Monday, October 14, 2024
Homeசினிமாஅதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்

அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள்

அதீதத்தின் இருண்மையோடு ஒளிரும் கோடுகள் – யாழன் ஆதி
————————————————
masterpiece

கணிப்பின் புள்ளிகளைத் தாண்டிச் சுழலும் ஒரு படைப்பின் இயங்குதளத்தை அதன் கர்த்தாவே உணராத வேறொரு கோணத்தையும் வேறொரு வடிவத்தையும் பார்வையாளருக்கோ வாசகருக்கோ உணர்த்துவதும் அவரை படைப்பின் இன்னொரு பங்குதாரராக மாற்றி அதை அவருக்கானதாக்கிக் கொடுத்துவிடுவதோ எளிதில் நிகழ்ந்து விடுவதில்லை. ஆனால் இலக்கியங்களிலும் ஓவியங்களிலும் அப்படிப்பட்ட ஆளுமைகள் தொடர்கிறார்கள். அவர்களின் மூலம் கலைத் தன்னுடைய மாய எதார்த்தங்களை அடைந்து அவர்களிடமிருந்துப் பிரிந்து ஒரு பறவைக் குஞ்சைப் போல பல இடங்களை அடைந்து இறுதியில் தனக்கான ஓரிடத்தை அவை பெற்றுவிடுகின்றன.

மனித வலிகளையும் அவர்களின் அகம் சார்ந்த இச்சைகளையும் அவர்களின் அறம் கூடிய கனமான வாழ்வின் உன்னதங்களையும் ஒரு நொடியில் உறைய வைக்கும் ஆற்றல் கலையின் அடர்ந்த தன்மைக்கும் அதன் இருண்மைக்கும் உண்டு. இருண்மையை வேண்டுமென்றே உருவாக்காமல் அது உருவாகும் தருணத்திற்காய் காத்திருந்து அதில் தன்னிலைகளையும் சமூக நிலைகளையும் குழைத்து உருவாக்கப்படும் எழுத்துப் பிரதியோ ஓவியமோ காலத்தின் மாறுதல்களோடே மாறுதல்களை அடைந்து அது தன் ஒளியை வீசுவதாகவே இருக்கிறது என்பது எப்போதும் கலையின் இயங்கியலில் சாத்தியமான ஒன்றாகத்தான் இருக்கிறது. அத்தகைய சாத்திய கலை வடிவங்கள் சிறுபத்திரிக்கைச் சார்ந்தோ அல்லது சிறுக்குழுக்களாக இயங்கியோ வளர்கின்றன. உருவாக்கப்படுகின்றன. அவை புறச்சூழலை நோக்கி வருகையில் மீள் உருவாக்கங்களும் மீட்டெடுத்தலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. அப்படி ஒரு கலை வடிவத்தை இன்றைய சிறுபத்திரிகைகள் பல வற்றில் ஓவியங்களை வரைந்துகொண்டிருக்கும் ஞானப்பிரகாசம் ஸ்தபதி காண முடிகிறது.

ஞானப்பிரகாசம் ஸ்தபதி தன் ஓவியங்களில் பயன்படுத்துகிற இருளும் ஒளியும் மிகவும் நேர்த்தியான ஒரு சிற்பியின் தன்மையில் வெளிப்படுகிறது. அதனால் அவரின் கருப்பு வெள்ளை ஓவியங்கள் பல சிற்பத்தன்மையை வீசுகின்றனவாக இருக்கின்றன. கலையில் புதுமரபாக அது வாய்த்திருக்கிறது.

அவர் பயன்படுத்தும் கோடுகள் எல்லாம் அவற்றின் புதிய அவதாரமாக அவரால் அதிகற்பனையில் சொல்ல முடிகிறது. உலகின் எல்லாப் பொருட்களும் இயற்கையாக மனிதப் பயன்பாட்டிற்குத்தான் என்னும் படைப்பின் ஆதாரத் தத்துவம் அல்லது இயற்கையின் மூலம் என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி பல ஓவியங்களில் உணர முடிகிறது. எந்த உருவங்களை அவர் தன் ஓவியப் பிரதியில் வரைந்தாலும் அது எங்காவது மனிதருடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது என்பது என்னுடைய அவதானம்.

மனிதர்கள் அற்ற கலையின் பயன் எதுவுமில்லை. மனிதர்களின் பிரதிபலிப்பாக ஞானப்பிரகாசம் ஸ்தபதி உருவாக்கும் ஒவியங்கள் சொல்லப்படும் கருத்துகளுக்கானது மட்டுமல்ல அதையும் தாண்டி அந்த ஓவியங்கள் பேசப்படுவனாக இருக்கின்றன. சமீப காலங்களில் வெளிவந்திருக்கிற அவரின் ஓவியங்களைக் காணுகையில் கவிதைக்களுக்கானதும் கதைகளுக்கானதும் என்றில்லாமல் அது தன்னியல்பாக இன்னொரு பரிமாணத்தில் இயங்குகின்ற ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.

அவரின் வாழ்வுப் புரிதலும் வாழ்க்கையின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கை அவநம்பிக்கை சக மனிதனை அவர் பார்க்கும் பார்வை அதிலிருந்து அவருக்குக் கிடைக்கும் தரிசனங்கள் இவற்றைக் குழைத்து அவர் ஒரு கவிதைக்காய் வரையும் ஓவியம் கவிதையைத் தாண்டி பல சிந்தனைகளைத் தூண்டுகின்றனவாக இருக்கின்றன.

அவரின் கோட்டோவியங்கள் எல்லாம் மெல்லியதும் தடிமனானதுமானக் கோடுகளால் ஆனவை. அவற்றின் வேறுபாடு, அவற்றிற்கிடையே அவர் வைக்கும் இடைவெளி ஆகியவை ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை அடைவதற்கு ஏதுவானதாக இருக்கிறது.

கோட்டோவியங்களை அவர் உருவாக்கும் பாணியை அவர் கண்டடைந்து உள்ளார் என்பதை அவரின் ஓவியங்களிலிருந்து அறியலாம். நிழலிருந்து வெளிச்சத்திற்கும் வெளிச்சத்திலிருந்து நிழலுக்கும் ஊடு பாவும் ஒரு தாவல் நிலையில் அவருடைய கோட்டோவியங்கள் அமைந்திருக்கும். சமீபத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் எழுத்தாளுமைகளின் கோட்டோவியங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

நவீன உருவங்களை உருவாக்குவதில் கூட அவருக்கென தனி வழியை அவரால் அடைய முடிந்திருக்கிறது என்பது ஞானப்பிரகாசம் ஸ்தபதி இருண்மைகளாலும் ஒளிர்மைகளாலும் அதீதம் காட்டும் ஓவியக்கலைஞன் என்பதாகும்.

-யாழன் ஆதிஞானப்பிராகசம் ஸ்தபதியின் - Self portrait

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular