அன்னக்கொடி

5

உதய சங்கர்

ன்னக்கொடி வழக்கமாக வெளியே கிளம்பும் நேரம் தவறி விட்டது. அவசரம் அவசரமாக அங்கணக்குழியில் தண்ணீரைக் கோரி ஊற்றி சோப்பு போட்டு குளித்ததும் கொஞ்சம் புத்துணர்ச்சி ஏற்பட்டது. அப்படியே நிர்வாணமாக கொடியில் கிடந்த துண்டை எடுத்து உடம்பைத் துடைத்தாள். இடதுபக்க முலைக்காம்பில் பல்கடிக்காயம் இன்னும் போக வில்லை. நாறப்பய… என்னா கடி கடிக்கான்… என்று திட்டினாள். இன்னமும் அந்த இடத்தில் சுருக் சுருக்கென்று வலித்தது. அப்படியே பாண்ட்ஸ் பவுடரை உடம்பில் கழுத்தில் முகத்தில் கொட்டினாள். அந்தக் குச்சு வீடு பவுடர் வாசனையில் மணந்தது. படுத்திருந்த பாயைக் காலால் எத்தி ஒதுக்கி மூலையில் தள்ளினாள். கருத்த முகத்தில் விரிந்திருந்த கண்களில் கண்மையை அப்பினாள். ஏறிக்கொண்டிருந்த நெற்றியில் அடர்ந்த புருவங்களுக்கு மத்தியில் செக்கச்செவேலென்று ஜிகினாப்பொட்டை ஒட்டிக்கொண்டே சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கைக்கண்ணாடியில் பார்த்தாள். வெளியே எட்டிப்பார்க்கத் துடித்துக் கொண்டிருந்த முன்பற்களை அதட்டி உள்ளே தள்ளிக்கொண்டே கொடியில் கிடந்த சிவப்புநிறம் மங்கிய உள்ப்பாவாடையை எடுத்து உடுத்தினாள். ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த சிவப்பு நிறப்பிராவை எடுத்து மாட்டிக்கொண்டு மார்பைத் தூக்கிச் சரி செய்தாள். இருந்த இரண்டு சேலைகளில் ஃப்ளோரசண்ட் கலரில் இருந்த சேலையையும் சட்டையையும் எடுத்து உடுத்தினாள். பெரிய சீப்பால் வறட் வறட்டென்று தலையை வாரி குதிரைவால் கொண்டை போட்டு கருப்பு ரப்பர் பேண்ட் ஒன்றை சுற்றி மாட்டினாள். உடம்பில் இன்னும் அசதி போகவில்லை. எல்லா ஒப்பனையும் முடிந்த பிறகு சேலையை இடுப்பு தெரிகிற மாதிரி இறக்கி விட்டு, மார்பில் கிடந்த சேலையை ஓரமாய் ஒதுக்கி விட்டு வாசலை பூட்டும்போது மணி எட்டாகி விட்டது. வழக்கமாக இந்நேரம் பஸ்ஸ்டாண்ட், பூங்கா பகுதியைச் சுற்றி முடித்திருப்பாள்.

அந்த நேரத்தில் கிராக்கிகள் கிடைப்பது கஷ்டம் என்றாலும் ஆம்பிளைகளுக்கு நேரம் காலமில்லாமல் எந்நேரமும் நட்டுக்கிட்டு இருப்பதனால் சில சமயம் அப்போதும் கூப்பிடுவார்கள் பஸ் ஸ்டாண்ட் என்றால் கழிப்பறைக்குப் பின்னால் இருக்கிற இருட்டு சந்து, பூங்கா என்றால் இலுப்பை மரத்துக்குப் பின்னால் இருக்கிற இருள்வெளி. அவள் தெருவை விட்டு வெளியேறி முக்கில் இருந்த டீக்கடைக்கு வந்தாள்.

டீக்கடை மாடசாமி,  “என்ன அன்னம் இன்னிக்கி ஆபீசுக்கு லேட்டு…” என்று சொல்லிப் புன்னகைத்தான். டீ குடித்துக் கொண்டிருந்தவர் களில் சிலர் அவளைத் திரும்பிப் பார்த்தார்கள். அன்னக்கொடி சேலையைச் சரிசெய்கிற மாதிரி நின்று கொண்டிருந்தவர்களை நோட்டம் விட்டாள்.

டீக்கடை மாடசாமியைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “ஸ்டிராங்கா ஒரு டீ போடுண்ணே!”என்று குரல் கொடுத்தாள்.

வெளியில் கிளம்பும்போது எப்போதும் ஒரு டீயும் பன்னும் சாப்பிடுவது அவளது வாடிக்கை. மாசக்கணக்கு தான். டீக்கடை மாடசாமியும் முகஞ்சுளிக்காமல் கொடுப்பான். எப்படியும் காசு கரெக்டாக வந்து விடும். அன்னக்கொடி அவசர அவசரமாக பன்னை டீயில் முக்கிச் சாப்பிட்டு விட்டு சொர்ணா தியேட்டர் பக்கமாக நடந்து போனாள். முன்பெல்லாம் இப்படி அலைய வேண்டியதில்லை. வீட்டிற்கே அழைப்பு வந்து விடும். மாமா சொன்ன இடத்துக்குப் போக வேண்டும். பார்ட்டி ஃபுல் நைட்டா, மணிக்கணக்கா, இல்லை வெளியூரா, என்று ஏற்கனவே பேசி வைத்திருப்பார் மாமா. ஆனால் அப்போது அவள் கிண்ணென்று இருப்பாள். சுண்டிவிட்டால் சத்தம் கேட்கும். ரோட்டில் போகிறவர்கள் ஒரு தடவையாவது திரும்பிப்பார்க்காமல் போகமாட்டார்கள். அவர்களையெல்லாம் துச்சமாக மதிப்பாள் அன்னக்கொடி. ஆனால் இப்போது உடல்கட்டு தளரத் தொடங்கி விட்டது. குளிக்கும்போது பார்த்தால் மார்பு சரிய ஆரம்பித்திருப்பது தெரிந்தது. அவள் அதற்காகவே ரொம்ப காஸ்ட்லியான ஸ்பெஷல் பிராவை வாங்கி அணிந்து பார்த்தாள். மாமா இருக்கும்வரை அவளுக்கு எந்தக் கவலையுமில்லை. அவர் இருந்தால் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் முதலில் அவளைத்தான் கூப்பிடுவார். மாமாவுக்கு அவள் மீது தனிப்பிரியம் இருந்தது. இத்தனைக்கும் கமிஷன் தவிர வேறு எந்தத் தொந்திரவும் தரமாட்டார். மாமாவுக்கு பேர் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. யாரும் அவரை பேர் சொல்லி அழைத்ததுமில்லை. எல்லோருக்கும் மாமா தான். நரம்பு மாதிரி ஒல்லியாக இருக்கும் மாமா கிராக்கிகளை எப்படி பிடிப்பார் என்றே தெரியாது. தினமும் அவளுக்கே மூன்று நான்கு கிராக்கிகளைப் பிடித்துத் தருவார். அவர் ஊருக்குள் ஆண்களின் நிழல்போல சுற்றிக் கொண்டிருப்பார். அவரையும் எவனோ ஒரு கிராக்கி போதையில் கல்லைத் தூக்கி தலையில் போட்டு கொன்று விட்டான். அவர் போனபிறகு தான் இந்தத் தொழிலில் உள்ள கஷ்டங்களை அன்னக்கொடி தெரிந்து கொண்டாள்.

எதிரே ஒரு ஐம்பது வயது ஆள் மீசைக்கு டை அடித்திருந்தவன் அவள் மார்பையும் வயிற்றையும் உற்றுப்பார்த்துக் கொண்டே வந்தான். திடீரென உணர்வு வந்தவள் போல அவள் மாராப்பை எடுத்து முழுதாக மார்புக்குவட்டைக் காட்டி விட்டு மேலே போட்டாள். எதிரே வந்தவரின் கண்கள் மின்னின. அவள் அவர் அருகில் வரும்வரை நின்று இடுப்புச்சேலையைச் சரி செய்வதுபோல நின்று கொண்டிருந்தாள். அப்படியே அந்த ஆளை ஒரு கண் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்படியே விழுங்கி விடுவதுபோல பார்த்துக்கொண்டு நெருங்கி வந்தவர் அவளைத் தாண்டிப் போய்விட்டார். அவளுக்கு ஏமாற்றமாகப் போய் விட்டது. நெஞ்சுக்குக் கீழே கைகளை வைத்து மார்பைச் சரிசெய்து தூக்கி விட்டாள். மூச்சை இழுத்து நெஞ்சில் அடைத்தாள். இப்போது நெஞ்சு நிமிர்ந்தமாதிரி இருந்தது. சொர்ணா தியேட்டர் நியான் விளக்குகள் சிவப்பு நிறத்தில் தெரிந்தன. வெளியே பாட்டு போடும் சத்தமே கேட்கவில்லை. இங்கேயும் நேரமாகி விட்டது.

ச்சே!

தினம் கிராக்கிகளைப் பிடிக்கிற வேலைதான் பெரிய அச்சலாத்தியாக இருந்தது. சில நாட்கள் வீட்டைவிட்டு இறங்கிய சில நிமிடங்களிலேயே அமைந்து விடும். அவள் சொல்லும் இடத்துக்கோ, அவர்கள் சொல்லும் இடத்துக்கோ போய் விட்டு வந்து விடுவாள். அப்படி அமைந்தால் அன்றைய நாள் அவள் பக்கமாக இருக்கும். நாயாபேயா அலைஞ்சு கிராக்கியைப் பிடித்தால் அன்றைய நாள் கொடுமையாகி விடும். சிலநாள் மாடசாமிக்கடை டீ, பன்னுடன் இரவு கழிந்து விடும்.

போனவாரம் சனிக்கிழமை பூங்கா பக்கமாகப் போனபோது நான்கு பையன்கள் வெளியிலிருந்த புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்தார்கள். அவளுக்குத் தெரியும் புதிய பையன்களுக்கு தைரியம் இருக்காது. இதில் ருசி கண்டவர்கள் தான் வேகமாகப் பாய்ந்து வருவார்கள். அதிலும் மத்திய வயதைக் கடந்தவர்கள் பண்ணுகிற அதிகாரமும், அலட்டலும் இருக்கிறதே. அவளுக்குத் தெரியும் சிலநிமிடங்கள் கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள். அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டமெல்லாம். சிலர் அவளை அணைத்தவுடனேயே அமந்து போவார்கள். அவர்களுடன் தான் பேரம்பேசிப் பேசி தொண்டைத்தண்ணீர் வற்றிவிடும். கடைசியில் அவள் தான் விட்டுக்கொடுப்பாள். அந்தக் கிராக்கியை விட்டு விட்டால் சாப்பாட்டுப்பொழுதைக் கழிக்கவேண்டுமே. புளியமரத்தடியில் நின்று கொண்டிருந்த பையன்களில் ஒல்லியான ஒரு பையன் கத்தையாக சுருட்டைமுடி வைத்திருந்தான். அவளை நோக்கி வந்தான். அவளருகில் வரும்போதே அவன் கைகால்களில் ஒரு நடுக்கம் ஓடியதைப் பார்த்தாள் அன்னக்கொடி.

அவளைக் கடக்கிறமாதிரி போகும்போது, “வர்றியா?”என்றான்.

குரல் குழறியது. அவள் நின்றாள். மற்ற பையன்கள் நின்று கொண்டிருந்த புளியமரத்தடிக்குப் போனாள். அவனும் வேகமாகத் திரும்பி வந்தான். எல்லோரும் புதியவர்கள். அவளை ரொம்பநாளாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு பையனின் வீட்டில் ஊருக்குப் போயிருக்கிறார்கள். தெருவையும் வீட்டையும் அடையாளம் சொன்னார்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் வரச் சொன்னார்கள்.

“எத்தனை பேரு?”அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்த ஒல்லிப்பையன் தான், “நாலு பேரு” என்றான்.

“ஆயிரம் ரூபா ஆகும்…”

“ஆயிரம் ரூபாயா?” என்று பின்வாங்கினார்கள். அன்னக் கொடிக்குத் தெரியும் இந்த மாதிரிப்பையன்களை கையாளுவது சுலபம். அதோடு மொத்தமாகக் கிடைக்குபோது வியாபாரத்தை விட்டு விடக்கூடாது.

“நாலுபேருன்னா ஒரு ஃபுல்நைட்டு ஆயிரும்ல… சரி… உங்களுக்காக ஒரு நூறு ரூபா கொறைச்சிக்கிறேன்… துட்டு கரெக்டா முன்னாலேயே கொடுத்திரணும்… தெரிஞ்சிதா…” என்று குரலில் கடுமை ஏற்றினாள். அவர்கள் பயந்துபோய் தலையாட்டினார்கள். இவ்வளவு கடுமை காட்டியிருக்கக்கூடாதோ என்று நினைத்தவள் சிரித்துக் கொண்டே அருகில் சென்றாள். அந்தச் சுருட்டைமுடி ஒல்லிப்பையனின் கையைப் பிடித்து திறந்த தன்னுடைய வயிற்றில் வைத்தாள். அவனுடல் அதிர்வது அவளுக்குத் தெரிந்தது. அப்படியே திரும்பி நடந்தாள்.

நல்ல சொகுசான வீடு. சகலவசதிகளுடன் இருந்தது. பையன்கள் அவளுக்கும் சேர்த்து பிரியாணியும் பீர் பாட்டில்களும் வாங்கி வைத்திருந்தார்கள். இப்படி சாப்பிட்டு எவ்வளவு நாளாகி விட்டது. மூன்று வருடங்களுக்கு முன்னால் தொகுதி எம்.எல்.ஏ. கூப்பிடுறார்னு மாமா ஒரு ஸ்டார் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவள் என்ன கேட்டாலும் கிடைத்தது. எம்.எல்.ஏ. குடித்துவிட்டு அவளை முத்தமிட்டார். வாய் பொணநாத்தம் நாறியது. பிறகு நிர்வாணமாக நடனம் ஆடச்சொன்னார். பள்ளிக்கூடத்தில் ஆண்டுவிழாவுக்கு அவள் ஆடிய ராத்திரி நேரத்து பூசையில் பாட்டைப் பாடிக்கொண்டே ஆடி முடிப்பதற்குள் எம்.எல்.ஏ. மட்டையாகி விட்டார். அவளும் அவர் மேலேயே படுத்துத் தூங்கி விட்டாள். மற்றவர்களைப் போல இல்லை. பணத்தையும் கொடுத்தனுப்பி விட்டார். அதுக்கப்புறம் இப்போதுதான் இப்படி வாய்த்திருக்கிறது.

பையன்கள் அமைதியாகக் குடித்தார்கள். அவர்கள் பயந்திருந்தது தெரிந்தது. அவள் பிரியாணியைச் சாப்பிட்டாள். திடீரென அவர்களுடைய பேச்சு நின்றது.

“நீங்க போய் அந்த ரூமில இருங்க…” என்றார்கள். அன்னக் கொடி எழுந்து அடுத்து இருந்த படுக்கையறைக்குப் போய் சேலையைக் கழற்றி மடித்து வைத்தாள். ஜாக்கெட், பாவாடையுடன் மெத்தையில் படுத்துக்கிடந்தாள். மெல்லக் கதவைத் திறந்து கொண்டு ஒரு பையன் உள்ளே வந்தான். அவள் அருகில் வந்து மார்பில் கையை வைத்தான். அவள் அவனை இழுத்து அணைத்து முத்தமிட்டாள். அவன் ஒரு கணத்தில் விரைத்து அடங்கி விட்டான். அவனுடைய செயலின்மையைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பு வந்தது. ஒருவன் அவளை உடலெங்கும் தடவி முத்தமிட்டு போய் விட்டான். இன்னொருவன் ஒரு முத்தத்தோடு முடித்துக் கொண்டான். ஒரு பையனைத் தவிர வேறு யாரும் அவளைப் படுத்தவேயில்லை.

பையன்கள் முகத்தில் ஏதோ பெரிய சாதனை செய்த உணர்வு இருந்தது. பேசியபடி ரூபாயையும் மீதமிருந்த பீர்பாட்டில்களையும் பிரியாணியையும் அவளிடம் கொடுத்து அனுப்பி விட்டார்கள். அதை வைத்துதான் அசால்டாக போனவாரத்தைக் கடத்தினாள். இன்று மறுபடியும் சவாலாக அவளுக்கு முன்னால் நின்றது. தியேட்டர் முன்னால் ஈயாடியது. அப்படியே ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிற காவியா லாட்ஜை நோக்கி நடந்தாள். காவியாவில் இருந்த மோகன் வேலையிலிருந்து போய் விட்டான். அவன் இருந்தால் வாடிக்கையாளர்களின் முகம் பார்த்தே தகவல் சொல்லி விடுவான். அவள் சாடையாக அங்கே போய் சுற்றிக் கொண்டிருப்பாள். கிராக்கிகளைப் பிடித்து விடுவாள்.

ஆனால் இப்போது வந்திருக்கிற புது மானேஜர் ரொம்ப சுத்தம் பார்க்கிறார் என்று மோகன் சொன்னான். அதற்குப்பின் அவள் காவியா லாட்ஜ் பக்கமே போவதில்லை. அவள் யோசித்துக் கொண்டே லாட்ஜ் வாசலில் நின்று உள்ளே எட்டிப் பார்த்தாள். கவுண்டரில் மோகன் இருந்தான். அன்னக்கொடியின் முகத்தில் மலர்ச்சி. அவள் இயல்பாக படியேறி உள்ளே போனாள்.

“என்ன மோகனு சொல்லவே இல்லை…”

“நேத்தி தான் உள்ளாற வந்தேன்க்கா… நல்ல நேரத்துக்கு நீ வந்தே நேத்திக்கு நைட்டு ஒரு பார்ட்டி விசாரிச்சிக்கிட்டிருந்தது முந்நூத்தியெட்டு பக்கமா போய்ப்பாரு” என்று க்ளு கொடுத்தான் மோகன்.

அன்னக்கொடி வரவேற்பறையில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். பிறகு மாடிப்படி ஏறி அறை எண் 308 -க்கு முன்னால் போய் நின்றாள். அவளுடைய ஒற்றை மணிக்கொலுசொலி அமைதியாக இருந்த லாட்ஜில் அதிர்ந்தது. இரண்டு முறை அந்த வராண்டாவில் மேலும் கீழும் நடந்தாள். அறையில் அனக்கமே இல்லை. விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். கட்டிலில் ஒரு மத்தியவயதுடைய ஒரு ஆள் அலங்கோலமாகக் கிடந்தார். முதலில் பயந்து போனாள். ஆனால் மறுபடியும் உற்றுப் பார்க்கையில் அவர் புரண்டு படுப்பதும் லேசாக முனகுவதும் கேட்டது. வராண்டாவில் யாருமில்லை. மெல்ல கதவைத் தட்டினாள். பதிலில்லை. கொஞ்சம் ஓங்கித் தட்டினாள். கதவு திறந்து கொண்டது. உள்ளே மெல்லக்காலடி எடுத்து வைத்தாள்.

உள்ளே கட்டிலில் கிடந்த ஆள் கடுமையான காய்ச்சலில் முனகிக்கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்தாள் அன்னக்கொடி. கைகளிலும் முகத்திலும் வைசூரி போட்டிருந்தது. அவள் உடனே திரும்பி அறைக்கு வெளியே வந்து விட்டாள். ஐயோ பாவம்! என்ற பச்சாதாபம் தான் உடனே தோன்றியது. இந்த இடத்தில் இருந்தால் அவன் செத்துப்போய் விடுவான் என்று நினைத்தாள். உடனே கீழே இறங்கி மோகனிடம் விஷயத்தைச் சொல்லும்போது அந்த ஆளைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அந்த ஆளின் பெயர் கதிர். ஃபேன்சி ஸ்டோர் சரக்குகளுக்கு ஆர்டர் பிடிக்க மாதாமாதம் வருகிறவன். எப்போதும் ஒரு பெண்ணுடன்தான் வருவான். இந்தமுறைதான் தனியாக வந்திருக்கிறான். வரும்போது நன்றாகத்தான் இருந்திருக்கிறான்.

மோகனிடம் சொல்லி ஒரு ஆட்டோவை வரவழைத்தாள். அறையைக் காலி செய்யச்சொன்னாள். போகும்போது அந்த அறையிலிருந்த அவனுடைய ஒரு கைப்பையையும் எடுத்துக் கொண்டு சென்றாள். கதிரைக் கைத்தாங்கலாகப் பிடித்து ஆட்டோவில் ஏற்றினாள்.

“உனக்கெதுக்குக்கா வேண்டாத வேலை? நான் ஆசுபத்திரிக்குப் போன் பண்ணி அனுப்பிருதேன்…” என்று மோகன் சொன்னான்.

அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக்கொண்டே, “மோகனு ஆட்டோவுக்கு மட்டும் சொல்லி விடு… எங்கிட்டே சல்லிக்காசில்லை… நான் உனக்கு ரெண்டு நாளையில தாரேன்…” என்று சொன்னாள்.

ஒரே ஒரு அறையாக இருந்த அவளுடைய வீட்டுக்குள் போனதும் பாயை விரித்து அதற்குமேல் அவளுடைய போர்வையையும், பழைய சேலையையும் விரித்து அதில் கதிரைப் படுக்கவைத்தாள். அவன் சுய நினைவில்லாமல் கிடந்தான். மாடசாமி டீக்கடைக்கு ஓடினாள். இருநூறு ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வந்தாள். பரமசிவம் செட்டியார் பலசரக்குக்கடைக்குப் போய் நொய்யரிசியும், காசி பழக்கடையில் பழங்களும் இரண்டு இளநீர் காய்களும், வாங்கி வந்தாள். அருகில் இருந்த நாடார் நந்தவனத்தில் வேப்பிலைக்கொத்துகளைப் பறித்துக் கொண்டு வந்து அவன் படுக்கையில் பரப்பி வைத்தாள். சட்டை, வேட்டியை உருவிவிட்டு உடம்பெங்கும் வேப்பிலையால் நீவி விட்டாள். தெள்ளுக்கஞ்சி வைத்தாள். வாயிலும் தொண்டையிலும் கூட அம்மைக்கொப்புளங்கள் இருந்தன. அவனால் பேசவோ, எதையும் விழுங்கவோ முடியவில்லை. தலையைத் தூக்கி மடியில் வைத்து ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமாக புகட்டினாள்.

பக்கத்து வீட்டு ஆயாவிடம் என்னென்ன பக்குவங்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக் கேட்டுச் செய்தாள். சுத்தபத்தமாக இருக்கவேண்டும் என்று ஆயா சொன்னதினால் தொழிலுக்கும் போகவில்லை. டீக்கடை மாடசாமி தான் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்தான். அவளுக்கு இருபத்திநாலு மணிநேரமும் அவனுடைய சிந்தனையாகவே இருந்தாள். அவன் திரும்பிப்படுத்தாலும் சரி, முனகினாலும் சரி, அவள் உடனே சென்று பார்த்தாள். அவனுக்கு அம்மை உச்சத்தில் இருந்தபோது எழுந்திரிக்கக்கூட முடியாமலிருந்தான். அப்போது பீ மூத்திரம் கூட அள்ளிப்போட்டாள். அவளுக்கு இதையெல்லாம் செய்வதில் எந்த அசூயையும் இல்லை. ஏதோ தன்னுடைய புருசனுக்கு நோய் வந்தமாதிரியே கவனித்துக் கொண்டாள். வாழ்க்கை மாறிவிட்டது போல உணர்ந்தாள். முதன்முறையாக வாழ்க்கையில் அவளுக்கு ஏதோ ஒருபிடிப்பு தோன்றியது. இனிமேல் ரோடு ரோடாக அலையக்கூடாது என்று முடிவு செய்தாள். கதிருக்கு அம்மை இறங்கத்தொடங்கியிருந்தது. அவன் பேச ஆரம்பித்திருந்தான்.

“நீ இல்லைன்னா நான் செத்துருப்பேன் அன்னம்… இனி நான் ஒங்கூடவே இருந்துருதேன். எனக்கும் யாரும் கிடையாது… பாட்டி ஒருத்தி கிடக்கா… இப்பவோ அப்பவோன்னு கிடக்கா… நாம கலியாணம் செய்ஞ்சுகிட்டு வேற ஊருக்குப் போயிருவோம்… அன்னம். இனிமேல் நீ இல்லாம என்னால இருக்கமுடியாதும்மா” என்று தழுதழுத்தான்.

அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது. அன்னத்துக்கு இப்படி யெல்லாம் கேட்டுப்பழக்கமில்லை. அவளிடம் இதுவரை இப்படி யாரும் சொன்னதுமில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது யாரோ ஒரு பையன் அவளிடம் எழுதிக்கொடுத்த கடிதத்தில் இந்தமாதிரி ஏதோ எழுதியிருந்தான். அவன் முகம் கூட ஞாபகத்துக்கு வரவில்லை. ஏராளமான ஆண்களின் உடல்கள்தான் அவள் நினைவிலிருந்தது. அதுவும் கூட இடுப்புக்குக் கீழே தான். ஏன் முகங்கள் மனதில் பதியவில்லை என்று தெரியவில்லை. அந்த உடல்களின் முரட்டுத்தனங்கள் கொடூரங்கள், வக்கிரங்கள், காரியம் முடிந்ததும் எச்சிலைத்துப்புவதைப் போல துப்பிச்சென்ற அந்த உடல்களைத் தவிர வேறு எதுவும் அவள் நினைவிலில்லை. கடிதம் கொடுத்த பையன் ஒரு மாதத்துக்கு மேல் அவள் பின்னால் சுற்றினான். ஒருநாள் மாலை அவள் வீட்டுக்குத் திரும்பும் சந்தில் வைத்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தான். அவனுடைய முகத்தை ஞாபகப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள். கதிரின் முகம் மட்டுமே முன்னால் வந்தது. சரி. கதிரின் முகமாகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டாள். மென்மையான அந்த முகத்தில் நிறைந்திருந்த கண்கள் அதில் ததும்பிய உணர்ச்சிகளை அவளால் மறக்கவே முடியாது. இற்றுத் தூர்ந்துபோன மனதின் ஊற்றுக்கண்ணில் சிறு உடைப்பு ஏற்பட்டமாதிரி இருந்தது. அவளுடைய கண்களிலும் ஈரப்பசை பளபளத்தது.

வீட்டுக்கு வெளியில் பிளாஸ்டிக் குடத்தில் வெயில்பட தண்ணீர் வைத்து அதில் வேப்பிலைகளைப் போட்டு ஊறவைத்து ஒரு வார இடைவெளியில் மூன்று தண்ணீர் ஊற்றினாள். மூன்றாவது தண்ணீர் ஊற்றிய நாளில் வீட்டில் சமையல் என்ற ஒன்றை பலவருடங்களுக்குப் பின்னால் செய்தாள். சாம்பார் வைத்து அப்பளம் பொரித்து பால்பாயசம் வைத்து அவனுக்குச் சாப்பாடு போட்டாள். அவன் சமையல் நன்றாக இருப்பதாகப் பாரட்டி அவளுடைய உள்ளங்கையில் முத்தமிட்டான். அவளுக்குக் கூச்சமாகவும் வெட்கமாகவும் இருந்தது. அவள் மனம் ஆனந்தத்தில் மிதந்தது. அவள் தயக்கத்துடன் அவனுக்கருகில் சென்று அவனுடைய கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள். அவன் எட்டிப்பிடிக்க முயற்சி செய்ய அவள் அந்தக் குச்சு வீட்டுக்குள் எட்டாமல் ஓடினாள்.

அன்று முழுவதும் பேசினார்கள் பேசினார்கள் அவ்வளவு பேசினார்கள். பேசப்பேச தீரவில்லை. அவளுக்கு எல்லாம் திடீரெனக் கிளம்பியது போல அவளுடைய பிறப்பிலிருந்து எல்லாம் ஞபாகத்துக்கு வந்து அருவியெனக் கொட்டியது. அவளுடைய அப்பா, அம்மாவைப் பற்றி, சொந்தக்காரர்களைப் பற்றி, அவர்கள் நன்றாக இருந்த காலத்தின் ஒவ்வொரு துளிக்கணமும் அவளுடைய ஞாபகங்களிலிருந்து பொங்கி வந்தது. இதுவரை இப்படி ஒரு நாளும் தோன்றியதில்லை. அவளுக்குள் புது ரத்தம் ஊறுவதைப் போலிருந்தது. அவள் அவனிடம் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிக் கூட பேசினாள். கதிர் இன்னும் ஒருபடி மேலே போய் அவர்களுடைய குழந்தைகளைப் பற்றிச் சொன்னான். அவளுக்கு இதெல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. அவள் கடவுளை நினைத்ததில்லை. அவளுக்கு விரக்தி வரும்போது திட்டித் தீர்ப்பதற்கு அவர் ஒரு ஆள். அவ்வளவு தான். வீட்டில் குத்துவிளக்கோ, சாமி படங்களோ, காலண்டரோ கூடக் கிடையாது. ஆனால் ஏனோ இப்போது எல்லாச்சாமிகளும் ஞாபகத்துக்கு வந்தார்கள். அவள் கோவிலுக்குப் போய் சாமி கும்பிடவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அன்று பௌர்ணமி. நிலவின் சாம்பல் நிற வெள்ளையொளி திறந்திருந்த அவளுடைய குச்சு வீட்டுக்கதவைத் தாண்டி உள்ளே எட்டிப்பார்த்தது. விரித்திருந்த பாயில் அவள் அவனுடைய மடியில் கண்களை மூடிப் படுத்திருந்தாள். அவன் குனிந்து அவளுடைய அதரங்களில் முத்தமிட்டான். அதுதான் அவளுடைய வாழ்வில் கிடைத்த முதல்முத்தம் போல அவள் முகத்தில் ரத்தமேறியது. அப்படியே அசையாமல் கிடந்தாள். அந்தக் கணத்தைத் தவறவிடக்கூடாதென்ற கவனம் அவளுடைய முகத்திலிருந்தது. அவன் அவளுடைய மார்பைத் தொடும்போதும் வயிற்றில் கைவைத்தபோதும் புதுப்பெண்ணைப் போல வெட்கத்துடன் சிரித்தாள். அவனுடைய கையை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டாள். மனம் நிறைந்து ததும்பியது. ஏனோ அவளுக்கு பாடவேண்டும் போல இருந்தது. வாய் முணுமுணுக்க அவன் அந்த முணுமுணுப்பை அவனுடைய வாய்க்குள் வாங்கிக் கொண்டான். அவளுக்கு இந்தக் கணம் இந்த நிறைவுடன் இப்படியே இறந்து போய் விடலாம் என்று கூடத்தோன்றியது. கண்களிலிருந்து கண்ணீர் பொங்கி வழிந்தது. உதடுகள் துடித்தன. இப்படியெல்லாம் வாழ்க்கை இருக்குமா? அவளுக்கு இப்படியெல்லாம் நடக்குமா? அவள் நினைத்தே பார்த்திராத இந்த உறவினை விட்டுவிடக் கூடாது என்று கதிரை அப்படியே இறுகக் கட்டியணைத்தாள். கதிர் குனிந்து முத்தமிட்டபடியே அவளுடைய வாய்க்குள் அன்னம்… அன்னம்… என்று முணுமுணுத்தான். அந்த இரவு அவர்களை அவ்வளவு சீக்கிரம் உறங்கவிடவில்லை. அவர்கள் உறங்கும்போது நிலா மங்கத்தொடங்கியிருந்தது.

காலையில் அன்னத்துக்கு முழிப்பு தட்டியதும் உடம்பு அசதியாக இருந்தது. எழுந்து பார்த்தாள். வாசல் கதவு திறந்தபடியே கிடந்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். கதிர் இல்லை. டீ குடிக்கப்போயிருப்பான் என்று நினைத்து எழுந்து உடைகளைத் திருத்தி படுத்திருந்த பாயை எடுத்துச் சுருட்டினாள். தலையணையை எடுத்தபோது நூறு ரூபாய் தாள் கீழே விழுந்தது.

அவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் சில நொடிகளில் எல்லாம் புரிந்தபோது ஆயாசமாக இருந்தது. உடம்பு வலி ரணமாக இருந்தது.

முகம் சிவக்க கோபத்துடன், “தேவடியாப்பய!” என்று முணுமுணுத்தபடி ஊறல் எடுத்த புறங்கையைத் திருப்பிப் பார்த்தாள்.

அம்மை முத்து ஒன்று பளபளத்துக்கொண்டிருந்தது.

***

உதயசங்கர் – கரிசல் மண்ணிலிருந்து தொடர்ச்சியாக தன் கதைகளின் மூலமும், சிறார்களுக்கான படைப்பு மற்றும் மொழிபெயர்ப்பில் பங்களிப்பு செய்து வருகிறார். 11க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன

5 COMMENTS

 1. மகிழ்ச்சி. நல்ல கதை.ஜி.நாகராஜன் கதை போல ஒரு உணர்வு

 2. நெடுங்கதையின் வடிவம் சிறப்பாக அமைந்த சிறுகதை. என் அம்ருதா விமர்சனத்தில் எழுதியிருந்தேன்.மகிழ்ச்சி

 3. வாழ்வலைச்சல்களின் வழியே தான் வாழ்கையின் புதிர் கூடிப்போகிறது.அது எதிரும் புதிருமான பிம்பங்களினால் புற ஊதாக் கதிர்களைப்போல் சிலநேரங்களில் நாம் நினைத்தும் பார்த்திராத மாயங்களை உட்செரிக்கும்.அதுபோல நாம் அறியாத போது படுபாதாளத்தில் வீழ்த்திவிட்டு நம்மை பார்த்து ஏளனமாய் புன்னகைக்கவும் செய்யும்.வாழ்க்கை புதிர்களின் கூடாராம்.அன்னம் அதன் சிடுக்கு மிகுந்த நூலாம்படைகளில் அந்தரத்தில் தொங்கும் துறிஞ்சல்.யார் யாரை வீழ்த்துவது என்பது அதன் தொடர் போராட்டங்களில் அடங்கி இருக்கிறது.

  அன்று தான் நிலவு வெளிச்சம் அவள் வீட்டுக்குள் நுழைந்தது என்பதான அவள் மனக்கிளர்ச்சியை புதிய வாழ்வை நோக்கிய அவளது மனமாற்றத்தை ஞாயிறாய் புனையாமல் திங்களாய் சொல்வதிலேயே அதன் நிச்சயமின்மையை குறிப்புணர்த்திவிடுகிறது.வாழ்க்கை சொகுசானதொரு நிலைக்கு நிறம் மாறியதும்.பண்பாட்டு மேல்பூச்சுகள் தானாக ஒட்டிக்கொள்ளும் என்கிற சமூகவிஞ்ஞானத்தை “இப்போது கோயிலுக்கு போக வேண்டும் போல் இருக்கிறது,சாமி கும்பிடவேண்டும் என்று தோன்றுகிறது” என்பதான அவள் சிந்தனை மாற்றத்தை மிகச்சரியாக அவதானித்திருக்கிறது.மனிதமனம் அலைகளைக்காட்டிலும் ஓய்வில்லாதது,நுட்பமானது அதன் வழியாக தன் கனவுகளை அது எண்ணங்களால் பின்னிக்கொள்ளக்கூடியது.பல நேரங்களில் காற்றில் பேசிய வார்த்தைகளாக கரைந்துபோகும்.அப்படியாகத் தான் அன்னம் மென்காற்றுக்கு படபடக்கும் இலையாய் காற்று ஓய்ந்த பிறகு ஏமாந்து போய் நிற்கிறாள்.ஆனாலும் காற்று சும்மாய் இருக்கவிடுவதில்லை.அன்னத்தின் வாழ்வும் அப்படித்தான்.

  இந்த கதை எனக்கு மண்டோவின் அவமானம், கருப்பு சல்வார் ஆகிய கதைகளை நினைவூட்டிவிட்டது.நல்லது கதை.

  உங்கள் கைகள் காலத்தில் இருள்வெளியை எழுதிக்கொண்டிருக்கிறது.இப்படியான கதைகளை தனித் தொகுப்பாகவே கொண்டுவாருங்கள்.அது மானுடத்தை பயிற்றுவிக்கும்.குறைந்த பட்சம் வெட்கி தலைகுனியச் செய்யும்.
  Reply

 4. அன்னக்கொடி கதை உருக்கமாக இருந்தது.வாழ்த்துக்கள் உதயசங்கர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here