Thursday, December 5, 2024
Homeபுனைவுகவிதைஅகரமுதல்வன் கவிதைகள்

அகரமுதல்வன் கவிதைகள்

ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தப்தி
ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி

அஞ்சற்க

1.

எந்த மண்ணும் சொந்தமானதாயில்லை
சொந்தமான மண் என்னிடமில்லை
படுகொலைக் களத்தில்
பூர்வகுடிகளை ஆயுதங்கள் அடிமையாக்க
அட்டூழியமான பிரபஞ்சம் ஏவறை விடுகிறது
புலப்படாத மலை அட்டையென
ரகசியமாய் ஊர்ந்து
இரத்தம் பருகுகிறது இரக்கமற்ற காலம்
என்னிடமிருந்து உறிஞ்சப்பட்ட
இன்பங்கள்
இன்னும் மிச்சமிருக்கின்றன
துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளில்
குரூர வலியையும் வெறுமையையும்
போரில் தோண்டிய
பதுங்குகுழியில் மறைத்து வைத்து
அழிக்கப்பட்டவற்றை கட்டியெழுப்ப
முனைகிறேன்
வெளிப்படையாகச் சொன்னால்
குருட்டு இராச்சியம்
என் கண்களுக்கு ஒளியெனத் தெரியாது
மீண்டும்
பருமனான எனது தேசம் நோக்கி நடந்து
மகிழ்வாக வீழலாம்.
 

2.
துயரங்களுக்கு சொந்தமான
தீவொன்றில் பிறந்தது பற்றி
கவிதையெழுதுவது
தனது இதயத்தைதானே சுடுவதேயாகும்
அல்லது கண்களை பிதுக்கி தின்பதுபோல
மரண விரல்கள் மேயும்
ஏதுமில்லா சூனிய வெளியில்
பரவி வீழும் எறிகணையிலிருந்தும்
உடல் பிரிக்கும் தோட்டாக்களிலிருந்தும்
தப்பிப்பது பற்றி சிந்திக்கும்
குருதி தவிர வேறேதும் கண்டிராத
புதைகுழி வாழ்வின் பூரண மடியில்
பரவி வீழும் நீதியின்மைகள்
இரக்கக் கீற்றுகளற்று
தொடர் யுகக் கொலை நிகழ்த்தும்
புரியாத மரண சமிக்ஞை
லாடங்களில் படர
நாடோடிக் குதிரைகளென
எங்கெனும் வாழப் பழகி
குழம்படிக் காயங்களோடு
இருண்ட எல்லை நோக்கி
விரைந்து
டொலருக்குள் மறைகிறோம்
இதனால் தான்
கவிதையில் தொடரும் அமைதிக்குள்
தொடர்ந்து முற்றும் வன்மத்தினால்
ஒரு மரண ஓசை ஒலிக்கிறது
எனக்கானதாகவும்
என் பிள்ளைகளுக்கானதாகவும்.

3.
இந்தக் கவிதை
தலைகீழாக தொங்கியபடி எழுதப்பட்டது
நீங்கள் நினைப்பது போன்ற
தலைகீழானது அல்ல
மிகத்துவக்கத்தில்
என் மூத்தோனின் கண்களை
தரையில் சிதைத்த வன்மம்
வதையின் கூடாரத்திற்கு
வெள்ளை வான் ஒன்றில்
என்னைக் கடத்தியிருந்தது
ரத்த நெடில் வீசும்
மானுட வதையின் கூடாரத்தில்
சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பி
மூக்கின் துவாரங்களிற்குள் புகுத்தப்பட்டு
என்னை உயிரோடு புதைத்துக்கொண்டிருக்க
எலும்புகளையும் நரம்புகளையும்
மொழிபெயர்க்கவியலாத கவிதைகளுக்கு உரமாக்கி
வௌவால் வடிவில் தொங்கியிறக்கிறேன்
போரில் தொலைத்த பிள்ளையை
தேடியலைந்து
களைப்புற்ற பறவையாகி
வீடு போய் சேருகிற
அம்மாவைத் தவிர
நீங்கள் உணர்ந்திருக்க வாய்ப்பற்றது
தேசத்திற்கான ஜீவிதத்தையும் அந்திமத்தையும்.

4.
எமக்கென வரைந்த அனுகூலங்களில்
போர்கள் பிரகடனமாவது தவிர
வாழ்வு வேறொன்றும் பரிசளித்ததில்லை
வெளிச்சம் ஓடிப் பதுங்கிய ராத்திரியொன்றில்
மனிதமற்ற ஆயுதங்கள் முன் நகர
பனங்குத்திகளின் காப்போடு
மோசமான காலங்களை தகர்த்திருந்தான்
போர்க்களத்தில் எனது அண்ணன்
அவனது மரணத்தை மிஞ்சி
களத்தில் நேராது எந்தச் சோகமும்
தேச உணர்ச்சியின் அபரிமிதத்தால்
விழுப்புண்களை
தன்னுடலில் உலவவிட்டு
தேச வரமொன்றை வேண்டியிருந்தான்
கனவுத் தடாகத்தின் பாசிச் சேற்றில்
வழுக்கி வீழ சித்தமின்றி
என்னைக் குழைத்து இரவில் பூசி
அஞ்சற்கவென்று
அவனை நகலெடுத்து விரைகிறேன்
மனவெளியில் விரியும் போர்க்களத்திற்கு.

அகரமுதல்வன்

 

குறிப்பு: ஈழக்கவிஞரான அகரமுதல்வனின் முதல் கவிதைத் தொகுப்பு “அத்தருணத்தில் பகை வீழ்த்தி” இந்த வருடம் 2013ல் வெளி வந்தது. இப்படைப்பிறகாக செயந்தனின் படைப்பிலக்கிய விருதும், சிறந்த தமிழ் கலை இலக்கிய கலைஞர்கள் விருதும் கிடைத்துள்ளது.

RELATED ARTICLES

10 COMMENTS

    • romba…romba…arumai…agaramudhalvaa. unnaip padikkum podhellaam….enakku undaagum unarvugal vaarththigalukkaanadhalla………eppodhum un ezhuththilirukkum nermai…unnaip padippadhaith theevirappaduththugiradhu…..anbudan ramesh.

  1. மறுகரையிலிருந்தும் புலம் பெயர்ந்தோரும் ஈழத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவது ஒரு ஆதங்கம், இனப் பாசம் அல்லது வேறு பல அரசியல் காரணங்களால் கூட இருக்கலாம். ஆனால் அங்கேயே இருந்தவாறு வடிக்கப்படும் வரிகள் உண்மைக்கு மிக அருகில் உணர்வுகளை கொண்டு சேர்க்கின்றன. நிஜமான ஒரு பார்வை அதில் புதைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே…

  2. வலி யை வார்த்தையால் எல்லோராலும் வடித்துவிட முடியாது. காதலை , பாசத்தை எளிதில் யார் வேண்டுமானாலும் புனைந்து விடலாம் ..ஆனால் வலி என்பது சுமந்தவனுக்கும் சுமப்பவனுக்கும் தான் புரியும். இதை தொகுப்பு என்பதை விட அனுபவம் என்று கூட சொல்லலாம் .. இரு பெரும் விருதுக்கு தகுதியானது என்பதிலேயே நூலின் அடர்த்தி புலப்படும். முழுதும் நான் இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு விரிவாக எழுதுகிறேன்..அன்புடன் மன்னை முத்துக்குமார்.

  3. வலி மிகுந்த கவிதைகளை வாசிக்கவும் இயலவில்லை 🙁 விழிகள் வெந்நீர் சொரிகின்றன. கைகள் நடுங்குகின்றன. மேனி பதறுகிறது. முழு புத்தகம் வாசிக்கவில்லை. 4 கவிதைகளே வாசித்தேன். 2ம் 3ம் மனதை பலவீனமடையச் செய்கின்றன. விருதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  4. சிறப்பாக உள்ளது….. வாழ்த்துக்கள் மேலும் பல கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்….

  5. மூன்றாவது கவிதை இழப்பின் வலியை கூட்டுகிறது.மிகவும் வலியான பதிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular