ஷான்
அது அஞ்சலிதான்..
நன்கு அறிமுகமான மனிதர்கள் கூட முற்றிலும் எதிர்பாராத சூழலில் திடீரென்று எதிர்ப்படுகையில் தடுமாறிப் போவோம். திருமாறன் ஒரு வினாடி உறைந்து நின்று விட்டான். கடந்த ஆறு ஆண்டுகளில் அவள் எங்கே இருக்கிறாள் என்ன செய்கிறாளென்று அறிந்து கொள்ள அவனும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்படி முயன்ற போதும் அவளுடைய நெருங்கிய நட்புகள் பற்றி எந்தத் தகவலும் இல்லாததாலும் அவள் ஃபேஸ்புக் பக்கத்தில் எந்த விதமான புதிய பதிவுகளும் இல்லாததாலும் பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஒரு முறை அவளுக்கு அழைக்க முயன்றபோது அவளுடைய பழைய எண்ணும் செயல்பாட்டில் இல்லை என்று தெரிய வந்தது.
ஃப்ரீமாண்ட் என்பது கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு இந்தியா. பார்க் பெஞ்சில் சில நொடிகள் கண்ணயர்ந்துவிட்டு திடீரென்று கண்விழித்தால் சற்று சுத்தமான சென்னையிலோ ஹைதராபாத்திலோ இருப்பது போல ஒரு குழப்பம் ஏற்படும். டார்கெட் அங்காடியில் வீட்டுக்குத் தேவையான சில மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு வந்திருந்தான் திருமாறன். வந்த வேலை முடிந்து சக்கரம் வைத்த டிராலியில் பொருட்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டு வெளியே வந்து காருக்கு அருகே வரும்போதுதான் அவளைப் பார்த்தான். அவள் இவனைப் பார்த்திருக்கவில்லை. தன்னுடைய காருக்கு அருகே டிராலியை நிறுத்தி பொருட்களை எடுத்து காரின் பின்புறம் அடுக்கிக் கொண்டிருந்தாள். இவன் அதிகமான பொருட்கள் வாங்கியிருக்கவில்லை. எனவே விரைவில் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு டிராலியை அதற்குரிய இடத்தில் விட்டு வந்தான். அஞ்சலி நிறைய வாங்கியிருந்தாள். இன்னும் காரில் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். திருமாறன் அவசரமாக தனது காருக்குள் ஏறி அமர்ந்தான். ஏனோ அவள் பார்வையில் பட்டு விட இவன் விரும்பவில்லை.
அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே திருமாறன் கையிலிருந்த ஸ்டார்பக்ஸ் காபியை உறிஞ்சத் தொடங்கினான். கொதித்தது.
அஞ்சலியை அவன் கடைசியாக சந்தித்த சூழல் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியானதல்ல. சென்னையில் சைதாப்பேட்டை குடும்ப நீதிமன்றத்துக்கு வெளியே அவள் பெற்றோருடன் பார்த்தது. திருமாறனுடனான மூன்று வருட வாழ்க்கை சட்டப்படி முடிவுக்கு வந்த நாள்.. உருக்குலைந்து போயிருந்தாள். வெறித்த பார்வையுடன் தரையில் கிடந்த வேப்பம்பூக்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். திருமாறன் அவளை மெல்ல நெருங்கினான். அவள் இவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
பெரிய கரிய விழிகளில் நீர் ததும்பி நின்றது. எப்போது வேண்டுமானாலும் விழத் தயாராக இருந்தது.
“புரிஞ்சுக்கோ அஞ்சு…” என்றவன் சுதாரித்து “அஞ்சலி” என்று மாற்றிக் கொண்டான். தயாராக இருந்த கண்ணீர் திரண்டு பொட்டுப் பொட்டாக விழுந்தது.
“இதுதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. உனக்கு அமெரிக்கன் லைஃப் ஸ்டைல் எல்லாம் ஒத்து வரலை. நீ வளர்ந்த விதம் அப்படி. நானும் பொறுமையாதான் இருந்தேன். உனக்கே தெரியும். விடு.. என்னென்னவோ நடந்து போச்சு.”
அவள் ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தான் திருமாறன். ஆனால் அவள் எதுவும் பேசவில்லை. சில நொடிகள் கனத்த மவுனத்துக்குப் பின் ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.
“எனி வே.. இதை மியூச்சுவலா முடிச்சுக்கிட்டதுல எனக்கு சந்தோஷம். நானும் நாலு நாள்ல திரும்பிப் போகணும். வீ கேன் பீ குட் ஃப்ரெண்ட்ஸ்”
ஆன்லைன் மேட்ரிமோனி வழியாக ஜாதகம், ஜாதி, பணம், மதம், நிறம் எல்லாம் பார்த்துதான் அவர்கள் திருமணம் நடந்திருந்தது. அஞ்சலி பி.ஏ ஹிஸ்டரி படித்திருந்தாள். ஓரளவு பாடுவாள். கிராபிக் டிசைன் கற்று வைத்திருந்தாள். பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அகண்ட விழிகள், நீண்ட புருவங்கள். இரண்டாவது முறை பார்க்கத் தூண்டும் அழகு.
திருமாறன் அப்போதுதான் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆன்சைட் பணிக்காக சென்றிருந்தான். அமெரிக்க மாப்பிள்ளை என்றதும் மேட்ரிமோனி சந்தையில் மவுசு கூடிவிட்டது. சராசரியான உயரம், மெல்லிய தொப்பை என்று குறை சொல்ல முடியாத தோற்றம். அஞ்சலியின் அழகைப் பார்த்ததும் அவன் மயங்கிவிட்டான். அவன் அக்கா மாலதி அப்போதும் சொன்னாள்.
“வேலைக்கு போற பொண்ணா பாத்துக்கடா… அங்க போயி ரெண்டு பேரும் சம்பாதிச்சாதான் சமாளிக்க முடியும். இந்தியா மாதிரி இல்லை”
“அக்கா.. இங்க வந்து பாரு. வேலைக்கு போயிட்டு இருந்தவங்களே குழந்தைங்களைப் பாத்துக்க வேலையை விட்டுட்டு வீட்டுல உட்கார ஆரம்பிச்சுட்டாங்க. நான் தேவையான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அவ குடும்பத்துக்கான பொண்ணா இருந்தாப் போதும்.”
“இப்ப இப்படித்தான் சொல்லுவே… ரெண்டு குட்டி போட்டப்புறம் செலவு வரும்போது தெரியும். நீ அவகிட்டே மயங்கிட்டேடா… இனி என்ன சொன்னாலும் உன் காதுல ஏறாது … போ”
ப்ரீ வெட்டிங் ஷூட் என்று அஞ்சலியை அழைத்துக் கொண்டு நண்பர்களுடன் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்தான். பயணத்துக்கு முதல் நாள் இரவு தூக்கமே இல்லை. அஞ்சலியின் பக்கம் அப்படியான தோழிகள் இல்லை. அப்பா அம்மா வந்தால் நன்றாக இருக்காது என்று திருமாறன் சொல்லிவிட்டான். அவளுடைய பள்ளித் தோழி ப்ரேமா உடன் செல்வதாக ஒப்புக் கொண்டாள். அவள் கொஞ்சம் அராத்துப் பேர்வழி.
“எதுக்கும்மா கவலைப்படறீங்க. இவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அன்னை தெரசாவோட நேரடி வாரிசு. நான் போறேன்ல.. பத்திரமா பாத்துக்கறேன்.”
அஞ்சலி சற்று
கூச்ச சுபாவம் உடையவள் என்று அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. அவனுடைய நண்பர்களுடன் யோசித்து யோசித்துப் பேசினாள். ஒதுங்கி ஒதுங்கி நின்றாள்.
“ஜாலியா இரு அஞ்சலி. ஏன் இப்படி பயப்படறே?” பல முறை கேட்ட பிறகு சொன்னாள்.
“எனக்கு இப்படி வந்தெல்லாம் பழக்கம் இல்லை. காலேஜ்ல படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் கூட இப்படி வெளியே போக விட்டதில்லை.”
திருமாறனின் நண்பர்கள் இருவர் வந்திருந்தார்கள். கூத்தும் கும்மாளமுமாக இருந்தார்கள். ரகளையானவர்கள். அவர்கள் போட்டோ ஷூட் என்று அடித்த லூட்டியில் இன்னும் மிரண்டு போனாள். கிறிஸ்தவத் திருமணங்களில் அணியும் வெள்ளை உடை அவளுக்குத் தரப்பட்டது. திருமாறன் கோட் சூட் அணிந்திருந்தான்.
“அய்யோ… இதெல்லாம் போட்டா அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க”
“என்ன சார்.. மேடம் இதுக்கே இப்படி சொல்றாங்க. நாங்க பிகினி எல்லாம் போட்டு சூட் பண்ணியிருக்கோம்.” நீண்ட தாடி வைத்து புருவத்தில் கோடு போல மழித்து விட்டிருந்த போட்டோகிராபர் சலித்துக் கொண்டான்.
அஞ்சலி ஒத்துக் கொள்ளவே இல்லை. ப்ரேமா அவள் அம்மாவுக்கு போன் போட்டாள்.
“ஏன்டி மானத்த வாங்கறே… அவ்வளவு தூரம் போயிட்டேல்ல. மாப்பிள்ளை என்ன சொன்னாலும் கேளு.”
பட்டுச்சேலையோடு குளிர் கண்ணாடி அணிந்து புல்லட் ஓட்டச்சொல்லி என்னென்னவோ செய்யச் சொன்னார்கள். அஞ்சலிக்கு வியர்த்து விறுவிறுத்தது.
போட்டோகிராபர் திருமாறனை ஓரமாக அழைத்துப் போய் சொன்னான்.
“சார்.. மேடம் ரொம்ப இறுக்கமா இருக்காங்க. சிரிக்கவே மாட்றாங்க.. லைஃப் லாங் இருக்கப் போற விஷயம் இது. நீங்கதான் எடுத்துச் சொல்லணும். இவ்வளவு செலவு பண்ணி வந்திருக்கோம்”
திருமாறன் அஞ்சலியிடம் வந்தான். அவன் குரலில் சற்று கடுமை.
“என்ன அஞ்சலி… நம்ம வேதா இந்த ஷூட்க்காக புல்லட்லயே திருச்சில இருந்து வந்திருக்கான். நீ குறைஞ்ச பட்சம் கொஞ்சம் சிரிச்ச மாதிரி மூஞ்சிய வெச்சுக்க முடியாதா?”
“நினைச்ச மாதிரி மூஞ்சியை வெச்சுக்க நான் என்ன நடிகையா? எனக்கு வரலை. என்னை விட்டுடுங்க” என்று மனதுக்குள் கதறினாள். வெளியே சொல்லவில்லை. தலை அசைத்து வைத்தாள். அதற்குப் பிறகுதான் ஆட்டமே தொடங்கியது.
“மேடம்.. அப்படியே லிப்புக்குப் பக்கத்துல போங்க. கிஸ் பண்ண வேண்டாம். ஆனா பண்ணுனா எப்படி ஒரு எக்ஸ்பிரஷன் இருக்குமோ அது வேணும்”
“சார்… நீங்க சட்டையக் கழட்டிட்டு இந்த வாட்டர்ல நில்லுங்க. அவங்களை அப்படியே தூக்க முடியுமா?”
அஞ்சலிக்கு எப்படியோ ப்ரேமா அந்த இரண்டு நாட்களை நன்றாக அனுபவித்தாள். இவர்களுக்கு செய்து காட்டுகிறேன் பேர்வழி என்று வேதாவுடன் சேர்ந்து தனியாக ஒரு போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தாள்.
“என்ன மேடம் நீங்க… ப்ரேமா மேடத்தைப் பாருங்க… அந்த ஃபீலிங்தான்.. அது அப்படியே உங்க முகத்துல வரணும்…”
அவளுக்கு அழுகைதான் வந்தது.
எப்படியோ அழுகையை அடக்கிக் கொண்டு ஒப்பேற்றி போட்டோ ஷூட்டை முடித்து சென்னை வருவதற்குள் அவளுக்கு உயிர் போய்விட்டது. காரில் திரும்பும்போது திருமாறன் இறுக்கமாக அமர்ந்திருந்தான். அவன் ஏதேதோ எதிர்பார்த்திருந்தான்.
வீடு வந்து சேர்ந்தபோது அஞ்சலிக்குத்தான் திட்டு விழுந்தது.
“அவங்க அமெரிக்காவுல இருக்கறவங்க. கொஞ்சம் ஃப்ரீயா இருக்கணும்னு நினைப்பாங்க. மாப்பிள்ளையோட அக்கா கூப்பிட்டிருந்தாங்க. ஷூட் முடிஞ்சு வந்ததுல இருந்து மாப்பிள்ளைக்கு மூஞ்சியே இல்லையாம். சாப்பிடாம போய் படுத்துட்டாராம். நீ கூப்பிட்டுப் பேசு மொதல்ல, தலைகீழா தண்ணி குடிச்சாலும் இப்படி ஒரு வரன் அமையாது. அத நீயே கெடுத்துடாதே..”
அஞ்சலிக்கு ஆத்திரம் வந்தது. பள்ளியில் படிக்கும்போது ஒரு முறை நாடகத்தில் நடிக்கப் பெயர் கொடுத்துவிட்டு வந்ததற்காக அவள் அப்பா ஓங்கி அறைந்து விட்டார். அதன் பிறகு அந்த ஆசையையே விட்டுவிட்டாள். புதிதாக யாரிடமும் ஒட்டிக் கொண்டு பேசுவது அவள் சுபாவத்திலேயே இல்லை. நீண்ட நாட்கள் பழகினால்தான் பேசவே தொடங்குவாள். இதெல்லாம் அவள் அம்மாவுக்கே தெரியும். திடீரென்று அமெரிக்க மாப்பிள்ளைக்கான அஞ்சலி எங்கிருந்து குதிப்பாள்?
அறையைப் பூட்டிக்கொண்டு சற்று நேரம் அழுதுவிட்டு அவளுடைய மொபைலை எடுத்தாள். திருமாறனை அழைத்தாள்.
“ஹலோ” தளர்வாக வந்தது அவன் குரல்.
“என் மேல கோவமா?”
“ப்ச்.. இல்லை”
“இல்லை.. தெரியும். உங்களுக்குக் கோபம்தான்… ஐ ஆம் சாரி… நான் உங்களை ரொம்ப அப்செட் பண்ணிட்டேன். எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. இனிமே பழகிக்கறேன். கொஞ்சம் டைம் கொடுங்க”
சொல்லும்போதே படபடத்து அவளுக்கு அழுகை வந்தது. விசும்பி அழத் தொடங்கினாள்.
“ஏய்.. அஞ்சு.. பைத்தியம்.. இப்ப எதுக்கு அழறே? உன்னோட நல்லதுக்குத்தானே சொல்றேன்… நாளைக்கு நீ அமெரிக்காவுல வந்து இருக்கப் போறவ… அங்கே எல்லாம் ஓவரா அலட்டுவாங்க. ஸ்டைலா இருப்பாங்க.. நீ இதெல்லாம் பழகிக்கணும். இல்லாட்டி அங்க வந்து ரொம்ப கஷ்டப்படுவே…”
“புரியுது.. நான் மாத்திக்கறேன்…” சொற்கள் வந்தாலும் ஒரு வித அச்சம் அவளுக்குள் பரவியது. அவன் தன்னை வெறுத்து விடுவானோ? அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அவள் தயாராக இருந்தாள். ப்ரேமாதான் மீண்டும் உதவிக்கு வந்தாள்.
“இதுக்கு போயாடி அழுதுட்டு இருக்கே?”
அவளுக்கு எப்படி டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது என்று தொடங்கி சரியான லிப் ஸ்டிக் போடுவது வரை சொல்லிக் கொடுத்தாள். புக் மை ஷோவில் டிக்கெட் போட்டுக் கொடுத்தாள். டிக்கெட்டை அனுப்பியபோது திருமாறன் அசந்து போனான். இந்த மாற்றம் திருமாறனுக்குப் பிடித்திருந்தது. அவள் அணிந்திருந்த புதிய சென்ட் அவனைக் கிறங்கடித்தது. அவளுடைய புதிய ஆடைகள் அவள் அழகைப் பல மடங்கு உயர்த்திக் காட்டின.
“அஞ்சு… அள்ளுறியே”
அஞ்சலி வெட்கமாக சிரித்தாள்.
திருமணம் இனிதாக நடந்தேறியது. டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் அவள் வாழ்க்கை தொடங்கியது. விமானத்தில் சென்று இறங்கியபோதே தொண்டைக்குள் உருளத் தொடங்கிய ஒரு பயப்பந்து மூச்சை அடைத்துக் கொண்டு அகல மறுத்தது. பெரிய பெரிய சாலைகள், வால் பிடித்தது போல் பறக்கும் பறக்கும் கார்கள் என்று நேரில் பார்க்கும்போது மிரட்டலாக இருந்தது. அக்கம் பக்கத்திலிருந்து சில தமிழகப் பெண்கள் வந்து பார்த்துப் போனார்கள். டப்பர்வேரில் ஏதாவது சமைத்து எடுத்து வந்தார்கள். பிந்து சென்னையைச் சேர்ந்தவள். மலையாளி. இங்கே இரண்டு ஆண்டுகளாக இருக்கிறாளாம். அவளாகவே வீட்டுக்கு வந்து அறிமுகம் செய்து கொண்டாள். சிரித்த முகம். உதவி செய்யும் குணம். அஞ்சலி அவளோடு உடனே ஒட்டிக் கொண்டாள்.
“ஆரம்பத்துல இப்படித்தான் எனக்கும் இருந்துது.. உனக்கு எல்லாம் நான் காமிச்சுக் கொடுக்கறேன். நாம சேர்ந்து ஷாப்பிங் போலாம்”
அவர்கள் வந்து சேர்ந்த இரண்டாவது வார இறுதியில் உள்ளூர் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி ஏற்பாடானது. விருந்தாளிகள் பட்டியலைப் பார்த்ததும் உள்ளே இருந்த பயப்பந்து இன்னும் பெரிதாகிப் போனது. அஞ்சலி பிந்துவையும் வரச்சொல்லி அழைத்தாள்.
“பயமா இருக்கு”
“நான் பாத்துக்கறேன்”
வீட்டின் புல்தரையில் பார்பேக்யு விருந்து. மாலை நான்கு மணி முதலே ஆஸ்டின் வாசிகள் வந்து கொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் கூட்டம் அது.
அஞ்சலி ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் கையை அன்றுதான் முதன் முதலாகப் பிடித்துக் குலுக்கினாள். பஞ்சு போல இருந்த கைகளில் அசாத்திய வலிமை. அவளை விட இரண்டடியாவது உயரம் அதிகமாக இருந்தாள். இன்னொரு கையில் ஒயின் பாட்டிலுடன் நின்றாள். சத்தமாகப் பேசி அதை விட சத்தமாக சிரித்தாள். ஜென்னி என்று தன்னுடைய பெயர் சொன்னாள். அவளுடைய பாய் ஃப்ரண்ட் ரோட்ரிக் கழுத்தில் பாம்பு போன்ற டாட்டூ அணிந்திருந்தான். கையில் கிட்டார் வைத்திருந்தான். பச்சை நிறக் கண்கள். ஏற்கனவே அறிமுகமான பெண்களை மெல்ல அணைத்து அணைத்து வரவேற்றான்.
அவன் தன்னை நெருங்குவதை அஞ்சலி அச்சத்தோடு கவனித்தாள். தானும் அணைக்க வேண்டுமோ என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகம் கேட்க பிந்து வேறு அருகில் இல்லை. இவளிடம் வந்ததும் “நமஸ்தே” என்று கை கூப்பினான் ரோட்ரிக். போன உயிர் திரும்பியது.
பார்பேக்யு என்ற பெயரில் கறி மதியத்திலிருந்து மெல்ல வெந்து கொண்டிருந்தது. அங்கே இருக்கும் பார்பேக்யு உணவகங்களில் ஆர்டர் சொல்லிவிட்டால் தார் வண்டியைப் போன்ற ஒரு வண்டியை டிரக்குகளில் கட்டி ஓட்டி வந்து விடுவார்கள். வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தி மரக்கட்டைகளைப் போட்டு பல்வேறு மாமிசங்களைச் சுட்டுப் பரிமாறுவார்கள். எந்த மரத்தின் கட்டைகள் எப்படி ருசிக்கும் என்பது வரை ஒரு கணக்கு இருந்தது.
ரோட்ரிக் கிட்டாரில் இசைத்து சிறிது நேரம் பாடினான். அவனுக்கு அழகான குரல். அனைவரும் கைதட்டி ரசித்தார்கள். ஒயினும் பீரும் ஆறாக ஓடியது.
பிந்து மட்டும் அன்று இருந்திராவிட்டால் அஞ்சலி பாடு திண்டாட்டமாகியிருக்கும். ஏனென்றால் முதல் கோப்பைக்காக டோஸ்ட் செய்து அவளை அனைவருக்கும் அறிமுகம் செய்த பிறகு திருமாறன் அஞ்சலியை மறந்துவிட்டிருந்தான். அவனுக்கென்று ஆண்களும் பெண்களுமாக ஒரு நண்பர் கூட்டம் இருந்தது. ஊற்றி ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு குடிப்பான் என்று அவளுக்குத் தெரியாது.
அவளுக்குப் பசித்தது. எதை எடுத்துச் சாப்பிடுவது என்றே தெரியவில்லை.
“உனக்கு என்ன வேணும்?”
“ப்ச்.. ஏதோ ஒண்ணு”
பிந்து எழுந்து சென்று தட்டில் போட்டு எடுத்து வந்து தந்தாள். நெருப்பில் சுட்ட மாமிச வாசனை அவளுக்குப் புதிது. சிரமப்பட்டு சாப்பிட்டாள். தயிர் சாதம் இருந்தால் போதுமென்று தோன்றியது. திடீரென்று ஏனோ அம்மாவுடன் பேசவேண்டும் போலிருந்தது. கறி சரியாக வெந்திருக்கவில்லை. கடிக்க சற்றுக் கடுமையாக இருந்தது. ஆனால் அதே கறியை சிலாகித்துக் கொண்டிருந்தாள் பிந்து.
“சூப்பரா குக் ஆகியிருக்கு… இவ்வளவு சாப்ட்டா டெக்ஸாஸ்ல தவிர உலகத்துல எங்கேயும் பீஃப் கிடைக்காது…”
அஞ்சலி எழுந்த வேகத்தில் அவள் மடியிலிருந்த தட்டு எகிறி விழுந்தது. கார்ப்பெட் முழுக்க பார்பெக்யூ சாஸ் சிதறியது. வேகமாக குளியலறை நோக்கி ஓடுவதற்குள் குமட்டிக் கொண்டு வந்தது. குளியலறை வாசலிலேயே வாந்தி எடுத்தாள். பிந்து ஓடிவந்து தாங்கிப் பிடித்தாள்.
அதன் பிறகு பார்ட்டி வேகமாக முடிவுக்கு வந்தது.
“இட்ஸ் ஓகே திரு… இன்னொரு நாள் கொண்டாடுவோம். ஜஸ்ட் டேக் கேர் ஆஃப் அஞ்சலி” என்றபடி அவளைக் கவலையோடு பார்த்துக் கலைந்து போனார்கள். திருமாறன் அரை மனதாக அனைவரையும் வழியனுப்பிவிட்டு வந்தான்.
அஞ்சலி மூன்றாவது முறையாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். திருமாறன் தலையைப் பிடித்துக்கொண்டு பார்த்தான்.
“என்ன சார்.. எல்லா ஜோலியும் பண்ணிட்டு இப்போ தெரியாத மாதிரி பாக்கறது?”
பிந்து பாத்ரூம் தரையை சுத்தம் செய்தபடியே கேட்டாள். அவனுக்கு இன்னும் புரியவில்லை.
“புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி முழிங்க… எனக்கு லேட் ஆச்சு… அஞ்சலி.. நான் நாளைக்கு வரேன். கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்.” கண்ணடித்துவிட்டுப் போனாள் பிந்து.
இப்போதுதான் திருமாறனுக்கு உறைத்தது. பிந்துவை வெளியே அனுப்பி கதவைச் சாத்திவிட்டு மேலே போனான். அஞ்சலி சுருண்டு படுத்திருந்தாள். கோபமாக வார்ட்ரோபை எட்டி உதைத்தான். கண்கள் சிவந்திருந்தன.
“ஆர் யூ ப்ரெக்னண்ட்?”
அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். எதுவும் சொல்ல முடியவில்லை. அறை கிறுகிறுவென சுற்றியது.
“ஷிட்” தலையைக் கையில் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.
“நான்தான் ஒரு வருஷம் வேணாம்னு சொன்னேன்ல… இடியட்.. இடியட்… காண்டம் இல்லாத நேரமா வந்து கட்டிப் பிடிக்க வேண்டியது. டேட்ஸ் பாத்துட்டேன்னு இளிக்க வேண்டியது. மேட்டர்னு வந்துட்டா ஒண்ணும் கொறச்சல் இல்லை. வேற ஏதாவது பண்ண சொன்னா நான் ரொம்ப ஷை டைப்… ”
போதையிலும் கோபத்திலும் வார்த்தைகள் கட்டுப்பாடிழந்து கொட்டிக் கொண்டிருந்தன. அஞ்சலி அழத் தொடங்கியிருந்தாள்.
“அழு அழு.. இது ஒண்ணுதான் தெரியும். வேற ஒரு மண்ணும் தெரியாது. வந்ததுல இருந்து இதான செஞ்சுட்டு இருக்கே? ஏதோ உன்னைக் கொலை பண்ண இந்தியாவுல இருந்து கூட்டிட்டு வந்த மாதிரியே ஒரு மூஞ்சி… எல்லாம் என் தல விதி.. ” மீண்டும் ஒரு முறை வார்ட்ரோபை உதைத்தான். பெட்ரூமைத் திறந்து கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான். அஞ்சலியிடமிருந்து ஒரு கேவல் வெளியானது. ‘அம்மா….’ என்று உதடுகள் உச்சரித்தன. ஆனால் சத்தம் வரவில்லை. சத்தமே இல்லாமல் அழுதாள். திருமாறன் அப்படியெல்லாம் பேசியது அதுதான் முதல் முறை. ஆனால் அது ஒரு அணை உடைந்த தருணம். அதன் பிறகு வெள்ளம் நிற்கவே இல்லை.
மறுநாள் உடல் அயர்ச்சியையும் பொருட்படுத்தாமல் எழுந்து சமைத்தாள். திருமாறன் சாப்பிடாமலேயே வேலைக்குப் போனான். பதினோரு மணிக்கு மேல் பிந்து ஒரு அட்டைப் பெட்டியுடன் வந்தாள். பிரக்னன்சி டெஸ்ட் கிட். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று சொல்லியபோது அஞ்சலிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“அய்யடா.. பேபிக்கு வெக்கத்தைப் பாரு.. போ போயி நான் சொன்ன மாதிரி டெஸ்ட் எடு… ஞாபகம் வெச்சுக்கோ.. எய்ம் முக்கியம். நீயே பண்ணுவியா இல்ல நான் கூட வரணுமா?”
“வேண்டாம்.. வேண்டாம்” என்றாள் அஞ்சலி முகம் சிவந்து. முழு ஐந்து நிமிடங்களுக்குப் பின் தயக்கமாக வந்து நுனி விரல்களால் பிடித்த ஸ்டிரிப்பைக் காட்டினாள்.
முகம் மாறினாள் பிந்து. “எந்தா இது. நெகடிவ்னு வருது”
“நீங்கதான் ரொம்ப அவசரப்பட்டுட்டீங்க”
பத்து நிமிடங்களுக்குப் பின் அவளுக்கு காபிக் கோப்பையை நீட்டியவாறே தயக்கமாகச் சொன்னாள் அஞ்சலி.
“எனக்கு பீஃப் எல்லாம் சாப்பிட்டுப் பழக்கமே இல்லை. நேத்து நீங்க பீஃப்னு சொன்னதும் குமட்டிட்டு வந்துடுச்சு.”
“அட ஆண்டவா.. இதை அப்பவே சொல்றதுக்கு என்ன?”
அஞ்சலி அமைதியாக காபியை ஒரு மிடறு குடித்தாள். பிறகு சொன்னாள்.
“இல்ல.. நீங்க ஏதோ தெரியாம குடுத்துட்டீங்க… சொன்னா நீங்க ஃபீல் பண்ணுவீங்கன்னுதான். எனக்கு இருக்கற ஒரே ஃப்ரெண்ட் நீங்கதான்.” கண்கள் கலங்கிவிட்டன.
“அஞ்சலி அஞ்சலி… லிசன்.. அந்த ஜென்னி வந்தாளே.. அவ ஒரு வீகன்.. முட்டை பால் கூட கிடையாது. அவளுக்கு சாப்பிட எதுவும் இல்லைன்னு சாலட் எடுத்து வெச்சு சாப்பிட்டுட்டு இருந்தா… அவ பாய் ஃப்ரண்ட் ரோட்ரிக் செத்தது எது கெடைச்சாலும் சாப்பிடுவான். இந்த நாட்டுல எத்தனை பைத்தியக்காரத்தனம் இருந்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் உயிரே போனாலும் விட்டுத் தர மாட்டாங்க. அது தனி மனிதனோட சுதந்திரம். அதனால எல்லோரும் திரும்பத் திரும்ப தங்களுக்குப் பிடிச்சதையும் பிடிக்காததையும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. கொஞ்சம் அளவுக்கு அதிகமாவே… கடைல போயி ஒரு காபி வாங்கும்போது கூட நூறு கண்டிஷன் போட்டு வாங்குவாங்க. ஒவ்வொருத்தன் குடிக்கற காபியும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கும். இங்கே நீ எதைக் கத்துக்கறியோ இல்லையோ.. அதைக் கத்துக்கணும்”
“தேங்க்ஸ் அக்கா…” என்ற அஞ்சலியை இழுத்து அணைத்து கொண்டாள் பிந்து.
“பாத்தியா…இதுக்குதான் நான் யாருக்கும் அட்வைஸ் பண்றதில்லை. உடனே வயசைக் கூட்டறியே… பிந்துன்னு கூப்பிடு. சரி நீ ரெடியா இரு. மத்தியானம் ஷாப்பிங் போவோம். அதுதான் இங்கே லேடீஸ் டைம்.”
திருமாறன் மாலையில் வந்தான். மெல்ல விஷயத்தைச் சொன்னதும் அவன் முகத்தில் நிம்மதி தெரிந்தது. முந்தைய நாள் சற்று அதிகமாகப் பேசிவிட்டோமென்று அவனுக்கும் புரிந்தது. இரவு அவனே வலிய வந்து அணைத்தான். அஞ்சலி ரகசியமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
நடந்ததைச் சொன்ன போது “உன் அப்பா கூடவே காலம் தள்ளலையா நான்” என்று அலுத்துக் கொண்டாள் அவள் அம்மா.
அதன் பிறகு எப்போது குடித்துவிட்டு வந்தாலும் அஞ்சலியின் குறைகளைப் பாடுவது அவனுக்கு வழக்கமாகிப் போனது. இப்படியே ஒரு ஆண்டு கழிந்தது. இப்போது அதே பிரச்னை வேறு வடிவம் எடுத்தது.
“பைத்தியமாடா நீ.. ஏற்கனவே இங்கே நம்மாளுங்க ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்கடா. சித்ராவோட மாமா பொண்ணு வீட்டுல இப்படி வேணாம் வேணாம்னு தள்ளிப் போட்டு அப்புறம் ஒரு குழந்தை பொறக்கறதுக்கு லட்ச லட்சமா செலவு பண்ணிட்டு இருந்தாங்க. இதெல்லாம் உன்னோட ஐடியாவா இல்ல அவ ஐடியாவா? என்ன ஹீரோயின் அழகு குறையாம பாத்துக்கறாளா?”
ஒவ்வொரு முறை ஸ்கைப்பில் அழைக்கும்போதும் திருமாறனின் அக்கா மாலதி ஆரம்பித்து விடுவாள். குழந்தையே வேண்டாமென்று இருந்தவன் ஒரு கட்டத்தில் அமேசான் ப்ரைம் டெலிவரி போல உடனடியாகக் குழந்தை வேண்டுமென்று ஆரம்பித்துவிட்டான். இங்கே அஞ்சலியின் விருப்பமென்று எதுவுமே இல்லை. அவன் படுத்திய பாட்டில் எப்படியாவது ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டால் போதுமென்று இருந்தது அவளுக்கு. ஒவ்வொரு மாதமும் அவள் மாதவிடாயை அடைந்தபோது வெறுப்படைந்தான். அந்த நாட்களில் லேப்டாப்பைப் பார்த்தபடி உர்ரென்று இருப்பான். நெட்ஃபிளிக்ஸில் தொடர்ந்து ஏதாவது பார்த்துக் கொண்டே இருப்பான். சாப்பாட்டைக் கொண்டு சென்று வைத்தால் எதுவும் பேசாமல் முறைத்தபடி சாப்பிடுவான். ஏதாவது போன் வந்தால் உடனே சிரித்துப் பேசுவான்.
இப்போதெல்லாம் அஞ்சலி பிந்துவிடம் வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்து விட்டாள். அவளும் இவளுக்கு ஆறுதலாக இருந்தாள்.
“ச்சில் யா.. இவனுங்களுக்கு பொம்பளைங்க பிரச்னை எப்பவும் புரியாது. ஒண்ணு புரிஞ்ச மாதிரி நடிப்பானுங்க… இல்லாட்டி புரியாத மாதிரி நடிப்பானுங்க”
இரண்டு ஆண்டுகள் கடந்தபோது திருமாறன் சுத்தமாகப் பொறுமையிழந்திருந்தான். தொட்டாலே வெடிக்கும் டைனமைட் போல உலா வந்தான்.
அமெரிக்காவில் இதற்கான சிகிச்சைகள் செய்து கட்டுப்படியாகாது. எனவே இரண்டு மாதங்கள் நீண்ட விடுப்பில் இந்தியா திரும்பினார்கள். குழந்தையின்மை தொடர்பான எல்லா சோதனைகளும் செய்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு திரும்புவதென்று முடிவானது.
ரிப்போர்ட்டுகளை வாங்க அஞ்சலியை மட்டுமே செல்லும்படி சொன்னான் திருமாறன். அஞ்சலி இந்தத் தருணத்தில் அவன் உடன் வரவேண்டுமென்று எதிர்பார்த்தாள்.
“ப்ளீஸ்.. நீங்களும் வந்தாதான் சரியா இருக்கும். எனக்கு பயமா இருக்கு.”
“நான்தான் சொல்றேன்ல.. ஒரு முக்கியமான டெலிவரி இருக்கு. ட்வெண்டி ஃபோர் அவர்ஸ் போன் கால்லயே இருக்கணும். உனக்கு இதெல்லாம் புரியாது.”
உண்மையில் திருமாறனுக்கு ஒரு அச்சம் இருந்தது. தன் பக்கம் குறை இருந்துவிட்டால்? அவனுக்கு அந்த உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை.
போன அஞ்சலி நீண்ட நேரம் வரவே இல்லை. பொறுமையிழந்து அவள் எண்ணுக்கு அழைத்தான். அவள் போன் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஐம்பது தவறிய அழைப்புகளுக்குப் பிறகு மூன்று மணி நேரம் கழித்து அவளிடமிருந்து போன் வந்தது.
“எங்கடி போய்த் தொலைஞ்சே?” திருமாறன் சீறினான்.
“லேப்ல ரொம்ப லேட் பண்ணிட்டாங்க. ஆட்டோல வந்துட்டு இருக்கேன்”
“ஏன் போனை எடுக்கலை?”
“வந்து சொல்றேன்”
அவள் குரலில் அதுவரை இல்லாத ஒரு இறுக்கம். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒரு வழியாக அஞ்சலி ஆட்டோவில் வந்து இறங்கினாள். அவள் முகம் இருண்டு போயிருந்தது.
“வாட் த ஹெல் ஈஸ் ராங் வித் யூ? எங்கடி போயிருந்தே?” இரைந்தான். அவன் அக்கா மாலதி எதுவும் நடக்காதது போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“பேசித் தொலை”
எதுவும் பேசாமல் அவனிடம் ரிப்போர்ட்டுகளைக் கொடுத்துவிட்டு அறையில் சென்று படுத்துவிட்டாள் அஞ்சலி. திருமாறனுக்கு எதுவும் புரியவில்லை. காகிதங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். நீண்ட யோசனைக்குப் பின் அவற்றைப் படம் எடுத்து ஒரு டாக்டர் நண்பனுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினான். அவன் பார்த்துவிட்டு அழைத்தான்.
“சாரிடா.. கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். பயலாஜிகலா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தை பெத்துக்கறது முடியாத காரியம்”
“எனக்கு என்னன்னு வந்திருக்கு?”
“உன்னோட ரிப்போர்ட்ல ஸ்பெர்ம் கவுண்ட், ஷேப், எல்லாமே பக்காவா இருக்கு”
“நல்லா பாத்தியா?”
“நீயே படிக்கலாமே.. நார்மலா என்ன ரேஞ்ச்ல இருக்கணும் இப்போ என்ன இருக்குன்னு எல்லாமே இருக்கு பாரு”
திருமாறனுக்குள் ஒரு நிம்மதி மெல்லப் பரவியது.
“அப்புறம் என்ன பிரச்னை?”
“உன்னோட ஒய்ப் பக்கம்தான்.. அது என்னன்னா..”
“க்யூர் பண்ண முடியாதா?” திருமாறன் சட்டென்று இடை மறித்தான்.
“எது?”
“அஞ்சலியோட ப்ராப்ளம்”
“சாரிடா.. எனக்குத் தெரிஞ்சு பாசிபிள் இல்லை. பெட்டர் யூ கோ ஃபார் அடாப்ஷன் டா.. தத்தெடுத்துக்கோ.. நானே ரெஃபர் பண்றேன்”
“தேங்க்ஸ்டா… ”
போனை வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்டான். டிவி பார்த்துக் கொண்டிருந்த அக்காவிடம் வந்தான்.
“அக்கா.. உங்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றான்.
அடுத்த நாளில் இருந்து அஞ்சலியிடம் அவன் நடந்துகொள்ளும் முறை முற்றிலுமாக மாறிவிட்டது. இது நடந்து ஒரு வாரத்தில் அஞ்சலியை அவள் அம்மா வீட்டில் கொண்டு சென்று விட்டான்.
“அவ அங்கே ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா அத்தை. கொஞ்ச நாள் இங்க உங்க கூட இருக்கட்டும்.”
இரண்டாம் மாத இறுதியில் அஞ்சலியை இந்தியாவிலேயே விட்டுவிட்டு விமானம் ஏறினான்.
“ஒரு ரெண்டு மாசம் கழிச்சு டிக்கெட் போடறேன். வரட்டும்.”
அஞ்சலியின் அம்மாவுக்கு ஏதோ சரியாகப்படவில்லை. ஆனால் அஞ்சலி எதுவும் பேசவில்லை. அமைதியாகத் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவன் போன் செய்வது கூட படிப்படியாக நின்று போனது. பிந்துதான் அஞ்சலியை அழைத்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள்.
இரண்டு மாதங்கள் கழித்து டிக்கெட் வரவில்லை. விவாகரத்து நோட்டீஸ் வந்தது. அஞ்சலியின் வீட்டார் இடிந்து போனார்கள். திருமாறன் வீட்டில் கைவிரித்து விடார்கள். அவள் அப்பா நேரடியாக அவனுடன் பேசிப் பார்த்தார்.
“இல்ல மாமா.. அவளுக்கு என் கூட இங்கே ஒத்து வரலை. எப்ப பாரு ஒரே அழுகை. எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கா. அது தவிர அவளால ஒரு குழந்தைக்கு அம்மா ஆக முடியாதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு. இது அவளுக்கே தெரியும். சட்டப்படி எனக்கு விவாகரத்து கேக்க உரிமை இருக்கு.”
அஞ்சலியின் வீட்டிலும் அவளைத்தான் குற்றம் சொன்னார்கள்.
“அழகு போல மாப்பிள்ளை. அனுசரிச்சுப் பொழைக்கத் தெரியலை. எல்லாம் தலை விதி” அவள் அப்பா தலையிலடித்துக் கொண்டார்.
சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே தீர்ப்பின் பிரதியைத் தந்துவிட்டு வரும்போது அவளைப் பார்த்ததுதான் கடைசி. அதன் பிறகு திருமாறன் தன்னுடைய அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நேத்ரா ஷர்மாவைத் திருமணம் செய்துகொண்டான். ஃபெவிகால் நிறத்தில் பதுமை போலிருந்தாள். நேத்ரா திருமாறனை விட நான்கு மடங்கு சம்பாதித்தாள். அந்த நிறுவனத்தில் அதிவேகமாக உயர்ந்தாள். திருமாறனின் குடும்பத்தாருக்கு ஜாதி மறந்து போனது. திடீர் சீர்திருத்தவாதிகளாக மாறிவிட்டனர்.
திருமணம் முடிந்த நான்காவது மாதம் அவள் கர்ப்பமானாள். திருமாறன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். அடுத்த ஆண்டு ஒரு அழகிய ஆண் பிள்ளை. வாட்ஸாப், பேஸ்புக் என்று அந்தப் படத்தைப் பகிர்ந்தான் திருமாறன். முக்கியமாக அஞ்சலி அதைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினான். அடுத்தது ஒரு பெண் குழந்தை. அதையும் உடனே பகிர்ந்து அஞ்சலியின் ப்ளூ டிக் வருகிறதா என்று காத்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் வேறு புதிய எண்ணிலிருந்து அதற்கு அழைத்துப் பார்த்தான். எண் உபயோகத்தில் இல்லை.
நேத்ரா அடுத்தடுத்து உயர்ந்து வேறு ஒரு பெரிய நிறுவனத்தில் சிடிஓ நிலைக்கு வந்துவிட்டாள். ஆனால் அதற்காக அவர்கள் டெக்சாசிலிருந்து கலிபோர்னியா செல்ல வேண்டியிருந்தது. அவன் சம்பளம் நேத்ராவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சிறிதாகிப் போனதால் திருமாறன் வேலையை விடவேண்டியிருந்தது. உண்மையில் அவன் கற்று வைத்திருந்த டெக்னாலஜிக்கு அதன் பிறகு வேலை கிடைக்கவில்லை. ஒர்க் ஃப்ரம் ஹோம் கன்சல்டன்ட் என்று மாறினான். அதன் பிறகு வீட்டிலிருந்து பொறுப்பாக குழந்தைகளைப் பார்த்துக் கொண்டான்.
நேத்ரா ஒரு அலுவல் வேலையாக ஹவாய் போயிருந்தாள். போர்டு மீட்டிங் வருவதால் அதற்கான திட்டமிடல் அங்கே நடந்தது. எப்படியும் ஆண்டின் பாதி நாட்கள் அவள் வீட்டில் இருக்க மாட்டாள். உலகத்தின் ஏதாவது நகரத்தின் நட்சத்திர ஓட்டலில் இருந்து அவர்களோடு பேசுவாள்.
குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத்தான் டார்கெட் அங்காடிக்கு வந்திருந்தான் திருமாறன். அது அவனுடைய அன்றாட வாடிக்கை. அப்போதுதான் அஞ்சலி அவன் கண்ணில் பட்டாள்.
அவளை அமெரிக்காவில் அதுவும் ஃப்ரீமாண்ட்டில் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பள்ளி முடிய அவனுக்கு இன்னும் நேரமிருந்தது. அவளை நோட்டமிட்டான்.
அஞ்சலி முற்றிலும் மாறியிருந்தாள். கூந்தலை காற்றுக்கு அலைய விட்டிருந்தாள். இடைவிடாது முகத்தில் வந்து வீழும் கேசக் கற்றைகளை சரி செய்வதில் ஒரு நளினம் இருந்தது. மூக்கு குத்தியிருந்தாள். உடற்பயிற்சி செய்வாள் போலிருந்தது. அணிந்திருந்த ஆடைக்குள் சிக்கென்று இருந்தாள். திருமாறன் சீட் பெல்ட்டுக்கு வெளியே பிதுங்கிக் கொண்டிருந்த தனது வயிறைப் பார்த்தான். ஸ்லீவ்லெஸ் உடை ஒன்றை அணிந்திருந்தாள். புஜத்தில் ஒரு மலரும் பட்டாம்பூச்சியும் பச்சை குத்திக் கொண்டிருந்தாள். அவளால் இவ்வளவு கவர்ச்சியாகத் தோன்ற முடியும் என்று திருமாறன் கனவிலும் நினைத்ததில்லை. டெஸ்லா கார் ஒன்றை அவளே ஓட்டிக் கொண்டு வந்திருந்தாள். இதையெல்லாம் தாண்டி அவளிடம் ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் இருந்தது. அவனுக்கு இப்போது பழைய சாத்தான் மண்டைக்குள் குடையத் தொடங்கியது.
அவள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியதும் சில நொடிகள் யோசித்தான். பிறகு காரைக் கிளப்பி அவளைப் பின் தொடர்ந்தான். பதினைந்து நிமிடங்களில் அவள் வீடு வந்தது. அந்தப் பகுதி நன்கு வசதியாக வாழ்பவர்களின் பகுதி. இங்கே ஒரு வீடு வாங்க வேண்டுமென்பது நேத்ராவின் நெடுநாள் கனவு. அந்த வீடு இருந்த சாலையில் இரண்டு முறை கடந்தான். பள்ளி விடும் நேரமாகிவிட்டது. திடீரென்று நினைவு வந்தவனாக காரைத் திருப்பிக் கொண்டு கிளம்பினான்.
அவனுக்கு அன்று இரவு இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த நாள் காலையிலேயே அங்கே வந்துவிட்டான். அந்த வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் காரை நிறுத்திவிட்டுக் காத்திருந்தான். ஃபகத் பாசில் போன்ற தோற்றத்துடன் ஒருவன் வெளியே வந்தான். ஒரு சிறிய பெண் குழந்தையை நடத்திக் கூட்டிப் போனான். அதுதான் அவள் கணவனாக இருக்க வேண்டும். ஒருவேளை இது இரண்டாவது திருமணமாக இருக்கும். அவனுக்கு ஏற்கனவே இந்தக் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவன் எப்போதும் வீட்டில்தான் இருந்தான். அஞ்சலிதான் வெளியே சென்று வந்தாள்.
அடுத்த நாளும் திருமாறன் அங்கே போனான். காபி குடித்தபடி வேடிக்கை பார்த்தான். அவன் கால்கள் தந்தியடித்துக் கொண்டிருந்தன. அஞ்சலி வெளியே கிளம்பினாள். ஃபகத் பாசிலுக்கு தெருவில் வைத்து முத்தமிட்டாள். பிறகு காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பிப் போனாள்.
அவள் போன பத்து நிமிடத்தில் ஃபகத் பாசில் மட்டும் கதவைத் திறந்து வெளியே வந்தான். நேராக அவன் காரை நோக்கி வந்தான். திருமாறன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. செய்வதறியாமல் திகைத்து அமர்ந்திருந்தான். அருகே வந்த அவன் காரின் கண்ணாடியைத் தட்டி இறக்கும்படி சொன்னான்.
“நீங்க மிஸ்டர் திருமாறன்தானே?”
திருமாறன் தடுமாறினான்.
“அஞ்சலிதான் நேத்து உங்களை இங்கே பாத்துட்டு சொன்னா. ஐ ஆம் சஞ்சய். அஞ்சலியோட ஹஸ்பண்ட்”
கையை திறந்திருந்த கார் கண்ணாடி வழியாக நீட்டினான். திருமாறன் தயக்கமாக அவன் கையைப் பற்றிக் குலுக்கினான்.
“உள்ளே வாங்களேன். ஒரு பீர் சாப்பிட்டுட்டே பேசுவோம். வீ ஆர் கைண்ட் ஆஃப் பேமிலி.. இல்லையா?”
திருமாறன் தயங்கினான்.
“ப்ளீஸ்”
இறங்கி காரைப் பூட்டிவிட்டு அவனைத் தொடர்ந்தான்.
“மூணாவது நாளா வரீங்க இல்லையா?” என்றான் சஞ்சய் நடக்கும்போது.
“சாரி… இன்டர்பியர் பண்ணனும்னு இல்லை. அஞ்சலி எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்… ”
“உங்க அக்கறை புரியுது”
கதவைத் திறந்து உள்ளே வந்தார்கள்.
“அங்கிளுக்கு ஹாய் சொல்லு சித்தாரா” என்றான். சித்தாரா ஒரு கேன்வாசில் வண்ணங்களால் கோடிழுத்துக் கொண்டிருந்தாள். “ஹாய் அங்கிள்” என்று இவனைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள்.
இவனை அமரச் சொல்லிவிட்டு ஃப்ரிட்ஜைத் திறந்து இரண்டு பீர் கேன்களை எடுத்தான்.
சோபாவில் அமர்ந்தபடியே வீட்டின் விஸ்தாரத்தை அளந்தான் திருமாறன். அவன் வீட்டை விட மூன்று மடங்கு பெரியது.
“நைஸ் ஹவுஸ்… வாட் ஆர் யு டூயிங்?”
“நத்திங்”
“புரியலை”
“நான் ஒரு சைன்டிஸ்ட். என் பேர்ல ஒரு பத்து பேடண்ட் இருக்கு. அதுல வர பணமே எங்களால செலவு செய்ய முடியலை. அதனால ரெண்டு வருஷமா ஒண்ணும் செய்யாம இருக்கேன். நான், அஞ்சலி, சித்தாரா இதுதான் இப்போதைக்கு உலகம். தேவைக்கு மீறி பணம் இருக்கறதால நிறைய பிலந்த்ராபி பண்றேன். கொடுத்து வாழ்வோமே… இந்தியப் பெண்களுக்கு ஒரு சின்ன என்ஜிஓ நடத்தறோம். அஞ்சலிதான் அதை மேனேஜ் பண்றா. அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கலை”
“நீங்க எப்படி அஞ்சலியை மீட் பண்ணினீங்க? அவ கொஞ்சம் ரிசர்வ்டு டைப் ஆச்சே?”
“ஓ.. உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனா என்னோட அக்காவைத் தெரிஞ்சிருக்கும்”
“யாரு?”
“பிந்துன்னு.. ஆஸ்டின்ல உங்க பக்கத்து ப்ளாக்ல”
“ஓ.. ஆமா.. அவங்க அஞ்சலிக்குக் கூட க்ளோஸ்”
“கல்யாணம் வேண்டாம்னு இருந்த என்னை அரிச்சு எடுத்துட்டா… சரி பேசிப் பாக்கறேன்னு சொன்னேன். நானும் அஞ்சலியும் ஒரு வருசம் ஸ்கைப்லயே பேசிக்கிட்டோம். அஞ்சலி எல்லாத்தையும் என்கிட்டே சொன்னதுக்கு அப்புறம்தான் சேர்ந்து வாழணும்னு முடிவெடுத்தோம்”
சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தன.
“நாங்க ஏன் டைவர்ஸ் பண்ணினோம்னு சொன்னாளா?”
“ம்ம்.. அதையும் சொன்னா… என்னிக்காவது நீங்க இப்படி வருவீங்கன்னும் சொன்னா”
சஞ்சய் புன்னகைத்தான். அதில் சற்று விஷமம் இருந்தது போல் பட்டது திருமாறனுக்கு.
“இந்த பேபி…” என்று இழுத்தான் திருமாறன்.
“எங்க குழந்தைதான்… ”
திருமாறன் அவசரமாக ஏதோ சொல்லப் போக கை உயர்த்தி அவனை நிறுத்தினான்.
“உங்க குழப்பம் எனக்குப் புரியுது. அதை கிளியர் பண்ணத்தான் உங்களை உள்ளே கூப்பிட்டேன். அஞ்சலி பெரிய தப்பு பண்ணிட்டா. அதை சரி செய்யணும்னு எனக்குத் தோணுச்சு“
“அஞ்சலியா?”
“ஆமாம். அவ ஒரு கிராபிக் டிசைனர்னு உங்களுக்குத் தெரியுமா?”
திருமாறன் விழித்தான்.
“அவளைப் பத்தி கடைசி வரைக்கும் எதையுமே நீங்க தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலை. அதுதான் பிரச்னை”
“புரியலை”
அவனிடம் ஒரு பென் டிரைவைக் கொடுத்தான்.
“நேத்தே உங்ககிட்டே பேசியிருப்பேன். ஆனா இதைத் தேடி எடுக்க வேண்டியிருந்தது”
“என்ன இது?”
“உங்க ரெண்டு பேரோட ஃபெர்டிலிடிட்டி டெஸ்ட் ரிப்போர்ட். ஞாபகம் இருக்கா”
தலையசைத்தான்.
“அது போட்டோஷாப் பண்ணது. அஞ்சலி ஒரு டாக்டர் ஃப்ரண்ட் ஹெல்ப்போட அதை மாத்தியிருக்கா. உண்மையில் அவகிட்டே எந்த ப்ராப்ளமும் இல்லை”
திருமாறன் பியர் பாட்டிலை அவசரமாக வைத்தான்.
“நோ.. நான் நம்பமாட்டேன். அவ எதுக்கு தன் மேல இப்படி ஒரு பழியைப் போட்டுக்கணும்?”
சஞ்சய் புன்னகைத்தபடியே ஒரு மடக்கு பியரைக் குடித்தான்.
“நல்லா யோசிச்சுப் பாருங்க. உங்க பக்கம் குறைன்னு தெரிஞ்சிருந்தா அவளுக்கு இந்த விடுதலை உங்ககிட்டே இருந்து கிடைச்சிருக்குமா?”
திருமாறனுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. பியர் காரணமல்ல. பென் டிரைவை திருமாறன் கையில் வைத்து அழுத்தினான் சஞ்சய்.
“இந்த பென் டிரைவ்ல ஒரிஜினல் ரிப்போர்ட்.. போட்டோஷாப் ஃபைல்… அவ மாத்துன ரிப்போர்ட்.. எல்லாமே இருக்கு. அவளுக்கு இதை சொல்றதுல இஷ்டம் இல்லை. ஆனா இப்போ எல்லாமே முடிஞ்சப்புறமாவது இதை நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும்னு எனக்குத் தோணுச்சு.”
திருமாறன் அவசரமாக எழுந்து கொண்டான். கால்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. சஞ்சய் வாசல் வரை வந்தான். அவன் தோளில் ஆதரவாகத் தட்டினான். போன் அடித்துக் கொண்டே இருந்தது. திருமாறன் அதைத் தொட்டு அடக்கினான்.
“கவலைப்படாதீங்க. இப்ப டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறியிருக்கு. நீங்க தத்து கூட எடுத்துக்கலாம். அப்புறம் மிஸ்டர் திருமாறன்…”
நடக்கத் தொடங்கிய திருமாறன் திரும்பினான்.
“இனிமே இந்த மாதிரி வந்து நிக்காதீங்க… ” இதை சொல்லும்போது சஞ்சய் முகத்தில் புன்னகை இல்லை.
கையில் பென் டிரைவ் கனத்தது. திருமாறன் காரை நோக்கி நடந்தான். மொபைல் போன் மறுபடி அடித்தது. நேத்ரா அழைத்திருந்தாள். ஹவாயில் பிகினி உடையில் அவள் ப்ரொபைல் படம் சிரித்தது.
“டார்லிங்.. வேர் ஆர் யூ ரோமிங்? பிக் அப் டைம் ஆயிடுச்சு… நேத்து மாதிரி அவங்களை வெயிட் பண்ண வெக்காதீங்க ப்ளீஸ்… ” அவள் குரலில் கண்டிப்பு.
“ஆன் மை வே ஹனி… ஐ ஆம் ஆன் மை வே” என்றான் திருமாறன் பணிவாக.
***
அருமை ஷான்… !