதிரைக்கு முன்பான புல்
பூசை முடிந்து வெளியேறுகையில்..
தோளில் கை போட்டப்படி
காதலிக்கிறவளை சாமியாக்காம பாத்துக்கோ
என்றபடி ஓங்கி அடித்தார்
திருஷ்டி தேங்காய் சில்லு சில்லாய் சிதறும்படி
***
அமிர்தம் சூர்யா – அமிர்தம் சூர்யா கல்கி இதழின் தலைமை துணை ஆசிரியர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர். இது வரை ஐந்து கவிதைத்தொகுப்புகளும், ஒரு சிறுகதைத் தொகுப்பும், இவரது உரைகளின் எழுத்து வடிவத்தொகுப்பும் வெளி வந்துள்ளன. இளையவர்களை, புதியவர்களின் படைப்புகளை உற்சாகப்படுத்தி வெளியிடுவது, அறிமுகப்படுத்தி வருவது இவரது சிறப்புகளில் ஒன்று. ஆசிரியர் தொடர்புக்கு – suryakalki@gmail.com
அருமை நண்பா
அருமை அப்பா
காதலி இறப்பது எவ்வளவு துன்பம்! எல்லா கவிதையுமே நன்றாக உள்ளது. வாழ்த்துகள்!