நிகழும் அன்பிடம் பதில்களேதுமில்லை
வாசித்துகொண்டிருந்த விதையை போட்டுவிட்ட அணில் ஒன்று
அரவத்தில் முளைத்த உனது கேள்விமரத்தின்
புறமுதுகில் சுழன்று உயர்கிறது
நிகழும் முத்தத்தில் வகைமையில்லை
உன் உதடுகள் சுதாரிக்கும் போது
கோரைப்பல் பட்டு கீறிய கோட்டில்
வெல்வெட் பூச்சிகள் ஊர்கிறது
நிகழும் காத்திருப்பில் எதிர்பார்ப்புகளில்லை
கனவிலிருப்பவனை திடுக்கிட செய்யும் உனது அண்மை
கனவின் ஒரு மிடறை பருகும்படி பரிசளிக்கிறது
அழைப்பு கூட வெறுமனே நிகழ்கிறது
ஒரு ஸ்மைலியில் ஆரம்பித்து
அடுத்தடுத்து அனுப்பப்பட்ட
இரண்டு ஸ்மைலிகளில் முடிகிறது.
அன்பில் கேள்விகள் நடுசாலையில் நடப்படுகிறது
சட்டென்று அது இடைநிறுத்தும் போது
நான் கடந்துவிடுகிறேன் உன்னை.
பிறகு சடைத்து பூக்கும் எனக்கான காத்திருப்பை
உருவி கொட்டுகிறது அந்த அணில்.
***
அண்ணல்
annal.kavithai@gmail.com