Thursday, January 23, 2025
Homesliderஅட்சயப் பாத்திரத்தின் பசி

அட்சயப் பாத்திரத்தின் பசி

அ.வெண்ணிலா

ணிபல்லவத் தீவில், முற்பிறப்பையும் வருங்காலத்தையும் அறிந்த மணிமேகலை தீராத் துயரில் தத்தளித்தாள். ஊழ்வினையில் இருந்து யாராலும் தப்பிக்க இயலாது. இப்பிறவியே முற்பிறவியின் பலன் தான். புதுப்பாதையில் செல்ல இருக்கும் தன் வாழ்க்கையினை நினைத்துப் பார்த்தாள்.

மணிமேகலைக்குள்ளிருந்து மணிமேகலை கேள்விகளால் வதைத்தாள்.

கேள்விகளைப் புறக்கணிக்கும் மனம் இருந்தால் அவர்கள் வரம் பெற்றவர்கள். கேள்விகளுக்குக் காது கொடுப்பவர்களுக்கு, கேள்விகளே சாபங்கள். மணிமேகலைக்குத் தன் வாழ்க்கையே பெரும் கேள்வியாக, சாபமாகக் கண்முன் நின்றது.

தான் யார்? பரத்தையர் குலத்தில் பிறந்தவள். பரத்தையர் குலத்தில் பிறந்தாலும் தன் தாய் மாதவி கோவலனைத் தவிர வேறொரு ஆடவனைச் சிந்தையாலும் தீண்டாதவள். மூதூர் மதுரையில், கோவலன் பழி சுமத்தப்பட்டு வெட்டுப்பட்டு இறந்தான் என்ற செய்தி கிடைத்ததில் இருந்து, துறவு வாழ்க்கை மேற்கொள்பவள். தன் மகளென்றாலும் பத்தினி தெய்வமான கண்ணகியின் மகளாகவே என்னை வளர்த்தவள்.

தாயின் வாழ்க்கை பாதியில் கலைந்த கனவுபோல் ஆகிவிட்டது. தந்தை இறந்துபட்டான். தாய்க்கு நிகரான கண்ணகி மதுரையை எரித்து விண்ணுலகம் ஏறினாள். காதலனும், அவன் மனைவியும் இறந்தது தன்னால்தான் என்ற குற்றவுணர்வில் தாய் மாதவி பௌத்த துறவியாகிவிட்டாள். கலங்கிய நீர்போலான என் வாழ்க்கையின் துயரங்கள்தான் என்னைத் துறவறம் நோக்கி விரட்டுகிறதோ? பாட்டி சித்ராபதியோ பொருத்தமான நேரத்திற்காகக் காத்திருக்கிறாள், என்னைக் குலத்தொழிலுக்குள் தள்ளிவிட.

பருவத்தின் ஓர் இளவேனில் காலத்தையும் நான் அனுபவித்ததில்லை. வசந்தத்தின் உற்சாகம் என்னைக் கடந்ததில்லை. வீட்டில் சிரிப்பொலி கேட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆடலும் இசையும் வாத்தியங்களும் ஒலிக்க, புகார் நகரத்து இளைஞர்களின் கவனத்தின் மையமாக இருந்த வீடு களை இழந்துவிட்டது. கனியும் முன்னே வெம்பிப் போகும் காய் போலே, பருவமடையும் முன்னே நான் முதிர்ந்து விட்டேன்.

என் முன்னால் மலையுச்சியும், பாதாளமுமான இருவேறு வாழ்க்கை காத்திருக்கிறது. நான் எந்த வாழ்க்கையைத் தேர்வு செய்யப் போகிறேன். மணிமேகலையின் ஆன்மா எதை நோக்கி ஈர்க்கப்படுகிறது? மெய்யின்பங்களைப் பூரணமாகச் சுவைக்கும் குலத்தொழிலா, நத்தை ஓட்டுக்குள் தன்னையொடுக்கிக் கொள்வதுபோல் ஐம்புலன்களையும் ஒடுக்கிக் கொள்ளும் துறவறமா? என் இதயத்தில் கலைகளின் பேரின்ப ஒலி கேட்கப் போகிறதா? ஆன்மாவின் பாடல் அமைதியாக இசைக்கப்பட இருக்கிறதா?

இலையாலும், பூவாலும் தொடுக்கப்பட்ட மாலையுடன், ஆயிரத்தெட்டு பசும்பொன்கள் கொடுக்கத் தயாரான காளையர்கள் என் கடைக்கண் சம்மதத்திற்காகக் காத்திருக்கும் வாழ்க்கையா?

பசியால் வருந்துபவர்களும், பாதுகாப்பு கொடுக்க யாருமில்லாதவர்களும், வயிற்றில் பசி நெருப்பாக கனல, அன்னமிட யாரேனும் வரமாட்டார்களா என்று பசிப்பிணியில் வருந்தி காத்திருப்போருக்காக இந்த வாழ்க்கையா?

உடற்பசியைத் தீர்ப்பதா? வயிற்றுப்பசியைத் தீர்ப்பதா? இரண்டு பசியில் எப்பசியைத் தீர்ப்பது மேன்மையானது? எப்பசியைத் தீர்ப்பது கீழ்மையானது? பசியென்று வந்துவிட்டால் தீர்ப்பதுதானே தீர்வு? எப்பசியாக இருந்தாலென்ன? பசியில் உயர்வென்ன? தாழ்வென்ன?

அரசர்களும், வணிகர்களும், வேளாளர்களும் வசிக்கும் செல்வம் கொழிக்கும் புகார் நகரத்தின் பட்டினப்பாக்கத்தில், உயரிய மாளிகையில் இருக்க வேண்டியவள். யானைகளும் குதிரைகளும் நீண்ட நெடிய வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கும். குற்றேவல் புரியும் வீரர்கள் நகரத்துத் தெருக்களை அலங்கரிப்பார்கள். முத்துக் கோர்ப்பவர்களும் சங்கு அறுப்பவர்களும், கணிதத்தில் தேர்ந்தவர்களும், கூத்தர்களும் தெருவில் அவரவர் பணிகளோடு விரைந்து கொண்டிருப்பார்கள். பட்டினப்பாக்கமும், மருவூர்ப்பாக்கமும் சேரும் இடத்தில் இருக்கும் நாளங்காடியில் பொருட்களை வாங்க மக்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருப்பார்கள். இந்திரனும் தன் மனைவியுடன் வந்து பார்க்க விரும்பும் செல்வச்செழிப்பான புகார் நகரத்தின் அழகிய வீதியில் உள்ள என்னுடைய எழுநிலை மாடத்தில், நிலவொளி வீசும் முற்றத்தில் அமர்ந்து, யாழை மீட்டியும், நடனம் ஆடியும் மகிழ்ந்திருக்கலாம். பொழுதிற்கு ஓர் அலங்காரம். வேளைக்கு ஓர் ஆடல் என்று களித்திருக்கலாம்.

மாந்தளிர், நெல்லி, அத்தி, கருங்காலி முதலிய பத்துத் துவர்களையும், அகில், சந்தனம் முதலிய ஐவகை நறுமணங்களையும், லவங்கம், ஏலம், பச்சிலை, நன்னாரி, கஸ்தூரி, எலுமிச்சம், கொடுவேரி, நறுந்தாது முதலிய முப்பத்திரண்டு ஓமாலிகைகளையும் நீரில் ஊற வைத்து, எடுத்த தைலத்தைத் தலையில் பூசி தினம் நீராடலாம். நீராடிய தலையின் ஈரம் உலர, குளிர் காலமாக இருந்தால் குங்கிலியமும், அகிற்கட்டையும் சேர்த்து எரித்து உண்டாக்கும் புகையில் ஈரத்தை உலரச் செய்யலாம். கோடை காலமாக இருந்தால், பொதிய மலையில் விளைந்த சந்தனக் கட்டையில் அரைக்கப்பட்ட நற்சந்தனத்தின் நறுமணமே போதும் ஈரம் உலர.

ஈரம் உலர்ந்த கூந்தலை அலங்கரித்துக் கொள்வது நடனப் பெண்களின் பெரு விருப்பம். ஈரம் உலர்ந்த கூந்தலில் கஸ்தூரிக் குழம்பைப் பூசி, ஐந்து பின்னலாகப் பிரித்துப் பின்னிக் கொள்ளலாம். கால் விரல்களுக்குப் பீலியும், கால்களுக்குச் சலங்கையும் அணியலாம். பருத்த தொடைகளுக்குத் துடையணி அணிந்திருப்பேன். பார்க்கும் நம்பியர்களைக் கவர்ந்திழுக்கும் தோள்களுக்குத் தோள் வளையும், வங்கியும் என்னை அலங்கரித்திருக்கும். விரல்களில் பாம்பு நெளியும், கழுத்தில் சரப்பளியும் மணியாரமும், காதில் இந்திர நீலத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட நீலக்குதம்பையும், சுருள் கூந்தலில் தென்பல்லி, வடபல்லி, செழுநீர் வலம்பரி முதலிய தலையாபரணங்களையும் அணிந்திருப்பேன்.  

செம்பஞ்சுக் குழம்பினால் தீற்றப்பட்ட சித்திரங்கள் தோள்களையும், கால்களையும் அலங்கரிக்கும். குங்குமத்தைக் குழைத்து எழுதப்பட்ட தொய்யில் என் இள முலைகளுக்கு அழகூட்டும். இந்திரனின் வஜ்ராயுதம்போல் சிறுத்த என் இடையில் முத்துக்கள் பதிக்கப்பட்ட மேகலை அலங்கரிக்கும். அன்னப்பறவையின் மெல்லிய இறகினை திணித்துச் செய்யப்பட்ட படுக்கை, என் உடலை உள்வாங்கிக் கொள்ளும். வேயா மாடத்தின் நிலவும், நட்சத்திரங்களும் மான் கண் சாளரத்தின் வழியே என் அறைக்குள் வரக் காத்திருக்கும். காற்றில் அலையும் திரைச் சீலைகளின் வழியே நிலவொளி, என்னைத் தீண்டிச் செல்லும். அலங்கரித்துக் கொள்வதற்காகவே என் பொழுதுகள் விடியும். அலங்காரம் என்னை மகிழ்விக்க, நான் என்னிடம் வருவோரை மகிழ்விப்பேன்.

வடக்கே வேங்கட மலையையும், தெற்கே குமரியையும் எல்லையாகக் கொண்ட நாட்டில் மூவேந்தர்களும் ஆட்சி செய்து வந்தாலும், அவர்களுக்கும் மேலாக ஓர் அரசன் இருக்கிறான். அவனே மன்மதன். மன்மதனுக்குக் கட்டுப்பட்டவர்களே அரசர்களும் குடிகளும். மன்மதனே உண்மையான அரசன். மயக்கும் இளவேனில் மன்மதனின் தோழன். தென்றல் காற்று மன்மதனின் தூதன். குயில் கொம்பு ஊதுவோன். பெண்கள் மன்மதனின் படைவீரர்கள். நாடகக் கணிகையர் தளபதிகள். கணிகையர் குலத் தோன்றலான நான் மன்மதனின் படைத்தளபதி. எங்களுடன் போர் தொடுப்பதே அரசர்கள் உள்ளிட்ட குடிகளின் முதன்மைக் கடமை. விற்போரிலும், மற்போரிலும் தோல்வியே காணாத வீரர்களும், எங்களின் கடைக்கண் பார்வையை வெற்றி கொள்ள முடியாத தோல்வியாளர்களே.

மன்மதனின் கரும்பை வில்லாக ஒடித்தே எங்களின் இரு புருவமாக வைத்துள்ளோம். காமனின் அம்புகளாக எங்களின் புருவங்கள் பார்ப்பவரை மயக்கிக் கொல்லும். தாமரைத் தளிர்களும், குவளை மலரும், செங்கழுநீர்ப் பூக்களும், பச்சிலைகளும் கொண்டு நெருக்கமாகத் தொடுத்த கோதையெனும் வாசனை மாலைகளை நாங்கள் அணிந்துவிட்டால், தார் அணிந்த ஆண்கள் எல்லாம் வண்டுகளாக ரீங்காரித்துச் சுற்றி வந்துதான் ஆக வேண்டும். மன்மதன் ஒருவனின் ஆணைக்குத்தான் இந்த உலகம் முழுமையாகக் கட்டுப்படும்.  

படமெடுக்கும் அழகிய நாகத்தினைப் போன்ற அல்குலை உடைய மணிமேகலையாகிய நான், மருவூர்ப்பாக்கத்தின் செல்வச்செழிப்பில், மண் பார்க்காத செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட மென்மையான பாதங்களுடன் இருக்கப் போகிறேனா?

சந்தனம், அகில், வாசனைப் பூக்களின் நறுமணங்களை மட்டுமே சுவாசித்திருந்த என் நாசி சுடுகாட்டுப் பிணங்களின் நிணநாற்றத்தை சுவாசிக்கப் போகிறதா? புகார் நகரின் இருள் முகமாக உள்ள சக்கரவாளக் கோட்டமென்னும் சுடுகாட்டுக் கோட்டம். உயர்ந்த நான்கு வாயில்களும், கடுமையான காவலுடையதுமான சக்கரவாளக் கோட்டத்தில் பேய்கள் நடமாடும். பெரிய பலிபீடத்தினை உடைய காளியின் மிகப் பெரிய கோயிலில், துணிந்து தங்களின் உயிரைப் பலி கொடுத்துக் கொண்டவர்களின் தலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். கணவன் இறந்தவுடன் உடன் உயிர் நீத்த உயரிய குணம் கொண்ட பெண்களுக்கும் தவ முனிவருக்கும் உயர்ந்த சமாதிகள் கட்டப்பட்டிருக்கும். பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். தோண்டிய குழிகளில் பிணங்களை இட்டு மண் மூடிச் செல்வோர், அப்படியே பிணங்களைப் போட்டுவிட்டுச் செல்வோர் என சக்கரவாளக் கோட்டத்தில் பிணங்களின் இடைவிடாத வருகை. மன்மதனின் படையில் இருக்கும் நான் அங்கு எமனின் படைவீரர்களின் ருத்ர தாண்டவத்தைப் பார்க்க வேண்டும். அறநெறியில் சிறந்த துறவிகள், செல்வந்தர்கள், குழந்தைகள், குழந்தைகளை ஈன்ற தாயார், இளையவர், முதியவர், காதலர் என்ற பாகுபாடு அற்று எமனின் படை வீரர்கள் எல்லோரையும் சக்கரவாளக் கோட்டத்திற்குக் கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருப்பார்கள்.

செம்பஞ்சுக் குழம்பு வைக்கப்பட்ட மென்மையான கால்களை நரிகள் இழுத்துச் செல்லும். கடகம் அணிந்த கைகளைச் சுடுகாட்டு நாயானது வாயிற் கவ்விக்கொண்டு எலும்பு கிடைத்த ஆனந்தத்தில் ஊளை இடும். ஆண் பிணத்தின் தலையைக் கையில் ஏந்தியபடி பெண் பிணம் மகிழ்ச்சிக் கூத்தாடும். கார் முகில் கூந்தலோ, கயலையொத்த விழியோ, குமிழ் வாயோ, முருங்கைப்பூ உதடுகளோ, முத்துப் பற்களோ எல்லாம் அங்கு ஒன்றுதான். பேய்களின் கைகளில் சிக்கிய இரை. தசைகளும் ரத்தமும் இல்லாத அருவெருப்பான எலும்புகள்.

சாவுப் பறைகளின் ஓசையும், இறந்தவர் பொருட்டு அழுபவர் ஓசையும், நரியின் ஊளையும், இறந்தவர்களை எழுப்பிவிடுவதுபோல் அலறும் பேராந்தைகளின் ஓசையும், கோட்டான் குரலும், ஆண்டலைப் பறவைகளின் குரலும் மயானத்தில் ஒலித்திருக்கும். தான்றி, ஒடுவை, உழிஞ்சில், காரை, சூரை, கள்ளி மரங்கள் அடர்ந்து வளர்ந்து அச்சுறுத்தும். பேய்கள் வாகை மரங்களில் புகலிடம் கொண்டிருக்கும். பிணங்களைத் தின்று கொழுத்த பறவைகள் விளாமரத்தில் தங்கி இருக்கும். பிணங்களைத் தின்போர் தனித்து வாழும் மன்றங்கள், நெருப்பிருந்த பாண்டங்களும், பாடைகளும், அறுத்தெறிந்த மாலைகளும் உடைந்த குடங்களும் நெல்லும் பொரியும் சிறுபலியாக இடப்பட்ட அரிசியும் எங்கும் பரவிக் கிடக்கும் சக்கரவாளக் கோட்டத்தில் நான் அடைக்கலம் கொள்ளப் போகிறேனா? அங்கிருப்பவர்களின் பசிப்பிணியை அகற்றப் போகிறேனா? மன்மதனின் படைத்தளபதி நான். ஆனால், எமனின் கோட்டைக்குள் பிச்சைப் பாத்திரம் ஏந்திச் செல்ல இருக்கிறேனா?

எனக்குள்ளிருந்து எழும் கேள்விகள் இருநிலைகளில் என்னை நிறுத்துகின்றன.

அகிற் புகையும் சந்தனமும் மணக்க வளர்ந்த நீ, நிணநாற்றம் வீசும் கோட்டத்திற்குப் பிச்சையிடச் செல்லப் போகிறாயா?

வேயா மாடத்தின் குயிலிசையும், சக்கரவாளக் கோட்டத்தின் கோட்டான்களின் அலறலும் ஒன்றா? குயிலோசையைக் கேட்டு மகிழ்ந்திருக்கும் உன் செவிகள், கோட்டான்களின் அலறலுக்குப் பயந்து ஒடுங்கிவிடாதா?

தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு, பூமாலைகளால் அலங்கரிக்கப்படும் நீ, ஆபரணங்கள் துறந்து, நீண்ட சுருள் முடியினை முடிச்சிட்டுக்கொண்டு, காதுகளிலும் கழுத்திலும் குவளை மலர்கள் அலங்கரிக்க, துறவி உடை அணிந்து பிக்குணி வேடம் தரித்து நிற்பாயா? இளமையின் அழகு, முற்றாத வெயிலைப்போல் உன்னுள் உறைந்திருக்க, நீ பிக்குணி வேடமணிந்து கையில் பிச்சைப் பாத்திரம் ஏந்தப் போகிறாயா?

ஐந்து இயல்கள், நான்கு பண்கள், பண் நின்ற கூத்துப் பதினொன்றும், எண்ணும், எழுத்தும், இசையும் அறிந்து மகிழப் போகிறாயா? கலைகளின் உயர்வை அறிந்து களிக்கப் போகிறாயா? வாழ்வின் நிலையின்மையை தத்துவ விசாரத்தின்மூலம் அறியப் போகிறாயா? பிரமவாதி, வைணவ சமயவாதி, வேத வாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி போன்ற சமயவாதிகளுடன் ஆன்மீக தத்துவ விசாரம் செய்து வாழ்வினைக் கடத்தப் போகிறாயா?

உன் முழங்காலைத் தழுவி நின்று உன் துறவறத்தைக் காட்டும் காவியுடை, உனக்குப் பொருத்தமற்று இருப்பதை நீ உணரவில்லையா மணிமேகலை? வாழ்வின் இன்ப துன்பங்களை அனுபவித்தவர்கள் மேற்கொள்ள வேண்டிய விசாரத்தினை, நீ மேற்கொள்ளலாமா? நீ அனுபவித்த இன்பம் என்ன?

மணிபல்லவத் தீவில், புத்த பெருமான் பிறந்த வைகாசி பௌர்ணமியில், கோமுகி பொய்கையில் ஆபுத்திரன் கை அமுதசுரபி மேலே வரும். அந்த நாளில், அதே பொழுதில் அங்கு செல்ல வேண்டிய ஊழ்வினையை நீ ஏற்றுக் கொண்டாயோ? அமுதசுரபியில் பசித்திருப்போருக்கு நீ உணவிட வேண்டும். அவ்வளவுதானே? அதற்கேன் நீ துறவுக் கோலத்தை நாடுகிறாய்? பெறுதர்கரிய மாணிக்கமான உன் உடலின் புலன்களை வருத்திக்கொண்டு, நீ பசித்திருப்போருக்கு உணவிட வரம் வாங்கிக் கொண்டாயோ?

உன் தந்தை கோவலன் இறந்தான் என்ற செய்தியறிந்ததில் இருந்து உன் தாய் மாதவி, பௌத்த துறவியாகிவிட்டாள். வாழ்வின் கொண்டாட்டங்கள் துறந்து, அறநெறியின் வழியில் நின்று உன்னை வளர்த்தாள். புத்த பெருமானின் போதனைகளே உனக்கான வழிகாட்டிகளாகக் காட்டினாள்.

ஆனால் மணிமேகலை, உன் உள்ளத்திற்குள் உதயகுமரனின் மேலெழுந்த காதலை பிக்குணி ஆடைக்குள் மறைத்துக் கொள்ள முடியுமா? “அன்பில்லாதவள், தவ உணர்ச்சி இல்லாதவள், விலைமாதின் குணம்கூட இல்லாதவள்” என்றெல்லாம் உன்னை, பளிங்கு மாளிகையில் வசைச் சொற்களால் கடிந்து கொண்ட போதும் அவன் பின்னால் உன் மனம் சென்றதே? உதயகுமரன் உன்மீது, நாட்டிய கணிகைக்கான இச்சை மட்டும் கொண்டவனல்ல, உண்மையான காதல் கொண்டவன் என்று உனக்குப் புரிந்தது. ஆனாலும் உன் மனத்தை ஏன் கட்டுப்படுத்தினாய் மணிமேகலை?

பரத்தையர் குலத்தில் தோன்றிய பெண்களுக்குத் துறவறம் ஏற்புடையதா? விரும்பியவனோ, உடன் இருந்தவனோ இறந்து போனால், பத்தினிப் பெண்டிர்போல் கணவனுடன் உடன்கட்டை ஏறுபவர்கள் அல்ல பரத்தையர்கள். பாணன் இறந்து போனால் பாணன் வாசித்துக் கொண்டிருந்த யாழும், உடன் உயிர் துறப்பதில்லை. நாதத்திற்கு மரணம் கிடையாது. மீட்டுபவர்கள் கையில் நாதம் புதிதாகப் பிறந்து கொண்டே இருக்கும். பரத்தையர் பெண்களும் யாழ் போன்றவர்களே.

தேற்றாங் கொட்டையினால் கலங்கிய நீர் தெளிவதுபோல், உன் மனம் பௌத்த அறநெறிகளால், காமத்தின் பிடியில் இருந்து தெளிந்துவிட்டதா? காம இச்சையைத் தணித்துக்கொண்டு மரணத்தின் மடியில் உதிர்ந்து போகிற சருகல்ல என்று நீ நிரூபிக்க விரும்புகிறாயா?

தந்தையை இழந்து, தாயின் துயரம் பார்த்த உனக்குக் காமம் தவிர்க்க வேண்டிய தீநெறியாகிவிட்டதா மணிமேகலை? மனித உடம்புக்குப் பசியும், தூக்கமும்போல், காதலும் காமமும் அவசியமல்லவா? பசித்த உடலுக்குப் பசியே பிரதானம். காமமுற்ற உடலுக்கு காமமே பிரதானம். காமத்தின் வேட்கையைக் கடக்காமல் துறவறம் செல்வது, ஆழ்கடலை அறியாமல், அலைமேல் கலம் செலுத்துவதுபோல்.

காமத்தினால் திசை மாறியவர்கள்தான் உலகத் துன்பத்திற்குக் காரணமானவர்களா? நெடுமுடி கிள்ளி பீலிவளையின் மீதான காமத்தில் மூழ்கி, இந்திரவிழா கொண்டாடாமல் போனதால்தான், புகார் நகரம் ஆழிப் பேரலையில் அழிந்தது. இந்திரனின் மகன் சயந்தன் சான்றோர் நிரம்பிய அவையில் ஊர்வசியின் மீதான காமத்தைக் கட்டுப்படுத்த முடியாததால்தான், நாட்டியக் கணிகையர்களாக ஊர்தோறும் பெண்கள் பிறந்து அல்லலுறுகிறார்கள். இவர்கள் தங்களின் நெறிமீறி நடந்ததற்குக் காமம் மட்டும் காரணமல்ல. நீ நம்புவதுபோல் அவர்களின் முன்வினைகளே காரணம். காமம்தான் மனித குல அழிவுக்கான காரணம் என்றால், காமம் ஏன் மீண்டும் மீண்டும் மனித உடலில் கிளைக்கிறது?  உயிரின் மலர்ச்சியாகக் கிளைக்கும் காமத்தை ஏன் நாம் கட்டுப்படுத்த வேண்டும்?

பசி இயற்கை. பசிப்பிணியைப் போக்குவது அறம். காமம் இயற்கை. காம இச்சையைப் போக்குவது மட்டும் அதர்மமா? புலன்களை ஒடுக்க வேண்டும் என்று அறநெறி போதிக்கிறது. உடலுக்குப் பிறப்பும், முதுமையும், நோய்வாய்ப்படுதலும், இறப்பும்தான் இயற்கை. பிறந்த உடலின் புலனின்பங்களை நிறைவேற்றுவதும் இயற்கை. புலனடக்கம் துறவிகளின் அறநெறியாக இருக்கலாம். புலனையடக்கி ஆள்வோர் கண்டடையும் பேரின்பமும், புலனின்பத்தில் திளைப்போர் கண்டடையும் சிற்றின்பமும் ஒன்றே. புலனை அடக்குதல் உடலை வறுத்துதல். உடலை வருத்தும் உரிமை மானுடனுக்கு உண்டா?  உடல் ஒரு கூடு, உடலின் வழியாகவே ஆன்மா தன்னை அறிகிறது. அறிவை அறிதலும், தத்துவம் உணர்தலும், காமம் சுகித்தலும் ஆன்மாவிற்கு ஒன்றே. உடலை மகிழ்வித்தல் கீழ்மை என்றால், மனித குலமே துறவறம் பூண்டிருக்குமே?

கள்ளை விரும்பி உண்பவர்கள் மதங்கொண்ட யானையின்முன் சென்று தானாகவே மரணத்தை எதிர்கொள்வதுபோல் காமத்தின் பிடியில் சிக்குபவர்கள் என்கிறார்கள். மதங்கொண்ட யானையின்முன் செல்லக்கூடாது என்பதுதான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கள்ளருந்துவதே பாவம் என்றால், புரிதலில்தானே தவறு?

மணிமேகலை, தவக்கோலம் பூண்டு நிற்கும் உன் உருவத்தைப் பார். மார்பில் சந்தனம் இல்லை. முத்தாரம் இல்லை. கழுத்தில் செங்கழுநீர்ப் பூக்களும், குவளைப் பூக்களும் இல்லை. அலங்காரங்கள் ஏதுமில்லாத உடல், இளமையின் பொலிவால், செங்காந்தள் மலரைப்போல் ஒளிர்வதைக் காண். கண்கள் காமனின் விற்கணைகளாகத் தயார் நிலையில் இருக்கின்றன. தொய்யில் வரையாத உன் இள முலைகள் நிமிர்ந்து நின்று போர்வீரர்களாக, போருக்கு அழைப்பு விடுகின்றன. படமெடுத்தாடும் நாகத்தைப்போல் அகன்ற உன் அல்குல், பார்ப்பவரின் பார்வையை அகல விடாமல் கவர்ந்திழுக்கிறது. உன்னுடைய பிக்குணி கோலம், சிறு குழந்தை, தாயின் மேலாடையைச் சுற்றிக்கொண்டு, உலா வருவதுபோல் பொருந்தாமல் உள்ளது.

இல்லை. என் புலன்களில் காதலும் இல்லை. காமமும் இல்லை. என் முன்பிறவியின் தீவினையால் நான் இப்பிறப்பில் துறவறம் ஏற்கிறேன். என் மனம் காமத்தின் வசம் இல்லை. மன்மதனின் படையிலும் நான் இல்லை. அவனுடைய காமக்கணைகள் என்முன் தோற்று விழுகின்றன. உதயகுமரன்மேல் இருந்த சிறு காதலும் இப்பொழுது இல்லை. வெள்ளம் வடிந்த வண்டல் நிலம்போல் என் மனம் தெளிவாக இருக்கிறது. நான் புத்தனின் அருட்பார்வையில் இருக்கிறேன். புத்தனின் கனிந்த விழிகள் மனிதகுலத்தின் துயர்போக்க எனக்கு அழைப்பு விடுக்கின்றன. காமம் பருவத்தே பூக்கும் மலர். பருவம் கடந்தால் மணமற்று உதிர்ந்து போகும். பசிப்பிணியே உடலில் உயிர் உள்ளவரை உள்ளிருந்து உணற்றும்.

நான் புத்த பெருமானின் பாதையில் நடக்க விரும்புகிறேன். யாருக்கும் கிடைக்காத அரிய வரம் எனக்குக் கிடைத்திருக்கிறது. யானைத் தீ என்னும் பெரும் பசி போக்கும் அற்புதம். புத்த பெருமான் அவதரித்த வைகாசி நன்னாளில் நான் கோமுகி பொய்கைக்குச் செல்வேன். இளவேனில் பருவத்தில், சூரியன் இடபத்தில் இருக்க, கார்த்திகையை முதலாவதாகக் கொண்டு எண்ணப்படும் இருபத்தேழு நட்சத்திரங்களில் நடுநாயகமாக விளங்கும் விசாக நட்சத்திரத்தில், கோமுகி பொய்கையில் அமுதசுரபி வெளிப்படும்.

ஆபுத்திரன் கையில் இருந்த அந்த அட்சயப் பாத்திரத்தைக் கையில் ஏந்துவதே நான் இப்பிறவியை எடுத்ததின் பலன். அமுதசுரபியில் உயிர் காக்கும் அருமருந்தாகிய அமுதம் பெருகிக் கொண்டே இருக்கும். அட்சயப் பாத்திரத்தில் இருந்து உணவை எடுத்துக் கொடுத்தால், வாங்குபவர்களின் கைகள்தான் ஓய்ந்துபோகுமே தவிர, பாத்திரத்தில் இருந்து ஒரு பருக்கைச் சோறும் குறையாது. பசித்திருப்பவர்கள் உள்ளவரை, சோறிடும் அட்சயப் பாத்திரம் என் கையில் இருக்கும்வரை என் மனம் மானுடர்களின் சிற்றின்பத்தில் அலைபாயாது. காயசண்டிகையின் யானைப் பசிக்கு மருந்து என் கை அட்சயப் பாத்திரமே. காயசண்டிகைகள் பிறந்துகொண்டே தான் இருப்பார்கள். காயசண்டிகைகளுக்குத் தான் இந்த மணிமேகலை. உதயகுமரன்கள் தேன் குடிக்கும் வண்டுகள். குவளை மலர் இல்லையென்றால், தாமரை மலருக்குத் தாவிவிடுவார்கள்.

உதயகுமரனின் காதலை ஏற்பது பற்றிக் கேள்வியே இல்லை மணிமேகலை. அட்யசப் பாத்திரத்தில் இருந்து பெறப்போகும் அமுதம் பற்றிப் பேருவகை கொள்கிறாய். உன் உடலும் ஓர் அமுதக் கலசம்தான். உயிர்ப் பிணி போக்கும் அமுத கலசம். உயிர்களை உண்டாக்கும் அமுதம். கன்று பருகாத பால், பசுவின் மடியிலேயே தங்கிவிடலாமா? பசுவின் உயிருக்கு உகந்ததா அது?  நிலவில் இருந்து பெருகும் ஒளி, புவியை வந்தடைந்தால்தானே இன்பம்? சூரியனின் கதிர்களில் பெருகும் வெப்பம்தானே புவியின் உயிர்களைத் தழைக்கச் செய்கிறது? உடலில் பெருகும் காமம்தானே, உடலுக்குப் புத்துணர்ச்சி. உடலின் பேரின்பம். கலவியில் பெருகியவைதானே உலகத்து உயிர்கள்?

என் உடலின் அழைப்பைவிட, பசித்திருப்போரின் அழுகுரல் என்னை வதைக்கிறது. பசிப்பிணியைப் போக்குவது உயர்வா தாழ்வா, உடலின்பம் பெருக வாழ்வதா என்பதெல்லாம் மனத்தின் விருப்பமே. என் மனம் துறவறத்தையே விரும்புகிறது. நாட்டியக் கணிகையாகக் கலைகளின் உயர்வை ஆராய்வதைவிட மனிதத் துன்பங்களுக்குக் காரணம் கண்டறியவே விரும்புகிறேன். வேயா மாடமும், சக்கரவாளக் கோட்டமும் எனக்கு ஒன்றாகவே தெரிகிறது. அலங்காரம் வெறும் சதைகளுக்கே. ஆன்மாவிற்கான அலங்காரம் வாழ்வின் பொருளறிதலே. இருளை அகற்ற ஒவ்வொரு வீட்டுக்கும் நெய் விளக்குகள் வேண்டும். ஊருக்கு வழிகாட்ட கலங்கரை விளக்கமும் தேவை. கடலில் தத்தளிக்கும் தோணிகளுக்கு வழிகாட்ட உயர்ந்த விளக்கங்கள் நிற்பதைப்போல், துன்பங்களில் தத்தளிக்கும் உயிர்களுக்கு வழிகாட்டும் விளக்கமாக நிற்க விழைகிறேன்.

ருதுவாகி, மலரும் போதாகி நிற்கும் எனக்குள்ளும் காமம் தலைதூக்கும். அட்சயப் பாத்திரத்திலிருந்து பெருகும் அமுதத்தை உண்ணும் பசித்தவர்களின் கண்களில் பெருகும் கண்ணீரில் அந்தக் காமம் கருகிவிழும். ஒரு சோற்றுப் பருக்கையில் இருந்து, பெருகி வளரும் உணவில் உலகத்து உயிர்களின் பசிப்பிணி தீரும்போது, என் உடல் குளிர்ப்பொய்கையாக இருக்கும்.

*

தேன் தடவிய தலை, அழகான வளையல்கள், கையில் அட்சயப் பாத்திரத்துடன் சோழ நாட்டிலும், வஞ்சியிலும், காஞ்சியிலும் நடக்கிறாள் மணிமேகலை. பதினெட்டு வகை மொழி பேசுவோரில் குருடரும், செவிடரும், முடவரும், ஊமையும், பாதுகாப்பு அற்றோரும், தவ முனிவர்களும், உடையின்றித் திரிபவர்களும் பசிப்பிணி போக்கிக்கொள்ள மணிமேகலையைப் பின்தொடர்ந்தனர். பல நூறு விலங்கினங்களும், சின்னஞ்சிறு உயிரினங்களும், உண்ண உணவு வேண்டி மணிமேகலையைத் தொடர்ந்தன. அவளின் கைகளே அட்சயப் பாத்திரமாக நீண்டு உணவளித்தன. உயிரினங்களுக்கு உணவளித்தலே பெரும் அறம், தன் வாழ்வின் அறம் என மணிமேகலை தெளிந்தாள்.

ஆதியில் இருந்தே மனிதர்களை உணற்றி வந்த பசி, மணிமேகலையின் அட்சயப் பாத்திரத்திற்குள் அடைக்கலமானது. அணைக்க முடியாத நெருப்பாக மனிதர்களை வாட்டிய யானைத் தீ, மணிமேகலையின் மென்விரல்களில் குளிர்ந்து கிடந்தது. “எல்லா உயிரும் உணவுண்ண வருக” என்ற அவளின் அழைப்பிற்காகப் பசித்த வயிறுகள் காத்திருந்தன. “புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி” என்று தர்மத்தின் பாதையில் நடக்கத் தொடங்கினாள் புத்த பிக்குணி மணிமேகலை. அவளின் ஒவ்வொரு அடியிலிருந்தும் தூய அன்பெனும் தாமரைகள் மலர்ந்தன.

அணிந்திருந்த குவளை மலர்கள் மட்டும் உடல் வெப்பத்தினால் தீய்ந்திருந்தன.

***

அ.வெண்ணிலா – வந்தவாசியைச் சேர்ந்த இவர், ஆசிரியர் (நல்லாசிரியர் விருது பெர்றவர்), கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர். இதுவரை 10 நூல்கள் எழுதியுள்ளார். அண்மையில் வெளியான கங்காபுரம் பெரும் கவனம் பெற்றது . ஆசிரியர் தொடர்புக்கு –

RELATED ARTICLES

6 COMMENTS

  1. அற்புத நடையழகு..
    வயிற்றுப் பசி
    மனதின் பசி
    முதலாவதை யோசித்தவர்
    மார்க்ஸ்
    இரண்டாவதை யோசித்தவர்
    ஃபிராய்ட்
    முதலாவது
    இருத்தலுக்கானது
    இரண்டாவது
    வாழ்தலுக்கானது
    அவளுக்குள்
    அனைவரின் வயிற்றுப் பசி
    மற்றும்
    உடம்பின் வழி மனதின் பசி போக்கும் இரண்டு பாதைகள் முளைத்தன
    இருத்தலை தொடர்ந்தே
    வாழ்தல் சாத்தியம்
    அதனால் அவள் முதல்கட்ட பணியாய்
    அனைவரின்வயிற்றுப் பசி போக்க
    அட்சய பாத்திரம் ஏந்தினாள்
    அதனால்
    இரண்டாவது பாதை தன் தேவதையை வரவேற்க இப்போதும்
    வழிமேல் விழி வைத்து இமை உதறி கனப்பின் மீது காத்திருக்கிறது..
    தீரா அன்பின் வந்தனங்கள் வெண்ணிலா!
    💌

  2. ஏயப்பா பிரமிக்க வைக்கும் வாழ்கை முறைகள் உணர்வுகள்
    தடுமாற்றங்கள்
    சிந்தனைகளேன
    மணிமேகலையின் கண்ணோட்டத்தில் அட்சய பாத்திர விருந்து படைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  3. மணிமேகலை தான் ஒரு பெண்ணை முழுக்க முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டு, அவளின் அகவுணர்வுக்கும், புறக் காரணங்களால் அவளுக்குள் எழும் மனவெழுச்சிகளையும், குழப்பங்களையும், காதலையும், துறவறத்தையும் முதன்மையானக் கருவாகக் கொண்டு அலசப்பட்ட பழைய காப்பியம். பிறப்பின் காரணத் தொடர்புக்காக மட்டுமல்லாமல், முற்பிறவிக் கதைகள், புராணத் தொடர்பு, கடல் தாண்டிய பரந்த நிலவியல் விவரணைகள் என்று சிலம்பையும் தாண்டிச் செல்வது மணிமேகலை.

    சிலம்பில், கண்ணகி ஒரே தரம் தன் வாழ்வின் உச்சமான தருணங்களை வெளிப்படுத்துகிறாள் (நீதி கேட்பது, நகர் எரிப்பது உட்பட). ஆனால், மணிமேகலை,
    துறவறமேற்பதில் தொடங்கி, கோமுகி குளத்திலிருந்து அட்சயபாத்திரம் அவள் கையில் சேர்வது தொடங்கி, முற்பிறவியை அறிவது, துறவறம் ஏற்ற பின்னும் தன்னைத் தேடிவரும் உதயகுமாரனிடமிருந்து விலகிநிற்பதற்காக காயசண்டிகையாக உருமாறுவது, பிறகு அவள் (காயசண்டிகை) கணவனுக்கும், உதயகுமாரனுக்குமான மோதலில் உதயகுமாரன் கொல்லப்பட்டு, இந்தக் கொலைக்காக மணிமேகலை சிறை செல்வது என… ”அடுத்து என்ன செய்யப் போகிறோம்?” என்று அவள் முடிவெடுக்க வேண்டிய தருணங்களும் யாவுமே தீவிரமானவை.

    இப்படித் தன் வாழ்வு மொத்தமும் தீவிரமும், கேள்விகளும், முன் பின் நிகழ்ந்த/ நிகழப்போகும் அறிதல்களும், அதனால் கிடைக்கப் போகும் இழப்புகளையும் தெரிந்துகொண்ட மணிமேகலையின் மனதை ஒரு சிறுகதையின் வழியாகத் திறந்து பார்ப்பது என்பது சவாலான வேலைதான். எண்ணற்ற சிக்கலும் சிடுக்குகளும் கொண்ட வலைமுடிச்சை ஒவ்வொரு நூலாக அவிழ்ப்பதுபோலவே மணிமேகலையின் மனதைக் கையாள வேண்டியிருக்கும். அப்படியே இந்தச் சிறுகதையும் மெல்ல ஒன்று மாற்றி ஒன்றாக எழும் கேள்விகளின் திறப்பாக வடிவெடுக்கிறது.

    ”துறவா காமமா” இரண்டில் எது? உதயகுமாரனா? புத்தசன்மார்க்கமா? இருவரில் யாவர்? இரண்டும் பசிதான் எதைக் கொண்டு எதைத் தீர்ப்பது? மணிமேகலை தேர்ந்தெடுத்த பாதையை ஊரறியும். ஆனால், அப்போது அவள் அணிந்திருந்த குவளை மலர் உடல் வெப்பத்தில் தீய்ந்ததை புறத்தில் நின்று அ.வெண்ணிலா எழுதுகிறார். சீத்தலைச் சாத்தனாரும் தொடாத இடமது.

    தனது கங்காபுரம் நாவலில் ராஜேந்திர சோழனுக்குள்ளே புகுந்து ’மதுராந்தகனைக்’ கண்முன் கொண்டுவந்தவர் இந்தச் சிறுகதையில் மணிமேகலையை, அவளது காலத்தில் அவள் தெரிந்தெடுத்த துறவற முடிவின் கூர்மையான தருணத்தை சங்கச் சூழலில் காணப்பெரும் பொருள் விவரணைகளோடு செறிவுடன் எழுதிவிட்டிருக்கிறார்.
    பிறகு, இளங்கோவுக்குக் கிட்டினதுபோல சீத்தலை சாத்தனாருக்குப் பெரிய புகழ் கிட்டவில்லை என்று கேட்டதும், ”நீ முதலில் மணிமேகலையை வாசி” என்று என் கையில் நூலைத் என் கையில் தந்த, என் தமிழ் வாத்தியாரை இந்தத் தருணத்தில் மனசார நினைத்துக் கொள்கிறேன்.

    • மிக்க மகிழ்ச்சி. கதையுடன் சேர்த்து நீங்கள் மேற்கொள்ளும் மற்றுமொரு அகப்பயணம் சுவாரசியமாக இருக்கிறது. கதைக்குப் புத்தொளியும் தருகிறது. பேரன்பும் நன்றியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular