Wednesday, October 9, 2024
Homesliderஅங்காளம் - 3

அங்காளம் – 3

மாடவர் அல்குல்
*************

– கார்த்திக் புகழேந்தி

மிழக நாட்டார் கதைகளில், பெண்ணின் பாலுறுப்பைக் குறிப்பொருளாக உணர்த்திச் சொல்லப்பட்டக் கதைகள் எக்கச்சக்கம். அக்கதைகளில் இடம்பெறும் கதை மாந்தர்களின் அறிவுநிலை மற்றும் சூழ்நிலைகளுக்குத் தக்க, அப்பாலுறுப்புச் சொற்களை நாசூக்காக பல்வேறு உவமைகளுடன் புனைந்து சொல்லியிருப்பார்கள் நம்முடைய கதைசொல்லிகள். அப்படியான சொற்களைத் தொகுக்கும்போது, பெண்ணின் பாலுறுப்புக்கு இணையாக அகழி, அக்குள், இருள், உதடு, உரல், ஓட்டை, கதவு, கறி, கிண்ணம், கிளிஞ்சில், குகை, குய்யம், குழாய், குழி, கூடு, கூண்டு, கூதி, கோட்டை, கோடு, சந்து, சாமான், சாலை, சினை, சிறுநிலம், தாழ்நிலம், துவாரம், தேன்குடம், தோட்டம், நடுநிலம், பழம், பாத்திரம், பாதை, பானை, பிளவு, புண்டை, புழை, பூ, பூனைக்குட்டி, பெட்டி, பை, பொச்சி, பொந்து, மத்தளம், மல்லிகை மொட்டு, முகை, மூக்கு, மேடை, லாடம், வட்டம், வயல், வழி, வளையம், வாய்… என விதவிதமான உவமைகள் சிக்கின.

எழுத்தாளர் கு.அழகிரிசாமி, வயோதிக தேவதாசி ஒருவரைச் சந்தித்து, அவரிடம் ‘அசைவ’ ரக நாட்டிய பதங்கள் குறித்துக் கேட்டு எழுதினாராம். அதில், கிளிட்டோரியஸைப் பற்றிக் குறிப்பிடும்போது, “பண்டத்தின் மூக்கு” என்று குறிப்பிடுகிறார். நெல்லை வட்டாரத்தில் கதம்பமாகப் பேசும்போது, அதைப் ’பருப்பு’ என்பார்கள் பெருசுகள். கரிசல் வட்டார கி.ராஜநாராயணன் அதனைக் ‘கொள்ளு’ என்பார். “எலே கொள்ளு கடிச்சான்” என்பது அங்கத்தியில் வழங்கும் ருசிகரமான வசவுச் சொல். அந்த வட்டாரத்தில் இருந்து கிளம்பிவந்த பாரதி தன் கவிதைகளில் ”பரவை அல்குல்” என்று வருணிக்கிறான். நம் திரையிசைப் பாடலாசிரியர்களும் தங்கள் பங்குக்கு ‘மல்லிகை மொட்டு” என்றெல்லாம் கூடப் பாட வைத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில், ஷேக்ஸ்பியர் தன்னுடைய படைப்புகளில் பெண்களின் இந்த அந்தரங்க உறுப்பினைக் குறிக்க, அதற்கிணையான 68 தனிச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார். அதேபோல ஆண்குறிக்கும் கூட 45 சொற்களைக் கையாண்டிருப்பார். ஷேக்‌ஷ்பியருக்கு நேர் வார்த்தையாக CUNT எனச் சொல்ல அவ்வளவு கூச்சம். அதனாலே பின்னாட்களில் அவர் பயன்படுத்திய இந்தச் சொற் பிரயோகங்களுக்குப் பொருள் தெரிந்து கொள்ள ஒரு தனி அகராதியை உண்டாக்கினார்கள்.

இந்த விஷயத்தில் ஷேக்ஸ்பியரைவிட விட அதிகமான மாற்றுச் சொற்களைப் பயன்படுத்தியவர் கிளிலேண்ட் என்கிற ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி. இவர் தன்னுடைய ‘Memories of a woman of Pleasure’ என்ற நூலில் நினைத்த மாதிரியெல்லாம் பெண் பாலுறுப்புக்கு வேறு பெயர்களைச் சூட்டியிருக்கிறார். நாளடைவில், ‘எது எதைக் குறிக்கிறது; எது அதைக் குறிக்கிறது’ என்று கண்டுபிடிக்கவே முடியாமல் போனதாகச் சொல்லப் படுகிறது.

தற்காலத்தில் யோனி என்ற சொல் கவிதைகளில் அதிகம் புழங்குகிறதுண்டு. சங்கக் கவிதை புரிந்தவர்கள் ’அல்குல்’ என்ற தலைப்பைக் கண்டதுமே விசயம் பிடித்திருப்பார்கள். ஆனால், அல்குலின் பொருட் பதம் வேறு என்று வாயாடுபவர்கள் உண்டு. ஆக, இந்தக் கட்டுரை பெண் பாலுறுப்பைக் குறிக்கும் சொற்களில் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தததாகவும், பொருள் திரிந்து உரை செய்யப்பட்ட ‘அல்குல்’ என்ற சொல்லரசியலையும், அல்குல் வழிதோன்றிய உலகலாவிய வேர்ச்சொற்களையும், பெண் பாலுறுப்பு தொடர்புடைய நம்முடைய தமிழ் தொன்மங்கள், நாட்டார் நம்பகங்கள், தெய்வ வழிபாடுகள், வேளாண் விழாக்கள், இயன்முறைச் சடங்குகள், அதன் மீது கட்டமைக்கப்பட்டுவிட்ட உளவியல், பாலியல் நூற்குறிப்புகள், பிறகு, வழிபாட்டு அம்சத்திலிருந்து சிதைத்தொழிக்கும் நிலைக்கு ஓர் உடலுறுப்பு நகர்ந்து வந்திருக்கும் வரலாறும், அதன் மீதான பண்பாட்டுத் தாக்கங்ளையும் தயக்கங்கள் களைந்து உரையாட முயல்கிறது.

சொல் வேறு பொருள் வேறு

அல்குல் என்ற சொல்லைப் பிரித்துப் போட்டால், அல்=இருட்டு; குல்=குழிந்த என்றும் பொருள் தரும். ‘அல்கு’ என்ற சொல்லுக்குச் சுருங்குவது, குறுகுவது, நிலைப்பது, தங்குவது, சேர்வது, சேமிப்பது என்ற வினைகளைச் சுட்டிக் காட்டுகிறது. அல் என்ற சொல்லில் இருந்தே அலி என்ற சொல் பிறந்தது. அல்குல் இல்லாதவள் அலி. அல்+இ = அலி.  கூடவே, ‘ஆ’ என்ற சொல் தொடக்கத்தையும், பெண் பாலுறுப்பையும் ஒருசேரக் குறிக்கும் சொல். ஆ’லிங்கனம்- ஆ இலங்கும் (லிங்க) குறியில் காணப்படும் அடிப்பகுதி. உலை=வாயகன்ற கலம். பிறப்பின் தொடக்கம் (ஆ+உல்)

மதங்கள் நிறுவனமாகத் தலைதூக்கத் துவங்கிய காலகட்டத்தில், பாலியல் என்பது எதிர்மறை அம்சமாகக் கருதப்பட்டது. உடல், காமம் குறித்தான கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன. உடலை வருத்தி தவமிருப்பதும், உடலைத் துறப்பதன் மூலமே வீடுபேறு அடைய முடியும் என்ற கருத்து உருவாக்கமும் பாலியல் சங்கதிகளைக் குறித்து அவலமான தோற்றத்தை ஏற்படுத்தின. இதில் பெண்ணுடல் மீது நிகழ்த்தப்பட்ட வன்மம் பால் உறுப்புச் சொற்களின் மீதும் வெளிப்பட்டது.

தமிழ்ச் சங்க இலக்கியங்களில், அகலெழில் அல்குல், அங்கரவு அல்குல், ஐதுஅகல் அல்குல், தொடலை அல்குல், திதிலை அல்குல், வரி அல்குல், மாவரி அல்குல், மடவார் அல்குல், பையரவு அல்குல் நிறை அல்குல், பசுங்கால் அல்குல், புரல்வரும் அல்குல் ஏந்துகோட்டு அல்குல் என இருபால் புலவர்களும் வெவ்வேறு விதவிதமாக அல்குலைப் பாடி இருக்கிறார்கள். பிற்காலத்தில் அவற்றைத் தொகுத்து, உரைபடுத்திப் பதிப்பித்தவர்கள், அவரவரது சமூக மதிப்பு, கலாச்சாரப் பாதுகாப்புணர்வு, கருத்தியல் ஆகிய வட்டங்களுக்குள் நின்று சொல்வேறு பொருள்வேறு என்று ஆக்கினர்.

இவைபோலவே சங்கப் பிரயோகங்களிலும், நாட்டுப்புறத்திலும் பெண் பாலுறுப்பு குறித்த வர்ணனைகள் ஏகபோகம். அவற்றை இன்னது இவற்றிற்கு என்று பொருள் என்று உரை படுத்துவது, அவற்றைத் தொகுத்தவர்கள் கொடுத்த விளக்கங்களை முன்வைத்தே உண்டானது.

உதாரணமாக, காலத்தால் மிகப்பழமையானது என்று பொழுதுக்கும் திரித்துச் சொல்லப்படும் ரிக்வேதத்தை எடுத்துக் கொள்ளலாம். ரிக் வேதத்தில் வரும் இந்திராணி, “புணர்ச்சியின்போது ‘தொடை’யைத் தூக்கித் தருபவள் என்னைவிட எவளும் இல்லை. எவன் உறுப்பு மயிர் அடர்ந்து, பெரிதாகி ஆற்றலை வெளிப்படுத்துகிறதோ அவனே என்னுடனான புணர்ச்சிக்குத் தகுதியானவன். அதன்படி, இவ்வுலகில் இந்திரனே பெரியவன்” என்கிறாள்.

கம்பராமாயணம் பாடிய கம்பர், ‘அவனே கொல் என்று அய்யம் நீங்கினாள். வாமமேகலை இற வளர்ந்தது அல்குலே’ என்று ராமனை அறிந்ததும் சீதையின் அல்குல் வளர்ந்தது என்கிறார். கூடவே, ‘தார் ஆழிக் கடல்சார் அல்குல், தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல்’ என்று சீதையின் ‘இடையைக்’ கடலுக்கும், தேருக்கும் ஒப்பாக்கி எழுதுகிறார்.

சங்க இலக்கியங்கள் முதல் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பக்தி இலக்கியங்கள், பெரும், சிறுகாப்பியங்கள், கலம்பகம், நிகண்டுகள், சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள், உரைநடைகள் வரைக்கும் எழுதப்பட்ட ஆவணமாகக் கிடைக்கும் தமிழ்ப் படைப்புகள் யாவும் வேறுவேறு காலகட்டத்தில் வாழ்ந்த வெவ்வேறு புலவர்களால், ஆசிரியர்களால் இயற்றப் பட்டவை. குறிப்பாகச் சங்க இலக்கியங்களாகக் கருதப்படும் மொத்தமேயான 36 நூல்களில் 50 சதவிகிதமாக இருக்கும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பாலும் ஐந்து முதல் ஏழாம் நூற்றாண்டுகளில் சமணர் இயற்றியவை. இக் கீழ்கணக்கு நூல்களில் பல 19ஆம் நூற்றாண்டில் அச்சிப் பதிப்பில் வந்தன. அவற்றில் பெரும்பாலான நூல்களுக்கு உரைகள் இல்லை. அந்நூல்களின் பதிப்பாசிரியர்கள் வேறுவழியின்றி, தாங்கள் அறிந்த பண்டிதர்களைக் கொண்டு அவற்றுக்கு உரை செய்தனர்.

கீழ்கணக்கு நூல்களைப் போலல்லாமல் காலத்தால் முந்தைய (அல்லது காலம் கணிக்கப்படாத) எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றுப் பாடல்களைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகன் உருத்திரசன்மர். தொகுக்கச் செய்தவர் கடைச்சங்க பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி. எட்டுத்தொகையின் ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் கூடலூர் கிழார், தொகுக்கச் செய்தவர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனும் சேரமன்னன். கலித்தொகையும் கூட நல்லாந்துவனார் மற்றும் பலரால் இயற்றப்பட்ட பாடல்களைக் கொண்டது என்றே ஓர் வாதமிருக்கிறது. இப்படி வெவ்வேறு நிலப்பரப்புகளில், மாறுபட்ட வாழ்க்கை முறையைக் கொண்ட மக்களின், மன்னனின் வாழ்க்கையைப் பாடிய புலவர்களின் பாக்கள் பலகாலங்கள் கழித்துச் சேகரிக்கப்பட்டு, அங்கும் இங்குமாக இடைச்சொருகலும் பண்ணப்பட்டு, நூலாகின.

அந்நாட்களிக் இந்தப் பதிப்பு விசாரங்கள் கொடுத்த பெருமிதங்களால் சிலபல போலிகளும் கூட தமிழ் இலக்கியத்துள் ஊடுருவினதுண்டு. உதாரணமாக, திருநெல்வேலி சுவர்ணம் பிள்ளை என்பவர் தனக்குக் கிடைத்த பழம்நூல் என்று ‘ஊசிமுறி’ என்ற நூலைத் பேராசிரியர் நமசிவாய முதலியாரிடம் தெரிவிக்கிறார். அவர் அதனைப் பொருள் கொடுத்து வாங்கி ஆராய்ந்தபோது, அது போலி என்று தெரிந்து கிழித்து எறிந்திருக்கிறார். நமச்சிவாய முதலியார் மாதிரியானவர்கள் போலிகளை சிலவேளைகளில் கிழித்தெறிந்தார்கள். அவ்வளவுதான் சொல்லமுடியும்.

இந்தச் சூழலில் சங்க நூல்களுக்கு உரை எழுதி பதிப்பித்தவர்களில் குறுந்தொகையை பதிப்பித்த திருக்கண்ணபுரம் சௌரி பெருமாள் அரங்கனார் தன் கலாசாரக் கருத்தின்படி, ’அல்குல்’ என்ற சொல்லை அறவொழித்து, மருங்குல் எனப் பதிப்பித்ததாகப் பெருமையே பட்டிருக்கிறார். இன்னும் ஒருபடி மேலாகப் போய், அகராதி செய்வோர், இச்சொற்களுக்கு மக்களுக்கே அர்த்தம் தெரியும் என்பதால் விட்டுவிட்டோம் என்கிற ரீதியில் சொல் தூய்மை கடைபிடித்தனர். வேறு சிலர் அல்குல் என்பதற்கான அர்த்தத்தை மாற்றிச் சொன்னால் ஆகிறது என்று அருஞ்சொற்பொருளில் கைவைத்தார்கள். ஆக, இப்பண்டித உரையாசிரியர்களின் அடிப்படைவாதக் கருத்துகள், நூல் பரிச்சயமின்மை, அன்றைய கலாசாரச் சூழல், அரசு, மதம், மற்றும் சமூக வாழ்நிலை ஆகிய காரணங்களினால் இலக்கியங்களில் சொல்லொன்று பொருளொன்று என்று கதைகட்டினார்கள். இதற்கு ஸ்மார்த்த வேதங்களும் தப்பவில்லை.

ரிக் வேதத்தில், இந்திராணி புணர்ச்சியின்போது, தூக்கித் தருவதாகச் சொல்லுவது ‘தொடை’ என்று அதன் ஆங்கில மொழிப் பெயர்ப்புக்கான உரையில் இடம்பெற்றிருக்கிறது. கம்பன் பாடல்களில் வரும் சீதையின் அல்குல் வர்ணனை அவளின் இடையைக் குறிப்பதாகச் சமயவாதிகள் வாதிட்டார்கள். ஆனால், கம்பனும், இந்திராணியும் குறிப்பிட்டுச் சொல்லும் அல்குல் சொற்பதம் தொடையுமல்ல இடையுமல்ல அது ‘பெண்ணின் பாலுறுப்பு’ தான். இதனை உலக மொழிகளின் வேர்ச் சொற்களைக் கொண்டே புரிந்துகொள்ள முடியும்.

வேர்சொற்கள்

கிறிஸ்து பிறந்த காலக் கட்டம் முதல் இன்றுவரை பயன்பாட்டில் உள்ள அல்லது வழக்கொழிந்த உலக மொழிகளின் பல சொற்கள் நேரடியாத் தமிழ்தன்மை உடையவை. அவற்றுள் பெண்ணின் ‘அந்த’ உறுப்புச் சம்பந்தமானச் சொற்களுக்கு லத்தீனில் வல்வா, புடேர் (Pudere) என்றும், ஆங்கிலத்தில் கண்ட், வெஜினா, புடண்டா, புடெண்சி, புடெண்டா என்றும், ஜெர்மனியில் குண்டே, டட்சில் குண்டே, எபிரேயம் காட் என்றும் பேர் சொல்லப்படுகின்றன. இவற்றில் ஒலி மற்றும் அர்த்தப்பூர்வமாகப் பகுக்கும்போது, லத்தீனின் வல்வா, ‘உல்வா’-க்குத் தொடர்புடையது எனலாம்.

உல்வா என்பது பெண் பாலுறுப்பு. லத்தீன் வல்வாவும், கிரந்த உல்வாவும் அல்குலின் இணைப்பிறவிகள். ஆங்கிலச் சொற்களான ‘Cwithe’, ‘Pudenta’, ‘Pudendum’, ‘Cunt’, ‘Vegina’ ஆகிய சொற்கள் தமிழின் புண்டை, கூதி, யோனி ஆகியச் சொற்களின் ஒலி உறவோடு கிளம்பியவை. இதில் கூதி என்ற சொல் கூர்மை, ஆழம் எனப் பொருள் கொண்டது. புண்டை என்பது விடாய் காலங்களில் பெண்ணுறுப்பில் ஏற்படும் ரத்தக் கசிவை புண் காயங்களின் ரத்தக் கசிவோடு தொடர்புபடுத்தி உண்டான சொல். பெண், பெண்டு, புண்டை, புணர் என்ற தொடர்புகளும் அதற்குண்டு. யோனி அல்குலின் ஆழத்தைக் குறித்து உருவான சொல். அதற்கு உறை என்றும் பாதை என்றும் இருவேறு பொருள்கள் உள்ளன.

“தாயாகப் போகிறவளே உன் யோனியைப் பிளந்து, விரித்துத் தாயையும் சேயையும் பிரிப்பேன். உன் கருப்பைக் கீழிறங்கும்” என்று பிறப்பைக் குறிப்பிடும் பாடல் ஒன்று அதர்வ வேதத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், வழக்கில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள் இச்சொற்களை வேதப் புனிதம் கருதி அகற்றவே விரும்பினர்.

பெண் உறுப்பின் மேல்ப் பாகத்தின் பெயர் அல்குல், அதன் பாதைக்குப் பேர் யோனி, அதன் உட்பகுதி யோனி சுவர், அதன் சுரப்புக்கு சோணிதம் (ஆண் சுரப்புக்கு விந்து, இந்திரியம், இரேதஸ் என்று பெயர்களுள்ளது போல் பெண்ணுக்கும் உண்டு). இந்த யோனியின் வெளி மற்றும் உள் தசை மடிப்புகளையே வடிவ அலங்காரங்களைக் கருதி மாவரி அல்குல், மடவார் அல்குல், திதிலை அல்குல், கோடேந்து அல்குல், பையரவு அல்குல், பசுங்கால் அல்குல் என உவமை பாடினர் கவிஞர்கள்.

மாறாக அல்குல் என்ற சொல் பாலுறுப்பை அல்லாமல், ஆண் பெண் இருபாலரின் புட்டம் என்றும், மடி என்றும், கண் இமை என்றும் வேறு உடல் உறுப்புகளைச் சுட்டுவதாகக் குறிப்பிடுவது பண்டைய பண்டிதமணிகளின் இலக்கியத் தூய்மைவாதத்திற்கு வேண்டுமானால் உதவக் கூடும். 

பெண் பாலுறுப்பு: உளவியல் பார்வைகள் & நம்பிக்கைகள்

தமிழில் வழங்கப்படும் வசைச் சொற்களைச் சேகரிக்கும் முயற்சிகளை நானும் என்பங்குக்கு ஒருசமயம் மேற்கொண்துண்டு. அப்போது, அவற்றில் பெண் பாலுறுப்பையும், பெண்ணுடன் மேற்கொள்ளும் உடல் மற்றும் உறவு வழக்கங்களையும், அதன் பிறப்பு விளைவுகளைக் குறித்துமே பெரும்பாலான சொற்கள் புழங்குவதை அறிந்துகொண்டேன். மானுடவியல் ஆய்வாளர்களும், இனக்குழு ரீதியில் வாழ்க்கை ஒழுக்காறுகளைக் கவனிக்கும்போது, இந்தப் பாலியல் ஒழுங்கு பற்றிய கீழ்மையான எண்ணங்களை வெளிப்படுத்தத் தவறுவதில்லை. இந்த உளவியல் எங்கிருந்து துவங்கியது? நேரடி பதிலில்லை.

அடிப்படையில் நானும் எதிர்பாலினமான பெண்ணின் உடல் குறித்தும், பருவம் எய்துதல், பூப்பு, வளர்ச்சி மாற்றங்கள், ருது நாட்கள், சூல், பேறு குறித்த அறியாமைகளோடு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவனே. ஆனால், காலத்தே சென்றுசேர்ந்த நாட்டுப்புறவியல் ஆய்வுக் களங்களும், கதைசொல்லிகளும் மானுட உடல் மற்றும் உறவு குறித்த அறிவைப் பெறுவதற்கும், அதில் பால் வித்தியாசங்களைப் புரிந்துகொள்வதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார்கள். ஒருகட்டத்தில் கதை சொல்வதை விட்டுவிட்டு, அந்தக் கதைகளுக்கும் அதில்வரும் பொருள்களுக்கும் இடைப்பட்ட குறியீட்டுத் தன்மைகளைப் பாலியல் விளக்கங்களோடு சொல்ல ஆரம்பித்தார்கள்.

உதாரணமாக, மின்னலில் இருந்து பழங்கால மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தான் என்பதற்குப் பதிலாக ஒரு குச்சியினால் வட்டவடிவ மரக் கட்டையைக் குடைந்து குடைந்து அதிலிருந்தே நெருப்பை உருவாக்கினான் என்பர். இங்கே குச்சியும் குழிக்கட்டையும் ஆண் பெண் பால் உறுப்புகளின் குறியீடுகள். இதுபோல, குச்சி, மரம், குடை, கத்தி, பென்சில், சம்மட்டி இதெல்லாம் ஆணின் குறி உருவகங்கள். குகை, நிலம், கதவு, பூக்கள் இதெல்லாம் பெண்பால் உருவகங்கள். இதனூடாகத்தான் மறைவாய்ச் சொல்லப்பட்ட கதைகளில் இடம்பெறும் ஆணி அடித்தல், குதிரைச் சவாரி, மலையேற்றம் போன்ற வினைகள் பாலுறவை மேற்கொள்வதன் அடையாளமாக மக்கள் மொழிக்குள் புழங்குவதை உள்வாங்க முடிந்தது.

வயற்கழனிகளில் முன்பெல்லாம் பெண் பொம்மைகள்தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போது தான் பேண்டு சொக்காய் போட்ட ஆண் பொம்மைகள் மட்டும் நிற்கின்றன என்றார் என்னுடைய ஓர் கதைசொல்லி. பிறகு, அவரே பெண் பொம்மைகள் நிறுத்தப்பட்டதற்கான காரணத்தைச் சொல்லத் தொடங்கினார். அதாவது, பெண்ணின் காலடியில், அவளது பாலுறுப்பைக் கண்டு வளரக்கூடிய பயிர்கள் அனைத்தும் தன்னை வித்துள்ள ஆணாக அவளுக்குக் காட்டிக்கொள்ள வேண்டுமென்று விரைந்து செழித்து விடைக்கும் என்றும், பெண் பாலுறுப்பு வேளாண்மையில் செழிப்பிற்கான அடையாளம் என்றும் ஒரு கதையினூடாகச் சொல்லி முடித்தார்.

தஞ்சையை ஒட்டிய புனல்வாசல் பகுதிகளில் வயல்நாற்றங்காலை மறுநடுவு செய்யும்போது, கன்னிப்பெண் ஒருத்தரின் கையில் அவற்றைக் கொடுத்துக் கழனியில் நடச் செய்வதும், பயிர்செழிக்கத் துவங்கும் காலத்தில் தம் பெண்டிரை வரப்பைச் சுற்றி நடந்துவரச் செய்யும் சடங்கினை நடத்துவதையும் என் நேரடி கள அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

கொடிநிலை மற்றும் கந்தழி

இயற்கையைப் பொறுத்தவரை பெண்ணின் பாலுறுப்பு ஆற்றல் கருவி. சந்ததிகளை அதுவே பெருக்கித் தந்தது என்ற நம்பிக்கை வேளான் மரபில் இன்றும் பட்டும்படாமலும் நிலைத்திருக்கிறது. மேலும் இந்தத் தொன்மம் மதரீதியிலான சடங்குகளுக்குள்ளும் மறைந்து தொடர்கின்றன.

’கொடிநிலை’ என்பது தந்திர வழிபாட்டிற்குறிய ஒருவகை புணர்ச்சிச் சடங்கு. கந்தழியும் அவ்வாறான சடங்கே. கொடிநிலை பெண்ணின் பிறப்புறுப்பையும், கந்தழி ஆணின் பிறப்புறுப்பையும் மையப்படுத்தி நடத்தப்பெறும் தந்திர வழிபாடுகள். இவ்வகைச் சடங்குகளில் ஆண்குறி வழிபாடு பின்னாளில் கந்த வழிபாடானதை சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூலான பரிபாடலில் தொடைநலம் துள்ளிவிளையாடும் 18-19ம் பாடல்களில் அறியலாம்.

பெண் பாலுறுப்பு வழிபாடு தமிழ் நிலத்தில் தாய் தெய்வத்தைத் தலைமையாகக் கொண்ட இனக்குழு அமைப்பில், கொற்றவையின் மகனான முருகு போர்த் தெய்வமாக வழிபடத் துவங்கும் காலத்திற்கு முன்பே இருந்து வந்துள்ளது. தன் இனக்குழுவின் ‘கொடிநிலை’ காக்கும் வளமைச் சடங்கில் பெண் பாலுறுப்பு வழிபாடு முக்கிய நிகழ்வாக இருந்து வந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள சிவன், திருமால் ஆலய கோபுரங்கள், தூண்கள், சுற்றுச்சுவர்கள், தேர்கள் ஆகியவற்றில், ஆடையின்றி நிற்கும் பெண்ணின் (மோகினி) பாலுறுப்பை வணங்கி நிற்கும் நிர்வாணத் துறவர்களின் சிற்பங்களைக் காண முடியும். குடுமியான்மலை சிகரகிரீஸ்வரர் ஆலயப் பிரகாரத்தின் இடபுறத் தூணில் காணப்படும் ஆடையற்ற மோகினிச் சிற்பம் இதற்குச் ஓர் சிறந்த உதாரணம்.

துறவர்கள் பெண்ணின் பிறப்புறுப்பை வணங்கும் மந்திரச் சடங்கினை மகோததி தந்திரம் எனும் நூல், இவ்வாறு விவரிக்கிறது. ”ஓர் அழகிய இளம்பெண்ணின் பாலுறுப்பைக் கண்டு பத்தாயிரம் மந்திரங்களைச் செபிப்பவன் தேவகுருவுக்கு நிகரானவன். தூரமான பெண்ணின் குருதியோடு கூடிய பெண்ணுறுப்பைத் தியானித்துக் கொண்டு பதினாயிரம் முறை உருப்போடுகிறவன் மதுரமான பாடல்களால் இவ்வுலகினை மயக்குவான்” – மகோததி தந்திரம்: பாடல் 57 மற்றும் 60.

இத்தகைய சடங்குகளை ஆசீவகர்களும் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை மற்கலி கோசர் உயிர்நீத்ததாகக் கருதப்படும் சித்தன்னவாசல் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அறப்பெயர் சாத்தன் கோயில் சுதைச் சிற்பத்திலும், மதுரை அரிட்டாப்பட்டி ஐயனார் கோவிலிலும் நேர்சென்று கண்டதுண்டு.

பெண்ணின் சூல் பொருளில் தான் உலகமே தோன்றியதாகச் சொல்கின்றன உலக நாட்டுப்புறக் கதைகள். அதிலிருந்தே அவள் நெருப்பையும் கொண்டு வந்தாள். அதைக் கொண்டே மழையையும் வருஷிக்கச் செய்தாள் என்பன போன்ற பூமியின் கதைகள் ஆப்பிரிக்கப் பழங்குடிகளிடம் விளங்குகின்றன.

நாற்பதாண்டுகள் முன்புவரைக்கும்கூட, மழைபெய்யாத கிராமங்களில் ஆடை அணியாத பெண்ணை ஊரை வலம்வரச் செய்யும் வழக்கத்தைக் கைக் கொண்டிருந்தார்கள். சேலம் சேர்வராயன் மலையைச் சேர்ந்த பழங்குடிப் மக்களிடமும் இந்தப்பழக்கம் இருந்து வந்தது. ஆண்கள் அனைவரும் மலையைவிட்டு இறங்க, பெண்கள் மண்ணால் செய்த உருவங்களைக் கொண்டு அந்த விழாவை நடத்தினார்கள். தருமபுரி மாவட்டத்தில் இச்சடங்குகளின்போது பாடப்படும் பாடலுக்கு சூந்துப்பாடல்கள் என்று பேர். இவ்வகைச் சடங்குகளினால் மழைபெய்விக்க முடியும் எனவும், இயற்கை சக்திகள் பெண்ணிற்குக் கட்டுப்படும் என்பதாகவும் நம்பப்பட்டு வருகிறது. நாளடைவில் அவை பெண்ணுக்கு எதிரான ஆயுதமாகவும் வக்கிரமான மாற்றமடைந்திருந்தது.

சக்தி பீடம்

புராணத்தின்படி, தட்சனைக் கொன்றபிறகு அயனின் தாண்டவம் நிகழ்கிறது. ஆடவல்லானின் கொந்தளிப்பை நிறுத்துவதற்காக திருமால், அயன் கையில் ஏந்தி ஆடும் சக்தியின் உடலைத் துண்டு துண்டாக்குகிறார். ஆயினும் திக்கனைத்தும் சடைவீசிய ஆட்டம் நின்றபாடில்லை. ஆட்ட வேகத்தில் சக்தியின் உடல் திசையெங்கும் சிதறுகிறது. அவளது உடல்பாகம் சிதறிய இடமெல்லாம் சக்திக்கு ஆலயங்கள் உருவாகின்றன. அப்படி உருவான பீடங்களில் அவளது அல்குல் (பாலுறுப்பு) விழுந்த இடமாக அசாமின் நீலாச்சல் மலைச் சிகரம் (கவுஹாத்தி) அடையாளங் கொள்ளப்படுகிறது. அதன் இன்றைய பெயரே காமாக்யா.

படகுகள் மூலமே செல்லமுடிகிற இந்த காமாக்யா கோயிலின் உள்ளே பாறையில் வடித்த அல்குல் வடிவ குழி பீடத்தைத் தவிர வேறு வழிபாட்டுச் சின்னம் எதுவும் அங்கு கிடையாது. குகை வடிவில் கட்டப்படுள்ள அந்தக் கோயிலின் நடுவே நெற்றிக்கண் தோற்றத்தில் அல்குலும், அதன் மையத்தில் வட்டவடிவ கருவிழித் தோற்றமும், அதன் கூரான கீழ் முனையிலிருந்து நீர் சுரந்துகொண்டே இருக்கிறது, அதற்கு யோனி தீர்த்தம் என்று பெயர்.

2018ம் ஆண்டு அஸ்ஸாம் சென்றிருந்தபோது, காமாக்யா கோயிலின் அமைவிடம் மற்றும் வரலாற்றைத் தெரிந்துகொண்டேன். காமாக்யா யோனி ஊற்றின் மீது கூச் பீகார் மன்னரால் பின்னாளில், தேவியின் அவதாரங்களாக திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா ஆகிய புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. காளி, தாரா, தமுவாட்டி, பாகலாமுகி, பைரவி, சின்னமஸ்தா, புவனேஸ்வரி மற்றும் ஆகிய ஏழு அவதாரங்களின் கோயில்கள் வெளியே அமைக்கப்பட்டுள்ளன.

பிறப்பின் முதன்மை அடையாளமான அல்குல் வழிபாட்டுக்கு மாதத்தில் ‘மூன்றுநாட்கள்’ நோன்பு நாட்களாக அனுஷ்டிக்கப்படுகிறது. அல்குலைச் சுற்றி மஞ்சளிட்டு, தென்னங்காய்களைப் படைத்து வழிபடுபவர்களுக்கு, காமாக்யா ஊற்றின் யோனி தீர்த்தமும், செந்நிறப் பூக்களும், குங்குமமும் பிரசாதமாகவும் கையகல சிவப்புத் துணியில் வழங்கப்படுகின்றன. காமாக்யா கோயிலில் கண்ணில் படும் இடமெல்லாம் சிவப்பு நிறம்.

இறைவனிடம் தனக்குரியதென இறைவி மொழிந்த பீடங்களான 51 சக்தி பீடங்களில் காமாக்யாவே முதன்மையான பீடம் என்று தந்திர சூடாமணி நூல் குறிப்பிடுகிறது. தவிர, சக்தி வழிபாட்டின் முதன்மை யோனி வழிபாடு என்றாகிறபோது, அதன் இரு மார்க்கங்களான தட்சண, வாம மார்க்கங்களில் இடதுகைப் பிரிவினரான வாம மார்க்கத்தினரின் தந்திரிக வழிபாடு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி பஞ்சபூதங்களையும் மனதில் கொண்டு அவர்கள் நிகழ்த்தும் மத்யம், மாமிசம், மத்சியம், முத்திரை, மைதுனம் என்ற ஐந்தும் மது அருந்தி, கறியும், மீனும் உண்டு, உடல்மொழியினால் ஆடவரைக் கவர்ந்து உறவு கொள்வதைக் குறிக்கிறது.

பேதமின்றி வட்டமாய் அமர்ந்து பெண்ணுடலோடு கூடுகிற இந்த வழிபாட்டுப் பழக்கம் ஹரப்பா, மொஹஞ்சதரோ காலத்திலே உண்டு என்கிறார் ஆஸ்திரிய ஆய்வாளர் ஸ்டெல்லா கிராம்ரிச். இந்த வழக்கம் நாட்டுப்புறங்களில் வேறு வடிவமெடுத்து, பாலியல் பேச்சுக்களோடு நின்றுபோவதும், அவ்வையார் நோன்பு போல பெண்கள் மட்டும் கலந்துகொள்வதுமாக பிற வடிவங்களை அடைந்ததும் உண்டு.

பெண்கள் மட்டுமே கொண்டாடுகிற அவ்வையார் நோன்பு பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் கி.ரா., அது பெண்கள் மட்டுமே ஒன்றுகூடி நடத்தும் பாலியல் பூசை என்கிறார். பூசைக்காக அவிக்கும் கொழுக்கட்டையைக் கூட ஆணின் கண்பார்வைக்குக் காட்டாமல் இளம்பிராயப் பெண் பிள்ளைகளுக்குத் தின்னக் கொடுப்பார்களாம். பெண்ணின் உடல் அறிவியல் குறித்து அவர்களுக்கே உணர்த்தும் விதத்தில் அமைகிறது இந்த நோன்புச் சடங்கு. 

லஜ்ஜா கவுரி

காமாக்யா போல அல்குல் வழிபாட்டுத் தெய்வங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் காணப்படுகின்றன அவற்றில் தலையாயது லஜ்ஜா கவுரி (Lajja Gouri). தலை இல்லாத, தலைக்குப் பதிலாகத் தாமைரைப் பூவை அணிந்த, புணர்ச்சிக்குத் தயார் நிலையில் கால்களை உயர்த்தியபடி, உடல் உறுப்பைத் திறந்துகாட்டிக் கொண்டு இருக்கும் இந்த லஜ்ஜா கவுரிகள் வழிபாட்டுக்கு உரிய பிறப்பின் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன. பிள்ளைவரம் வேண்டுபவர்கள் கங்கைச் சமவெளி, தக்கான பீடபூமி, மற்றும் தென் இந்தியாவின் சில பிரதேசங்களில் லஜ்ஜா கவுரிகளை வழிபடுகிறார்கள். (கவுரி; கவுஹாத்தி, காத்மாண்டு, ஆகியவை அல்குலின் வேர்ச்சொற்களோடு தொடர்புடையவை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.)

இந்த லஜ்ஜா கவுரிக்கு ஆனந்த தேவி, நாக்னமாதா, கும்கனா, அதிதி, இலபா, நாக்ன காபந்தா, ஜகுலாம்பா, யமை, மகாகுண்டலினி என்று பலபெயர்கள் வழக்கத்தில் உள்ளன. இந்தப் பெயர்கள் அனைத்தும் உடல் தோற்றத்தைக் குறிக்கும் சொற்கள். நாக்ன காபந்தா என்பதற்கு நிர்வாணம் மற்றும் தலையற்ற உடல் என்று பெயர். தலையில்லாத உடல்கொண்ட பெண் தெய்வங்களும், நின்ற நிலையில் உடலைத் திறந்து, அல்குலைக் காண்பிக்கும் தெய்வங்கள் தமிழகத்திலும் உண்டு. (வட ஆற்காடு கோயில் சிற்பங்கள்)

லஜ்ஜா கௌரியின் பாலுறுப்பில் கிளிட்டோரிஸ் ஒரு மாங்கொட்டை போல துருத்தித் தெரியும். பூசை செய்பவர்கள் அதில் வெண்ணை பூச்சு செய்து, அதில் குங்குமத்தை இட்டு, அதன் மீது மஞ்சள் தடவி, பூக்களைச் சொறுகி வைக்கிறார்கள். இது புணர்ச்சிக்கான அசைவியக்கச் செயல்களைக் குறிக்கிறது. மலர் என்பது இனப்பெருக்கத்தின் குறியீடாகக் கொள்ளப் படுகிறது.

பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சிவனின் மனைவியர் ஆக்கப்பட்டனர். பிறகு, தாய் தெய்வ வடிவேற்றதும் உடலை மறைக்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டனர். பெண் தெய்வக் கோயில்களில் இடம்பெறும் ‘புடவை சாற்றும்’ பழக்கத்தின் வேர் இங்கிருந்து புறப்பட்டதே.

என் நீண்ட தேடலின்போது, சீன ஓவியம் ஒன்றில் லஜ்ஜா கவுரியின் உருவம் இடம்பெற்றுள்ளது. அதே போலான சிற்பம் ஒன்றும் செர்பியாவில் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து, எகிப்து, ஈரான், மெசபடோமியா என பாலுறுப்பு வழிபாட்டைக் கொண்ட பெண் தெய்வங்களின் பட்டியல் நீண்டு கொண்டேபோனது. அவை அனைத்தும் ஒன்றை மட்டும் எனக்குப் புரிய வைத்துக் கொண்டே இருந்தது. உலகெங்கும் பரவியிருந்தது பிறப்பு உறுப்பின் வேர்ச்சொல் மட்டுமில்லை; உலகின் நாகரிகத் தோற்றங்களுக்கு முந்தைய காலகட்டத்தின் மானுடத் தொடர்புகளும் தானென…

பாலுறுப்பு பராமரிப்பு

இந்த விஷயங்களை எழுதும்போது கி.ரா பெயர் அடிக்கடி வந்துவிடும். தவிர்க்க முடியாது. தாத்தா ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு அவரே பலதையும் அக்குசுக்காய் எழுதியும் சொல்லியும் வழிநடத்தியிருக்கிறார். கதைக்கும் கதை சொல்கிற மனிதரவர். அவரும், கழனியூரனும் சேர்ந்து தொகுத்த மறைவாய் சொல்லப்படும் பெண் பாலுறுப்பு சம்பந்தமான கதைகளில் அவர் சில பராமரிப்பு விசயங்களைக் குறிப்பிடுகிறார். அதாவது மேல் குடிமட்டப் பெண்கள் மாதமிருமுறை அம்பட்டர் வீட்டுப் பெண்களை ரகசியமாக அழைத்துவந்து, அவர்களைக் கொண்டு தங்கள் அல்குல் மயிர்களைச் சிரைத்துக் கொள்வார்களாம். அதற்கு வசதியற்ற வீட்டுப் பெண்கள் சிவப்பு ஆதாளைச் செடியின் இலைகளைப் பறித்து, அதன் நீர்மத்தை பாலுறுப்பின் மேலே தடவி, வெளித்தோல் மரத்துப் போனதும், அந்தரங்கமாகத் தங்கள் கைகளினாலே அல்குல் மயிர்களைப் பிடுங்கியிருக்கிறார்கள். (ஆதாளை என்பது நில ஆமணக்கு என்றும் அறியப்படுகிறது.)

அக்காலத்திலே தன் அல்குலைத் தான் பார்ப்பதே தவறென்று கருத்திருந்தது. கன்னியாஸ்திரிகளும்கூட ஆடையோடு தான் குளிக்கவேண்டும் என்பது மதக் கட்டளை. கதவு சாத்தப்பட்ட அறைகளுக்குள்ளும் ஆடை எதற்கு என்று கேட்டால் கடவுள் பார்ப்பாரே என்று பதில் வந்ததாக பெர்ட்ரண்டு ரசல் குறிப்பிடுகிறார். இடைக்கால வரலாற்றின் பெண் தன் உறுப்பு குறித்து அறியாதவளாக வளர்ந்தாள். வளர வளர உடலில் நிகழும் மாற்றத்தால் தன் அல்குலைப் பார்க்கவும் தொட்டு அறியவும் முடிந்தாலும், பூஞ்சை முடிகள் முளைக்கும் தருணத்தில் அச்சம் கூடிப்போனவர்கள் ஆனார்கள். அவர்களது மூத்த பெண்களும், பாட்டிமார்களுமே அவர்களின் அச்சம் களைந்தார்கள்.

அல்குல் இல்லையெனில் உயிர்ப்பெருக்கம் இல்லை. உடலின் சிறுநீர், உதிரப்போக்கு, பேறுகாலக் கழிவு, பிள்ளைபிறப்பு ஆகியவற்றின் ஆதார உறுப்பாக அல்குலே விளங்குகிறது. இருந்தும் இவற்றைக் குறித்து பேசுவது பாவம் என்ற கருத்து உண்டானது. தாய் தன் மகள் பூப்படையும்போது அதைக் காணுவது தரித்திரம் என ஒரு சில இனக்குழுக்களில் இன்றும் அதனைத் தீவிரமாகக் கடைபிடித்து வருகின்றனர். பெண்ணுக்கே இந்த நிலை தொடர்ந்தபோது, எதிர்பாலினத்தின் அறிவீனம் பற்றிச் சொல்லவேண்டி இராது.

பெண் தன் வாழ்நாளில் 400 முறை மாதவிடாய் ஆகக்கூடும். பூப்படைவது முதல் ஏறத்தாழ 34 ஆண்டுகள். தற்போது, பொருளாதாரமய காலகட்டத்தில், புரெஜஸ்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கலவைகளினாலான சீசனல் மாத்திரைகளின் மூலம் இந்த எண்ணிக்கையை 150 ஆகக் குறைக்க முடிகிறது. சரியாகச் சொன்னால் விடாய் கால உடல் பராமரிப்பு வர்த்தகம் பல்லாயிரம் கோடி லாபத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வீச்சுக்கு  உடல் பற்றின விழிப்புணர்வைப் பெறவோ உடலைப் பேணவோ இங்கு வழிகள் கிடையாது.

உடற்கூறு சம்பந்தப்பட்ட விவரங்களை உள்ளடக்கியதாகவும், அறிவியல் பூர்வமான உண்மைகளைச் சொல்வதாகவும், மானுட நல்வாழ்விற்குப் பொருந்தக் கூடியதாகவும், மனித உரிமை, பாலியல் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் நம்முடைய பாலியல் கல்வி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால், இங்கு என்ன நடந்தது?

பாலியல் நூல்கள்

கொக்கோகம், வாத்ஸ்யாயணம் உள்ளிட்ட இந்தியப் பாலியல் நூல்கள். அல்குலை, பத்மினி, சித்தினி, சங்கினி, ஹஸ்தினி என்று நான்கு விதமாகப் பகுக்கின்றன. அதில் பத்மினி என்பது தாமரை வடிவத்திலும், சைலம் சுரக்கும்போது பூவின் மணம் வீசும் என்றும், சித்தினி தேன்கூட்டை ஒத்த வட்ட வடிவிலான அல்குல் எனவும், அதன் சைலம் தேனின் மணத்தோடு இருக்குமென்றும், சங்கினி அல்குல் சுழலுற்ற யோனியோடு, உப்பின் மணத்தில் சைலம் சுரக்கும் என்றும், ஹஸ்தினி களிறுபோன்று பருத்த அதீத சைலம் சுரக்கிற அல்குல் என்றும் கொக்கோகம் விவரிக்கிறது.

வாத்ஸாயணம், கொக்கோகம் போலவே, புத்தத்துறவி பத்மஸ்ரீ எழுதிய நகர சர்வஸ்வம், கவிசேகரா எழுதிய பஞ்ச சயகா, பிரௌத தேவராஜா எழுதிய, “ரதி ரத்ன பிரதிபிகா. ஜெதேவா எழுதிய ரதி மஞ்சரி, கல்யாணமாலா எழுதிய, “அனங்க ரங்கா, ஆகிய நேரடி நூல்களும், கிபி 10ம் நூற்றாண்டில் யசோதாரா எழுதிய ஜெய மங்களா, கிபி 1800ல் நரசிங்க சாஸ்திரி எழுதியம் சுக்ரவிருத்தி போன்ற வாத்ஸாயணத்தின் விளக்க நூல்களும் பாலியல் உடலுறுப்பு, உறவுமுறைகள், மருத்துவம், காமம், காதலுரைத்தல், எதிர் பாலினரை ஈர்த்தல் ஆகியவற்றை எடுத்துரைக்கின்றன.

அவற்றின்படி, மான்சாதி, குதிரைசாதி, யானை சாதி என பெண் பாலுறுப்பின் ஆழத்தை நீட்டலளவையின் மூலம் குறிப்பிட்டுள்ளனர். மான் சாதி – நான்கரை அங்குலம், குதிரை சாதி – ஆறேமுக்கால் அங்குலம், யானை சாதி ஒன்பது அங்குலம். இந்நூல்களின் உடலளவு குறித்து ஆய்வுசெய்த, இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் சார்லஸ் ஒயிட் மனித உடல் அளவுகள் குறித்த கணக்கு என்ற நூலினை 1799ல் எழுதினார். இவைகளில் மிகப்பெரும்பாலான நூல்கள் உடல் உறவு குறித்த விசாரங்களையும், ஆணின் பார்வையில் பெண் உடலைக் குறித்த கிளர்ச்சியையும், புலன் விருப்பத்தையும் மருத்துவம் என்கிற ரீதியில் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றன. அனைத்திற்கும் மேலாக அந்நாளைய ஆதிக்க சமூகங்களின் மனப்போக்கோடே இந்நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சார்லஸ் ஒயிட் எழுதிய நூலில் கூட ஆசிய ஆப்பிரிக்கப் பெண்களை, ஐரோப்பிய பெண்களுக்குக் கீழான நிலையில் வைத்து தன் இனவிலக்கத்தைக் காட்டியிருந்தார்.

சிதைவின் கதை

ஆண்களுக்கு சுன்னத் எனப்படும் பாலுறுப்பின் மேல்தோல் அகற்றப்படுவது போலவே, சில பழங்குடிச் சமூகங்களில் பெண் பாலுறுப்பு சிதைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஹேரம் பெண்களின் பாலுணர்வைக் கட்டுப் படுத்த அவர்களது அல்குலின் மேற்பகுதி சிதைக்கப்பட்டது. கிளிட்டோரிசின் முனை துண்டிக்கப்பட்டது. ஆப்பிரிக்க பழங்குடிகளும், பாலனீசிய மக்களும் பனிரெண்டு வயது நிரம்பிய பெண்பிள்ளைகளுக்கு இக்கொடுமைகளை நம்பிக்கை எனும் பேரில் செய்தனர். ஸ்காப்ட்ஸ் எனும் ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பினர் தக்கள் களவொழுக்கை காப்பாற்ற பாலுறுப்புகளைச் சிதைக்க வலியுறுத்தப்பட்டனர். ஒரு பெண் திருமணம் ஆகும் வரையில் கற்புள்ளவளாக இருக்கவேண்டுமென அவள் பாலுறுப்பு தொடர்ந்து சிதைக்கப்பட்டு வந்தது. சூடான் நூபியா பகுதிகளில் பண்டைய கிறிஸ்தவமே இவ்வழக்கத்தைத் திணித்தது.

அடிமைப் பெண்களை விற்பதற்காகவும், மகப்பேற்றைத் தடுக்கவும் அல்குலை வதைப்பதும், வாரிசுரிமைப் போட்டிகளுக்காக அரசனின் ஆசை நாயகியர் உறுப்பு சிதைக்கப்படுவதும் ரத்தக்கறை படிந்த செய்திகளாக பண்டைய மன்னராட்சி வரலாறு முழுக்க விரவிக்கிடக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக உலகைப் புரட்டிய பெரும்போர்களில் அல்குலும் ஓர் ஆயுதமாக உருவெடுத்தது. இனப்படுகொலை நிகழ்வுகளில் பெண்களே முதலில் வன்கொடுமை செய்யப்பட்டனர். போஸ்னிய இஸ்லாம் பெண்கள், செர்பிய கிறிஸ்துவ ராணுவத்தால் சிதைக்கப்பட்டனர். பௌத்த சிங்களர்கள், ஈழப் பெண்களைச் சிதைத்தழித்தனர். 1947ல் இந்தியப் பிரிவினையின்போது, இஸ்லாமியர் சீக்கியர்களைக் கொன்று சிந்து நதியில் வீசினார்கள், சீக்கிய முஸ்லீம் பெண்களை நிர்வாணமாக்கி தெருவில் நடக்கவிட்டு பின் வன்புணர்ந்து அவர்களைக் கொன்றனர்.  எங்கிருந்து திரள்கிறது இத்தனை வன்மம்!

இரண்டாம் உலகப்போரில் கிராமம் கிராமமாக அடிமையாக்கப்பட்ட பெண்களை, அவர்களது உடல்களைச் சித்திரவதைக் களமாகத் தான் கருதியது வல்லரசுகள். வியட்நாம் யுத்தத்தில் ஈடுபட்ட பெண்களின் அல்குலை அறுத்தெடுத்து அதை நினைவுச் சின்னமாக அமெரிக்காவுக்கு கொண்டு சென்ற குறிப்புகள் உண்டு. வங்காளத்தில் யாஹியாகான் படை, ஈழத்தில் இந்தியப்படை, யுகோஸ்லாவியா, ஈராக், குவைத், ருவாண்டா என்று கணக்கிலடங்கா போர்களில் கோரமாகச் சிதைக்கப்பட்ட உறுப்பாக அல்குல் மாறிப்போனது. ருவாண்டாவில்டுட்சி இனப் பெண்களை வரிசையாக ஆடையற்று நிற்கச் செய்து அவர்கள் பாலுறுப்பைக் குறி பார்த்துச் சுட்டார்கள். குண்டு துளைத்த இடங்களில் மரத்துண்டுகள், கூழாங்கற்களை நிரப்பி அவர்களைக் கொன்றொழித்தார்கள்.

வளமையின் குறியீடாக, செழிப்பின் குறியீடாக, இனப்பெருக்கத்தின் அடையாளமாக, வழிபாட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக என்று நீண்ட நெடிய பட்டியல் போட்டுப் பின் செல்ல முடிகிற ஓர் சம மானுட உயிரின் உடலுறுப்பு எங்கிருந்து எப்படி அழித்தொழிப்பின் அடையாளமாக மாறியது? பதிலாகச் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான் புனிதமெனவும், தூய்மையெனவும் ஒன்றில்லை உலகத்தில்.

*****

(அங்காளம் தொடரும்..)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular