அகரமுதல்வன் கவிதைகள்

1

கூற்று – 01

நீர்ச்சிரங்கு பூச்சியூரும் நள்ளிராக் கனாவில் 
நிலத்தினில் பெரும் பெயல் நிரம்ப,
நீலப்பெருநீர் நல்லோள் முலையிடை அலையெனப் புகும்.
அவள் நீளக்கூந்தல் ஆம்பல் மலரில்  நனைந்து முயங்க
கூதிர் மருண்டு துஞ்சல் துறந்து வீசும்.
காமம் படர்த்தும் அன்னள் நறுமணம்
போன வேனில் நாளில்
எனதின்னுயிரில் குருதிப் பூவென  மலர்ந்ததை
உன்னிடம் சொன்னதாய் ஞாபகம்.
இந்த குருட்டுக் கூதிருக்கு
அதைச் சொல் நண்ப!
நான் துயிலெழவேண்டும்.

***

கூற்று – 02

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்தில் 
எவ்வம் சூழ்ந்த நகரத்தின் வீடொன்றில்
அழுங்கல் தோன்றி அழுதாள் ஓர் இல்லாள்.
“கொள்ளைநோயே! வளிநீங்கி போவென்று
பாடுமோர் பாணன் 
முழு ஊரடங்கால் தெருவுக்கு இறங்கவில்லை.
நகரின் அமைதியில் பயங்கரம் அரும்பி 
ஞமலிகள் குரைத்தன இராப்பகல், 
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்தில் 
மலர்கள் உதிர்கின்றன.
வளர்பிறை அம்புலியோ வானில் தேய்கின்றது
வீட்டின் கதவை இறுகச்சாத்தி இருமினாள் இல்லாள்.
எங்கோ உயிரின் மூச்சுத்திணறல் எழுந்து முடிகிறது.
அம்புலன்ஸ் வண்டியின் ஒலி யாமத்தை மிரட்டுகிறது.
பாணா! முகக்கவசத்தோடு
உன் குடிலில் இருந்து 
ஒரு பாடல் பாடேன்,
நெஞ்சம் பதைக்கிறது.

***

கூற்று – 03

கைவிடப்பட்ட பதுங்குகுழிக்குள்
கைவிடப்பட்ட சிறார் பிணங்கள்
அவர்கள் மேல் போர்த்தியிருந்த
கூறைச்சீலையில்
எஞ்சிய தாயின் முலைப்பால்
 
எஞ்சிய தாய் எங்கே போனாள் ?
உயிர் தப்பும் தவிப்பில்
இன்னோர் பதுங்குகுழியைத் தேடி.
 
இறுதிவரை எஞ்சினாளா ?
எஞ்சி நிற்கும் யுத்தத்தை போலவே
பிய்த்தெறிய முலைகளற்ற 
ஒரு கண்ணகியாய்
நந்திக்கடலில்
பிணமாய் எஞ்சினாள்.
 
தாய்மாரின் பிணத்தை போர்த்துவதற்கு
எஞ்சிய பிள்ளைகளிடம் துணிகளில்லை.
நிலமெங்கும் கவிழ்ந்தது நிர்வாணம்.
 
குருதியில் சிதம்பிச் சிதம்பி
ஓங்கி ஓய்ந்தது
வீரயுகம்.
எஞ்சியது?
நினைவுகள்  – நினைவிடங்கள் – நினைவுநாட்கள்.
 
யுத்தங்கள் போய் யுத்தங்கள் வருமென்று
எந்தத் திசையிலோ அரவம் செய்யும்
எங்கள் ஊழின் புதுயுகம்.

***

அகர முதல்வன்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here